Tuesday, March 10, 2020

நூல் விமர்சனம் - இரா. பாரதிநாதன் எழுதிய "ஆக்காட்டி"


நூல் விமர்சனம் - இரா. பாரதிநாதன் எழுதிய "ஆக்காட்டி". தோழர் இரா. பாரதிநாதன் ஏற்கனவே எனக்கு ஓர் அரசியல் போராளியாக அறிமுகமானவர். நான் வாசித்த அவரது முதல் நாவல் இது தான். இந்த நூலை வாசிக்கத் தொடங்கும் போதே வாசகரை தனது எழுத்தால் கவரும் ஆற்றல் அவருக்கு வாய்த்திருக்கிறது. உண்மையை சொன்னால், ஒரு எட்டு மணிநேர ரயில் பயணத்தின் போது 230 பக்கங்கள் கொண்ட இந்த நூல் முழுவதையும் வாசித்து முடித்து விட்டேன்.

இந்த நாவல் அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இதில் வரும் பாத்திரங்கள் கற்பனை தான். ஆனால், மக்களின் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது உண்மை. அதை ஏற்கனவே பலர் அறிந்திருப்பார்கள். உண்மைச் சம்பவங்களுக்கு பொருத்தமாக ஒரு கதையை புனைவது இலகுவான காரியம் அல்ல. அதிலும் சாமானியர்களுக்கும் புரியும் வகையில் அரசியல் கருத்துக்களை கற்றுக் கொடுப்பதற்கும் ஒரு தனித் திறமை வேண்டும். அது தோழர் பாரதிநாதனிடம் இயற்கையாகவே உள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த மீத்தேன் எரிவாயு எதிர்ப்புப் போராட்டம் தான் கதைக்கரு. மீத்தேன் எரிவாயு என்றால் என்ன? எதற்காக மக்கள் அதை எதிர்த்துப் போராடினார்கள்? உண்மையில் இது போன்ற விபரங்கள் அன்றாடம் அரசியல் ஈடுபாடு கொண்ட பலருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. பாரதிநாதன் அந்த விடயத்தில் அதிக சிரத்தை எடுத்து எழுதி இருக்கிறார். எதற்காக அரசும், வணிக நிறுவனங்களும் மீத்தேன் வாயு எடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன? அதனால் அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் என்ன? என்றெல்லாம் விளக்கிச் சொல்லி இருக்கிறார்.

ஆரம்பத்தில் அரசியல் அறிவற்று இருந்த சாதாரண நடுத்தர வர்க்க இளைஞன் தான் கதையின் நாயகன். தற்செயலாக சர்ச்சைக்குரிய மாங்குடி கிராமத்திற்கு தாத்தா, பாட்டியை பார்க்கச் செல்வதில் இருந்து கதை தொடங்குகிறது. அது ஒரு சாதாரணமான உறவினர் வீட்டுக்கு போகும் நிகழ்வாக இருந்த போதிலும் எரிவாயு திட்டத்தை நடைமுறைப் படுத்த வரும் அரசியல்வாதிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதிலிருந்து மீத்தேன் வாயு, அதனால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தேடி அறிந்து கொள்கிறான்.

கார்த்தியின் காதலி, ஈழத்தமிழ்ப் பெண் பிருந்தா மூலம் அரசியல் உணர்வு பெறுவதாக காட்டி இருப்பது ஒரு திருப்புமுனை. ஏற்கனவே கிராமிய மக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வில் மனதை பறிகொடுத்த கார்த்தி, ஓர் அரசியல் போராளியாக திரும்பி வருகிறான். அதற்காக தாத்தாவுடன் முரண்பட்டு நகரத்து ஆடம்பர வாழ்க்கையை தேர்ந்தெடுத்த தந்தையை பகைத்துக் கொள்கிறான். இதன் மூலம் கதாசிரியர் தலைமுறை இடைவெளி என்ற விடயத்தில் அக்கறை காட்டினாலும், அது அரசியல் அடிப்படை கொண்டது என்பதையும் உணர்த்துகிறார்.

கார்த்தி என்ற பாத்திரத்தின் மூலம், நகரங்களில் வாழும் படித்த வாலிபர்கள் கிராமங்களில் வாழும் மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய சமூகக் கடமையை கதாசிரியர் உணர்த்துகிறார். போராடுவதற்கான மனவுறுதி இருந்தால் மட்டும் போதாது. சரியான அரசியல் நிலைப்பாடும் அவசியம். ஒருவரது போராட்ட வாழ்க்கை குடும்ப உறுப்பினர்களிடையே பிளவுகளையும் உண்டாக்கும். இந்த நாவலில் வருவது போல பெற்ற தந்தையையும் கருத்தியல் ரீதியாக எதிர்க்க வேண்டி இருக்கும். தாய்மார் ஆபத்துக்களை எதிர்பார்த்து தடுக்கப் பார்ப்பார்கள். இந்த நாவலில் கார்த்தியுடன் துணை நின்று போராடும் கலியன் தாத்தா, காதலி பிருந்தா மற்றும் அவளது தந்தை சிவராசா போன்று எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

இருப்பினும், எனக்கு இந்த நாவலுடன் உடன்பட முடியாத ஒரு குறையையும் சுட்டிக் காட்ட வேண்டும். அதற்கான விளக்கத்தையும் கீழே தருகிறேன்: ஓர் ஈழத்தமிழ்ப் பெண் தான் இந்த நாவலின் நாயகி. அப்படி ஒரு பாத்திரத்தை படைத்தமைக்கு முதற்கண் பாராட்டுக்கள். அந்த ஈழப் பெண்ணின் தகப்பன் இலங்கையில் சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர் என்றும் அறிமுகப் படுத்தப் படுகிறார். அவர் மூலமாகத் தான் கார்த்தி சரியான (மார்க்சிய) அரசியல் வழிகாட்டலை பெற்றுக் கொள்கிறான். அதெல்லாம் இந்த நாவலுடன் தொடர்புடைய விடயங்கள் தான். ஆனால், தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுப்பது தொடர்பாக நடக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் நில அபகரிப்பை, இலங்கையில் சிங்களவர் தமிழரின் நிலத்தை பறித்துக் கொண்ட விடயத்துடன் ஒப்பிடும் போது தான் சறுக்கி விடுகிறார்.

இந்த விடயத்தில், இலங்கையில் நடப்பது வெறும் "இனப் போராட்டம்", ஆனால் தமிழகத்தில் நடப்பது "வர்க்கப் போராட்டம்" என்பது போன்ற கருத்தை உருவாக்குவது ஏற்கத் தக்கதல்ல. (ஒருவேளை நான் தவறாக புரிந்து கொண்டால் மன்னிப்புக் கோருகிறேன்.) இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினை உண்மையில் வர்க்கப் பிரச்சினையை மறைப்பதற்கான போர்வையாக செயற்படுகின்றது. பெரும் வணிக நிறுவனங்கள் மீத்தேன் எரிவாயுவுக்காக தமிழகத்து விவசாய நிலங்களை அபகரிப்பது போன்ற சம்பவங்கள் இலங்கையில் நடக்கவில்லையா? இந்த நாவலில் இந்துக்கள்- முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து போராடுவது போன்று, இலங்கையில் சிங்களவர்- தமிழர் ஒன்று சேர்ந்து போராடவில்லையா? அந்த உதாரணங்களை சுட்டிக் காட்டி இருந்தால், நாவலின் பெறுமதி கூடியிருக்கும்.

அண்மையில் புத்தளத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான பாரிய தொட்டி அமைப்பதற்கு எதிரான போராட்டத்தில் மூவின மக்களும் கலந்து கொண்டனர். ஏன் இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னர் மலையகத்தில் கொத்மலை நீர்த்தேக்க திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் சிங்கள- தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து நடத்தியது தான். அத்துடன் சிறிலங்கா அரசு தமிழர்களை மட்டும் ஒடுக்கவில்லை. முழுக்க முழுக்க சிங்களப் பிரதேசமான வெலிவாரியாவில் சுற்றுச் சூழல் மாசடைதலுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சிலரை சுட்டுக் கொன்ற இராணுவம் "முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடத்துவோம்" என்று சிங்கள மக்களை மிரட்டியது.

ஆக்காட்டி நாவலின் நாயகியான பிருந்தா, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பிறகு சிங்களக் காடையர்கள் தம்மிடம் இருந்த நிலங்களை பறித்துக் கொண்டதாக கூறுகின்றாள். அத்துடன் புலிகள் தமிழர்களுக்கு "பாதுகாப்பாக" இருக்கும் வரை சிங்களக் காடையர்கள் பயந்திருந்தார்கள் என்றும் கூறுகின்றாள். இது ஒரு தவறான தகவல். ஈழப்போர் தொடங்குவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பறிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப் பட்டன. அன்று புலிகளோ, வேறெந்த இயக்கமோ அடாத்தான நில அபகரிப்புக்கு எதிராக ஆயுதமேந்தவில்லை. இல்லவே இல்லை! யாழ்ப்பாண நடுத்தர வர்க்க இளைஞர்களின் உத்தியோகக் கனவுகளை கலைத்த தரப்படுத்தல் சட்டம் கொண்டு வந்த பின்னர் தான் தனி ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இதனை முள்ளிவாய்க்கால் வரை போராடிக் கொண்டிருந்த இடதுசாரியான தோழர் பாலகுமார் கூட குறிப்பிட்டு சொல்லி வந்தார்.

உண்மையில் இலங்கையில் நடந்த நில அபகரிப்புக்கு பின்னாலும் ஒரு வர்க்கக் காரணி இருந்தது. ஒரு பேரினவாத அரசு பெரும்பான்மை சமூகத்தின் ஓட்டுகளை நம்பி அரசியல் நடத்தும். இந்தியாவில் இந்துக்கள் என்றால், இலங்கையில் சிங்களவர்கள் தான் பேரினவாத அரசின் ஆதரவுத்தளம். இன்று இந்தியாவில் கொண்டு வரப்பட்ட CAA சட்டம் போன்றதொரு சட்டம் தான், முன்னர் இலங்கையில் மலையகத் தமிழரின் குடியுரிமையை பறித்தது. அசாமில் குடியேற்ற பட்ட வங்காளி இந்துக்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப் பட்ட மாதிரி, கிழக்கு மாகாணத்தில் குடியேற்றப் பட்ட சிங்களவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப் பட்டது.

மேலும் சிறிலங்கா அரசு சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியது. முதலாவதாக, தென்னிலங்கையில் நிலமற்ற ஏழை சிங்கள விவசாயிகளுக்கு, கிழக்கிலங்கை ஏழை விவசாயத் தமிழர்களின் நிலங்களை பறித்துக் கொடுத்தது. இதன் மூலம் ஒரு வர்க்கப் பிரச்சினை இனப்பிரச்சினையாக மடைமாற்றப் பட்டது. இரண்டாவதாக, இயற்கை வளம் நிறைந்த கிழக்கிலங்கை பிரதேசத்தில் சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் அரசுக்கு விசுவாசமான ஆதரவுத்தளம் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக இன்று ஒரு பக்கத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் வளச் சுரண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், மக்கள் இனரீதியாக பிளவு பட்டு மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் எல்லாம் ஏற்கனவே சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பேசப் பட்டவை தான். ஆனால், அதை ஆக்காட்டி நாவலில் வரும் சிவராசா பேசாமல் இருப்பது அதிசயமே! அவரது ஒரு மகன் போராளியாக இருந்து போரில் கொல்லப் பட்டதாக நாவலில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. யாழ்ப்பாணத்தில் முன்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்த பெற்றோரின் பிள்ளைகள் ஈழ விடுதலைப் போராளிகளாக இருந்திருக்கின்றனர். புலிகளில் மட்டுமல்லாது எல்லா இயக்கங்களிலும் சேர்ந்திருந்தனர். ஆனால் அவர்களது அரசியல் சிந்தனை பெற்றோரினுடையதை விட முற்றிலும் வேறானதாக இருந்தது.

பெற்றோர் இடதுசாரிகள் என்றால், பிள்ளைகள் வலதுசாரிகளாக இருந்தனர். இதுவும் தலைமுறை இடைவெளி தான். இலங்கையில் நவ தாராளவாத கொள்கைகள் அறிமுகப் படுத்தப் பட்ட பின்னர் தான் ஈழப்போராட்டம் தீவிரமடைந்தது. இரண்டுக்கும் தொடர்புள்ளது. மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட சிவராசா இலங்கையின் வர்க்க முரண்பாடுகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது ஆச்சரியத்திற்குரியது.

சன்முகதானின் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக குறிப்பிடப் படும் சிவராசா, யாழ்ப்பாணத்தில், அறுபதுகளில் அவரது கட்சியினர் முன்னெடுத்த தீண்டாமை ஒழிப்பு போராட்டம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அன்று அதுவும் வர்க்க உணர்வு கொண்ட ஆயுதப் போராட்டமாக பரிணமித்து இருந்தது. இத்தனைக்கும் தமிழகத்தில் இரட்டைக் குவளை வைக்கும் சாதிய ஒடுக்குமுறை, அதற்கு எதிராக நடந்த இரணியன் போராட்டம் பற்றி எல்லாம் நூலாசிரியர் இந்த நாவலில் விரிவாக எழுதி உள்ளார்.

இது மட்டும் தான் நாவலில் நான் கண்ட குறைபாடு. எனது நண்பரும் நாவலாசிரியருமான இரா. பாரதிநாதன் இந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் ஆக்காட்டி ஒரு சிறந்த நாவல் என்பதில் ஐயமில்லை. தமிழில் இது போன்ற எழுத்துக்கள் வருவது மிக அரிது. தோழர் இரா. பாரதிநாதன் இன்னும் பல அரசியல் நாவல்கள் எழுத வேண்டும். 

No comments: