Friday, February 01, 2013

தேர்த் திருவிழா : ஆரிய மன்னர்களின் வெற்றி விழா!

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 19

(பத்தொன்பதாம் பாகம்)


இன்று பல இந்துத் தமிழர்கள், பகவத் கீதை மற்றும் அது சம்பந்தமான சுவரொட்டிகளை, அலங்காரப் பொருட்களை,  தமது வீடுகளில் வைத்திருக்கின்றனர். யார் பகவத் கீதையை, "இந்துக்களின் புனித                   நூல்" ஆக்கினார்கள் என்று தெரியவில்லை. "கிறிஸ்தவர்களுக்கு விவிலியம் போல,  முஸ்லிம்களுக்கு குர் ஆன் போல, எமது புனித நூலாக பகவத் கீதை இருப்பதாக," இந்துக்கள் கூறிக் கொள்கின்றனர். உண்மையில், இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என்ற நான்கு வேதங்களையும், ஒரே நூலாக சுருக்கினால், அதுவே இந்துக்களின் புனித நூலாக இருந்திருக்கும். ஆனால், அங்கே ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. பிராமணர்களை தவிர பிற சாதியினர் வேதம் படிக்கக் கூடாது. அந்த தடையை மீறி யாராவது படித்தால் நாக்கை அறுக்கலாம், படிப்பதை கேட்டுக் கொண்டிருந்தால் காதை அறுக்கலாம், என்று "பிராமண ஷரியா சட்டம்" ஒன்றை போட்டிருக்கிறார்கள்.  இன்றும் கூட, பிராமணரல்லாத பிற சாதி இந்துக்கள் அதனை மதித்து நடக்க வேண்டியுள்ளது. 

இங்கே எமக்கு தேவையானது பகவத் கீதை அல்ல. தேரோட்டும் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் செய்த காட்சியை ஒரு தடவை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். தேரோட்டும் கண்ணனும், அம்பெய்யும் அர்ச்சுனனும், தேரை இழுக்கும் குதிரைகளும் இந்தக் கட்டுரைக்கு முக்கியமானவை. பல ஓவியர்கள், தமது கற்பனைக்கு எட்டியவாறு அதனை தீட்டியுள்ளனர். மகாபாரதமும், அதில் வரும் பாத்திரங்களும், கீதோபதேசமும் வரலாற்றில் உண்மையாகவே நடந்தனவா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அது மாதிரியான போர்கள் வரலாற்றில் நடந்துள்ளன. அதிலும், கண்ணனும், அர்ச்சுனனும் அமர்ந்திருப்பது போன்ற இரதங்கள் போரில் பயன்படுத்தப் பட்டன. ஒரு சிறிய வித்தியாசம். சரித்திர கால இரதம், அர்ச்சுனனின் இரதம் போன்று அவ்வளவு பெரிதாக இருக்காது. ஒரு ஆள் தூக்குமளவு பாரம் குறைந்தது. அனேகமாக இரண்டு சக்கரங்கள் பூட்டப் பட்டிருக்கும். இரண்டு குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும். குதிரைகளை சாட்டையால் அடித்து தேரை ஓட்டும் ஒருவரும், அம்பு, வில்லுடன் இன்னொருவரும் அமர்ந்திருப்பார்கள். 

பண்டைய காலத்தில், குதிரைகள் பூட்டிய இரதங்களின் பாவனை போரில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த ஆயுதமாக விளங்கியது.  இருபதாம் நூற்றாண்டில், இராணுவ கவச வாகனம், அல்லது யுத்த தாங்கி எந்தளவு பிரயோசனமாக கருதப் பட்டதோ, அந்தளவு நவீனமான கண்டுபிடிப்பாக அது இருந்தது. குதிரைகளை போருக்கு பழக்கப் படுத்தியது மட்டுமல்ல, சில்லுகள் பூட்டிய வாகனமும், வடக்கே இருந்து குடிபெயர்ந்த வெள்ளையின மக்களுக்கு சரித்திரத்தில் நிலையான இடத்தை பிடித்துத் தந்தது. அதற்காக, "சரித்திரத்தில் வெள்ளையினத்தவர் மட்டுமே குதிரை வண்டிகளை போரில் பயன்படுத்தினார்கள், அதனால் கறுப்பினத்தவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்..." என்று அர்த்தம் கொள்வது சரியல்ல. பல மேலைத்தேய சரித்திர ஆய்வாளர்கள், வேண்டுமென்றே அது போன்ற தவறான தகவல்களை, "ஆரியரின் படையெடுப்பு" என்ற கோட்பாட்டின் பேரில் பரப்பி வந்துள்ளனர். 

எத்தகைய நவீன ஆயுதமும், ஆரம்ப காலங்களில் அதனை கண்டுபிடித்தவர்களுக்கு சாதகமான விளைவுகளை தரும். ஆனால், காலப்போக்கில் எதிர் தரப்பினரும், அதன் பாவனையை அறிந்து கொண்டு பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். அமெரிக்கா அணுவாயுதத்தை காட்டி உலகம் முழுவதையும் பயமுறுத்திக் கொண்டிருந்த  காலம் ஒன்றிருந்தது. சிறிது காலத்தின் பின்னர்,  அதன் எதிரி நாடுகளும் அணுவாயுதங்களை  உற்பத்தி செய்யத் தொடங்கவில்லையா? அது போன்று தான் பண்டைய காலத்திலும் நடந்தது. இன்றைய ஈராக்/துருக்கியில் தோன்றிய வெள்ளையின ராஜ்யத்திடம் (பார்க்க: கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்.)  இருந்து, எகிப்தின் கறுப்பின ராஜ்ஜியம் குதிரை வண்டிகளின் பாவனையை கற்றுக் கொண்டது. நவீன காலத்தில் நடப்பதைப் போல, ஆரம்பத்தில் அவற்றை அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்தாலும், பின்னர் அதனை தமது நாட்டில் உற்பத்தி செய்யக் கற்றுக் கொண்டனர். மேலும், வெள்ளையின குழுக்கள், தமக்குள் போரிட்டுக் கொண்ட பொழுதும், குதிரை வண்டிகளை பயன்படுத்தி வந்தன. உதாரணம்: மகாபாரதம். மகாபாரதக் கதையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள், எதிரெதிரான இரண்டு முகாம்களாக பிரிந்து போரிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

வண்டி என்பது ஒரு தமிழ்ச் சொல். நாங்கள் அடிக்கடி "வாகனம்" என்ற  இன்னொரு சொல்லையும் பாவிப்போம். வாகனம் என்பது ஒரு வட மொழிச் சொல்லாகும். "வாகன்" (Wagon) என்ற சொல் இன்று பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுகின்றது. அப்படியானால், சமஸ்கிருதம் பேசிய இன மக்களும், ஐரோப்பிய இனங்களும், புராதன காலத்தில் ஒரே இனமாக இருந்து பிரிந்து சென்றிருக்க வேண்டும். மத்திய ஆசியாவில் இருந்து குடிபெயர்ந்த வெள்ளையினத்தவர்கள், ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா என்று உலகின் பல பகுதிகளில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு குதிரைகள் பூட்டிய "வாகன்" இன்றியமையாத கருவியாக இருந்தது. 

மகாபாரதக் கதையில் சித்தரிக்கப் பட்டதைப் போன்ற, அதே மாதிரியான இரதங்கள், மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஈராக், துருக்கி, கிரேக்கம் ஆகிய நாடுகளை பெயர் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  அங்கெல்லாம் அகழ்வாராய்ச்சியாளர்கள்,  மண்ணுக்குள் புதைந்திருந்த, புராதன கால  குதிரை வண்டிகளை தோண்டி எடுத்துள்ளனர். மகாபாரதக் கதையில் வருவதைப் போன்ற இரதங்கள், போருக்கு மட்டும் பயன்படுத்தப் படவில்லை. அவற்றை வைத்து ஓட்டப் பந்தயங்கள் நடத்தினார்கள். வெற்றிவிழா அணிவகுப்புகளில் பயன்படுத்தினார்கள். நமது நாட்டில் உள்ள சைவக் கோயில் திருவிழாக்களில், சுவாமி இரத (தேர்) பவனி வருவதும், ஆரிய இன மன்னர்கள் காலத்து சம்பிரதாயம் ஒன்றின் தொடர்ச்சி ஆகும்.   

எப்போதும் அந்நிய நாடுகளில் குடியேற விரும்புவோரின் குடிசன பரம்பல் நாற்திசையிலும் நடைபெறும். வெள்ளையின மக்கள் ஐரோப்பாவில் மட்டும் சென்று குடியேறவில்லை. மத்திய கிழக்கு, வட இந்தியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் சென்று குடியேறினார்கள். எதற்காக ஐரோப்பியர்கள் மட்டும் தூய வெள்ளையினத்தவராக தெரிகின்றனர்? அனேகமாக ஐரோப்பாவில் குடியேறிய வெள்ளையர்கள், எந்தவொரு இனத்துடனும் கலக்காமல் இருந்ததால், தனித் தன்மையை பேணியிருக்கலாம். அதனால் தான் அவர்கள் நாகரீகத்தில் பின்தங்கி இருந்தனர் என்பதையும், இங்கே குறிப்பிட வேண்டும். ஈரான், ஈராக், அரேபியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் குடியேறிய வெள்ளையின மக்கள்,  உள்ளூர் கறுப்பின மக்களுடன் ஒன்று கலந்து, பல புதிய இனங்களாக உருவாகி உள்ளனர். 

மத்திய கிழக்கிலும், இந்திய உப கண்டத்திலும் குடியேறிய இந்தோ-ஆரிய வெள்ளையினத்தவர்கள், உள்ளூர் கறுப்பின மக்களுடன் ஒன்று கலந்த பின்னர், சமஸ்கிருதம், பார்சி போன்ற புதிய மொழிகள் தோன்றின. இதிலே எந்த இனம் எத்தனை சதவீதம் கலந்திருந்தது என்றெல்லாம் கண்டுபிடிப்பது கடினம். புதிய கலப்பினத்தில், வெள்ளையின விகிதாசாரம் அதிகமாக இருந்த இடங்களில் சமஸ்கிருதம் (இன்று ஹிந்தி- உருது) போன்ற "ஆரிய மொழிகள்" பேசப் பட்டன.  கறுப்பினத்தவரின் விகிதாசாரம் அதிகமாக இருந்த இடங்களில் தமிழ் போன்ற "திராவிட மொழிகள்" பேசப்பட்டன. எது எப்படி இருந்தாலும், இன்றைக்கு நாகரீகமடைந்த மொழிகளை பேசும் மக்கள் எல்லோரும், கலப்பினத்தை சேர்ந்தவர்கள் தான். அவ்வாறு இனக் கலப்படையாமல், இனத் தூய்மை பேணியோர் காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்றனர். அவர்களை நாங்கள் "நாகரீகமடையாத பழங்குடி இனம்" என்று கூறி ஒதுக்கி வைத்திருக்கிறோம். 

இந்தியாவில் ஆரிய படையெடுப்பு நடக்கவில்லை. ஆனால், ஆரிய குடியேற்றம் நடந்துள்ளது. அதிலும் கி.மு. 3000 வருடங்களுக்கு முன்னர், தெளிவாகத் தெரியக் கூடிய ஆரியப் படையெடுப்புகள்/குடியேற்றங்கள்  நடந்ததாக சரித்திரத்தில் சான்றுகள் கிடையாது. அந்த "ஆரியரும்" ஒரே இனமாக, ஒற்றுமையுடன் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் தமக்குள் மோதிக் கொண்டார்கள். அரசியல் ஆதிக்கத்திற்காக, ஒரே இனத்தை சேர்ந்தவர்களையும் அழித்தனர். அது மட்டுமல்ல, கறுப்பின அரசர்களுக்கு விசுவாசமான கூலிப்படையாக இருந்தார்கள். அப்படியானவர்கள் தாம் குடியேறிய அல்லது தொழில் செய்த நாடுகளில், கறுப்பின பெண்களை மணந்து கொண்டனர். கறுப்பின மக்களின் நாட்டை பாதுகாப்பதற்காக, படையெடுத்து வந்த இன்னொரு ஆரிய இனத்திற்கு எதிராக போராடினார்கள். 

ஆனால், அது இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் வெள்ளையின மக்கள் குடியேறிய ஆரம்ப காலகட்டம் ஆகும். சில நூறாண்டுகளுக்கு பின்னர், அல்லது ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர்,  உண்மையிலேயே சில "ஆரிய-வெள்ளையின" படையெடுப்புகள்  இடம்பெற்றன. மேற்கே இருந்து படையெடுத்த, ஈரானியர்கள் தமது சாம்ராஜ்யத்தை இந்தியா வரை விஸ்தரித்தார்கள். அவர்கள் தான் இந்து மதத்தவர்கள். அதே நேரம், வடக்கே இருந்து வந்த வெள்ளை இனங்கள், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் "காந்தாரம்" என்ற சாம்ராஜ்யத்தை ஆண்டனர். அது இந்து மதமும், பௌத்த மதமும் கலந்த நாடாக விளங்கியது. இவர்களை அடுத்து, கிரேக்கத்தில் இருந்து அலெக்சாண்டர் தலைமையில் இன்னொரு வெள்ளையினம் படையெடுத்து வந்தது. மேற்குறிப்பிட்ட மூன்று வெவ்வேறான வெள்ளை இன மக்களும், ஈரானிலும், இந்திய உபகண்டத்திலும் வாழ்ந்த கறுப்பின (திராவிட) மக்களுடன் கலந்து விட்டனர். அதனால், அவர்களை எல்லாம் தூய வெள்ளை இன ஆரியர்களாக கருத முடியாது. 

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?
17.தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்
18.கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்

*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber
14. Black Athena, by Martin Bernal
15. The Minoans, The World's Greatest Civilizations
16. Empires of the Silk Road, A History of Central Eurasia from the Bronze Age to the Present, by Christopher I. Beckwith
17. தொல்காப்பியத் தமிழர், சாமி. சிதம்பரனார்

5 comments:

Rathnavel Natarajan said...

வித்தியாசமான பதிவு.
நன்றி.

indrayavanam.blogspot.com said...

நல்ல தகவல், அருமையான வரலாற்று தகவல்

Unknown said...

இந்து மதம் மற்றும் கிறிஸ்துவ மதம் இரண்டையும் கொண்டு வந்தவர்கள் வெள்ளை இன மக்கள் தானா ஐயா? அப்படியென்றால் இந்து மதம் வருவதற்கு முன்னர் நம்முடைய பாரத நாட்டில் என்ன வழிபாட்டு முறை இருந்தது என்று சொன்னீர்கள் என்றால் நலமாக இருக்கும்.

Kalaiyarasan said...

//இந்து மதம் மற்றும் கிறிஸ்துவ மதம் இரண்டையும் கொண்டு வந்தவர்கள் வெள்ளை இன மக்கள் தானா ஐயா? அப்படியென்றால் இந்து மதம் வருவதற்கு முன்னர் நம்முடைய பாரத நாட்டில் என்ன வழிபாட்டு முறை இருந்தது என்று சொன்னீர்கள் என்றால் நலமாக இருக்கும்.//

இந்தக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில், அது குறித்து மிகவும் தெளிவாகவும், விபரமாகவும் எழுதி இருக்கிறேன். இந்த தொடரை முதலாம் பாகத்தில் இருந்து வாசித்து விட்டு சொல்லுங்கள்.

thoaranam said...

நன்றாக இருக்கிறது!!