Thursday, August 20, 2015

"மாற்று நாணய சமூகங்கள்" : பணமில்லாத சமுதாயத்தை உருவாக்குவது எப்படி?

நீங்கள் வசிக்கும் நாட்டின் பொருளாதாரம் திவாலானால் என்ன செய்ய வேண்டும்? கிரேக்க மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம். அந்த நாட்டில், யூரோ நாணயத்திற்கு பதிலாக, மாற்று நாணயங்களின் பாவனை பெருகி வருகின்றது. ஒரு மாற்று நாணயத்தை உருவாக்குவது, பயன்படுத்துவது எப்படி?

கிரேக்க நாட்டில், குறைந்தது 80 மாற்று நாணயங்கள் பயன்படுத்தும் அமைப்புகள் புழக்கத்தில் உள்ளன. குறைந்தது பத்துப் பேர், அதிகப் படியாக ஆயிரக் கணக்கில் உறுப்பினர்களை கொண்டதாக இந்த அமைப்புகள் உள்ளன. "மாற்று நாணய அமைப்புகள் அரசுக்கு வரி கட்டாமல் தவிர்க்கப் பார்க்கின்றன" என்று கிரேக்க அரசு குற்றஞ் சாட்டினாலும், அதை சட்டவிரோதமாக்க முடியாத நிலையில் உள்ளது.

TEM என்ற மாற்று நாணயம் மிகவும் பிரபலமானது. அதன் உறுப்பினர்கள் ஓராயிரத்தை தாண்டியுள்ளது. வோலோஸ் எனும் நகரிலும், அதை அண்டிய பகுதிகளிலும் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களினாலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. TEM நாணயத்தின் பெறுமதி யூரோவுக்கு சரி சமமானது. ஆகவே, ஒருவர் யூரோவில் பணம் செலுத்துவது மாதிரி, TEM கொடுத்தும் பொருட்களை வாங்கலாம்.

நாணயப் பரிவர்த்தனை எவ்வாறு இயங்குகிறது? TEM பாவிக்கும் நபர்களின் பட்டியல், அவர்களிடம் உள்ள பணத்தின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் கணனியில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும். வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் எங்கேயும் எப்போதும் பயன்படுத்தும் வகையில், இணையத்தில் பார்வையிடலாம். எவ்வளவு TEM செலவாகி உள்ளது, மிச்சம் எவ்வளவு என்பதையும் பார்க்கலாம்.

கடையில் பொருட்களை வாங்குவது மட்டுமல்ல, வைத்தியரை பார்ப்பது, முடி திருத்துவது, கல்வி கற்பது, போன்ற சேவைகளுக்கும் TEM பயன்படுத்திக் கொள்ளலாம். யூரோ நாணயம் மாதிரி, TEM நாணயத்தை கண்ணால் காண முடியாது என்பது மட்டுமே வித்தியாசம். அதாவது, அதற்கு பணத் தாள்கள், சில்லறை குற்றிகள் எதுவும் கிடையாது.

ஒருவர் தனது மாற்று நாணயத்தை எவ்வாறு சேமிக்கிறார்? அதற்கு ஏதென்ஸ் நகரில் இயங்கும் ATX நாணயம் இலகுவான விளக்கம் அளிக்கலாம். 2011 ம் ஆண்டில் இருந்து இயங்கும் ATX வலையமைப்பில், ஆயிரக் கணக்கானோர் சேர்ந்து விட்டனர். அதனை "நேர சேமிப்பு வங்கி" என்று அழைக்கிறார்கள். அதாவது, ஒருவர் செய்த வேலை நேரத்தை சேமித்து அதை பணமாக மாற்றுவது. 

உதாரணத்திற்கு, ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உடல் உழைப்பை வழங்குகின்றார். அதே நேரம், ஓர் ஆசிரியர், பாடசாலையில் எட்டு மணி நேரம் படிப்பிக்கிறார். யார் என்ன வேலை செய்தாலும் பரவாயில்லை. வேலை செய்யும் மணித்தியாலம் ஒவ்வொன்றுக்கும் பெறுமதியை பணத்தால் அளக்கிறார்கள். அதைத் தான் நாங்கள் சம்பளம் என்கிறோம்.

ATX வங்கியில், பணமல்ல, வேலை நேரம் மட்டுமே கணக்கு வைக்கப் படுகின்றது. உறுப்பினர்கள் தாம் வேலை செய்த நேரங்களை, அந்த வங்கியில் சேமித்து வருவார்கள். அதைக் கொண்டு, கடையில் பொருட்களை வாங்கலாம்! அதிசயம் ஆனால் உண்மை. இது நடைமுறைச் சாத்தியமான விடயம் தான். உண்மையில், பணம் என்பதன் அர்த்தம் அங்கே தான் உணரப் படுகின்றது.

என்னிடம் நூறு ரூபாய் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் அர்த்தம் என்ன? நூறு ரூபாய்க்கு பெறுமதியான உழைப்பை, சேவையை அல்லது பொருளை வழங்குவதற்கு இன்னொருவருக்கு கடமைப் பட்டுளேன். இன்னொரு விதமாக சொன்னால், எனது சேவை, உழைப்பு, பொருளை பெற்றுக் கொண்ட ஒருவர், தனது கடமைப்பாட்டை நூறு ரூபாய் மூலம் ஈடு கட்டியுள்ளார்.

இது தான் பணம் என்ற பொருளாதாரத்தின் அடிப்படை. அதனால் தான், ATX வங்கியில், பணத்திற்கு பதிலாக நேரத்தை சேமிக்கிறார்கள். இதன் மூலம் எல்லோருக்கும் நன்மை உண்டாகின்றது. பணம் இல்லாதொழிக்கப் பட்டுள்ள படியால், இலஞ்சம், ஊழல் நடக்கவும் வாய்ப்பில்லை. யாரும் செல்வம் சேர்த்து பணக்காரனாகவும் முடியாது. அதே நேரம் யாரும் ஏழ்மையில் கஷ்டப் படவும் மாட்டார்கள்.




Greek town develops bartering system without euro


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

1 comment:

Unknown said...

சமத்துவம் பிறக்க ATX கண்டிப்பாக உதவும்.
ஆனால்,நேரத்தை மிச்சம் வைத்து ஆடி கார் வாங்க முடியுமா?
ஒருவரின் வாங்கும் தன்மையை எவ்வாறு கட்டுப் படுத்துவது?