Saturday, October 12, 2013

தமிழரிடம் உள்ள ஒற்றுமை உணர்வு, தமிழ் தேசியவாதிகளிடம் கிடையாது!


"தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தின் கீழ் ஒற்றுமையாக அணி திரள வேண்டும். ஒற்றுமையின்மையே தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணம்...." 


தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைக்கும், தமிழ் இன ஒற்றுமையே தீர்வு என்று வலியுறுத்தும் தமிழ் தேசியவாதிகள், தமக்குள் ஒற்றுமையாக இருக்கின்றனரா? தமிழ் மக்கள், தமிழ் தேசியத்தை தவிர, வேறெந்த அரசியல் கொள்கையையும் பின்பற்றி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். தமிழர்களில் சிலர் இடதுசாரிகளாக இருப்பது கூட அவர்களுக்கு பிடிப்பதில்லை. (இதன் மூலம், தமிழ் தேசியவாதிகள் தம்மை வலதுசாரிகளாக காட்டிக் கொள்கின்றனர்.) கம்யூனிசம், சோஷலிசம், தலித்தியம், பெண்ணியம் என்பன எல்லாம் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து விடும் என்று பதறித் துடிப்பார்கள். உண்மையில் ஒற்றுமையாக ஒன்று சேர வேண்டியவர்கள் தமிழ் தேசியவாதிகள் தான். அவர்கள் தமது தவறை மறைப்பதற்காகவே, தமிழ் மக்கள் மேல் பழியைப் போடுகின்றனர்.

தமிழ் தேசியம் என்றைக்காவது தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்திருக்கிறதா? உண்மையில், தமிழ் மக்கள் ஒற்றுமையாக சேர்ந்து நின்ற சந்தர்ப்பங்கள் வரலாற்றில் நிறைய உண்டு. ஆனால், அப்போதெல்லாம் தமிழ் தேசியவாதிகள் தமக்குள் மோதிக் கொண்டதன் மூலம், எதிரிக்கு தமது ஒற்றுமையின்மையை பறைசாற்றிக் கொண்டார்கள். ஈழப்போர் தொடங்கிய காலத்தில், நகைச்சுவைத் துணுக்கு ஒன்று ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. "ஸ்ரீலங்கா அரசு போராளிக் குழுக்களை அழிப்பதற்கு அதிக சிரமப் படத் தேவையில்லை. அவர்கள் கையில் தமிழீழத்தை கொடுத்து விட்டால் போதும். அதற்குப் பின்னர் தமக்குள் அடிபட்டு அழிந்து, தமிழீழத்தை மீண்டும் சிங்களவனிடம் கொடுத்து விடுவார்கள்."

தமிழ் நாட்டில், அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகமே தமிழ் தேசியக் கொள்கையை முதன் முதலாக வெகுஜன மயப்படுத்தியது. அவர்கள் தான் முதன்முதலாக தனித் தமிழ்நாடு கோரிக்கையை எழுப்பினார்கள். ஆனால், திமுக கூட, திராவிடர் கழகத்தின் ஒற்றுமையை சீர்குலைத்து வெளியே வந்த கட்சி தான். அதற்கு அவர்கள் பல கொள்கை முரண்பாடுகளை கூறிக் கொண்டார்கள். பிற்காலத்தில், கருணாநிதி, எம்ஜிஆருக்கு இடையிலான பிணக்கு காரணமாக, அதிமுக உருவானது. தமிழர்களின் ஒற்றுமை மேலும் சிதைந்தது. அதற்குப் பின்னர், வைகோ பிரிந்து சென்றார். இந்தப் பிரிவினைகளுக்கு எந்தக் கொள்கை முரண்பாடும் காரணம் அல்ல.

ஈழத்திலும் அது தான் நிலைமை. ஆரம்பத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் மட்டுமே இருந்தது. அன்றைய தமிழ்க் காங்கிரசின் அரசியலுக்கும், இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலுக்கும் இடையில் எந்த ஒற்றுமையும் கிடையாது. அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக் கொள்வதும், தமிழ் மேட்டுக்குடி வர்க்க நலன்களை பராமரிப்பதுமே அன்றைய தமிழ்க் காங்கிரசின் பிரதானமான செயற்பாடுகளாக இருந்துள்ளன.

செல்வநாயகம் தலைமையில் ஒரு குழுவினர், தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தமிழரசுக் கட்சி உருவாக்கினார்கள். அப்போது சில கொள்கை முரண்பாடுகள் பற்றி பேசிக் கொண்டார்கள். செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியே, இன்றைய தமிழ் தேசியக் கோட்பாட்டுக்கு அஸ்திவாரம் போட்டது எனலாம். அந்தக் கட்சியே, முதன் முதலாக தமிழ் மொழி பேசும் மக்கள் எல்லோரையும் ஒரே அரசியலின் கீழ் ஒன்று சேர்த்தது. சாதிய முரண்பாடுகள் கூர்மை அடைந்திருந்த அந்தக் காலங்களில், தாழ்த்தப்பட சாதியினர் பெருமளவில் இடதுசாரிக் கட்சிகளையே ஆதரித்து வந்தனர். இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு வளர்வதை தடுப்பதும், தமிழரசுக் கட்சியின் முக்கியமான நோக்கமாக இருந்துள்ளது.

குறைந்தது ஒரு தசாப்த காலமாகவேனும், தமிழ்க் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும் ஒற்றுமை இல்லாமல், ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டார்கள். தேர்தல் காலங்களில் ஒருவரை மற்றவர் திட்டித் தீர்த்தார்கள். ஆனால், காலப்போக்கில் ஒருமையின் அவசியத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். எழுபதுகளில் இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய கட்சியை உருவாக்கினார்கள். அப்போது ஈழத் தமிழ் மக்கள் ஒற்றுமையாக கூட்டணியை ஆதரித்தார்கள். 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பெரும்பான்மை தமிழ் வாக்காளர்களின் பலத்தில் வென்றார்கள். சிங்களவர்களே பொறாமைப் படும் அளவிற்கு, வடக்கு கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றி, பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியாக அமர்ந்தார்கள்.

அந்த ஒற்றுமை நீண்ட காலம் நிலைக்கவில்லை. யாரும் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த சக்திகளினால், தமிழ் தேசியத்தின் ஒற்றுமை குலைக்கப் பட்டது. கொள்கை முரண்பாடு காரணமாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியினர் தீவிரவாதிகளாக மாறினார்கள். தமிழ் மாணவர் பேரவை, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை விரும்பின. மிதவாத தமிழ் தேசியவாதிகளுக்கும், தீவிரவாத தமிழ் தேசியவாதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றி, இரண்டு தரப்பினரும் பகைவர்கள் ஆனார்கள். இரண்டு தரப்பினரும், தாமே உண்மையான தமிழ் தேசியவாதிகள் என்று அறிவித்துக் கொண்டனர்.

தீவிர தமிழ் தேசியவாதிகள் கைகளில் ஆயுதங்கள் இருந்ததால், மிதவாத தமிழ் தேசிய தலைவர்களை துரோகிகள் என்றழைத்து சுட்டுக் கொன்றனர். அதனால், மிதவாத தமிழ் தேசியவாதிகள் தமது பாதுகாப்பிற்காக சிங்கள அரசை சார்ந்து வாழ நிர்ப்பந்திக்க்கப் பட்டனர். சில இடங்களில், கூட்டணித் தலைவர்கள், பிரமுகர்கள், தீவிரவாத இளைஞர்களை பொலிசிற்கு காட்டிக் கொடுத்த சம்பவங்களும் நடந்துள்ளன. மெல்ல மெல்ல ஆயுதமேந்திய குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியதால், தமிழ் மக்களும் கூட்டணியை விட்டு விலகி, ஆயுதபாணிக் குழுக்களை ஆதரித்தனர்.

தமிழ் தேசிய ஆயுதபாணிக் குழுக்களுக்கு இடையில் கூட ஒற்றுமை இருக்கவில்லை. பிரபாகரன் சில வருட காலம் டெலோ வில் இருந்தார். பின்னர் பிரிந்து சென்று புலிகள் அமைப்பை ஸ்தாபித்தார். பதினைந்து வருடங்களுக்குப் பின்னர், பிரபாகரன் தலைமையிலான புலிகள், டெலோ இயக்கத்தை அழித்து விட்டனர். ஆரம்ப காலத்தில், புலிகள் இயக்க தலைவராக பதவி வகித்த உமா மகேஸ்வரன், பின்னர் பிரிந்து சென்று புளொட் என்ற இயக்கத்தை உருவாக்கினார். அதற்கு எந்தக் கொள்கை முரண்பாடும் காரணம் அல்ல. ஊர்மிளா என்ற பெண் போராளியின் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் காரணமாகவே, உமா மகேஸ்வரன் தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றது.

புளொட் இயக்கமும் ஒற்றுமையாக இயங்கவில்லை. உமா மகேஸ்வரனின் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்த தீப்பொறி குழுவினர் பிரிந்து சென்றனர். இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்ட காலத்தில், புளொட்டில் இருந்து இன்னொரு குழுவினர் பிரிந்து சென்று, ஈ.என்.டி.எல்.எப். என்ற பெயரில், இந்திய இராணுவத்தின் கூலிப் படையாக இயங்கினார்கள். நீண்ட காலமாக, புலிகள் கட்டுக்கோப்பான அமைப்பாக, ஒற்றுமைக்கு பெயர் பெற்று விளங்கியது. ஆனால், இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர், புலிகளின் இரண்டாம் மட்ட தலைவர் மாத்தையா, RAW உளவாளி என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டார். அது ஒரு தனி மனிதனுக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கவில்லை. மாத்தையாவுக்கு விசுவாசமான போராளிகளும் கைது செய்யப் பட்டனர். சில நூறு பேரைக் கொண்ட மாத்தையா குழுவினர் தப்பிச் சென்று, சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து கொண்டார்கள்.

நோர்வே அனுசரணையாளராக செயற்பட்ட சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், கிழக்கு மாகாண தளபதியான கருணா தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றது. இரண்டு பிரிவுகளுக்கு இடையில் நடந்த ஆயுத மோதல்கள் காரணமாக, தோல்வியடைந்து பின்வாங்கிய கருணா குழுவினர் சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டனர். தீவிர தமிழ் தேசியவாதிகள் அரசாங்கத்துடன் சேர்வது என்பதுகளிலேயே தொடங்கி விட்டது. வடக்கு, கிழக்கில் புலிகளினால் தடை செய்யப் பட்ட, டெலோ, புளொட், ஈபிஆர்எல்ப் ஆகிய இயக்கங்கள், தமது பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவத்தின் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஸ்ரீலங்கா இராணுவம், புலிகளுக்கு எதிரான போரில் அவர்களை கூலிப் படைகளாக பயன்படுத்தியது.

ஈழத் தமிழ் தேசியவாதிகள் தமக்குள் ஒற்றுமை இல்லாமல், ஒருவரை ஒருவர் கொன்று குவித்த காலத்தில், தமிழ் தேசிய ஆதரவாளர்கள் "தமிழ் மக்களின் ஒற்றுமையின்மை" பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்ட காலத்தில், அவர்களை ஒற்றுமையாக ஆதரித்த தமிழ் மக்கள் தான், பின்னர் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் ஆதரித்தார்கள். 1995 ஆம் ஆண்டு, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டை சிறிலங்காப் படைகள் கைப்பற்றின. "யாழ்ப்பாண தமிழரின் சனத்தொகையில் மிகக் குறைந்த சதவீதமானோரே புலி இயக்கப் போராளிகளாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடி இருந்தால், சிங்களப் படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்றும்" புலிகளின் பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

2009 ல் நடந்த இறுதிப்போரில் வன்னியில் இருந்த அனைத்து தமிழ் மக்களும், ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து போராடினார்கள். இறுதி யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே, வீட்டுக்கொரு பிள்ளை போராளியாக வேண்டும் என்று உத்தரவிட்ட புலிகள், கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டனர். பல குடும்பங்களில், பிள்ளைகள் பலவந்தமாக பிடித்துச் சென்று போராளிகளாக்கப் பட்டதை, இன்றைக்கும் புலி ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். "வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்கள், உணர்வுபூர்வமாக, தாமாகவே விரும்பிச் சென்றனர்." என்றே சொல்லி வருகினறனர். அப்படியானால், தமிழ் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக, ஒன்று சேர்ந்து தான் போராடி இருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து போராடிய போதிலும், போரில் ஏற்பட்ட தோல்வி எங்கிருந்து வந்தது? அதற்கு, கருணா குழு, ஈபிடிபி போன்ற அரச அடிவருடிகளான தமிழ் கூலிப் படையினரை குற்றஞ் சாட்டுகின்றனர். அவர்கள் எல்லோரும், முன்னொரு காலத்தில் தமிழ் தேசியவாதிகளாக இருந்தவர்கள். அதாவது, தமிழ் மக்கள் என்றைக்கும் ஒற்றுமையாகத் தான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் பிரிவினைகள் இருக்கவில்லை. ஆனால், தமிழ் தேசியவாதிகளுக்கு இடையில் தான் ஒற்றுமை இல்லை. அது தான் முக்கியமான பிரச்சினை.

புலிகளுக்குப் பின்னர், தமிழ் தேசியவாதிகளின் ஒரேயொரு நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒற்றுமை இல்லை என்பதை, இங்கே சொல்லத் தேவை இல்லை. கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் சேர்க்கை. வட மாகாண சபைத் தேர்தலில் தமிழர் ஒற்றுமையின் முக்கியத்துவம் பற்றி பேசி வாக்குக் கேட்டார்கள். அறுதிப் பெரும்பான்மை தருமாறு கெஞ்சினார்கள். தமிழ் மக்களும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து கூட்டமைப்புக்கு தமது ஓட்டுக்களை அள்ளிக் கொடுத்தார்கள். அனால், தேர்தல் முடிந்த பின்னர், மாகாண சபை அரசாங்கம் அமைப்பது தொடர்பாக இழுபறிப் படுகிறார்கள். அமைச்சர் பதவிக்காக சண்டை போடுகிறார்கள். உண்மையில், தமிழ் தேசியவாதிகள் எமக்கு போதிப்பதற்கு மாறாகவே யதார்த்த நிலைமை உள்ளது. தமிழ் மக்கள் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றனர். ஆனால், தமிழ் தேசியவாதிகளுக்குள் தான் ஒற்றுமை இல்லை.

புலிகளின் அழிவுக்குப் பின்னர், அதே அரசியலை வேறொரு தளத்தில் முன்னெடுத்து வரும் தமிழ்நாட்டு தமிழ் தேசியவாதிகளும் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து நிற்கின்றனர். ஈழப்போர் நடந்த காலத்தில், தமிழ் தேசியம் தமது உயிர்மூச்சு என்று பேசிக் கொண்டிருந்த, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் ஆகியோர், ஆளுக்கொரு கட்சிகளாக பிரிந்து நிற்கின்றனர். "அவர்கள் ஏன் இன்று வரையில் ஒரே கட்சிக் கொடியின் கீழ் ஒன்று சேரக் கூடாது?" என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை.

தேர்தலில் போட்டியிடாத, தீவிர தமிழ் தேசிய அமைப்புக்களான, நாம் தமிழர், மே 17 போன்றன கூட, ஒரே பெயரில், ஒரே அமைப்பாக இயங்குவது பற்றி இன்று வரையில் ஆலோசிக்கவில்லை. ஆனால், எல்லோரும் ஒரே குரலில், ஒரே கோஷத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். "தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அதுவே பிரச்சினைகளுக்கு காரணம்." தமிழ் மக்களை குற்றம், குறை கூறுபவர்கள், ஒரு தடவை தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்து கொள்வது நல்லது. 

Friday, October 11, 2013

"தமிழ் மேட்டுக்குடி தேசியக் கூட்டமைப்பு" விக்னேஸ்வரனின் உரை

இணையத்தில் இதுவரை வெளிவராத, வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனின் உரை. (வீடியோ இணைக்கப் பட்டுள்ளது.) சாவகச்சேரி நகர சபையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், "கல்வியில் சிறந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். 

விக்னேஸ்வரனின் உரையின் சுருக்கம்: 
"இலங்கையில் முதலாவது கல்வி நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகின. யாழ்ப்பாணத் தமிழர்கள் படிப்பில் சிறந்து விளங்கினார்கள். பொதுநலவாய நாடுகளில் சிறந்த கல்விமான்கள், யாழ்ப்பாண தமிழர்கள்.  சேர் பொன் இராமநாதன், முதன் முதலில் படித்த இலங்கையர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது. யாழ்ப்பாணத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்றும் சிறந்த கல்விமான்களாக புகழ் பெற்று விளங்கினார்கள். (யாழ்ப்பாணத்) தமிழரின் கல்வி அறிவு கண்டு பொறாமை கொண்ட சிங்களவர்கள், தரப்படுத்தல் (விக்னேஸ்வரன் "சமப்படுத்தல்" என்ற சொல்லைப் பாவிக்கின்றார்.) மூலம் தமிழர்களின் கல்வி உரிமையை பறித்தார்கள். 

தற்போது போதைவஸ்து, மதுப் பழக்கத்தை அறிமுகப் படுத்தி யாழ் மாணவர்களை பாழாக்குகிறார்கள். அரச ஆதரவு கட்சிகளே இந்தக் கலாச்சார சீரழிவுக்கு காரணமாகும். மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதன் மூலம், யாழ்ப்பாண தமிழரின் கல்விச் சீரழிவை தடுத்து நிறுத்த முடியும்." 

 "ஈழத் தமிழ் தேசிய அரசியலில், வர்க்கம் எங்கே வந்தது? வர்க்கம், முதலாளியம் போன்ற மார்க்சிய சொல்லாடல்கள், அந்த இடத்திற்கு எப்படிப் பொருத்தமாகும்?" என்று சிலர் கேட்கின்றனர். 

இலங்கையில் வாழாத, தமிழரல்லாத ஒருவர், விக்னேஸ்வரனின் உரையை கேட்க நேர்ந்தால், அவர்  "யாழ்ப்பாணத் தமிழர்கள் எல்லோரும் (அல்லது பெரும்பான்மை) உயர்கல்வி கற்ற அறிவுஜீவிகள்." என்றே நினைத்துக் கொள்வார். உலகில் வளர்ச்சியடைந்த நாட்டில் கூட, உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை, மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவாக இருக்கும். ஒட்டு மொத்த யாழ் மக்கட் தொகையில், உயர்கல்வி கற்றவர்கள் எண்ணிக்கை ஐந்து சதவீதம் கூட இருக்க முடியாது. ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்த காலமும் முதல், சிங்களவனுக்கு அடிமையான காலம் வரையில் அந்த நிலைமை மாறவில்லை. 

ஆகவே,  "அந்த ஐந்து சதவீத சிறுபான்மைத் தமிழர்களைப்" பற்றித் தான், விக்னேஸ்வரன் கவலைப் படுகின்றார். மிகுதி  உழைக்கும் வர்க்கத் தமிழர்களைப் பற்றி, அவர்களது பிரச்சினைகள் பற்றி, அவருக்கு எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால், அவர் பிறந்து வளர்ந்த வர்க்கம் வேறு.  உயர்கல்வி கற்ற சிறுபான்மை சமூகத்தை, சமூக விஞ்ஞானம் "மத்திய தர வர்க்கம்" என்று பெயரிட்டு அழைக்கிறது. மார்க்சியம் அந்தப் பிரிவுக்கு "குட்டி முதலாளிய அல்லது குட்டி பூர்ஷுவா வர்க்கம்" என்று பெயரிட்டது.

ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், யாழ்ப்பாணத்தில் கல்வி நிலையங்களை கட்டினார்கள் என்று விக்னேஸ்வரனே கூறுகின்றார். "வெள்ளையர்கள்" வந்து பத்து, பதினைந்து வருடங்களில் கல்லூரிகளை கட்டியதாக விக்னேஸ்வரன் கூறுகின்றார்.ஆங்கிலேயர்கள் மட்டுமே வெள்ளையர்கள் அல்ல, அவர்களுக்கு முன்னர் இலங்கையை காலனிப் படுத்திய டச்சுக் காரர்கள், போர்த்துக்கேயர்களும் வெள்ளையர்கள் தான்.

கல்வி கற்பது அனைத்துப் பிரஜைகளின் பிறப்புரிமை என்பதால், ஆங்கிலேயர்கள் இலங்கையின் எல்லா பிரதேசங்களிலும் கல்வி நிலையங்களை கட்டி இருந்திருந்தால், போற்றுதலுக்கு உரியவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் மட்டும் கற்றவர்களை உருவாக்க நினைத்த செயலானது, ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியாக கருதப்படும். அதுவே பிற்காலத்தில், இன முரண்பாடுகளை தோற்றுவித்திருக்கும் என்பதை விக்னேஸ்வரன் இங்கே குறிப்பிட மறந்து விட்டார். 

மேலும், ஆங்கிலேய காலனியாதிக்க வாதிகள், கல்வி நிலையங்களை கட்டியதன் நோக்கம், தமிழரை முன்னேற்றுவதற்காக அல்ல. அன்று, காலனிய நிர்வாகத்தை திறம்பட நடத்தும் தேர்ச்சி பெற்ற மத்தியதர வர்க்கம் ஒன்று தேவைப் பட்டது. அதிலும், உயர்சாதியினரில் வசதி படைத்த ஒரு சிறு பிரிவினருக்கு மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஐம்பதுகளில் கூட, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த தமிழர்களுக்கு, கல்வி கற்கும் உரிமை மறுக்கப் பட்டு வந்துள்ளது.

விக்னேஸ்வரன், தரப்படுத்தலுக்கு, சமப்படுத்தல் என்ற சொல்லை பிரயோகிக்கக் காரணம் என்ன? கல்வியில் சிறந்த தமிழர்களுக்கு சமமாக, சிங்களவர்களை முன்னேற்றுவதா? தரப்படுத்தல் மாவட்ட வாரியாக கொண்டு வரப் பட்டது. பின்தங்கிய மாவட்டங்கள் என்ற ரீதியில், மறைமுகமாக சிங்களப் பிரதேசங்களுக்கு சலுகைகள் வழங்கப் பட்டன. ஆனால், (ஆங்கிலேயர் காலத்தில்) கல்வி நிலையங்கள் கட்டப்படாத தமிழ்ப் பிரதேசங்களும் இருந்தன. வன்னி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருந்தன. 

யாழ்ப்பாண மாணவர்களிடையே பரவும் மது, போதைவஸ்து பழக்கம், சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப் படுகின்றது என்ற குற்றச்சாட்டில், ஓரளவு உண்மை இருக்கிறது. விக்னேஸ்வரன் இந்த உரையில் "கண்ணுக்குத் தெரியாத சக்தி" ஒன்று இயங்குவதாக தெரிவிக்கிறார். ஆனால், முதலாளித்துவ அல்லது ஏகாதிபத்திய பூதமே அந்த கண்ணுக்குத் தெரியாத சக்தி என்பதை, மக்களுக்கு கூறாமல் மறைக்கிறார். மேலைத்தேய ஏகாதிபத்தியம் என்ற "கண்ணுக்குத் தெரியாத சக்தி" தான் ஸ்ரீலங்கா அரசின் எஜமான் என்பது, விக்னேஸ்வரனுக்கு தெரியாமல் இருக்காது.

கட்டற்ற முதலாளித்துவம், உலகமயமாக்கல் போன்ற பொருளாதார மாற்றங்களும், மாணவர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கின்றன. இது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, இலங்கை முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் அந்தப் பிரச்சினை உள்ளது. முதலாளித்துவம், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டமே அதனை தடுத்து நிறுத்தும். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் யாரும் அந்தச் சொற்களையே உச்சரிப்பதில்லை. எந்த ஒரு கட்டத்திலும், தங்களது கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் முன் வைக்கவில்லை. ஆகவே, விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண சபை ஆட்சியில் இருந்தாலும், யாழ் மாணவர்களின் கல்வி சீரழிவதை தடுத்து நிறுத்த முடியாது. 

விக்னேஸ்வரனின் முழுமையான உரை:


வட மாகாண சபை தொடர்பான முன்னைய பதிவுகள்:
1. விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி
2. தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு

Tuesday, October 08, 2013

விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி


வட மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்த வாக்காளப் பெருமக்களிடம் கருத்துக் கேட்டிருந்தேன். அவர்களில் பலர் தெரிவித்த பொதுவான கருத்துகளை, அப்படியே இங்கே தருகிறேன்:
"இந்தத் தேர்தல்களில் எமக்கு நம்பிக்கை இல்லை. அரசியல் கட்சிகளின் தலைவர்களும், போட்டியிடும் வேட்பாளர்களும், தேர்தல் காலங்களில் மட்டும் தான் மக்களை சந்திக்க வருகிறார்கள். தேர்தல் முடிந்த பின்னர் யாருமே இந்தப் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. நாமாக தேடிச் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியாது. ஆனாலும், வாக்களிக்க வேண்டிய கடமை எமக்குண்டு. நாங்கள் ஓட்டுப் போடா விட்டால், எமது வாக்குகளை வேறு யாராவது போட்டு விடுவார்கள். அதற்காகத் தான் நாம் வாக்களிக்கச் செல்கிறோம்."
வீட்டுக்கு வீடு வாசல் படி. எல்லா நாடுகளிலும், தேர்தல் காலங்களில் மக்களின் மனநிலை ஒன்றாகத் தான் இருக்கின்றது.

இந்த தடவை நடந்த வட மாகாண சபைத் தேர்தலிலும், தமிழ் மக்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். வழமை போல சிங்கள முதலாளித்துவத்தின் பிரதிநிதியான ராஜபக்சவும், தமிழ் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி பெற்றுள்ளனர். ஒரே முதலாளித்துவ வர்க்கத்தின், இரண்டு வேறு மொழிகளைப் பேசும் இரு பிரிவினர், தமக்குள் முரண்பாடுகள் இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு தேர்தல் எனும் நாடகம் உதவுகின்றது. அதிலே சிங்கள வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு சிங்கள தேசியமும், தமிழ் வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு தமிழ் தேசியமும் பயன்படும்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் இரண்டு தரப்பினரும் எதிரிகளாக காட்டிக் கொள்வார்கள். தேர்தல் முடிந்தவுடன் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இலங்கை பிரிட்டிஷ் காலனியாகவிருந்து, சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இந்த நாடகம் மீண்டும் மீண்டும் அரங்கேற்றப் படுகின்றது. இதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள் ஜனங்கள், ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். இனப்பகை கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பார்கள். இறுதியில் அதனால் இலாபமடையும் முதலாளித்துவத்திற்கு, தேசியவாத முகமூடி தேவைப் படுகின்றது. ஈழப்போரில் தோற்கடிக்கப் பட்ட தமிழ் மக்கள், மீண்டும் வட மாகாண சபைத் தேர்தலிலும் தோற்கடிக்கப் பட்டுள்ளனர். எப்போதும் இறுதி வெற்றி சிங்கள-தமிழ் தரகு முதலாளிகளுக்கானது, என்ற விதியை மட்டும் யாராலும் மாற்ற முடியவில்லை.

இந்தத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் உண்மையில் தோற்றவர்கள் அல்ல, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உண்மையில் வென்றவர்களும் அல்ல. அவரவருக்கு ஏற்ற இடங்களில் இருக்கின்றனர். தேர்தல் தோல்வியால் டக்ளஸ், அங்கஜனின் வர்த்தகத் துறைக்கு, அரசியல் அதிகாரத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எல்லாமே வழமை போல நடந்து கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஏற்கனவே நிறைய வருமானம் தரும் வேலை பார்த்தவர்கள். அதற்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இப்போது மேலதிகமாக அரசாங்க ஊதியம், சலுகைகள் வேறு கிடைத்து வருகின்றது. தமிழ் மக்கள் தான் பாவம், அவர்களுக்குத் தான் ஒன்றுமேயில்லை.

விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்ச முன்னியிலையில் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் எடுத்த சம்பவம் முற்றிலும் எதிர்பாராத ஒன்றல்ல. கடைசியில் விக்னேஸ்வரனும் தனது "வர்க்கப் புத்தியை" காட்டி விட்டார், என்று வேண்டுமானால் திட்டலாம். விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், கொழும்பு மேட்டுக்குடி சமூகத்தின் அங்கத்தவர். கூட்டமைப்பு, விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யும் பொழுதே, அவரது வர்க்கப் பின்னணியும் பகிரங்கமாகியது. அதற்குப் பிறகு, "அவரை நோவானேன், கவலைப் படுவானேன்?" இனம் இனத்தோடு தானே சேரும்?

கொழும்பில் வாழும் மேட்டுக்குடித் தமிழர்கள், எல்லாக் காலங்களிலும் தமிழ் இன உணர்வு அற்று வாழ்ந்தவர்கள். (தனிப்பட முறையில் எனக்கு சிலரைத் தெரியும். அவர்கள் வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுவார்கள்.) அவர்களுக்கு, தமது வர்க்க அடையாளம் மட்டுமே முக்கியமாகப் படுவதுண்டு. அதனால் தான், தீவிர வலதுசாரி தமிழ் தேசியவாதிகளால் வெறுக்கப்படும், "சிங்களவரும், இடதுசாரியும், அமைச்சருமான" வாசுதேவ நாணயக்கார குடும்பத்துடன் விக்னேஸ்வரன் சொந்தம் கொண்டாட முடிந்தது. ஏனெனில், இருவரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அது தான் முக்கியம்.

இதெல்லாம் சாதாரண தமிழ் மக்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விடயங்கள். அதற்குக் காரணம் இன முரண்பாடல்ல, வர்க்க முரண்பாடு. "சிங்களவர்களோடு சொந்தம் கொண்டாடுவதில், விக்னேஸ்வரன் குடும்பம் மட்டும் விதிவிலக்கல்ல. சந்திரிகா குமாரதுங்கவின் மகளும் ஒரு தமிழரை மணந்து கொண்டார். பண்டாரநாயக்க குடும்பத்தில் பல தமிழர்கள் சம்பந்தம் செய்துள்ளனர். இவர்கள் எல்லாம் சாதாரண தமிழர்கள் அல்ல. வசதி படைத்த, உயர்சாதியில் பிறந்த, மேட்டுக்குடித் தமிழர்கள். அவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

தென்னிலங்கையில் உள்ள சிங்கள சுதந்திரக் கட்சியின் மறு வார்ப்புத் தான், வட இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும். இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அது சிங்கள இனவாதம் பேசி வாக்கு சேகரித்தால், இது தமிழ் இனவாதம் பேசி வாக்குச் சேகரிக்கின்றது. அதனை சிங்கள முதலாளிகள் ஆதரித்தால், இதனை தமிழ் முதலாளிகள் ஆதரிக்கின்றனர். இரண்டுமே அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் தான். அதனால் தான் எப்போதும் மக்கள் ஏமாற்றப் படுகின்றனர். அதனால் தான் எல்லாத் தேர்தல்களிலும் மக்கள் தோற்றுப் போகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெறப் போவதில்லை. "எத்தனை தவறுகள் விட்டாலும், கூட்டமைப்புக்கு மாற்று கிடையாது" என்ற கருத்து, அடுத்த தேர்தலிலும் முன் வைக்கப் படும். உண்மையில் அது மக்களின் கருத்தல்ல. தமிழ் முதலாளிய வர்க்கத்தினால் திட்டமிட்டு நடத்தப் படும் பிரச்சாரம். ஏனென்றால், பாமர மக்களால் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது. அவர்களிடம் அந்தளவு பணபலம் கிடையாது.

கடந்த முப்பதாண்டு காலம் நடந்த ஈழப்போரில் மட்டுமே, அந்த நிலைமை தலைகீழாக மாறியது. அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தில், அதுவோர் புரட்சிகர மாற்றம். அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட, அரசியலில் தலைமைப் பதவிகளுக்கு வந்தார்கள். உதாரணத்திற்கு, தமிழ்ச் செல்வனை குறிப்பிடலாம். ஆனால், புலிகளின் அழிவுடன், தமிழ் உழைக்கும் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளும் பறிக்கப் பட்டு விட்டன. இன்று மாகாண சபையில் மெத்தப் படித்தவர்களையே அமைச்சர்களாக்குவேன் என்று விக்னேஸ்வரன் அடம்பிடிக்கிறார். இது பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய தோல்வி.

(தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டமைப்பு வெளியிட்ட துண்டுப்பிரசுரம்.  தென்மராட்சிப் பகுதியில் இதனை விநியோகித்துக் கொண்டிருந்த நான்கு கட்சித் தொண்டர்களை இராணுவம் கைது செய்து அடைத்து வைத்துள்ளது.)
"பிரபாகரன் ஒரு மாவீரன். மகிந்தவுக்கும் அது தெரியும்." என்று வல்வெட்டித்துறையில் நடந்த கூட்டம் ஒன்றில் விக்னேஸ்வரன் பேசினார். அந்த உரையை துண்டுப்பிரசுரமாக அடித்து விநியோகித்த கூட்டமைப்பு தொண்டர்களை கைது செய்த இராணுவம், விக்னேஸ்வரனுக்கு கிட்டவும் நெருங்கவில்லை. அந்த உரையை, முதன் முதலாக வெளியிட்ட உதயன் பத்திரிகை நிறுவன முதலாளி கைது செய்யப் படவில்லை. இதனை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டி எழுதி இருந்தேன். அந்தளவுக்கு, இலங்கையில் இன்றைக்கும், சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினருக்கு இடையிலான வர்க்க ஒற்றுமை, இறுக்கமாக உள்ளது.

விக்னேஸ்வரனின் "புலி ஆதரவு உரை", அடித்தட்டு மக்களையும், குறிப்பாக வல்வெட்டித்துறை வாசிகளையும் கவர்வதற்காக நிகழ்த்தப் பட்டது. உண்மையில், உயிரோடு இருக்கும் புலிகளை விட, இறந்த புலிகள் தனக்குப் பயனுள்ளதாக இருப்பார்கள் என்பது விக்னேஸ்வரனுக்கும் தெரியும். ஆனால், இனி வருங்காலத்தில் புலிகள் போன்ற ஆயுதபாணி இயக்கம் தோன்றுவதை, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மேட்டுக்குடிக் கும்பல் அனுமதிக்கப் போவதில்லை.

தமது வர்க்க நலன்களுக்கு ஆபத்து வருமென்றால், ஸ்ரீலங்கா அரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, "தீவிரவாதிகளை" ஒடுக்கவும் தயங்க மாட்டார்கள். இதெல்லாம் ஈழ வரலாற்றில் ஏற்கனவே நடந்துள்ளன. ஈழத் தமிழர்களின் அரசியல் மீண்டும் எழுபதுகளை நோக்கிப் பயணிக்கின்றது.

__________________________

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முன்னைய பதிவுகள்:

3.தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு
2.மாகாண சபைத் தேர்தல் : வடக்கே வீசும் புயல்
1.வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

Sunday, October 06, 2013

போர்க்குற்றவாளிகளை காப்பாற்றும் "சர்வதேச சமூகம்" பற்றிய திரைப்படம்


அண்மையில், தொலைக்காட்சியில் "The Hunting Party" என்ற திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. போர்க்குற்றவாளிகளை பிடிப்பதில் மேற்கத்திய நாடுகள் காட்டி வரும் மெத்தனப் போக்கு, அதற்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கங்களை தோலுரித்துக் காட்டும் படம். பொஸ்னியாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து, கற்பனையான திரைக்கதை எழுதி இருக்கிறார்கள். இந்தப் படம் சொல்ல வரும் செய்தி தான் முக்கியமானது. "போர்குற்ற விசாரணைகள் என்பன எல்லாம் மேற்கத்திய நாடுகளின் நாடகங்கள். உண்மையில், ஐ.நா., சர்வதேச நீதிமன்றம், அமெரிக்கா போன்றவற்றிற்கு, போர்க்குற்றவாளிகளை பிடித்து தண்டிக்கும் எந்த நோக்கமும் கிடையாது. சில நேரங்களில், இந்த "மரியாதைக்குரியவர்கள்" போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும் கடமையையும் செய்து வருகின்றனர்." 

Simon Hunt, Duck இருவரும் நண்பர்கள். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்காக, போர் நடக்கும் நாடுகளுக்கு சென்று செய்தி சேகரிப்பது அவர்களது பணி. எல் சல்வடோர், பொஸ்னியா என்று கடுமையான யுத்தம் நடக்கும் பிரதேசங்களில் உயிரை துச்சமாக மதித்து வேலை செய்கின்றனர். பொஸ்னிய யுத்த களத்தில் இருந்து அமெரிக்க தொலைக்காட்சிக்கு நேர்முக வர்ணனை செய்யும் சைமன், ஐ.நா. மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றார். இதனால் சங்கடத்திற்குள்ளாகும் தொலைக்காட்சி நிலையம் தொடர்பை துண்டித்து விடுகின்றது. அதற்குப் பிறகு, பிரபல செய்தியாளர் சைமனுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அவர் போர்க்களத்தில் கொல்லப் பட்டிருக்கலாம் என்றே எல்லோரும் நினைக்கின்றனர்.  

ஐந்து வருடங்களுக்குப் பின்னர், டக் இன்னொரு இளம் ஊடகவியலாளருடன் பொஸ்னியா திரும்புகின்றார். தற்போது பொஸ்னியாவில் யுத்தம் முடிந்து, சமாதானம் நிலவுகின்றது. ஆனால், "போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதே தனது கடமை" என்று, சர்வதேச சமூகம் புளுகிக் கொண்டு திரிகின்றது. பொஸ்னியா திரும்பும் ஊடகவியலாளர்கள், நேட்டோப் படைகளால் தேடப்படும் "நரி" என்ற பட்டப் பெயர் கொண்ட, Radoslav Bogdanović என்ற செர்பிய போர்க்குற்றவாளியை கண்டு பேட்டி எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். எதிர்பாராத விதமாக, காணாமல்போன பழைய நண்பன் சைமனை சந்திக்கின்றனர். நரி இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று கூறும் சைமன், அவர்களை தன்னுடன் வருமாறு கூறுகின்றான். சைமன் போகும் வழியில், அந்தப் போர்க்குற்றவாளியை பிடித்துக் கொடுத்து சன்மானம் பெற விரும்புவதாக நண்பர்களிடம் தெரிவிக்கின்றான். இதனால் வழியில் பல ஆபத்துக்களை சந்திக்கின்றனர். 

Radoslav Bogdanović  போர் நடந்த காலத்தில், பல்லாயிரம் பொஸ்னிய முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த, பெண்களை வல்லுறவு செய்த குற்றங்களுக்கு காரணமானவன். (கராச்சிச் என்ற செர்பிய படைத் தலைவனை மனதில் வைத்து பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.) சைமன் "நரி" யை கண்டுபிடிப்பதற்கு, ஒரு தனிப்பட்ட காரணம் உள்ளது. அவனது பொஸ்னிய முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த காதலி, அவளது ஊருக்கு சென்றிருந்த நேரம், நரியின் படையினரால் சுட்டுக் கொல்லப் படுகின்றாள். அப்போது அவள் நிறைமாதக் கர்ப்பிணி. அந்தத் தருணத்தில் கோபத்தை அடக்கும் சைமன், தற்போது கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நரியை பிடித்துக் கொடுக்க நினைக்கிறான். 

பொஸ்னியாவில் நிலை கொண்டுள்ள சர்வதேச பொலிஸ், நேட்டோ படையணி போன்றவற்றிடம், போர்க்குற்றவாளிகள் பற்றிய விபரங்களை விசாரிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, சர்வதேச படைகளிடம் போர்க்குற்றவாளிகள் சம்பந்தமான எந்த ஆவணமும் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர். அது மட்டுமல்ல, போர்க்குற்றவாளிகளை பிடிப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடவில்லை. பொஸ்னிய போரின் பின்னர் சமாதானத்தை நிலைநாட்டும் கடமையில் ஈடுபட்டுள்ள சர்வதேச படையினர், ஊடகவியலாளருடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர்.

சைமனும் நண்பர்களும், தமக்குத் தெரிந்த வழியில் போர்க் குற்றவாளிகளை பிடிக்கக் கிளம்புகின்றனர். வழியில் அவர்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகின்றன. செர்பிய பொதுமக்கள் தமது நாயகனை காட்டிக் கொடுக்க மறுக்கின்றனர். இறுதியில், இரகசியமாக தகவல் கொடுப்போரிடம், சி.ஐ.ஏ. என்று பொய் சொல்லி, "நரி" யின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கின்றனர். ஆனால், சி.ஐ.ஏ. என்ற அடையாளம், அவர்களை ஆபத்தில் மாட்டி விடுகின்றது. அதற்காகவே, நரியின் ஆட்கள் அவர்களை கடத்திச் சென்று சித்திரவதை செய்கின்றனர்.  

 "நரி" யின் மறைவிடத்தில் கட்டி வைக்கப் பட்டிருந்த, ஊடகவியலாளர்களின் உயிர் ஊசலாடும் தருணத்தில், அங்கு திடீரென வந்திறங்கும் அமெரிக்க-நேட்டோப் படையினர், அவர்களை விடுவித்து அழைத்துச் செல்கின்றனர். நேட்டோ கமாண்டோக்களின் அதிகாரி, அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுகின்றனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், அந்தச் சந்தர்ப்பத்தில் கைக்கெட்டிய தூரத்தில் நின்ற போர்க்குற்றவாளியை, படையினர் (வேண்டுமென்றே) பிடிக்காமல் வாயைப் பிளந்து கொண்டு நிற்கின்றனர். அதை சைமன் நேரடியாகவே கேட்டு விடுகின்றான். "நீங்கள் ஐந்து வருடங்களாக தேடியும் கிடைக்காத போர்க்குற்றவாளியை, நாங்கள் இரண்டே நாட்களில் கண்டுபிடித்தது எப்படி? எதற்காக இத்தனை படைபலம் இருந்தும் போர்க்குற்றவாளியை தப்ப விட்டீர்கள்?"  ஆனால், அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல், "சி.ஐ.ஏ. போன்று நடித்ததற்காக உங்கள் மேல் வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவேன்" என்று மிரட்டும் அமெரிக்க படையதிகாரி, அவர்கள் உடனடியாக ஊர் திரும்புவதே புத்திசாலித்தனம் என்று எச்சரிக்கிறான். 

மூன்று ஊடகவியலாளர்களும், நேட்டோ படை அதிகாரியின் உத்தரவுக்கிணங்க நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. தாங்கள் மூவரும் நினைத்தால், போர்க்குற்றவாளியை சுலபமாக பிடித்து விடலாம் என்று எண்ணுகின்றனர். "நரி" காட்டுக்குள் வேட்டையாடச் செல்லும் பொழுது, கூடவே நிறைய மெய்ப்பாதுகாவலர்களை அழைத்துச் செல்ல வாய்ப்பில்லை. அதனால் தனியாக நிற்கும் போர்க்குற்றவாளியை பிடிப்பது இலகு என்று திட்டம் போடுகின்றனர். போட்ட திட்டம் நிறைவேறி, மூன்று நண்பர்களும் சேர்ந்து போர்க்குற்றவாளியை பிடிக்கின்றனர். அந்தத் தருணத்திலும் கலங்காமல், "சர்வதேச சமூகம்" தன்னை காப்பாற்றும் என்று நரி கூறுகின்றான். "என்னை பிடித்துக் கொடுத்ததற்காக, உங்களுக்கு சன்மானம் கிடைக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு சர்வதேச சமூகம் எப்படி நடந்து கொள்ளும் என்பது உங்களுக்குத் தெரியாது. ஏனென்றால், அவர்கள் தான் எனக்காக அஞ்சுகின்றார்கள்." ஏற்கனவே அந்தப் பதிலை எதிர்பார்த்த சைமன் கூறுகின்றான்: "அது தெரிந்து தான் நாங்கள் சட்டத்தை மாற்றி விட்டோம்..." 

அதாவது, ஒரு போர்க்குற்றவாளியை ஐ.நா.விடமோ, அமெரிக்காவிடமோ ஒப்படைப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அதற்குப் பதிலாக, "நரி" யின் கொலைவெறியாட்டத்திற்கு பலியான பொஸ்னிய முஸ்லிம்கள், அவனுக்கு தகுந்த தண்டனை கொடுப்பார்கள் என்று முடிவெடுக்கின்றனர். கைகள் கட்டப்பட்ட "நரி"யை, சைமனின் காதலியின் ஊருக்குள் கொண்டு சென்று இறக்கி விடுகின்றனர். இனி, ஒரு போர்க்குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது, அவனால் பாதிக்கப்பட்ட பொஸ்னிய முஸ்லிம்களின் பொறுப்பு. 

படத்தின் முடிவில், பார்வையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி தெரிவிக்கப் படுகின்றது. "ஒருநாளும், மேற்கத்திய நாடுகள் போர்க்குற்றவாளிகளை தண்டிப்பதில்லை. அந்த அக்கறையும் அவர்களுக்கு கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களே அந்தக் கடமையை செய்ய வேண்டும்," என்ற உண்மையை திரைப்படம் வலியுறுத்துகின்றது. இதையே நாங்கள் "மேற்கத்திய நாடுகளிடம் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும்" தமிழ் மக்களுக்கும் கூறி வருகின்றோம். 

அமெரிக்கா, மற்றும் ஐ.நா. பொஸ்னிய போர்க்குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய காரணம் என்ன? பொஸ்னிய யுத்தம் நடந்த காலங்களில், கிறிஸ்தவ செர்பிய படைகள், பெருமளவு பொஸ்னிய முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்தன. அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் முஸ்லிம்கள் அழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. ஐரோப்பிய, அதாவது பொஸ்னிய முஸ்லிகள் இனவழிப்பு செய்யப்படுவது அவர்களுக்கு உவப்பானதாக இருந்திருக்கலாம். ஆனால், ஊடகங்களில் பொஸ்னிய முஸ்லிம் மக்களை எண்ணி இரக்கப் படுவதாக முதலைக் கண்ணீர் வடித்தார்கள். அமெரிக்கா, செர்பிய படைத் தலைவர்களுடன் எட்டப் பட்ட உடன்பாட்டின் பின்னர் தான், பொஸ்னிய போர் முடிவுக்கு வந்தது. செர்பிய போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் பட மாட்டார்கள் என்பதும், உடன்படிக்கையில் இருந்திருக்கலாம்.  

அமெரிக்கா "செர்பிய போர்க்குற்றவாளிகளை தேடுவதாக", ஒரு முழுப் பக்க விளம்பரம் செர்பிய பத்திரிகைகள் எல்லாவற்றிலும் பிரசுரமானது. அமெரிக்கா அதனை படமெடுத்து ஊடகங்களுக்கு கொடுத்தது. அதாவது, அமெரிக்கர்கள் மிகத் தீவிரமாக போர்க் குற்றவாளிகளை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். அதனை உலகம் நம்ப வேண்டுமாம். அன்றைய வருடத்தின் சிறந்த நகைச்சுவை அதுவாகத் தான் இருக்கும். பொஸ்னிய பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தில், போர்க்குற்றவாளிகளை பிடிப்பதற்கான தகவல் தெரிந்தோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் ஒன்று கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால், அந்த தொலைபேசி இலக்கம் அமெரிக்க நாட்டு எல்லைக்குள் மட்டுமே செயற்படும்!

பொஸ்னியா தொடர்பான முன்னைய பதிவு:
பொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்

Thursday, October 03, 2013

தமிழீழத்திற்கான தமிழக மாணவர்களின் போராட்டம் - ஒரு மீளாய்வு


ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த நேரம், அந்த செய்தி காட்டுத்தீ போல தமிழ் கூறு நல்லுலகு எங்கும் பரவியது. சென்னையில், லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம், ஊடகங்களின் கவனத்தை பெற்றது. அது பற்ற வைத்த நெருப்பு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் பரவியது. தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டம், மீண்டும் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை தோற்றுவித்தது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியமை, மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப் பட்டது. 

2009 ம் ஆண்டு, ஈழப்போரின் இறுதியில், "இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடக்கிறது, அதனால் பதவி விலக வேண்டும்" என்ற கோரிக்கையை, அன்று ஆட்சியில் இருந்த கருணாநிதி அரசு நிராகரித்து விட்டது. இதனால், ஒரு காலத்தில் "தமிழினத் தலைவராக" புகழப்பட்ட கருணாநிதி, புதிய தலைமுறை தமிழ் இன உணர்வாளர்களின் எதிர்ப்புக்கு ஆளாகினார். 

மாணவர் போராட்டத்தின் காரணமாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினாலும், அந்தக் கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க முடியவில்லை. இதைத் தவிர, மாணவர் போராட்டம் தமிழக அரசியலில் ஏற்படுத்திய விளைவுகள் மிகக் குறைவு. ஆளும் கட்சியான, ஜெயலலிதாவின் ஆதிமுக, "தமிழீழத்தை ஆதரித்து" சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுடன் தனது கடமையை முடித்துக் கொண்டது. 

"இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க கூடாது..." என்ற கோரிக்கையுடன் லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஆரம்பமாகியது. லயோலா கல்லூரி, சென்னை மாநகரில் மட்டுமல்லாது, மாநில அளவில் சிறந்த கல்லூரியாக கருதப் படுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும், வருங்கால மத்தியதர வர்க்க ஊழியர்களை உருவாக்கும் கல்லூரிகள் இருக்கும். 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே, லயோலா கல்லூரிக்கு ஒரு சமூக அந்தஸ்து இருந்தது. சினிமா தொழிற்துறையும், வணிக சஞ்சிகைகளும் அந்தக் கல்லூரியின் பெயரை சாமானியனின் மனங்களிலும் பதிய வைத்தன. அப்படியான கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், போராட்டம் நடத்துகிறார்கள், அதுவும் தமிழீழத்திற்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்பது, நிச்சயமாக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்திழுக்கும். வெகுஜன ஊடகங்கள், தங்களை புறக்கணிப்பதாக, மனம் குமுறிக் கொண்டிருந்த தமிழ் இன உணர்வாளர்கள், இதனால் புதிய உத்வேகம் பெற்றனர். 

தமிழகத்திற்கு, அதிலும் தமிழ் தேசிய இயக்கத்திற்கு, மாணவர் போராட்டம் ஒன்றும் புதுமையல்ல. திராவிடர் இயக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே மாணவர்களை அணிதிரட்டி போராட ஆரம்பித்தார்கள். குறிப்பாக, அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உருப்பெற்ற காலத்தில், அந்தக் கட்சியின் இளைஞர் அணி போராடிய வரலாறு, தனியே எழுதப் பட வேண்டியது. அன்று அவர்களது கோஷம் "தனித் தமிழ்நாடு" என்பதாக இருந்தது. உண்ணாவிரதம், கறுப்புக் கொடி காட்டுவது, ரயில் மறியல் செய்வது போன்ற, வன்முறையற்ற அனைத்து வழிகளிலும் போராட்டம் நடந்தது. 

இறுதியில், மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து தனித் தமிழ்நாடு கோரிக்கை கைவிடப் பட்டாலும், மொழிவாரி மாநிலங்களின் பிரிப்பு, அவர்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப் படுகின்றது. அதைத் தவிர, ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டத்தின் விளைவாக, இன்று முழு இந்தியாவிலும், தமிழ் நாட்டில் மட்டுமே ஹிந்தி மொழி பாடசாலைகளில் போதனா மொழியாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

தமிழீழ விடுதலைப் போராட்டமும், யாழ்ப்பாணத்தில் நடந்த மாணவர் போராட்டத்தின் விளைவு என்று நம்பப் படுகின்றது. எழுபதுகளில் கொண்டு வரப் பட்ட தரப்படுத்தல் சட்டம், பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வட மாகாண தமிழர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைத்தது. அதை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டம் என்ற குழம்பிய குட்டையில், தமிழர் விடுதலைக் கூட்டணி மீன் பிடிக்க தொடங்கியது. 

தமிழ் இளைஞர்களை போர்க்குணாம்சம் கொண்டவர்களாக மாற்றியதில், கூட்டணியின் பங்கு அளப்பெரியது. இருப்பினும், தமிழ் இன உணர்வு ஊட்டி வளர்க்கப் பட்ட, எதற்கும் துணிந்த இளைஞர் அணி, இறுதியில் தனது ஆசான்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது. "பாராளுமன்ற தேர்தலின் மூலம் தமிழீழம் வாங்கித் தருவதாக" சூளுரைத்த மிதவாத கூட்டணி தலைவர்களை புறந் தள்ளி விட்டு, இளைய தலைமுறை ஆயுதமேந்தியது. அஹிம்சா வழியில் பிறந்த மாணவர் போராட்டம், ஆயுதமேந்திய வன்முறைப் போராட்டமாக மாறியது. அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் வரலாறு. 

மேற்குறிப்பிட்ட மாணவர் போராட்டங்கள் வகித்த வரலாற்றுப் பாத்திரத்தை அல்லது அதற்கொப்பான தாக்கங்களை, அண்மைய மாணவர் போராட்டங்கள் ஏற்படுத்தாத காரணம் என்ன? முதலில், மாணவர்கள் எப்படி தாமாகவே முன்வந்து போராடினார்கள் என்று பார்ப்போம். தமிழகத்தில் பல காலமாகவே, மாணவர் சமுதாயத்தின் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. 

மாணவர்களுக்கு அரசியலில் நாட்டம் கிடையாது, சமூக அக்கறை கிடையாது... இது போன்ற குற்றச்சாட்டுகள் தங்களை நோக்கி செலுத்தப் படுவதை, மாணவர்களும் உணராமல் இல்லை. ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, இலங்கை அரசின் போக்குற்றங்கள் பற்றிய ஆவணப்படத்தை, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. 

சனல் 4 இந்த வருடம் வெளியிட்ட ஆவணப்படத்தில், புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொலை தொடர்பான தகவல்கள் வந்தன. போர் முடிந்தவுடனேயே, சில இணையத் தளங்கள் பாலச்சந்திரன் கொலையான படத்தை வெளியிட்டன. ஆனால், அப்போது உதாசீனப் படுத்திய புலி ஆதரவாளர்கள், பிரித்தானிய சனல் 4 வெளியிட்ட பின்னர், வேறு வழியின்றி அதனை மக்கள் மய அரசியலாக்கினார்கள். அனேகமாக, பாலச்சந்திரன் வீடியோ ஏற்படுத்திய தாக்கம், மாணவர் போராட்டத்தில் எதிரொலித்தது. அண்மைக்கால தொழில்நுட்ப வளர்ச்சியான, இணையம், சமூக வலைத் தளங்கள் என்பன இதில் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளன. முந்திய தலைமுறைகளை சேர்ந்த மாணவர்களுக்கு அந்த வசதிகள் எதுவும் இருக்கவில்லை. 

2009 க்குப் பின்னர், அதாவது ஈழப்போரின் முடிவில் தோன்றிய தமிழினவாத அமைப்புகளான, மே 17, நாம் தமிழர், சேவ் தமில்ஸ், போன்றவற்றின் அரசியல் நிலைப்பாடு, குறிப்பாக லயோலா கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளில் காணப்பட்டன. "தமிழீழத்தை முடிந்த முடிவாக ஏற்றுக் கொள்ளல். புலிகளை நிபந்தனையற்று ஆதரித்தல். இலங்கை அரசை, குறிப்பாக மகிந்த ராஜபக்சவை இனப்படுகொலை குற்றச்சாட்டில் தண்டித்தல்..." போன்ற அடிப்படைக் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. இன்றைய இளைய தலைமுறை, அவற்றை கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொள்கின்றது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அதற்கான திட்டங்களை வகுப்பது குறித்து யாரும் பேசத் தயாராக இருக்கவில்லை. 

ஐ.நா. தீர்மானம் இலங்கை அரசின் மேல் பொருளாதாரத் தடை கொண்டு வந்து விடும் என்று அப்பாவித் தனமாக நம்பினார்கள். அதனால், அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து, இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்கள். இன்று வரையில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் முதல், தேர்தலில் போட்டியிடாத அமைப்புக்கள் வரை, அதே மாதிரியான கொள்கைகளை கொண்டுள்ளன. அதிலே முக்கியமானது, அவற்றில் ஒன்று கூட, இந்திய அரசுக்கு எதிராக சுட்டு விரலை கூட அசைக்கவில்லை. இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட நல்ல பிள்ளைகளாய், அயல் நாட்டு விவகாரங்களுக்காக போராடுவதை, இந்திய அரசும் வேடிக்கை பார்த்தது. 

இலங்கை அரசுத் தலைவர்கள், ஒரு முக்கியமான விடயத்தை பல தடவைகள் கூறி விட்டார்கள். "இந்திய அரசு தான் இந்தப் போரை நடத்தியது," என்று பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டார்கள். இதனால், வன்னியில் கொல்லப்பட்ட நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் படுகொலைக்கு, இந்தியாவும் உடந்தையாக இருந்துள்ளது. போர்க்களத்தில் இந்திய இராணுவ அதிகாரிகளும், இலங்கை இராணுவ அதிகாரிகளுடன் கூடி நின்ற படங்களும், ஊடகங்களில் வெளி வந்துள்ளன. 

நந்திக் கடலுக்கும், இந்து சமுத்திரத்திற்கும் இடைப்பட்ட ஒடுங்கிய நிலப்பரப்பில் சிக்கிக் கொண்ட தமிழ் மக்களின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப் பட்டன. மருத்துவ மனைகள் கூட சேதமடைந்தன. எங்கெங்கே மக்களுக்கு மத்தியில் புலி உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள், என்பன போன்ற தகவல்களை செய்மதிப் படங்களாக தொகுத்து வழங்கியது இந்தியா தான். 

அந்த இடங்களில் எல்லாம் அகோரமான ஷெல் வீச்சுகள் நடத்தப் பட்டன. புது மாத்தளன் முதல், முள்ளிவாய்க்கால் வரையில், ஆயிரக் கணக்கான சடலங்கள் கிடைந்தன. இந்தப் போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும். சந்தேகமேயில்லை. ஆனால், இலங்கையை தண்டிக்க வேண்டுமென்று, இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் அரசியல் வியூகத்தை தான் புரிந்து கொள்ள முடியவில்லை. 

ஐ.நா. அவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கும், இந்தியா கொண்டு வரப் போகும் பிரேரனைக்கும் இடையில் ஒரேயொரு வித்தியாசம் மட்டுமே உண்டு. அமெரிக்க தீர்மானமானது, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தக் கோருகின்றது. 

"நல்லிணக்க ஆணைக்குழு என்பது, போர்க்குற்றவாளியான இலங்கை அரசே தனது போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டுமென கூறுவதாகும். அதில் எமக்கு நம்பிக்கை இல்லை...." என்று பல தமிழ் இன உணர்வாளர்கள் கூறி விட்டார்கள். இருப்பினும் இதே தமிழ் இன உணர்வாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் அமெரிக்கா, அவர்களின் எண்ணத்தை  பிரதிபலிக்கவில்லை. நான்கு வருடங்களாக, அமெரிக்கா நல்லிண ஆணைக்குழுவின் முக்கியத்துவம் குறித்து மட்டுமே, திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? 

இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கமே அமெரிக்க ஆலோசனையின் பெறுபேறாக தோன்றியது தான். ஐ.நா. வில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தாலும், அதே மாதிரியான கூத்து தான் அரங்கேறும். இந்திய-இலங்கை ஒப்பந்தம், குறிப்பாக 13 ம் திருத்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப் பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும். இது மீண்டும் 1987 ம் ஆண்டுக்கே திரும்பிச் செல்லும் கதை தான். இவை எல்லாம், "தமிழீழமே முடிந்த முடிவு" என்று கோரிப் போராடும் மாணவர் இயக்கத்திற்கு உவப்பானதாக இருக்கப் போவதில்லை. 

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும், 13 ம் திருத்தச் சட்டத்திற்கும், அவர்கள் மனதில் அறவே இடமில்லை என்பது தெரிந்த விடயம். இதனை இன்னொரு விதமாக கூறினால், அமெரிக்க தீர்மானமாக இருந்தாலும், இந்திய தீர்மானமாக இருந்தாலும், அது மாணவர்களின் அடிப்படைக் கொள்கைக்கு முற்றிலும் முரணானதாக இருக்கும். இதனால், மாணவர்களின் போராட்டமானது, வெறுமனே இலங்கை அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, இந்திய, அமெரிக்க அரசுகளையும் எதிர்த்து நடத்தப் பட வேண்டியது அவசியம். 

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் கொண்டுவரப் படும் தீர்மானம், தமிழ் இனப்படுகொலையை விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் சட்ட அடிப்படையில், மனித உரிமைகள் தொடர்பான உயர்மட்ட அமைப்பின் சக்திக்கு அப்பாற்பட்ட விடயம் அது. அப்படியே அது அங்கே ஆராயப் பட்டாலும், இலங்கை மீதான பொருளாதராத் தடை கொண்டு வருவதை, ஐ.நா. பாதுகாப்புச் சபை மட்டுமே நிறைவேற்ற முடியும். 

அந்தச் சந்தர்ப்பத்திலும், இலங்கையின் "நண்பர்களான" ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்கலாம். தமிழக மாணவர் போராட்டத்தில், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு ஐ.நா. வின் சட்ட அமைப்பு பற்றிய புரிதல் இருந்திருந்தால், பிற மாணவர்களையும் சரியான அரசியல் பாதையில் வழிநடாத்தி இருக்க முடியும். 

அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளும், "வழமையான இலங்கையின் நண்பர்கள்" என்பதற்கு அப்பால், தமிழினப் படுகொலையில் பெருமளவு பங்களிப்பை வழங்கியுள்ளன. அந்த நாடுகள் வழங்கிய ஆயுத தளபாடங்கள், சிறிலங்கா படைகளை நவீன மயப் படுத்தியது மட்டுமல்லாது, தமிழர்களை கொன்று குவிக்கவும் உதவியது. (உலக சந்தையில் விலை மலிவு என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே, ரஷ்யா, சீனாவிடம் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.) இந்த உண்மைகள் யாவும், தமிழகத்தில் போராடிய மாணவர்களுக்கு தெரியாது என்று கூற முடியாது. 

ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்றன உலக வல்லரசுகள் என்ற காரணத்திற்காக மட்டும் அவற்றின் மீதான விமர்சனத்தை தவிர்க்கின்றனர். அதே நேரம், ரஷ்யா, சீனாவை கடுமையாக சாடுவதால், மேற்கத்திய நாடுகள் தமிழர்களுக்காக இரங்கப் போவதில்லை. இந்த இடத்தில் ஒரு தந்திரோபாய மாற்றம் அவசியம். எதிர் நிலை வல்லரசுகளான ரஷ்யா, சீனாவையும் கூட, தமிழர்களுக்கு ஆதரவான சக்திகளாக மாற்றுவது அவசியம். அதை நோக்கிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருந்தாலே, போராட்டத்தில் அரைவாசி வெற்றி கிடைத்து விடும்.  

இதனை எழுதிக் கொண்டிருக்கும் நேரம், தமிழக மாணவர்கள் போராட்டம் ஓய்ந்து விட்டது. அதன் தொடர்ச்சியான இயக்கம் என்று குறிப்பிடத் தக்கதாக எதுவும் இல்லை. "தமிழீழத்திற்கான மாணவர் அமைப்பு" என்ற நிறுவனமயமாக்கல் உருவானதை மறுக்க முடியாது. ஆனால், தமிழக அரசியல் அதிகார அமைப்பில், தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போய்விட்டார்கள். 

ஏற்கனவே இருக்கும் "தமிழீழ ஆதரவு அமைப்புகளான" மே 17, நாம் தமிழர், சேவ் தமில்ஸ், இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. குறிப்பாக ஐ.டி. துறையில் பணியாற்றும் இளைஞர்கள், படித்த கீழ் மத்திய தர வர்க்க இளைஞர்கள் மட்டுமல்ல, கல்லூரி மாணவர்களும் ஏற்கனவே இந்த அமைப்புகளுக்கு ஆதரவளிக்கின்றனர். 

முதலாவது தலைமுறை தமிழ் தேசியவாத கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க. வுக்கு மாற்றாக எழுந்த, இரண்டாவது தலைமுறையை சேர்ந்த தமிழ் தேசியவாத இயக்கங்கள் அவை.  வாரிசு அரசியலால், வணிக நலன்களால் சீரழிந்த முன்னாள் தமிழ்தேசிய இயக்கமான திமுக வுக்கு எதிரான விமர்சனங்கள் நியாயமானவை. அவர்கள் செய்ததெல்லாம் துரோகம் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், இரண்டாவது தலைமுறை தமிழ் தேசியவாத அமைப்புகளையும் விமர்சிக்காமல், மாணவர்களின் போராட்டம் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை கொண்டு வரப் போவதில்லை. 

தமிழக மாணவர்கள், 1968 ல் ஐரோப்பாவில் தோன்றிய மாணவர் எழுச்சியில் இருந்து படிப்பினைகளை பெறுவது அவசியமானது. உலகில் நடந்த வெற்றிகரமான மாணவர்கள் போராட்டங்களில் அது முக்கியமானது. வரலாற்றில் குறிப்பிடத் தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. தமிழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களில், கலைப்பீடத்தில் வரலாற்றுக் கல்வி பயிலும் மாணவர்களும் பங்குபற்றினார்கள். அவர்களது பாடத்திட்டத்தில், ஐரோப்பிய வரலாறு பற்றிய பகுதியில் குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படி எந்த நூலிலும் எழுதியிருக்கவில்லையெனில், அந்தப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்கலாம். 

இலங்கையில் நடந்த ஈழப்போரில் நடந்த கொடுமைகளை கண்டு கிளர்ந்தெழுந்த மாணவர் சமுதாயம் தான் போராட்டத்தில் குதித்தது. அவர்கள் கடல் கடந்து, இந்தியா என்ற அயல்நாட்டில் வாழ்ந்த போதிலும், 2009 தமிழினப் படுகொலைக் காட்சிகளை, போரில் ஈழத் தமிழர்கள் பட்ட துன்பங்களை தொலைக்காட்சியில் பார்த்து வெகுண்டெழுந்தனர். கிட்டத் தட்ட இதே மாதிரியான நிலைமையில் தான், ஐரோப்பிய மாணவர்களின் எழுச்சியும் இடம்பெற்றது. 

1968 ம் ஆண்டு, வியட்நாம் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சுதந்திரத்திற்காக போராடிய தென் வியட்நாம் மக்களை, அமெரிக்க படையினர் கொன்று குவித்து கொண்டிருந்தார்கள். நேபாம் குண்டுகளை வீசி குழந்தைகளையும், பெண்களையும் கொன்ற காட்சிகள், ஐரோப்பிய தொலைக்காட்சிகளின் காண்பிக்கப் பட்டன. அந்தக் காட்சிகளை கண்டு வெகுண்டெழுந்த மாணவர் சமுதாயம், அமெரிக்க ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக போராடினார்கள். வியட்நாம் விடுதலை பெற வேண்டும் என்று கோரிப் போராடினார்கள். 

அவர்கள் எந்த ஐ.நா. அமைப்பையும் நம்பி இருக்கவில்லை. தமது நாட்டு அரசாங்கம், ஐ.நா. வில் அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கவில்லை. ஏனென்றால், அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐரோப்பிய அரசுகளும், அமெரிக்கப் போர்க்குற்றவாளிகளின் கூட்டாளிகள், வியட்நாமிய இனப்படுகொலையின் பங்குதாரர்கள் என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருந்தது. அதனால், ஐரோப்பிய மாணவர்களின் போராட்டம், ஐரோப்பிய அரசுகளுக்கு எதிராக திரும்பியது.  

தமிழக மாணவர்கள், தமது போராட்டத்தில் அரசியல் கட்சிகள் தலையிட விடவில்லை என்று கூறப் படுகின்றது. தமிழ் தேசிய ஆதரவு அரசியல் கட்சிகள், மாணவர் போராட்டத்திற்குள் நுளைந்து, அவர்களை தம் பக்கம் இழுக்க முயன்றனர். ஆனால், எந்த சந்தர்ப்பத்திலும், எந்தக் கட்சியும் ஆதிக்கம் செலுத்துவதற்கு மாணவர்கள் விடவில்லை. இது பலரால் வரவேற்கப் பட்டது. போராட்டத்திற்குள் அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது என்பது நியாயமான நிபந்தனை தான். ஆனால், எந்தவொரு அரசியல் கொள்கையும் தலையிடக் கூடாது என்று யாரும் தடைவிதிக்கவில்லையே? மாணவர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு அவசியமான அரசியல் கொள்கை எதையும் கண்டுபிடிக்கவில்லை. 

இந்த விடயத்தில், ஐரோப்பிய மாணவர்கள் எமக்கு சிறந்த உதாரண புருஷர்களாக திகழ்கின்றனர். அன்று போராடிய மாணவர்களில் பலர், பழைமைவாத கிறிஸ்தவ குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கும் இடதுசாரிக் கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. "கம்யூனிஸ்டுகள் என்போர் கடவுள் மறுப்பாளர்கள். கிறிஸ்தவ விரோதிகள்..." போன்ற கருத்துக்களை தான் அவர்களின் பெற்றோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறார்கள். 

அப்படிப் பட்ட குடும்பப் பின்னணியை கொண்ட மாணவர்கள், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் நூல்களை தேடிப்  படித்தார்கள். ஐரோப்பிய மாணவர்களும், தமது போராட்டத்திற்குள் எந்த அரசியல் கட்சியையும் தலையிட விடவில்லை. அன்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, மாணவர்கள் பார்வையில் பிற்போக்கான திரிபுவாதிகளாக தென்பட்டார்கள். 

ஐரோப்பிய மாணவர்கள், தமது கல்லூரி வளாகங்களிற்குள் மட்டும் போராடிக் கொண்டிருக்கவில்லை. மாவோயிச கற்கை மையங்களை உருவாக்கினார்கள். அவை பின்னர் ஐரோப்பிய மாவோயிச கட்சிகளாக உருமாறின. மாணவர்கள் மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்தார்கள். தொழிற்சாலைகளுக்கு சென்று, தொழிலாளர்களுக்கு அரசியல் கற்பித்தார்கள். பாடசாலைகளுக்கு சென்று, பாடசாலை மாணவர்களையும் அணி திரட்டினார்கள். 

இவ்வாறு, மாணவர்கள், தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்த வெகுஜன அமைப்பு தோன்றியது. தெருக்களில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மாணவர்களுக்கு ஆதரவாக தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்தன.  ஒரு கட்டத்தில், பிரான்ஸ் நாட்டில் ஒரு சோஷலிசப் புரட்சி வெடித்து விடும் என்றளவுக்கு நிலைமை இருந்தது. 

அன்றைய ஐரோப்பா, அந்தளவுக்கு மாறா விட்டாலும், மாணவர்களின் போராட்டம் தனது குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டது எனலாம். அவமானகரமான தோல்வியை சந்தித்த அமெரிக்கப் படைகள், வியட்நாமில் இருந்து வெளியேறின. 

தென் வியட்நாம் விடுதலை பெற்றது. அது வட வியட்நாமுடன் இணைந்து, வியட்நாம் என்ற புதிய சுதந்திர நாடு உருவாகியது. இதனை எந்தவொரு ஐ.நா. தீர்மானமும் சாதிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாது, அமெரிக்காவிலும் இடையறாது போராடிய மாணவர்கள் சாதித்துக் காட்டினார்கள். அந்த மாணவர்களில் யாருமே, வியட்நாமிய இனத்தவர் அல்ல என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.