ஜோர்ஜியா பயணக் கதை - இரண்டாம் பாகம்
ஸ்டாலின் பிறந்த காலத்தில் ஜோர்ஜியா என்ற தேசம் இருக்கவில்லை. பெரும்பாலான ஜோர்ஜியர்களுக்கும் தேசிய இன உணர்வு இருக்கவில்லை. கருங்கடலுக்கும், கஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை காவ்காசாஸ் பிரதேசம் என்று அழைப்பார்கள். அங்குள்ளவர்கள் பெரும்பாலும் மலை வாழ் மக்கள். இன்றைக்கும் பல்வேறு மொழிகளை பேசுகிறவர்கள். ஜோர்ஜிய மொழியுடன் தொடர்புடைய மிங்கேறிலியன், ஸ்வான் ஆகிய மொழிகள் இன்று அழிந்து வருகின்றன. தற்போது நாற்பதாயிரம், அல்லது எண்பதாயிரம் பேர் தான் அந்த மொழிகளைப் பேசுகிறார்கள். ஜோர்ஜியாவின் மொத்த மக்கட்தொகை நான்கு மில்லியன் கூட இல்லை.
ஜோர்ஜியாவில் ஸ்டாலின் பிறந்த கோரி (Gori) எனும் சிறு நகருக்கு அருகில், ஒசெத்தியர் எனும் ஈரானிய மொழி ஒன்றைப் பேசும் சிறுபான்மை இன மக்கள் வாழும் பிரதேசம் உள்ளது. தொண்ணூறுகளில் ஜோர்ஜியா தனியான சுதந்திர நாடானாதும், ஒசெத்தியர் தமக்கென தனிநாடு கோரினார்கள். ஆனால் அது சாத்தியப் படவில்லை. 2008 ஆம் ஆண்டு அங்கு பெரியதொரு யுத்தம் நடந்தது. ஜோர்ஜிய இராணுவத்தின் படையெடுப்பை எதிர்த்து நிற்க முடியாத ஒசேத்திய கெரில்லாப் படையினர் ரஷ்யாவை உதவிக்கு அழைத்தார்கள்.
அந்த நேரம் ஜோர்ஜியாவை ஆண்ட சாகாஷ்விலி தனது மேற்கத்திய சார்பு அரசியல் நிலைப்பாடு காரணமாக ரஷ்யாவை பகைத்திருந்தார். ரஷ்யாவும் இது தான் சாட்டு என்று "ஒசேத்திய சிறுபான்மை இன மக்களை பாதுகாப்பதற்காக" இராணுவத்தை அனுப்பியது. ஜோர்ஜிய இராணுவத்தை ஓட ஓட அடித்து விரட்டிய ரஷ்யப் படைகள், கோரி வரை வந்து விட்டன. அப்போது கோரியை விட்டு ஜோர்ஜியர்கள் வெளியேறியதும், நகர மத்தியில் ரஷ்யப் படையினர் நின்றதும் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக பேசப் பட்டன.
உண்மையில் அன்று ரஷ்யப் படையினர் தமது பலத்தைக் காட்டுவதற்காகவே கோரியை கைப்பற்றி இருந்தனர். சில நாட்களின் பின்னர் தாமாக வெளியேறி ஒசேத்திய தனிநாட்டு எல்லையோடு நின்று விட்டனர். இந்த நிலைமை இப்போதும் தொடர்கிறது. ஆனால், முன்பிருந்த பதற்றம் தணிந்து சமாதானம் நிலவுகிறது. அப்போது தொலைக்காட்சிகளில் கோரி நகர சபைக் கட்டிடமும், அதற்கு முன்னால் நின்ற துப்பாக்கி ஏந்திய ரஷ்யப் படையினரையும் காட்டினார்கள். அப்போது அங்கே ஒரு பிரமாண்டமான ஸ்டாலின் உருவச் சிலை இருந்தது.
கோரி நகர மத்தியில் இருந்த ஸ்டாலின் சிலை, 2010 ம் ஆண்டு "சோவியத் நீக்கம்" என்ற பெயரில் அகற்றப் பட்டது. பகலில் செய்தால் ஊர் மக்கள் எதிர்ப்பார்கள் என்ற பயத்தில், இரவோடிரவாக வந்து சிலையை பெயர்த்து எடுத்துச் சென்று நகருக்கு வெளியே வீசி விட்டனர். தற்போது பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று சிலையை மீண்டும் கொண்டு வர திட்டமிடுகின்றார். இது தொடர்பாக நகரசபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அனேகமாக அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜோர்ஜியா வரும் சுற்றுலாப் பயணிகளில் குறைந்தது அரைவாசியாவது ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கும் ரஷ்யாவில் இருந்து பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதை விட போலந்து, (தென்) கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்தும் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருவதாக அங்கு வேலை செய்யும் ஊழியர் தெரிவித்தார். நான் அங்கே சென்றிருந்த நேரத்திலும், ரஷ்யர்கள், ஈரானியர்கள் ஒரு பெரிய குழுவாக வந்து பார்வையிட்டனர்.
பத்து வருடங்களுக்கு முன்னர், கோரி சுற்றுலாத் துறை பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. தற்போது நிறைய புதிய ஹோட்டேல்கள் கட்டப் பட்டுள்ளன. நான் தங்கிருந்த ஹோட்டேல் கட்டி ஒரு வருடம் தானாகிறது என்றார்கள். கோடை காலத்தில் எல்லா அறைகளும் நிரம்பி விடுமாம். நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அறை வாடகை ஐம்பது லாரிகள். ஸ்டாலின் மியூசியத்தில் இருந்து இருநூறு மீட்டர் தூரத்தில் இருந்தது. ஸ்டாலின் நினைவுச் சின்னங்கள் உட்பட, தற்போது அங்கே எல்லாம் வணிக மயமாகி விட்டது. வழமையாக பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த கோரி நகருக்கு ஸ்டாலின் மியூசியத்தால் பெருமளவு வருமானம் கிடைக்கிறது எனலாம்.
(ஸ்டாலின் பிறந்த வீட்டின் முன்புறத் தோற்றம்) |
1937 ம் ஆண்டு, அதாவது சோவியத் யூனியனில் ஸ்டாலின் ஆட்சியில் இருந்த காலத்தில், அவரது பிறந்த வீடு மியூசியமாக்கப் பட்டது. அதைச் சுற்றி தூண்களை எழுப்பி, மேலே கொங்கிரீட் கூரை போடப் பட்டது. இந்த நினைவுச்சின்னம் இப்போதும் பேணிப் பாதுக்கப் பட்டு வருகின்றது. ஸ்டாலின் பிறந்த வீட்டுக்குப் பின்னால் ஒரு சிறிய ஸ்டாலினின் சிலையும் மியூசியக் கட்டிடமும் அமைந்துள்ளன.
ஐம்பதுகளின் தொடக்கத்தில் தான் தற்போதுள்ள நூதனசாலைக் கட்டிடம் கட்டிமுடிக்கப் பட்டது. அப்போது ஸ்டாலின் மறைந்து, குருஷேவ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. "ஸ்டாலினிச எதிர்ப்பாளர்" குருஷேவ் அங்கு ஒரு நூதனசாலை வருவதை விரும்பி இருக்கவில்லை. இருப்பினும் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், மக்களும் விட்டுக் கொடுக்கவில்லை. அப்போது திறக்கப் பட்ட மியூசியம் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஸ்டாலின் மியூசியம் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு மாடிக் கட்டிடத்தின் மேல் பகுதியில் தான் மியூசியம் உள்ளது. அதற்கு செல்லும் படிக்கட்டின் நடுவிலும் மார்பிளால் செய்யப் பட்ட ஸ்டாலின் சிலை உள்ளது. உள் நுழைந்தவுடன் வாயில் அருகில் சிறு வயது ஸ்டாலின், மற்றும் அவரது தாய், தந்தையின் புகைப்படங்கள் உள்ளன. அதற்கு அருகில் அவர் பள்ளிக்கூடத்தில் படித்த புத்தகங்கள் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் பட்டுள்ளன. மேலே கற்பித்த ஆசிரியர்களின் படங்கள் உள்ளன. ஸ்டாலின் சிறு வயதில் எழுதிய கவிதைகளும் பெரிதாக்கி காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
ஒரு கிறிஸ்தவ பாதிரியாக வேலை செய்வதற்கு படித்துக் கொண்டிருந்த ஸ்டாலின், அரசியல் ஈடுபாடு காரணமாக கல்லூரியில் இருந்து வெளியேற்றப் பட்டார். அதற்குப் பின்னர் அவர் புரட்சிகர சமூக ஜனநாயகக் கட்சியின் போல்ஷெவிக் பிரிவில் இயங்கிய காலங்கள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. நகர்ப்புற தொழிலாளர்களின் கூட்டங்கள், மேதின ஊர்வலம் போன்றவற்றை ஒழுங்கமைத்து நடத்திய ஸ்டாலினின் ஓவியங்கள் வைக்கப் பட்டுள்ளன.
அடுத்த பகுதியில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் எடுத்த படங்கள், மற்றும் ஸ்டாலின் எழுதிய நூல்களின் தொகுப்புகள் வைக்கப் பட்டுள்ளன. இறுதியாக இன்னொரு பகுதியில் உலகம் முழுவதிலும் இருந்து ஸ்டாலினுக்கு கிடைத்த அன்பளிப்புகள், பரிசுப் பொருட்கள் உள்ளன. திரும்பி வரும் வழியில், மாடியில் இருந்து கீழிறங்கும் போது, படிகளில் வலது பக்கத்தில் ஸ்டாலின் கிரெம்ளினில் பயன்படுத்திய அலுவலக மேசை, நாற்காலிகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.
மேலும் வெளியே மியூசியக் கட்டிடத்திற்கு அருகில் ஸ்டாலின் தனது அலுவலகமாக பயன்படுத்திய ரயில் பெட்டி உள்ளது. ரஷ்யப் புரட்சியின் ஆரம்ப காலங்களில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது புரட்சியை நடத்திய தலைவர்கள் இது போன்ற ரயில் பெட்டிகளை தமது அலுவலகமாக வைத்திருந்தனர். அதாவது விடுதலைப் போருக்கு தலைமை தாங்கவும், போர் முனைக்கு சென்று செம்படையினரை ஊக்குவிக்கவும், அன்றைய தலைவர்கள் ரயில்களை பயன்படுத்தினார்கள்.
கோரி நகரில் இன்னொரு மியூசியமும் ஆர்வத்தை தூண்டியது. ஜோர்ஜிய இன மக்களின் பூர்வீகம் தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்துள்ள நூதனசாலை அது. நுழைவுக் கட்டணம் மூன்று லாரிகள். மேலதிகமாக ஐந்து லாரிகள் கொடுத்தால் ஒரு ஆங்கிலம் பேசும் வழிகாட்டி கிடைப்பார். அது மிகவும் பிரயோசனமாக இருந்தது. அங்கிருந்த பொருட்கள் பற்றிய விளக்கத்தில் ஆங்கிலத்திலும் குறிப்புகள் இருந்த போதிலும், வழிகாட்டி மூலம் அதிக விளக்கம் கிடைத்தது.
சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிகால மனிதர்களின் நாகரிகம் தொடர்பாக கண்டெடுத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் அங்கே உள்ளன. அந்தக் காலத்திலேயே தானியம் அரைப்பதற்காக பயன்படுத்திய அம்மிக் குழவி அங்கே காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது. நமது நாட்டில் உள்ள அதே மாதிரியான அம்மிக் குழவி தான். கல் கொஞ்சம் வளைந்திருக்கும். உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்த மக்கள் ஒரே மாதிரியான உபகரணங்களை பாவித்துள்ளமை மிகப் பெரிய ஆச்சரியம்.
ஆதி கால மக்கள் களிமண்ணால் கட்டப் பட்ட வீடொன்றில் வாழ்ந்துள்ளனர். கூரையும் களிமண்ணால் செய்யப் பட்டது. கூரை நடுவில் புகை போவதற்கான ஓட்டை இருந்தது. வீட்டுக்கு நடுவில் அடுப்பு மாதிரி கட்டி இருந்தனர். அதில் எந்த நேரம் நெருப்புத் தணல் இருந்து கொண்டிருக்கும். அதை அடுப்பு மாதிரி சமைப்பதற்கும் பயன்படுத்தலாம். அதே நேரம், குளிரை தாக்குப் பிடிக்க வெப்பம் தருவதற்கும் பயன்பட்டது. இது போன்ற வீடுகள் ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் இருந்துள்ளன. தற்போதும் மத்திய ஆசியாவில் வாழும் நாடோடி மக்கள் இது போன்ற வீடுகளை அமைக்கும் கலையை அறிந்து வைத்திருக்கின்றனர்.
ஆதி கால மனிதர்கள் பிற்காலத்தில் வளர்ச்சி அடைந்ததும், வெண்கலம், இரும்பால் செய்த கருவிகளை வேட்டையாட பயன்படுத்தினார்கள். அப்போது பயன்படுத்திய ஈட்டிகள், கத்திகள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அப்போது பயன்பாட்டில் இருந்த மான் வடிவில் செய்யப்பட்ட வைன் குடிக்கும் கிண்ணம், ஒரு சில மாற்றங்களுடன் இன்றைய காலத்திலும் பயன்பாட்டில் உள்ளது. அன்றிருந்த ஆதி கால மக்களும் மலை வாழ் மக்கள் தான். வேட்டையாடுவோராக, கால்நடைகள் மேய்ப்பவர்களாக இருந்துள்ளனர். குளிர் நேரத்தில் வெப்பம் தரும் மேலாடை ஒன்றை அணிந்து கொண்டார்கள். அது ஆட்டுத் தோலால் செய்யப் பட்டது. அந்த மணத்திற்கு பாம்புகளும் கிட்ட நெருங்காதாம்.
மியூசியத்தின் இறுதிப் பகுதியில் ஜோர்ஜிய மொழியின் தோற்றம், கிறிஸ்தவ மதத்தின் வருகை போன்ற விபரங்கள் உள்ளன. ஜோர்ஜியாவில் இன்றைக்கும் கிறிஸ்தவ மதத்தலைவர் பாவிக்கும் தொப்பியின் பெயர் "மித்ரா". தற்செயலாக, மித்ரா என்பது ஈரான், இந்தியாவில் வேதகால ஆரியர்கள் வழிபட்ட ஒரு கடவுளின் பெயர். அநேகமாக ஒரு காலத்தில் அந்தப் பிரதேசத்திலும் மித்ரா வழிபாடு இருந்திருக்கலாம்.
அந்த மியூசியத்தில் வரவேற்பளராக இருந்த பெண், தன்னுடைய பெயர் "தமிழ்" என்றும், அது பற்றித் தெரியுமா என்றும் கேட்டார். மிகுந்த ஆச்சரியத்துடன் நானும் ஒரு தமிழர் தான், உங்களுக்கு அந்த மொழி பற்றிய விபரங்கள் தெரியுமா என்று கேட்டேன். அவர் அது பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். ஜோர்ஜியாவில் நிறையப் பெண்களுக்கு தமிழ் என்று பெயர் இருக்கிறதா என்று நான் கேட்டேன். பெருமளவில் இல்லையென்றாலும், சில பெண்களுக்கு தமிழ் என்ற பெயர் இருப்பதாக பதில் அளித்தார். அங்கிருந்து விடை பெறும் முன்னர் "தமிழும், தமிழும் சந்தித்துக் கொண்ட தருணத்தை" செல்பி எடுத்துக் கொண்டேன்.
ஜோர்ஜிய மொழியின் பூர்வீகம் எதுவென்பது யாருக்கும் தெரியாது. தாங்கள் ஆயிரமாயிரம் வருட காலமாக அந்தப் பிராந்தியத்தில் வாழ்வதாக ஜோர்ஜியர்கள் சொல்லிக் கொள்வார்கள். அவர்களது மொழியின் எழுத்து வடிவம் ஆச்சரியப் படத் தக்கவாறு தென்னிந்திய மொழிகளின் வரி வடிவத்தை ஒத்திருக்கிறது. பெருமளவு வளைவுகளும், சுழிகளும் கொண்ட எழுத்துக்கள். பண்டைய ஜோர்ஜிய எழுத்துக்கள் இதிலிருந்து வித்தியாசமாக இருக்கும். அதிலும் ஓர் அதிசயம் என்னவென்றால் இந்தியாவின் பிராமி எழுத்துக்கள் போலுள்ளன. ஜோர்ஜிய மொழி எழுத்துக்கள் அரேமிய அல்லது, கிரேக்க மொழிகளை பின்பற்றி உருவாக்கப் பட்டிருக்கலாம் என மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தக் கோட்பாடு கூட தவறாக இருக்கலாம்.
உலகில் இன்னமும் அறிந்து கொள்ளப்படாத பல அதிசயங்களை ஜோர்ஜியா கொண்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அங்கிருந்து திரும்பும் பொழுது ஒரு ஜோர்ஜிய மொழி திரைப்பட டிவிடி வாங்கிக் கொண்டு வந்தேன். "தேதே"(அம்மா) என்ற பெயரிடப் பட்ட படம், நவீன நாகரிகம் ஊடுருவி இருக்காத மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றிப் பேசுகின்றது. குளிர்காலத்தில் பனி மூடிய பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்திற்கு குதிரைகளில் தான் செல்ல வேண்டும்.
அந்தப் படத்தில் காட்சிக்கு காட்சி எவ்வாறு பழைய சம்பிரதாயங்கள் தனி மனித வாழ்வைப் பாதிக்கின்றன என்பதை சிறப்பாக காட்டி இருந்தார்கள். அந்த சமுதாயத்தில் இன்னமும் பெண்களுக்கென்று தெரிவுகள் இருக்க முடியாது. குடும்பத்தில் பெரியவர்கள் சிறுவயதில் நிச்சயர்தார்த்தம் செய்த ஆணை தான் திருமணம் செய்ய வேண்டும். ஓர் ஆண் ஒரு இளம் பெண்ணை கடத்திச் சென்று விட்டால், அவள் அவனோடு தான் காலம் முழுவதும் வாழ வேண்டும். இல்லாவிட்டால் இரு குடும்பங்களுக்கும் இடையில் பகை மூண்டு இரத்தக்களரி ஏற்படும். அதை விட சாமிப் படத்தின் மீது சத்தியம் செய்வது, நோயை குணப்படுத்துவதற்கு முன்னோர்களின் ஆவிகளை துணைக்கு அழைப்பது எனப் பல சம்பிரதாயங்கள் இன்னமும் பின்பற்றப் படுகின்றன. இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது ஜோர்ஜியர்களின் கலாச்சாரம், கீழைத்தேய மரபுகளை கொண்டுள்ளமை தெரிய வந்தது.
ஜோர்ஜியா பயணம் முடித்து வந்ததும், பல நண்பர்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பினார்கள். நான் ஏற்கனவே ஐரோப்பாவின் மேற்கிலும், கிழக்கிலும் பல நாடுகளுக்கு பயணம் செய்திருப்பதால் வித்தியாசங்களை உணர முடிந்தது. எல்லா நாடுகளிலும் பெரும் நகரங்களில் திருட்டுக்கள் நடப்பதுண்டு. ஆனால் கிராமங்கள் பாதுகாப்பானவை.நான்பார்த்த அளவில் பெரும்பாலான ஜோர்ஜியர்கள் நேர்மையாக நடந்து கொள்கிறார்கள். யாரும் எம்மை வெளிநாட்டவர் தானே என்று ஏமாற்ற நினைக்கவில்லை.
இன்னொரு முக்கியமான விடயம். "எங்களிடம் பணம் இருக்கிறது" என்று ஆடம்பரம் காட்டுவோரை தான் திருடர்கள் குறிவைக்கிறார்கள். "ரோமாபுரியில் ஒரு ரோமனாக இருக்க வேண்டும்" என்று சொல்வது மாதிரி, எந்த நாட்டுக்கு சென்றாலும் உள்ளூர் மக்களில் ஒருவராக மாறிவிட வேண்டும். அவர்களது நடை, உடை, பாவனைகளை மேலெழுந்த வாரியாக அவதானித்து விட்டு, நாமும் அப்படியே நடந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் வராது. சுருக்கமாக, எங்கிருந்தாலும் மிகவும் எளிமையாக வாழ வேண்டும்.
No comments:
Post a Comment