Wednesday, March 19, 2008

துபாய், முதலாளிகளின் சொர்க்கபுரி

வளைகுடா கடற்கரையோரம், துபாய் நகரை பார்த்த படி நிற்கிறது "பெர்ஜ் அல் அரப்" என்று அழைக்கப் படும், பாய்மரக்கப்பல் வடிவில் கட்டப்பட்ட, ஏழு நட்சத்திர ஹோட்டல். ஆமாம், எதையும் பெரிதாகவே சிந்தித்து கட்டப்பட்ட, ஐந்து நட்சத்திரத்தை விட வசதிகள் நிறைந்த ஏழு நட்சத்திர விடுதி அது. அதன் மிகக்குறைந்த அறையின் ஒரு நாள் வாடகை 800 டாலர்கள். துபாய் காரருக்கு எல்லாத்தையும் வித்தியாசமாக செய்ய ஆசை. அதனால், ஹோட்டல் விளம்பரத்துக்காக அமெரிக்காவின் டென்னிஸ் நட்சத்திரம் அன்ரே அகசியை அழைத்து வந்து, உச்சியில் இருக்கும் ஹெலி இறங்கு தளத்தில் டென்னிஸ் விளையாட வைத்தார்கள். துபாய் நாட்டின் சின்னமாகி விட்ட பெர்ஜ் அல் அரப்கட்டியதுடன் நின்று விடாது, நவீன உலக அதிசயங்கள் அமைக்க வேண்டுமென்ற ஆசையில், கடலுக்குள் பனை மர வடிவில், உலகப் பட வடிவில், என்று செயற்கை தீவுகளை வேறு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த செயற்கை தீவுகளில், நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புக்களை கட்டி ரியல் எஸ்டேட் இல் விற்க இருக்கிறார்கள். துபாய் முதலாளிகளுக்கு எண்ணை விற்று வந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வதென்ற கவலை. அதனால் இப்படி பிரமாண்டமான கட்டுமானப் பணிகளை கற்பனை பண்ணி கட்டி கொண்டிருக்கிறார்கள். பணம் உள்ளவர்களின் வாழ்கை வசதிகளை உயர்த்துவதை மட்டுமே குறிக் கோளாக கொண்டு செயற்படும் அரசாங்கம், சாதாரண மக்களுக்காக போக்குவரத்து துறையை விருத்தி செய்யவில்லை. அதை விட கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும், நவீன லக அதிசயங்களை கட்டிய, கட்டிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் மாத வருமானம் 160 டாலர்களுக்கு மேல் போவதில்லை. மேலும் குறைவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, கட்டிடங்கள் விழுந்து மடிந்தவர்கள் பலர். இந்திய, பாகிஸ்தானிய கூலி தொழிலாளர்களன அவர்களை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.. அவர்களின் பெறுமதி சில நூறு டாலர்கள் மட்டுமே. இருபதாம் நூற்றாண்டு நவீன அடிமைகள் அவர்கள்.

2005 ஜனவரி மாதம், ஹஜ் பெருநாள் தொடங்க சில நாட்களே இருந்த காலம். மெக்கா போகும் யாத்திரீகர்கள் எனது விமானத்திலும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஏன் துபாய் வரவேண்டும்? பேச்சு கொடுத்ததில் சில உண்மைகள் வெளி வந்தன. கனடாவில் இருந்து புறப்பட்ட அந்த யாத்திரீகர்கள், ஒரு சவூதி அராபிய பிரயான முகவர் மூலம் ஒழுங்கு செய்யப் பட்டவர்கள். ஒவ்வொரு பயணியிடமும் நிறைய பணம் வாங்கி கொண்டு, குறைந்த செலவில் டிக்கெட் எடுத்து நாடு நாடக சுற்றி போகும் படி வைத்திருந்தார்கள். பாவம் இந்த அப்பாவி யாத்திரீகர்கள், தாமாகவே பிரயாணம் ஒழுங்கு பண்ண அவர்களுக்கு உரிமையில்லை. சவூதி பிரயான முகவர்களின் ஏகபோக உரிமை மதம் சம்பந்தமான புனித பயணத்தில் கோடி கட்டிப் பறக்கிறது. துபாய் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, பாஸ்போர்டை வைத்து பிரயாணிகளை பிரித்து விசா குத்திக் கொண்டிருந்தார்கள். ஐக்கிய அரபு ராச்சியங்கள், மற்றும் பணக்கார வளைகுடா நாடுகளின் பிரசைகளுக்கு முன்னுரிமை, அதற்கு அடுத்ததாக அமெரிக்க அல்லது பிற பணக்கார நாடுகள், கடைசியாக வறிய நாடுகளை சேர்ந்த அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த பாகுபாடு துபாய் அங்கம் வகிக்கும் ஐக்கிய அரபு எமிறேடின் நிர்வாக அரசியல். அங்கே நீதி கூட இந்த பின்னணியை வைத்து தான் வழங்கப் படுகின்றது.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது, அப்போது ஜனவரி மாதம் என்பதால் வெயில் கடுமையில்லை. சற்றே குளிரான காலநிலை. ஊர் சுற்றிகளுக்கு ஏற்ற காலநிலை. அங்கே பொது போக்குவரத்து அரிது. அதனால் டாக்ஸி, அல்லது தனியார் வாகனம் மட்டுமே தஞ்சம். நான் போய் நின்ற இடம் பழைய துபாய் நகரம். பஜார் நகரம் என்றும் சொல்லலாம். நகை கடைகள், பல சரக்கு கடைகள், மலிவான தங்குவிடுதிகள், எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள்.... இப்படி துபையின் அந்த பகுதி மட்டும் ஒரு சராசரி இந்திய நகரம் மாதிரி காட்சியத்தது. அங்கிருந்து ஒரு சில கி.மி. தூரம் போனால் தான் நவீன துபாய் நகரம் ஆரம்பிக்கிறது. அமாம், துபாய் நகரம் இன்னமும் புது புது குடியிருப்புகள் அமைக்கப் பட்டு பெருகிக் கொண்டே போகின்றது. பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய அல்லது (எமிரேட்) அரேபியர்கள் மட்டுமே வசிக்கும் நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புகள், அவற்றின் மத்தியில் பாடசாலைகள், பல்பொருள் அங்காடிகள், மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை கொண்ட நியூ யார்க் போன்ற நவீன நகரங்கள்அவை. நட்சத்திர ஹோட்டல்கள், உல்லாச பிரயாணிகள் இளைப்பாறும் கடற்கரை, இப்போது கட்டப் பட்டுகொண்டிருக்கும் உலக அதிசயங்கள் எல்லாமே அங்கே தான்.

இந்த நகரமயமாக்கப் பட்ட கட்டடக் காட்டுக்கு வெளியே, பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கிறது நவீன அடிமைகளின் முகாம்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தென் ஆசிய நாட்டு கூலி உழைப்பாளிகள், மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். தொழில் ஒப்பந்தம் தொடங்கும் நாளன்றே அவர்களின் கடவுச்சீட்டு, சட்டத்திற்கு மாறாக, வாங்கி வைக்கப் படுகின்றது. குறைந்தளவு வசதிகளை கொண்ட முகாம்களில், ஒரு அறைக்குள் எட்டுபேர் என்று தங்க வைக்கப் படுகின்றனர். வேலை செய்யும் இடத்திற்கு தினம்தோறும் கம்பெனி பஸ், தொழிலாளரை ஏற்றி இறக்கும். ஒரு தொழிலாளிக்கு சம்பளம் உட்பட ஆகும் செலவு அதிக பட்சம் முன்னூறு டாலர்கள் மட்டுமே என்பதால், அவர்களின் உழைப்பை சுரண்டுவதன் மூலம், பல கம்பெனிகள் பெருமளவு லாபம் எடுக்கின்றன. மலிவான உழைப்பாளிகள் உருவாக்கும் உற்பத்தி பொருட்கள், அல்லது சேவைகள் ஆகியவற்றின் விலைகள் சர்வதேச தரத்திற்கு உயர்வாக இருப்பதால், இந்த கொள்ளை லாபம் சாத்தியமாகின்றது. உண்மையில் அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய முதலாளிகள், பொறாமைப்படும் அளவிற்கு துபாய் பொருளாதாரம் அடிமைகளால் கட்டப்பட்டு வருகின்றது. அங்கே தொழிலாளர் நல சட்டங்கள் எதுவும் கிடையாது. தொழிற்சங்கங்களுக்கு தடை. வேலை நிறுத்தம் சட்டவிரோதம். வர்த்தக நிறுவனங்கள் வருமான வரி கட்ட தேவையில்லை. மொத்தத்தில் அது ஒரு முதலாளிகளின் சொர்க்கம். மிக அரிதாக அண்மையில் நடந்த வேலை நிறுத்தம் ஒன்று, போலிஸ் தலையீட்டால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது கைது செய்யப் பட்ட பலர் நாடு கடத்தப் பட்டிருக்கலாம்.

கூலி தொழிலாளர்கள் மட்டுமல்ல, விற்பனையாளர்கள், எழுதுவினைஞர்கள், மானேஜர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் போன்ற சேவைத்துறையில் இருப்போரும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த கூலிக்கு கூட்டி வரப்படுகின்றனர். இவர்களின் சம்பளம் சாதாரண வெளிநாட்டு தொழிலாளி எடுப்பதை விட பல மடங்கு அதிகம் என்றாலும், ஒரு சாதரண எமிரேட் தொழிலாளி எடுக்கும் சம்பளத்தை விட குறைவு. சில நேரம் அலுவலக பணியில் இருக்கும் ஐரோப்பியரை விட குறைவு எனலாம். அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மேல்நிலை மனேஜர்களாக பதவியில் உள்ளனர். அவர்களின் ஊதியம், அவர்களின் தாயகத்தில் கிடைக்கும் அதே அளவு, அல்லது சற்று கூட. இதனால் சில தகுதி குறைந்த அமெரிக்க அல்லது ஐரோப்பியர்கள் கூட துபாயில் செல்வந்த வாழ்கை வாழ்கின்றனர்.

பண்டைய ரோம் நகரத்தில், விவசாய கூலிகள் முதல் ஆசிரியர்கள் வரை பிற நாடுகளில் இருந்து வந்த அடிமைகளே வேலை செய்தனராம். ரோம் மக்கள் அரசு துறைகளிலும், இராணுவத்திலும் மட்டுமே பணி புரிந்தனராம். இதே போன்ற சமூக கட்டுமானம் எமிரேட் முழுக்க உள்ளது. நாட்டின் பிரசைகள் அரசாங்கத்திலும், பாதுகாப்பு படை களிலும் அதிக ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். மேலும் எல்லா வகையான வர்த்தக நிறுவனத்திலும் ஒரு எமிரேட் பிரசைக்கு அரைவாசி பங்கு இருக்க வேண்டும். இதனால் பல எமிரேட் பிரசைகள், சும்மா இருந்தே பணம் சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரும் முதலீட்டில் நடத்தப் படும் கம்பெனிகள் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பிய முதலளிகளுடயது. இடைதர மற்றும் சிறிய கம்பெனிகளை இந்தியர்கள் நடத்துகின்றனர். வெளிநாட்டினர் துபாயில் எந்த சொத்தும் வாங்க உரிமையில்லை. அவர்கள் வீடு வாங்க, வியாபார நோக்குடன் அனுமதித்தாலும், ஒரு சில கட்டுப்பாடுகளுடன், அவற்றை விற்கும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் அல்லது எமிரேட் காரர்கள் லாபம் சம்பாதிக்கும் துறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எண்ணை இருப்பு குறைந்து வருவதால் இது போன்ற வர்த்தகத்தில் துபாய் நாட்டம் காட்டி வருகின்றது. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்க கண்டங்களுக்கு நடுவில் அமைந்திருப்பதால், துபாயில் பல உலக வர்த்தக கழகங்கள் தமது விற்பனை சாலைகள், போன்றவற்றை திறந்து வைத்துள்ளன. மேலும் வரி சலுகை, சகல வசதிகளுடனான விமான நிலையம், துறைமுகம், குறைந்த கூலிக்கு பிடிக்க கூடிய தொழிலாளர்கள், ஆகிய விஷயங்கள் பல முதலாளிகள் துபாயை தெரிவு செய்ய காரணம்.

துபாய் இவ்வாறு முதலாளிகளின் சொர்க்கபுரி மட்டுமல்ல, உல்லாச பிரயாணிகளுக்கும் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. துபாய் அருங்ககாட்சியகம் குறிப்பிடத்தக்கது. எண்ணை கண்டுபிடிக்கும் வரை துபாய் நகரம் எப்படி காட்சியளித்தது? அதன் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? போன்றவற்றை அறிய விரும்பினால் அது ஏற்ற இடம். மேலும் துபாய் வணிகர்கள் ஒரு காலத்தில் முத்துகளை உலகம் முழுக்க விற்று வந்தனர். முத்து குளிக்கும் முறை, பற்றி ஒரு பகுதி விளக்குகிறது. இன்னொரு பகுதி பாலை வன சோலையில் பேரீச்சை, பிற விவசாயம் பற்றி விளக்குகின்றது. இவை எல்லாம் நேரே பார்ப்பது போல பொம்மைகளை வைத்து காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தில் பார்ப்பதை விட்டு, பாலைவன கிராமம் ஒன்றினை அங்கிருந்த வீடுகள், கிணறுகள், தோட்டங்கள், ஒட்டகங்கள்இவ்வாறு அப்படியே இருந்த மாதிரி பார்க்க விரும்பினால், "ஹட்டா ஹெரிடேஜ் வில்லேஜ்" சிறந்த இடம். ஹட்டா துபாய் நகரில் இருந்து 115 கி.மி. கிழக்கு பக்கமாக இன்னொரு எமிரேட் புஜைரா நோக்கி போகும் பாதையில்,ஹசார் மலைகளுக்கு நடுவில் அமைந்திள்ளது. மலைகளின் பின்னணியில் அந்தக் கிராமத்தின் அமைவிடம் அதன் அழகை மெருகூட்டுகின்றது. ஹட்டாவில் தான் எமிரேட்டின் மிகப்பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் பிற பாலைவன வளைகுடா நாடுகளை போலன்றி, எமிரேட்கிழக்கு பகுதியில் விவசாயம் நடக்கிறது. அதற்கு நீர்பாசன வசதி இந்த அணை மூலம் கிடைக்கிறது.

ஐக்கிய அரபு இராச்சியங்கள் ஏழு எமிரேட்களை சேர்த்து உருவானது. அந்த ஏழும் சில சுயநிர்ணய உரிமைகளுடன் ஒன்றிணைந்து ஒரே தேசமாக இயங்குகின்றன. ஒவ்வொரு எமிரேட்டுக்கும் ஒரு ஷேக் அரசியல்/நிர்வாக தலைவராக உள்ளார். ஷேக் என்பது மன்னரை குறிப்பதல்ல. பண்டைய இஸ்லாமிய அரசியல் அமைப்பின் படி ஒவ்வொரு பிரதேசத்திற்கும், ஷேக் என்ற ஒருவர் நிர்வாகத் தலைவராக தெரிவு செய்யப் பட்டு, அரசியல் நிர்வாக அதிகாரம் வழங்கப் பட்டது. ஐரோப்பியரின் வருகைக்கு பிறகு, அதுவும் எண்ணை வளம் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு தான் இந்த ஷேக்குகள் எல்லாம் கோடீஸ்வரர்களாக, குறுநில மன்னர்கள் போல மாறினார்கள். அபுதாபி, அதிக வருவாய் கொண்டதால், அது தலைநகரம் ஆகி விட்டது. அபுதாபி ஷேக், காலம் சென்ற சையிது, தேசத் தந்தை போலே ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளார். அவரது ஆளுயர உருவப் படங்கள் எமிரேட் எங்கும் காணலாம். அது மட்டுமல்ல, அவருக்கு சொந்தமான பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட ஆடம்பர மாளிகைகள், ஒவ்வொரு நகரிலும் உள்ளது. இராக்கில் சதாம் உருவப்படங்களை, மாளிகைகளை, கேலி செய்த சி.என்.என். போன்ற மேற்கத்தைய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாதது வியப்புக்குரியது. அபுதாபி, துபாய் மட்டுமே எண்ணை வளம் காரணமாக, பணக்கார எமிரேட்களாக உள்ளன. அவை புஜைரா போன்ற எண்ணை இல்லாத "வறிய" எமிரேட்டுகளுக்கு நிதி உதவி செய்து முன்னேற்றி வருகின்றன. சட்டங்கள் கூட ஒவ்வொரு எமிரேட்டுக்கும் மாறுபடும். துபாய் மேலைத்தேய நாடுகளை போல தாராளவாத கொள்கையை கடைபிடிகின்றது. அங்கே இரவு களியாட்ட விடுதிகள், மதுபான சாலைகள், ஏன் விபசாரத்துக்கு கூட சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது. துபாய் அருகிலேயே இருக்கும் ஷார்ஜா என்ற இன்னொரு எமிரேட் இதற்கு மாறாக, மத ஒழுக்க கட்டுபாடுகளை கடுமையாக கடைப் பிடிக்கின்றது. அங்கே மதுபானம் போன்றனவற்றிகு முற்றாக தடை. அபுதாபி ஓரளவு சுதந்திரமும், ஓரளவு கட்டுபாடுகளையும் கொண்டுள்ளது. இதனால் உல்லாச பிரயாணிகளையும், வர்த்தக நோக்கோடு வருபவர்களையும் துபாய் மட்டுமே கவர்வது வியப்புக்குரியதல்ல.


Travel Blogs - Blog Catalog Blog Directory

AddThis Feed Button
_______________________________________________________________
குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை
_______________________________________________________________

கலையகம்

8 comments:

ISR Selvakumar said...

துபாயின் இன்னொரு பக்கத்தை விசாலமாக எழுதியிருக்கிறீர்கள்.

மூன்று வருடங்களில் விசா முடியும்போது, கண்டிப்பாக ஒரு முறை துபாயை விட்டு வேறு நாட்டுக்கு போய்விட்டுத்தான் உள்ளே வரவேண்டும். அப்போதுதான் விசா புதுப்பிக்கப்படும். மீண்டும் அங்கே தொடர்ந்து வேலை செய்ய முடியும். ஆனால் வேறு நாட்டுக்குப் போய்விட்டு உள்ளே நுழைவது என்பது மிகப் பெரிய செலவு. அங்கே அங்கே சொற்ப சம்பளத்தில் அடிமை வாழ்வு வாழும் கூலித் தொழிலாளர்களுக்கு அது மிக மிகக் கடினம். எனவே அருகிலுள்ள 'கிஷ் ஐலண்டுக்கு' சென்று வருவார்கள். 'கிஷ்' என்றால் மீன். ஈரானைச் சேர்ந்த இந்த தீவிற்குச் சென்று வருவது நரகத்திற்கு சென்றுவருவதற்குச் சமம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது பற்றிய விபரங்கள் இருந்தால் எழுதுங்கள்.

Kalaiyarasan said...

உங்கள் வருகைக்கு நன்றி, செல்வகுமார்,
"கிஷ் ஐலன்ட்" பற்றி நீங்கள் சொல்லித் தான் கேள்விப்படுகிறேன். ஒருவேளை அங்கே நான் சந்தித்தவர்கள், தமது நிலை பற்றிய திருப்தியாலோ என்னவோ, இது பற்றி அறிந்திருக்காமல் இருக்கலாம். இது பற்றி மேலதிக தகவல்கள் கிடைக்கும் வேளை நிச்சயம் அதுபற்றி எழுதுவேன்.

ராஷா said...

Kish panam kuduthu vilaiku vanga koodiya perum abathu. ethan thodakkam athan vimana sevaiyileye therinthu vidum, visa vai matruvatharkaha entha oru payanam andralum, thannudaiya sahothara nattuku vuthavuvatharkagave appavi thozhilalarhalai kastapaduthuvathahave therihirathu.anendral ange sentruvara 500 muthal 700 Dirhams ethil oru velai mathiya Unavu (ehtu pahalil ange erangum payanihalukku mattume, eravil eranginal kidaiyathu) oru Eravu thangum vasathi seithu tharuhirarhal angulla Hotal melanmaiyalarhal, pirahu oru nalaiku 35 Muthal 75 Dirhams varai angulla Hotel avaravarukku thahunthar pola kattanam vasulikkirarhal, ethu orunal thanguvatharkana vadahai mattume, Unvukku alla. ok ethil visayam annavendral merkuriya anathum sariyana velaiyil ulla oru nabar sndru vara athuvanathe anendral Dubaiyil oru visa vinnappithi vara kurainthathu 3 muthal 25 natkal varai ahum athavathu visavin thanmaiku yerpa (Visit, Employement etc..)ehtil 75% koozhi thozhilalarhalin employement visavaha than erukkum ethai pirihal Inthiyarhale athiham athilum naveena adimai vamsam annudaiya sahothararhale. evarhalukku visa puthupippathaha solli sila companyhal evarhalai kaivittu viduvathe kish theevai naraham andru sollavaithuvittathu. evarhal 15 muthal 25 natkal varai erukkindra panaththai katti kapathi valhirarhal, 25 natkalukku pirahu avarhalathu nilamaiyai yosithu parungal.. neengal yosithathu 100% unmai amam avarhal aduthavaridam kaiyenthuhirarhal ethai nan neril kandavan angira muraiyil azhuththamaha solhiren. ethil atharkaha athuvum kurippaha en shotharanai munvaithu solhiren andral ethu nishaththamana unmai, amm matravarhalum erukirarhal aduthukattaha Pakistani, Filipino, matrum palar ananl avarhal perithaha pathikkapaduvathilla ennum sollaponal namathu pakkathu manilathukaran (Kerala) ange hotel ondrai aduthu nadathi kondirukkiran, niraya hotellil avarhal velaiparkirarhal avanidam avanai sartha oruvan varumpothu avan uthavikaram neetuhiran.(tamilan ponal udhavuvana) ange sappadillamal, veetil ulla thai, thanthai matrum manaivi yaraium thodarbukolla mudiyamal thavikkium avarhalai parkum poluthu manathu vethainaiku ullahum nam enathavaruku mattume enendral yarum nammaipatri kavalaipaduvarillai anbathai athanaiyo visayathil thelivaha therinthu vittathu nammalidam vilipunarvu ennum athikamaha vendum anbathu annudaiya karuthu. entha mathiri ella thozhilalarhalukkum pirachinai undu anbathai ariyamala erukkum entha Dubai arasangam. etharkana pathilai (Dubai muthalalihalin Sorkkam. thozhilalarhal naveena adimaiyalarhale anbathai)annan Kalaiyarashan avarghal thelivaha koorivittar nandri avarghalukku.. entha vidhi Kish islandku matrum alla athanodu sertha Queshm endra Islandum undu atharkum porunthum..

nadri..

dubaiyilirunthu
Haq

Kalaiyarasan said...

கிஷ் தீவு பற்றி இவ்வளவு விபரங்களைக் கொடுத்த Shahul க்கு எனது நன்றிகள். இங்கே பகிரப்பட்ட தகவல் பிறருக்கும் பிரயோசனப்படும் என நம்புகின்றேன்.

Rithu`s Dad said...

நல்ல கருத்துள்ள பதிவுகள். மேலும் துபாய் யில் எனக்கு தெரிந்து employment visa renew பண்ணுவதற்கு exit / re enter ஆகா வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் visit visa வில் இருந்து employment மாற exit / re enter ஆக வேண்டும்..

Rithu`s Dad said...

நல்ல கருத்துள்ள பதிவுகள். மேலும் துபாய் யில் எனக்கு தெரிந்து employment visa renew பண்ணுவதற்கு exit / re enter ஆகா வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் visit visa வில் இருந்து employment மாற exit / re enter ஆக வேண்டும்..

Kalaiyarasan said...

Thank you for sharing the information, Rithu's Dad.

Dr.Anburaj said...


திரு. சாகுல் கடிதம் படிக்க முடியவில்ல

தெளிவாக விபரங்களை வெளியிடலாமா ?