Monday, June 22, 2015

சீனாவில் சுற்றுலா பயணிகளை கவரும் பாலியல் சுதந்திரம் மிக்க "பெண்களின் ராஜ்ஜியம்"!


புராதன காலத்தில் பெண்களால் தலைமை தாங்கப் பட்ட தாய் வழிச் சமுதாயம் இருந்ததாக கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அந்த சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை சீனாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் நேரில் காணலாம். தென் மேற்கு சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் பெருமளவு சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகும்.

சுவிட்சர்லாந்து போன்ற அழகான இடங்களைக் கொண்ட லிஜியான் நகரத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் மொசுவோ மக்கள் வாழும் பிரதேசம் உள்ளது. சீனாவின் அங்கீகரிக்கப் பட்ட தேசிய இனங்களில் அதுவும் ஒன்று.

சுமார் நாற்பதாயிரம் மக்கட்தொகை கொண்ட மொசுவா இனத்தவர்கள், தீபெத்தோ- பர்மிய இனக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். திபெத்திய, பர்மிய மொழிகளுக்கு இடைப்பட்ட தனித்துவமான மொழியைப் பேசுகின்றனர். இன்றைய நவீன காலத்திலும் பாலின சமத்துவம் நிலவுவது அந்த இனத்தின் சிறப்பம்சம் ஆகும். அந்தச் சமுதாயத்தில் பெண்கள் தான் தலைமை வகிக்கின்றனர். வயலில் இறங்கி கடின வேலைகளை செய்வதும் பெண்கள் தான்! ஆண்கள் எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றிப் பொழுதுபோக்குவார்கள்.

மொசுவோ மக்கள் இன்றைக்கும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டிற்குள் வாழ்கின்றனர். வயது வந்த பெண்களுக்கு மட்டும் தனியான அறை ஒதுக்கப் பட்டிருக்கும். ஒரு பருவமடைந்த பெண், தனக்கான ஆண் துணையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவர் விரும்பும் ஆண், அன்றைய இரவு அவருடன் தங்கலாம். விடிந்தவுடன் அந்த உறவு முடிந்து விடுகின்றது. மொசுவா மக்கள் இதனை "நடக்கும் திருமணங்கள்" என்று அழைக்கின்றனர்.

அந்த மக்களின் வாழ்க்கை முறையை வெளியில் உள்ளோர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். மொசுவா பெண்களின் பாலியல் சுதந்திரம் என்பது, தினசரி ஓர் ஆடவனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதல்ல. ஓர் உறவானது, ஒரு நாள் மட்டுமல்லாது வருடக் கணக்காகவும் நீடிக்கலாம். அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம். எந்தக் கட்டுப்பாடும் இன்றி, தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கவும், மாற்றிக் கொள்ளவும் அந்தப் பெண்ணுக்கு உரிமை உண்டு.

ஒரு குழந்தை பிறந்தவுடன், அந்தப் பெண்ணுடன் உறவு கொண்ட எந்த ஆணும், தானே தந்தை என்று சொந்தம் கொண்டாடுவதில்லை. அந்தக் குழந்தையை பெற்று வளர்ப்பது, முழுக்க முழுக்க பெண் வீட்டார் பொறுப்பு. இவர் தான் தந்தை என்று யாராவது இனம் காணப் பட்டாலும், குழந்தைக்கு பரிசுப் பொருட்களை கொடுப்பதுடன் அவரது கடமை முடிந்து விடுகிறது. தொடர்ந்து, தாயான பெண்ணின் சகோதரர்கள் தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து அந்தக் குழந்தையை வளர்ப்பார்கள். மொசுவா மொழியில் "அப்பா என்ற ஒரு சொல்" கூடக் கிடையாது!

வேலைக்குப் போவதும், குழந்தை பெற்று வளர்ப்பதும் பெண்களாக இருந்தாலும், அது ஒரு பெண்ணாதிக்க சமுதாயமாக இருக்கவில்லை. மாறாக எல்லாக் கட்டத்திலும் பால் சமத்துவம் பேணப் படுகின்றது. சிலநேரம், ஒரு குடும்பத்தில் பெண்களின் எண்ணிக்கை கூடி விட்டால், ஆண்கள் அதிகமாக உள்ள இன்னொரு குடும்பத்துடன் குடும்ப உறுப்பினர்களை பரிமாறிக் கொள்வார்கள்.

மொசுவா சமுதாயத்தில் பாலியல் சுதந்திரம் சர்வ சாதாரணமான விடயம் என்பதால், அங்கு யாரும் புறம் பேசுவதில்லை. ஒருவரது "கள்ள உறவு" பற்றிய கிசு கிசு கதைகளை யாரும் பேசுவதில்லை. அது மட்டுமல்ல, யாரும் யார் மீதும் பொறாமை கொள்வதில்லை. 

அந்தச் சமுதாயமானது, புராதன கால பொதுவுடைமைச் சமூக- பொருளாதார உற்பத்திகளை இன்று வரைக்கும் தொடர்ந்தும் பேணி வருகின்றது.  "இது எனது உடைமை... எனது சொத்து..." என்று யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. அதனால், சண்டை, சச்சரவு, திருட்டு, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை போன்ற எந்த விதமான சமூகவிரோத செயல்களும் அங்கு இல்லை. 

சீனா முழுவதும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றியதும், மொசுவா மக்களை தனியான தேசியமாக அங்கீகரித்தனர். கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் மாத்திரம், நடக்கும் திருமண முறையை கைவிட்டு விட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டனர். உண்மையில் அன்றிருந்து பலர் நீடித்த திருமண உறவுகளை பின்பற்றத் தொடங்கினார்கள். கலாச்சாரப் புரட்சி முடிந்த பின்னர், மரபு வழித் திருமணங்கள் மீண்டும் அதிகரித்தன.

தொண்ணூறுகளுக்குப் பிறகு ஒட்டு மொத்த சீனாவின் பொருளாதாரம் மாற்றமடைந்தது. சீன ஆட்சியாளர்கள் முதலாளித்துவத்தை ஊக்குவித்தார்கள். அது மொசுவா மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கியது. பொதுவாக, அழகான மலைப் பிரதேசங்களை கொண்ட யுன்னான் மாகாணத்திற்கு, சீன உல்லாசப் பிரயாணிகள் படையெடுத்தார்கள். சுற்றுலா துறை நிறுவனங்கள், மொசுவா பிரதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.

"மகளிர் தேசம்" என்ற விளம்பரத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் கவர்ந்திழுக்கப் பட்டனர். பாரம்பரியமாக தந்தை வழி சமுதாயத்தில் வந்த சீனர்களுக்கு, "பெண்களின் தேசம்" பற்றிய தகவல்கள் புதுமையாகத் தோன்றின. பலர் அங்கே சுதந்திரமான பாலியல் தொழில் நடப்பதாக தவறாகப் புரிந்து கொண்டனர். சுற்றுலா நிறுவனங்களும், "நடக்கும் திருமணத்தில் ஒரு நாள் மணமகனாவது எப்படி?" என்று விளம்பரம் செய்து சீன ஆண்களை கவர்ந்தார்கள்.

அனேகமாக, மொசுவோ பற்றிய கற்பனையான கிளுகிளுப்பூட்டும் கதைகளை மட்டுமே கேள்விப் பட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. சுற்றுலா நிறுவனங்கள் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்துள்ளன. மொசுவா பிரதேசத்தில் ஒரு சிவப்பு விளக்குப் பகுதியை உருவாக்கி அங்கு சில மொசுவா பெண்களை பாலியல் தொழிலாளர்களாக அமர்த்தினார்கள்.

தமது சமுதாயத்தைப் பற்றிய தவறான கதைகள் பரப்பப் படுவதையிட்டு, மொசுவா மக்கள் பலர் எரிச்சலுற்றுள்ளனர். இருப்பினும், ஒரு சிலர் சுற்றுலாத் துறை கொண்டு வரும் வருமானத்தை இழக்கவும் விரும்பவில்லை. பாரம்பரியமாக பெண்கள் தலைமை தாங்கிய, அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்த மொசுவோ சமுதாயத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டானது. புதிதாகத் தோன்றிய முதலாளித்துவ பொருளாதாரம் காரணமாக, மொசுவா ஆண்கள் நன்மை அடைந்தனர்.

சுற்றுலா ஸ்தலங்களில், சேவைத் துறையில் உள்ள பல வேலைகளை பெண்களே செய்தாலும், ஆண்கள் தொடர்பாளர்களாகவும், முகவர்களாகவும் பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். இருப்பினும் இத்தகைய பொருளாதார மாற்றமானது, அந்தப் பிரதேசத்தின் பின்தங்கிய வறுமையான கிராமங்களை மட்டுமே பாதித்து வருகின்றது. பெரும்பான்மையான மொசுவா பெண்கள், இப்போதும் வயலில் வேலை செய்து கொண்டே, பாரம்பரிய தாய் வழி குடும்ப உறவுகளை கட்டிக் காத்து வருகின்றனர்.


No comments: