Tuesday, October 14, 2008

காஸ்ட்ரோ பார்வையில் அமெரிக்க நிதி நெருக்கடி

சமூகங்களுக்கும், நாடுகளுக்குமிடையிலான வர்த்தகமானது, மனிதர் உற்பத்தி செய்த பண்டங்களினதும், சேவைகளினதும் பரிமாற்றமாக உள்ளது. உற்பத்தி சாதனங்களின் சொந்தக்காரர்கள் லாபத்தையும் தமக்கே உரித்தாக்கி கொள்கின்றனர். முதலாளித்துவ தேசத்தின் தலைவர்களாக வீற்றிருக்கும் இந்த வர்க்கமானது, தாம் வணங்கும் தெய்வமான சந்தையின் மூலம் தமது வளத்தை பெருக்கிக் கொள்கின்றது.

ஒவ்வொரு நாட்டிலும் பலமானதிற்கும், பலவீனமானதிற்குமிடையில் போட்டி நிலவுகின்றது. தேவையான அளவு உணவு உள்ள, பாடசாலை செல்லக்கூடிய, எழுத வாசிக்க தெரிந்த, அனுபவங்களை சேகரித்துக் கொண்ட, அதிக வளங்களைக் கொண்ட வசதி படைத்தவர்கள் ஒரு புறம். இந்த வசதி எல்லாம் கிடைக்காத மக்கள் மறு புறம். ஏழை-பணக்கார நாடுகளுக்கு இடையேயான வித்தியாசமும் இது போன்றதே.


ஐரோப்பிய வெள்ளையர்கள் தமது கனவுகளுடனும், பேரவா கொண்டும் ஸ்தாபித்த அதி உயர் முதலாளித்துவ தேசம்(அமெரிக்கா) இன்று நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. ஆனால் இது குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் சாதாரண நெருக்கடியல்ல. உலகம் முழுவதும் (அமெரிக்க) மாதிரி வளர்ச்சியை வரித்துக் கொண்ட காலத்தில் இருந்து எழுந்த மிக மோசமான நெருக்கடியாகும். அபிவிருத்தியடைந்த முதலாளித்துவத்தின் தற்கால நெருக்கடி, ஒரு சில நாட்களில் ஏகாதிபத்தியம் அதன் தலைமையை மாற்றிக்கொள்ள போகும் காலகட்டத்தில் வந்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் நிறவாதம் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. ஒரு கறுப்பன் தனது மனைவி பிள்ளைகளுடன் வெள்ளை மாளிகையில் குடியேறப்போவதை லட்சக்கணக்கான வெள்ளையின மனங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "வெள்ளை" மாளிகை என்று மிகச் சரியாகத் தான் பெயரிட்டுள்ளனர். மார்டின் லூதர் கிங், மல்கம் எக்ஸ் போன்று நீதிக்காக பாடுபட்டவர்களுக்கு கிட்டியது போல, ஜனநாயக கட்சி வேட்பாளர் அந்த விதிக்குள் மாட்டாதது ஒரு அற்புதம் தான்.


பதவி விலகும் ஜனாதிபதி புஷ், $10.3 டிரில்லியன் கடன் சுமையை பொது மக்களின் முதுகின் மீது ஏற்றி விட்டு செல்கிறார். தனது எட்டு வருட பதவிக்காலத்தில், புஷ் இரட்டிப்பாக்கிய கடன் தொகையை கணக்கிடுவதாயின்; ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் ஒருவர், ஒரு நிமிடத்திற்கு நூறு டாலர் தாளாக எண்ணுவாராகில், வருடம் 300 நாட்களாக வேலை செய்தால், 715,000 வருடங்களுக்கு பின்னர் தான் முழுத் தொகையையும் எண்ணி முடிப்பார்.
தற்போது புஷ் நிர்வாகம் சோஷலிசத்திற்கு வழங்கும் பங்களிப்பு பற்றி நாம் அதிசயப்படலாம். ஆனால் நாம் அது போன்ற எந்த மாயைக்குள்ளும் சிக்கக்கூடாது. வங்கி நடைமுறைகள் யாவும் வழமைக்கு திரும்பிய பின்னர், ஏகாதிபத்தியவாதிகள் வங்கிகளை மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு விற்று விடுவார்கள்.


எந்தவொரு சமூக கட்டமைப்பிலும் முதலாளித்துவம் தன்னை மறுவார்ப்பு செய்து கொள்ளும், ஏனெனில் அது மனித அகத்தூண்டுதலிலும், தன்முனைப்பிலுமே கட்டப்பட்டுள்ளது. மனித சமூகம் இந்த முரண்பாட்டிலிருந்து விடுபடுவதைத் தவிர, தப்புவதற்கு வேறு வழி இல்லை. கியூபாவில் பங்குச் சந்தை இல்லை. சந்தேகத்திற்கிடமின்றி நாம் பகுத்தாய்ந்து, சோஷலிச வழியில் எமது அபிவிருத்திக்கான நிதியை செலவிடுவோம்.


தற்போதைய நெருக்கடியும், அமெரிக்க நிர்வாகம் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள கொண்டுவரும் இரக்கமற்ற அளவீடுகளும் ஏற்படுத்தப்போவது; பணவீக்கத்தையும், தேசிய நாணய மதிப்புக் குறைவையும், இன்னும் அதிக வருந்த வைக்கும் சந்தை இழப்புகளையும், ஏற்றுமதிக்கான குறைந்த விலையையும், சமமற்ற பரிமாற்றத்தையும் ஆகும். அதே நேரம், அவர்கள் மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வைப்பதுடன், மக்களிடையே அதிக விழிப்புணர்வையும், இன்னும் கிளர்ச்சியையும், புரட்சியையும் கூட உருவாக்குவார்கள்.
இந்த நெருக்கடி எவ்வாறு விருத்தியடையப் போகின்றது என்பதையும், இன்னும் சில நாட்களில் ஐக்கிய அமெரிக்காவில் என்ன நடக்கப் போகின்றது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

-Fidel Castro Ruz, October 11, 2008

(நன்றி, "கிரான்மா" வார இதழ், கியூபா )
THE LAW OF THE JUNGLE
(சுருக்கப்பட்ட தமிழாக்கம்)
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.


Burned Feeds for kalaiy

குறும்படம்: "வேலை தேடும் மேல் மட்ட நிர்வாகிகள்"

நிதி நெருக்கடியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ற அருமையான கற்பனையில் எழுந்த அழகான சலனப்படம். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதார பிரச்சினை காரணமாக, கம்பெனியின் மேல் மட்டத்தில் பதவிகளை அலங்கரிக்கும், முகாமையாளர்கள், கணக்காளர்கள், விற்பனை ஆலோசகர்கள், கணிப்பொறி நிபுணர்கள், ஆகியோர், சாதாரண கூலித் தொழிலாளர் போல வேலை தேடி அலையும் நிலை வந்தால் எப்படி இருக்கும்?
THE JOB






Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Burned Feeds for kalaiy

Monday, October 13, 2008

வரிப்பணத்தில் வங்கிக் கொள்ளையர் கொண்டாட்டம்


வங்கி நிர்வாகிகள் தான், உலகின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையர்கள் என்ற கூற்று நிரூபணமாகி வருகின்றது. Fortis என்ற பெல்ஜிய வங்கி சில நாட்களுக்கு முன்னர் தான் திவாலாகியது. தம்மிடம் பணம் இல்லை என்று சொல்லி அரசிடம் கையேந்தியதால், பெல்ஜிய அரசும் "பெருந்தன்மையுடன்" மக்களின் வரிப்பணத்தை கொடுத்து தேசியமயமாக்கியது. வங்கி அழிவில் இருந்து காப்பாற்றப்பட்ட பின்னர், அந்த வங்கி நிர்வாகிகள் செய்த முதல் வேலை: "ஆடம்பர கொண்டாட்டம்." Fortis (காப்புறுதி) நிறுவனம், தனது 50 க்கும் மேற்பட்ட முதலீட்டாளருக்கு அழைப்பு விடுத்து, மொனோகோவில் இருக்கும் ஆடம்பர ஐந்து நட்சத்திர விடுதியில் விருந்து கொடுத்தது. இதற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் யூரோக்கள் செலவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த விருந்தின் போது பரிமாறப்பட்ட உணவின் பெறுமதி, ஒரு ஆளுக்கு 300 யூரோக்கள். அழைப்பு விடுத்த விடுதியில் ஓரிரவு வாடகை ஒரு அறைக்கு ஆயிரம் யூரோக்கள்.

வங்கி நிர்வாகிகள் தமது கொண்டாத்ததிற்கு மொனோக்கொவை தெரிவு செய்தது தற்செயல் நிகழ்வல்ல. நீண்ட காலமாகவே பிரான்சின் தெற்கில் இருக்கும் மிகச்சிறிய சுதந்திர நாடான மொனோக்கோ, உலகெங்கும் இருந்து வரும் பணக்காரரின் புகலிடமாக திகழ்கின்றது. கடுமையான "வங்கி இரகசியம்"(கணக்கு வைத்திருப்பவர் பற்றிய விபரம் வெளியிடப்பட மாட்டாது) பேணப்படுவதாலும், வருமான வரி இல்லாத படியாலும், பல ஐரோப்பிய பணக்காரர்கள் தமது கறுப்புபணத்தை மொனோக்கோ வங்கிகளில் வைப்பில் இட்டு வருவது இரகசியமல்ல. அமெரிக்க-ஐரோப்பிய சினிமா நட்சத்திரங்கள், மற்றைய பிரபலங்கள் யாவரும் மொனோக்கோவில் வீடு வாங்கி, அயலவராக வாழ்ந்து வருகின்றனர். இனம் இனத்தோடு தானே சேரும்?

ஐரோப்பாவின் பெரிய வங்கிகள்(Fortis உட்பட) எல்லாம், மொனோக்கொவில் கிளைகளை வைத்திருக்கின்றன. இதனால் பல பணக்காரருக்கு தமது கறுப்புபணத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவது இலகுவாகின்றது. லாபம் என்ற பெயரில் தமது செல்வத்தை பெருக்கும் முதலாளிகள் மட்டுமல்ல, கொள்ளைக்காரர்கள், கிரிமனல்கள் யாவரும் மொனோக்கோ போன்ற நாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர். 7800 மொனோக்கோ பிரசைகள், 25000 உலகப் பணக்காரருடன் தமது வாழ்விடத்தை பகிர்ந்து கொண்டதன் காரணமாக, அந்நாட்டு மொத்த உள்ளூர் உற்பத்தி வருடத்திற்கு 900 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது போன்ற நாடுகளில், வருமான வரி அறவிடப்படா விட்டாலும், ஒரு நிறுவனம் ஸ்தாபிப்பதற்கான பதிவுப்பணம், உள்ளூர் சட்ட ஆலோசகரை நியமித்தல், மற்றும் அந்த நிறுவன முகாமையாளர்கள் உள்நாட்டில் செலவிடும் தொகை என்பனவற்றால் அதிக வருமானம் ஈட்டுகின்றன. ஐரோப்பிய முதலாளிகளும், செல்வந்தர்களும் பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படக்கூடிய வரிப்பணத்தை கட்டாது, இவ்வாறான வரியில்லா சொர்க்கபுரிகளில் புகலிடம் பெற்று ஏமாற்றுவதால், மொனோக்கோ வங்கிகள் தமது வாடிக்கையாளர் பற்றிய விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று, ஐரோப்பிய அரசுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

சமீபத்திய நிதி நெருக்கடி, அல்லது பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாக, வங்கி நிர்வாகிகள் உலகெங்கும் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றனர். வங்கிகளை நடத்தும் நிர்வாகிகள் தாம், உலகின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையர்கள் என்பது தற்போது உலகறிந்த இரகசியம். அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் மக் கைன், நெருக்கடிக்கு காரணம் வங்கி நிர்வாகிகளின் பேராசை என்று கூறி வருகிறார். ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் இதனை "சூதாட்டவிடுதி முதலாளித்துவம்" என்று வரையறுக்கின்றனர்.

ஐஸ்லாந்து கூட பணக்காரர் தமது கறுப்புபணத்தை பதுக்கும் சொர்க்கபுரியாக இருந்து, அண்மையில் அந்த தேசமே திவாலானது தெரிந்த விடயம். அங்கிருந்து பொதுமக்களின் பணத்தை எடுப்பதற்காக பிரிட்டிஷ் அரசு வேறு வழியின்றி ஐஸ்லாந்தை "பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் சேர்த்தது. இதே சட்டம் மொனோக்கோ மீதும் பயன்படுத்தப்பட்டு, "கருப்புபணமாக" ஒதுங்கியிருக்கும் மக்களின் பணம் மீட்கப் படுமாகில், அதுவே ஐரோப்பிய பொதுமக்களின் கொண்டாட்டமாக இருக்கும்.
______________________________________________________________
முன்னைய பதிவு:
பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து!
_______________________________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.


Burned Feeds for kalaiy

Saturday, October 11, 2008

கம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்

காலங்காலமாக ஒரு கட்டுக்கதை மக்களின் மனதில் திணிக்கப்பட்டுள்ளது. "கம்யூனிஸ்ட் நாட்டில் மதச் சுதந்திரம் கிடையாது", என்று இறை நம்பிக்கையுள்ள மக்களுக்கு பூச்சாண்டி காட்டுவது வழமை. இவ்வருடமும் "கியூபாவில் மனிதஉரிமைகள்" பற்றிய அமெரிக்க அறிக்கையில், அங்கே மதச்சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு இந்த அறிக்கை கூறும் காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.
1. தனியார் மதப் பாடசாலைகளை அமைக்க தடை.
2. எந்த ஒரு மத நிறுவனமும் நீதி அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும்.
3. சமய முறைப்படியான திருமணத்திற்கு முன்னர் பதிவுத் திருமணம் செய்திருக்க வேண்டும்.

கியூபாவின் கிறிஸ்தவ பாதிரிமார் இந்த அறிக்கையில் இருப்பதை, "கியூபாவில் உண்மைநிலையை அறியாது, தவறான தகவல்களை வைத்து" எழுதப்பட்டுள்ளதாக நிராகரித்துள்ளனர். அவர்கள் கூறுவதன் படி, மத நிறுவனங்களை நீதி அமைச்சில் செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் எதுவும் இல்லை. மேலும் தாங்களே திருமணம் முடிக்க காத்திருக்கும் சோடிகளை சட்டப்படி பதிவுத்திருமணமும் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துவதாகவும், இருப்பினும் சில பாமரர்கள் (நமது நாடுகளில் உள்ளது போல) சமயத்திருமணங்களை மட்டும் செய்து கொண்டு வாழ்வதாகவும் தெரிவித்தனர். அவர்கள் மேலும் குறிப்பிடும் போது, அமெரிக்காவில் நடைபெறும் கிறிஸ்தவ மகாநாடுகளுக்கு செல்ல, தமக்கு அமெரிக்க விசா வழங்கப்படுவதில்லை என்றும் குறை கூறினர்.

கியூபாவின் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் Cuban Council of Churches (CIC) என்ற அமைப்பு, அமெரிக்காவின் இந்த மனித உரிமைகள் சம்பந்தமான அறிக்கை, தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டிருப்பதாக கூறியுள்ளது. கியூபாவில் இதுவரை யாருமே மத வழிபாடு செய்வதில் இருந்து தடுக்கப்படவில்லை என்றும், மதகுருக்கள் தமது கடமையை செய்வதற்கு எந்த தடையுமில்லை என்றும் தெரிவித்தனர். இந்த அமைப்பின் பாதிரிமார் தலைநகர் ஹவானாவில் கூடி, கியூபாவின் நிலையை உண்மைக்கு மாறாக திரித்து கூறும் அமெரிக்க அறிக்கைக்கு எதிராக, மறுப்பறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். "நேர்மையான" சர்வதேச ஊடகங்களோ கியூபா அறிக்கையை இருட்டடிப்பு செய்து விட்டு, அமெரிக்க அறிக்கையை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவார்கள், என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.
கியூபாவில் கிறிஸ்தவ சமயத்தவர்கள் மட்டும் வாழவில்லை. ஆப்பிரிக்க வம்சாவளியினர் தமது மூதாதையரின் சமயத்தை இப்போதும் பின்பற்றுகின்றனர். Yoruba Cultural Association, Soka Gakkai Association என்பன அவர்களது மத நிறுவனங்கள். இவர்களை விட சிறிய அளவில் யூதர்களும், முஸ்லிம்களும் வாழ்கின்றனர். அவர்களும் பூரண சுதந்திரத்துடன் தமது மதங்களை பேணி வருகின்றனர். மேற்குறிப்பிட்ட கிறிஸ்தவர்களல்லாத மதங்களின் பிரதிநிதிகள் கூட அமெரிக்க அறிக்கையை கண்டித்துள்ளனர்.

மதச் சார்பற்ற கியூபா அரசியல் அமைப்பு சட்டமானது, "அனைத்து மதங்களும் சட்டத்திற்கு முன்னாள் சமம்", என்று கூறுகின்றது. "ஒவ்வொரு பிரசையும் தனக்கு பிடித்த மதத்தை பின்பற்றவோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மதங்களை பின்பற்றவோ, அல்லது ஒன்றிலிருந்து வேறொரு மதத்திற்கு மாறவோ, அல்லது எந்த மதத்திலும் சேராமல் இருக்கவோ உரிமை உள்ளது."- இவ்வாறு குறிப்பிடும் எட்டாம் இலக்க சட்டம், அரசும், மதங்களும் வேறுவேறாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்துகின்றது.
நீண்ட காலமாகவே பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில், "விடுதலை இறையியல்" என்ற கொள்கை அடிப்படையில், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய கத்தோலிக்க பாதிரிமாருக்கு கியூபா அடைக்கலம் கொடுத்து வந்தது. பாராளுமன்றத்திற்கு சிலவேளை கிறிஸ்தவ பாதிரிமாரும் சுயேச்சையாக தெரிவு செய்யப்படுவதுண்டு. கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்துவராக சேருபவர்களுக்கு மட்டுமே, எந்த மதத்தையும் சேர்ந்திருக்க கூட்டாது என்ற கட்டுப்பாடு உண்டு. ஆனால் அந்த கட்டுபாடு கட்சி அரசியலில் ஈடுபடாத சாதாரண மக்களுக்கு கிடையாது.
கியூபா புரட்சிக்கு பின்னர் ஒருபோதும் எந்த தேவாலயமும் பூட்டப்படவில்லை. மாறாக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது காரணமாக, பலர் தாமாகவே (விசேட தினங்கள் தவிர்ந்த பிற நாட்களில்) தேவாலயம் போவதை நிறுத்திக்கொண்டனர். மக்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், வாழ்க்கை கஷ்டங்களில் இருந்து விமோசனம் இல்லாத நேரம் தான் ஆலயம் செல்வது வழமை. நவீன உலகின் மேற்கத்திய-நாகரீக மோகம் காரணமாக பல இளைஞர்கள் தேவாலயங்களுக்கு போவதில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இளம்சமுதாயம் மத்தியில் மதநம்பிக்கை குறைவாக உள்ளது. அங்கெல்லாம் வழிபாட்டாளர்கள் வருவது பெருமளவு குறைந்து விட்டதால், பல தேவாலயங்களை கவனிப்பார் அற்று வெறுமையாக இருக்கின்றன. இதுவே கியூபாவில் அல்லது பிறிதொரு கம்யூனிச நாட்டில் நடந்தால் மட்டும், "மத சுதந்திரம் இல்லை", "மனித உரிமை இல்லை" என்று பிரச்சாரம் அவிழ்த்துவிடப்படும்.
_______________________________________________________________
_______________________________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.


Burned Feeds for kalaiy

பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து!

உலகில் அபிவிருத்தியடைந்த, பணக்கார நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்து என்ற தேசமே திவாலாகும் நிலையில் உள்ளது. அதேநேரம் பிரித்தானியா, நெதர்லாந்து போன்ற நாடுகள் ஐஸ்லாந்துடன் பொருளாதார யுத்தம் ஒன்றை தொடுத்துள்ளன. அதற்கு காரணம் இந்நாடுகளின் லட்சக்கணக்கான பிரசைகள் ஐஸ்லாந்து வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் தற்போது மாயமாக மறைந்து விட்டது தான்.அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச்சந்தை அதிர்ச்சி, இன்று பல்வேறு நாடுகளிலும் நடுக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.


அமெரிக்க, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஸ்கண்டிநேவிய தீவுநாடு, ஐஸ்லாந்து. எரிமலைகளையும், வெந்நீர் ஊற்றுகளையும், பனிப்பாறைகளையும், சூழவுள்ள கடலையும் தவிர வேறு எந்த இயற்கை வளமுமற்ற ஒரு சிறிய நாடு, 20 ம் நூற்றாண்டில் ஒரு பணக்கார நாடாக முடிந்ததென்றால், அதற்குகாரணம் Kaupthing, Landsbanki, Glitnir ஆகிய வங்கிகளின் அபார வளர்ச்சி ஆகும். இந்த மூன்று பெரிய வங்கிகளும், கடந்த சில வாரங்களாக நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகி விட்டதால், அரசாங்கத்தால் தேசியமயப்படுத்தப்பட்டு விட்டன. நெருக்கடி காரணமாக வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள அதிகரித்த கடன், ஐஸ்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் மிஞ்சியுள்ளது. பங்குச்சந்தை மூடப்பட்டு, வர்த்தகம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து தேசிய நாணயமான குரோனா பெறுமதி வீழ்ச்சியடைந்து(1 யூரோ =340 குரோனா) வருவதால், இறக்குமதிகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன.

ஐஸ்லாந்து ஒரு ஐரோப்பிய யூனியனில் உறுப்புரிமை கொண்ட நாடல்ல. இது நெருக்கடிக்கு முன்னர் ஒரு நல்ல விடயமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் சேமிப்பு வைப்புக்கு வட்டியாக, ஐரோப்பிய மத்திய வங்கி நியமித்த 5% என்ற எல்லையை ஒன்றிய அங்கத்துவ நாடுகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. ஐஸ்லாந்து அதனை பயன்படுத்தி கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்தது. Landsbanki என்ற வங்கி, தனது வங்கியில் வைக்கப்படும் வெளிநாட்டு சேமிப்பு கணக்கிற்கு 5.25% வட்டி வழங்குவதாக அறிவித்தது. வெளிநாட்டவர்களின் சேமிப்பு திட்டத்திற்கு "Icesave" என்று பெயரிட்டு, இன்டர்நெட் மூலமாக கணக்கை தொடங்கவும், பணம் அனுப்பவும் வழி வகுத்தது. அதிக வட்டி கொடுக்கிறார்கள் என்பதால், லட்சக்கணாக்கான வாடிக்கையாளர்கள் Icesave கணக்கை திறந்தனர். அனேகமாக கோடிக்கணக்கான யூரோக்கள், இவ்வாறு பிரித்தானியா, நெதர்லாந்து சேமிப்பாளரிடமிருந்து ஐஸ்லாந்து போய் சேர்ந்தது. ஐரோப்பிய நிதி சட்டங்களில் இருந்து தப்புவதற்காக பல பணக்காரர்கள், ஐஸ்லாந்து வங்கிகளில் தமது கறுப்புபணத்தை போட்டனர். தற்போது Landsbanki யும் திவாலாகி விட்டதால், ஐஸ்லாந்து அரசாங்கம் Icesave பணம் குறித்து எந்தக் கருத்தையும் சொல்ல மறுக்கிறது. அனேகமாக அந்தப்பணம் காற்றில் கரைந்து விட்டிருக்கலாம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டவர்கள், இன்று அனைத்தையும் இழந்து கையைப்பிசைகிறார்கள்.

சாதாரண மக்களின் சேமிப்பு மட்டுமல்ல, பணக்காரரின் கருப்புபணமும் ஐஸ்லாந்தில் மாட்டிக்கொண்டுள்ளதால், பிரித்தானிய, நெதர்லாந்து அரசாங்கங்கள் தலையிட்டு ஐஸ்லாந்து அரசுடன் கதைத்து பணத்தை மீளப்பெற முயன்றன. ஆனால் ஒரு சதம் கூட இதுவரை திரும்பக்கிடைக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த பிரிட்டிஷ் பிரதமர் பிரௌன், ஐஸ்லாந்து நாட்டை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளார். அதன்படி பிரித்தானியாவில் ஐஸ்லாந்துக்கு சொந்தமான சொத்துகள், பணம் யாவும் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது. 2001 ம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் முதன்முறையாக ஒரு ஐரோப்பிய நாட்டிற்கெதிராக பயன்படுத்தப்படுகின்றது. ஐஸ்லாந்து தலைநகர் ரைக்யாவிக், தமக்கெதிரான பயங்கரவாத தடை சட்டம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, எதிர்காலத்தில் ஐஸ்லாந்து தனது தேசிய நாணயமான குறோனாவை கைவிட்டு விட்டு, யூரோவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படியான உடன்பாடுகள் எதுவும் ஏற்படின்,ஐரோப்பிய யூனியனின் சட்டதிட்டங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். அது தனித்துவம் பேண விரும்பும், ஆளும் கட்சியின் அரசியல் தற்கொலையாக அமையும். ஏனெனில் ஆழ்கடல் மீன்பிடி உரிமை குறித்து, ஏற்கனவே ஐரோப்பாவுடனான சர்ச்சை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. மீன்பிடித்துறை ஐஸ்லாந்தின் முக்கிய வருவாய் ஈட்டித்தரும் முதன்மை தேசிய உற்பத்தியாகும்.

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Burned Feeds for kalaiy