Showing posts with label யேமன். Show all posts
Showing posts with label யேமன். Show all posts

Friday, October 10, 2014

யேமன் குண்டுவெடிப்பு : அமெரிக்காவுக்கு ஆபத்தில் உதவும் அல்கைதா நண்பன்


அல்கைதாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் அப்படி என்ன நெருக்கமோ தெரியவில்லை. அடிக்கடி அமெரிக்காவுக்கு, ஆபத்தில் உதவும் நல்ல நண்பனாக அல்கைதா இருக்கின்றது. அதற்கு இன்னொரு உதாரணம், சானா நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பும், அதிலே ஐம்பதுக்கும் அதிகமான பொதுமக்கள் பலியான சம்பவமும். அண்மையில் யேமனில் நடந்து வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்காவுக்கு அல்கைதாவின் உதவி என்றென்றும் தேவைப்படும் என்பதை உணர்த்தி நிற்கின்றன.

யேமன் நாட்டில், கடந்த சில மாதங்களாக, ஷியா இஸ்லாமிய சமூகத்தின் விடுதலைக்காக போராடும் ஹூதி கிளர்ச்சிப் படைகள், பெருமளவு பகுதிகளை பிடித்துள்ளன. வட யேமனில் வாழும் செய்யிடி இஸ்லாமிய பிரிவினரின் இயக்கமான "அன்சர் அல்லா" (அல்லாவின் உதவியாளர்கள்), வெளிநாடுகளிலும், பொது மக்களாலும் ஹூதி கிளர்ச்சிப் படை என்று அழைக்கப் படுகின்றது. அதற்குக் காரணம், இறைதூதர் முகமது நபியின் வழித்தோன்றல்கள் என்று கூறிக்கொள்ளும் ஹூதி குலத்தை சேர்ந்தவர்களே, அந்த இயக்கத்திற்கு தலைமை தாங்குகின்றனர். செய்யிடி இஸ்லாமியர்கள், முன்னர் பல நூறாண்டுகளாக யேமனை ஆண்டு வந்தனர்.

உலகம் முழுவதும், சிரியா, ஈராக்கில் நடக்கும் யுத்தங்களை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஹூதி கிளர்ச்சிப் படையினர், தலைநகர் சானா வரையில் முன்னேறி வந்து விட்டனர். வெளிநாட்டு ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தா விட்டாலும், யேமனில் நடக்கும் அரசியல் மாற்றங்களை, அமெரிக்கா பதற்றத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. ஓர் அமெரிக்க எதிர்ப்பு இயக்கம், யேமனின் ஆட்சியை கைப்பற்றுவதா? கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தனது ஆதிக்கத்தை வைத்திருக்க விரும்பும் அமெரிக்கா அதனை எவ்வாறு அனுமதிக்கும்? அமெரிக்காவுக்கு அது ஒரு கெட்ட கனவாகவே இருக்கும்.

அமெரிக்கா திடுக்கிட்டு அலறித் துடித்தமைக்கு காரணம் இருக்கின்றது. கடந்த வாரம் தலைநகர் சானா, ஹூதி கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து, சானாவில் இருக்கும் அரசு அலுவலகங்கள் எல்லாம் ஹூதி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. நகரமெங்கும் ஹூதி போராளிகள் மட்டுமே ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர். யேமன் இராணுவம் பெயருக்குக் கூட அங்கே இல்லை. அது மட்டுமல்ல, நகரில் எல்லா இடங்களிலும், அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களைக் கொண்ட சுவரொட்டிகள் முளைத்தன. "அமெரிக்கா ஒழிக! இஸ்ரேல் ஒழிக!" போன்ற வாசகங்கள் காணப்பட்டன.

யேமனில் இன்னொரு ஈரான் உருவாகிக் கொண்டிருப்பதாக நினைத்து அமெரிக்கா அஞ்சியது. அதனால் ஐ.நா. வை அனுப்பி மத்தியஸ்தம் செய்து வைத்தது. ஐ.நா. ஆலோசனையின் படி, முன்பிருந்த யேமன் அரசாங்கம், ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்தது. முந்திய அரசுப் பிரதிநிதிகள், அன்சார் அல்லா இயக்கத்துடன் அரசு அதிகாரத்தை பங்கிட்டுக் கொண்டனர்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள், யேமன் அரசில் பங்கெடுப்பது, பலருக்குப் பிடிக்கவில்லை. ஷியா கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவி வருவதால், யேமன் ஈரானின் செல்வாக்கு மண்டலத்திற்குள் வந்து விடும் என்று அஞ்சினார்கள். குறிப்பாக அமெரிக்காவும், அல்கைதாவும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. இருவருக்கும் பொது எதிரி ஈரான். அதனால், அல்கைதாவும், அமெரிக்காவும் ஒன்று சேர்ந்ததில் வியப்பில்லை.

அல்கைதா முழுக்க முழுக்க சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த, ஒரு சில மதவெறியர்களின் இயக்கமாக உள்ளது. யேமனில் அல்கைதா என்பது வெளிநாடுகளுக்கு தெரியப் படுத்துவதற்கான பெயர் மட்டுமே. உள்ளூர் மக்கள் அவர்களை "சலாபி தீவிரவாதிகள்" என்று அழைக்கின்றனர். அனேகமாக எல்லா அரபு நாடுகளிலும் நடக்கும் சமூக விடுதலைப் போராட்டத்தை, மதவாத கலவரங்களாக திசைதிருப்பி விடுவது தான், அல்கைதாவின் குறிக்கோள். அந்த விடயத்தில், அமெரிக்காவுக்கும், அல்கைதாவுக்கும் இடையில் புரிந்துணர்வு நிலவுகின்றது.

கடந்த சில நாட்களாக, ஐ.நா. அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட சமாதான ஒப்பந்தத்தை குழப்புவதற்கு, அமெரிக்கா சதி செய்து வந்தது. அந்த சதியின் விளைவாக Ahmed Awad bin Mubarak பிரதமராக நியமிக்கப் பட்டார். ஆனால், ஹூதி கிளர்ச்சியாளர்கள், அந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். பின் முபாரக் ஓர் அமெரிக்கக் கைக்கூலி என்பதால், அந்நிய தலையீடு அதிகரிக்கும் என்ற காரணத்தைக் காட்டி நிராகரித்து வந்தது.

தலைநகர் சானாவில், பின் முபாரக்கிற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதனால், (அமெரிக்காவால்) பிரதமராக நியமிக்கப்பட்ட பின் முபாரக் பதவி விலகி உள்ளார். அந்த சம்பவம் நடந்து ஒரு மணித்தியாலம் கூட ஆகவில்லை. சானாவில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நடுவில் நுளைந்த அல்கைதா தற்கொலைக் கொலையாளி, ஒரு கார்க் குண்டை வெடிக்க வைத்துள்ளார். அந்தக் குண்டுவெடிப்பில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கொல்லப் பட்டனர். யேமனில் தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது. அனேகமாக, சிரியாவில் நடப்பதைப் போன்று, யேமனில் ஒரு உள்நாட்டுப் போரை கொண்டு வருவது, அமெரிக்காவினதும், அல்கைதாவினதும் நோக்கமாக இருக்கலாம்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1.சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்
2.யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்
3.அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்
4.வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கிறது!
5.ஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது

Sunday, February 21, 2010

ஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது

["அரபிக்கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்" தொடரின் இறுதிப் பகுதி.]
29 டிசம்பர் 2009 ல், கிரேக்க எண்ணைக் கப்பல் ஒன்றும், பிரிட்டிஷ் இரசாயனக் கப்பல் ஒன்றும், சோமாலியக் கடற்கொள்ளையரால் கைப்பற்றப்பட்டன. இது குறித்து ரஷ்ய RAI Novosti செய்திச் சேவையும், பிரிட்டிஷ் பத்திரிகையான The Times சும் அறிவித்திருந்தன.
2009 ம் ஆண்டு, சோமாலியாவுக்கும், யேமனுக்கும் இடையிலான கடற்பரப்பில் 174 கடற்கொள்ளை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 42 தாக்குதல்கள் எண்ணெய்க் கப்பல்களை இலக்கு வைத்து நடந்துள்ளன. 35 கப்பல்கள் கடத்திச் செல்லப்பட்டன. சர்வதேச நாடுகளின் கடற்படைகளின் ரோந்துக்கு நடுவில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடற்கொள்ளையை தடுப்பதற்காக, ஏடன் வளைகுடாவில் சீனா நிரந்தர கடற்படைத் தளம் அமைக்க விரும்பியது. சீன கடற்படைத் தளபதி யின் சூ இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். (பார்க்க:China To Establish A Naval Base Around Somalia) நிச்சயமாக, இந்த யோசனையை மேற்குலக நாடுகள் விரும்பவில்லை. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில், சீன, இந்திய கடற்படைக் கப்பல்கள், கடற்கொள்ளைக்காரர்களை கடலில் வைத்து விரட்டி அடித்துள்ளன. இந்த சம்பவங்கள் யாவும், அந் நாடுகளின் இறையாண்மைக்குட்பட்ட கடல் எல்லையில் இருந்து வெகு தூரத்தில் இடம்பெற்றுள்ளன.

1995 ம் ஆண்டிலிருந்து, இலங்கையில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படையினர், கடற்படையினரின் கப்பல்களை வெடிமருந்து நிரப்பிய படகால் மோதி நாசப்படுத்தினர். இலங்கையின் வட-கிழக்கு கரையோரம், குறிப்பாக திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் சில யுத்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. 2000 ம் ஆண்டு, யேமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்ற USS Cole யுத்தக் கப்பலை, அல்கைதாவின் தற்கொலைப் படகு தாக்கி சேதப்படுத்தியது. 2002 ம் ஆண்டுக்குப் பின்னரான சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில், புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வனின் கூற்று ஒன்று சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றது. ("எமது தற்கொலைத் தாக்குதல் செய்முறைகளை அல்கைதா பின்பற்றியது..." ஏடன் USS Cole தாக்குதலை சுட்டிக் காட்டி தமிழ்ச்செல்வன் வழங்கிய நேர்காணல்.) (Thamilchelvan, The “Smiling” Face of LTTE) ஈழத்தில் இடி முழங்கினால், யேமனில் மழை பெய்தது!

உலகில் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படாத வேறு வேறு நாடுகளில் நடைபெற்ற ஒரே மாதிரியான சம்பவங்களை சர்வதேச அரசியல் முடிச்சுப் போட்டது. ஏடனிலும், திருகோணமலையிலும் நடைபெற்ற தாக்குதல் அமெரிக்காவிலும், சீனாவிலும் எதிரொலித்தது. இரு நாடுகளினதும் கொள்கை வகுப்பாளர்கள், "சர்வதேச கடற் போக்குவரத்து எதிர்நோக்கும் அபாயம்" குறித்து அறிக்கைகளை தயாரித்தார்கள். மிக முக்கியமாக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி ஏற்றிச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டது. அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் விட, வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவும், இந்தியாவும் நுகரும் எண்ணெயின் அளவு அதிகரித்துச் செல்கின்றது. வளைகுடா நாடுகளில் இருந்து தென் சீனக் கடல் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் தவிர்க்கவியலாது இலங்கையை சுற்றியே செல்ல வேண்டும். இலங்கை, அம்பாந்தோட்டையில் சீனா கட்டி வரும் துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் சீனக் கடற்படை அங்கே தளமமைக்கவும் சாத்தியமுண்டு. (China's Sri Lanka port raises concern)

சீனா, "முத்து மாலை" திட்டத்தின் கீழ், பர்மா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் கடற்போக்குவரத்து பாதுகாப்பு தளங்களை அமைக்க ஏற்பாடுகளை செய்து விட்டது. ஆனால் இந்து சமுத்திரத்தின் மேற்குக் கரையில் அமைந்திருக்கும் அரபி நாடுகளில் சீனா செல்வாக்கு செலுத்துவது சாத்தியமில்லை. ஈரான், சூடான் ஆகிய நாடுகள் சீனாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நட்பு நாடுகள். இருப்பினும் அரபிக்கடல் நாடுகள் யாவும் அமெரிக்க சார்பானவையாக இருப்பது சிக்கலை உருவாக்கி விட்டுள்ளது. வளைகுடா நாடுகள் விற்கும் எண்ணெய் குறுகலான ஹொர்முஸ் (Hormuz) ஜலசந்தியைக் கடந்து வர வேண்டும். ஒமானுக்கு சொந்தமான ஹொர்முஸ் முனை அமெரிக்காவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ளது.

இதற்கு மாற்று வழி ஒன்றுள்ளது. மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவில் இருந்து வாங்கும் எண்ணெயும், சீனாவின் அரபுத் தோழன் சூடான் வழங்கும் எண்ணெயும், செங்கடல் வழியாக கொண்டு வரப்பட முடியும். ஆனால் எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் யாவும் பாப் எல் மன்டப் (Bab el Mandab) என்ற குறுகலான ஜலசந்தியை தாண்டி வர வேண்டும். யேமனுக்கும், ஜிபூத்திக்கும் நடுவில் உள்ள, 18 மைல் நீளமான கடல் பாதை 'பாப் எல் மன்டப்'. இதன் அருகில் தான் சோமாலியா அமைந்துள்ளது. இதனால் சோமாலியா கடற்கொள்ளையரால் தாக்கப்படும் ஆபத்து அதிகம். குட்டி நாடான ஜிபூத்தியின் குடிமக்களும் சோமாலியர் தான். முன்னாள் பிரெஞ்சுக் காலனியான ஜிபூத்தியில், நிரந்தரமான பிரெஞ்சு இராணுவ தளம் உண்டு. அங்குள்ள பிரெஞ்சுப் படையினரின் வேலை, பாப் அல் மன்டப் பாதையால் செல்லும் எண்ணெய்க் கப்பல்களை கண்காணிப்பது.

யேமனில் அல்கைதாவின் பிரசன்னத்தை மிகைப்படுத்திக் காட்டுவதன் மூலம், அந்த நாட்டில் நிரந்தர இராணுவ தளம் அமைக்க அமெரிக்கா விரும்புகின்றது. நிதி நெருக்கடியால் அமெரிக்கப் பொருளாதாரம் தள்ளாடிய போதிலும், அமெரிக்க இராணுவம் இன்றும் உலகில் பலம் வாய்ந்ததாகவே விளங்குகின்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல் மன்டப் ஜலசந்தியை அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் பல பொருளாதார நன்மைகள் உள்ளன. சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் மேலாண்மையை நிலைநாட்டவும் இது உதவும். யேமனில் அமெரிக்க தலையீட்டினால், எதிர்காலத்தில் உலகில் ஏற்படப் போகும் மாற்றங்கள் என்ன?

"முத்து மாலை" திட்டத்தின் கீழ் இந்து சமுத்திரத்தில் தளங்களை அமைக்க விரும்பும் சீனாவின் நோக்கம் தடைப்படும். உலகில் அதிக எரிபொருள் நுகரும் நாடான சீனா, அமெரிக்க தயவில் தங்கியிருக்க வேண்டும். சூடானும், சவூதி அரேபியாவும் அமெரிக்காவை புறக்கணித்து விட்டு சீனாவுக்கு எண்ணெய் விற்க முடியாது. பாப் எல் மன்டப் ஜலசந்தியை மூடி விட்டால், எந்தவொரு கப்பலும் அரபிக்கடலை அடைய முடியாது. மறுபக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை.

உலகின் அதிகளவு எண்ணையை ஏற்றுமதி செய்யும் குவைத், அபுதாபி, ஈராக் எல்லாம் பாரசீக வளைகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளன. இந்த நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்கள், ஹொர்முஸ் முனையை கடந்து, பாப் எல் மன்டப் ஊடாக சுயஸ் கால்வாயை அடைய வேண்டும். அந்தக் கப்பல்கள் ஐரோப்பாவிற்கான பயணத்தை சுயஸ் கால்வாய் ஊடாக தொடர வேண்டும். ஒரு வேளை, "யேமன் அல்கைதா பிரச்சினை" காரணமாக பாப் எல் மன்டப் பாதை மூடப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அப்படியாயின், அனைத்து எண்ணெய்க் கப்பல்களும் 6000 மைல் பயணம் செய்து, ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றியே செல்ல வேண்டும்.

யேமனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மட்டும் அமெரிக்காவின் தலையீட்டுக்கு காரணமல்ல. முன்னொரு காலத்தில் கம்யூனிச நாடாக இருந்த தென் யேமனின் ஏடன் நகரில் சோவியத் படைத் தளம் ஒன்று இருந்தது. இன்றைய ரஷ்யாவின் "புட்டின்/மெட்வெடேவ் நிர்வாகம்" பழைய வெளிநாட்டு தளங்களை புதுப்பிக்க விரும்புகின்றது. சிரியாவில் மீண்டும் ரஷ்ய இராணுவ தளம் வரும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஏடனில் தளம் அமைப்பது தொடர்பாக, ரஷ்யா யேமன் அரசை கேட்டிருக்க வாய்ப்புண்டு. இதற்கிடையே அமெரிக்கா முந்திக் கொள்ள நினைத்திருக்கலாம்.

மேலும் யேமனில் தற்போது பாவனையில் உள்ளதை விட, இன்னும் அதிகளவு எண்ணைப் படுகைகள் அகழப்படாமல் உள்ளன. Total போன்ற பன்னாட்டு எண்ணெய்க் கம்பனிகள் மசினா, ஷப்வா ஆகிய இடங்களில் எண்ணை காணப்படுவதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளன. எண்ணைக் கம்பனிகளுக்கு பாதுகாப்புக்காக அமெரிக்க இராணுவம் யேமனில் நிலை கொள்ளலாம். வருங்காலத்தில் யேமன் மண்ணின் மைந்தர்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து போரிடலாம். ஆனால் அதையெல்லாம் "அல்கைதா பயங்கரவாதம்" என்ற தலைப்பின் கீழ் செய்தி வெளியிட, சர்வதேச ஊடகங்கள் காத்திருக்கின்றன.

(முற்றும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

மேலதிக தகவல்களுக்கு:

Yemen and The Militarization of Strategic Waterways

Friday, February 19, 2010

வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கிறது!

["அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்" - தொடரின் இரண்டாம் பகுதி]
யேமன் நாட்டின் தென் பகுதி இயற்கை வளம் நிறைந்தது. சனத்தொகை அடர்த்தியும் மிகக்குறைவு. இருப்பினும் தென்னகத்து மக்களுக்கு ஒரு பெருங் குறை இருந்தது. "வடக்கு வளர்கிறது. தெற்கு தேய்கிறது." போன்ற கோஷமெல்லாம் அங்கே பிரபலம். சிலர் இதனை பிராந்தியவாதம் என அழைக்கலாம். எனினும் அவர்கள் தமது நலன்கள் குறித்து கவலைப்படுவது தவறாகத் தெரியவில்லை. எண்ணெய்க் கிணறுகள் தெற்கில் இருந்தன. எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் வருமானம் நேரே வடக்கே சானாவில் இருக்கும் அரச கஜானாவிற்கு சென்றது. தலைநகர் சானாவின் நிர்வாகம், சாலே என்ற சர்வாதிகாரியின் கைக்குள் இருக்கிறது. ஊழல் குறித்து பிறிதாக பாடம் எடுக்கத் தேவையில்லை.

பொறுத்துப் பார்த்து, வெறுத்துப் போன தென்னக மக்கள் பொங்கி எழுந்தார்கள். அரசுக்கெதிரான தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்கள் பெருகின. சில ஊர்வலங்கள், பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால் கலைக்கப்பட்டன. அரச அடக்குமுறைக்கு சிலர் பலியானதாகவும் தகவல். இருப்பினும் இந்த தகவல் எதுவும் சர்வதேச ஊடகங்களின் காதுகளை எட்டவில்லை. செய்தி அவர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால் எப்படி அதை வெளியிடுவது? "ஒரு அரபு-இஸ்லாமிய நாடென்றால், அங்கே அல்கைதா பிரச்சினை மட்டுமே இருக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறோம். இப்போது யேமன் மக்கள் பொருளாதார பிரச்சினைகளுக்காக போராடுகிறார்கள் என்று சொன்னால் யார் நம்புவார்கள்?"

தென் யேமெனின் முக்கிய நகரான எடெனில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் அல் பத்லி (Al Fadhli) போன்ற அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டமை, அரசின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. பிரபல ஜிகாத் போராளியான அல் பத்லி முன்னர் அரச ஆதரவு கூலிப்படை ஒன்றை தலைமை தாங்கியவர். ஜனாதிபதி சாலேக்கு மிக நெருக்கமானவர். முன்னர் தென் பிராந்திய கிளர்ச்சியை அடக்குவதில் முன் நின்றவர். அப்படிப்பட்ட ஒருவர் தற்போது அரசை விட்டு விலகி, எதிரணியான தென்னக இயக்கத்தில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு.
தனக்கு நாடளாவிய ஜிகாத் போராளிகளுடன் தொடர்பு இருந்த போதிலும், அல்கைதாவுக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை எனக் கூறியுள்ளார். பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அல் பத்லி: "தென்னகப் பகுதிகள் வடக்கத்தயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தெற்கு யேமேனின் சுதந்திரமே உயிர்மூச்சு." என்றெல்லாம் பிரதேசவாதிகளின் மொழியில் பேசியுள்ளார். என்ன அதிசயம். இந்த உரைக்கு அடுத்த சில தினங்களில், அல் கைதா தென்னக மக்களின் உரிமைப் போருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

1990 ம் ஆண்டு வரை, உலகத்தில் இரண்டு 'யேமன்' கள் இருந்தன. வடக்கே இஸ்லாமிய - முதலாளித்துவ "யேமன் அரபுக் குடியரசு". தெற்கே மதச்சார்பற்ற - கம்யூனிச "யேமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு". இரண்டுக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். அரபு தேசியவாதம், இஸ்லாமிய பழமைவாதம், அரை-நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ பொருளாதாரம் என்பன, யேமன் அரபுக் குடியரசின் கொள்கைகளாக இருந்தன. அங்கே சனத்தொகை பெருக்கம் அதிகம். அதே போல கல்வியறிவற்றவர்களின் தொகையும் அதிகம்.

இதற்கு மாறாக தென் யேமன் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் வளர்ச்சியடைந்த பிரதேசமாக இருந்தது. நிலப்பரப்பால் பெரிதானாலும், சனத்தொகை மிகக் குறைவு. காலனித்துவ கல்வி, உலகளாவிய சிந்தனை கொண்ட நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி இருந்தது. அதுவே பின்னர் மார்க்சிய சித்தாந்தம் பரவ காரணமாயிற்று. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம் தென் யேமெனில் தான் வீறு கொண்டு எழுந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் கம்யூனிசக் கட்சி ஆட்சிக்கு வந்தது. சோவியத் யூனியனின் உதவியுடன் மார்க்சிச-லெனினிச அரசை நிறுவியது. கம்யூனிஸ்ட்கள் என்பதால் மக்கள் மசூதிக்கு செல்வதை தடை செய்யவில்லை. ஆனால் மசூதிகளை கட்டுவதை விட, பாடசாலைகளை கட்டுவதில் ஆர்வம் காட்டினர். இதனால் எழுத்தறிவு பெற்றோர் தொகை அதிகரித்தது. 1990 ம் ஆண்டு, சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், அந்நிய நாட்டு கடன்கள் வருவது நின்றது. சர்வதேச வர்த்தகம் தடைப்பட்டது. தவிர்க்கவியலாது, ஒன்றிணைந்த யேமன் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

1990 ல் ஒன்றிணைந்த யேமன் குடியரசு ஜனாதிபதியாக, வட யேமன் அரபுக் குடியரசின் சர்வாதிகாரி சாலே தெரிவானார். தென் யேமன் கம்யூனிசக் கட்சி, சோஷலிசக் கட்சி என பெயர் மாற்றம் செய்து கொண்டு, ''சானா"வை தலைநகரமாகக் கொண்ட பாராளுமன்றத்தில் அமர்ந்தது. ஒன்றிணைந்த யேமன் குறித்த எதிர்பார்ப்புகள் யாவும் ஒரு சில மாதங்களிலேயே தவிடுபொடியாயின. 1978 ம் ஆண்டில் இருந்து வட- யேமனை இரும்புக்கரம் கொண்டு ஆண்டு வரும் சாலே என்ற சர்வாதிகாரியின் அதிகாரம், தற்போது தெற்கு வரை வியாபித்தது. சாலேயின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பதவிகள், சலுகைகள், மேலும் அதிகரித்தனவே தவிரக் குறையவில்லை. தென்னகத்தை சேர்ந்த முன்னாள் அதிகார வர்க்கம் (கம்யூனிசக் கட்சியை சேர்ந்தவர்கள்), வெறும் பார்வையாளர் நிலைக்கு தள்ளப்பட்டது.

யேமன் நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் தெற்கே ஏடன் நகரில் அமைந்திருந்தது. அதை விட, எண்ணெய்க் கிணறுகள் அனைத்தும் ஏடன் வளைகுடாப் பகுதிகளிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு துறைகளும் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் பொக்கிஷங்கள். யேமன் பொருளாதாரத்தில் பெருமளவு பங்களிப்பை ஆற்றி வருகின்றன. ஆனால் ஒன்றிணைப்பின் பின்னர், அனைத்து வருமானமும் வடக்கே உள்ள தலைநகர் சானாவை நோக்கி திசை திருப்பப்பட்டன. ஒப்பந்தத்தில் வாக்களித்தபடி, தென்னக பிரதேசங்களின் அபிவிருத்திக்கு செலவிடப்படவில்லை. வடக்கு - தெற்கு பிரச்சினை முற்றி, வன்முறையில் முடிந்தது. தெற்கு யேமன் மீண்டும் சுதந்திரப் பிரகடனம் செய்தது. வடக்கத்திய இராணுவம் தெற்கிற்கு படையெடுத்து சென்றது. கடுமையான யுத்தத்தின் பின்னர், தென்னக கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். வட யேமன் இராணுவத்திற்கு சவூதி அரேபியாவும், அமெரிக்காவும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தன. முன்னாள் ஆப்கான் ஜிகாத் வீரர்களும் கூலிப்படையாக செயற்பட்டனர்.

அரசியலில் எதுவும் நிலையானதல்ல. நேற்றைய பகைவர்கள் இன்று நண்பர்கள். நேற்றைய நண்பர்கள் இன்று எதிரிகள். அன்று ஜிகாத் வீரர்கள், யேமன் அரசுடன் கூட்டுச் சேர்ந்து, தென்னக பிரிவினைவாதிகளை எதிர்த்து போரிட்டார்கள். (பிராந்தியத்தின் பொருளாதார நலன் குறித்து பேசுவது இஸ்லாத்தை பலவீனப்படுத்தி விடுமாம்.) இன்று அல் பத்லி தலைமையிலான ஜிகாத் வீரர்கள், தென்னக பிரிவினைவாதிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். இஸ்லாமியவாதிகள் இடதுசாரிகளாகி விட்டதால் இந்த கொள்கை மாற்றம் ஏற்படவில்லை. ஆட்சியில் இருக்கும் சாலே, தனது பகைவர்களை தானே அதிகரித்துக் கொண்டிருக்கிறார். வடக்கே ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் போர். தெற்கே சுயநிர்ணைய உரிமை கோரும் சோஷலிஸ்ட்களின் நெருக்கடி. இவர்களுக்கு நடுவில் அல்கைதா என்ற பெயரைக் காட்டியே பயமுறுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகள். சாலேயின் அரசு, மும்முனைப் போரை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஓடோடி வந்து முண்டு கொடுத்திராவிட்டால், சாலேயும் எப்போதோ சதாமின் வழியில் சமாதியாகி இருப்பார்.

இதற்கிடையே யேமனின் அயல்நாடான சோமாலியாவும் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சோமாலியப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் (Supreme Islamic Council of Somalia ), யேமன் சகோதரர்களுக்கு உதவப் போவதாக தெரிவித்தது. ஏற்கனவே சோமாலியா அகதிகளுக்கு யேமன் புகலிடம் அளித்துள்ளது. தற்போது இந்த அகதிகளில் எத்தனை பேர் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று தெரியாமல், அமெரிக்காவும், யேமனும் முழிக்கின்றன. ஜனவரி மாதம், சோமாலியாவின் ஜனாதிபதி ஷேக் ஷெரிப், யேமன் ஜனாதிபதி சாலேயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனது நாட்டில் அல்கைதாவின் (அல்லது இஸ்லாமியத் தீவிரவாதிகளின்) நடமாட்டம் குறித்து உளவறிந்து அறிவிப்பதாக உறுதியளித்தார். சோமாலியா ஜனாதிபதியின் அதிகாரம், "மொகாடிஷு விமான நிலைய சுற்றுவட்டாரத்தில் மட்டுமே செல்லுபடியாகும். இப்படியானவர்கள் தான் சாலேக்கு நண்பர்களாக வாய்த்திருக்கிறார்கள்.

யேமனுக்கு அருகில் சோமாலியக் கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது. கடற்கொள்ளையர்கள், உலகில் மிகவும் வறுமையான, அரச நிர்வாகமற்ற சோமாலியாவை சேர்ந்தவர்கள். சிறு குழுக்களாக இயங்கும் சோமாலியா கடற்கொள்ளையர்கள், பிரமாண்டமான எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களை கடத்திச் சென்றிருக்கிறார்கள். உலகமே இந்த செய்திகளை 'ஆ' என்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தது. சுவாரஸ்யமாக, "நைஜீரிய அல்கைதா தீவிரவாதி" அமெரிக்க விமானத்தில் குண்டு வைக்க முயற்சித்த, அதே டிசம்பர் மாதம் இப்படியான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஒரு சிறு ஆயுதமேந்திய குழுவால், பென்னம்பெரிய கப்பல்களை எப்படிக் கடத்த முடிகின்றது? கடற்கொள்ளையர் கைகளில் நவீன ஆயுதங்கள் எப்படி வந்தன? சோமாலியாக் கடற்கொள்ளையருக்கும், யேமன் நாட்டு அரசியல் குழப்பங்களுக்கும் இடையில் என்ன தொடர்பு? யேமன், சோமாலியா ஆகிய ஏழை நாடுகள் மீது, சர்வதேச சமூகத்திற்கு ஏன் அவ்வளவு அக்கறை?

(தொடரும்)

இந்தத் தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:

_____________________________________________________________________
மேலதிக தகவல்களுக்கு:

Fault line that allows al-Qa'ida to flourish in Yemen

Free Aden,Towards The Liberation of South Arabia
When Terrorists and Pirates Merge

Monday, February 15, 2010

அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்

[பகுதி: ஒன்று]
2009 ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் பயணம் செய்த ஒரு நைஜீரிய இளைஞன், சர்வதேச அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவான் என்று, யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்த இளைஞன் உள்ளங்கியில் மறைத்து வைத்திருந்த வெடிபொருள் வெடிக்கத் தவறியதால், விமானம் ஒரு பாரிய தாக்குதலில் இருந்து தப்பியது. குண்டுதாரியை விசாரித்த அமெரிக்க போலீசார், அந்த நைஜீரிய இளைஞன் "முன்னர் ஒரு காலத்தில் யேமனில் வாழ்ந்ததாகவும், அல்கைதாவுடன் தொடர்பு கொண்டவன்" என்றும் அறிவித்தார்கள். என்னது? திடீரென்று "ஒரு ஆப்பிரிக்க இளைஞன்", "யேமன் அல்கைதா" என்று மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்? அப்படி எவராவது சந்தேகப்பட்டால்? அது தான் நிறைவேறாத தாக்குதலுக்கு "யேமன் அல்கைதா" உரிமை கோரினார்களே, பார்க்கவில்லையா? அப்பவும் நம்பவில்லையா? இதோ, பின்லாடனின் உரிமை கோரல் ஒலிநாடா. அல்ஜசீராவில் ஒளிபரப்பானது. அப்புறம் என்ன தயக்கம்? யேமனில் பதுங்கியிருக்கும் அல்கைதாவை அழிக்க கிளம்ப வேண்டியது தானே? அல்கைதா பயங்கரவாதத்தை ஒடுக்க யேமன் அரசுக்கு உதவுவது எப்படி என்று ஆராய லண்டனில் மகாநாடு கூட்டினார்கள்.

அதற்கு முன்னர் விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகளை இறுக்குவது தொடர்பாக உடனடி உத்தரவுகள் பறந்தன. நவீன தொழில்நுட்பம் கொண்ட "ஸ்கேன் மெஷின்களை" ஏன் பாவிக்கவில்லை? என்று கண்டனங்கள் குவிந்தன. புதிய ஸ்கேன் மெஷின்கள், விமானப் பயணிகளின் ஆடை மறைத்திருக்கும் உடல் அங்கங்களையும் படம் பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதனால் என்ன? அமெரிக்கா செல்பவர்கள் எத்தகைய அவமானத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்களா? மானம் முக்கியமா? பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பு முக்கியமா? கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து, விமான நிலையங்களில் கறுப்புத் தோலைக் கொண்டவர்கள் பாகுபடுத்தி சோதனையிடப்பட்டனர். டாலர் தேவையென்றால், இனப்பாகுபாட்டையும் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னரும், யேமனில் மாதக்கணக்காக போர் நடந்து கொண்டிருந்தது. யேமன் பாதுகாப்புப் படைகளுக்கும், வட மாகாணங்களை சேர்ந்த (ஷியா முஸ்லிம்களான) ஹூதி இயக்க போராளிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்து கொண்டிருந்து. (பார்க்க: சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்) ஆயிரக்கணக்கான பொது மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே நடந்த மனிதப் பேரவலத்தை எந்தவொரு சர்வதேச ஊடகமும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. சில நேரம், முக்கியமற்ற செய்தியாக கடமைக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். உலகில் அதிகமானோரை சென்றடையாத அரபு ஊடகங்கள் மட்டும், அக்கறையோடு அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் என்றைக்கு, அமெரிக்க விமான தாக்குதல் முயற்சியையும், அல்கைதாவையும் தொடர்பு படுத்தி செய்தி வந்ததோ? அன்றிலிருந்தே யேமனை இன்னொரு ஆப்கானிஸ்தான் போல காட்டத் தொடங்கி விட்டார்கள்.


எவராவது யேமன் சென்றால், அங்கே அல்கைதா இருக்கிறதா என்று தேடக் கிளம்பி விடாதீர்கள். நகரங்களில் வதியும், சர்வதேச அரசியல் தெரிந்த படித்தவர்களுக்கு மட்டுமே அல்கைதா என்ற சொல் பரிச்சயம். நாட்டுப்புறங்களில் வாழும் சாதாரண யேமனியர்களுக்கு ஆட்டுக்குட்டி மட்டுமே தெரியும், அல்கைதா தெரியாது. ஆனால் அந்த நாட்டில், இஸ்லாமிய அரசியலில் பற்றுக் கொண்ட ஆயுதமேந்திய போராளிகள் இருக்கிறார்கள். உள்ளூர் மக்கள் அவர்களை "சலாபிகள்", அல்லது "வஹாபிகள்" என்று அழைப்பார்கள். சலாபி, வஹாபி ஆகியோர் கடும்போக்கு இஸ்லாமை போதித்த மதத்தலைவர்கள். ஆனால் இதையெல்லாம் உள்ளபடியே சொன்னால், பிற நாட்டு மக்களுக்கு ஆர்வம் ஏற்படாது. "அல்கைதா" என்ற லேபிளை ஒட்டி செய்தி வெளியிட்டால், டீக்கடையில் தினசரி வாசிக்கும் கந்தசாமியும் "உச்"சுக் கொட்டுவார்.

அது சரி, யேமனில் அல்கைதா எப்படி வந்தது? எண்பதுகளில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய ஜிகாதிகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். "எங்கிருந்தோ வந்த ரஷ்யாக்காரன், இஸ்லாமிய உறவுகளை இனவழிப்பு செய்கிறான்" என்று கேள்விபட்டு, ரஷ்யர்களை எதிர்த்து போரிட, பல அரபு தொண்டர்கள் ஆப்கானிஸ்தான் சென்றனர். யேமனில் இருந்தும் பெருந்தொகை இளைஞர்கள் அணிதிரட்டப் பட்டார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் வாங்கியதும், அவர்கள் நாடு திரும்ப ஆரம்பித்தனர். தசாப்த காலமாக யேமனை ஆண்ட சர்வாதிகாரி சாலேயின் இஸ்லாமியமயமாக்கல் கொள்கைக்கு ஒத்துழைத்தனர். முன்னாள் ஆப்கான் போராளிகளை கூலிப்படையாக கொண்டு தான், தென் பிராந்திய பிரிவினைவாத இயக்கம் அடக்கப்பட்டது. (இது குறித்து பின்னர் விரிவாக.)

2001 , செப்டம்பர் 11 க்குப் பின்னர் தான், முன்னை நாள் ஆப்கான் போராளிகளுக்கு அல்கைதா என்ற சிறப்புப் பட்டம் சூட்டப்பட்டது. "சோவியத் யூனியனை மண் கவ்வ வைத்த இஸ்லாமியத் தீவிரவாதம் அமெரிக்காவுக்கும் எதிரானது" என்று தாமதமாகவே அறிவித்தார்கள். இஸ்லாமியத் தீவிரவாதம் யேமன் அரசுக்கும் எதிரி என்று, வாஷிங்டன் சொன்ன பிறகு தான் தெரிந்ததாம். அதற்கு முன்னரே, சர்வாதிகாரி சலேக்கும், ஆப்கான் போராளிகளுக்கும் இடையில் விரிசல் தோன்றி விட்டது. எண்ணெய் விற்று வந்த பணத்தில் தான் இஸ்லாமியப் போராளிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. உலக சந்தையில் எண்ணெய் விலை இறங்கியதால் சாலேயின் கையைக் கடிக்கவே, கூலிப்படைக்கு பணம் பட்டுவாடா செய்வதும் நிறுத்தப்பட்டது. ஆயுதந்தரித்த கைகள் மண்வெட்டி பிடிக்குமா? அரசாங்க நிதியை இழந்த இஸ்லாமிய கூலிக் குழுக்கள் அரசுக்கு எதிராக திரும்பின. அவர்களைத் தான் அன்றிலிருந்து இன்று வரை, அல்கைதா என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே ஒரு முறை "போலி அல்கைதா" பற்றிய செய்தி வெளி வந்தது.(Israel-Linked Terrorist Cell Dismantled: Yemen) 2008 ம் ஆண்டு தலைநகர் சானாவில் அமெரிக்க தூதுவராலயத்தை இலக்கு வைத்த குண்டுவெடிப்பு ஒன்று நடந்தது. தாக்குதல் நடத்தியவர்களை தேடி துப்புத்துலக்கிய யேமன் போலிஸ், சில பயங்கரவாதிகளை கைது செய்தது. பிடிபட்ட "அல்கைதா சந்தேகநபர்கள்" இஸ்ரேலிய உளவுப்பிரிவுடன் தொடர்பு கொண்டிருந்தமை விசாரணையின் போது தெரிய வந்தது. இஸ்ரேலில் கணிசமான அளவு யேமன் யூதர்கள் வாழ்கின்றனர். அவர்களில் சிலரை மொசாட் உளவாளிகளாக திரும்பவும் யேமன் அனுப்புவது இலகு என்பது குறிப்பிடத் தக்கது. இஸ்ரேல் உருவாக்கிய போலி அல்கைதா பற்றி பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்த ஜனாதிபதி சாலே, அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதாக உறுதியளித்தார். ஆனால் அதற்கு அப்புறம் ஏதாவது நீதி மன்ற வழக்கு நடந்ததாக செய்தி வரவில்லை. பிடிபட்ட பயங்கரவாதிகள் இப்போதும் சிறையில் உள்ளனரா? யாம் அறியோம் பராபரமே.

கடந்த ஆண்டிலிருந்து யேமன் அல்கைதா நிறுவனம் துடிப்புடன் இயங்கி வருவதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்தன. சுவாரஸ்யமாக இந்த அறிவிப்புகள் எல்லாம் இணையத்திலேயே காணக் கிடைக்கின்றன. "அல்கைதா இணையத்தளத்தில்" காணப்படும் அறிவிப்புகள் அதிர்ச்சியுற வைக்கின்றது. நாசிர் அல் வஹைஷி என்ற புதிய அல் கைதா தலைவர், "யேமெனில் ஜிகாத் தொடக்கி பாலஸ்தீனத்தில் முடிக்கப் போவதாக" சூளுரைத்துள்ளார். (நல்லது, அவருக்கும் கனவு காண்பதற்கு உரிமை உண்டு.) செயலிழந்துள்ள சவூதி அல்கைதா உறுப்பினர்களை இணைத்து, "அரேபிய தீபகற்பத்திற்கு பொதுவான அல்கைதா" அமைப்பு இயங்குவதாக தெரிவிக்கிறார். அடுத்து வரும் தகவல் சுவாரஸ்யமானது. அமைப்பின் உப தலைவராக, சவூதி பிரஜை அபு சயாப் அல் ஷிஹ்ரி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அபு சயாப் அல் ஷிஹ்ரி? அமெரிக்கர்களால் விடுதலை செய்யப்பட்ட குவாந்தனமோ சிறைக் கைதி. குவாந்தனமோ என்ற தனிமைச் சிறைக்குள் தள்ளி சித்திரவதை செய்தும், நிஜ அல்கைதா உறுப்பினர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது சி.ஐ.ஏ. உளவாளியாக வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டாரா? குவான்தாமோ சிறையில் இருந்து விடுதலையான பலர் சி.ஐ.ஏ, உளவாளிகளாக செயற்படுவதால், அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.

(தொடரும்)

யேமன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்
யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்

Thursday, December 03, 2009

சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்

உலகின் பல பாகங்களில் இருந்தும் முஸ்லிம் ஹஜ் யாத்ரீகர்கள் மெக்காவில் குவிந்து கொண்டிருந்தனர். முஸ்லிம்களின் மிகப் புனிதமான இரண்டு மசூதிகளின் பாதுகாவலன் மன்னன் அப்துல்லாவிற்கு வேறு வேலை இருந்தது. சவூதி அரேபியாவின் கொல்லைப்புற நாடான யேமன் முஸ்லிம்களை கொல்லும் கொடிய யுத்தத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார். முதலில் சவூதி விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் யேமன் வான் பரப்பினுள் நுழைந்து குண்டு வீசின. பின்னர் சவூதி இராணுவம் எல்லை தாண்டிச் சென்று கண்ணில் பட்டவர்களை சுட்டுத்தள்ளினார்கள்.

கிராமங்கள் மீது கடும் சேதம் விளைவிக்கும் வெள்ளை பொஸ்பரஸ் துகள்கள் தூவப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். சர்வதேச மன்னிப்புச் சபை இது குறித்து சவூதி அரசிடம் விளக்கம் கோரியது. சவூதியின் ஆக்கிரமிப்பு காரணமாக மட்டும், குறைந்தது ஐம்பதினாயிரம் யேமன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஏற்கனவே நான்காண்டுகளாக நடக்கும் யுத்தத்தினால் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். கடுமையான செய்தித் தணிக்கை காரணமாக, இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அகதிமுகாம்களுக்குள் முடங்கிய குழந்தைகள் போஷாக்கின்மையால் மடிந்து கொண்டிருக்கின்றன.

உலகின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான யேமன் கடந்த நான்காண்டுகளாக வெல்ல முடியாத போர் ஒன்றில் ஈடுபட்டுள்ளது. சவூதி அரேபியா, ஈரான் போன்ற அந்நிய சக்திகள் யேமன் உள்நாட்டு யுத்தத்தில் தலையிட்டு வருகின்றன. அவர்களைப் பொறுத்த வரை இது ஒரு பதிலிப் போர். நேருக்கு நேர் சந்திக்க தயங்கும் பகைவர்களான சவூதியும், ஈரானும் தமது பதிலிகள் மூலம் போரிடுகின்றன. யேமன் அரசு, ஹூதி போராளிகள், அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள், இவர்கள் மத்தியில் சிக்கி திணறும் மக்கள் செத்து மடிகிறார்கள். அகதி முகாம்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் Unicef, மக்கள் சில இடங்களில் பட்டினியால் வாடுவதாக தெரிவிக்கின்றது. யேமன் முழுவதும் தினசரி 250 குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி மரிக்கின்றன. இந்த செய்திகள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதில்லை. இன்றுவரை ஐ.நா. சபை, சவூதி படையெடுப்பை கண்டிக்க அவசர கூட்டம் கூடவில்லை. உலகமே பாராமுகமாக இருக்கும் வேளை, யேமனில் மனித அவலம் அரங்கேறுகின்றது.

சவூதி இராணுவத்தின் அத்துமீறல்களுக்கு யேமன் அரசு அனுமதியளித்தது. தன்னால் அடக்க முடியாத "ஹூதி" கிளர்ச்சியாளர்களை அடக்க சவூதி படைகளை வலிந்து அழைத்தது. யேமனில் இரு தசாப்தங்களுக்கு மேலாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலே க்கு இது மூன்றாவது போர்முனை. தொன்னூறுகளில் முன்னாள் கம்யூனிஸ்ட்களின் நிராசையான தென் யேமன் பிரிவினைப் போரை, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் துணை கொண்டு அடக்கினார். 9/11 க்கு பின்னர் அமெரிக்கா நெறிப்படுத்திய பயங்கரவாத எதிர்ப்பு போர் யேமனையும் விட்டு வைக்கவில்லை. அல் கைதா தலைவர் பின் லாடனின் தாயகப் பூமியல்லவா? அல் கைதாவை ஒடுக்கி விட்டதாக யேமன் அரசு அறிவித்துள்ளது. ஆனால் தற்போதைய சவூதி படையெடுப்பு, அல் கைதா பூதம் அடைபட்டிருந்த புட்டியை திறந்து விடுமோ, என்ற அச்சம் தோன்றியுள்ளது. மேற்குறிப்பிட்ட யுத்தங்களிலும் சவூதி அரேபியாவின் பங்களிப்பு இருந்துள்ளது. ஆனால் திரை மறைவில். யேமன் அரசுக்கு தேவையான ஆயுதங்களும், ஆலோசனைகளும் தாராளமாக வழங்கப்பட்டன.

2004 ம் ஆண்டு, வட யேமனில் புதிய போர்முனை தோன்றியது. வட-மேற்கு பிரதேசத்தை சேர்ந்த சையது மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். மேலெழுந்தவாரியாக யேமன் அரபு மொழி பேசும் ஒரே இனத்தவர்கள் வாழும் நாடு போல தோற்றமளிக்கிறது. குலம் அல்லது சாதி ரீதியாக, மதவாரியாக பிரிந்துள்ள சமூகம் வெளி உலகின் கண்களுக்கு தெரிவதில்லை. குறிப்பாக வட-மேற்கு Sadah மாகாணத்தை சேர்ந்த சையது மக்கள் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்கள். சுன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் யேமனில், ஷியா இஸ்லாமிய மதம் அவர்களின் பண்டைய இனத்தூய்மையை பாதுகாத்து வைத்திருக்கிறது. இவர்கள் நீண்ட காலமாக யேமனில் ஆட்சி புரியும் வகுப்பினராக இருந்துள்ளனர். சையது ஷியா மதத் தலைவரின் அரசியல் சர்வாதிகாரம், 1960 ல் ஏற்பட்ட தேசியவாதிகளின் சதிப்புரட்சியால் முடிவுக்கு வந்தது. அன்றிலிருந்து பெரிதும் பின்தங்கி விட்ட சமூகமாகி விட்ட சையிது மக்கள் தற்போது கிளர்ந்து எழுந்துள்ளனர்.

சையிது சமூகத்தில் இருந்து தோன்றிய "ஹூதி" இயக்க உறுப்பினர்கள் குறைந்தது 5000 பேர் அளவில் இருக்கலாம். கெரில்லாக்களுக்கு ஏற்ற மறைவிடமாக விளங்கக் கூடிய மலைகளும், குகைகளும், சுரங்கப்பாதைகளும் அவர்களுக்கு உதவுகின்றன. முன்னாள் படைவீரர்கள் பலர் ஹூதி போராளிகளாக மாறியுள்ளனர். யேமன் இராணுவத்தில் கணிசமான சையிது சிப்பாய்கள் கடமையாற்றுவது குறிப்பிடத் தக்கது. சையிது படை வீரர்கள் தமது மக்களின் குடியிருப்புகள் மீது குண்டு போட தயங்கியதும், சவூதி இராணுவ தலையீட்டுக்கு ஒரு காரணம். சமீபத்தில் அமெரிக்க ஆயுத சந்தையில் வாங்கிய F-15 , Tornado ஜெட் விமானங்கள் போராளிகளின் நிலைகள் மீது குண்டு போடுகின்றன. தமது எல்லைக் காவல் படைவீரர் ஹூதி போராளிகளால் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கவே தானும் போரில் குதித்ததாக சவூதி அரேபியா கூறி வருகின்றது. யேமன் இராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த தம்மை எல்லை கடந்து அத்துமீறிய சவூதி விமானங்கள் தாக்குவதாக போராளிகள் கூறுகின்றனர். யேமனுக்குள் ஊடுருவிய சவூதி யுத்த தாங்கி ஒன்றை கைப்பற்றியதாக காட்டும் வீடியோ ஒன்றையும் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அனுப்பியிருந்தனர்.

இதற்கிடையே ஹூதி இயக்கத்தினருக்கு கொடுப்பதற்காக அனுப்பபட்ட ஈரானிய கப்பல் ஒன்றை கைப்பற்றியிருப்பதாக யேமன் அரசு அறிவித்தது. இது பற்றிய மேலதிக தகவல் எதுவும் பின்னர் வராததால், உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. ஷியா முஸ்லிம்களின் இராஜ்யமான ஈரான் ஹூதி போராளிகளுக்கு உதவி வருகின்றது என்ற அச்சம் யேமன், சவூதி அரச மட்டத்தில் நிலவுகின்றது. தென் லெபனானில் ஷியா பிரிவை சேர்ந்த ஹிஸ்புல்லா தனக்கென கட்டுப்பாட்டு பிரதேசத்தைக் கொண்டுள்ளது. அது போல, யேமனுக்கும், சவூதி அரேபியாவுக்கும் நடுவில் இன்னொரு ஷியா கட்டுப்பாட்டுப் பிரதேசம் உருவாக்கி வருவதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது. அதே நேரம், இரு நாடுகளுக்கும் நடுவில் பத்து கிலோமீட்டருக்கு சூனியப் பிரதேசம் அமைக்க இருப்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

ஹூதி போராளிகள் தனது நாட்டினுள் ஊடுருவியதாக இன்னொரு காரணத்தை சவூதி அரசு எடுத்து விட்டது. இந்த அறிவிப்பானது சவூதி அரேபியா ஏன் யேமன் பிரச்சினையில் தலையிட்டது என மறைமுகமாக சுட்டி நிற்கின்றது. யேமன் எல்லையோர சவூதி அரேபியாவில் சையிது, மற்றும் இஸ்மாயில் சமூக மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் ஷியா மதப் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, தோற்றத்தில் யேமனியர்கள் போன்றிருப்பர். நிச்சயமாக அவர்களின் மனதின் ஓரத்தில் ஹூதி போராளிகள் மீது அனுதாபம் இருக்கும். இதனால் சவூதி அரசு இந்தப் பிரிவினரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றது. அந்தப் பிரதேசம் ஏற்கனவே ஒரு அடக்கப்பட்ட கிளர்ச்சியை கண்டுள்ளது. (முன்பொரு தடவை சவூதி படையினர் நிகழ்த்திய ஷியா இனப்படுகொலை இதுவரை எந்த ஊடகத்திலும் வரவில்லை.) யேமனிய சகோதர இயக்க உதவியுடன் மீண்டும் தனக்கெதிரான கிளர்ச்சி தோன்றும் என சவூதி அரேபியா அஞ்சுகின்றது.

நான்காண்டுகளாக போரிட்டும் வெல்ல முடியாத யேமன் இராணுவத்தின் கையாலாகத்தனம். இந்த இடைவெளியில் நுழைந்துள்ள ஈரான். இதனால் பலம்பெற்ற ஹூதி போராளிகள் தமக்கென கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்திருக்கும் சாத்தியக்கூறுகள் தென்பட்டன. அதனை முளையிலேயே கிள்ளியெறிய சவூதி அரேபியா விரும்புகின்றது. அல் கைதா, (அல் கைதா என்பது வெளியுலகம் அறிந்த பொதுப் பெயர்) இப்போது இந்தப் போரை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அல் கைதா சுன்னி முஸ்லிம் பிரிவினரின் குழுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்று எம் முன்னால் எழுந்துள்ள கேள்வி. ஹூதி இயக்கத்தை அழிப்பதில் சவூதி இராணுவம் வெற்றி பெறுமா? சவூதி இராணுவ நடவடிக்கை தோல்வியுற்றால், அல் கைதா போன்ற பிற ஆயுதக் குழுக்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். அது மீண்டும் சவூதி அரேபியாவினுள் ஆயுதப் போராட்டத்தை தூண்டி விடும். சவூதி அரசு தான் விதைத்த வினைகளை அறுவடை செய்து கொண்டு வீட்டிற்கு வரும் காலம் தொலைவில் இல்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யேமன் பிரச்சினையை ஆழமாக அறிந்து கொள்ள இந்தப் பதிவையும் வாசிக்கவும்:
யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்