Wednesday, August 06, 2008

குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை


குவைத்தில் அடிமைத்தனத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த, தெற்காசிய தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் நாடுகடத்தப் பட்டனர். சில மாதங்களுக்கு முன்னர் துபாயிலும் இது போன்றே தொழிலாளர், தம்மை அடக்க ஏவிவிடப்பட்ட போலீசாரை எதிர்த்து போரிட்டனர்.

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, அரை பாலைவன வளைகுடா நாடுகள், துரித அபிவிருத்திக்கு தெற்காசிய தொழிலாளரின் மலின உழைப்பை பயன்படுத்தி வருகின்றன. நவீன அடிமைகளாக நடத்தப்படும் இந்த தொழிலாளர்கள், ஒன்று சேர்ந்து கிளர்ந்தெழுவதை தடுக்கும் நோக்குடன், பல்வேறு தேசங்களை சேர்ந்த, பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். இருப்பினும் அடிமைவாழ்வு எல்லோருக்கும் பொதுவானது. இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள், தொழிலாளரின் சம்பளங்களை குறைத்து கொடுத்து, அத்தியாவசிய தேவைகளை செலவினங்கள் என்று சொல்லி குறைத்து, அதிக லாபம் கோடி கோடியாக சம்பாதிக்கின்றன. இதைப்பார்த்து சில அமெரிக்க நிறுவனங்களே பொறாமை கொண்டதால், தொழிலாளரின் அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு நிர்ப்பந்தித்து வருகின்றது.

உலகின் பணக்கார நாடான குவைத்துக்கும், பிற எண்ணைவள வளைகுடா நாடுகளுக்கும், இருண்ட பக்கம் ஒன்றுண்டு. ஆடம்பர மாளிகைகள், வானுயர்ந்த கோபுரங்கள் யாவும் பல்லாயிரக்கணக்கான அடிமைத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவானவை. இவற்றை நிர்மாணிக்கும் நிறுவனங்கள் பல ஆளும் மன்னர்/ஷேக் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானவை. குவைத்தின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகை வெளிநாட்டவர்களை கொண்டிருக்கும் பட்சத்தில், தனியார் நிறுவனங்களின் 98% மனிதவளம் வெளிநாட்டு தொழிலாளரைக் கொண்டிருப்பது அதிசயமல்ல. இவர்களிலே படித்த, தொழில் தகமையுடைய சிறு பிரிவு மட்டுமே அதிக சம்பளம்(அதுவும் குவைத் பிரசையை விட குறைவு) பெறுகின்றனர்.

அதற்கு மாறாக பெரும்பான்மையான கட்டட நிர்மாண, துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், மிக குறைந்த சம்பளத்தை (அதிகபட்சம் 100 டொலர்கள்) பெற்று, நகரத்திற்கு ஒதுக்குப்புறமான பாலைவனங்களில் அமைந்த வசதியற்ற தொழிலாளர் குடியிருப்புகளில், ஒரு அறைக்குள் குறைந்தது ஆறு பேர் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. சில கம்பனிகள் சம்பளத்தை மாதக்கணக்காக கொடுப்பதில்லை. குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. சில நேரம் அனலாக கொளுத்தும் கோடையில், குளிரூட்டிகள் இல்லாமல் படுக்க வேண்டியிருக்கும். இருப்பினும் வேலை மட்டும் ஒழுங்காக வாங்கப்படும். 40 அல்லது 50 பாகை என்று வெப்பம் கூடினாலும், உயர்ந்த கட்டடங்களில், அந்தரத்தில் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் கடந்த வருடம் முதல்தடவையாக, வெப்பம் 50 பாகைக்கு போகுமானால், 12:30 மணிக்கும் 14:00 மணிக்கும் இடையில் வெளி வேலை செய்ய தடைச்சட்டம் போடப்பட்டது.

கடந்த ஜூலை மாத இறுதியில், குவைத்தில் உள்ள நிறுவனமொன்று தனது பங்களாதேஷ் தொழிலாளருக்கு மாதக்கணக்காக சம்பளம் கொடுக்காத பிரச்சினை, நாடளாவிய ஆசிய தொழிலாளர் எழுச்சிக்கும், மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கும் வழிவகுத்தது. சர்வாதிகார ஆட்சி நடக்கும் குவைத்தில், வேலை நிறுத்தம் செய்வதோ, தொழிற்சங்கம் அமைப்பதோ, சம்பள உயர்வு கேட்பதோ சட்டவிரோதம். இருப்பினும் தன்னெழுச்சியாக தொடங்கிய பங்களாதேஷ் தொழிலாளர்களின் போராட்டம், போலிஸ் அடக்குமுறைக்குல்ளானது. நகரின் முக்கிய வீதிகளை ஆக்கிரமித்துக் கொண்ட வேலைநிறுத்தக்காரரை கலைந்து செல்ல வைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசி, தடியடிப்பிரயோகம் செய்ததால், தொழிலாளரும் எதிர் வன்முறையில் ஈடுபட்டனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரியூட்டப்பட்டன. சம்பத்தப்பட்ட நிறுவனத்தின் முகவர்கள் சமாதானமாக போகும்படி கூறி, நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது தாக்கப்பட்டனர். கூட்டத்தை கலைத்த போலிசால், அந்த இடத்திலேயே 250 பேர் கைது செய்யப்படனர். தொடர்ந்த போலிஸ் தேடுதல் வேட்டையில் ஆயிரத்துக்கும் குறையாத பங்களாதேஷ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக தனியான விமானத்தில் நாடுகடத்தப்பட்டனர்.

குவைத் போன்ற வளைகுடா நாடுகளில், தெற்காசிய தொளிலாளர்கள் ஈவிரக்கமற்று சுரண்டப்படுவதும், அவர்களின் அவல வாழ்வும் ஏற்கனவே உலகிற்கு தெரிந்த செய்திகள் தான். ஆனால் அடங்கிக்கிடந்த தொழிலாளர் மனங்களில் அநீதிக்கு எதிரான உணர்வு நீறுபூத்த நெருப்பாக இவ்வளவு காலமும் உறங்கிக் கிடந்தது. இதுவரை இல்லாதவாறு இப்போது மட்டும் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டங்களில் இறங்குவதற்கு, சில உலக பொருளாதார மாற்றங்கள் முக்கிய காரணமாகும். அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், அரிசியின் விலையும் இரண்டு மடங்காகியுள்ளது. பங்களாதேஷ் மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவு. மேலும் அமெரிக்க டாலரின் பெறுமதி இறங்கி வருவதால், அதனோடு தொடர்புடைய குவைத் டினாரின் பெறுமதியும் வீழ்ந்துள்ளது. இதனால் தமது அற்ப சம்பளம்(75 டாலர்) என்றுமில்லாதவாறு வயிற்றுப்பாட்டிற்கே போதாது என்ற நிலை ஏற்பட்ட போது தான் மேற்குறிப்பிட்ட தொழிலாளரின் தன்னெழுச்சி ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக குவைத் அரசாங்கம், குறைந்தபட்ச சம்பளம் 150 டாலர்களாக உயர்த்துவதாகவும், இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்கள் தண்டிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளின் சட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொழில் ஒப்பந்தத்தை மீறும், அவை மோசமான வெளிப்படையான மீறல்களாக இருந்த போதிலும், நிறுவனங்களின் முதலாளிகள் எவரும்(இவர்கள் எப்போதும் அந்நாட்டு பிரசைகள்) இதுவரை தண்டிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. மாறாக உரிமை கோரும் தொழிலாளர்கள் மாத்திரம் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர். தொழிலமைச்சின் பரிசோதகர்கள் கூட தமது கடமையை திறம்பட செய்வதில்லை. சுமார் இரண்டு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளரை கொண்ட ஐக்கிய அரபு ராச்சியத்தில் 80 பரிசோதகர்கள் மாத்திரமே உள்ளனர் என்பது, அரசின் அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகின்றது.

குவைத்தில் தம்நாட்டு தொழிலாளரின் அவலநிலை குறித்து கருத்து வெளியிட்ட சில பங்களாதேஷ் தூதரக அதிகாரிகள், தொழிலாளர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்று விவரித்தனர். தாயகத்தில் மாதம் 188 டாலர்கள் சம்பளமாக தருவதாக ஒப்பந்தம் போடும் நிறுவனங்கள், குவைத் வந்ததும் 75 டாலர் மட்டுமே கொடுக்கின்றன. தொழிலாளருக்கு புரியாத அரபு மொழியில் ஒப்பந்தம் போட்டு, கையெழுத்திட வைத்து ஏமாற்றுகின்றனர். சில அரச நிறுவனப் பணிகளை குத்தகைக்கு எடுக்கும் வேலை முகவர் நிலையங்கள், ஒரு தொழிலாளிக்கு 500 டாலர் படி பெற்றுக்கொண்டாலும், 75 டாலர் மட்டுமே தொழிலாளிக்கு சம்பளமாக கொடுக்கின்றன. ஒருவேளை தொழிலாளி சுகவீனமுற்றால், அந்த நாட்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை.
சர்வாதிகார வளைகுடா நாடுகளில், கட்டாரில் மட்டுமே சில வருடங்களுக்கு முன்பு, தொழிற்சங்கம் அமைக்க சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. துபாயில் குறிப்பிட்ட அளவில் தொழிலாளரின் நிறுவனமயமாக்கல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலைவன தொழிலாளர் குடியிருப்புகளில், தற்போது கூட்டம் கூடி, தமது உரிமைகளுக்காக போராடுவது பற்றி விவாதிக்கப்படுகின்றது. துபாய்க்கு வரும் உல்லாசப் பயணிகளை கவர்ந்து, சர்வதேச ஊடக கவனத்தை பெறும் வகையில் ஆடம்பர வியாபார அங்காடிகள், கடற்கரைகள், நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் அமைதியான மறியல் போராட்டங்களை நடத்த திட்டமிடப்படுகின்றது. இவர்கள் ஏற்கனவே ஒருமுறை, துபாயின் உலகப் பிரசித்தி பெற்ற "பேஜ் அல் அரப்" என்ற ஆடம்பர ஹொட்டேலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, அது உள்ளூர் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்தது.


மக்களின் எந்த உரிமையும் போராடாமல் கிடைக்கவில்லை, என்ற யதார்த்தத்தை குவைத், துபாயில் நடந்த சம்வங்கள் உணர்த்துகின்றன.

___________________________________________________

7 comments:

சுந்தரவடிவேல் said...

அமீரக வலைப்பதிவு நண்பர்கள் இது குறித்து அதிகம் பதிவது அவசியம்.
பதிவுக்கு நன்றி!

வடுவூர் குமார் said...

படிக்கவே கஷ்டமாக இருக்கு.

Mahesh said...

மிக அருமையான வலைப்பதிவு இதில் குறிப்பிடிருப்பது நிஜம். வளைகுடா அரபு நாட்டை சேர்ந்தவர்கள் தெற்க்காசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை மிருகங்களை விட மோசமாக நடத்துகிறார்கள் என்பதே வேதனையான உண்மை.

Kalaiyarasan said...

எனது பதிவை வாசித்த இணைய நண்பர்களுக்கும், குறிப்பாக பின்னூட்டமிட்ட சுந்தரவடிவேல், வடுவூர் குமார், வெங்கட் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

கார்த்திகேயன் said...

மிக அருமையான வலைப்பதிவு இதில் குறிப்பிடிருப்பது நிஜம். வளைகுடா அரபு நாட்டை சேர்ந்தவர்கள் தெற்க்காசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை மிருகங்களை விட மோசமாக நடத்துகிறார்கள் என்பதே வேதனையான உண்மை.பதிவுக்கு நன்றி!

chakravarthy said...

என்னத்த சொல்ல இந்த அனைத்து வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நடப்பது சகஜமாகிவிட்டது.படிச்சா இதெல்லாம் தேவையா என்று அவர்களை ஏளனப்படுத்த தயங்குவதில்லை நாம்..உலக மக்கள் தொகையின் பெருன்பான்மை நிலை இதுதானே...

Nasar said...

தோழரே தாங்கள் குறிப்பிட்டது கொஞ்சமே
குவைத்இல் ஹசாவி என்கிற இடத்தில
கிளினிங் கம்பெனி ஆட்கள் கிட்டதட்ட
2500 பேர்கள் குறைந்த மாத சம்பளம் 25 KD
(குவைத் தினர்) வாங்குபவர்கள் ஒரு வாரமாக
வேலைக்கு செல்லவில்லை இவர்களை அடக்க
போலீஸ் ,மிலிடரி மற்றும் கம்பனிகளின்
முதலாளிகள் வந்து மாசத்துக்கு 40 KD
தருவதாக சொன்னபின்பு வேலைக்கு போனார்கள்
முன்று மாசத்துக்கு பிறகுதான் சொன்னபடி
40 KD கிடைத்தது ,இதில் அப்பாவிகள் 500 பேர்
பங்களாதேஷிகளை திரும்பவும் குவைத்
வராதபடி அவர்களின் நாட்டுக்கே அனுப்பிவிட்டார்கள்
மகா பாவம.......
தொழிலாளர்கள் விழயத்தில் இவர்கள் சொல்வது ஒன்று
செய்வது வேறொன்று...
இங்கனம் . நாசர் .....குவைத்