Tuesday, June 23, 2015

இந்தியாவுக்கு எதிரான வியூகத்தில் சீனா தமிழ் தேசியவாதிகளுக்கு உதவுமா?

சீனாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு, பூகோள அரசியல் தந்திரோபாயம் குறித்த ஆலோசனைகள் வழங்குவதற்காக ஒரு நிபுணர்கள் குழு இயங்குகின்றது. China Institute of International Studies (CIIS) (http://www.ciis.org.cn/english/index.htm ) என்ற அந்த அமைப்பில், இந்தியா தொடர்பான கட்டுரை ஒன்று சீன மொழியில் பிரசுரமானது. 

Zhan Lue என்ற புனைபெயரில் ஒரு நிபுணர் எழுதிய கட்டுரை, இன்று வரையில் யாருடைய கவனத்தையும் பெறவில்லை. ஆனால், அதில் தமிழ் தேசியவாதிகள் பற்றியும் குறிப்பிட்டிருப்பது எம்மைப் பொருத்தவரையில் முக்கியமான விடயம் தான்!

அந்தக் கட்டுரையின் சாராம்சம் இது: 
சீனா தனது நட்பு நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவற்றுடன் கூட்டுச் சேர்ந்து, இந்தியாவில் பத்து அல்லது இருபது தனி நாடுகளை உருவாக்குவதற்கு முன் வர வேண்டும். சீனா சிறிதளவு முயற்சி எடுத்தாலே, இந்திய மாநிலங்களை உடைத்து விடலாம். அதற்காக, சீனா பல வேறுபட்ட தேசிய இனங்களுடன் கூட்டுச் சேர வேண்டும். அசாமியர்கள், காஷ்மீரிகள், தமிழர்கள் போன்ற தேசியவாதிகள் தமக்கான தனி நாட்டை அமைத்துக் கொள்வதற்கு உதவ வேண்டும்.
(ஆதாரம்: Where China Meets India, Burma and the New Crossroads of Asia, by Thant Myint-U) 

சீனாவிலும், இந்தியாவிலும் இந்த அறிக்கையை பலர் அபத்தம் என்று புறக்கணித்திருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் நடைமுறைச் சாத்தியமற்றது என்று சொல்ல முடியாது. சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நட்புறவு அறுந்து, மோதல் நிலைக்கு செல்லும் காலகட்டத்தில் அந்த அறிக்கை தூசு தட்டி எடுக்கப் பட்டு, அதில் கூறப்பட்ட ஆலோசனைகளை நடைமுறைப் படுத்த முனையலாம்.

அனேகமாக, இந்திய அரசு ஏற்கனவே இப்படியான அபாயம் இருப்பதைப் பற்றி யோசித்து இருக்கலாம். அதனால், தானே முந்திக் கொண்டு, இந்திய நலன் சார்ந்த தமிழ் தேசிய சக்திகளை உருவாக்கி விட்டிருக்கலாம். அதை நாம் அனுபவத்தில் கண்டறியலாம். 

தங்களைத் தாங்களே தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக் கொள்ளும் பலர், சீனாவை கடுமையான தொனியில் எதிர்ப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். அதே நேரம் இந்தியா தொடர்பான மென்மையான போக்கை கடைப் பிடிக்கின்றனர். 

"கருணாநிதி - சோனியா" அல்லது "திமுக - காங்கிரஸ்" போன்ற தனி நபர்களையும், கட்சிகளையும் மட்டும் எதிர்த்தால் போதும், அதுவே இந்திய எதிர்ப்புவாதம் ஆகிவிடும் என்று சிலர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே இன்னொரு கட்டத்தில், மோடியையும், பாஜகவையும் ஆதரித்தார்கள். அப்படி இல்லா விடினும், இந்தியாவில் இருந்து பிரிவது பற்றி பேசாமல், இந்திய இறையாண்மைக்கு ஆதரவாகப் பேசுவார்கள்.

ஈழப்போரின் இறுதியில், சீனா சிறிலங்கா அரசுக்கு ஆதரவளித்தது. கன ரக ஆயுதங்களை விற்றது என்று சிலர் காரணங்களை அடுக்கலாம். அதெல்லாம் உண்மை தான். ஆனால், சர்வதேச விவகாரங்களில், சீனாவும் ஒரு மேற்கத்திய வல்லரசு போன்றே நடந்து கொள்கின்றது. 

ஒரு நாட்டுக்குள் நிலவும் தேசிய இனப் பிரச்சினையில், அது இரண்டு பக்கத்தையும் ஆதரிக்கும். ஒன்றை நேரடியாகவும், மற்றதை மறைமுகமாகவும் ஆதரிக்கும். சீனாவின் இந்த தந்திரோபாயம், ஏற்கனவே மியான்மரில் வெற்றிகரமாக பாவிக்கப் பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்திடம் மட்டுமல்ல, புலிகளிடமும் சீன ஆயுதங்கள் தான் இருந்தன என்பது இரகசியமல்ல. புலிகளின் சர்வதேச ஆயுத முகவர் குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் தங்கியிருந்து ஆயுதங்களை கடத்தி வந்ததும் தெரிந்த விடயம். அவர் எங்கே, யாரிடம் இருந்து ஆயுதங்களை வாங்கினார் என்பதை ஆராய்ந்தாலே போதும். மியான்மரிலும், கம்போடியாவிலும் சீன ஆயுதங்களை விற்பனை செய்யும் தரகர்கள் உள்ளனர்.

மியான்மரில் சீன எல்லையோரம் "வா" சிறுபான்மை இன மக்களின் தனி நாட்டுக்காக போராடிய கிளர்ச்சிப் படை (United Wa State Army), தசாப்த காலமாக ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்துள்ளது. அதற்கு சீனா மறைமுகமான ஆதரவு வழங்குவது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அந்தப் பிரதேசத்தில் சீன நாணயம் புழக்கத்தில் உள்ளது. சீனாவில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப் படுகின்றது. பெரும்பாலான முதலீடுகள் சீனர்களுடையவை.

நவீன ஆயுதங்களை கொண்டுள்ள United Wa State Army (UWSA), தனது "de facto வா தேசத்திற்கு" வருமானம் தேடுவதற்காக ஆயுத விற்பனையில் இறங்கியுள்ளது. சீனா தனது இராணுவத்தை நவீனப் படுத்தும் பொருட்டு, பழைய AK-47, T-56 ரக துப்பாக்கிகளை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலைக்கோ விற்று விட்டது. சீனாவுடன் தொடர்புடைய ஆயுதத் தரகர்கள் அவற்றை வாங்கி விற்கின்றனர். UWSA , அவற்றை மணிப்பூர் மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் இயங்கும் கிளர்ச்சிப் படைகளுக்கு விற்றுள்ளன. 

அண்மையில் மியான்மர் எல்லைக்குள் நுளைந்த இந்திய இராணுவம், அங்கு முகாமிட்டிருந்த இந்தியாவுக்கு எதிரான கிளர்ச்சிப் படைகள் மீது தாக்குதல் நடத்தி இருந்தது. அதற்கு மியான்மர் அரசு மறைமுகமான ஒத்துழைப்பு வழங்கி இருந்தது. வெளியில் தெரியா விட்டாலும், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பனிப்போரின் விளைவாக ஏற்படும் பதிலிப் போர்களும் அவ்வப்போது நடந்து கொண்டு தானிருக்கின்றன.

No comments: