Saturday, June 06, 2015

கடன்கள் : வங்கிகளின் பணம் பெருக்கும் இயந்திரம்


மிலேச்சத்தனமான முதலாளித்துவ சர்வாதிகாரம் பற்றிய உண்மைகளை உரைப்பவர்கள், "நீர்க்குமிழிக்குள் வாழ்கிறார்கள்" என்று ஒரு நண்பர் விமர்சித்திருந்தார். இன்றுள்ள முதலாளித்துவ பொருளாதாரம், அடிப்படையில் ஒரு நீர்க்குமிழி பொருளாதாரம் என்பதற்கு அடுத்தடுத்து வந்த நெருக்கடிகளே சாட்சியம் கூறுகின்றன. அண்மையில் அமெரிக்காவில் வந்த கடன் நெருக்கடி, கடந்த நூறாண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

கடன் என்றால் என்ன? அதனால் நன்மை அடைவோர் யார்? பாதிக்கப் படுவோர் யார்? இது பற்றிய ஆவணப் படம் ஒன்று, நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. பொது மக்களுக்கு அறிவூட்டும் நோக்கில், Zembla ஊடகவியலாளர்கள் தயாரித்தளித்த நிகழ்ச்சியில் பேசப் பட்ட விடயங்களை இங்கே சுருக்கமாகத் தருகிறேன்.

பண்டைய காலத்தில், மெசப்பத்தோமியா நாட்டில் பணம் புழக்கத்தில் இருக்கவில்லை ஆனால் கடன் இருந்தது. கடன் பத்திரங்களை கல்வெட்டுகளில் பொறித்து வைத்தார்கள். மத்திய காலத்தில், போர்ச் செலவுகளுக்காக, மன்னர்கள் வணிகர்களிடம் கடன் வாங்கும் வழக்கம் இருந்துள்ளது. அது நவீன கால கடன் வழங்கும் வங்கிகளின் தோற்றத்திற்கு வித்திட்டது.

நாங்கள் எல்லோரும் கடன் வாங்குகிறோம். தனி மனிதர்கள் கடன் வாங்குவது போல, அரசுகளும் கடன் வாங்குகின்றன. அரசு என்பதற்காக, கடன் கொடுப்பவர்கள் தமது நிபந்தனைகளை தளர்த்திக் கொள்வதில்லை. ஒரு சாதாரண மனிதன், அளவுக்கு மிஞ்சி கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் என்ன நடக்கும்? அவனது செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும், பட்டினி கிடந்தாயினும், கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் கூறுவார்கள். 

அதையே தான், நாடுகள் விடயத்திலும் பின்பற்றுகிறார்கள். கடன் வாங்கிய அரசுகள், தமது செலவுகளை சிக்கனப் படுத்தி கடனை அடைக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதை நாங்கள் அரசியல்-பொருளாதார கலைச்சொல்லில் சிக்கனப் படுத்தும் கொள்கை (Austerity) என்று சொல்கிறோம். ஆனால் விஷயம் ஒன்று தான். "உன்னுடைய செலவுகளை குறைத்து, மிச்சம் பிடித்து, வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடு."

இன்று கிரீஸ் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையும் அது தான். ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப் பட்ட காலத்தில் ஒரு சட்டம் இயற்றினார்கள். ஒரு ஐரோப்பிய நாடு அந்த அமைப்பில் உறுப்புரிமை பெறுவதற்காக, கடன்களை குறைவாக வைத்திருக்க வேண்டும். அது அந்த தேசத்தின் மொத்த பொருளாதார உற்பத்தியின் அளவுக்கு கீழே, அதாவது 60% க்கும் கீழே இருக்க வேண்டும். 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், மொத்த பொருளாதார உற்பத்தியையும் (BNP), மொத்த கடன்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். கடன் தொகை BNP யை விட அதிகரித்து விட்டால், அந்த நாடு திவாலாகி விடும். கிரேக்க நாட்டில் அது தான் நடந்தது. மொத்த கடன் தொகை, மொத்த பொருளாதார உற்பத்தியை விட, 129% அதிகமாக இருந்தது!

கடன் வழங்கும் வங்கிகள், நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை விட, அரசாங்கங்களுக்கு கடன் கொடுப்பதை பெரிதும் விரும்புகின்றன. கடன் வாங்கிய நிறுவனம் ஒன்று திவாலாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். கடனை திருப்பி வாங்க முடியாத நிலைமை ஏற்படும். ஆனால், நாடுகள் விடயத்தில் அப்படி அல்ல. ஓர் அரசு கடன் வாங்கினால், அந்த நாடு கடனை குறுகிய காலத்தில் திருப்பிக் கொடுக்கா விட்டாலும், வங்கிகள் கவலைப் படப் போவதில்லை. ஏன்?

இலங்கை, இந்தியா போன்ற ஏழை நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன், போன்ற பணக்கார நாடுகளும் கடன் வாங்குகின்றன. கடன் விடயத்தில், ஏழை நாடு, பணக்கார நாடு என்ற பாகுபாடு கிடையாது. அதாவது, கடன் வழங்கும் வங்கிகளை பொறுத்தவரையில் எல்லா அரசுகளும் ஒன்று தான். வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்தால் சரி.

இந்தக் கடன்களை யார் அடைக்கப் போகிறார்கள்? நிச்சயமாக, வரி கட்டும் சாதாரண மக்கள் தான். ஒவ்வொரு நாளும் இலட்சக் கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. வருங்காலத்தில் அவர்கள் வரி கட்டுவார்கள். அதாவது, தனது சொந்த நாட்டு மக்களை பிணை வைத்து தான், அரசுகள் கடன் வாங்குகின்றன. எமது அரசுக்கள் வாங்கிய கடன்களையும், வட்டிகளையும் நாங்கள் தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். 

அதனால் தான், எந்த நாட்டு அரசு கடன் கேட்டாலும், அது இலங்கை மாதிரி போரினால் அழிந்து கொண்டிருக்கும் ஏழை நாடாக இருந்தாலும், வங்கிகள் தயங்காமல் கடன் கொடுக்கின்றன. அதற்குக் காரணம், அந்தப் பணத்தை எந்தக் காலத்திலும் திருப்பி வாங்கலாம். நூறு வருடங்களுக்குப் பிறகு அங்கு பிறக்கும் பிள்ளைகளிடம் இருந்தென்றாலும் வட்டியோடு வாங்கலாம். 

கடன்களுக்காக கட்டப் படும் வட்டித் தொகையினால், வங்கிகளின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன. வங்கிகளைப் பொறுத்தவரையில், கடன் என்பது பணம் பெருக்கும் இயந்திரம். இதனால், உலகின் ஒரு மூலையில் பெரும் கோடீஸ்வரர்களிடம் உள்ள பணம் பெருகிக் கொண்டே செல்கிறது. அதே நேரத்தில், ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் அரசுகள், வங்கிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு சிக்கன நடவடிக்கைகளை எடுக்கின்றன. அதனால் பொது மக்கள் நலன் பேணும் திட்டங்களை கைவிடுகின்றன. அதன் விளைவு என்ன? மக்கள் தமது அரசுகள் மீது நம்பிக்கை இழக்கின்றனர். அதற்குப் பதிலாக, ஒரு பலமான தலைவருக்காக ஏங்குகிறார்கள். 

அந்தப் புதிய அரசியல் தலைவர் ஒரு பாசிஸ்டாக இருந்தாலும், மக்கள் அதைப் பற்றி கவலைப் படப் போவதில்லை. சாதாரண மக்களின் பிரச்சனைகளை பற்றி எவர் பேசினாலும், அவரது அரசியல் பின்னணி பற்றி ஆராயாமல் ஆதரிக்கிறனர். ஜெர்மனியில் நாஸிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பிருந்த நிலைமையில், இன்றைய ஐரோப்பா உள்ளது. அந்த ஆபத்து குறித்து அரசியல் தலைவர்கள் மத்தியில் எச்சரிக்கையுணர்வு இல்லை. இருந்தாலும் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவில்லையா? இருக்கிறது. புரட்சி மட்டுமே தீர்வைக் கொண்டு வரும். ஒரு நாட்டில் புரட்சி நடந்து புதிதாக ஆட்சியமைக்கும் அரசு புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதன் மூலம் கடன்களை இரத்து செய்ய முடியும். அது மட்டுமல்ல, உலகப்போர்களும் கடன்களை இரத்து செய்வதற்கான காரணங்களை வழங்குகின்றன. 

உதாரணத்திற்கு, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், ஜெர்மனியின் பழைய கடன்கள் யாவும் இரத்து செய்யப் பட்டன. அதனால் தான் ஜெர்மனி ஒரு பொருளாதார வல்லரசாக வளர்ச்சி அடைய முடிந்தது. அன்று கடன்களை இரத்து செய்தபடியால் நன்மை அடைந்த ஜெர்மனி, இன்று கிரீசுக்கு தான் வழங்கிய கடன்களை இரத்து செய்ய மறுத்து வருகின்றது!

ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு:
De schuldenmachine; http://www.npo.nl/zembla/20-05-2015/VARA_101372895

No comments: