Thursday, August 14, 2008

விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"

"ரஷ்யர்கள் வந்துவிட்டார்கள்!", என்ற வதந்தி கிளப்பிய பீதியினால், பல்லாயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்கு அகதிகளாக சென்ற காலம் ஒன்றுண்டு. 2 ம் உலக யுத்த முடிவில், ஐரோப்பாவை சித்தாந்தரீதியாக பிளவுபடுத்த, "ஜனநாயக தலைவர்களால்" உருவாக்கப்பட்ட வதந்தி அது. ரஷ்யா(அன்று சோவியத் யூனியன்) நேச நாடுகளுக்கிடையில் போடப்பட்ட "யால்ட்டா ஒப்பந்தத்தை" நிரந்தரம் என்று நம்பிக் கொண்டிருந்த நேரம் தான்; மேற்குலக வல்லரசுகளின் சதியினால், "பெர்லின் பிரச்சினை" என்ற ஒன்று புதிதாக கிளப்பப்பட்டு, அது பின்னர் "பனிப்போர்" ஆனது வரலாறு. அன்று கூட ஆரம்பத்தில் யாரும் இந்த வல்லரசுப் போட்டியை கவனமெடுக்கவில்லை. "பனிப்போர்" என்ற சொற்பதம் புழக்கத்திற்கு வர நீண்ட காலம் எடுத்தது.

நீடித்த பனிப்போர் ஆயுத போட்டியை அதிகரித்து நாடு திவாலாகியதால், எண்பதுகளின் இறுதியில் சோவியத் ஜனாதிபதியான கோர்பசேவ், அமெரிக்காவுடன் சமாதானமாகப் போனால் நாடு முன்னேறும் என்று அப்பாவித்தனமாக நம்பி, பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தார். இரு நாடுகளுக்கிடையிலும் போடப்பட்ட ஒப்பந்தப்படி, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து சோவியத் படைகளை மீளப்பெற்றதுடன், வர்ஷோ (இராணுவ) ஒப்பந்த கூட்டமைப்பை கலைத்து, பேரழிவு தரும் ஆயுதங்களும் அழிக்கப்பட்டன. இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து சிதறி, சோஷலிச நாடுகள் யாவும் முதலாளித்துவ நாடுகளாகவும் மாறி விட்டன. அன்று பலர், உலக அழிவு காப்பாற்றப்பட்டு விட்டது என்றும், இராணுவமயமாக்கல், ஆயுதக்குவிப்பு போன்றன இனி இருக்காது என்றும், பல்வேறு கனவுகளில் மிதந்தனர்.

சமாதான விரும்பிகளின் பகற்கனவு பலகாலம் நீடிக்கவில்லை. வர்ஷோ ஒப்பந்த இராணுவ கூட்டமைப்பு கலைக்கப்பட்டாலும், வட அட்லாண்டிக் ஒப்பந்த இராணுவ கூட்டமைப்பு (நேட்டோ) அப்படியே இருந்தது. அதுமட்டுமல்லாமல், முன்னாள் வர்ஷோ ஒப்பந்த நாடுகளையும் புதிய அங்கத்துவர்களாக சேர்த்துக் கொண்டு விரிவடைந்தது. புதிய அங்கத்தவர்களுக்கு ஆயுதங்கள் விற்பதன் மூலம், அமெரிக்கா தனது ஆயுதக்குவிப்பை தொடர்ந்தது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசு தான் மட்டுமே என்ற மமதையில், ஐக்கிய நாடுகள் சபையையும் மதிக்காமல், உலக போலீஸ்காரனாக மாறியது.

மறுபக்கத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, மேற்குலக சார்பு ஜனாதிபதி யெல்ட்சின் தலைமையில் சீர்குலைந்து போய்க்கொண்டிருந்தது. நாட்டு பொருளாதாரம் வங்குறோத்தாகி, பணக்கார நாடுகளின் பிச்சையை எதிர்பார்த்து நின்றது. தேசிய நாணயமான ரூபிளின் மதிப்பிறங்கி, சாதாரண மக்கள் கூட அமெரிக்க டொலர்களை பயன்படுத்த விரும்பினர். ஆலைத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் மட்டுமல்ல, இராணுவ வீரர்களும் மாதக்கணக்காக சம்பளம் கிடைக்காமல், குடும்பத்தை பராமரிக்க கஷ்டப்பட்டனர். இதே நேரம் புதிதாக கோடீஸ்வரர்களான சிலர், அநியாயமாக சேர்த்த செல்வத்தை கொண்டு போய், மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் முதலீடு செய்து கொண்டிருந்தனர்.


ரஷ்யா 21 ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த போது நிலைமைகள் மாற ஆரம்பித்தன. முன்னாள் கே.ஜி.பி. உளவுத்துறை அதிகாரியான விளாடிமிர் புட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட போது, அவரும் "யெல்ட்சின் வழி"யில் செல்ல வேண்டும் என்று மேற்குலக நாடுகள் விரும்பின. ஆட்சிக்கு வந்தவுடன் புட்டின் செய்த முதல் வேலை, ரஷ்யாவின் செல்வத்தை சூறையாடி, வெளிநாடுகளுக்கு கப்பலேற்றிக் கொண்டிருந்த கோடிஸ்வரர்களை தனது எதிரிகளாக்கியது தான். வரிஏய்ப்பு குற்றச்சாட்டுகளை காரணமாக காட்டி, சில கோடிஸ்வரர்களை சிறையிலிட, மற்றவர்கள் நாட்டை விட்டே ஓடிப்போனார்கள்.

அந்த இடத்தில், வர்த்தக நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தை ரஷ்யாவிலேயே முதலீடு செய்யும், தேசிய முதலாளிகள் வந்தார்கள். தொழிலாளர்களின் சம்பளப்பணம், ஓய்வூதியம் என்பன கிரமமாக வழங்கப்பட்டன. பொருளாதார சீர்குலைவு தடுக்கப்பட்டு, தேசிய பொருளாதாரம் வளர்ந்துகொண்டே போனது. இவையெல்லாம் நல்லது தானே, என்று பலர் நினைக்கலாம். ஆனால் நமக்கு நல்லதாகப் படுவது, மேற்குலகிற்கு கெட்டதாகப் படுகின்றது. புட்டின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் பற்றி, மேற்குலக ஊடகங்கள் விலாவாரியாக எடுத்தியம்பி, மக்கள் மனதில் ரஷ்ய எதிர்ப்பு(அல்லது புட்டின் எதிர்ப்பு) உணர்வுகளை தூண்டி விட்டன.

2000 ம் ஆண்டு, சி.என்.என். தொலைக்காட்சி விவரணப்படம் ஒன்று, எளிதில் நம்ப முடியாத கதையை கொண்டு வந்தது. அதாவது, பனிப்போர் காலத்தில் இருந்தது போலவே, இன்றும் அமெரிக்க ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி இருக்கின்றன. ரேடர்கள் ரஷ்ய இராணுவ நகர்வுகளை கண்காணிக்கின்றன என்ற தகவலானது, அமெரிக்கா இன்றும் ரஷ்யாவை முக்கிய எதிரியாக பார்க்கின்றது, என்பதை அமெரிக்க உயர் அதிகாரிகளின் வாக்குமூலம் எடுத்து காட்டியது. ரஷ்யா இன்றும் அணுவாயுத வல்லரசு என்பது மட்டுமல்ல, உலகில் பெருமளவு பெட்ரோலிய, எரிவாயு வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் பொருளாதரீதியாக வளர்ச்சியடைந்த ரஷ்யா, எதிர்காலத்தில் தன்னோடு ஏகாதிபத்திய போட்டியில் இறங்கும் என்பதை அமெரிக்கா எப்போதோ கணித்து வைத்துள்ளது.

நேட்டோ இராணுவ கூட்டமைப்பின் விரிவாக்கம் என்பது, ரஷ்யாவை சுற்றி வளைத்து முன்னரங்க காவல்நிலைகளை கட்டும் நோக்கம் கொண்டது என்பதை ரஷ்ய அரசாங்கம் உணராமல் இல்லை. கொசோவோவிற்கு சுதந்திரம் வழங்கியது கூட, முன்னாள் யூகோஸ்லேவியாவில் ரஷ்ய செல்வாக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் தான். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசுகள் கூட, நேட்டோ அங்கத்துவராவதை ரஷ்யா எப்போதும் எதிர்த்து வந்தது. மேற்குலகமோ ரஷ்ய எதிர்ப்பை கணக்கெடுக்காமல், தம் பாட்டில் போய்க் கொண்டிருந்தன. அதே நேரம், ரஷ்யாவை குஷிப்படுத்தும் நோக்கில், உலக வர்ததக நிறுவனம், பணக்கார நாடுகளின் G7 அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக்கின.

அண்மைக்காலமாக முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா, உக்ரைன் போன்ற நாடுகளில் ஏற்பட்ட "புரட்சிகள்", ரஷ்யாவின் கடுமையான கண்டனத்தை சம்பாதித்தன. ஏனெனில் உண்மையில், அமெரிக்க கோடீஸ்வரனின் "சோரோஸ் பவுன்டேஷன்" போன்ற NGO க்களின் உதவியினால், பெருமளவு பணத்தை கொட்டி தயார்படுத்தப்பட்ட சதிப்புரட்சிகள் தான், மேற்குறிப்பிட்ட "மக்கள் புரட்சிகள்" யாவும். இவற்றின் முக்கிய நோக்கம், ரஷ்ய சார்பு அரசியல் தலைவர்களை ஓரங்கட்டுவதும், மேற்குலக சார்பு தலைவர்களை பதவியில் அமர்த்துவதும் தான். அப்போதெல்லாம் ரஷ்யா வெறும் கண்டனங்களோடு நிறுத்திக் கொள்ளும்.

தகுந்த தருணம் பார்த்து காத்திருந்த ரஷ்யாவிற்கு, ஜோர்ஜிய ஜனாதிபதி சகாஷ்விலியின் பின்விளைவுகளை உணராத, விவேகமற்ற இராணுவ சாகசம் வழிசமைத்துக் கொடுத்தது. அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்களால் பயிற்சியளிக்கப்பட்ட ஜோர்ஜிய இராணுத்தின் திறமை மீது அதீத நம்பிக்கை வைத்த காரணமாகவோ, அல்லது அமெரிக்க படைகள் வரும் என்று நம்பியோ, சகாஷ்விலி "தெற்கு ஒசெத்திய" மீதான இராணுவ நடவடிக்கையை தொடங்கியிருக்கலாம். ஆனால் ரஷ்ய இராணுவத்தின் மின்னல் வேக பதிலடியை கடைசி வரை எதிர்பார்க்கவில்லை. ஜோர்ஜிய அரசு மட்டுமல்ல, மேற்குலக அரசுகளும் அதிர்ச்சியில் உறைந்து போயின. ஜோர்ஜிய படைகள் புறமுதுகு காட்டி ஓடவும், ரஷ்ய படைகள் ஜோர்ஜிய பகுதிகளை ஆக்கிரமிக்கவும்; ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்று சமாதானமாகப் போக வேண்டிய நிலை ஜோர்ஜியாவிற்கு ஏற்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டாலும், ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா.தடை சாத்தியமில்லை. அமெரிக்கா செய்யக் கூடியது, உலகப் பொருளாதார நிறுவனம், G 7 ஆகியவற்றில் ரஷ்யாவின் உறுப்புரிமையை பறிப்பது தான். ஆனால் இவை அதிக பலன் தரப்போவதில்லை. ரஷ்யா ஏற்கனவே சீனா, ஈரான், போன்ற பொருளாதாரக் கூட்டாளிகளை சேர்த்துள்ளது. பனிப்போர் காலத்தை போலவே, கியூபா போன்ற நாடுகளின் நட்புறவை புதுப்பித்துள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரை, ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகின்றன. ஏனெனில் தற்போது ஐரோப்பிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளது. மேற்கு ஐரோப்பா தனது எரிவாயு தேவைக்கு ரஷ்யாவில் பெரிதும் தங்கியுள்ளது. அண்மையில் கூட உக்ரைனிடம் இரண்டு மடங்கு விலை கேட்டு, ரஷ்யா எரிவாயு குழாய்களை மூடி விட்டது. இதனால் இத்தாலி, ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பாதிப்படைந்தன.

தெற்கு ஒசெத்தியாவில் ஜோர்ஜியா கைவைக்கப் போய் வந்த போரின் விளைவாக, அந்நாட்டில் திட்டமிடப்பட்ட அசர்பைஜானிலிருந்து துருக்கி வரையான எண்ணை குழாய் அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளதாக, அதனை நிர்மாணித்துக் கொண்டிருந்த BP தெரிவித்துள்ளது. இது போன்றே பல வெளிநாட்டு முதலீடுகளை இழக்க வேண்டி வரலாம். இது ஜோர்ஜிய அபிவிருத்தியை பின்னோக்கி தள்ளும். மேலும் (கடுமையான ரஷ்ய எதிர்ப்பு காரணமாக) நேட்டோ உறுப்புரிமை நிறைவேறாத கனவாகவே போகலாம். இதை விட தற்போதைய ஜனாதிபதி சாகஷ்விலியே, எல்லாவற்றிக்கும் பொறுப்பெடுக்க வேண்டும் என்று கணிசமான ஜோர்ஜிய மக்கள் நம்புவதால், இந்த அரசாங்கம் நீண்ட காலம் நிலைத்து நிற்கப் போவதில்லை. தெற்கு ஒசெத்தியாவை காரணமாக வைத்து தொடங்கிய ரஷ்யாவின் இராணுவ பதிலடி, ஜோர்ஜியாவில் தனக்கு சார்பான மாற்று அரசாங்கம் அமைப்பதையே இறுதி லட்சியமாக கொண்டுள்ளது.



ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்
______________________________________________________

5 comments:

Thamiz Priyan said...

Excellent... :)

புரட்சிக்கவி said...

கலை அவர்களே ! உங்களுடைய பதிவுகளை எல்லாம் தொடர்ச்சியாகப் படித்து வருபவன் நான்.இப்போது தான், ஒரு பதிவிற்கு பின்னூட்டம் இடும் வாய்ப்பு கிட்டியது. நீங்கள் சொல்வது போல கோர்ப்பச்சேவ், அமெரிக்காவினை அப்பாவித்தனமாக நம்பி எல்லாம் பனிப்போரை முடிவிற்குக் கொண்டு வரவில்லை. ஸ்டாலினிற்குப் பிறகு (ஸ்டாலின் சூழ்நிலைகளின் காரணமாக பிற்போக்கு முதலாளித்துவவாதிகளைக் கட்சியில் அனுமதித்ததால்) வந்த அனைத்து சோவியத் அதிபர்களும் முதலாளித்துவ பிற்போக்கு வாதிகள் ஆவர். அதில் அமெரிக்கச் சார்பு எடுத்தவர், கோர்ப்பச்சேவ். வாடிகனை வரவிட்டவர் மற்றும் அனைத்தி விதமான திருப்பணிகளையும் செய்தவர் !. ஸ்டாலின் நினைத்த மாதிரி கலாச்சாரப்புரட்சி தோல்வி அடைந்ததே அனைத்திற்கும் காரணம். இன்றைய ரஷ்யா, மேற்குலகிற்கு எதிரான ரஷ்ய முதலாளிகளின் நலனிற்கான ஒரு முதலாளித்துவ அமைப்பு ! அவ்வளவு தான் !

Kalaiyarasan said...

திரு. அறிவு, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நீங்கள் கூறிய கருத்துகளுடன் எனக்கு முழு உடன்பாடு உண்டு. எனது இதுவரையிலான கட்டுரைகள் அனைத்து தரப்பு வாசகர்களுக்குமாக ( உலகநடப்புகளை புதிதாக அறிந்து கொள்பவர்களுக்குமாக), இலகு படுத்தி எழுதப்பட்டவை. இருப்பினும் இனிவரும் காலங்களில் பல விடயங்களை ஆழமாக அலசி ஆராய்ந்து எழுதவிருக்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள், விமர்சியுங்கள்.

Anonymous said...

உங்கள் எல்லா கட்டுரைகளும் மிகவும் உலக விஷயங்கள் நிறைந்ததாக உள்ளது, இதனை எனது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்கிறேன். எல்லா பதிவுகளும் அற்புதமாக உள்ளன.

செல்வன்

arul said...

GDP of russia has increased after putin came to power