Friday, April 01, 2011

தயவுசெய்து, "NATO" விடமிருந்து லிபிய புரட்சியைக் காப்பாற்றுங்கள்

லிபிய புரட்சியாளர்களின் தலைமையகமாக கருதப்படும், பெங்காசி நகர வழக்கறிஞர்களின் நேர்காணலை நெதர்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பியது. "கடாபியின் சட்டங்களில் என்ன குறை கண்டீர்கள்?", என்ற கேள்விக்கு அவர்களது பதில் இவ்வாறு அமைந்திருந்தது. "கடாபியின் சட்டங்கள் இஸ்லாமிய ஷரியா அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. உதாரணத்திற்கு திருட்டுக் குற்றச்சாட்டுக்குள்ளான நபரின் கையைத் துண்டிப்பதிலை." (Niuewsuur, 30-03-2011)


லிபிய மக்கள் எழுச்சி ஆரம்பித்த காலங்களில், மேலைத்தேய ஊடகவியலாளர்கள் கடாபியை நேர்கண்டார்கள். "கிளர்ச்சியாளர்களை அல்கைதா" என்று வர்ணித்த கடாபிக்கு பைத்தியம் என்று பரிகசித்தார்கள். மேற்குலக மக்களும் கடாபியின் "அல்கைதா நகைச்சுவை" கேட்டு சிரிக்க வைக்கப் பட்டார்கள். மேற்குலக அரசுகளும் சேர்ந்து சிரித்தார்களே தவிர, எதையும் மறுக்கவில்லை. ஆமாம், லிபிய கிளர்ச்சியில் அல்கைதா சம்பந்தப்படவில்லை என்று இது வரை எந்தவொரு மேற்குலக தலைவரும் மறுத்துரைக்கவில்லை. இப்போது அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவரே, லிபிய எழுச்சியில் அல்கைதாவின் பங்களிப்பு உள்ளதை ஒத்துக் கொண்டுள்ளார்.Presence of al-Qaeda Seen among Libya's Rebels


2001 ம் ஆண்டு, அமெரிக்கா "அல்கைதா பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அறிவித்த காலத்தில், கடாபியும் அதனை ஆதரித்தார். அன்றிலிருந்து கடாபி அரசுடன், மேற்குலக நாடுகள் நட்புப் பாராட்ட ஆரம்பித்தன. அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், கடாபியின் பிரத்தியேக ஆலோசகர் ஆனார். லிபியாவின் சிறப்பு அதிரடிப் படைக்கு, பிரிட்டன் பயிற்சி வழங்கியது. பாதுகாப்புத் துறை சம்பந்தமான நவீன தகவல்களைப் பரிமாறிக் கொண்டது. (Libya: Tony Blair agreed to train Gaddafi’s special forces in 'deal in the desert’) ஒரு காலத்தில் மேற்குலகை வெறுத்த கடாபி, அவர்களை நண்பர்களாக்கிக் கொண்ட நாள் முதல் கடாபியின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. மேற்குலகின் புத்திமதிகளைக் கேட்டு, நாட்டில் தனியார்மயத்தைக் கொண்டு வந்தார்.(One Day Before Benghazi Rebellion. IMF Commends Qadhafi Government.) இதனால், கடாபியின் குடும்பமும், உறவினர்களும் நாட்டிலேயே பெரும் பணக்காரர்களாக மாறி, பெரும்பான்மை மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள்.


கடாபி ஆட்சியைக் கைப்பற்றிய ஆரம்ப காலங்களில், எண்ணை உற்பத்தி தேசியமயப் படுத்தப் பட்டிருந்தது. கடந்த தசாப்தங்களாக, லிபியாவின் பிரதானமான எண்ணெய் ஏற்றுமதியும் தனியாருக்கு திறந்து விடப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களுடன், கூட்டு ஒப்பந்தம் போட்ட லிபிய அரசு நிறுவனமான TAMOIL மேற்கத்திய நாடுகளில் முதலீடு செய்திருந்தது. இன்று அந்த நிறுவனத்தின் மில்லியன் கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகள் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாக கடாபி குமுறியதிலும் உண்மை இல்லாமலில்லை. இருந்த போதிலும், கடந்த வருடம் கடாபி மீண்டும் எண்ணெய் உற்பத்தியை தேசியமயமாக்கப் போவதாக அரசால் புரசலாக கதை அடிபட்டது. நேட்டோவின் இராணுவத் தலையீட்டுக்கு அதுவே முக்கிய காரணமாகக் கருதப் படுகின்றது.


பொருளாதாரத்தை தனியார்மயமாக்கியதால் கூடவே வேலைவாய்ப்பின்மையும், தனிநபர் வருமானத்தில் சரிவும் ஏற்பட்டது. பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்தது. பணக்காரர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே சென்றது. உலகமயமாக்கலின் விதிகளுக்கேற்ப கடாபியும் சோஷலிசத்தை கைவிட்டு விட்டு, முதலாளித்துவத்தை தழுவிக் கொண்ட நாள் முதல், சமூகத்தில் ஏற்பட்ட பிளவு விரிசல் அடைந்து கொண்டே சென்றது. கடாபி உறுதியளித்தவாறு மில்லியன் வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டம் நிறைவேறாததால் ஏற்பட்ட விரக்தியே, கடாபி அரசுக்கு எதிரான முதலாவது மக்கள் எழுச்சிக்கு வழிவகுத்தது.


லிபிய மக்கள் பல்வேறு இனக்குழு சமூகங்களாக பிரிந்துள்ளனர். முதலாளித்துவ பொருளாதார நலன்களை கடாபியின் இனக்குழுவினர் முழுமையாக பயன்படுத்தி வந்துள்ளனர். கிழக்கு லிபியாவை சேர்ந்த இனக்குழுவினர் புறக்கணிக்கப் பட்டதால், வேலையற்றோர் எண்ணிக்கை அங்கே அதிகம். சுருங்கக் கூறின், கடாபியின் அரசுக்கு எதிராக ஆரம்பத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி தனியார்மயமாக்களினால் ஏற்பட்ட விளைவு எனலாம். ஆனால், திடீரென களத்தில் குதித்த இஸ்லாமியவாதிகள் போராட்டத்தின் திசையை மாற்றினார்கள். லிபியாவில் கடின வேலைகளை செய்யும் உழைக்கும் வர்க்கம் முழுவதும் வெளிநாட்டவர்கள். இவர்கள் யாரும் மக்கள் எழுச்சியில் பங்குபற்றவில்லை. மாறாக, நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.


லிபிய கிளர்ச்சி ஆரம்பமாகியதும், கடாபி அரசில் பதவி வகித்த அமைச்சர்கள், அதிகாரிகள், ஜெனரல்கள், தூதுவர்கள் பலர் தமது பதவிகளை விட்டு விலகி கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்தார்கள். "கடாபி சொந்த மக்களை குண்டு போட்டுக் கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக...", தமது பதவி விலகலுக்கு காரணம் கூறினார்கள். இவர்களின் பின்னணியை ஆராய்ந்தால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. பலர் கிழக்கு லிபிய இனக்குழுக்களை சேர்ந்தவர்கள் என்பதும், தமது இனக்குழு விசுவாசத்தைக் காட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றனர் என்பதும் தற்செயல் அல்ல. லிபிய இராணுவத்தை விட்டு ஓடிப் போய், இன்று கிளர்ச்சிப் படைகளின் கமாண்டராகியுள்ள ஜெனரல் Khalifa Hifter சி.ஐ.ஏ. உளவாளி என நிரூபிக்கப் பட்டவர்.(American media silent on CIA ties to Libya rebel commander) பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணமான தனியார்மயமாக்கலை அமுல் படுத்திய கடாபியின் அமைச்சரான Mahmoud Jibril, இன்று கிளர்ச்சியாளரின் இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய தலைவர். நேற்று வரை கடாபியின் சர்வாதிகார ஒடுக்குமுறை ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த முக்கிய புள்ளிகள், இன்று கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்கள். மேற்குலக நாடுகளும், நேட்டோவும் இத்தகைய நபர்களைத் தான் தெரிவு செய்கின்றது. நிச்சயமாக, அது ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கான முயற்சியாக இருக்க முடியாது. லிபியாவில், கடாபியின் மறைவுக்குப் பின்னர், மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சி ஏற்படப் போவது உறுதி.



லிபியா பற்றிய முன்னைய பதிவுகள்:


லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்


லிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது!

4 comments:

NICHAAMAM said...

சிறந்த ஆய்வு தோழர்!

Unknown said...

ஆய்ந்த பதிவு
பகிர்ந்தமைக்கு நன்றி!

In Future said...

லிபியாவில், கடாபியின் மறைவுக்குப் பின்னர், மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சி ஏற்படப் போவது உறுதி.
--------------அப்படியாயின் இஸ்லாமியவாதிகளின் புரட்சியாளர்கள் கையில் ஆட்சி போக வழியுண்டா என்பதனையும் அவர்கள் மேற்குலகங்களுக்கு ஒரு போதும் ஆதரவாக செயற்படமாட்டர்கள் இதனை பற்றியும் தாங்கள் கருத்தை விளக்கவும்.ப்ளீஸ்

In Future said...

அப்படியாயின் இஸ்லாமியவாதிகளின் புரட்சியாளர்கள் கையில் ஆட்சி போக வழியுண்டா என்பதனையும் அவர்கள் மேற்குலகங்களுக்கு ஒரு போதும் ஆதரவாக செயற்படமாட்டர்கள் இதனை பற்றியும் தாங்கள் கருத்தை விளக்கவும்.ப்ளீஸ்