ஓரிறைக் கோட்பாட்டை தாமே கொண்டு வந்ததாக, யூத-கிறிஸ்தவ-இஸ்லாமிய மதங்கள் மார் தட்டிக் கொள்கின்றன. ஆனால், பண்டைய எகிப்தில் பாரோ மன்னர்களின் வம்சாவளியில் வந்த அகநாதன், அவர்களுக்கு முன்னரே ஓரிறைக் கோட்பாட்டை உருவாக்கி விட்டிருந்தான்.
எகிப்திய மன்னனான அகநாதன், மித்தானி நாட்டை சேர்ந்த நெபர்தித்தி எனும் இளவரசியை மணம் முடித்திருந்தான். நெபர்தித்தி அகநாதனின் சிற்றன்னை என்றும் வரலாறு கூறுகின்றது. பண்டைய எகிப்தில் இரத்த உறவினர்களுக்கிடையில் திருமணம் நடப்பது சகஜமான விடயம்.
இங்கே முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டியது என்னவென்றால், அகநாதன் - நெபர்தித்தி திருமணத்தின் பின்னர் தான், எகிப்தில் ஓரிறைக் கோட்பாடு உருவானது. அநேகமாக, நெபர்தித்தி ஆரிய இனத்தை சேர்ந்தவர் என்பதால், அவர்களது கலாச்சாரத்தில் சூரியனை வழிபடும் வழக்கம் இருந்த காரணத்தால், சூரியனே எகிப்தின் ஓரிறைக் கோட்பாட்டின் ஒரேயொரு கடவுளாக்கப் பட்டது.
ஆயினும், பிற்காலத்தில் ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்திய யூத - கிறிஸ்தவ - இஸ்லாமிய மதங்கள், பல தெய்வ வழிபாட்டை கொண்டவர்களுடன் போரில் ஈடுபட்டதைப் போன்று தான், அப்போதும் நடந்துள்ளது.
எகிப்தில் ஆமுன் பூசாரிகள் தான் உண்மையான ஆட்சியாளர்களாக இருந்தார்கள். இந்து மதத்தில் இருப்பதைப் போன்று, பல தெய்வ வழிபாட்டை நடைமுறைப் படுத்துவதன் மூலம், தமது செல்வத்தை தக்க வைத்துக் கொண்டனர்.
சூரியனை ஓரிறைக் கோட்பாட்டின் நாயகனாக்கிய அகநாதன், ஆமுன் பூசாரிகளை வன்முறை கொண்டு அடக்கி வைத்திருந்தான். அதனால் ஆமுன் பூசாரிகளின் சூழ்ச்சி காரணாமாக, அகநாதன் குடும்பத்தில் பலர் கொல்லப் பட்டனர்.
இறுதியாக அகநாதனின் ஒரு புதல்வி, பெரும் படை கொண்டு கார்னாக் நகரில் உள்ள ஆமுன் பூசாரிகள் மீது போர் தொடுத்தாள். அன்று நடந்த போரில். கார்னாக் பூசாரிகள் வெற்றி பெற்றதால், ஓரிறைக் கோட்பாடும் முடிவுக்கு வந்தது.
இந்த வரலாற்றில் தமிழர்கள் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. ஆரிய - திராவிட கலப்பு இந்திய உப கண்டத்தில் மட்டும் நடக்கவில்லை. ஆப்பிரிக்காவிலும் நடந்துள்ளது. எகிப்தியர்களும் திராவிடர்கள் தான். நெபர்தித்தி என்ற ஆரிய இளவரசியுடனான தொடர்பு தான், நாகரிக வளர்ச்சியாக கருதப்படும் ஓரிறைக் கோட்பாட்டுக்கு வழிவகுத்தது.
எகிப்தில் வழிபடப் பட்ட சூரியக் கடவுளின் பெயர் "ஆதொன்". பல எகிப்திய சொற்கள் பிற்காலத்தில் மருவி வந்துள்ளன. எகிப்திய ஆதொன், தமிழ்ச் சொல்லான ஆதவன் இரண்டும் ஒரே மாதிரி இருப்பது தற்செயலானதா? இருக்க முடியாது. நிச்சயமாக, பண்டைய எகிப்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பிருந்திருக்க வேண்டும்.
எகிப்தில் தீமைகளின் கடவுளுக்குப் பெயர் செத். ஆதொன் மதம் அரச மதமான பின்னர், செத் கடவுளை வழிபடுவது தடை செய்யப் பட்டிருந்தது. பண்டைய எகிப்திய ஓவியங்களில், செத் ஒரு பாம்பு மாதிரியும் வரையப் பட்டுள்ளது. செத் என்ற சொல்லில் இருந்து தான், "சாத்தான்" என்ற சொல் வந்தது. தமிழில் செத் என்றால் மரணம் என்று அர்த்தம். செத்துப் போதல் என்ற சொல், இன்றைக்கும் சாதாரண தமிழில் புழக்கத்தில் இருந்து வருகின்றது.
அகநாதன் என்ற பெயர் கூட, தமிழ்ச் சொல் போன்று ஒலிப்பதை அவதானிக்க வேண்டும். பண்டைய எகிப்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருந்துள்ளன. இவற்றை எல்லாம், துறை சார்ந்த அறிஞர்கள் ஆராய்ந்து வெளிக்கொணர வேண்டும்.
1 comment:
தமிழரின் இடுகாடான பெருமேடு என்பதே பிரமிடு என மாறிற்று எனும் வாதமும் உண்டு
Post a Comment