Sunday, October 12, 2014

போலி இஸ்லாமியவாதிகளும் முதலாளிகளின் கைக்கூலிகளே!

போலித் தமிழ்தேசியவாதிகள், போலி சிங்களதேசியவாதிகள், போலி இஸ்லாமியவாதிகள்... இவர்கள் தமக்குள் கொள்கை முரண்பாடு கொண்டவர்கள் போல, ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள்.  ஆனால், அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒரே ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும், முதலாளிகளின் கைக்கூலிகள் தான் என்பதை, கடைசியில் எப்படியோ நிரூபித்து விடுவார்கள்.



தமிழினவாதிகள் போன்று, இஸ்லாமிய மதவாதிகளும், கம்யூனிஸ்டுகள் எனப் படுவோர் "செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்து குதித்த வேற்றுக் கிரக வாசிகள்" என்பது போல நினைத்துக் கொள்கிறார்கள். ஆப்கானிஸ்தானில், ஆப்கானியர்கள் தான் கம்யூனிஸ்டுகளாக இருந்தார். ஆப்கான் கம்யூனிஸ்டுகளின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகத் தான், சோவியத் யூனியன் படைகளை அனுப்பியது.

"ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்திருந்தது" என்பது ஒரு அமெரிக்காவின் பிரச்சாரம். சோவியத் இராணுவம் வருவதற்கு முன்னரே, மத அடிப்படைவாத முஜாகிதீன் இயக்கங்கள் கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தன. அந்த இயக்கங்களுக்கு சவூதி நிதியும், அமெரிக்க ஆயுதங்களும் கிடைத்து வந்தன.

அரபு நாடுகளிலும், அரபு கம்யூனிஸ்டுகள் அல்லது சோஷலிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்தனர். சிரியா, தென் யேமன், எகிப்து போன்ற சில நாடுகளைக் குறிப்பிடலாம். அவ்வாறு தான், சோவியத் யூனியனுக்கு மத்திய கிழக்கு அரபு நாடுகளுடன் நட்புறவு ஏற்பட்டது. இன்றைக்கும், ஈராக் முதல் மொரோக்கோ வரையில், அரபு கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இங்கே சில போலி இஸ்லாமியவாதிகள் கேட்டுள்ள அபத்தமான கேள்விகளும், அவற்றிற்கான எனது பதில்களும்.

  • கேள்வி: முஸ்லிம் நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகளும் இஸ்லாமியவாதிகளும் இணைந்து செயற்பட முடியாமைக்கான காரணங்களாக நீங்கள் எவற்றைக் காண்கிறீர்கள்?

பதில்: இணைந்து செயற்படவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்? சில பொதுவான பிரச்சினைகள், கோரிக்கைகளின் கீழ் ஐக்கிய முன்னணி அமைத்த உதாரணங்கள் பல உண்டு. ஆயினும், கொள்கை வேறுபாடுகளும் இருப்பதை மறுக்க முடியாது. அரபு முஸ்லிம் நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள், தங்களை மாதிரியே சிந்திக்க வேண்டும் என்று இஸ்லாமியவாதிகள் எதிர்பார்ப்பது ஒரு பாசிஸ மனப்பான்மை. தமிழினவாதிகளிடமும் இதே மாதிரியான போக்கு காணப் படுகின்றது. அவர்களும், எல்லாத் தமிழர்களும் தங்களை மாதிரி பேச வேண்டும், சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். முதலில் சமூகம் பன்முகத் தன்மை கொண்டது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

  • கேள்வி: அரபு முஸ்லிம் நாடுகளிலுள்ள இஸ்லாமியவாதிகள் (முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர்) அமெரிக்க - மேற்கு நலன் பேணுபவர்களல்லர். கம்யூனிஸ்டுகளும் ஏகாதிபத்திய முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள். எனவே, இந்தப் புள்ளியில் இணையும் இந்த இரு குழுவினரும் முரண்படும் புள்ளிகள் எவை?


பதில்: இப்படி கருப்பு-வெள்ளையாக பார்க்க முடியாது. எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை உருவாக்கியதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பங்களிப்பை மறுக்க முடியாது. பாகிஸ்தானிலும் ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் பின்னால் பிரிட்டன் இருந்தது. அண்மையில் சிரியாவில் நடக்கும் போரில், இஸ்லாமிய மதவாத இயக்கங்கள், மேற்குலகின் உதவி பெற்றுப் போராடுவதற்கான ஆயிரக் கணக்கான ஆதாரங்கள் உள்ளன. காயப் பட்ட போராளிகளுக்கு இஸ்ரேல் மருத்துவ உதவி செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. 

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மதவாத இயக்கங்கள், ஆரம்பத்தில் மேற்குலக ஏகாதிபத்தியத்தின் உதவியைப் பெற்று இயங்கி வந்தன. இஸ்லாமிய நாடுகளில் தோன்றிய கம்யூனிஸ்ட் இயக்கங்களை அழிப்பதற்காக, மேற்குலகம் இஸ்லாமிய மதவாத இயக்கங்களை வளர்த்து விட்டன. அதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

  • கேள்வி: கம்யூனிஸ்ட்களின் ஆக்கிரமிப்புகளை விடுதலைக்காக எனவும், மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பை எண்ணெய்க்கெனவும் கூறுவது நகைமுரண் இல்லையா, கம்யூனிஸ்ட்கள் ஆக்கிரமிக்கும் பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுகின்றனர் இதை பயன்படுத்தி இதன் எதிர் வினையாக கடும் போக்கு கொண்ட மிதவாதிகள் மக்கள் ஆதரவை பெருகிறார்கள் அவர்களுக்கு உதவுவதுபோல் கம்யூனிச எதிர்ப்பால் மேற்குலகம் அவர்களை வளர்த்துவிடுகிறது, இவர்களது பனிப்போர்க்கு இஸ்லாமிய பயங்கரவாதம் தேவைப்படுகிறது?


பதில்: கம்யூனிஸ்டுகள் தங்களைத் தாங்களே ஆக்கிரமித்தார்களா? என்னய்யா அபத்தம் இது? முதலில் ஒன்றைப் பற்றி விவாதிக்கும் பொழுது சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். உங்களது சகோதரர்கள், சமூகத்தினர் கூட கம்யூனிஸ்டுகளாக இருக்கலாம். 

விளக்கமாக கூறிய பிறகும்.... "விடிய விடிய இராமர் கதை, விடிந்த பிறகு இராமனுக்கு சீதை என்ன முறை" என்று கேட்டது மாதிரி இருக்கிறது உங்களது கேள்வி! "கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பு" என்பதற்கு எதிர்ப் பதமாக,  "முதலாளிகளின் ஆக்கிரமிப்பு" என்று கூறாமல், அதை "மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பு" என்று கூறுவதன் காரணம் என்னவோ? உங்கள் மனதில் உள்ள முதலாளித்துவ சார்புத் தன்மை இப்படியான தருணங்களில் தான் அம்பலமாகின்றது.

"முஸ்லிம் நாடுகளில்" உள்ள கம்யூனிஸ்டுகளும், மதத்தால் இஸ்லாமியர்கள் தான். கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருந்த நாடுகளில், "இஸ்லாமியர் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக" நீங்கள் கூறுவது ஓர் அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம். பிற்போக்காளர்களான மதவெறியர்கள் மட்டும் தான் அடக்கப் பட்டனர். சாதாரண இஸ்லாமிய மக்கள் அல்ல. 

அது வரை காலமும் அதிகாரத்தில் இருந்த பழமைவாதிகள், நிலப்பிரபுக்கள், "இஸ்லாமியர்" என்ற பெயரைச் சொல்லித் தான், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அனைத்து அட்டூழியங்களையும் செய்து வந்தனர். அவர்களை இஸ்லாமிய மக்கள் தான் அடித்து விரட்டினார்கள். கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்களுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். அதனை "அடக்குமுறை" என்று சொல்வதில் இருந்தே, நீங்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்து விடுகின்றது. நீங்கள் உண்மையில், இஸ்லாமிய மக்களை சார்ந்து சிந்திப்பவர் என்றால், இப்படியான அபத்தமான கருத்துக்களை கூற மாட்டீர்கள்.

  • கேள்வி: சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி தான் நடக்கிறது. அங்கே ஏன் ஜின்ஜியாங் மாநிலத்திலே இஸ்லாமியர்கள் மேல் கொடூரமான தாக்குதல் நடக்கிறது? நோன்பு இருந்தால் பொலிஸ் வலுக் கட்டாயமாக பிடித்து குடிக்க வைப்பார்கள். ஹஜ்ஜுக்கு போனால் வேலை போய் விடும். இதெல்லாம் பார்த்தால் கம்யூனிஸ்டுகள் மேல் வெறுப்பு தான் வருகிறது. காட்டுமிராண்டிகள் அவர்கள்...


பதில்: சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி பெயரளவில் மட்டுமே உள்ளது. அது ஒரு முதலாளித்துவ கட்சியாக மாறி இருபாதாண்டுகள் கடந்து விட்டன. சீனா இன்று முழுக்க முழுக்க ஒரு முதலாளித்துவ நாடு. இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியாமலில்லை. இருந்தாலும், மனதில் உள்ள கம்யூனிச வெறுப்பின் காரணமாக, அதை உதாரணமாகக் காட்டுகின்றீர்கள். மாவோ காலத்தில், சீனா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், உய்குர் முஸ்லிம்களின் நிலைமை எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு வார்த்தை பேசாததில் இருந்தே, உங்களது போலி இஸ்லாமிய சகோதரத்துவம் அம்பலமாகின்றது.

மேலும், சீனாவில் உய்குர் மாநிலத்தில் மட்டும் இஸ்லாமியர்கள் வாழவில்லை. பிற மாநிலங்களிலும் பெருமளவு இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். சீன மொழி பேசும் இஸ்லாமியர்களும் உண்டு. அவர்களும் மேற்குறிப்பிட்ட அடக்குமுறைகளை சந்தித்து உள்ளனரா? இல்லையே. எங்காவது அப்படி நடந்ததாக, நீங்கள் கூட சொல்லவில்லை. அண்மைக் காலமாக, உய்குர் மாநிலத்தில் நடக்கும் உள்நாட்டுப் போரை மறந்து விட்டுப் பேசுவது அழகல்ல. 

தீவிரவாத்தை அடக்குவதற்கான நடவடிக்கைகளில், சீனப் பொலிஸ் செய்த மனித உரிமை மீறல்களை தான் நீங்கள் பட்டியலிட்டு உள்ளீர்கள். இது போன்ற கொடுமைகள் ஒரு முஸ்லிம் நாட்டில் நடக்க மாட்டாதா? சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமியவாதிகள் பள்ளிவாசல்களை குண்டு வைத்து உடைத்த நேரம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள். சன்னி, ஷியா என்று பிழையான மதப்பிரிவில் பிறந்த காரணத்திற்காக, இஸ்லாமியவாதிகள் அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்று குவித்த நேரம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதை எல்லாம் பார்த்தால், உங்களுக்கு இஸ்லாமியர் மேல் வெறுப்பு உண்டாகியிருக்க வேண்டுமே?

  • கேள்வி: இஸ்லாமிய நாடுகளில் சென்று பாருங்கள். அங்கே யாரும் மற்ற மதத்துக் காரர்களை துன்புறுத்துவது இல்லை.


பதில்: இப்படி முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்காதீர்கள். பாகிஸ்தான், ஈராக்கில் நடக்கும் சன்னி - ஷியா கலவரங்கள், அதனால் பலியான ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் பற்றி எதுவும் கூறாத காரணம் என்ன?

எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் துன்புறுத்தப் பட்ட கதைகளை நீங்கள் கேள்விப் படவில்லையா? எத்தனை கிறிஸ்தவ வழிபாட்டு ஸ்தலங்கள் உடைக்கப் பட்டன என்று தெரியுமா? எத்தனை கிறிஸ்தவர்கள் கொல்லப் பட்டனர் என்று தெரியுமா? இஸ்லாமியவாதிகளின் ஆட்சி நடக்கும் லிபியாவில், கருப்பின மக்கள் மேல் நிறவெறித் தாக்குதல்கள் நடக்கும் காரணம் என்ன? அந்தக் காட்டுமிராண்டித்தனங்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் போன மர்மம் என்ன?

நீங்கள் உண்மைகளை மறைத்து, ஒரு பக்கச் சார்பாக பேசுகின்றீர்கள். இஸ்லாமிய நாடுகளில் எந்த அடக்குமுறையும் கிடையாது என்று நினைப்பது அறியாமை. துருக்கி, ஈராக், ஈரானில் வாழும் குர்து மக்களும் இஸ்லாமியர்கள் தான். அங்கு அரசாங்கத்தில் இருப்பவர்களும் இஸ்லாமியர்கள். குர்து இஸ்லாமியர்களுக்கு எதிராக, இஸ்லாமிய அரசுகள் புரிந்த கொடுமைகள் எத்தனை? அந்தக் கொடூரங்களுடன் ஒப்பிட்டால், சீனாவில் நடந்தவை சிறு பிள்ளை விளையாட்டுப் போல தோன்றும். இஸ்லாமியருக்கு எதிரான இஸ்லாமிய அரசுக்களின் காட்டுமிராண்டித்தனத்தை மறந்து விட்டுப் பேசும் காரணம் என்ன? அவற்றை மறைப்பதன் நோக்கம் என்ன? ஏனென்றால் நீங்கள் ஒரு போலி இஸ்லாமியவாதி.



1 comment:

Adirai Iqbal said...

//துருக்கி, ஈராக், ஈரானில் வாழும் குர்து மக்களும் இஸ்லாமியர்கள் தான். அங்கு அரசாங்கத்தில் இருப்பவர்களும் இஸ்லாமியர்கள். குர்து இஸ்லாமியர்களுக்கு எதிராக, இஸ்லாமிய அரசுகள் புரிந்த கொடுமைகள் எத்தனை?//
அவர்கள் இஸ்லாமிய அரசுகளா அல்லது முதலாளித்துவ- ஜனநாயக அரசுகளா?. அவர்கள் இஸ்லாமிய அரசுகள் என்றால் தற்போதுள்ள ரஷ்யா, சீனா போன்றவைகளும் கம்யூனிஸ அரசுதான்.