"படம் பார், பாடம் படி, இனவாதம் பயில்!"- போலித் தமிழ்த் தேசியவாதிகளின் தாரக மந்திரம்
இந்தப் படத்தில் உள்ள பிக்குவைப் பாருங்கள் குழந்தைகளே! அதை வைத்து இனவாதம் பேசுவது எப்படி என்று கற்றுக் கொள்வோம்.
- - "இவர் யார்?"
- - "சிங்கள - பௌத்த பேரினவாதி."
- - "இவர் இங்கே என்ன செய்கிறார்?"
- - "தமிழர்களுக்கு சிங்களம் கற்பிக்கும் சாட்டில் மொழித் திணிப்பு செய்கிறார்."
- - "இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாமா?"
- - "இல்லை, சிங்கள இனவெறிப் பிக்குவே ஓடிப் போ!"
இப்படித் தான் தமிழ் மக்கள் இனவாதிகளால் மூளைச்சலவை செய்யப் படுகின்றனர். "பிக்கு தமிழர்களுக்கு சிங்களம் படிப்பிக்கும்" படத்தைக் காட்டி, பலர் சமூகவலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
"படம் பார், பாடம் படி!"
சிங்கள மக்கள் மத்தியிலும், இதே பாணியில் தான் இனவாதத்தை பரப்புவார்கள். அதே மாதிரி, தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பரப்புவதற்கும் சில சக்திகள் தீயாக வேலை செய்கின்றன.
உலகம் முழுவதும் இனவாதிகளின் செயற்பாடுகள் ஒரே மாதிரித் தான் அமைந்துள்ளன. பெரும்பாலான மக்கள் மத்தியில் இவர்களது இனவாதப் புளுகுகள் எடுபடுவதில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.
இந்தப் படம் 2017 ம் ஆண்டு முற்பகுதியில், மட்டக்களப்பில் நடந்த, வேலையற்ற பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்தின் போது எடுக்கப் பட்டது. முதல் படத்தில் சிங்களம் படிப்பிக்கும் அதே பிக்கு, அடுத்த படத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வதைக் காணலாம். போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் பட்டதாரிகள், சிங்களம் படிப்பதில் என்ன பிழையிருக்கிறது?
சிங்களப் பெரும்பான்மையின மக்களுக்கும் புரியும் வகையில் எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு சிங்கள மொழியறிவு இருப்பது அவசியம் அல்லவா? சர்வதேச சமூகத்திற்கு புரிய வேண்டும் என்பதற்காக பதாகைகளை ஆங்கிலத்தில் எழுதி வைப்பதில்லையா?
சாதாரணமான மக்கள், இவ்விடத்தில் பட்டதாரிகள், ஒரு போராட்டக் களத்தில் தான் உண்மையான அரசியலைக் கற்றுக் கொள்கிறார்கள். அதிகார வர்க்கத்திற்கு புரியும் மொழியில் பேசக் கற்றுக் கொள்வது அதில் ஒரு பாடம்.
பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுப்பது சிறந்தது அல்லவா? எதற்காக நாங்கள் பணம் கொடுத்து சிங்கள மொழிபெயர்ப்பாளர்களை பிடிக்க வேண்டும்? எமக்கு சிங்களம் தெரிந்தால் எமது பிரச்சனைகளை நாங்களே நேரடியாகப் பேசிக் கொள்வோம்.
இங்குள்ள வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் சிங்களம் படிப்பதால், உங்களைப் போன்ற சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வேலை பறிபோகும் என்றால், அது அவர்களது பிரச்சினை அல்ல. உங்கள் சுயநலத்திற்காக இங்கே இனவாதத்தை கொண்டு வந்து புகுத்தாதீர்கள். பிழைப்பதற்கு நூறு வழிகள் உள்ளன.
போராட்டம் என்பது பல பரிணாமங்களை கொண்டது. தமிழரின் அரசியல் கோரிக்கை நியாயமானது என்றால், அதை சிங்கள மக்களுக்கு புரியும் வகையில் சிங்களத்தில் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? வெறுமனே தமிழில் கோஷம் போட்டு விட்டு கலைந்து போவதால், போராட்டம் குறுகிய வட்டத்திற்குள் ஆரம்பித்து முடிந்து விடும். அதையே அரசும் எதிர்பார்க்கின்றது.
ஒரே காலப்பகுதியில், மட்டக்களப்பில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் நடைபெற்றது. ஒரு சிங்கள பௌத்த பிக்கு வட மாகாண தமிழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார்.
இதற்கு போலித் தமிழ்த் தேசியவாதிகள் பின்வருமாறு எதிர்வினை ஆற்றுவார்கள்:
இதற்கு போலித் தமிழ்த் தேசியவாதிகள் பின்வருமாறு எதிர்வினை ஆற்றுவார்கள்:
- "இதைக் கண்டாலும் காணாத மாதிரி கடந்து செல்லுங்கள் தமிழர்களே!"
- "இடதுசாரியம் சோறு போடாது, மக்களே! வலது பக்கம் திரும்புங்கள்."
- "இனவாதப் பிக்குகள் மீது மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டும்."
- "இனவாதி அல்லாத, தமிழர்களின் உரிமைகளை ஆதரிக்கும் பிக்குகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தும் பார்க்கக் கூடாது! புரிந்ததா?"
இந்தப் படத்தை, உங்களில் பலர் எந்தவொரு தமிழ் ஊடகத்திலும், சமூகவலைத்தளத்திலும் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்தப் பிக்கு தமிழர்களுக்கு எதிராக இனவெறியாட்டம் போடவில்லை. இனவாதம் பேசவில்லை. அவ்வாறு நடந்து கொண்டிருந்தால், அந்தத் தகவல் சுடச் சுட பரப்பப் பட்டிருக்கும்.
இந்தப் பிக்கு இனவாதம் பேசி இருந்தால், போலித் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் ஒரு புதிய வில்லன் கிடைத்திருப்பான். பேஸ்புக்கில் படத்தை போட்டு, காறித் துப்பி கழுவி ஊத்தி இருப்பார்கள். என்ன செய்வது? இந்தப் பிக்கு வேலையற்ற பட்டதாரிகளுடன் உண்ணாவிரதம் அல்லவா இருக்கிறான்? இதைக் காட்டி பிழைக்க முடியுமா? நாலு காசு சம்பாதிக்க முடியுமா? இல்லைத் தானே? கண்டாலும் காணாத மாதிரி 'கம்' முன்னு இருக்கணும்.
இந்த நாட்டில் இனவாதம் ஒரு இலாபம் தரும் வியாபாரம். சினிமாவில் வரும் கவர்ச்சிக் காட்சிகள் பல இலட்சம் பார்வையாளர்களை கவர்வது மாதிரி, இனவாதப் பேச்சுக்களும் பலரைக் கவர்ந்திழுக்கும். அதை வைத்து அரசியல் செய்வதற்கும், ஆதாயம் பெறுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.
புத்த பிக்குகள் எல்லோரும் ஒரே அரசியலை பின்பற்றுவதில்லை. முன்னிலை சோஷலிசக் கட்சி மற்றும் பல சிங்கள இடதுசாரி அமைப்புகளில் புத்த பிக்குகளும் செயற்படுவதுண்டு. அவர்கள் தமிழ்ப் பகுதிகளில் நடக்கும் போராட்டங்களில் தமிழ் மக்களோடு கலந்து கொள்வதில் என்ன தப்பு? கண்டதை எல்லாம் சந்தேகப் படுவதன் மூலம் நண்பர்களை ஒதுக்கி வைக்கிறோம். பகைவர்களை கூட்டிக் கொள்கிறோம். எம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்கிறோம்.
படத்திற்கு நன்றி: Newton Mariya Mainthan
பிக்கு பற்றிய விபரம் :
//வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளின் போராட்டக்களத்திற்கு வலுச்சேர்ககும் முகமாக இலங்கையின் ஒன்றினணந்த அனைத்து வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் சார்பாக வணக்கத்துக்குரிய. தெத்தே ஞானானந்ததேரர் கலந்துகொண்டுள்ளார்.//
No comments:
Post a Comment