Monday, August 03, 2015

"இடதுசாரியம் ஓர் இளம்பருவக் கோளாறு" - லெனின்


இந்தக் காலத்திற்கும் வழிகாட்டும் லெனின் எழுதிய சிறு நூல்: "இடதுசாரி கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு". தற்காலத்திற்கும் பொருந்தும் பல ஆலோசனைகள் அந்த நூலில் உள்ளன. (1920 ம் ஆண்டு எழுதப் பட்டது.)

இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் இயங்கும் முற்போக்கான நண்பர்களுக்கும் இந்த ஆலோசனை தேவையானது. மக்களை எப்படி அணுகுவது? இன்றைய இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற தளங்களில் பிரச்சாரம் செய்வது ஆரோக்கியமானது தான். அதை விட, நாங்கள் பிற்போக்காளர்களின் ஒன்றுகூடல் என்று ஒதுக்கும், மத நிறுவனங்கள் மற்றும் பிழைப்புவாத அரசியல் கட்சிகள் மத்தியிலும் வேலை செய்ய வேண்டும்.

"ஏன் பெரும்பான்மையான மக்கள், பாராளுமன்ற பிழைப்புவாதிகளை நம்பி இருக்கிறார்கள்? பிற்போக்கான அரசியல் கட்சிகள் தங்களை ஏமாற்றுவது தெரிந்தும் அவற்றை நம்புகிறார்கள்?" 

இன்றைக்கு இருக்கும் தொழிற்சங்கங்கள், பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு ஆகியன, எந்தளவு பிற்போக்கானதாக, முதலாளித்துவ பிழைப்புவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த போதிலும், நாங்கள் அவற்றிற்குள் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை லெனின் வலியுறுத்துகிறார். ஏனென்றால், மக்கள் அங்கே தான் இருக்கிறார்கள்.

லெனின் இந்த நூலில், ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி விட்ட தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். வழமையான தொழிற்சங்கங்களில் இருந்து விலகி நின்று, தூய்மையான தொழிற்சங்கம் கட்டுவதும், பாராளுமன்ற தேர்தல்களை முற்று முழுதாக நிராகரிப்பதும் "தீவிர இடதுசாரி தன்மை" ஆகும்.


ரஷ்யாவில் போல்ஷெவிக் கட்சி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்தது. ஒரு பக்கம், இரகசியமான சட்டவிரோதமான வேலைகளை செய்து கொண்டிருந்தது. மறு பக்கம், வெளிப்படையான சட்டபூர்வமான பிரச்சார வேலைகளிலும் ஈடுபட்டது. இவை இரண்டும் அவசியம் என்று லெனின் வலியுறுத்துகிறார்.

லெனின் இந்த இடத்தில், மலினோவ்ஸ்கி என்ற போல்ஷெவிக் கட்சி உறுப்பினரின் உதாரணத்தை எடுத்துக் காட்டுகின்றார். கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்த மலினோவ்ஸ்கி, சார் அரசினால் அனுப்பப் பட்ட ஊடுருவலாளர். அவர் கட்சிக்குள் இயங்கிய பல செயலூக்கம் கொண்ட உறுப்பினர்களை காட்டிக் கொடுத்து வந்தார். அவரது காட்டிக்கொடுப்புகள் கட்சிக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கி இருந்தது. அவரால் பல தோழர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும், கட்சியின் நன்மதிப்பை பெறுவதற்காக, மலினோவ்ஸ்கி ஏற்கனவே சட்டபூர்வமான பிரச்சார வேலைகளை செய்ய வேண்டி இருந்தது. சார் அரசின் அனுமதி பெற்ற சட்டபூர்வ ஊடகமான பத்திரிகை ஒன்றை ஸ்தாபித்ததன் மூலம், ஆயிரக் கணக்கான புதிய உறுப்பினர்கள் சேரவும் காரணமாக இருந்தார். உலகின் பல நாடுகளில், வளர்ந்த நாடுகளில் கூட, அரசு பல உளவாளிகளை அனுப்பி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் ஊடுருவ வைக்கும். இந்த அபாயத்தை எதிர்த்துப் போராட ஒரே வழி, சட்டபூர்வமான வேலைகளையும், சட்டவிரோதமான வேலைகளையும் திறமையாக கையாள வேண்டும்.

இன்றைக்குள்ள தமிழ் மக்களை, அன்றைக்கிருந்த ரஷ்ய, ஜெர்மனிய மக்களுடன் ஒப்பிடலாம். எல்லா நாடுகளிலும் மக்கள் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கிறார்கள். பிற்போக்கான அரசியல் செய்பவர்களுக்கு பின்னால் தான் செல்கிறார்கள். அது அவர்களது அறியாமை.

அறியாமையில் கிடக்கும் மக்களுக்கு கற்பிப்பதற்கும், அவர்கள் நம்பும் அதே பாராளுமன்ற அமைப்பின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதற்கும் அங்கே தான் போக வேண்டும். அதன் அர்த்தம் நாங்கள் பிற்போக்காளர்களின் தரத்திற்கு இறங்கிச் செல்வது என்பதல்ல. ஆனால், மக்களை அங்கிருந்து தான் வென்றெடுக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறி வழிக்கு கொண்டு வர வேண்டும்.

இந்த நூல் எழுதப் பட்ட காலகட்டத்தை மேலெழுந்தவாரியாக பார்ப்பது, இன்னும் அதிக தெளிவைக் கொடுக்கும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய நாடுகளில் அப்போது தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக ஆரம்பித்தன. அதற்கு முன்னர் இருந்த சமூக ஜனநாயகக் கட்சிகள் தான் மார்க்சியக் கட்சிகளாக இருந்தன. ஆனால், அவை நடைமுறையில் உள்ள, முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக அமைப்பிற்குள், புரட்சிகர மாற்றங்களை கொண்டு வரலாம் என்று நம்பின, இப்போதும் நம்புகின்றன.

சர்வதேச அமைப்பான இரண்டாம் அகிலத்தில், சமூக ஜனநாயகக் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கின்றன. அதற்கு மாறாக லெனின் தலைமையில் உருவான மூன்றாம் அகிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. முதலாளித்துவ அரசுக்களுக்கு முண்டு கொடுத்து வந்த சமூக ஜனநாயகக் கட்சிகளில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் தனியாக கம்யூனிஸ்ட் கட்சிகளை ஸ்தாபித்தார்கள். அதனால், அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே பாராளுமன்ற முறைமை குறித்து அதிருப்தி காணப்பட்டது. 

முதலாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில், சமூக ஜனநாயகக் கட்சிகள் போரை ஆதரித்தன. லெனின் அவர்களை "சமூக - பேரினவாதிகள்" (சோஷல் - ஷோவினிஸ்ட்) என்று சாடுகின்றார். ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கவுட்ஸ்கி, லெனினால் கடுமையாக விமர்சிக்கப் படுகின்றார். சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கையானது "வலதுசாரியம்" என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

வலதுசாரிய சமூக - பேரினவாதிகளை நாங்கள் இன்றைக்கும் பல நாடுகளில் காணலாம். இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிரான போரை ஆதரித்த வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச போன்றவர்களை, சமூக- பேரினவாதிகள் என்ற பிரிவுக்குள் அடக்கலாம். (ஈழத்தில் வலதுசாரி தமிழ் தேசியர்கள், இவர்களை வேண்டுமென்றே "இடதுசாரிகள்" என்று தவறாக விளிப்பதன் மூலம் இடதுசாரியத்தை கொச்சைப் படுத்துகின்றனர்.)

சமூக ஜனநாயகவாதிகளின் வலதுசாரிய கொள்கை எந்தளவு ஆபத்தானது என்பது தெரிந்தது தான். ஆகவே, லெனின் இந்த நூலில், கம்யூனிஸ்டுகள் மத்தியில் உள்ள தீவிர இடதுசாரிய போக்கை மட்டும் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். வலதுசாரியத்துடன் ஒப்பிடும் பொழுது, இடதுசாரிய குறைபாடு மிகவும் சிறியது. அது இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது. ஆகவே, இந்த நோயை குணப்படுத்துவது இலகுவானது என்பது தான் லெனினுடைய வாதம். அதற்காகத் தான் இந்த நூலுக்கு "இடதுசாரி கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு" தலைப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜெர்மனியில், கவுட்ஸ்கி போன்றோரின் சமூக - பேரினவாத நிலைப்பாட்டை எதிர்த்து தான் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அதன் தலைவர்களான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் போன்றோர் "இடதுசாரிய" நிலைப்பாடு எடுத்தனர். (அவர்கள் இருவரும் லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்டிருந்தனர்.) "ஜெர்மன் தொழிலாளர்கள் பெருமளவில், பிற்போக்குவாத கத்தோலிக்க கட்சியை ஆதரிக்கிறார்கள். ஆகவே, பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுப்பது பிரயோசனமற்றது, நேரடியாக தொழிலாளர் சோவியத்துகள் அமைப்பது பற்றி ஆராய வேண்டும்" என்பது அவர்களது வாதம். அதையே லெனின் இங்கு "இடதுசாரியம்" என்று சாடுகின்றார்.

லெனின் அந்த வாதத்தை மேற்கோள் காட்டி இவ்வாறு கேட்கிறார்:"இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்புரட்சியாளர்களான கத்தோலிக்க கட்சியை ஆதரிக்கிறார்கள் என்றால், ஜெர்மனியில் பாராளுமன்ற முறைமை இன்னும் காலாவதியாகவில்லை என்று தானே அர்த்தம்? பாராளுமன்ற முறைமை வரலாற்று ரீதியாக காலாவதியாகி விட்டது, அரசியல் ரீதியாக அல்ல. அதனை உலக வரலாற்றுக் காலகட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கான சகாப்தம் ஆரம்பமாகி விட்ட காலத்தில், முதலாளித்துவ பாராளுமன்ற முறைமை முடிந்து விடும். ஆனால் அது இன்று அரசியல் ரீதியாக காலாவதியாகி விட்டதா என்பதே கேள்வி."

பாராளுமன்ற முறைமை அரசியல் ரீதியாக காலாவதியாகாமல் உயிர்ப்புடன் இருக்கும் நிலையில், மக்களுக்கு அறிவு புகட்டுவதற்கு தேர்தல்களில் பங்கெடுப்பது அவசியமாகின்றது. மதகுருக்களால் முட்டாள்கள் ஆக்கப்பட்ட மக்களை, பிற்போக்கு நிறுவனங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். நடைமுறையில் உள்ள பாராளுமன்ற அமைப்பையும், அது சார்ந்த பிற்போக்கான நிறுவனங்களையும், எம்மால் கலைக்க முடியாமல் உள்ள இன்றைய நிலையில் இது அவசியமானது. அவற்றிற்குள் ஊடுருவி வேலை செய்தால் தான், அங்குள்ள மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூற முடியும்.

லெனின் தனது வாதத்திற்கு வலுச் சேர்பதற்காக, பாரிஸ் கம்யூன் காலத்தில் எங்கெல்ஸ் எழுதியதை மேற்கோள் காட்டுகிறார். உண்மையில், பாரிஸ் கம்யூன் புரட்சி தோல்வியடைந்த பின்னர் தான் மார்க்சிய காலகட்டம் தோன்றியது. அதாவது, பாரிஸ் கம்யூனை ஆதரித்தவர்களிடையே கருத்து முரண்பாடு தோன்றியது. பிளாங்கிஸ்டுகள் எனப்படுவோர் பிற்காலத்தில் அனார்க்கிஸ்டுகள் (அராஜகவாதிகள்) என்று அறியப் பட்டனர். 

பிளாங்கிஸ்டுகள் கூட தம்மை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொண்டனர். ஆனால், இடையில் உள்ள எந்தவொரு அமைப்பையும் சார்ந்திராமல், நேரடியாக கம்யூனிச காலகட்டத்திற்கு செல்ல விரும்புகின்றனர். அதாவது, இன்றைக்குள்ள பாராளுமன்ற அமைப்பு முறையை அவர்கள் கணக்கில் எடுக்காமல் கடந்து செல்லப் பார்க்கின்றனர். இதனை சிறுபிள்ளைத்தனம் என்று சாடும் எங்கெல்ஸ், நடைமுறை அமைப்புகளை புறக்கணித்து விட்டு, நாளைக்கே கம்யூனிச சமுதாயத்தை உருவாக்கி விட முடியாது என்று கூறியுள்ளார். 
(Fr. Engels, "Programme of the Communists- Blanquists)

மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால், மக்களின் ஆதரவையும், நன்மதிப்பையும் பெற விரும்பினால், எதிர்நோக்கும் தடைகளையும், கஷ்டங்களையும் எண்ணி நாம் அஞ்சக் கூடாது. "மக்களின் தற்போதைய தலைவர்கள்", எங்களைப் பார்த்து ஏளனமாக பேசினாலும், அவமானப் படுத்தினாலும், எதற்கும் கலங்காமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். எங்கெங்கு மக்கள் கூடுகின்றார்களோ, அங்கெல்லாம் சென்று மக்களுக்கு உண்மைகளை கூற வேண்டும். எந்த விதமான அர்ப்பணிப்புக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். மக்களை எழுச்சியடைய வைக்கும் பரப்புரைகளை படிப்படியாக கொண்டு செல்ல வேண்டும்.

நாம் செல்லுமிடம் மிக மோசமான, படு பிற்போக்கான ஸ்தாபனமாக இருந்தாலும், அங்கெல்லாம் பாட்டாளி வர்க்க மக்களைக் காணலாம். பாட்டாளி வர்க்க மேட்டுக்குடியினருக்கு எதிராகவும் நாம் போராட வேண்டியிருக்கும். அதாவது பாட்டாளி வர்க்கத்தில் உள்ள வசதி படைத்த பிரிவினர் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக நின்று, எங்கள் கொள்கைகளை எதிர்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் மக்களை ஏமாற்றும் சந்தர்ப்பவாதிகளுக்கும், சமூக - பேரினவாதிகளுக்கும் எதிராக போராடி, உழைக்கும் வர்க்க மக்களை எமது பக்கத்திற்கு கவர்ந்திழுக்க வேண்டும்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

4 comments:

Unknown said...

இது முதலாளித்துவ நாட்டு இடதுசாரிகளுக்கு மட்டுமா அல்லது மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த இடதுசாரிகளுக்கும் இது பொருந்துமா

Kalaiyarasan said...

இடதுசாரிகள் என்பது ஒரு பொதுவான வார்த்தை. அதற்குள் பல பிரிவுகள் உள்ளன. அவற்றிற்குள் மிகப் பெரிய கொள்கை வித்தியாசங்களும் உள்ளன. ஆகவே, இது இடதுசாரியம் என்ற கொள்கை பற்றிய விமர்சனமாக கருத வேண்டும். தீவிர இடதுசாரிய போக்கு உலகில் எல்லா நாடுகளிலும் இருக்கும்.

Unknown said...

மன்னிக்கவும் தோழர். என்னுடைய கேள்வி நாடாளுமன்றங்களில் பங்கேற்பது என்பது முதாளித்துவ நாடுகளின் கம்யூனிஷ்டுகளுக்கு மட்டுமா அல்லது மூன்றாம் உலக நாடுகளின் கம்யூனிஸ்டுகளுக்கும் அதுவே பொருந்துமா?

Kalaiyarasan said...

இருபதாம் நூற்றாண்டுக்குப் பின்னர், கம்யூனிஸ்டுகள் எனப்படுவோர், மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்றாகி விட்டது. ஆகவே, லெனினின் கோட்பாடு எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற தேர்தல்களில் பங்குபற்றுவதில் தவறில்லை என்பது தான் லெனின் சொல்ல வருவது. அதே நேரம், நாடாளுமன்ற தேர்தல்கள் மட்டுமே பங்குபற்றுபவர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று சொல்ல முடியாது. அவை பெயரில் கம்யூனிசம் வைத்திருந்தாலும், சமூக ஜனநாயகக் கட்சிகளாகி விடுகின்றன. லெனினின் இன்னொரு நூல் (என்ன செய்ய வேண்டும்?) சமூக ஜனநாயக கட்சிகளின் குறைபாடுகள் பற்றி விமர்சிக்கின்றது. நாடாளுமன்ற தேர்தல்களில் பங்குபற்றுவது, பிரச்சார நோக்கில் பலன்தரத் தக்கது. சட்டப்படி கிடைக்கும் வசதிகளை பயன்படுத்தி மக்களை சந்திக்க உதவும். ஆனால், அது ஒரு பகுதி தந்திரோபாயம் மட்டுமே. அதே கட்சி தலைமறைவான இரகசிய நடவடிக்கைகள் எடுப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்.