Showing posts with label தெற்கு சூடான். Show all posts
Showing posts with label தெற்கு சூடான். Show all posts

Monday, July 29, 2013

மூலதன முதலைகளின் வேட்டைக் காடாகிய தெற்கு சூடான்!


"சூடான் மக்கள் விடுதலை இயக்கம், விடுதலை பெறும் தெற்கு சூடானின் விடுதலை நாள் விழாவில் பங்கேற்குமாறு, ‘ நாடு கடந்த தமிழீழ அரசு ’க்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தமிழீழத்திற்கான முதல் அங்கீகாரம்!"

இரண்டு வருடங்களுக்கு முன்னர், சூடானில் இருந்து பிரிந்து சுதந்திர நாடான தெற்கு சூடான், நம்மூர் தமிழ் தேசியவாதிகள் மனதிலும் பெருமளவு எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது. தெற்கு சூடானை விட, சூடான் நாட்டின் டாபூர் பிராந்தியம் அளவிட முடியாத மனிதப் பேரழிவை சந்தித்திருந்தது. அங்கு இனப்படுகொலை நடந்ததை, ஐக்கிய நாடுகள் சபையும் அறிவித்திருந்தது. ஆயினும், சர்வதேச சமூகம் டாபூரை கைவிட்டு விட்டு, தெற்கு சூடானுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காரணம் என்ன? எல்லாமே எண்ணைக்காக தான். தெற்கு சூடான் விடுதலைப் போராட்டத்தை, "இஸ்லாமிய-அரபு மேலாதிக்கத்திற்கு எதிரான கிறிஸ்தவ பழங்குடியின மக்களின் போராட்டம்..." என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், எண்ணை வளத்தை பங்கு பிரிப்பது சம்பந்தமான சர்ச்சை தான் போருக்கு காரணம் என்பதை அறிந்தவர்கள் மிகக் குறைவு.

முப்பதாண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தி, தனியரசு அமைத்த தெற்கு சூடானின் இன்றைய நிலைமை என்ன? அங்கே மக்கள், எந்தக் குறையுமற்று, சந்தோஷமாக வாழ்கின்றனரா? இதற்கான பதில் அதிர்ச்சியை உண்டாக்கும். தெற்கு சூடான், பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாகியுள்ளது. விடுதலைக்காக உயிரைக் கொடுத்து போராடிய மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களை வழிநடத்திய தலைவர்கள், சொகுசு வாழ்வில் மெய்மறந்து போயுள்ளனர். 

அன்று தெற்கு சூடான் விடுதலை அடைந்ததை வரவேற்றவர்கள், இன்று அந்நாட்டு மக்களின் நிலையைப் பற்றிக் கவலைப் படாமல் பாராமுகமாக இருப்பது ஏன்? உண்மையில், தமிழீழ உழைக்கும் மக்கள் தான், தெற்கு சூடான் உழைக்கும் மக்களின் நிலைமை குறித்து அக்கறை கொள்வார்கள். எமக்குத் தெரிந்த "தீவிரமான தமிழீழ போராளிகளுக்கு," அந்த அக்கறை துளியும் கிடையாது. ஏனெனில், அவர்கள் வசதியான மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தமது வர்க்க நலன்கள் மட்டுமே முக்கியமானவை. அதனைப் புரிந்து கொள்வதற்கு, நாங்கள் தெற்கு சூடானில் இருந்து படிப்பினைகளை பெறுவது அவசியம்.

முதலில், தெற்கு சூடான் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றிய சிறிய குறிப்பு. அந்நாடு சுதந்திரமடைந்த நாளில் இருந்து இன்று வரை, ஒரு கட்சி ஆட்சி தான் நடக்கின்றது. சூடானில் இருந்து பிரிவதற்காக, "சூடான் மக்கள் விடுதலை இயக்கம்" (SPLM) ஆயுதப் போராட்டம் நடத்தியது. அதன் இராணுவப் பிரிவின் பெயர் : "மக்கள் விடுதலைப் படை" (PLA). தெற்கு சூடான் சுதந்திரமடைவதற்கு முன்னரே, அதன் தலைவர் ஜோன் காரெங் ஒரு விபத்தில் கொல்லப் பட்டார். அதன் பிறகு, தலைவரான சல்வா கீர், சுதந்திர தெற்கு சூடானின் முதலாவது ஜனாதிபதியாகி உள்ளார். ரீக் மாஷார் உப ஜனாதிபதியாகினார்.

தெற்கு சூடானில் பல கட்சி ஜனநாயகம் கிடையாது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி இல்லை. ஆளும் SPLM கட்சிக்குள் மட்டுமே தேர்தல் சாத்தியமானது. அதனால், அந்தக் கட்சிக்குள் தான் அதிகாரத்திற்கான பதவிப் போட்டியும் நடக்கின்றது. அண்மையில் ஜனாதிபதி சல்வா கீர், மந்திரி சபையை கலைத்து, மந்திரிகளை வீட்டுக்கு அனுப்பிய பிறகு, அங்கே பெரும் அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளது.

ரீக் மாஷார், தானே அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டுமென விரும்புவது ஒன்றும் இரகசியமல்ல. ஆனால், இங்கே குறிப்பிடத் தக்க விடயம், கீர், மாஷார் ஆகிய தலைவர்களுக்கு இடையிலான பதவிப் போட்டி, இரண்டு இனங்களுக்கு இடையிலான போட்டியை எதிரொலிக்கின்றது. கீர் டிங்கா இனத்தை சேர்ந்தவர். (அகால மரணமுற்ற முன்னாள் தலைவர் ஜோன் காரெங் கூட ஒரு டிங்கா தான்.) ஆனால், மாஷார் நூவர் (அல்லது நூர்) இனத்தை சேர்ந்தவர். தெற்கு சூடானில் பல இன மக்கள் வாழ்ந்த போதிலும், டிங்கா, நூவர் இனத்தவர்கள் தான் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

தலைநகர் ஜூபாவில் தண்ணீர் சுத்திகரிக்கும் ஆலையோ, அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் வசதியோ கிடையாது. ஜூபாவில், நகரமயமாக்கலுக்கு அவசியமான நவீன கட்டுமானப் பணிகளை செய்யாமல் புறக்கணிக்கும் அரசு, வடக்கே சில நூறு கிலோமீட்டர் தொலைவில், ரமிசெல் என்ற புதிய தலைநகரம் ஒன்றை அமைக்க விரும்புகின்றது. பெட்ரோல் விற்றுக் கிடைத்த வருமானத்தில் தான் புதிய தலைநகரம் கட்டப் படப் போகின்றது. நிர்மாணப் பணிகளில் ஈடுபடும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பெற்றோலிய தொழிற்துறை, தெற்கு சூடானின் முக்கால்வாசி தேசிய வருமானத்தை ஈட்டித் தருகின்றது. சூடான் எல்லையோரம் உள்ள வட மாகாணங்களில் மட்டுமே எண்ணை வளம் உள்ளது. இன்னும் பத்து வருடங்கள் மட்டுமே எண்ணை கிடைக்கும். எண்ணைக் கிணறுகள் வற்றிய பிறகு என்ன நடக்கும்? அதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் கிடையாது. பன்னாட்டு முதலீட்டாளர்களும், தற்போது கிடைக்கும் எண்ணைக்காக மட்டுமே வருகின்றனர். தெற்கு சூடானின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்றது என்றால், எண்ணை உற்பத்தி மட்டுமே மூல காரணம்.

சுதந்திரத் தனியரசான தெற்கு சூடானில், எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனம், எந்த நாட்டவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரியுமா? "சீன தேசிய பெற்றோலிய நிறுவனம்" தான், சுதந்திர தெற்கு சூடானில் மிகப் பெரிய முதலீட்டாளர்! முன்பு சூடான் என்ற ஒரே நாடாக இருந்த காலத்திலும், சீனர்கள் தான் எண்ணை தொழிற்துறையில் முதலிட்டிருந்தார்கள். ஆமாம், அதே எண்ணைக் கிணறுகள், அதே நிறுவனம், அதே சீனர்கள். ஆனால், கமிஷன் வாங்கும் உள்நாட்டுப் பிரதிநிதி மட்டுமே மாறி இருக்கிறார்.

ஒரு காலத்தில், "சூடானிய அரபு பேரினவாதிகளை ஆதரிக்கும் சீன முதலீட்டாளர்கள்" பற்றி, அமெரிக்கர்களிடம் முறையிட்டவர்கள், இன்று சீனர்களை வரவேற்று, தெற்கு சூடானில் முதலிடச் சொல்லி இருக்கிறார்கள். சீனர்கள் கொடுக்கும் கமிஷனை வேண்டாம் என்று மறுப்பதற்கு, தெற்கு சூடானின் ஆட்சியாளர்கள் அந்தளவுக்கு முட்டாள்களா?   நாளை தமிழீழ தனியரசு உருவானாலும், அது தான் நடக்கப் போகின்றது. சந்தேகத்திற்கிடமின்றி, சீனர்கள் தான் தமிழீழத்திலும் முதலிடப் போகிறார்கள். இன்று ராஜபக்சவுக்கு கமிஷன் கொடுக்கும் சீனர்கள், நாளை தமிழீழ ஜனாதிபதிக்கு கொடுப்பார்கள்.

தெற்கு சூடான் நாட்டு எண்ணை வள தொழிற்துறையில், ஏன் அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் முதலிடவில்லை? எண்ணை தொழிற்துறை மட்டுமல்ல, தெற்கு சூடானில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் எதுவும் அமெரிக்கர்களுடையதல்ல! ஏன்? பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும், ஆரம்பக் கட்ட கோளாறுகளை கொண்ட புதிய தேசத்தில் முதலிடுவதற்கு, அவர்களுக்கு கிறுக்குப் பிடித்திருக்கிறதா? அந்த வேலையை மற்றவர்கள் செய்யட்டும் என்று காத்திருக்கிறார்கள். நிலைமை சீரான பின்னர், அமெரிக்கர்கள் களத்தில் இறங்குவார்கள். மேலும், சீனர்கள் எண்ணை எடுத்தாலும், உலகச் சந்தையில் தானே விற்க வேண்டும்?

தெற்கு சூடானின் எல்லைகள் இன்றைக்கும் சரியாக வரையறுக்கப் படவில்லை. "அபெய்" என்ற பகுதியை சூடானும் உரிமை கூறுவதால், அதற்காக ஒரு எல்லைப் போர் நடை பெற்றது. தெற்கு சூடான் அரச செலவினத்தில் பெரும் பகுதி இராணுவத்திற்கு செலவிடப் படுகின்றது. இது உலகிலேயே மிக அதிகமான பாதுகாப்புச் செலவினமாகும். எண்ணைக் கிணறுகளை பாதுகாப்பதற்கு, இராணுவத்திற்கு அதிக சலுகைகள் கொடுத்து பராமரிப்பது அவசியம் என்று கருதப் படுகின்றது. முன்பு, வட சூடானிய படைகள் ஆக்கிரமித்திருந்த காலத்திலும், அதுவே காரணமாக இருந்தது.

தெற்கு சூடானில், எண்ணை வளம் நிறைந்த மாநிலங்களில் நிலைமை எப்படி இருக்கிறது? எண்ணை உற்பத்தியினால் கிடைக்கும் இலாபத்தின் பெரும் பகுதி, அந்தப் பிரதேச மக்களுக்கு போய்ச் சேருகின்றதா? முன்பெல்லாம், அந்தப் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப் படும் எண்ணெயினால் கிடைக்கும் வருமானம், நேரடியாக கார்ட்டூமுக்கு (வட சூடான்) செல்கிறது என்ற முறைப்பாட்டின் பேரில் தான், தெற்கு சூடான் விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. தெற்கு சூடான் சுதந்திர தனியரசானால், எண்ணை வருமானத்தில் 5% தினை, அது உற்பத்தியாகும் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு தருவதாக, SPLM வாக்குறுதி அளித்தது.

தற்போது அதிகாரத்தில் இருக்கும் SPLM அரசு, தனது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதா? இல்லை, முன்பு எண்ணை வருமானம் நேரடியாக கார்ட்டூமுக்கு சென்றது. தற்போது அது ஜூபாவுக்கு (தெற்கு சூடான் தலைநகரம்) செல்கின்றது. முன்பு அந்தப் பிரதேச மக்கள் எதிர்ப்பைக் காட்டிய பொழுது, கார்ட்டூம் படைகளை அனுப்பி எதிர்ப்பை அடக்கியது. இன்று ஜூபாவும் அதையே செய்கின்றது. அரபு-இஸ்லாமிய பேரினவாதப் படைகள் வெறியாட்டம் நடத்திய அதே இடத்தில், தெற்கு சூடான்-கிறிஸ்தவ குறுந்தேசியப் படைகள் அட்டூழியம் புரிகின்றன. அதிகாரத்தில் உள்ளவர்களின் இனமும், மொழியும் தான் மாறியிருக்கிறது. அதிகார வர்க்கம் ஒன்று தான். அடக்குமுறை ஒன்று தான். பாதிக்கப்படும் மக்களும் ஒன்று தான்.

தெற்கு சூடான் அரசு, எண்ணெய் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானத்தை, நேர்மையான வழியில் பங்கிட்டுள்ளதா? மக்கள் நலன் பேணும் திட்டங்களில் செலவிடுகின்றதா? அதுவும் இல்லை. இன்று அரசில் முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ள, SPLM இயக்கத் தலைவர்கள் மட்டுமே, அதன் பலனை அனுபவிக்கிறார்கள். அவர்கள் பெரிய பங்களாக்களை கட்டிக் கொண்டு, வசதியாக வாழ்கிறார்கள். குளிரூட்டப் பட்ட ஆடம்பர கார்களில் பவனி வருகிறார்கள். 

பெரு நகரங்களில், தலைவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக, ஆங்கில மொழி வழி பாடத்திட்டத்தை கற்பிக்கும், உயர்தரமான சர்வதேச பாடசாலைகள் கட்டப் படுகின்றன. மேலும், தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களாக காடுகளுக்குள் மறைந்திருந்து போராடியவர்கள், இப்போது கிடைத்துள்ள வசதிகளை அனுபவிக்கக் கூடாதா என்று அதற்கு நியாயம் கற்பிக்கலாம்.

மக்கள் விடுதலைப் படை (PLA) என்ற விடுதலை இராணுவத்தில் போராடிய முன்னாள் போராளிகள், அவர்களது குடும்பங்களின் நிலைமை எப்படி இருக்கின்றது? குறிப்பிட்ட அளவு முன்னாள் போராளிகள், புதிய தெற்கு சூடான் இராணுவத்தில் சேர்க்கப் பட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான முன்னாள் போராளிகள், எந்த வேலை வாய்ப்புமின்றி, அவர்களது பாரம்பரிய தொழிலான, மாடு மேய்க்கும் வேலை செய்கின்றனர்.

"மாடு மேய்ப்பது எமது கலாச்சார பாரம்பரியம்" என்று SPLM தலைவர்கள் சப்பைக் கட்டு கட்டினாலும், முதலாளித்துவ பொருளாதாரம் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறது என்பது தான் உண்மை. ஏனெனில், போரிடுவதற்கு மட்டுமே பயிற்றுவிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு, வேறு வேலை எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்களிடம் தொழில் தகைமை எதுவும் கிடையாது. அதனால், உணவு விடுதி பணியாளர் வேலை கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. சுயமாகத் தொழில் செய்து சம்பாதிப்பதற்கு, அவர்களிடம் பணமும் கிடையாது.

சுதந்திர தெற்கு சூடானில் முதலிட்டு வர்த்தகம் செய்பவர்களில், தொண்ணூறு சதவீதமானோர் வெளிநாட்டவர்கள்! சீனர்கள், ஐரோப்பியர்கள், லெபனானியர்கள், இந்தியர்கள் மட்டுமல்ல, பிற ஆப்பிரிக்க முதலாளிகளும் அங்கே முதலிட்டுள்ளனர். பிரபல பியர் தொழிற்சாலை உரிமையாளர் ஒரு தென் ஆப்பிரிக்க நாட்டவர். பிரபல வானொலி உரிமையாளர் கென்யா நாட்டவர். செல்பேசி சேவை வழங்கும் நிறுவன உரிமையாளர் ஒரு லெபனான் நாட்டவர். இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். 

அயல்நாடான எத்தியோப்பியாவில் இருந்து வருபவர்கள் கூட, தெருக்களில் தின்பண்டம் விற்று பிழைப்பு நடத்துகின்றனர். இவ்வாறு சிறிய வணிக நிறுவனம் முதல், பெரிய முதலீட்டு வங்கி வரையில், அனைத்தும் வெளிநாட்டவர் வசம் உள்ளன. இவர்கள் யாரும், தெற்கு சூடான் விடுதலைப் போராட்டத்தில் எந்தவிதப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. விடுதலைப் போராட்டத்திற்கு தமது பங்களிப்பைச் செய்தவர்கள், அதன் பலன்களை அனுபவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

தெற்கு சூடான் நாட்டை சேர்ந்த எந்த முதலாளியும் கிடையாதா? இருக்கிறார்களே! அவர்கள் ஒன்றில், SPLM அரசினால் பலனடைந்த பெரும் புள்ளிகளாக இருப்பார்கள், அல்லது மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்களாக இருப்பார்கள். போர் நடந்த காலங்களில், ஓரளவு வசதி படைத்தவர்கள், மேற்கத்திய நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து சென்றனர். பணக்கார நாடுகளில் வேலை செய்து சேமித்த பணத்தை முதலிட, தாயகத்திற்கு திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்கள் கொடூரமான போரில் இருந்து தப்பிப் பிழைத்தது மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து கொண்டு SPLM இயக்கம் ஆயுதம் வாங்க பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அன்று, வெளிநாடுகளில் இருந்து கொண்டு, தீவிரமாக தெற்கு சூடான் தேசியவாதம் பேசியவர்கள், இன்று சிறு முதலாளிகளாக திரும்பி வருகிறார்கள்.

முப்பதாண்டு கால போரில், அயல் நாட்டுக்கு கூட தப்பிச் செல்ல வழியற்ற ஏழைகள் தான், தமது பிள்ளைகளை போராளிகளாக அர்ப்பணித்திருந்தனர். தெற்கு சூடான் சுதந்திர நாடானால், தமது வாழ்க்கை சிறக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்தோ பரிதாபம்! அவர்களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துப் போயின. விடுதலையடைந்த தெற்கு சூடானில்,பெரும் மூலதனத்தை கொண்டு வந்து கொட்டும் முதலாளித்துவத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் துவண்டு போகின்றனர். சாதாரண ஏழை மக்களுக்கு, சிறிய பெட்டிக் கடை திறப்பது கூட ஒரு கனவாகத் தான் இருக்கும். ஏனெனில், அவர்களுக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை. வங்கிகள், கடனை திருப்பிச் செலுத்தக் கூடிய உறுதிமொழியை எதிர்பார்க்கின்றன.

முப்பதாண்டு காலமாக நடந்த போரில் உடமைகளை இழந்து, உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு வாழும் மக்களால், வங்கிகள் கேட்கும் அடமானப் பத்திரங்களை கொடுக்க முடியுமா? SPLM தலைவர்களோ, தமது நாட்டின் கடந்த கால அவல நிலையை மறந்து விட்டுப் பேசுகிறார்கள். "அயல் நாட்டவரான எத்தியோப்பியர்கள் ஏதாவது தொழில் முயற்சியை தொடங்கலாம் என்றால், ஏன் இவர்களால் முடியாது?" என்று கேள்வி கேட்கின்றனர். சுருக்கமாக சொன்னால், "முதலாளித்துவ போட்டியை சமாளிக்க முடியாத சோம்பேறிகள்" என்று, SPLM தலைவர்கள் தமது சொந்தப் பிரஜைகள் மேல் பழி போடுகின்றனர்.

உண்மை தான். தெற்கு சூடான் விடுதலை அடைந்தால், அது காட்டு முதலாளித்துவத்தை வரித்துக் கொள்ளும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. இந்த உண்மை அன்றே தெரிந்திருந்தால், அரபு - சூடான் பேரினவாத அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, முதலாளித்துவத்திற்கு எதிராகவும் போராடி இருப்பார்கள். காலம் இன்னும் கடந்து விடவில்லை. தெற்கு சூடான் உழைக்கும் மக்கள், அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்திற்கு தயாராகிறார்கள். ஆங்காங்கே நடக்கும், வெளிநாட்டவருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதற்கான அறிகுறிகள். அதனால் தான், "அபாயகரமான சூழ்நிலை" கருதி, அமெரிக்கர்கள் தள்ளி நிற்கின்றனர்.

**********************

தெற்கு சூடான் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, July 12, 2011

சோதனையை எதிர்நோக்கும் தெற்கு சூடான் விடுதலை



(புதிதாக சுதந்திரமடைந்த தெற்கு சூடான் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த விசேட அறிக்கை)

9 ஜூலை 2011, தெற்கு சூடான் என்ற புதிய தேசம் உதயமாகியது. அன்று முதல் ஆப்பிரிக்க கண்டத்தின் 54 வது நாடாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் 193 வது நாடாகவும் இணைந்துள்ளது. இந்தப் புதிய தேசத்தை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்துள்ளன. தெற்கு சூடானின் எண்ணை வளத்தை நுகரும் சீனாவும் இராஜதந்திர உறவுகளைப் பேண முன்வந்துள்ளது. இதற்கிடையே, தமிழ்த் தேசியவாதிகள் வழமை போலவே தெற்கு சூடானுடன், தமிழீழத்தை தொடர்பு படுத்தி பேச ஆரம்பித்து விட்டனர். இவ்விரண்டு தேசியப் பிரச்சினைகளுக்கு இடையில் சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும், இறுதிக் கட்ட தீர்மானம் தொடர்பாக பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. சூடான் நாட்டின் மொத்த எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு சூடானில் உள்ளது. ஒரு துளி எண்ணெய் கூட தமிழீழத்தில் கிடையாது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. தெற்கு சூடான் சுதந்திர நாடாகிய போதிலும், அங்குள்ள வறுமை போன்ற பிரச்சினைகள் தீர்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். கடன் வழங்கும் நாடுகளும், இந்த நிலைமையைப் பயன்படுத்தி தெற்கு சூடானை அடிமைப் படுத்த முனையலாம். சுதந்திரமடைந்த தெற்கு சூடானின் இன்றைய நிலைமையை இங்கு ஆராய்வோம்.

ஈழப்போர் போன்று தான், தெற்கு சூடான் போரும் நீண்ட காலம் (1983 - 2005 ) இழுபட்டது. சூடான் இராணுவமும், பிரிவினை கோரிய தென் சூடான் மக்கள் விடுதலைப் படையும் (SPLA ), பல்லாயிரம் மக்களின் உயிரிழப்புகளுக்கும், சொத்தழிவுக்கும் காரணகர்த்தாக்கள். சுமார் இரண்டு மில்லியன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். பெருமளவு இடம்பெயர்ந்தோர், சூடான் தலைநகரமான கார்ட்டூமில் தங்கிவிட, சிறு தொகை அகதிகள் அங்கிருந்து மேற்கு நாடுகளை நோக்கி புலம்பெயர்ந்தார்கள். இலங்கையிலும் இதே போன்ற நிலைமை காணப்பட்டதை, நான் இங்கே குறிப்பிட வேண்டியதில்லை. 2005 ம் ஆண்டு, இரண்டு பரம்பரை எதிரிகளும் ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்தையில் தீர்வு காண முன்வந்தார்கள். கார்ட்டூமின் "அரபு பேரினவாதி" பஷீரும், தெற்கு சூடானின் "தேசியத் தலைவர்" ஜோன் காரெங்கும் சந்தித்து சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அந்த ஒப்பந்தப்படி, 2011 ஜனவரி மாதம், தெற்கு சூடான் விடுதலை குறித்து சர்வசன வாக்கெடுப்பு நடத்துவதென தீர்மானிக்கப் பட்டது.

இலங்கையிலும் 2002 ம் ஆண்டு, சிங்கள அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. நோர்வே மத்தியஸ்தத்துடன் சமாதான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஆனால், தெற்கு சூடான் சுதந்திரத்திற்கு வழிவகுத்த திருப்புமுனையான நிகழ்வை தமிழ்த் தேசியவாதிகள் புறக்கணிக்கின்றனர். இலங்கை, சூடான் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மேலைத்தேய மத்தியஸ்தம் ஒரே மாதிரியாக அமைந்திருந்தது. ஆனால், சூடானில் எழுதப்பட்ட ஒப்பந்தத்தில், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற ஷரத்து சேர்க்கப்பட்டது. ஆனால் இது போன்றதொரு கோரிக்கையை, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட புலிகள் ஏனோ முன்வைக்கவில்லை. அத்தகைய கோரிக்கையை சிறிலங்கா அரசோ, அல்லது சர்வதேசமோ ஏற்றிருக்குமா என்பது வேறு விடயம். மத்தியஸ்தம் வகித்த நோர்வே கூட ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு காணுமாறு வலியுறுத்தி வந்தது. இருப்பினும், பேச்சுவார்த்தையின் முடிவில் சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டது என்பதையும், அதன் பெறுபேறாகக் கிடைத்த சர்வசன வாக்கெடுப்பு, தெற்கு சூடானின் சுதந்திரத்திற்கு வழி சமைத்தது என்பதை மறந்து விடலாகாது.

ஜனவரி 2011 ல் இடம்பெற்ற சர்வசன வாக்கெடுப்பில், 98 .3 சதவீத மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். சர்வதேச கண்காணிப்பாளர்கள் பொறுப்பில், அமைதியாக அந்தத் தேர்தல் நடைபெற்றது. தெற்கு சூடான் விடுதலைக்காக போராடிய SPLA தான், புதிய தேசத்தின் அரசுப் பொறுப்பையும் ஏற்றுள்ளது. SPLA என்பது இராணுவப் பிரிவின் பெயர். SPLM என்பது கட்சியின் பெயர். கட்சிக்கும், இராணுவத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிகக்குறைவு. அது போலத்தான், தெற்கு சூடான் அரசு முழுவதையும் SPLM உறுப்பினர்கள் ஆக்கிரமித்துள்ளனர். தெற்கு சூடானின் தேசியத் தலைவர் ஜோன் காரெங் எதிர்பாராவிதமாக ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்து விட்டார். தற்போது முன்னாள் தலைவரின் வலதுகரமான Salva Kiir தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். 2005 ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வந்த நாளில் இருந்து, தெற்கு சூடானில் SPLM ஆட்சி தான் நடந்து வருகிறது. பிற அரசியல் அமைப்புகள் SPLM ஆதிக்கத்தை எதிர்க்க முடியாமல் ஒதுங்கி விட்டன. புதிய தேசம் உதயமான அடுத்த நாள் பலரை ஆச்சரியப்பட வைத்த மாற்றம் ஒன்று இடம்பெற்றது. கார்ட்டூமில் ஆளும் கட்சியான, பஷீரின் "சூடான் தேசிய காங்கிரஸ்", தெற்கு சூடான் பாராளுமன்றத்திலும் ஒரு ஆசனத்தை வைத்திருக்கிறது. பெரும்பாலும் தெற்கு சூடானை சேர்ந்தவர்களே அங்கம் வகிக்கும் கட்சியின் மாநிலப் பிரிவு கார்ட்டூமுடனான தொடர்புகளைத் துண்டித்து விட்டு SPLM முடன் சேர்ந்துள்ளது.

புதிய தேசத்தின் பதவிகள் யாவும் SPLM செல்வாக்கு உள்ளவர்களுக்கே வழங்கப் படுகின்றது. சுதந்திர தேசத்தில் வாய்ப்புக் கிடைக்கும், என்று நம்பியிருந்த புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தெற்கு சூடானில் முப்பது வருடங்கள் இடையறாது யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளை, அகதிகளாக புலம்பெயர்ந்த பலர் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூடானின் தலைநகர் கார்ட்டூமில் வாழ்ந்தவர்கள் பெருமளவில் திரும்பி வருகின்றனர். அவர்களில் பலர் தாயகத்தை கண்டிராத இளந்தலைமுறையை சேர்ந்தவர்கள். முப்பதாண்டு கால யுத்தம் ஒரு தலைமுறை இடைவெளியை ஏற்படுத்தி விட்டிருந்தது. புலம்பெயர்ந்த தெற்கு சூடானியர்கள் எதிர்காலம் குறித்த கனாக்களுடன் திரும்பி வந்தாலும், தாயகத்தில் அவர்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. "புலம்பெயர்ந்தவர்கள் அரபு பேரினவாதிகளுடன் ஒத்துழைத்த துரோகிகள்" என்று கூறுகின்றனர். கார்ட்டூமில் SPLA யின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத் தாக்குதல்களுக்கு தகவல்களை வழங்கிய விசுவாசிகளுக்கும், அது தான் நிலைமை. "எமது தாயகத்தை விட்டோடியவர்கள் துரோகிகள்" என்று SPLM தெற்கு சூடானில் பிரச்சாரம் செய்து வந்ததை மறுக்க முடியாது. (மறுபக்கம் புலம்பெயர்ந்தோர் அனுப்பிய நிதியில் இயக்கம் வளர்ந்தது.) இருப்பினும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அந்த நிலைமைக்கு காரணம். தெற்கு சூடான் அபிவிருத்தியால் பின்தங்கிய பகுதி. அங்கே தொழில் வாய்ப்புக் குறைவு காரணமாக ஏழ்மை நிலைமையில் இருந்து மீள்வது கடினம். அதற்கு மாறாக, கார்ட்டூமில் குடியேறியோர் தொழிற்துறை வளர்ச்சியடைந்த நகரத்தின் பலாபலன்களைப் பெற்றுக் கொண்டவர்கள். கடின உழைப்பால் வசதியான வாழ்வைப் பெற்றுக் கொண்டவர்கள். இந்த பொருளாதார வேறுபாடு, தெற்கு சூடானில் சமூகப் பிரச்சினையாக பரிணமித்துள்ளது.

கடந்த காலங்களில், புலம்பெயர்ந்தோர் மத்தியில் SPLM மின் பரப்புரைகள் பல எதிர்பார்ப்புகளை தோற்றுவித்திருந்தன. "தெற்கு சூடான் விடுதலை கிடைத்து விட்டால் போதும், நாடு சுபீட்சமடையும். சுதந்திரமடைந்த பின்னர், வறுமையும், சமுதாய வேற்றுமைகளும் மறைந்து விடும்." என்று பிரச்சாரம் செய்து புலம்பெயர்ந்தோர் ஆதரவைத் திரட்டினார்கள். "விடுதலையடைந்த தெற்கு சூடானில் பாலும், தேனும் ஆறாக ஓடும்," என்று சொல்லாத குறை. புலம்பெயர்ந்த மண்ணில் தெற்கு சூடான் தேசியத்தை தீவிரமாக ஆதரித்தவர்கள், தாயகம் திரும்பிய பின்னர் உண்மையை உணருகின்றனர். "இங்குள்ள குழந்தைகள் வாய்க்காலில் ஓடும் அசுத்த நீரை பருகுவதைக் கண்டேன். வறுமை காரணமாக வெறும் உப்புக்கட்டியைக் கூட ஆகாரமாக உண்கின்றனர். எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கலங்கி நிற்கிறேன்..." இவ்வாறு கூறினார், கார்ட்டூமில் கணித ஆசிரியராக பணியாற்றிய ஒருவர். தெற்கு சூடானின் தலைநகரமாக மாறியுள்ள "ஜூபா"(Juba) வின் சனத்தொகை இரு மடங்காக உயர்ந்துள்ளது. நகரத்தில் குடியேறும் புதியவர்கள், காட்டுப்புறமாக உள்ள Güdel என்ற இடத்தில் வசிக்கின்றனர். தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் வறண்ட பிரதேசம் அது. "குடிநீர்க் குழாய் ஒன்று கூட இல்லை. பவுசரில் எடுத்து வரும் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும்." என்று அங்கலாய்த்தனர் புதிய நகர்வாசிகள்.

தெற்கு சூடான், சுதந்திரமடைந்த பின்னரும், வடக்கு சூடானில் தங்கியிருக்க வேண்டும். குறிப்பாக அதிக வருமானத்தை ஈட்டித் தரப் போகும் எண்ணை ஏற்றுமதிக்கு வடக்கு சூடானின் ஒத்துழைப்பு அவசியம். ஏற்றுமதிக்கு தேவையான குழாய்ப் பாதைகளும், துறைமுகங்களும் வடக்கு சூடானில் அமைந்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானத்தில் கணிசமான பங்கு, வடக்கு சூடானுக்கு கிடைக்கும் வண்ணம் ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும், அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரத் தடை விலக்கிக் கொள்ளப்படும். இத்தகைய காரணங்களால் தான்,கார்ட்டூம் அரசு தெற்கு சூடான் பிரிவினைக்கு சம்மதித்தது. எரிபொருள் விநியோகத்தை பொறுப்பேற்ற சீனா, வடக்கு சூடான் அரசுடனும், தெற்கு சூடான் அரசுடனும் புதிய ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்தில், சீனா வடக்கு சூடான் அரசுக்கு ஆயுத விநியோகம் செய்துள்ளமை அனைவருக்கும் தெரியும். இருந்த போதிலும், மேலைத்தேய ஆதரவு கிட்டுமென்பதற்காக, SPLM ஒருபோதும் சீன எதிர்ப்பு பிரச்சாரம் செய்யவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளின் நேரடி ஆதரவு இருந்த போதிலும், சுதந்திர தெற்கு சூடான் சீனாவை நட்பு நாடாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை SPLM அரசு உணர்ந்திருந்தது. இனி வரும் காலங்களிலும், தெற்கு சூடான் எண்ணையை சீனாவே வாங்கப் போகின்றது. சந்தையில் எண்ணை விலை நிர்ணயிப்பதன் மூலமும், வட்டிக்கு கடன் வழங்குவதன் மூலமும் தான், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் இலாபம் சம்பாதிக்கப் போகின்றன. தெற்கு சூடானை நிரந்தர கடனாளியாக்குவதன் மூலம், தமது காலனியாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கம்.

தெற்கு சூடான் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.
தெற்கு சூடான்: ஒரு புதிய தேசத்தின் ஜாதகம்
2. சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்

Monday, January 10, 2011

தெற்கு சூடான்: ஒரு புதிய தேசத்தின் ஜாதகம்

இதனை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, தெற்கு சூடான் சுதந்திரத்திற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஆரம்பமாகி விட்டிருந்தது. சூடானின் சக்தி வாய்ந்த அதிபர் பஷீர், தான் புதிய தேசத்தை வரவேற்பதாக ஏற்கனவே தெரிவித்தார். சந்தேகத்திற்கிடமின்றி, பெரும்பான்மை தெற்கு சூடான் மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம். ஆகவே "சுதந்திர தெற்கு சூடான் தேசம் உதயமாகின்றது...." என்ற நேர்மறையான பார்வையில் இருந்தே எழுத வேண்டியுள்ளது. முடிவுகள் எதிர்பார்த்ததற்கு மாறாகவும் அமையலாம். ஜனாதிபதி கருத்துக் கணிப்பு முடிவுகளை ஏற்க மறுக்கலாம். அதற்கு பல காரணங்களைக் கூறலாம். அவர் கூறக் கூடிய அதிகபட்ச காரணம், தெற்கு சூடானில் சாத்தியமாகக் கூடிய புதிய மோதல்கள்.

இன்று வரை, சமாதான ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எதுவும் இன்றி நடைமுறைப் படுத்தப் படுகின்றது. இருப்பினும் அரசு, கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரண்டு தரப்பும் அந்தப் பிராந்தியத்தில் ஆயுதங்களைக் குவிப்பது தொடர்பான செய்திகள் கிடைத்துள்ளன. அரசு எனும் பொழுது, அரச படைகளைத் தவிர, துணை இராணுவக் குழுக்களே அச்சமூட்டுகின்றன. எந்தவொரு நாட்டின் உள்நாட்டு யுத்தத்திலும் அரச ஆதரவுடன் இயங்கும் துணைப் படைகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதால், அவை யாருக்கும் பதில் கூறக் கடமைப் பட்டவர்களல்ல. சூடானும் அதற்கு விதி விலக்கல்ல. போர் நிறுத்த ஒப்பந்தம், துணைக் இராணுவக் குழுக்களின் ஆயுதங்கள் களையப் பட வேண்டும் என்று கூறுகின்றது. ஆனால் அது பெருமளவில் நடக்கவில்லை என்று தெரிய வருகின்றது. இலங்கையில் புலிகள் அமைப்பில் இருந்து கருணா குழு பிரிந்து சென்றதைப் போல, முன்னாள் SPLA தளபதி ஒருவரின் குழு அரச படைகளுடன் சேர்ந்தியங்கி வருகின்றது.

அரபு மொழி பேசும் அரச படையினரை எதிர்த்து போரிட்ட கிளர்ச்சிக் குழுவான SPLA இயக்கம் தெற்கு சூடானை பிரதிநிதித்துவப் படுத்தியது. வெளியுலகில் இஸ்லாமிய வடக்கு சூடானும், கிறிஸ்தவ தெற்கு சூடானும் போரில் ஈடுபட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்களும் அவ்வாறு தான் செய்தி தெரிவிக்கின்றன. ஆனால் கள நிலைமை அந்தளவு எளிமையாக புரிந்து கொள்ளக் கூடியதல்ல. ஆப்பிரிக்க பழங்குடியினங்கள் வாழும் தெற்கு சூடான், பிரிட்டிஷ் காலனிய காலத்தில் தான் இணைக்கப்பட்டது. ஏற்கனவே அபிவிவிருத்தியடைந்த பகுதியான வடக்கு சூடானில் தான், பிரிட்டிஷாரின் காலனிய ஆட்சியதிகாரம் நிலவியது. தெற்கு சூடானை "நாகரிகமடையச் செய்யும் பொறுப்பை" கிறிஸ்தவ மிஷனரிகளிடம் ஒப்படைத்தார்கள். அவ்வாறு தான் தெற்கு சூடான் கிறிஸ்தவ மயமாகியது. பல பழங்குடியின கிறிஸ்தவர்கள் இன்னமும் தமது மரபுகளைப் பேணி வருகின்றனர். உதாரணத்திற்கு, கிறிஸ்தவ போதனைக்கு மாறாக பல தார மணம் இப்போதும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது.

வடக்கு சூடானை விட பெருமளவு பின்தங்கியுள்ள தெற்கு சூடானில், வெளிநாட்டு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் தான, தர்மம் செய்து கொண்டிருக்கின்றன. மறைமுகமாக SPLA க்கும் நிதி கொடுத்ததாக தகவல். அரபு-இஸ்லாமிய பேரினவாதத்தை, கிறிஸ்தவ தெற்கு எதிர்த்துப் போரிடுகின்றது என்று அவர்கள் தான் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தலைநகர் கார்ட்டூமில் இஸ்லாமியவாதிகளின் மத்திய அரசும் அவ்வாறான கருத்துகளைப் பரப்பி வருகின்றது. கிறிஸ்தவ சபைகளுக்கு போட்டியாக, அரச ஆதரவு பெற்ற இஸ்லாமிய அமைப்புகளும் தெற்கு சூடானில் மதம் பரப்புகின்றன. இரண்டு மதங்களும் "ஆப்பிரிக்க காட்டுமிராண்டிகளை, நாகரிக மனிதர்களாக்கும் நற்பணியில்" ஈடுபட்டிருக்கின்றன!
எனது சூடானிய நண்பர்களிடம் இருந்து பலதரப்பட்ட கருத்துகளைக் கேள்விப்பட்டேன். வடக்கை சேர்ந்தவர் இடதுசாரி நண்பர்கள் தெற்கு சூடானின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்தனர். தெற்கு சூடானை சேர்ந்த நண்பர்கள் பொதுவாக SPLA ஆதரவாளர்கள். சூடானை ஆளும் வர்க்கம், அரபு பேரினவாதத்தையும், இஸ்லாமிய மத தூய்மைவாததையும் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது அரசியல் சந்தர்ப்பவாதம் மட்டுமே என்பது ஆழமாக பார்ப்பவர்களுக்கு புரியும். பெரும்பாலும் மோதல்களின் நோக்கம் பொருளாதார வளங்களை பங்கு போடுவதற்கான போட்டியாகவே உள்ளது.

தெற்கு சூடான் தனியாகப் பிரிந்து செல்லும் வாக்கெடுப்பு நடப்பதைக் கேள்விப்பட்ட பல தமிழினவுணர்வாளர்கள், "இது போன்றே நாளை எமக்கு தமிழீழம் கிடைக்கும்." என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். சாதாரண மக்கள் எப்போதும் பிரச்சினைகளை ஆழமாக அலசி ஆராயாமல், செய்திகளை வைத்து அரசியல் பேசுகின்றனர். தமிழர்கள் மட்டும் தானா அப்படி நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்? சூடானிலேயே டார்பூர், மேல் நைல்நதிப் பிரதேச மக்கள் எல்லாம் தமக்கு தனி நாடு தேவை என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். சூடான் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடு. அதற்குள் எத்தனையோ வேறு பட்ட மொழிகளைப் பேசும், அல்லது வேறுபாடான கலாச்சாரங்களைக் கொண்ட இனங்கள் வாழ்கின்றன.
தெற்கு சூடானை முன்மாதிரியாகக் கொண்டு, பிற மாநிலங்களில் போர்கள் உருவாகலாம். கார்ட்டூமில் மத்திய அரசு, அரசமைக்க இயலாத பலவீனமான நிலை ஏற்படலாம். ஏற்கனவே டார்பூர் பிரதேச போரில் இனப்படுகொலை நடந்ததாக சர்வதேச சமூகம் குற்றம் சாட்டி வருகின்றது. இது சம்பந்தமாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிமன்றத்தினால், ஜனாதிபதி பஷீர் குற்றவாளியாக காணப்பட்டார். சர்வதேச நீதிமன்றத்திற்கு சவால் விடும் வகையில், பஷீர் அரபு நாடுகளுக்கு விஜயம் செய்து வருகின்றார். சர்வதேச அரங்கில் இன்னுமொரு போர்க்குற்ற விசாரணை நாடகம். உண்மையில் சர்வதேசத்தின் அக்கறை டார்பூரின் மேல் அல்ல. போர்க்குற்றச் சாட்டுகள் கூட பஷீர் மீதான அழுத்தத்தை பிரயோகிப்பதற்காக மட்டுமே. சர்வதேசம் (இங்கே, அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் குறிக்கும்) தெற்கு சூடான் மீது தான் அதிக அக்கறை கொண்டுள்ளது. அந்தப் பிரச்சினைக்கு தாம் விரும்பும் தீர்வை, அதாவது தனியான தேசம், கொண்டு வர எத்தனித்தனர். அதில் வெற்றியும் கண்டு விட்டனர்.

மேலுக்கு சுதந்திரம் பற்றி பேசினாலும், தெற்கு சூடானில் இருக்கும் எண்ணெய் வளம் மீது தான் எல்லோரும் கண் வைத்துள்ளனர். சூடானில் இருந்து எண்ணெய் அகழ்ந்து ஏற்றுமதி செய்யும் தொழிற்துறையில் சீனா மட்டுமே ஈடுபடுகின்றது. சீனாவை விரட்டி விட்டு, மேற்குலக எண்ணெய்க் கம்பனிகள் நுழையப் பார்க்கின்றன. இன்று சூடானின் மொத்த வருமானத்தில், எண்ணெய் உற்பத்தி 50 % பங்கை வகிக்கின்றது. தெற்கு சூடான் தனி நாடானால், அதன் நூறு வீத வருமானமும் எண்ணெயில் இருந்து தான் கிடைக்கும். பிரிவினைக்கான வாக்கெடுப்புக்கு முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தப் படி, எண்ணெய் வருமானத்தில் அரைவாசிப் பங்கு, வடக்கு சூடானுக்கும், அரைவாசி தெற்கு சூடானுக்கும் செல்ல வேண்டும்.

மேலும் வடக்கு சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் நடுவில் இருக்கும் அபெய் மாகாணம் தனியான வாக்கெடுப்பை நடத்துகின்றது. எந்த நாட்டுடன் சேர்வது என்பது குறித்து அந்த மாகாண மக்கள் முடிவு செய்யப் போகின்றார்கள். அந்த முடிவு மிக முக்கியமானதாக கருதப் படுகின்றது. ஏனெனில் மற்ற பகுதிகளை விட அதிகளவு எண்ணெய் அபெய் மாகாணத்தில் காணப்படுகின்றது. இன்னொரு விடயமும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். தெற்கு சூடான் இறைமையுள்ள தனி நாடு என்ற அந்தஸ்தைப் பெற்றாலும், அது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமே. பொருளாதார ரீதியாக வடக்கு சூடானில் தங்கியிருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் குழாய்கள் வடக்கு சூடானூடாக சென்று தான் கடலை அடைகின்றன. இதனால் வடக்கு சூடானும், தெற்கு சூடானும் இரு தரப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு நல்லுறவைப் பேண வேண்டியிருக்கும்.

சூடான் குறித்த முன்னைய பதிவுகள்:
சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்
சூடான்: எண்ணைக்காக பிரிவினை கோரும் டார்பூர்
நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு