Wednesday, February 14, 2018

இந்துக்களின் தாயகம் துருக்மேனிஸ்தானில் உள்ளது!


துருக்மெனிஸ்தான் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில், Gonur Tepe எனும் இடத்தில் நான்காயிரம் வருடங்களுக்கு முந்திய பண்டைய நாகரிகம் கண்டுபிடிக்கப் பட்டது. எழுபதுகளில், Viktor Sarianidi என்ற ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடித்த பின்னர் தான் மத்திய ஆசியாவிலும் ஒரு வெண்கல கால நாகரிகம் இருந்துள்ளமை தெரிய வந்தது. அதாவது, எகிப்திய, மொஹெஞ்சேதாரோ நாகரிக காலகட்டத்தை சேர்ந்தது.

பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியனில் நடந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மேற்குலகால் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளன. அதனால், இது தொடர்பான அகழ்வாராய்ச்சித் தகவல்கள் இன்னமும் ரஷ்ய மொழியில் தான் உள்ளன. கோனூர் தேபே நாகரிகம் தனியாக ஆராயப் பட வேண்டியது என்பதால் அதற்கு "ஒக்சுஸ் நாகரிகம்" என்று பெயரிடப் பட்டது. ஒக்சுஸ் என்பது துருக்மெனிஸ்தான் எல்லையில் ஓடும் நீண்ட நதியின் பெயர். அங்கு சுற்றுலா செல்ல விரும்புவோர், முதலில் மாரி (Mary) என்ற நகரத்திற்கு செல்ல வேண்டும். துருக்மேனிஸ்தான் நாட்டில் எண்ணை, எரிவாயு போன்ற இயற்கை வளம் நிறைந்த பகுதியில் நவீன மாரி நகரம் அமைந்துள்ளது.

கோனூர் தேபே என்பது துருக்கி மொழிப் பெயர். (துருக்மேன் மொழியானது துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்தது.) அந்தப் பண்டைய நகரத்தின் பூர்வீகப் பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது. அதற்கு அருகில் இன்னொரு பண்டைய நகரமான மேர்வ் உள்ளது. அதை உருவாக்கியவர்கள் கோனூர் தேபே வாசிகளாக இருக்கலாம். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் கோனூர் தேபே நகரம் கைவிடப் பட்டு விட்டது. அதற்கு இயற்கை அழிவுகளோ, தண்ணீர்ப் பற்றாக்குறையோ காரணமாக இருந்திருக்கலாம்.

மேர்வ் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தாராளமாக கிடைக்கின்றன. ஏனெனில், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த செங்கிஸ்கான் படைகளால் தரைமட்டமாக்கப் படும் வரையில், அங்கு ஒரு தலைசிறந்த நாகரிகம் இருந்துள்ளது. மொங்கோலிய படைகள் நடத்திய பேரழிவுகளில் மேர்வ் நகரில் இருந்த வான சாஸ்திர ஆய்வு மையம், நூலகம் எல்லாம் தீக்கிரையாகி விட்டன. தொண்ணூறு சதவீதமான குடிமக்களும் இனப்படுகொலை செய்யப் பட்டுவிட்டதால், அறிவியல் தெரிந்தவர் யாரும் எஞ்சவில்லை.

பண்டைய மேர்வ் நகரில் இருந்த அறிவியல் நூல்கள் ஒன்று விடாமல் எரிக்கப் பட்டதால், அவற்றில் எழுதப் பட்டிருந்த ஆயிரம் ஆண்டு கால அறிவுச் செல்வம் ஒரு சில நாட்களில் அழிந்து விட்டது. சில நேரம், அந்த நூல்கள் இப்போதும் இருந்திருந்தால், கோனூர் தேபே பற்றிய விபரங்களும் கிடைத்திருக்கலாம். ஏனெனில், கோனூர் தேபே நகரம் இருந்த இடத்தில் எழுத்துக்களைக் கொண்ட களிமண் தட்டு எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. சிலநேரம், அவர்கள் எதையும் எழுதி வைக்காமல் இருந்திருக்கலாம்.

நான்காயிரம் வருடங்களுக்கு முந்திய ஹரப்பா நாகரிகத்தில் இருந்ததைப் போன்று, கோனூர் தேபே நகரமும் சிறந்த நீர்ப் பாசன திட்டத்தையும், கழிவு நீர் அகற்றும் கால்வாய்களையும் கொண்டிருந்தது. அரச மாளிகை மாதிரியான ஒரு கட்டிட இடிபாடுகளும் அங்குள்ளது.

ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர் விக்டர், கோனூர் தேபே வாசிகள் வழிபட்ட ஆலயம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார். அந்த ஆலயத்தில் அக்னி (நெருப்பு) கடவுளாக வழிபடப் பட்டுள்ளது. முற்காலத்தில் ஈரானில் இருந்த சொராஸ்திரிய மதத்தவர் நெருப்புக் கடவுளை வழிபட்டு வந்தனர். அந்த மத்தவர் நெருப்பை வணங்கக் கட்டிய பண்டைய ஆலயங்கள் இன்றைய ஈரானிலும், அசர்பைஜானிலும் நிறையவே இருந்துள்ளன. இருப்பினும் கோனூர் தேபே ஆலயம் காலத்தால் பழமையானது. ஆகவே, ஆரியர்களான இந்தோ- ஈரானிய மக்களின் பூர்வீக இடம் கோனூர் தேபே ஆக இருந்திருக்கலாம்.

ஈரானியர்களும், வட இந்தியர்களும் இனத்தால் ஒன்று தான். ஆரியர்கள் என்பதும் அதைத் தான் குறிக்கும். சைபீரியாவில் தோன்றி, மத்திய ஆசியா வழியாக தெற்கு நோக்கி புலம்பெயர்ந்த இனத்தவரின் வழித்தோன்றல்கள் தான், இன்றைய ஈரானியரும், வட இந்தியர்களும். அனேகமாக, மத்திய ஆசியாவில் இருந்து அவர்கள் இரண்டு வேறு கிளைகளாக பிரிந்து சென்றிருக்கலாம். இருப்பினும் தெய்வங்கள், மத வழிபாடுகள், புராணக் கதைகள் சில சிறிய மாற்றங்களோடு அப்படியே இருந்துள்ளன.

இருக்கு (Rig) வேதத்தில் சோம பானத்தை போற்றும் செய்யுள்கள் நிறைய உள்ளன. தேவர்கள் சோம பானம் அருந்தியதாக குறிப்பிடப் படுகின்றது. நீண்ட காலாக, இந்தியாவில் வாழும் இந்துக்கள் பலர் சோம பானத்தை ஒரு கற்பனையான புராணக் கதை என்றே கருதி வந்தனர். அதற்குக் காரணம், ஈரான், ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த ஆரியர்கள் (அதாவது இந்துக்கள்/பிராமணர்கள்) பிற்காலத்தில் இஸ்லாமியராக மாறி விட்டனர். அதனால், இந்தியாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையிலான பண்டைய தொடர்பு அறிந்து விட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்றைக்கும் சில இடங்களில் சோம பானம் தயாரிக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். (இது பற்றி ஏற்கனவே ஒரு பிபிசி ஆவணப்படம் வெளிவந்துள்ளது. பார்க்க: http://kalaiy.blogspot.nl/2012/01/blog-post_21.html) அந்நாட்டில் வளரும் கஞ்சா செடிகளில் இருந்து பதப்படுத்தப் பட்டு வடித்தெடுக்கப் படும் திரவம் தான் சோம பானம் என அழைக்கப் படுகின்றது. பண்டைய காலங்களில் அது மதுவாக மட்டுமல்லாது, மருத்துவ பானமாகவும் அருந்தப் பட்டது. இன்றைக்கும் கஞ்சாவில் உள்ள மருத்துவ அம்சங்கள், நவீன பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு செய்து நிரூபிக்கப் பட்டுள்ளன. ஆகவே, பண்டைய காலத்து "தேவர்கள்" சோம பானத்தை "அமிர்தமாக" கருதியதில் வியப்பில்லை.

கோனூர் தேபே நாகரிகத்தை கண்டுபிடித்த ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர்  விக்டர், அங்கு சோம பானம் தயாரிக்கப் பயன்படுத்திய களிமண் தட்டுகளை கண்டுபிடித்துள்ளார். அதில் கஞ்சாவில் இருந்து எடுக்கப் பட்ட மருத்துவ பதார்த்தமான Ephedrine என்ற இரசாயனக் கூறுகளும் கண்டுபிடிக்கப் பட்டன. இதன் மூலம் சோம பானம் தயாரிப்பதற்கான மூலப் பொருளாக கஞ்சா பயன்பட்டிருக்கலாம் என்பதும் நிரூபணமாகிறது. மேலும், சோம பானத்திற்கும், நெருப்பை வழிபடும் அக்னிக் கடவுளின் ஆலயத்திற்கும் தொடர்பிருக்கிறது.

இன்றைக்கும் இந்து மத திருமணங்களில் ஐயர் ஹோமம் வளர்ப்பதை கண்டிருப்பீர்கள். வேறு சில நோக்கங்களுக்காகவும் ஹோமம் வளர்க்கப் படுகின்றது. பிராமண பூசாரிகள் ஒரு சதுர வடிவிலான அடுப்பில் தீமூட்டி எரிப்பார்கள். அதை ஹோமம் என்பார்கள். பண்டைய காலங்களில் வாழ்ந்த ஆரியர்கள், பெரியளவில் ஹோமம் வளர்ப்பதை ஒரு மதச் சடங்காகக் கொண்டிருந்தனர். அதே நேரம், ஈரானிய சொராஸ்திரிய மதத்தவர் போன்று, நெருப்புத் தெய்வத்தை வழிபடவும் ஹோமம் வளர்த்திருப்பார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் ஈரானில் வாழ்ந்த சொராஸ்திரிய மதத்தவரும், ஈராக்கில் வாழும் யேசிடி மதத்தவரும், ஒரு குறிப்பிட்ட செடியை மதச் சடங்குகளுக்காக பயன்படுத்தி வந்தனர். அதன் தாவரவியல் பெயர்: Genus Ephedra. அதை அவர்களது மொழியில் "ஹோம்" என்று அழைப்பார்கள். 

ஹோம் என்பது பண்டைய ஈரானிய மொழிச் சொல்லான ஹோமம் என்பதில் இருந்து வந்தது. சம்ஸ்கிருத மொழியில் சோமா என்பது, ஈரானிய மொழியில் ஹோமா என்று பயன்படுத்தப் பட்டு வந்தது. இரண்டு சொற்களும் உச்சரிப்பு மாறுபட்டாலும் ஒரே பொருளைக் குறிப்பவை தான். ஆகவே, சோம பானம், ஹோமம் வளர்த்தல், அக்னி வழிபாடு எல்லாம் ஒரே மூலத்தைக் கொண்டவை தான்.

(பிற்குறிப்பு: Erika Fatland எழுதிய Sojetstan என்ற பயண நூலில் துருக்மேனிஸ்தான் பற்றியா பகுதியில் இந்தத் தகவல் கிடைத்தது. இவற்றிற்கான ஆதாரங்களை நீங்களாகவே இணையத்தில் தேடி வாசிக்கலாம். மேற்கொண்டு ஆராய்வது துறை சார்ந்த அறிஞர்களின் பொறுப்பு.)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: