Thursday, July 25, 2013

வரலாற்றுத் திருப்புமுனையான 83 ஜூலைக் கலவரம் - ஒரு மீள்பார்வை


1983 ஜூலை மாதம் நடந்த, தமிழருக்கு எதிரான இனக் கலவரம், இலங்கை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு முந்திய கலவரங்களை காட்டிலும், தலைநகரத்தில் வாழ்ந்த தமிழர்களுக்கு பல மடங்கு அழிவுகளை உண்டாக்கி இருந்தது. அதிகளவான உயிரிழப்புகளும், சொத்தழிவும் 83 கலவரத்தின் போது ஏற்பட்டன. தமிழர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள் ஒன்று கூட தப்பவில்லை. சிறிய பெட்டிக் கடை முதல், பெரும் வணிக வளாகம் வரையில், தமிழ் உரிமையாளர்களை கொண்டிருந்த ஒரே காரணத்திற்காக எரிக்கப் பட்டன.

தமிழ் பணக்காரர்கள் வீட்டில் வேலை செய்த, சிங்கள பணியாளர்கள் அவர்களை காட்டிக் கொடுத்தார்கள். தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்த சிங்கள தொழிலாளர்கள், தொழிற்சாலைகளை எரிக்க துணை போனார்கள். இதனால் பல தமிழ் முதலாளிகள் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை இழந்து, ஏதிலிகளாக நிர்க்கதியான நிலைக்கு தள்ளப் பட்டனர். தலைநகர வர்த்தகத்தில் தமிழர்கள் கொண்டிருந்த நூறாண்டு கால பங்களிப்பு, ஒரு சில நாட்களில் இல்லாதொழிக்கப் பட்டது.

இலங்கையின், மேற்கத்திய பாணி தேர்தல் ஜனநாயகம், தமிழின அழிப்புக்கு உறுதுணையாக அமைந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி உறுப்பினர்கள் கைகளில், தொகுதியை சேர்ந்தவர்களின், வாக்காளர் பட்டியல் காணப்பட்டது. அந்தப் பட்டியலின் படி, தமிழர்களின் வீடுகளை கண்டுபிடிப்பதும், அங்கு வாழ்ந்தவர்களை கொலை செய்வதும் இலகுவாக அமைந்திருந்தது. 

தொழில் வாய்ப்பற்ற, சிங்கள இனவெறியூட்டப் பட்ட, உதிரிப் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த காடையர்களே தமிழர்களை தாக்கினார்கள். ஆளும்கட்சியை சேர்ந்த தொகுதி உறுப்பினர்கள், அவர்களை பின் நின்று இயக்கிக் கொண்டிருந்தனர். சிங்கள மத்திய தர வர்க்கம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சிலர் தமது வீடுகளில் அடைக்கலம் கோரி வந்த, நீண்ட கால தமிழ் நண்பர்களையும் காட்டிக் கொடுத்தார்கள். "படித்தவன் இனவாதியாக இருக்க மாட்டான்" என்ற நம்பிக்கை, அன்று பல தமிழர் மனங்களில் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தது. 

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில், 13 சிங்களப் படையினர் புலிகளின் திடீர்த் தாக்குதலில் கொல்லப் பட்ட சம்பவம், கலவரத்தை தூண்ட காரணமாக அமைந்திருந்தது. உண்மையில், ஆளும் ஐதேக தலைவர்கள், ஏற்கனவே தமிழின அழிப்புக்கு திட்டம் தீட்டி இருந்தனர். அவர்களுக்கு தேவைப் பட்டது ஒரு தீப்பொறி மட்டுமே. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, "தமிழர்கள் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்..." என்று ஊடகங்களில் அறிவித்திருந்தார். 

அன்றைய தாக்குதலில் சுட்டவர்கள் புலிகள், பலியானவர்கள் அரச படையினர். ஆனால், தென்னிலங்கையில் அது "சிங்களவர்கள் மீதான தமிழர்களின் தாக்குதலாக" பிரச்சாரம் செய்யப் பட்டது. எல்லாவற்றையும் சிங்கள-தமிழ் இனவாத கண்ணாடி ஊடாக பார்க்கும் அரசியல், அடுத்து வந்த முப்பதாண்டு கால ஈழப்போர் கால கட்டத்திலும் தொடர்ந்திருந்தது. கொல்லப்பட்ட 13 படையினரின் இறுதிக் கிரியைகள் நடந்த, பொரளை கனத்த மயானத்தில், நூற்றுக் கணக்கான சிங்கள இனவாதிகள் ஒன்று திரண்டிருந்தனர். பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற வெறி எல்லோர் மனதிலும் குடிகொண்டிருந்தது. 

கனத்த மயானத்திற்கு அருகில் பெருமளவு தமிழர்கள் வாழ்ந்த, நாரஹென்பிட்டிய தொடர்மாடி குடியிருப்புகளே முதலில் தாக்கப் பட்டன. அங்கு பெரும்பாலான குடியிருப்புகள், அரசாங்க ஊழியர்களின் குடும்பங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப் பட்டிருந்தன. முப்படைகளில் பணியாற்றிய ஊழியர்களும் அங்கே குடியிருந்தனர். அதனால், "பாதுகாப்பான பிரதேசமாக" கருதப்பட்ட தொடர்மாடிக் கட்டிடங்கள் தாக்கப் பட்டமை பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனது பெற்றோரும் அரசாங்க ஊழியர்கள் என்பதால், நாங்களும் அங்கிருந்த வீடொன்றில் தான் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருந்தோம். நல்ல வேளையாக, கலவரம் தொடங்குவதற்கு முன்னர் விடுமுறையில் யாழ்ப்பாணம் சென்று விட்டதால், ஒரு பேரழிவில் இருந்து மயிரிழையில் தப்பினோம். 

இதற்கு முந்திய தமிழ் ஆயுதபாணி இயக்கங்களில் தாக்குதல்களில், பொதுவாக ஒன்றிரண்டு பொலிஸ்காரர்கள் தான் கொல்லப் படுவது வழக்கம். பெருமளவு எண்ணிக்கையில் படையினர் கொல்லப்பட்டமை அதுவே முதல் தடவை. தாக்குதல் நடந்த திருநெல்வேலியில் ஊரடங்கு உத்தரவு போட்ட படையினர், பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். வீடுகளுக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை சுட்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் காரணம் தெரியாமலே இறந்து போனார்.

யாழ் குடாநாட்டில், ஒரு சில நாட்களுக்குள் நிலைமை தலைகீழாக மாறியது. பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாக கருதப் பட்ட பொலிஸ் நிலையங்கள் விலக்கிக் கொள்ளப் பட்டன. சுன்னாகம் பொலிஸ் நிலையம் வெறுமையாக இருப்பதை அறிந்த, அயலில் வாழ்ந்த தமிழர்கள் சிலர் உள்ளே சென்று பார்த்தனர். திடீரென, நேரக் கணிப்பு வெடிகுண்டு வெடித்ததால் சிலர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். யாழ் குடாநாட்டில் இருந்த சிறிய பொலிஸ் நிலையங்களே விலக்கிக் கொள்ளப் பட்டன. பெரிய பொலிஸ் நிலையங்கள் பலப் படுத்தப் பட்டன. வேட்டைத் துப்பாக்கிகள் மட்டுமே வைத்திருந்த பொலிஸ்காரர்களுக்கு தானியங்கி துப்பாக்கிகள் வழங்கப் பட்டன. பொலிஸ், இராணுவ வாகனங்கள் முக்கியமான தெருக்களில் மட்டுமே ரோந்து சுற்றின. 

இதனால், கிராமங்களில் படையினரின் பிரசன்னம் வெகுவாகக் குறைந்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பல்வேறு தமிழ்ப் போராளிக் குழுக்களை சேர்ந்தவர்கள் கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். ஆர்வமுள்ளவர்களுடன் பேசி, பொதுக் கூட்டங்கள் நடத்தி, இளைஞர்களை சேர்த்தார்கள். ஈழப் போராட்டத்திற்காக வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருந்தவர்களை சேர்த்து, இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பினார்கள். 

83 கலவரத்திற்குப் பிறகு, இலங்கை அரச வானொலியை கேட்பதை, யாழ்ப்பாண தமிழர்கள் ஏறக்குறைய நிறுத்தி விட்டார்கள். பொய், புரட்டு, இருட்டடிப்பு காரணமாக அதன் நம்பகத் தன்மை குறைந்து கொண்டே போனது. அதற்குப் பதிலாக, தமிழ் மக்கள் தகவலுக்காக வெளிநாட்டு வானொலிகளை நம்பி இருந்தார்கள். இந்திய தூரதர்ஷன், பிரிட்டனின் பிபிசி, பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க நிறுவனத்தின் வெரித்தாஸ் போன்ற வானொலிகளின் தமிழ்ப் பிரிவினர், மறைக்கப் பட்ட செய்திகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு தமிழ் வீட்டிலும் அவை கேட்கப் பட்டன. அன்றாட அரசியல் உரையாடல்களும், அந்த வானொலிகள் கொடுத்த தகவல்களை அடிப்படையாக கொண்டிருக்கும். 

83 ஜூலைக் கலவர சம்பவங்களை ஜூனியர் விகடன் சிறப்பிதழாக வெளிக் கொணர்ந்தது. அந்த இதழ் இலங்கைக்குள் வருவது தடை செய்யப் பட்டிருந்தது. போராளி இயக்கங்களை சேர்ந்தவர்கள், இந்தியாவில் இருந்து கொண்டு வந்து பிரதி எடுத்து விநியோகித்தார்கள். அதைத் தொடர்ந்து, ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான தமிழக அரசியல் சஞ்சிகைகளையும், படகு மூலம் கடத்திக் கொண்டு வந்து விநியோகித்தார்கள். நிறையப் பேர் அவற்றை விரும்பி வாங்கி வாசித்தார்கள். 

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, 83 கலவரத்திற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரங்களுக்காக யாழ்ப்பாணம் சென்று வந்தார். அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் கிளைகள் இருந்தன. தமிழ் அமைப்பாளர்கள் அவற்றை நிர்வகித்து வந்தனர். 83 கலவரத்திற்கு பின்னர், யாழ் மாவட்ட ஐதேக அமைப்பாளர்களுக்கு கொலைப் பயமுறுத்தல் விடுக்கப் பட்டது. ஈழ போராளிக் குழுக்கள் அனுப்பிய எச்சரிக்கைக் கடிதம் காரணமாக பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். மெல்ல மெல்ல பிற அரசியல் கட்சிகளும் இயங்குவதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன. பழம்பெரும் தமிழ் தேசியக் கட்சியான, தமிழர் விடுதலைக் கூட்டணியும் பகிரங்கமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

தேர்தல் அரசியல் மிதவாதமாகவும், ஆயுதபாணி அரசியல் தீவிரவாதமாகவும் மாறியது. ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திய குழுக்களை, அரச ஊடகங்கள் "பயங்கரவாதிகள்" என்று அறிவித்தன. தமிழ் மக்கள் மட்டுமல்ல, அன்றைய காலத்தில் சிங்கள மக்கள் கூட, தமது அன்றாட அரசியல் உரையாடல்களில் "பயங்கரவாதிகள்" என்ற சொல்லை பாவிக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர, TELO, PLOTE, EPRLF, EROS, TELA என்று ஒரு டசின் விடுதலை இயக்கங்கள் இருந்தன. ஆனால், சிங்கள மக்கள் அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் "கொட்டியா" (புலிகள்) என்று அழைத்தனர். எந்த இயக்கம் தாக்குதல் நடத்தினாலும், அதனை புலிகளே செய்ததாக நினைத்துக் கொண்டனர். 

இதே மாதிரியான நிலைமை, தமிழ் நாட்டிலும் இருந்தது. அவர்களும் எல்லா இயக்கங்களையும் "விடுதலைப் புலிகள்" என்ற பொதுப் பெயர் கொண்டு அழைத்தனர். திருநெல்வேலியில் இராணுவத்தினர் மீதான தாக்குதல், புலிகள் அமைப்பினால் நடத்தப் பட்டது. ஆனால், அதன் விளைவாக ஏற்பட்ட ஜூலைக் கலவரம், ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான தமிழ் மக்களின் உணர்வலைகள் காரணமாக, விடுதலை இயக்கங்களுக்கான மக்கள் ஆதரவு அதிகரித்தது. இதன் விளைவாக, எல்லா இயக்கங்களும் பல்லாயிரம் போராளிகளையும், ஆதரவாளர்களையும் திரட்டிக் கொண்டார்கள். 

தேசத்தின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்த, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்த்தன, 83 ஜூலைக் கலவரத்திற்கு பதில் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழினப் படுகொலையில் இருந்து தனது அரசையும், கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள எண்ணினார். வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அபாயகரமான எதிரிகளாக இருந்த, தமிழ் ஆயுதபாணி இயக்கங்களை அடக்குவதற்காக, பெருந்தொகையான சிங்களப் படையினரை அனுப்பி வைத்தார். அந்த மாகாணங்களில், படையினரின் கண்மூடித்தனமான கொலைகள், வரைமுறையற்ற கைதுகள் தொடர்ந்தன. அதே நேரம், தென்னிலங்கையிலும் சில எதிரிகளுடன் கணக்குத் தீர்க்க வேண்டியிருந்தது. 

ஜூலைக் கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று சில பெயர்கள் அரச ஊடகங்களில் அறிவிக்கப் பட்டன. அதனை பெரும்பாலான சிங்கள-தமிழ் மக்கள் நம்பவில்லை. தமிழினப் படுகொலையுடன் எந்த வித சம்பந்தமுமற்ற சில கட்சிகளின் பெயர்கள் வாசிக்கப் பட்டன. மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் தடை செய்யப் பட்டன. அந்தக் கட்சிகளே கலவரத்தை நடத்தியதாக, ஜே.ஆர். அறிவித்தார். இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விழுத்தினார். 

ஒரு பக்கம், சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் மீது மிலேச்சத் தனமான போர் முடுக்கி விடப் பட்டது. மறு பக்கம், அரச எதிரிகளான இடதுசாரிகள் அரசியல் அரங்கில் இருந்து ஓரங்கட்டப் பட்டனர். இதன் மூலம், சிங்களப் பேரினவாத அரசு, ஒரு கையால் ஈழப்போரை நடத்திக் கொண்டே, மறு கையால் தாராளவாத பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தியது. தமிழ் தேசியவாதிகள், சிங்கள இடதுசாரிகள் மீது ஜே.ஆர். தொடங்கிய போரின் விளைவை, முப்பது வருடங்களுக்குப் பின்னர், தமிழ் - சிங்கள மக்கள் அறுவடை செய்கின்றனர். 

எந்த வித எதிர்ப்புமின்றி, இலங்கை மறு காலனியாதிக்கத்தை நோக்கி தள்ளப் பட்டது. தனியார்மயம் தாராளமாக நுழைவதற்கு தடையேதும் இருக்கவில்லை. ஈழப் போரானது, அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் ஒடுக்கி, அதி தீவிர போராட்ட சக்தியான புலிகளையும் அழித்து விட்டு ஓய்ந்தது. ஒரு இலட்சத்திற்கும் மேலான உயிர்களை பலி கொடுத்த தமிழ் சமூகம், இன்றைக்கும் ஒரு பெரும் இனப்படுகொலை ஏற்படுத்திய காயங்கள் மாறாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜே.ஆரின். சூழ்ச்சிக்கு பலியானதை அறியாத தமிழ் வலதுசாரி தேசியவாதிகள், மேற்குலகில் இருந்து வரவிருக்கும் மீட்பருக்காக காத்திருக்கிறார்கள்.

1 comment:

உலக சினிமா ரசிகன் said...

ரத்தக்கறை படிந்த வரலாற்றை படிக்கும் போது மனசு கனக்கிறது.
இனி யுத்தம் இல்லாமல் தமிழர் வாழ்வுரிமை பெற வேண்டும்.
அதற்கு ஈழம் மலர வேண்டும்.