Monday, September 15, 2014

தமிழரின் நிலங்களைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் மகிந்த அரசு


ஆழிப் பேரலைகள் (சுனாமி) இலங்கையின் கிழக்குக் கரைகளை தாக்கிய 2005 ஆம் ஆண்டு, உலகின் கவனம் முழுவதும் இலங்கை மீது திரும்பி இருந்தது. சுனாமியால் ஏற்பட்ட அனர்த்தத்தை பார்வையிட, இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் வந்திருந்தனர். அப்போது, வடக்கிலும், கிழக்கிலும், விடுதலைப் புலிகளின் நடைமுறை தமிழீழ அரசு இயங்கிக் கொண்டிருந்தது.

புலிகளும், புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களும், அமெரிக்க ஜனாதிபதிகள் சுனாமியால் பாதிக்கப் பட்ட முல்லைத்தீவுக்கு வருவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளான கிளிண்டனும், ஜோர்ஜ் புஷ்ஷும், மாத்தறை போன்ற சிங்களப் பிரதேசங்களை பார்வையிட்டு விட்டு நாடு திரும்பினார்கள்.

சுனாமி அனர்த்த நிவாரணமாக, USAID மூலமாக, அமெரிக்க அரசு ஏராளமான நிதி வழங்கி இருந்தது. USAID, தனது நடவடிக்கைகளை சுனாமியுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. எதிர்காலத்தில், இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை சுற்றுலாத் துறைக்கு சாதகமாக பயன்படுத்துவது எப்படி என்று ஆராய்ந்து, கள அறிக்கை ஒன்றை தயாரித்தது. திருகோணமலை முதல் அம்பாறை வரையிலான, தமிழ்ப் பிரதேசங்களில் எந்தெந்த இடங்கள் சுற்றுலாத் துறையை வளர்க்க உதவும் என்று ஆராய்ந்துள்ளனர்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தை அடுத்து வந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக, மகிந்த ராஜபக்ச, "மகிந்த சிந்தனை" என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்து வெளியிட்டார். அதிலும், USAID குறிப்பிட்ட கிழக்கு மாகாணப் பிரதேசங்களில், சுற்றுலாத் துறையை வளம் படுத்துவது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்திருக்குமா?

அமெரிக்க பின்னணியில், நோர்வே அனுசரணையில், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப் படாமல் காலம் கடந்து கொண்டிருந்தது. 2004 ஆம் ஆண்டு, சுனாமி அனர்த்தம் நடப்பதற்கு முன்னர், இரண்டு தரப்பினரும் எந்த விதமான சமரச உடன்படிக்கைக்கும் வரவில்லை.

சுனாமி ஏற்படுத்திய பேரழிவுகள் காரணமாக, அரசினதும், புலிகளினதும் போரிடும் ஆற்றல் வெகுவாகக் குறைத்திருந்தது. அந்தத் தருணத்தில், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் P-TOMS எனும் உடன்படிக்கை எட்டப் பட்டது. சுனாமி நிவாரணத்தை நிர்வகிக்கும் பெயரில், சிறிலங்கா அரசும், புலிகளும் ஒரு சமரசத்திற்கு கொண்டு வரும் நோக்கிலான, அமெரிக்காவின் முயற்சியில் தான் அதுவும் சாத்தியமானது.

பேச்சுவார்த்தைகள் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கா எதிர்பார்த்த சமாதானம் மட்டும் வரவில்லை. இதற்கிடையில், புலிகளும் போருக்கு தயாராவதற்காக, நான்கு ஆயுதக் கப்பல்களை தருவித்திருந்தனர். மட்டக்களப்பு கரையில் இருந்து, சுமார் ஆயிரம் கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில், சிறிலங்கா கடற்படையினரால் அந்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப் பட்டன. புலிகளின் கப்பல்கள் பற்றிய தகவல்களையும், செய்மதிப் படங்களையும் கொடுத்துதவியது வேறு யாருமல்ல. அமெரிக்காவே தான்.

தற்போது ஈழப் போர் நடந்து முடிந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. கிழக்கு மாகாண கரையோரத்தை சுற்றுலாத் துறைக்கு தாரை வார்க்கும் திட்டம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. புலிகள் இருந்த காலத்தில், அவர்கள் அமெரிக்காவையோ, அந்நிய மூலதனத்தையோ எதிர்க்கவில்லை. சுற்றுலாத்துறையை ஸ்தம்பிக்கும் வகையில் ஒரு குண்டு கூட வெடிக்க வைக்கவில்லை. ஏனெனில், புலிகள் மேற்கத்திய நாடுகளை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. 

நீண்ட காலமாக இழுபட்ட தமிழ் - சிங்கள இன முரண்பாடு, சுற்றுலா முதலாளிகளின் எண்ணம் ஈடேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. அதாவது, ஒரு தமிழ்க் கிராமத்தின் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, நிலங்கள் அபகரிக்கப் பட்டாலும், அவற்றை பயன்படுத்த முடியாத அளவிற்கு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் புலிகளின் பிரதேசங்களுக்குள் தஞ்சம் கோருவதும், பின்னர் அந்த மக்கள் மத்தியில் இருந்து போராளிகள் உருவாவதும் தொடர்கதையாக நடந்து கொண்டிருந்தது.

புலிகளின் அழிவிற்குப் பின்னர், தமிழர்களின் நிலங்களை அபகரித்தால் கேட்பதற்கு யாரும் இல்லை. பாதிக்கப் பட்டவர்கள் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த ஏழைத் தமிழர்கள் என்பதால், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாசிக்குடா, அறுகம் குடா, அம்பாறை, பொத்துவில் போன்ற பிரதேசங்களில், தமிழருக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப் பட்டுள்ளன. 

அம்பாறையில் சில தமிழ்க் கிராமங்களில், சீருடை அணிந்த நபர்கள் குடிசை வீடுகளை கொளுத்தி, மக்களை வெளியேற்றி உள்ளனர். சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்களும் கூட இந்த தகவல்களை தெரிவிக்காமல் மறைத்துள்ளன. ஏனெனில், வர்க்க ஒற்றுமை, இன ஒற்றுமையை விட மிகவும் உறுதியானது. 

கிழக்கு மாகாணத்தில், சிறிலங்கா அரச படைகளின் நில அபகரிப்பினால் பாதிக்கப் பட்டவர்கள், தமிழர்கள் மட்டுமல்ல. வில்பத்து சரணாலயத்தை அண்டிய 900 ஏக்கர் நிலங்களை, கடற்படையினர் அடாத்தாக பறித்துள்ளனர். சில சிங்களக் கிராமங்களும் அதற்குள் அடங்குகின்றன. கிழக்கு மாகாணத்தில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

முன்னொரு காலத்தில், சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு என்ன கொடுமை இழைத்ததுவோ, அதையே தற்போது சிங்களவர்களுக்கும் செய்கின்றது. ஏனெனில், சிறிலங்காவில் இருப்பது வெறுமனே சிங்கள பேரினவாத இராணுவம் மட்டுமல்ல. பெரும் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதும் அதன் முக்கிய கடமை தான். 

ஈழப்போர் நடந்த காலங்களில், தமிழர்கள் மட்டுமே பாதிக்கப் பட்டனர். பல தமிழ்க் கிராமங்களில் வாழ்ந்த மக்களை வெளியேற்றிய அரச படையினர், அவற்றை சிங்களக் கிராமங்களாக மாற்றினார்கள். பிற்காலத்தில் போர் நடந்த காலத்தில், புலிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக சிங்களக் கிராமங்களை தாக்கினார்கள். இதன் மூலம், அரசு சிங்களவர்களையும், தமிழர்களையும் நிரந்தரமாகப் பிரித்து வைக்க முடிந்தது. 

2014, மார்ச் மாதம், என்றுமில்லாத அதிசயமாக, நிலமிழந்த தமிழ், சிங்கள கிராமவாசிகளின் ஒன்று பட்ட எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பாணமை, சாஸ்திரவெல, ராகம்வெல, உல்லா ஆகிய கிராமங்களை சேர்ந்த சிங்கள, தமிழ் மக்கள் தான் பெருமளவில் பாதிக்கப் பட்டிருந்தனர். 

போர் முடிந்த அடுத்த வருடம், 2010 ஆம் ஆண்டு, அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்டனர். நிலமிழந்த கிராம மக்கள், கொழும்பில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால், அரசு சார்பான மனித உரிமைகள் ஆணைக்குழு, நிலமிழந்த மக்களின் போராட்டத்தை கவனத்தில் எடுக்கவில்லை.

தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும், காலங்காலமாக வசித்து வந்த கிராமங்களில் இருந்து விரட்டப் படும் காரணம் என்ன? இங்கே தான், சிங்கள பேரினவாதம், அமெரிக்க ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு அம்பலமாகின்றது. இலங்கையை, தாய்லாந்து போன்று உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கபுரியாக்குவது தான் அவர்களது குறிக்கோள்.

சுற்றுலா நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வளங்கள் அத்தனையும் இலங்கையில் உள்ளன. இலங்கையின் அழகான கடற்கரைகள் உலகப் புகழ் பெற்றவை. மேலைத்தேய உல்லாசப் பிரயாணிகள் பலருக்கு, இலங்கை ஒரு சொர்க்கபுரி. "கிழக்கு மாகாணக் கடற்கரைகள், அலை மேல் சறுக்கும் விளையாட்டிற்கு (surf) ஏற்ற இடம். உலகத் தரம் வாய்ந்தது." என்று USAID கூறுகின்றது. உள்ளூர் இளைஞர்களுக்கு சிறிது ஆங்கில மொழி அறிவைக் கொடுத்து, ஹோட்டல் பணியாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது.

அதாவது, நேரடியாகச் சொல்வதென்றால், சிறிலங்கா படையினரால் அபகரிக்கப் பட்ட நிலங்களில், சுற்றுலா விடுதிகள் கட்டப் படவுள்ளன. அவற்றில் வேலை செய்வதற்கு, நிலங்களை பறிகொடுத்த மக்களை பணியாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம். தாய்லாந்திலும், தென்னிலங்கையிலும் நடப்பதைப் போன்று, சுற்றுலாப் பயணிகள் அதிகரித்தால் பாலியல் தொழிலாளர்களும் பெருகி விடுவார்கள். முதலாளிகளின் இலாபவெறியை கருத்தில் கொண்டு, அது போன்ற தீய விளைவுகளை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும்.

"மகிந்த ராஜபக்ச இனப் படுகொலையாளன். எப்படியும் அமெரிக்கா ஐ.நா.வில் தீர்மானம் போட்டு தண்டித்து விடும்..." என்று நாங்கள் வாய் கிழிய பேசிக் கொண்டிருந்தாலும், எதுவுமே நடக்காத காரணம் இது தான். மகிந்த சிந்தனையும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான். 

"புலிகள் இப்போதும் இருக்கிறார்கள். மீண்டும் போரிட வருவார்கள்..." என்றொரு பொய்யைக் கூறித் தான், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய நில அபகரிப்புகளை நியாயப் படுத்துகிறார். ஆனால், அபகரிக்கப் பட்ட தமிழரின் நிலங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப் படுகின்றன என்ற உண்மையை மட்டும் கூற மாட்டார். மரத்தால் விழுந்தனை, மாடேறி மிதித்தது போல, தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்கு உலக வங்கியும் ஒத்துழைக்கிறது.

உலக வங்கி, அமெரிக்க அரசு, மகிந்த அரசு ஆகியன தமிழர்களை கூட்டாக சேர்ந்து ஒடுக்குகின்றன. இந்த நேரத்தில், நடுத்தர வர்க்க தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வலதுசாரி தமிழ்தேசியவாதிகள் சிலர், ஏகாதிபத்திய விசுவாசத்தை பின்வருமாறு தெளிவு படுத்துகின்றனர். அதாவது, "தமிழர்கள் நில உரிமைக்காக போராடவில்லையாம், தன்னைத் தானே ஆளும் அரசு அமைக்க போராடுகிறார்களாம்."

இதனால் அவர்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி இது தான்: "எங்களிடம் தமிழீழம் தந்திருந்தால், நாங்களே அந்த நிலங்களை அபகரித்துக் கொடுத்திருப்போம்!" அப்படி இல்லையென்றால், அபகரிக்கப் பட்ட தமிழரின் நிலங்களை சுற்றுலா ஸ்தலமாக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்பாக அவர்களது நிலைப்பாடு என்ன? 

"தமிழீழத்தை ஆளப் போகும் தமிழர்களும்", உலக வங்கியிடம் தானே கடனுதவி கேட்டு கையேந்தப் போகிறார்கள்? அப்போது இதே அம்பாறை நிலங்களை பறித்து பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, உலக வங்கி உத்தரவிட மாட்டாதா?

இங்கே கூறப்பட்டுள்ள விபரங்கள், மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடி பெரு மக்களுக்கு மட்டும் தான் புதினமாகத் தோன்றும். அம்பாறையில் வாழும் ஏழை உழைக்கும் வர்க்க தமிழர்கள், தமது  எதிரிகளை சரியாகவே எடை போட அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான் அவர்கள், நிலமிழந்த சிங்கள மக்களுடன் சேர்ந்து போராடினார்கள். 

அம்பாறையில் வாழும் உழைக்கும் வர்க்க தமிழ் மக்கள், தமது பொது எதிரியான, சிறிலங்கா தரகு முதலாளிய அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, உலகவங்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவ்வளவு காலமும், இனவாத சக்திகளின் சொல்லைக் கேட்டு, சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்க மக்கள் பிரிந்து தான் வாழ்ந்து வந்தனர். அதனால் அவர்கள் இழந்தது அதிகம்.

இவ்வளவு காலமும் இனவாதக் குட்டையை கலக்கிக் கொண்டிருந்த முதலைகளான பன்னாட்டு முதலாளிகள், சிறிலங்கா அரசின் பாதுகாப்புடன் தைரியமாக திரிகின்றனர். அவர்களை எதிர்ப்பதற்கு யாருமில்லை. எல்லோரும் தமிழனா, சிங்களவனா என்ற கயிறிழுப்புப் போட்டியில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையை மறுகாலனியாக்குவதற்கு இதுவே சரியான தருணம்.


மேலதிக தகவல்களுக்கு:

  • USAID: Sri Lanka connecting regional economies, Assesment of Tourism in Eastern, Uva, and North Central provinces of Sri Lanka; http://www.bpa-srilanka.com/files/USAID-CORE-Tourism-Assessment_1_.pdf
  • Illegal Land Grabs By Sri Lanka Navy Destroys Wilpattu National Park; https://www.colombotelegraph.com/index.php/illegal-land-grabs-by-sri-lanka-navy-destroys-wilpattu-national-park/
  • Human Rights Commission Is Inactive: Villagers Of Panama Protest Land Grabbing; https://www.colombotelegraph.com/index.php/human-rights-commission-is-inactive-villagers-of-panama-protest-land-grabbing/

No comments: