Wednesday, August 29, 2012

ஸ்பெயினில் ஒரு பொருளாதார அதிசயம்: வளமான கம்யூனிச சமுதாயம்


கம்யூனிச அமைப்பு என்றால், "எல்லோரும் சேர்ந்து பிச்சை எடுக்க வேண்டும்." என்று நையாண்டி செய்யும் மேதாவிகளைக் கண்டிருப்பீர்கள்.  இன்று வரையிலான உலக வரலாற்றில், கம்யூனிச நாடுகள் என்றுமே தோன்றியதில்லை. ஆனால், கம்யூனிச சமுதாயங்கள் தோன்றியுள்ளன. அவை இன்றைக்கும் எந்தப் பிரச்சினையுமின்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலக பொருளாதார கட்டமைப்பில் நடக்கும் மாற்றம் எதுவும், அவற்றைப் பாதிப்பதில்லை.

அந்த சமூகங்களை சேர்ந்த யாருமே கடனாளியாகி தெருவுக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது. அதற்காக, கம்யூனிச அமைப்பில் எல்லோரும் ஏரில் மாடு பூட்டி, வயலில் உழுது கொண்டிருப்பார்கள், என்று கற்பனை செய்யக் கூடாது. உழவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், நிர்வாகிகள்... ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தில் நீங்கள் சந்திக்கும் அத்தனை வகையான நபர்களும் அங்கே இருப்பார்கள்.

இன்றைக்கும் இருக்கும் கம்யூனிச நகரங்கள் எல்லாம், செல்வம் கொழிக்கும் "பணக்கார சமுதாயங்களாக" உள்ளன. வேறு இடங்களை சேர்ந்த, வேலையற்ற மக்கள் அங்கே வேலை தேடி வருவார்கள். ஆனால், கம்யூனிச சமுதாயத்தினுள் வாழும் எவரும் வேலை தேடி வெளி நகரங்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ செல்வதில்லை. அப்படிப் போக வேண்டிய அவசியமும் கிடையாது. நான் ஏதோ பைத்தியம் பிடித்து பிதற்றுவதாக நினைக்கும் நண்பர்களை, ஸ்பெயினுக்கு வருமாறு அழைக்கிறேன். பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப் பட்ட மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், ஒரு வெற்றிகரமான கம்யூனிச சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

அந்த நகரத்தில், மொத்தம் 2700 பேர் மட்டுமே வாழ்கின்றனர். வயல்கள், பண்ணைகள், தொழிற்சாலைகள் அனைத்தும், பொதுவுடமைப் பொருளாதார அடிப்படையில் இயங்குகின்றன.  அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஊதியத்தில் பெருமளவு ஏற்றத்தாழ்வு கிடையாது. வயலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி கூட மாதம் 1200 யூரோ சம்பாதிக்கின்றார். 

மாதாமாதம் 20 யூரோ தவணை முறையில் செலுத்தி, ஒவ்வொரு குடும்பமும் தனக்கான சொந்த வீடு கட்டிக் கொள்ளலாம். குழந்தைகள் பராமரிப்பகத்தின் மாதக் கட்டணம் 16 யூரோ. பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான படிப்புச் செலவு மாதம் 17 யூரோ மட்டுமே. அந்தக் காசுக்கு கேன்டீனில் மதிய உணவு, புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள் எல்லாம் கிடைக்கின்றன. கோடை காலம் முழுவதும் நீச்சல் குளம் பாவிப்பதற்கான கட்டணம் வெறும் 4 யூரோ மட்டுமே! 

நம்பினால் நம்புங்கள். அந்த நகரத்தில் பொலிஸ் நிலையம் கிடையாது! நீதிமன்றம் கிடையாது! குற்றச் செயல்கள் எதுவும் நடப்பதில்லை! அதனால், காவல்துறை, நீதிமன்றங்களை பராமரிப்பதற்கான அரசு நிதி மிச்சப் படுத்தப் படுகின்றது. இதெல்லாம் எப்படி சாத்தியமானது? ஒரு சோஷலிச சமுதாயமே அனைத்து மக்களினதும் தேவையை பூர்த்தி செய்யும். ஸ்பெயின் நாட்டில், முப்பது வருடங்களாக ஒரு கம்யூனிச நகரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் தான், உலகின் கவனம் அதன் மீது திரும்பியது. 

தெற்கு ஸ்பெயினில், செவியா (Sevilla) நகரத்தில் இருந்து 60 கி.மி. தூரத்தில் உள்ளது, மரினலேடா (Marinaleda) என்ற சிறு கிராமம். அந்தக் கிராமத்தை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலம், ஒரு நிலவுடமையாளருக்கு சொந்தமானது. முப்பது வருடங்களுக்கு முன்னர், நிலமற்ற விவசாயிகள் ஒன்று திரண்டு அந்த நிலங்களை ஆக்கிரமித்தார்கள். ஆரம்பத்தில் அது ஒரு பெரும் போராட்டமாக அமைந்தது. அவர்களது எழுச்சி அதிகார வர்க்கத்தினரால் அடக்கப் பட்டது. ஒவ்வொரு தடவையும் நடந்த நில ஆக்கிரமிப்பு, அதிக பட்சம் ஒரு மாதம் மட்டுமே நீடித்தது. ஹுவான் சஞ்செஸ் கொர்டியோ (Juan Manuel Sanches Gordillo) போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பிறகு நிலைமை மாறியது. 

போராடிக் களைத்திருந்த மக்கள், புதிய உத்வேகத்துடன் கிளம்பினார்கள். செவியா நகரின் விமான நிலையம், ரயில் நிலையங்களை முற்றுகையிட்டு போக்குவரத்தை முடக்கினார்கள். அரச காரியாலயங்களை ஆக்கிரமித்தார்கள். மரினலேடா நிலங்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொள்ளும் வரையில், போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. வாழ்க்கையில் எதுவும் போராடாமல் கிடைக்காது என்பதை அந்த மக்கள் புரிந்து கொண்டனர்.  1991 ம் ஆண்டு,  இறுதியில் அரசு, நிலப்பிரபுவின் நிலங்களுக்கான உரிமைப் பத்திரத்தை, போராடிய  மக்களிடம் கையளித்தது. அன்றிலிருந்து, மரினலேடா நகரம் "உத்தோபியா" (Utopia) என்று பெயர் மாற்றப் பட்டது. அது கவிஞர்கள் கனவு கண்ட, "பாலும் தேனும் ஆறாக ஓடும் பூலோக சொர்க்கமாக" கருதப் பட்டது.

ஒரு பொதுவுடைமை சமுதாயத்தின் மூலமே, மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என்பதை, மரினலேடா வாசிகள் நிரூபித்துக் காட்டினார்கள். கூட்டுறவுப் பண்ணைகள் அமைத்தார்கள். வயல்கள், தோட்டங்கள், பண்ணைகள் எங்கும் அனைவரும் சரி சமமாக சேர்ந்து உழைத்தார்கள். முதலாளிகள் யாரும் இல்லாததால், விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து கிடைத்த இலாபமும் மக்களிடமே திரும்பி வந்தது. அவர்கள் அதனை தொழிற்சாலைகளில் முதலிட்டார்கள். பொதுவுடைமை சமுதாயம் என்றால், ஒரு வசதியற்ற கிராமத்தில் எல்லோரும்  விவசாயிகளாக வயல் உழுது கொண்டிருப்பார்கள் என்று நினைக்கலாம். இன்றோடு அந்த என்ணத்தை  மாற்றிக் கொள்ளுங்கள். 

சனத்தொகை அடர்த்தி குறைவென்பதால், அதனை நீங்கள் கிராமம் என்று கூறலாம். ஆனால், நகர வாசிகள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளும் ஒரு சராசரி பொதுவுடைமை கிராமத்தில் கிடைக்கும். மேலும் பொதுவுடமைப் பொருளாதாரம் விவசாய உற்பத்தியில் மட்டும் தங்கியிருக்கவில்லை.  உயர் தொழில்நுட்ப இயந்திரங்களால் இயக்கப்படும் தொழிற்சாலைகள் கூட அங்கே உண்டு. பாடசாலைகள், விளையாட்டுத் திடல்கள், நீச்சல் குளங்கள், மற்றும் பொழுது போக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கே கிடைக்கும். சுருக்கமாக அது ஒரு கிராமம், ஆனால் சிறு நகரம் போன்று காட்சியளிக்கும். இன்றைக்கும் ரஷ்யாவின் சைபீரியாப் பகுதியிலும், சீனாவில் சில இடங்களிலும் இவ்வாறான தன்னிறைவு பெற்ற சமுதாயங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. 

மரினலேடா விவசாயிகள் திட்டமிடலுடன் பயிர் செய்கின்றனர். உதாரணத்திற்கு கத்தரிக்காய், தக்காளி, மிளகாய், கடுகு போன்ற பயிர்களை வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் பயிரிடுவார்கள். அவற்றை அறுவடை செய்யும் மாதம் மாறுபடும். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பயிரின் விளைச்சலை அறுவடை செய்யலாம். எல்லோரும் ஒரே நேரத்தில் அறுவடை வேலைக்கு ஒன்று கூடுவார்கள். மரினலேடா வயல்களில் உற்பத்தியாகும் மரக்கறிகள், ஒலிவ் பழங்கள், கிராம மக்களின் தேவையை பூர்த்தி செய்வதுடன், ஸ்பெயின் நாட்டின் பிற இடங்களுக்கு ஏற்றுமதியாகின்றது. ஹை-டெக் தொழிற்சாலைகள், அவற்றை பதப்படுத்தி டின்னில், அல்லது போத்தலில் அடைத்து வைக்கின்றன. அவ்வாறு டின்னில் அடைக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், ஒலிவ் எண்ணை போன்ற முடிவுப் பொருட்கள் ஸ்பெயின் முழுவதும் விநியோகிக்கப் படும்.

வருடாவருடம் உற்பத்தி அதிகரிப்பதால், அயல் கிராம மக்களையும் வேலைக்கு அமர்த்துகின்றனர். ஸ்பெயின் அரசாங்கத்தால் கைவிடப்பட்ட, மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு அங்கே அடைக்கலமும், தொழில் வாய்ப்பும் கிடைக்கிறது. மரினலேடா வயல்களிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய வரும் பருவ கால வேலையாட்களுக்கும் சமமான சம்பளம் கிடைக்கின்றது. ஒரு கூலித் தொழிலாளி கூட, மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 1200 - 1300 யூரோக்கள் சம்பாதிக்கின்றார். இன்றைய பொருளாதார நெருக்கடிக் காலத்தில், ஸ்பெயின் பிற பகுதிகளில், பட்டதாரிகள் கூட 300 யூரோ சம்பளத்திற்கு வேலை செய்ய தயாராக இருக்கின்றனர். ஸ்பெயின் முழுவதும் வேலையற்றோர் எண்ணிக்கை 25 %. அதே நேரத்தில், மரினலேடா நகரில் வேலையில்லாமல் யாரும் இல்லை. 

ஸ்பெயினில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வீட்டு மனை சந்தை வீழ்ச்சியடைந்ததால், சொந்தமாக வீடு வாங்குவது கனவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், மரினலேடா நகரில் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள். அதற்காக எந்த வங்கியிடமும் வீட்டை அடமானம் வைத்து கடனாளியாகவில்லை. ஒருவர் சொந்த வீடு கட்ட விரும்பினால், அவருக்கு நகர சபை எல்லா வித உதவிகளையும் செய்து கொடுக்கின்றது. வீடு கட்டுவதற்கான மொத்த செலவை நீங்கள் தவணை முறையில் கட்டலாம். ஒவ்வொரு மாதமும் 20 யூரோ கட்டினால், சீமெந்து, மண், கல், மரம் எல்லாவற்றையும் நகர சபை கொண்டு வந்து தரும். வீட்டை நீங்களாகவே கட்டிக் கொள்ள வேண்டும். எப்படிக் கட்டுவதென்ற ஆலோசனையும் இலவசமாக கிடைக்கும். 

அப்படியும் யாருக்காவது, வீட்டை தாமாகவே கட்டிக் கொள்ளும் வசதி இல்லையென்றால், மற்றவர்களை பிடித்து கட்டுவிக்கலாம். அதற்காக, நீங்கள் மாதா மாதம் 530 யூரோக்கள் செலுத்த வேண்டும். உங்களது வீட்டை நகர சபையே கட்டிக் கொடுக்கும். சொந்த வீடு கட்டிக் கொள்வதற்கு ஆகும் மொத்த செலவு, ஸ்பெயினின் பிற பகுதிகளை விட குறைவு. வெறும் முப்பதாயிரம் யூரோவுடன் வீடு உங்களுக்கு சொந்தமாகும். மாதா மாதம் கட்டும் தொகை மிக மிகக் குறைவு என்பதால், மொத்த தொகையை கட்டி முடிக்க எழுபது வருடங்கள் ஆகலாம். உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகள் அந்த தொகையை கட்டி முடித்து சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. வீட்டை வேறு யாருக்கும் விற்க முடியாது. எந்த இடைத் தரகருடனும் பேரம் பேச முடியாது. இதனால், அமெரிக்காவில் நடந்தது மாதிரியான, வீட்டு மனை சூதாட்டம், நிதி நெருக்கடி போன்ற குளறுபடிகளுக்கு அங்கே இடமில்லை. 

மரினலேடா நகரில், பிள்ளை வளர்ப்பது பெரும் செலவு பிடிக்கும் விடயமல்ல. வேலை செய்யும் பெற்றோர், குழந்தைகள் காப்பகத்திற்கு செலுத்த வேண்டிய தொகை, மாதம் 16 யூரோக்கள் மட்டுமே. பாடசாலை செல்லும் பிள்ளை என்றால், மாதம் 17 யூரோக்கள் செலவாகும். ஆனால், பாடசாலை உணவு விடுதியில் மதிய உணவு கிடைக்கிறது. பாட நூல்கள் இலவசமாக வழங்கப் படுகின்றன. ஜிம்னாஸ்டிக், விளையாட்டு, மற்றும் நீச்சல்குளம் பாவிப்பதற்கு ஒரு சிறிய தொகை மட்டுமே கட்டணமாக அறவிடுகிறார்கள்.

ஆரம்ப பாடசாலை மட்டுமே அங்கே இருப்பதால், உயர் கல்வி கற்பதற்கு பிற நகரங்களுக்கு செல்ல வேண்டும். அப்பொழுதும், மாணவர்களுக்கு தேவையான படிப்புச் செலவுகளை நகர சபை பொறுப்பெடுக்கும். அதே போன்று, மருத்துவர், கிளினிக், எல்லாம் அங்கே இலவசமாக கிடைத்தாலும், வெளியிடங்களில் உள்ள வைத்திய சாலைகளுக்கு அனுப்பப் படும் நோயாளிகளுக்கான செலவையும் நகரசபை ஏற்றுக் கொள்கின்றது. முன்பெல்லாம் மரினலேடாவில் இயங்கும் பொதுவுடைமை சமுதாயம் பற்றி, ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வந்தன. இப்பொழுது பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினை காரணமாக, ஊடகவியலாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது. நியூ யார்க் டைம்ஸ் கூட, ஒரு செய்திக் கட்டுரையை பிரசுரித்திருந்தது. 

சோஷலிசம் சமூகத்தை முன்னோக்கித் தள்ளும் உந்துசக்தியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும், சேகுவேரா படங்களும், புரட்சிகர கோஷங்களும் சுவர்களை அலங்கரிக்கின்றன. பாடசாலைக் கல்வியில், சோஷலிசம், மனிதாபிமானம், சமாதானம் போன்ற பண்புகளை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். மரினலேடா நகரில் வாழும் மக்கள் அனைவரும், சோஷலிசத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதால், யாரும் தமது தலைக்குள் திணிக்கப் படுவதாக உணரவில்லை.  மக்கள் எல்லோரும் தவறாமல் கலந்து கொள்ளும், நகர சபைக் கூட்டங்களே அதற்கு சாட்சியம்.

மரினலேடா நகரின் ஒவ்வொரு முடிவும், வெகுஜன வாக்கெடுப்பினால் தீர்மானிக்கப் படுகின்றது. புதிதாக தெரு போட வேண்டுமா? பாடசாலை கட்ட வேண்டுமா? அல்லது பற்றாக்குறையான ஒரு பொருளை வெளியில் இருந்து வாங்க வேண்டுமா? சிறு விடயமாக இருந்தாலும், அதனை மக்களே முடிவு செய்கின்றனர். நகர சபை பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தல் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது.

கடந்த முப்பதாண்டுகளாக, ஹுவான் மனுவேல் சஞ்செஸ் மேயராக பதவி வகிக்கின்றார். அவர் ஐக்கிய இடது முன்னணி கட்சியை சேர்ந்தவர். அண்மையில், அந்தக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். அந்த நகரில் ஒரு எதிர்க்கட்சியும் இருக்கின்றது. ஸ்பெயினில் மிகப் பெரிய (வலதுசாரி) சமூக-ஜனநாயக கட்சியான சோஷலிசக் கட்சி, சில ஆதரவாளர்களைப் பெற்றுள்ளது. ஆனால், அவர்களின் உறுப்பினர்கள் நகர சபையில் மிகக் குறைவு. இருந்தாலும், சஞ்செஸ் நடத்தும் அரசியலை எப்போதும் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள்.

மரினலேடா நகர மக்கள், வெளியுலகம் தெரியாமல் மூடுண்ட சமுதாயமாக வாழ்வதாக யாரும் நினைத்து விடாதீர்கள். அந்த சமூகத்தில் நடக்கும் புதினங்களையும், உலக நடப்புகளையும் மக்களுக்கு அறிவிப்பதற்காக ஒரு தொலைக்காட்சி சேவை இயங்கிக் கொண்டிருக்கிறது.  "மரினலேடா டி.வி." (Marinaleda TV, http://www.youtube.com/user/MarinaledaTV), பாலஸ்தீன பிரச்சினை, பொருளாதார நெருக்கடி, மற்றும் உலகெங்கும் நடக்கும் மக்கள் எழுச்சிகள் பற்றிய செய்திகளை அறிவித்துக் கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு செய்திகளுக்காக, அது ஸ்பானிஷ் மொழி பேசும் லத்தீன் அமெரிக்க தொலைக்காட்சிகளான கூபா விசியோன், டெலேசூர் போன்ற ஊடகங்களை நம்பியுள்ளது.  Cuba Vision, கியூபாவின் தேசிய தொலைக்காட்சி சேவை. Telesur, வெனிசுவேலாவில் இருந்து ஒளிபரப்பாகின்றது. அதனை "ஸ்பானிய மொழி பேசும், சோஷலிச CNN " என்றும் அழைக்கலாம். 

1700 யூரோக்கள் மாத வருமானம் பெறும் மேயர் சஞ்செஸ், தனது குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டு ஒதுங்கி வாழும் அரசியல்வாதியல்ல. இன்றைக்கும் சமூக விடுதலைப் போராட்டங்களில் முன்னுக்கு நிற்கின்றார். அண்மையில், ஸ்பெயினின் இரண்டு வெவ்வேறு நகரங்களில், ஏழைப் பட்டாளத்தை அழைத்துச் சென்று, பல்பொருள் அங்காடிகளை (சூப்பர் மார்க்கட்) சூறையாடினார். அங்கிருந்த பொருட்களை அயலில் வாழும் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தார். அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் பெயர் ஸ்பெயின் முழுவதும் பிரபலமானது. ஊடகங்கள் அவரை "ராபின் ஹூட்" என்று அழைத்தன. சஞ்செஸ் ஒரு பாராளுமன்ற உறுப்பினருமாகையினால் அவரை பொலிஸ் கைது செய்ய முடியவில்லை. 
  


மேலதிக தகவல்களுக்கு:
1. A Job and No Mortgage for All in a Spanish Town, http://www.nytimes.com/2009/05/26/world/europe/26spain.html?_r=3&pagewanted=all SIGN OF
2.THE TIMES: SPANISH ‘ROBIN HOOD’ ACTIVISTS LOOT SUPERMARKETS, http://www.theblaze.com/stories/sign-of-the-times-spanish-robin-hood-activists-loot-supermarkets/# 
3. Marinaleda: 30 años de lucha (Spanish),  http://www.youtube.com/watch?v=qKTjMocijZQ
4. Marinaleda: La otra España, http://www.redglobe.org/europa/espana/20/2952-marinaleda-la-otra-espana

Spanish "Robin Hood" Mayor Loots Supermark
et 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்கள்...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

வலிப்போக்கன் said...

நம்ப முடியவில்லை.ஆனால் நீங்கள் சொல்வதால் நம்பித்தான் ஆக வேண்டியிறக்கிறது.

sakthi said...

"ராபின் ஹூட்" என்று அழைத்தன.

அருமை ,நமக்கும் பல ராபின் ஹுட்கள் தேவை