Monday, July 15, 2013

வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

இலங்கையில், செப்டம்பரில் நடக்கவிருக்கும் வட மாகாண சபைத் தேர்தல், பல விடயங்களில் முக்கியமானது. வட மாகாணத்தில் தான் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்கின்றனர். அதனால், தவிர்க்கவியலாது வட மாகாண அரசியல் மாற்றங்கள், இலங்கைத் தமிழரின் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் வல்லமை பொருந்தியது.

25 வருடங்களுக்கு முன்னர், முதன் முதலாக நடத்தப் பட்ட, வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபைத் தேர்தலில், வட மாகாணத்தில் வாக்குப் பதிவு நடக்கவில்லை. புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக, யாரும் வேட்பு மனு போடவில்லை. அன்று, இந்திய இராணுவத்துடன் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். மட்டுமே, வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது. அதனால், ஈபிஆர்எல்எப் வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப் பட்டார்கள்.

இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன், வட-கிழக்கு மாகாண சபை கலைக்கப் பட்டது. அதற்குப் பிறகு, இலங்கையில் பிற மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப் பட்டாலும், வட-கிழக்கு மாகாண சபை கவனிப்பாரன்று இருந்தது. தற்போது, கிழக்கில் இருந்து பிரிக்கப் பட்ட, வட மாகாணத்தில் நடக்கும் தேர்தலில், முன்னாள் புலிப் பிரமுகர்கள், சுதந்திரக் கட்சி வேட்பாளர்களாக களமிறக்கி விடப் பட்டுள்ளனர். கேபி, தயா மாஸ்டர், தமிழினி, ராம், நகுலன் என்று ஒரு பெரிய பட்டாளமே, புலிகளை அழித்த மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர். இவர்கள், முன்னொரு காலத்தில், புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்த படியால் தான், செய்திகளில் அடிபடுகின்றனர். ஏற்கனவே, நூற்றுக் கணக்கான முன்னாள் புலி உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். சுதந்திரக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கும் வகையில், அடி மட்டத்தில் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதனால், நேர்மையான தேர்தல் நடப்பதும் சந்தேகமே.

வட மாகாண சபைத் தேர்தலில், இலகுவாகவே பெருமளவு வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பை தடுப்பதற்காக, அரசு கடுமையாக முயற்சிக்கின்றது. அதற்காக பல தகிடுதத்த வேலைகளில் இறங்கியது. தனக்கேற்ற சந்தர்ப்பம் கனியும் வரையில், தேர்தலை பல வருடங்கள் தள்ளிப் போட்டது. இதிலிருந்து, சில உண்மைகள் புலனாகின்றன. புலிகள் போன்ற ஆயுதபாணி இயக்கங்கள், இலங்கை அரசிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்ததில்லை. அன்றிலிருந்து இன்று வரையில், இலங்கை அரசானது தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைக்கே பெரிதும் அஞ்சுகின்றது. ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைகளுக்காக போராடும், ஆயுதபாணி அமைப்பை பயங்கரவாத இயக்கமாக காட்டுவதும், அதன் மூலம் சர்வதேச மட்டத்தில் ஒதுக்குவதும் அரசுக்கு இலகுவான விடயமாக இருந்தது. ஆனால், ஒரு ஜனநாயக தேர்தல் கட்சியை அவ்வாறு செய்ய முடியாது. இந்த உண்மை, ஏற்கனவே பாலஸ்தீன பிரச்சினையில் நிதர்சனமாகியது.

நடக்கவிருக்கும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதற்கு, முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவு செய்யப் பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சராக வருவார் என இப்போதே கருதப்படும் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஈழத் தமிழ் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் மகிழ்ச்சிப் பிரவாகம் கரை புரண்டு ஓடுகின்றது. சிங்கள பேரினவாத அரசில், நீதியரசர் பதவி வகித்த ஒருவர், அந்த அதிகாரக் கட்டமைப்பின் மீதான தனது விமர்சனங்களை எங்காவது பதிவு செய்துள்ளாரா என்று தெரியவில்லை. 

மேற்கத்திய முதலாளித்துவ நலன்களுக்கு சார்பான இலங்கை அரச கட்டமைப்பில், பாராளுமன்ற அமைச்சர்கள் மட்டுமல்லாது, நீதித் துறையினரும் கூட அரசின் அங்கமாக இருப்பார்கள். நாங்கள் "சிங்களப் பேரினவாதம்" என்று சொல்லும் பொழுது, ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் குற்றஞ் சாட்டுகின்றோம் என்பதை பலர் உணர்வதில்லை. அதனால் தான், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய ஆரம்ப காலங்களில் நீதிமன்றங்கள் எரிக்கப் பட்டன. நீதிபதிகளுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப் பட்டன. ஆகவே, அத்தகைய பின்னணியை கொண்ட ஒருவர், எந்தளவுக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வார் என்பது கேள்விக்குறியே. மேலும், விக்னேஸ்வரன் தெரிவு தொடர்பாக, சம்பந்தரும், மகிந்த ராஜபக்சவும் ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிய வருகின்றது. 

மகிந்தவின் சுதந்திரக் கட்சி, முன்னாள் புலித் தலைவர்களை சேர்த்துக் கொண்டு, ஈபிடிபி யுடன் கூட்டணி வைத்துக் கொண்ட போதிலும், பெரும்பான்மை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிப்பார்கள் என்று எல்லோரும் நம்புகின்றனர். முன்பு, 13 ம் திருத்தச் சட்டத்தின் படி வாக்குறுதி அளிக்கப்பட்ட காணி, பொலிஸ் உரிமைகள் பற்றி, சிறு முணுமுணுப்பு கூட தற்போது கிடையாது. தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கைகளான அந்த உரிமைகளையும் விட்டுக் கொடுத்தால், வடக்கு மாகாண சபை எந்த அதிகாரங்களை நடைமுறைப் படுத்தப் போகின்றது?

முன்பிருந்த வட- கிழக்கு மாகாண சபை கொண்டிருந்த குறைந்த பட்ச அதிகாரங்களை கூட இல்லாதொழித்து விட்டு நடைபெறும் வடக்கு மாகாண சபைத் தேர்தல், தமிழ் மக்களுக்கு பெரிய நம்பிக்கைகளை வழங்கப் போவதில்லை. ஆனால், மேற்பார்வைக்கு தெரியக் கூடிய மாகாண சபை கட்டமைப்பு இருப்பதை இந்தியாவும் விரும்புகின்றது. அண்மையில், த.தே.கூ., இந்திய அரசு, இலங்கை அரசு ஆகியவற்றுக்கு இடையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் விளைவாகவும், விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராக்கும் முடிவு அமைந்துள்ளது.

2 comments:

Nellai Balaji said...

\\இதிலிருந்து, சில உண்மைகள் புலனாகின்றன. புலிகள் போன்ற ஆயுதபாணி இயக்கங்கள், இலங்கை அரசிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்ததில்லை. அன்றிலிருந்து இன்று வரையில், இலங்கை அரசானது தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைக்கே பெரிதும் அஞ்சுகின்றது. ஒரு சிறுபான்மை இனத்தின் உரிமைகளுக்காக போராடும், ஆயுதபாணி அமைப்பை பயங்கரவாத இயக்கமாக காட்டுவதும், அதன் மூலம் சர்வதேச மட்டத்தில் ஒதுக்குவதும் அரசுக்கு இலகுவான விடயமாக இருந்தது. ஆனால், ஒரு ஜனநாயக தேர்தல் கட்சியை அவ்வாறு செய்ய முடியாது.\\

நண்பரே..காஷ்மீரை பார்த்த பின்னுமா இப்படி ஒரு கருத்து.. பாலஸ்தீன கட்சி, யாசர் அரபாத் இல்லாமல் எப்படி ? அல்லது அரபாத்தின் ஆயுத போராட்டம் இல்லாமல் இப்போதைய ஆட்சியும் கட்சியும் எப்படி ? பாலஸ்தீன அரசியல் கட்சிகளை யார் மதிக்கிறார்கள் ? அமெரிக்கா வா இல்லை இஸ்ரேல் லா ? எதாவது ஒரு பேச்சு வார்த்தை உருப்படியாக நடந்ததா ? ஏன் ஐ நா வில் உறுப்பு நாடாக ஏற்க மறுக்கிறார்கள் ?

ஆயுதபாணி அமைப்பு, முற்றிலும் தவறு என காஸ்ட்ரோ விடம் கூறி பாருங்கள் ..மா வோ விடம் சொல்லி பாருங்கள்..

Kalaiyarasan said...

நண்பரே, இப்போதும் நீங்கள் உணர்ச்சி வசப் பட்டுத் தான் பேசுகின்றீர்கள். நான் இங்கே குறிப்பிட்ட உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.

மிகத் தீவிரமாக தேசியவாதம் அல்லது மதவாதம் பேசும் இயக்கங்களை, பெரும்பான்மையின மக்களிடம் இருந்து ஒதுக்குவது மிக எளிதானது. காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமியவாத இயக்கமான லக்சர் இ தொய்பா வை, பிற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மை இந்துக்கள் ஆதரிக்க வாய்ப்புண்டா? பாலஸ்தீனத்தில் இஸ்லாமியவாத ஹமாசுக்கு, இஸ்ரேலிய யூதர்கள் மத்தியில் அனுதாபம் பெற முடியுமா? இதெல்லாம் நடக்க முடியாது என்று, உங்களுக்கு மட்டுமல்ல, இந்திய, இஸ்ரேலிய அரசுக்களுக்கும் தெரியும். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? காஷ்மீரில் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களை உருவாக்க, ஆரம்ப காலங்களில் இந்திய அரசு உதவியது. அதே போன்று, பாலஸ்தீன ஹமாஸ் ஆரம்ப காலங்களில் இஸ்ரேலிய அரசிடம் இருந்து உதவி பெற்றது. எதற்காக இந்திய, இஸ்ரேலிய அரசுகள் இஸ்லாமியவாத இயக்கங்களை ஊக்குவித்தன? ஏனென்றால், அப்படியான இயக்கங்களால் ஒரு கட்டத்திற்கு அப்பால் நகர முடியாது. குறிப்பாக, பெரும்பான்மையின மக்களின் அனுதாபத்தை பெற முடியாது. அவர்கள் பேசும் இனவாதம், மதவாதமே அவர்களை அன்னியப் படுத்தி விடும்.

வெறும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தீர்வைக் கொண்டு வரவில்லை. ஆயுதப் போராட்டம் நடந்த எல்லா நாடுகளிலும், ஒரு அரசியல் கட்சி அந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியது. ஆயுதம் ஏந்தாத வெகுஜன அமைப்புகள் இருந்தன. இரண்டு பக்கமும் சேராத நடுநிலை அமைப்புகள் இருந்தன. அவற்றையும் சேர்த்துக் கொண்டதால் தான் அவர்களின் போராட்டம் வென்றது. யாசிர் அரபாத்தின் பதா இயக்கம் கூட ஒரு அரசியல் அமைப்பாக இயங்கியது. அதற்கென இராணுவப் பிரிவு இருந்தது. அரபாத்தின் பதாவுடன், வேறு சில இயக்கங்களும் சேர்ந்து PLO என்ற ஐக்கிய முன்னணியை உருவாக்கி இருந்தன. காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கம், ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர், நடுநிலை வகித்த கியூப கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது.

மாவோ, இராணுவவாதத்தை கடுமையாக சாடுகின்றார். சீனாவின் மக்கள் விடுதலைப் படை, கம்யூனிஸ்ட் கட்சிக்கு கீழ்ப் படிந்து நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். விடியல் பதிப்பகம் வெளியிட்ட, மாசேதுங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவப் படைப்புகள் என்ற நூலை வாங்கி வாசித்துப் பாருங்கள்.