Monday, February 19, 2018

ஸ்டாலின் பற்றி பலர் அறிந்திராத தகவல்கள்


எதற்காக எல்லோரும் ஸ்டாலினை "சர்வாதிகாரி" என்று சொல்கிறார்கள்? ஸ்டாலின் கால சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப் பட்ட உண்மைக் கதை இது:

ஸ்டாலினின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஒருவர், பொது மக்களின் பணத்தை சுருட்டி வந்தார். அந்தப் பணத்தில், மாஸ்கோ நகருக்கு வெளியே ஆடம்பரமான பங்களா வீடொன்றை கட்டி வந்தார். வீடு கட்டி முடிந்ததும், ஸ்டாலின் அவரைத் தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பேசினார்.

"அமைச்சரே! உங்களுக்கு பிள்ளைகள் என்றால் விருப்பமா?"
"ஆமாம், எனக்குப் பிள்ளைகள் மீது கொள்ளைப் பிரியம் உள்ளது." என்றார் அமைச்சர் ஆர்வத்துடன்.
"நல்லது. அப்படி என்றால் நீங்கள் புதிதாக கட்டிய அந்தப் பெரிய வீட்டை, சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு தானமாக கொடுத்து விடுங்களேன்?" என்றார் ஸ்டாலின் அமைதியாக. 
(நன்றி: The Red Executive, by David Granick (1960))

ஸ்டாலின் கால சோவியத் யூனியன், இன்றைய அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட பல மடங்கு முற்போக்கானதாக இருந்துள்ளது. தனி நபர் சுதந்திரத்தை மதிப்பதில் சிறந்து விளங்கியது. இந்த 21 ம் நூற்றாண்டிலும், மேற்குலகம் அதை எட்டிப் பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

1920 ம் ஆண்டில், ரஷ்யாவின் முஸ்லிம் பிரஜைகள் விரும்பினால் ஷரியா சட்டம் வைத்திருப்பதற்கு, ஸ்டாலின் அனுமதி வழங்கி இருந்தார். இன்று மேற்குலக "ஜனநாயக நாடுகள்" செய்வதைப் போன்று, ஷரியா நடைமுறைப் படுத்தக் கேட்டவர்கள் மீது குண்டு போடவில்லை. தாராள மனதுடன் நடந்து கொண்டார்.

அதன் அர்த்தம், ஷரியா சட்டத்தின் பிற்போக்குத் தனங்களை எல்லாம், ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார் என்பதல்ல. ஸ்டாலின் ஒரு பக்கம், பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு மதிப்புக் கொடுத்த போதிலும், மறுபக்கம் நவீன கல்வி புகட்டுவதன் மூலம் அந்த மக்களின் சிந்தனைப் போக்கை மாற்றியமைக்க திட்டமிட்டார்.

அதனால், காலப்போக்கில் சோவியத் முஸ்லிம்கள் தாமாகவே ஷரியாவை கைவிட்டு விட்டு, நவீன உலகிற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டார்கள். கல்வியறிவு பெற்ற மக்கள் பழமைவாதத்தில் இருந்து தம்மைதாமே விடுவித்துக் கொண்டார்கள். மேலும், பெண்களுக்கும் சம உரிமை கிடைத்த படியால், கணவனின் வன்முறைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும், உடலை மூடும் மேலங்கியை எடுப்பதற்கான உரிமை கோரவும் முடிந்தது.

இன்றைக்கும் "சுதந்திரம், ஜனநாயகம்" பேசும் மேற்கத்திய நாடுகளில், ஷரியா சட்டம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயமாக கருதப் படுகின்றது. பல இலட்சக் கணக்கில் முஸ்லிம் பிரஜைகளை கொண்டுள்ள நாடுகள் கூட, "ஷரியா என்றாலே தீவிரவாதம்" என்று, தமது மக்களுக்கு தவறான விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இதிலே வேடிக்கை என்னவென்றால், சோவியத் யூனியன் தோன்றிய காலத்தில், அங்கே ஷரியா சட்டம் தடை செய்யப் பட்டதாக மேற்குலகில் பிரச்சாரம் செய்யப் பட்டது. ரஷ்யாவின் டாகெஸ்தான் மாநிலத்திற்கான சுயாட்சி வழங்குவது பற்றிய பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின் பின்வருமாறு தெரிவித்தார்:

"டாகெஸ்தான் பிரதேசத்திற்கு உரிய தனித்துவமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அரசாட்சி நடக்க வேண்டும். டாகெஸ்தான் மக்களுக்கு ஷரியா சட்டம் முக்கியமானது என்று எமக்குக் கூறப் பட்டது. நாம் ரஷ்யாவில் ஷரியாவை தடை செய்து விட்டதாக, சோவியத்தின் எதிரிகள் வதந்திகள் பரப்பித் திரிவதையும் நாம் அறிவோம். அந்த வதந்திகள் பொய்யானவை. ரஷ்ய அரசு தனது மக்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய சட்டங்கள், மரபுகளின் அடிப்படையில் ஆள்வதற்கான முழு உரிமையும் கொடுக்கிறது. ஷரியா ஒரு பொதுவான சட்டம் என்பதை சோவியத் ஏற்றுக் கொள்கின்றது. டாகெஸ்தான் மக்கள் தமது சட்டங்களையும், மரபுகளையும் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பினால், அவற்றை அப்படியே விட வேண்டும்."

ஸ்டாலினின் முழுமையான உரையை வாசிப்பதற்கு: 
Congress of the Peoples of Daghestan
https://www.marxists.org/reference/archive/stalin/works/1920/11/13.ht

"நான் இறந்த பிறகு, எனது சமாதியின் மேல் குப்பைகளை வாரிக் கொட்டுவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், வரலாறு எனும் காற்று அவற்றையெல்லாம் கூட்டித் தள்ளி விடும்." - ஸ்டாலின்


1 comment:

Murali said...

எத்தனை அருமையான ஆசான் ஸ்டாலினை எவ்வளவு கீழ்த்தரமான அவதூறுகளால் ஏகாதிபத்திய ஓநாய்கள் இன்றளவும் அர்ச்சிக்கின்றனர்.பாட்டாளிவர்க்கசர்வாதிகாரத்தை உயர்த்திப்பித்தார் என்பதால்தானே?உண்மைவரலாறு ஒருபோதும் மறையாது.தொடர்ந்து தோழர் ஸ்டாலின் பற்றி எழுதும் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்...