Saturday, April 12, 2025

மலேசியாவின் "ஈழப் பிரச்சனை"! பலர் அறியாத மலே பேரினவாத ஒடுக்குமுறை!!

 
இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கைக்கும், மலேசியாவுக்கும் இடையில் சில அதிசயப் படத் தக்க ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு நாடுகளிலும் இனப்பிரச்சனைக்கான மூல காரணம், தேர்தலில் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவ படுத்திய ஆட்சியாளர்களின் பேரினவாத கொள்கை, சிறுபான்மை இனத்தவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் எல்லாமே ஒரே மாதிரி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

👇👇👇


1. தேசிய இனங்கள்:

இலங்கை/மலேசியா

72% பௌத்த சிங்களவர்/ இஸ்லாமிய மலேயர்.

12% இந்து தமிழர்/ பௌத்த சீனர் 

7% முஸ்லிம்கள்/ இந்துக்கள் (தமிழர்கள்). 

இரண்டு நாடுகளிலும் இரண்டாவது பெரும்பான்மை இனம் தான் பெரும்பான்மை இனத்தின் பேரினவாத அடக்குமுறையால் பாதிக்கப் பட்டது. அதாவது இலங்கையில் தமிழர்கள் மாதிரி மலேசியாவில் சீனர்கள். பெரும் நகரங்களில் அரசுத் துறைகளில், வணிகத்தில் சிறந்து விளங்கியதால் நாட்டுப் புறங்களில் வாழ்ந்த பெரும்பான்மை இனத்தவரின் பொறாமைக்கும், வெறுப்புக்கும் ஆளாகினர். எங்கேயும் இனப் பிரச்சினைக்கு பின்னால் இருப்பது பொருளாதார பிரச்சினை தான்.

2. ஆட்சி மொழி:

இலங்கையிலும்,  மலேசியாவிலும் ஆரம்பத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. 

இலங்கையில் 1956 தேர்தலில் பெருமளவு சிங்கள வாக்குகளை வென்ற SLFP சிங்களத்தை ஆட்சி மொழி ஆக்கியது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலில் பெருமளவு மலேயா வாக்குகளைப் வென்ற Pan- Malayan Islamic Party மலே மொழியை ஆட்சி மொழி ஆக்கியது. 

3. இனக் கலவரம்:

இலங்கையில் 1956 தேர்தலுக்கு பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலுக்கு  பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கோலாலம்பூர் நகரில் சீனர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. நூற்றுக்கணக்கான சீனர்கள் கொல்லப்பட்டனர். அது மலே- சீன இனங்களுக்கு இடையில் மிகப்பெரிய விரிசலை உண்டாக்கியது. 

உண்மையில் இலங்கையை விட மலேசியாவில் தான் சிறுபான்மை இனத்தவர் மீதான ஒடுக்குமுறை மிகக் கடுமையாக உள்ளது. 

குறிப்பாக, மலேசிய பிரஜைகள் அனைவரும் அரசமைப்பு சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். (பெரும்பான்மை இனத்தவருக்கு சிறப்புரிமை வழங்குகிறது என்றெல்லாம் விமர்சிக்க முடியாது.) பிற மதத்தவர்களும் 

இஸ்லாமிய மதத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். (முன்னுரிமை அல்ல, அதற்கும் மேலே!) 

அதை விட, "சர்ச்சைக்குரிய" விஷயங்களை பற்றி பேசுவதும், எழுதுவதும் தடைசெய்யப் பட்டுள்ளது. அதாவது மலே இனத்தவரின் உரிமைகள் தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாது. மொழிப் பிரச்சினை பற்றி பேச முடியாது. 


பிற்குறிப்பு:

இவ்வளவு அடக்குமுறை இருந்திருந்தால் ஏன் மலேசியாவில் சீனர்கள் தனி நாடு கேட்டு ஆயுத போராட்டம் நடத்தவில்லை என்று யாராவது கேட்கலாம். 2 ம் உலகப் போர் காலத்தில் இருந்து ஒரு தசாப்த காலமாக கம்யூனிஸ்டுகளின் ஆயுத போராட்டம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் சீனர்கள். கணிசமான அளவில் மலேயர், தமிழர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். இன வேற்றுமை கடந்த வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதில் மலேசிய அரசும், முன்னாள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களும் உறுதியாக இருந்தனர். அயல் நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்த மாதிரி மலேசியாவில் நடக்கலாம் என்ற அச்சம் நிலவியது. 

சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட சிங்கப்பூரில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு காணப் பட்டதால் தான் சிங்கப்பூரை தனி நாடாக பிரித்து கம்யூனிச எதிர்ப்பாளர் லீ குவான் யூவிடம் கொடுத்தனர். மலேசிய அரசும் அதை தனக்கு சாதகமான விஷயமாக பார்த்தது. அப்போது தானே இஸ்லாமிய- மலே பேரினவாத கொள்கையை முழு வீச்சில் செயற்படுத்த முடியும்?

அனுர தமிழர்களுக்கு எதிரானவரா? விஷமிகளின் இனவாத பிரச்சாரம்!


ஜனாதிபதி அனுர குமார, முன்னொரு காலத்தில், அதாவது அரசும் புலிகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில், "தமிழின படுகொலையை ஆதரித்து", அல்லது "தமிழ் மக்களுக்கு எதிரான" ஆர்ப்பாட்டத்தில் கல‌ந்து கொண்டதாக ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப் படுகிறது.

அதற்கு "ஆதாரமாக" இந்தப் படத்தை பகிர்ந்து உள்ளனர். சரி, இந்தப் படத்தில் ஆர்ப்பாட்டத்தில் இருந்த பதாகைகளில்  என்ன எழுதி இருக்கிறது என்று யாராவது வாசித்து கூற முடியுமா? 

//வன்னிப் புலிகளுக்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சக்தியை கட்டி எழுப்புவோம்.// என்று ஒன்றில் எழுத பட்டுள்ளது. 

கவனிக்கவும்: "தமிழர்களும்"!

//LTTE தலைவர்களை Hague(ICC) இல் விசாரி// என்று இன்னொன்றில் உள்ளது. 

கவனிக்கவும்: "தலைவர்களை"! 

இது எப்படி தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு ஆகும்? கண்ணுக்கு எட்டிய வரையில் "தமிழர்களை அழிக்க வேண்டும்" என்பது மாதிரியான எதையும் காணவில்லை. 

இப்போது எழும் கேள்வி, புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் அதை எப்படி தமிழர்களுக்கு எதிரானதாக கருத முடியும்? ISIS க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் அதை முஸ்லிம்களுக்கு எதிரானதாக கருத முடியுமா? 

"ஏன் புலிகள் தமிழர்கள் இல்லையா?" என்று யாராவது ஒரு அறிவாளி கேள்வி கேட்க கூடும். அப்படி பார்த்தால் "அரச படையினர் சிங்களவர்கள்...", "ISIS உறுப்பினர்கள் முஸ்லிம்கள்..." இப்படி ஏதாவது சாட்டுபோக்கு சொல்லி தப்பிக்கலாம்.  மேற்குறிப்பிட்ட ஆயுதபாணிகளை எதிர்த்தால் அது ஒட்டு மொத்த இனத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கருதுவது கூட இனவாதக் கண்ணோட்டம் தான். 

அதை விட ஈழப் போர் (இதையும் "ஈழ போராட்டம்" என்று திரிப்பார்கள். போராட்டம் அல்ல போர்) நடந்த காலத்தில் ஒரு பக்கம் அரச படையினரும் மறுபக்கம் புலிகளும் போரில் ஈடுப்பட்ட இரண்டு தரப்பினர் ஆவர். ஒரு தரப்பான புலிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் அது "தமிழின அழிப்பு ஆதரவு" என்று ஒரு தற்குறி மட்டுமே சொல்ல முடியும். இப்படி பாருங்கள். 

அரச படையினரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் அது "சிங்கள இன அழிப்பு ஆதரவு" என்று கூற முடியுமா? எப்போதுமே இனவாதிகள் அவ்வாறு தான் திரிப்பார்கள். 

மக்கள் தான் இனவாதிகள் விரித்த வலையில் விழுந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.