நவீன போரியல் வரலாற்றில் முதல் தடவையாக, இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட சோவியத் செம்படையில் மட்டும் தான் பெண்கள் பெருமளவில் (சுமார் 800.000 பேர்.) போரிட்டனர்.
போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த 1943 ம் ஆண்டு, செம்படை வீரர்களில் பத்தில் ஒருவர் பெண். அதாவது மொத்த படையினரில் 10%. அதை விட நாஸிகள் ஆக்கிரமித்த பிரதேசங்களில் இயங்கிய கெரில்லா குழுக்களில் ஏராளமான பெண் போராளிகள் இருந்தனர். அன்று அவர்கள் செம்படை வீரர்களாக கணக்கெடுக்கப் படவில்லை. அதையும் சேர்த்தால் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.
செம்படையில் பல பெண்கள் லெப்டினன்ட் போன்ற உயர் பதவிகளிலும் இருந்தனர். மருத்துவர்களாக அல்லது தாதிகளாக பணியாற்றிய பெண்கள் கூட இராணுவப் பயிற்சி பெற்றிருந்தனர். அவர்களும் ஆயுதம் வைத்திருந்தனர்.
சோவியத் வான் படையின் மூன்று படையணிகள் முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே கொண்டியங்கின. பெண் விமானிகள் செலுத்திய குண்டு போடும் விமானங்கள் போர் முனையில் நாஸிப் படையினரை துவம்சம் செய்தன.
சினைப்பர் துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவதில் பெண்களே வல்லவர்களாக கருதப் பட்டனர். அந்தளவுக்கு சினைப்பர் படைப்பிரிவில் பெண்கள் தான் பெரும்பான்மையாக இருந்தனர். அவர்களில் ஒருவர் லியூட்மிலா பவிஷென்கோ. 309 நாஸிப் படையினரை கொன்று உலக சாதனை படைத்தவர்.
No comments:
Post a Comment