Tuesday, April 08, 2014

லெனினின் புரட்சிக்கு ஜெர்மனி நிதி வழங்கியதா?

"ஜெர்மனி வழங்கிய நிதியில் தான், ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி நடந்தது" என்ற வதந்தி, நீண்ட காலம் நிலவி வந்துள்ளது. அந்த வதந்தியில் உண்மை இருக்கிறதா? அன்றும் இன்றும், பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள், லெனின் மீது அந்தக் குற்றச்சாட்டை, அடிக்கடி சுமத்தி வந்துள்ளனர். அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? தனது சித்தாந்த எதிரிக்கு, ஜெர்மனி உதவ வேண்டிய காரணம் என்ன?

அண்மையில் கிடைத்த, பழைய ஜெர்மன், சுவிஸ், ரஷ்ய ஆவணங்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள், அந்தக் கேள்விக்கு விடை தேடியுள்ளனர்.  பல ஐரோப்பிய மொழிகளில் வெளியாகும் Historia சஞ்சிகை, அந்தத் தகவல்களின் அடிப்படையில் எழுதப் பட்ட கட்டுரை ஒன்றை பிரசுரித்திருந்தது. அதில் இருந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறேன்.

முதலாம் உலகப்போரின் முடிவில், போல்ஷெவிக்குகள் ஜெர்மனியிடம் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அதற்குக் காரணம், லெனின் உட்பட முக்கியமான போல்ஷெவிக் கட்சி உறுப்பினர்கள், சுவிட்சர்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி இருந்தனர். முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், ரஷ்யாவில் சார் மன்னராட்சி, ஒரு புரட்சி மூலம் தூக்கியெறியப் படும் என்று சொன்னால், அன்று யாரும் எளிதில் நம்பியிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு, சார் மன்னரின் அரசு மிகப் பலமாக இருந்தது. உள்நாட்டில் அரசுக்கு எதிரான சக்திகள் மூச்சு விடக் கூட அவகாசம் கொடுக்கவில்லை. இதனால், பல அரச எதிர்ப்பாளர்கள் பிற ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி இருந்தனர். 

ரஷ்யாவில், விளாடிமிர் இலியானோவிச்சின் (லெனின்) குடும்பம், ஒரு வசதியான மத்தியதர வர்க்க குடும்பம் தான். அவரது மூத்த சகோதரன் அலெக்சாண்டர் ஒரு அராஜகவாதி (அனார்க்கிஸ்ட்). சார் மன்னன் நிக்கொலாயினை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார். தோல்வியைத் தழுவிய கொலை முயற்சியில், அலெக்சாண்டர் கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்டார். அந்தச் சம்பவம் காரணமாக, லெனினின் குடும்பம் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானது. 

விளாடிமிர் வளர்ந்து பெரியவனாகி, தமையனின் வழியில் புரட்சிக்கான ஆயுதப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டான். லெனின் என்ற புனைப் பெயரை வைத்துக் கொண்டான். கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்களை படித்த லெனின், சோஷலிசப் புரட்சிகர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அன்று கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்கள், பல ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப் பட்டிருந்தன. ஆனால், ரஷ்யாவில் அவை தடை செய்யப் படவில்லை. "அந்த நூல்கள், தனது இருப்பிற்கு ஆபத்தானவை அல்ல" என்ற எண்ணத்தில், சார் அரசு அவற்றை உதாசீனப் படுத்தி வந்தது. 

சார் மன்னராட்சிக்கு எதிராக, பல்வேறு எதிர்ப்பியக்கங்கள் இயங்கி வந்தாலும், அவை எல்லாம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தன. 1905 ல் ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போன்ற, லிபரல் அரசியல் கட்சிகளுக்கு சிறிதளவு அரசியல் சுதந்திரம் கிடைத்திருந்தது. ஆனால், சோஷலிசக் கட்சிகள் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்து வந்தன.

லெனின் போன்ற தலைவர்கள், சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரி இருந்தனர். ரஷ்யாவுடன் கூட்டணி அமைத்திருந்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், அந்த அரசியல் அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுத்தன. அதனால், தவிர்க்கவியலாது, ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு நடுநிலை நாடாக இருந்த, சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் கோர வேண்டி இருந்தது. அந்த நிலைமையை, ஜெர்மனி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணியது. 

அன்றைய ரஷ்யாவை ஒரு சக்கரவர்த்தி ஆண்டது போல, அன்றைய ஜெர்மனியும் சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்தது. ரஷ்ய சக்கரவர்த்தி நிக்கோலாஸ், ஜெர்மன் சக்கரவர்த்தி வில்லெம், இருவரும் நெருங்கிய உறவினர்கள்! இருவரும் மைத்துனர் முறையானவர்கள். என்ன தான் தாயும், பிள்ளையும் என்றாலும், வாயும் வயிறும் வேறு தானே? அதனால், பிராந்திய வல்லரசுப் போட்டி, இரண்டு மைத்துனர்களுக்கு இடையில் பகைமையை வளர்த்து விட்டிருந்தது. 

ரஷ்ய சாம்ராஜ்யம், நாற்திசைகளிலும் தன்னை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. மேற்குத் திசையில், இன்னொரு சாம்ராஜ்யமான ஜெர்மனியுடன் மோத வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அன்றைய ஜெர்மனி, பிருஷிய சாம்ராஜ்யம் என்று அழைக்கப் பட்டது. இன்றைய போலந்தின் வட பகுதியில், இன்றைய ரஷ்யாவின் மேற்குப் பகுதியில், அதன் தலைமையகம் அமைந்திருந்தது. ஆனால், ரஷ்ய சாம்ராஜ்யமானது அந்தப் பகுதிகளை விழுங்கி விட்டிருந்தது. 

ரஷ்யாவுடனான ஏகாதிபத்திய போர்களில், தனது புராதனப் பழைமை வாய்ந்த பகுதிகளை இழந்த ஜெர்மனி, அவற்றை மீட்பதற்கு கடுமையாக முயற்சித்தது. அன்றிருந்த ஐரோப்பிய வல்லரசு நாடுகளின், நாடு பிடிக்கும் போட்டி தான், முதலாம் உலகப் போருக்கு வித்திட்டது. முதலாம் உலகப்போரில், ஜெர்மனி தோற்கடிக்கப் பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனாலும், ஜெர்மனி தனது பிராந்தியத்திற்கான உரிமை கோரலை கை விடவில்லை. முதலாம் உலகப்போர் முடிந்த பின்னரும், கிழக்குத் திசையில் முன்னேறிய ஜெர்மன் படைகள், எஸ்தோனியா, லாட்வியா போன்ற பால்ட்டிக் கடலோர நாடுகளை ஆக்கிரமித்தன.

ரஷ்யாவில் சார் அரசு பலமாக இருந்தாலும், அது பல்வேறு அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தது. அரசு விரும்பினாலும், ஜெர்மனியுடனான போரை நிறுத்த முடியாத அளவுக்கு, ரஷ்ய பேரினவாதிகளின் கை ஓங்கி இருந்தது. மறுபக்கத்தில், நகரங்களில் தொழிலாளர்களும், கிராமங்களில் விவசாயிகளும் போர் காரணமாக கடுமையான விலை கொடுக்க வேண்டி இருந்தது. அதனால், ஆங்காங்கே கலவரங்கள் வெடித்தன. ரஷ்ய அரசு, ஒரு புறம் உள்நாட்டு கலகங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிக் கொண்டே, மறுபுறம் ஜெர்மனியுடன் போரிட்டுக் கொண்டிருந்தது. 

ஜெர்மனியும் அதே மாதிரியான நெருக்கடிக்குள் சிக்கி இருந்தது. மேலும் அதன் எதிரி ரஷ்யா மட்டுமல்ல. பிரிட்டன், பிரான்சை எதிர்த்தும் போரிட வேண்டி இருந்தது. இந்தக் கட்டத்தில் தான், எப்படியாவது சார் மன்னனின் ஆட்சி கவிழ்ந்தால் போதும், ரஷ்யாவுடனான யுத்தம் முடிந்து விடும் என்ற நிலைப்பாட்டிற்கு ஜெர்மனி வந்தது. 1915 ம் ஆண்டு, பார்வுஸ் என்ற ரஷ்ய வர்த்தகர் ஒருவர், ஜெர்மன் சக்கரவர்த்தியை சந்தித்துப் பேசினார். ரஷ்யாவில் சார் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு, தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக கூறினார். அதற்குத் தேவையான ஆயுதங்கள், நிதியை வழங்கினால் போதும், மிச்சத்தை தான் பார்த்துக் கொள்வதாக கூறினார். 

அலெக்சாண்டர் ஹெல்ப்ஹான்ட் என்ற இயற்பெயர் கொண்ட பார்வுஸ், சட்டவிரோத ஆயுதக் கடத்தல்கள் மூலம் பிரபலமான வர்த்தகர் ஆவார். சார் மன்னருக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தார். இவரது வீட்டில் இருந்த அச்சுக்கூடத்தில் தான், லெனின் எழுதிய நூல்கள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப் பட்டன. அதனால், லெனினுக்கும் பழக்கமானவர்.

லெனின் உட்பட பல சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள், பார்வுஸ் மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கவில்லை. கடைசி வரைக்கும், பார்வுஸ் தனக்கு பழக்கமானவர் என்று லெனின் காட்டிக் கொள்ளவில்லை. பார்வுஸ் ஒரு சாதாரண வணிகர் மட்டுமல்ல, கள்ளக்கடத்தல்கள், டாம்பீகம், ஊதாரித்தனம், பெண் பித்து போன்ற கெட்ட பழக்கங்களையும் கொண்டிருந்தார். அவரைத் தெரிந்ததாக காட்டிக் கொண்டால், தங்களுக்கும் கெட்ட பெயர் வந்து விடும் என்று சோஷலிஸ்டுகள் அஞ்சினார்கள். 

என்ன இருந்தாலும், பார்வுஸ்ஸிடம் ஒரு நல்ல குணம் இருந்தது. அவர் முதலாளித்துவ நலன்களை பயன்படுத்தி செல்வந்தராக வாழ்ந்த ஒருவர் தான். ஆனாலும், அவருக்குள் ஒரு சோஷலிஸ்ட் இருந்தார். ஒரு பொருளாதாரப் பட்டதாரி. மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றவர். அவரது சொந்த வாழ்க்கைக்கும், அவரது அரசியல் சித்தாந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை. ஆனால், ரஷ்யாவின் எதிர்காலம் சோஷலிசப் புரட்சியில் தங்கியிருப்பதாக, உறுதியாக நம்பினார்.    

ரஷ்யாவில் சார் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு, ஜெர்மனி ஆயுதங்களும், நிதியும் வழங்க காத்திருக்கிறது என்ற செய்தியுடன், பார்வுஸ் சுவிட்சர்லாந்துக்கு பயணமானார். பேர்ன் நகரில், லெனினை சந்தித்துப் பேசினார். ஆனால், அவரது திட்டத்திற்கு இணங்க லெனின் மறுத்து விட்டார். "பார்வுஸ் ஒரு ஜெர்மன் சோஷலிச- பேரினவாதி" என்று திட்டிய லெனின், கதவைத் திறந்து வெளியே அனுப்பி விட்டார். "கல்லடி பட்ட நாய் மாதிரி, பார்வுஸ் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியதாக..." பிற்காலத்தில் லெனின் அந்த சம்பவம் பற்றி விபரித்திருந்தார். 

ஜெர்மன் வெளிவிவகார அமைச்சின் இரகசிய ஆவணம் ஒன்றில், "பார்வுஸ் 20 மில்லியன் ரூபிள்கள் (இன்றைய பெறுமதி 25 மில்லியன் யூரோ) கேட்டிருந்ததாக..." எழுதப் பட்டுள்ளது. ஜெர்மன் அரசு வழங்கிய பணம், டென்மார்க்கின் தலைநகரம் கோபன்ஹெகன் ஊடாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளது. அன்றைய கோபன்ஹெகன் கள்ளக் கடத்தல்காரர்கள், பங்குச்சந்தை சூதாடிகள், ஆகியோரின் சொர்க்கமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களை பயன்படுத்தி, சட்டவிரோத வியாபாரம் செய்து, கொள்ளை இலாபம் அடித்த வர்த்தகர்கள் எல்லோரும் அங்கே தான் பதுங்கி இருந்தார்கள். 

ஜெர்மன் அரசிடம் இருந்து நிதியுதவி பெற்ற பார்வுஸ், கோபன்ஹெகன் நகரை தளமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஏராளமான ஆயுதங்கள், வெடி குண்டுகளை ரஷ்யாவுக்கு கடத்திச் சென்றார். ரஷ்யாவில் தலைமறைவாக இருந்த சோஷலிசப் புரட்சியாளர்களுக்கு அவற்றை விநியோகம் செய்தார். உண்மையில், ஜெர்மனியின் நிதியுதவி, நேரடியாக லெனினின் ஆதரவாளர்களிடம் மட்டும் சென்றது என்று சொல்ல முடியாது. பல்வேறு போராளிக் குழுக்கள், அந்த உதவியைப் பயன்படுத்தி இருக்கலாம். அன்று ரஷ்யாவில் இருந்த எல்லா எதிர்ப்பியக்கங்களுக்கும், ஜெர்மன் சக்கரவர்த்தி நிதி வழங்கியுள்ளமை, ஆவணங்களில் இருந்து தெரிய வருகின்றது. அவற்றில் சில, லெனினின் போல்ஷெவிக் கட்சிக்கு எதிரான குழுக்கள் ஆகும். 

1917 ம் ஆண்டு, பெப்ரவரி மாதம் மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டது. இம்முறை சார் மன்னர், அதிகாரத்தை விட்டுக் கொடுக்க முன்வந்தார். மேற்கு ஐரோப்பாவில் இருப்பதைப் போன்ற, பாராளுமன்ற ஜனநாயக முறைக்கும், இடைக்கால அரசு அமைப்பதற்கும் ஒத்துக் கொண்டார். மென்ஷெவிக் போன்ற சமூக ஜனநாயகவாதிகளும், ரஷ்ய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடிந்தது. இந்தத் தருணத்தில், அவர்களுக்கும், லெனினின் போல்ஷெவிக் ஆதரவாளர்களுக்கும் இடையிலான முரண்பாடு விரிவடைந்தது. லெனின் இடைக்கால அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். அதே நேரம், ஏகாதிபத்திய போர்களை நிறுத்தி, சமாதானம் நிலைநாட்டப் பட வேண்டும் என்றார். 

அன்று சார் மன்னரின் அதிகாரம் வெகுவாக குறைக்கப் பட்டிருந்தாலும், இடைக்கால அரசாங்கம், சக்கரவர்த்தி சாரின் ஏகாதிபத்திய போருக்கு ஆதரவாக இருந்தது. லெனின் தலைமையிலான குழுவினர், போருக்கு எதிராக இருந்ததைக் காரணமாகக் காட்டி, மக்கள் மத்தியில் அவர்களை தனிமைப் படுத்த எண்ணியது. போரை எதிர்த்த போல்ஷெவிக்குகள், தேசத் துரோகிகளாக சித்தரிக்கப் பட்டனர். லெனின் குழுவினருக்கு, ஜெர்மனியிடம் இருந்து நிதி கிடைப்பதாக பிரச்சாரம் செய்யப் பட்டது. அன்று, இடைக்கால அரசாங்கம் ஆரம்பித்து வைத்த, "ஜெர்மன் நிதி பற்றிய பிரச்சாரம்" இன்று வரையில் தொடர்கின்றது. "லெனினுக்கு ஜெர்மனி நிதி வழங்கியது" என இன்றைக்கும் பரப்பப்படும் தகவல்கள், பெரும்பாலும் அன்றைய இடைக்கால அரசின் பிரச்சாரத்தை ஆதாரமாக கொண்டுள்ளன. 

ஜெர்மன் நிதியுதவி பற்றி இடைக்கால அரசாங்கம் பிரச்சாரம் செய்து வந்த போதிலும், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. இதற்கிடையே, ரஷ்யா இன்னொரு புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருந்தது. அரசு மீது அதிருப்தியுற்ற மக்கள் பரவலாக கிளர்ச்சி செய்தனர். முதலாளிகள் மாதக் கணக்காக சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்த படியால், தொழிலாளர்கள் வீட்டு வாடகையை கூட கட்ட முடியாமல் கஷ்டப் பட்டனர். பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் நிர்வாகத்தை கைப்பற்றினார்கள். நாட்டுப்புறங்களில், விவசாயிகள் நிலங்களை தமது உடமையாக்கிக் கொண்டார்கள். இராணுவத்தினர், கடற்படை வீரர்கள் கூட கிளர்ச்சி செய்தனர். சில மாதங்களுக்கு முன்னர் கூட எண்ணிக்கையில் குறைவாக இருந்த போல்ஷெவிக் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தது.  

இந்தத் தருணத்தில், சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த லெனின் குழுவினர், தாயகம் திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதற்கு ஜெர்மனியின் உதவி தேவைப் பட்டது. லெனின் குழுவினர் ரஷ்யாவின் ஆட்சியை கைப்பற்றினால், சமாதானம் ஏற்படும் என்று ஜெர்மன் அரசு நம்பியது. அதனால், லெனின் குழுவினரை ஒரு புகைவண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தது. ரயில் பயணத்திற்கான நிதியை, ஜெர்மன் அரசு வழங்கி இருந்தது. தங்களது கடவுச்சீட்டுகள், உடமைகளை சோதனையிடக் கூடாது என்று நிபந்தனை போட்ட பின்னர் தான், லெனின் அந்த ரயில் வண்டியில் செல்ல சம்மதித்தார். அந்த ரயில் வண்டியில், வேறெந்தப் பயணியும் அனுமதிக்கப் படவில்லை. போல்ஷெவிக் உறுப்பினர்களின் ரயில் பயணம் மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. 

சுவிட்சர்லாந்தில் இருந்து ஜெர்மனி ஊடாக சென்று, பின்னர் கடல் தாண்டி, சுவீடன், பின்லாந்து வழியாக சென்ற ரயில், ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பெர்க் நகரை சென்றடைந்தது. லெனினை வரவேற்கவும், நேரில் பார்ப்பதற்குமாக, ஏராளமான மக்கள் ரயில் நிலையத்தில் ஒன்று கூடினார்கள். லெனின் சென் பீட்டர்பெர்க் நகருக்கு வந்து சேர்ந்த பின்னரும், நிம்மதியாக இருக்க முடியவில்லை. இடைக்கால அரசாங்கம் அவரைக் கைது செய்ய முயன்றது. அதனால், மீண்டும் தலைமறைவாகி பின்லாந்துக்கு சென்றார். இதற்கிடையே நவம்பர் 7 ம் தேதி, ஒக்டோபர் புரட்சி வெடித்தது. ஆயுதபாணிகளான போல்ஷெவிக் தொழிலாளர்கள், கடற்படை வீரர்கள், அரசு அலுவலகங்களை கைப்பற்றினார்கள். ரஷ்யாவின் புதிய தலைவராக லெனின் தேர்ந்தெடுக்கப் பட்டார். 

இப்போது ஒரு சோதனைக் காலம் தொடங்கியது. ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உள்நாட்டுப் போரைக் காரணமாகக் காட்டி, லெனின் ஒரு வருடம் பின் போட்டார். ஆனால், புதிய சோவியத் ஒன்றியம் ஏகாதிபத்திய போரில் இருந்து விலகிக் கொள்ளும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை. 3-3-1918 அன்று, ஜெர்மனிக்கும், ரஷ்யாவுக்கும் இடையில், பிரெஸ்ட்- லித்தொவ்ஸ்க் (Brest - Litovsk)  சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. அதன் படி, ரஷ்யா முதலாம் உலகப் போரில் இருந்து உத்தியோகபூர்வமாக விலத்திக் கொண்டது.  

பிரெஸ்ட்- லித்தொவ்ஸ்க் ஒப்பந்தம் போடுவதற்கு முன்னர், புதிய சோவியத் அரசாங்கத்திற்கு, ஜெர்மன் அரசு மில்லியன் கணக்கான ரூபிள்களை நிதியாக வழங்கி இருந்தது. அந்தப் பணம் உண்மையில் ஒரு நஷ்டஈடாகத் தான் வழங்கப் பட்டது. ஏனெனில், அந்த ஒப்பந்தத்தினால், சோவியத் அரசு இழந்தது அதிகம். இன்றைய உக்ரைனின் மேற்குப் பகுதி பறிபோனது. எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா போன்ற பால்ட்டிக் நாடுகள், ஜெர்மனியின் பகுதிகளாகின. 

அன்று, சோவியத் யூனியன், வெறும் நிலப் பகுதிகளை மட்டும் பறிகொடுக்கவில்லை. நிலத்தோடு சேர்த்து, கோடிக்கணக்கான பெறுமதியான தொழிலகங்களும் பறி போயின. சமாதான ஒப்பந்தம் போட்டிருக்கா விட்டால், மீண்டும் ஜெர்மனியுடன் போர் வெடித்திருக்கும். ஜெர்மனியை எதிர்த்து நிற்கும் அளவிற்கு, சோவியத் அரசிடம் பலமில்லை, என்ற நிலைப்பாட்டில் தான் அந்த ஒப்பந்தம் போடப் பட்டது. லெனினின் புரட்சிக்கு ஜெர்மனி நிதி வழங்கியது என்று குற்றம் சாட்டுவோர், அதனால் லெனின் இழந்தது எவ்வளவு என்பது பற்றிப் பேசுவதில்லை. 

எதற்காக ஒரு முதலாளித்துவ நாடான ஜெர்மனி, தனது சித்தாந்த எதிரிகளுக்கு உதவி செய்ய வேண்டும்? அதனை ஒரு சித்தாந்தப் பிரச்சினையாக, அன்றைய ஜெர்மன் அரசு கருதவில்லை. உலகில் எந்த நாட்டிலும், ஒரு சோஷலிசப் புரட்சி சாத்தியம் என்று அது நம்பவில்லை. இன்றைய உலகில், சோஷலிசம், கம்யூனிசம், புரட்சி பற்றிப் பேசுவோரை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? "இதெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்ற கொள்கைகள்." என்று சொல்வார்கள். அவற்றை நம்புவோரை பைத்தியக்காரர்கள் போன்று பார்ப்பார்கள். உலகில் எந்தவொரு அரசாங்கமும், அவர்களை தனது இருப்புக்கு ஆபத்தானவர்களாக கருதுவதில்லை. 

இப்போது, ரஷ்யப் புரட்சிக்கு முந்திய உலகத்தை மனக்கண்ணில் கொண்டு வாருங்கள். உலகில் எங்குமே சோஷலிசப் புரட்சி ஏற்பட்ட வரலாற்றைக் கண்டிராத காலகட்டத்தில், யாராவது லெனின் போன்றவர்களை பொருட்படுத்தி இருப்பார்களா? சோவியத் யூனியன் உருவாகி பத்து வருடங்கள் ஆகியும், அங்கே சோஷலிசப் பொருளாதாரம் கொண்டு வரப் படவில்லை. "புதிய பொருளாதாரத் திட்டம்" (NEP) என்ற பெயரில், பெருமளவு முதலாளித்துவ பொருளாதார அமைப்பு தொடர்ந்திருந்தது. 

உலக வரலாற்றில் பல தடவைகள் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. லெனின், ஜெர்மனியிடம் இருந்து நிதி பெற்று புரட்சி செய்ததாக குற்றம் சாட்டுவோரில் சிலர், புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகள் ஆவர். ஈழப் போராட்டத்தின் தொடக்கத்தில், புலிகளுக்கு இந்தியா நிதி வழங்கியதை, அவர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்தில், இந்திய அரசு புலிகளுக்கு ஆயுதம், நிதி, பயிற்சி வழங்கியது தெரிந்ததே. இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்ட பின்னரும், இந்திய மத்திய அரசு, கோடிக் கணக்கான ரூபாய்களை புலிகள் அமைப்பிற்கு கொடுத்திருந்தது. 2002 ம் ஆண்டு, ரணில் - பிரபா ஒப்பந்தம் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த காலத்திலும், ஜப்பான், நோர்வே ஆகிய மேற்குலக நாடுகள், புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கி இருந்தன. 

கியூபப் புரட்சிக்கு முன்னரும், அதற்குப் பிறகு சில வருடங்களும், அமெரிக்கா காஸ்ட்ரோ குழுவினருக்கு உதவி வழங்கிக் கொண்டிருந்தது. சேகுவேரா என்ற ஆர்ஜெந்தீன கம்யூனிஸ்ட் காஸ்ட்ரோ குழுவில் இருந்த விடயம், அமெரிக்காவுக்கும் தெரியும். ஆனால், கியூபாவில் சோஷலிசப் புரட்சி ஏற்படுவது, ஒரு  நடைமுறைச் சாத்தியமான விடயம் என்று அமெரிக்கா நம்பவில்லை. காஸ்ட்ரோவின் இயக்கமும், அன்று எந்த சந்தர்ப்பத்திலும் கம்யூனிசம் பேசவில்லை. 

அநேகமாக, காஸ்ரோ- சேகுவேரா குழுவினர், கியூபாவில் ஒரு ஜனநாயக- முதலாளித்துவ ஆட்சியை கொண்டு வருவார்கள், என்று தான் அமெரிக்கா நம்பியது. காஸ்ரோ குழுவினரும், தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. அமெரிக்க நிறுவனங்களை தேசியமயப் படுத்திய பின்னர் தான், பிரச்சினை தொடங்கியது. அத்துடன் அமெரிக்காவுடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப் பட்டது. கியூபா சோஷலிசப் பொருளாதாரத்தை முழு வீச்சுடன் நடைமுறைப் படுத்தியது. 

ரஷ்ய போல்ஷெவிக் கட்சியினருக்கு, ஜெர்மனி வழங்கிய நிதி உள்நோக்கம் கொண்டது என்பதில் ஐயமில்லை. பிரெஸ்ட்- லித்தொவ்ஸ்க் கைச் சாத்திடப் பட்ட பொழுது, ஜெர்மனியின் நோக்கம் பகிரங்கமாக தெரிய வந்தது. ஆயினும், பிற்காலத்தில் ஸ்டாலின் ஆட்சியில், நாஸி ஜேர்மனியோடு நடந்த போரில், சோவியத் யூனியன் இழந்த பகுதிகள் யாவும் திரும்பப் பெறப் பட்டன. பால்ட்டிக் நாடுகள், உக்ரைனின் மேற்குப் பகுதி, பெலாரஸ் மேற்குப் பகுதி என்பன ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றப் பட்டன. 

உண்மையில், இரண்டாம் உலகப்போரின் முடிவில், சோவியத் ஒன்றியம் இழந்ததை விட அதிகமாகவே எடுத்துக் கொண்டது. முன்னாள் புருஷிய சாம்ராஜ்யத்தின் பாரம்பரிய பிரதேசமான, கேனிக்ஸ்பேர்க் (Königsberg, இன்று: காலினின் கிராட்) பகுதியும், சோவியத் வசமானது. அங்கு வாழ்ந்த ஜெர்மன் மொழி பேசும் மக்கள் அனைவரும், இன்றைய ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டனர். அந்த மாநிலம், இன்று முழுக்க முழுக்க ரஷ்ய மயமாகி உள்ளது. ஜெர்மனியைப் பொறுத்தவரையில், இது போன்ற தோல்விகளை ஜீரணிக்கும் நிலையில் இல்லை. ஜெர்மன் பேரினவாதிகள், இழந்த சொர்க்கத்தை நினைத்து இன்றைக்கும் ஏங்குகின்றனர். 


இதனுடன் தொடர்புடைய வேறு பதிவுகள்:

2 comments:

Massy spl France. said...

லெனின் ஒரு பைத்தியக்காரன். ஸ்டாலின் ஒரு கொலைகாரன். எல்சின் ஒரு குடிகாரன். புதின் நவீன மறுகாலனி ஆதிக்க கொடுங்கோலன்.
கலையரசன் நீங்கள் ஒரு காலி டகர டப்பா. சும்மா தப்பு தப்பா சத்தம் சத்தம் போட்டு அப்பாவி தமிழர்கள் மனதில் கெட்ட நம்பிக்கையை வித்திட்டு தவரான வழிக்கு இட்டுச்செல்ல ஆசைபடாதீங்க. உங்களுடைய காலங்கடந்த பைத்திக்கார வீண் ஆராய்ச்சிகள் பெரும்பான்மை சராசரி சாதாண (இளகிய மனம் கொண்ட) தமிழர்களுக்கு தேவையில்லை. மத வெறி தீவிரவாதிகள் போல் உங்களுக்கு ரஷ்ய கம்யூனிச வெறி தலைக்கு ஏறி பித்து பிடித்துவிட்டது. நீங்களும் உங்களை போன்ற கம்யூனிச மற்றும் மத வெறியர்களும் தங்களை ஞானம் பெற்ற அறிவாளிகள் என பெருமை அடித்துக்கொள்வது உங்களது தனிப்பட்ட உரிமை. ஆனால், இதையே எளியவர்கள் மனதில் (கட்டாயமாக அத்துமீறி) திணிக்க முயல்வது வன்மையுடன் கண்டிக்வேண்டிய மடத்தனம்.
என்று தணியுமோ உமது சோவியத் கம்யூனிச அடிமையின் மோகம்?

Prithiviraj kulasinghan said...

நீங்கள் சொல்வதின் படி பார்த்தால் லெனினின் (இன்னும் சரியாகச் சொல்வதானால் ஸ்டாலினின்) சோஷலிசம் உண்மையில் யாருக்கானது என்ற கேள்வி வருகிறது.
உங்கள் கருத்துப்படி லெனின் அன்று ஜேர்மனியிடம் உதவி பெற்றிருந்தாலும் அதில் தவறு இருப்பதாக நான் நம்பவில்லை. அது தந்திரோபாய அடிப்படையிலானதே அல்லாமல் கொள்கை சார்ந்ததல்ல.
ஆனால், அதனால் லெனின் இழந்தது அதிகம் என்று எப்படிச் சொல்ல முடியும். இழந்தது அந்த மக்கள் தானே? அந்த நிலப்பரப்புகளை மன்னர்கள் உரிமை கொண்டாடியது போல சோஷலிசப் புரட்சியாளரான லெனினும் உரிமை கோரலாமா? (அவர் உரிமை கோரினாரா என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் அவர் பெயரில் உரிமை கோரியிருக்கிறீர்கள்.)
அத்துடன் இரண்டாம் உலக யுத்த முடிவில் எப்படி சோவியத் யூனியன் அந்தப் பிரதேசங்களிற்கு ( எஸ்தோனியா, லாட்வியா ) உரிமை கோரியது? அவை முன்னர் சார் மன்னரின் கீழ் இருந்தவை என்பது உண்மைதான் ஆனால் அவை சார் அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் அல்லவா? அந்தக் காலத்தில் பிரிட்டனில் ஒரு புரட்சி நடந்திருந்தால் நாம் இன்னமும் பிரிட்டன் அரசின் பகுதியாகவே இருந்திருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா? இந்த இடத்தில ஸ்டாலின் இன்னொரு சார் மன்னர் போலவே நடந்திருக்கிறார் போலத்தான் தென்படுகின்றது.