Wednesday, October 05, 2011

"சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஒன்பது)


இலங்கையின் வரலாற்றில் 1956 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இன்னும் சொல்லப்போனால், இன்று விஸ்வரூபமாக விரிந்து இலட்சக்கணக்கான மக்களின் சாவுக்கும் காரணமான இனப்பிரச்சினையின் தோற்றுவாயும் அது தான். 1956 வரையில், சாதி, வர்க்க பிரிவினையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. 1956 க்குப் பின்னர், தேசியவாதம் என்ற கருத்தியல் அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. தேசியவாதிகள் கற்பித்த இனம் என்ற அடிப்படையில் இருந்தே சமூக நோக்கு விரிந்தது. சிங்களவர்கள், தமிழர்கள், ஆகிய இரண்டு மொழி பேசும் சமூகங்களிலும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன.

சிங்களவர்கள் மத்தியில் அந்த சாதனையை நிகழ்த்தியவர், பண்டாரநாயக்க. அதே போன்று, தமிழர்களையும் தேசியவாதிகளாக மாற்றிய பெருமை செல்வநாயகத்தை சாரும். இரண்டு தலைவர்களுக்கும் இடையில் ஒற்றுமைகளும் இருந்தன. இருவரும் சமுதாயத்தில் உயர்சாதியாக கருதப்படும், "கொவிகம-வெள்ளாள" சாதியில் பிறந்தவர்கள். அதிலும், பிரித்தானியா சென்று கல்வி கற்கும் அளவு வசதி படைத்த மேட்டுக் குடியை சேர்ந்தவர்கள். (கொழும்பு மேட்டுக்குடி பிள்ளைகள் மட்டுமே படிக்கும், சென் தோமஸ் கல்லூரியில் ஒரே காலத்தில் கல்வி கற்றுள்ளனர்.) சிறுபான்மை கிறிஸ்தவமதத்தில் பிறந்த போதிலும், பெரும்பான்மை மதத்தவரின் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு அரசியல் நடத்தியவர்கள். அனைத்து சாதிகளையும் தேசியம் என்ற குடையின் கீழ் ஒன்று படுத்தியமை, இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது.

1948 ம் ஆண்டில் இருந்து நிகரற்ற ஆளும் கட்சியாக இருந்த, ஐக்கிய தேசியக் கட்சி 1956 தேர்தலில் தோல்வியுற்றது. சிங்களப் பகுதிகளில் பண்டாரநாயக்கவின் கட்சி வெற்றி பெற்றது. சில வருடங்களுக்கு முன்னர் தான், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிய பண்டாரநாயக்க, சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைத்திருந்தார். தமிழ் பிரதேசமான, வட-கிழக்கு மாகாணங்களில் செல்வநாயகத்தின் கட்சி பல இடங்களைக் கைப்பற்றியது. செல்வநாயகமும், சில வருடங்களுக்கு முன்னர் தான், தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தமிழரசுக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஸ்தாபித்தார். சுதந்திரக் கட்சி, இலங்கையை பௌத்த-சிங்களவர்களுக்கான தாயகமாக்க வேண்டுமென்ற கொள்கையை பரப்புரை செய்தது. தமிழரசுக் கட்சி, இந்து-கிறிஸ்தவ தமிழருக்கான தாயகக் கோட்பாட்டை பரப்பியது. இதற்காக மட்டும் தான் மக்கள் இவ்விரு கட்சிகளுக்கு வாக்களித்தார்கள் என்றே புரிந்து கொள்ளப் படுகின்றது. சிங்கள தேசியவாதம், தமிழ் தேசியவாதம் இரண்டுமே, நாங்கள் அவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றன. இது சமூக-பொருளாதார பின்னணியை ஆராயாத, வெறும் அரசியல் சார்ந்த விளக்கம் மட்டுமே.

1956 க்கு முன்னர், இலங்கையில் சாதி அரசியல் கோலோச்சியது. தேர்தலில் நின்ற வேட்பாளர்கள் பகிரங்கமாக சாதி அபிமானம் காட்டினார்கள். "ஆதிக்க சாதி மக்களுக்காக, ஆதிக்க சாதி வேட்பாளர்களால் நடத்தப் படுவதே", இலங்கை அரசியலாக இருந்தது. சிங்களவர்களைப் பொறுத்த வரையில் "கொவிகம", தமிழருக்கு "வெள்ளாளர்கள்". பிற்பட்ட, தாழ்த்தப் பட்ட சாதியினர் எப்போதும் புறக்கணிக்கப் பட்டே வந்துள்ளனர். தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்கள், கொவிகம-வெள்ளாள சாதியினர் என்பது எழுதப்படாத விதியாகவிருந்தது. தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லும் வேட்பாளர்கள், உள்ளூர் நிலவுடைமையாளர் வீட்டில் தான் தங்குவார். அதே சாதியை சேர்ந்த நிலப்பிரபுவும், தன்னிடம் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டுமென உத்தரவிடுவார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இரண்டையும் சேர்ந்த வேட்பாளர்கள் இவ்வாறு தான் தேர்தலில் நின்று ஜெயித்தார்கள். காலப்போக்கில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு காரணமாக, நிலவுடமையாளர்களின் பிடி தளர்ந்தது. அதற்கு முக்கிய காரணம், கம்யூனிசத்தை வளர விடாமல் தடுப்பதற்காக, இலங்கை அரசு நடைமுறைப் படுத்திய சமூக நல திட்டங்கள். முரண்நகையாக, ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்த திட்டங்கள், அந்தக் கட்சியின் தோல்விக்கு வழிவகுத்தது.

ஆங்கிலேயரின் காலனிய ஆட்சியில், ஐரோப்பியரும், படித்த மேட்டுக்குடியினரும் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர், அனைத்துப் பிரஜைகளுக்கும் வாக்குரிமை வழங்கப் பட்டது. அரச பாடசாலைகளில் இலவசக்கல்வி, அரச மருத்துவமனைகளில் இலவச மருத்துவம், என்பன சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கிடைத்தன. உண்மையில், மார்க்சியக் கட்சிகளின் நீண்ட காலக் கோரிக்கைகள் இவை. சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்க மக்களிடம், இந்தக் கோரிக்கைகள் இலகுவில் எடுபடும். கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரிக்கக் கூடாது என்பதற்காக, அரசே முன் நின்று அந்த திட்டங்களை நிறைவேற்றியது. நிச்சயமாக, மக்கள் அதற்குப் பிறகு கம்யூனிசத்தை மறந்து விட்டார்கள். ஆனால், சமூக நலத் திட்டங்களின் விளைவாக அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது. கல்வி இலவசமாயினும்,ஆங்கில வழிக் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் தடையாகவிருந்தது. எழுதப், படிக்கத் தெரிந்த ஒடுக்கப் பட்ட சாதியினர், அரசியல் முடிவுகளில் தமது பங்களிப்பு எதுவுமில்லை என்பதை அறிந்து கொண்டனர்.

அரசின் பாரபட்சமான கல்விக் கொள்கையால், ஆசிரியர்களும் பெருமளவு பாதிக்கப் பட்டனர். ஆங்கிலத்தில் கற்பித்த ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப் பட்டது. அதே நேரத்தில், சிங்களம் அல்லது தமிழில் கற்பித்த ஆசிரியர்களுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைத்தது. மருத்துவத் துறையிலும், ஆங்கிலேயர் அறிமுகப் படுத்திய கல்வி கற்ற வைத்தியர்களுக்கே மதிப்பு அதிகம். அவர்களின் சான்றிதல்களை மட்டுமே அரசு அங்கீகரித்தது. உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் வேலையின்றி தவித்தார்கள். அப்படியே வேலை கிடைத்தாலும், ஆங்கிலம் தெரிந்த வைத்தியரை விட குறைவாகவே சம்பாதிக்க முடியும். சுருக்கமாக, ஆங்கில மருத்துவம் பயின்றவர்கள், சமூகத்தில் மேன் நிலையில் இருந்தனர். தாய்மொழியில் சுதேசி மருத்துவம் பயின்றவர்களின் வாழ்க்கை கஷ்டமாகவிருந்தது. வட மாகாணத்திற்கான ஆயுர்வேதக் கல்லூரி, கைதடி என்ற ஊரில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற விடயம், இன்றைக்கும் பல தமிழருக்கு தெரியாது. அந்தளவுக்கு, சுதேசி மருத்துவர்கள், அரசினால் மட்டுமல்ல, சமூகத்தினாலும் புறக்கணிக்கப் படுகின்றனர். மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் எல்லாம், சிங்களவர், தமிழர், இரண்டு சமூகங்களுக்கும் பொதுவானவை தான்.

சமூக விஞ்ஞானத்தில் குட்டி-பூர்ஷுவா என்று அழைக்கப்படும் கீழ் மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி, 1956 தேர்தல் முடிவை தீர்மானித்தது. பூர்ஷுவா அல்லது மேல் மத்தியதர வர்க்கத்தினருக்கு கிடைத்து வந்த, வசதி வாய்ப்புகள் கைவரப் பெறாதவர்கள். ஆங்கில அறிவு குறைவாக இருந்த படியால், பதவிகளை கை நழுவ விட்டவர்கள். அவர்களிடம் இருந்த ஒரேயொரு துருப்புச் சீட்டு, அரசியல் அதிகாரம். தமக்கு பரிச்சயமான சிங்களம், அல்லது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்த கட்சிகளின் பின்னால் அணி திரண்டார்கள். பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சிக்கு, (தேர்தல் காலத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்டது) ஓட்டுப் போட்டு வெல்ல வைத்த சிங்கள நடுத்தர வர்க்கத்தினருக்கு, இது ஒரு வர்க்கப் பிரச்சினை என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆங்கில மொழி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம், சிங்களவர், தமிழர் இருவருக்கும் பொதுவானது. இந்த புரிந்துணர்வு பல சிங்களவர்களிடம் இருந்துள்ளது. ஆயினும், அரசியல் தலைவர்களின் சந்தர்ப்பவாத இனவாதத்தை அற்ப விஷயமாக கருதி புறக்கணித்தார்கள். இது சிங்களவர்களுக்கு மட்டும் பொதுவான குறைபாடு அல்ல. தமிழர்களும் நீதியான கோரிக்கைகளுக்கு பின்னாலான, தலைமைகளின் இனவாதக் கருத்துகளை பெரிது படுத்துவதில்லை.

சுதந்திரம் கிடைத்து ஐந்து ஆண்டுகளாகியும், வங்கிகள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்களில் எல்லாம் அனைத்துப் பதிவுகளும் ஆங்கில மொழியில் இடம்பெற்றன. அரச அலுவலகத்திற்கு செல்லும் மக்கள், அதிகாரிகளுடன் ஆங்கில மொழியில் தொடர்பு கொள்ள வேண்டிய நிலைமை நீடித்தது, காலனிய மொழிக்கு பதிலாக, சிங்களத்தையும், தமிழையும் உத்தியோகபூர்வ மொழியாக்கும் திட்டம் ஏற்கனவே அரசிடம் இருந்துள்ளது. அதற்கென ஒரு ஆணைக்குழு, 1952 தொடக்கம் இயங்கி வந்தது. ஆனால், அரசினால் மிகக் குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்ட ஆணைக்குழு, சில மொழிபெயர்ப்பு வேலைகளைத் தவிர, உருப்படியாக எதையும் செய்யவில்லை. சிங்கள மக்கள் மத்தியில், மொழி உரிமைக்காக போராடியவர்கள் இரண்டு வகைப் பட்டவர்கள். ஒரு பிரிவினர், சிங்களத்தோடு தமிழையும் உத்தியோகபூர்வ மொழியாக்க விரும்பினார்கள். இன்னொரு பிரிவினர் மிகவும் தீவிரமாக செயற்பட்டனர். அவர்கள், சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக வேண்டுமென விரும்பியதுடன், தமிழர்களை சந்தேகக்கண் கொண்டு நோக்கினார்கள். இரண்டாவது பிரிவினரின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. இரண்டு மொழிகளினதும் உரிமைகளுக்காக பேசிய சிங்களவர்களும், வாய்மூடி மௌனிகளானார்கள்.

பெரும்பாலும், சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சமூகப்பிரிவுகள் யாவும், ஏதோ ஒரு வகையில் தமிழர்களுடன் புரிந்துணர்வைக் கொண்டிருந்தன. எந்த வகையிலும், தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்ள முடியாத ஒரு சமூகப் பிரிவினர், பௌத்த மத பிக்குகள் மட்டுமே! மதவெறி கண்ணை மறைத்தது!! பௌத்த மதம் சங்க அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த சங்கங்கள், வெறுமனே மதத்தை மட்டும் போதிக்காமல், அரசியல் அபிலாஷைகளுடனும் இயங்கிக் கொண்டிருந்தன. இன்றைக்கும், குறிப்பிட்ட சில பௌத்த சங்கங்கள் இனவாதம் பேசும் அதே தருணத்தில், வேறு சில இன நல்லுறவை விரும்புகின்றன. ஆரம்பத்தில், சிங்களத்துடன், தமிழுக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்து கொடுக்க விரும்பிய பண்டாரநாயக்க, புத்த பிக்குகளின் வற்புறுத்தலால் சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழியாக்கினார். இதற்கு எதிர்வினையாக செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியினர் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக, "பண்டா-செல்வா ஒப்பந்தம்" ஏற்பட்டு, தமிழுக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது. ஆயினும், புத்த பிக்குகள் போர்க்கொடி தூக்கியதால், பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. வெறுத்துப் போன செல்வநாயகம்,"சிங்களவர்கள் எதுவும் தர மாட்டார்கள்." என்ற விரக்தியில், "தனித் தமிழீழம்" என்ற புதிய பாதையை தேர்ந்தெடுத்தார்.


(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

3 comments:

தர்ஷன் said...

சர்வசன வாக்குரிமை 1931 இலேயே டொனமூர் அரசியல் யாப்புடனே நடைமுறைக்கு வந்து விட்டது என நினைக்கிறேன்.

இலங்கையின் அரசியல் பிரச்சினையின் தோற்றுவாய் பற்றிய பாரபட்சமற்ற பதிவு.
தமிழர் தரப்பின் மேட்டுக்குடி சாதிய அரசியல் பற்றிய விமர்சனங்களை தைரியமாக முன்வைப்பவர் எனக்குத் தெரிந்து நீங்கள் ஒருவரே

சர்வதேசத்திலிருந்து இலங்கை பக்கம் பார்வையை திருப்பி இருக்கிறீர்கள் போலும்.

லிபியா பற்றி போதுமான அளவு உங்களிடமிருந்து பதிவுகள் வரவில்லையோ?

aotspr said...

வரலாற்று பதிவு......
உங்கள் பதிவுக்கு நன்றி......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Mohamed Faaique said...

ஈழம் பற்றிய பேச்சுக்கள் அந்தக் காலத்திலேயே ஆரம்பித்து விட்டதா???