Saturday, May 04, 2013

மே தினமும், குழந்தைகளின் அரசியலும் - எனது சாட்சியம்

இந்த வருடம் (2013), நெதர்லாந்து, ரொட்டர்டாம் நகரில் நடந்த மே தினப் பேரணியில், ஆயிரத்திற்கும் குறையாத பன்னாட்டு தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

1. வில்லம் அலெக்சாண்டரை நெதர்லாந்து மன்னராக முடிசூட்டும்
விழா 30-04-2013

2. உழைப்பாளர் தினம், மே 1, 2013.


முதலாவது படத்தில்: இலங்கை, இந்தோனேசியா போன்ற காலனிகளை சுரண்டிக் கொழுத்த, உலகில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தின் வாரிசும், ஆப்பிரிக்க நாடுகளில் மனித உரிமைகளை மீறிய ஷெல் எண்ணை நிறுவன முதலாளியுமான வில்லெம் அலெக்சாண்டர் நெதர்லாந்தின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொள்கிறார். 21 ம் நூற்றாண்டுக்கு பொருந்தாத, புராதன கால சம்பிரதாயமான மன்னராட்சியை கொண்டாடும் மக்கள். (முக்கிய குறிப்பு: அன்றைய தினம் அனைவருக்கும் விடுமுறை தினமாகும்.) 

இரண்டாவது படத்தில்: தொழிலாளர்களின் மே தினத்தில், இழந்த உரிமைகளுக்காக போராடும் உழைக்கும் மக்கள். (முக்கிய குறிப்பு: அன்றைய தினம் விடுமுறை கிடையாது. வழமையான வேலை நாள்.) 

முதலாவது படத்தை பார்த்து "ஆஹா... அற்புதம்" என்று புகழ்கிறவர்கள், இரண்டாவது படத்தை பார்த்து விட்டு "அய்யய்யோ... சிறுவர் துஸ்பிரயோகம்" என்று அலறுகின்றனர். ஆண்டானின் பிறந்தநாளை அடிமைகள் கொண்டாடுவதை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்கிறவர்கள், அடிமைகள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதை "அசாதாரணமான அரசியல் திணிப்பாக" கருதி எதிர்க்கிறார்கள். எது அரசியல் திணிப்பு? எது துஸ்பிரயோகம்? இதை தீர்மானிப்பது யார்? 
மே தினத்தில் செங்கொடி ஏந்தினால், முஷ்டியை உயர்த்தினால் "அரசியல்- சித்தாந்த திணிப்பு" என்றெல்லாம் அறநெறி போதிக்கும் நண்பர்களே! 

நான் இன்றைக்கும், தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்த ஒருவன் தான். நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால், பத்து வருடங்களாக செய்து வந்த நிரந்தர வேலையும் பறிபோனது. அதற்குப் பிறகு கிடைக்கும் எந்த விதமான வேலையையும் மனம் கோணாமல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். "வாயில் நுழையாத பெயரை கொண்டிருப்பதாலும், இருட்டான தோற்றத்தை உடையவன் என்பதாலும், ஆசிய நாடொன்றில் பிறந்த படியாலும்", தொழிலாளர் சந்தையில் எனது உழைப்பிற்கான கேள்வி குறைந்து கொண்டே செல்கின்றது. சிரமப் பட்டு வேலை தேடும் பொழுது, முதலாளிகளால் பாகுபாடு காட்டப் படுகிறேன். 

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் நாட்டில், உதிரித் தொழிலாளர்கள் வேண்டாத பண்டமாகி வருகின்றனர். இதை விட உயர்ந்து வரும் வாழ்க்கை செலவை ஈடுகட்டுமளவு போதாத வருமானம். என்னிடம் காரும் இல்லை, சொந்த வீடும் இல்லை, சொத்துக்களும் இல்லை. வங்கியில் பல இலட்சம் சேமிப்புப் பணமும் கிடையாது. வாழ்க்கை முழுவதும் எனது உரிமைகளை போராடித் தான் பெற வேண்டியுள்ளது. 

என்னைப் போன்ற பாதிக்கப் பட்ட மற்ற தொழிலாளர்களும் இணைந்து போராடுவதற்கு வருடத்தில் ஒரு தடவையாவது மே தினம் வருகின்றது. அதனை "வேற்றுக் கிரகவாசிகளின் அரசியல்- சித்தாந்த திணிப்பு" என்று மிரளுகிறவர்கள், எந்தளவு தூரம் உழைக்கும் மக்களிடம் இருந்து அந்நியப் பட்டிருக்கிறார்கள் என்பது புரிகின்றது. 


அரசியலும், போராட்டமும் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதால், அது எனக்கு தவறாகத் தெரியவில்லை. என்னை ஒரு அரசியலற்ற மனிதனாக அறிவித்துக் கொள்ளும் மேட்டுக்குடி பண்பாடோ அல்லது பின்நவீனத்துவ சிந்தனையோ என்னிடம் கிடையாது. நாங்கள் அரசியலை வலிந்து திணித்துக் கொள்ளவில்லை. அரசியல் எங்களை தேடி வந்து பற்றிக் கொள்கின்றது. 

வீட்டுக்கு அருகில் இருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் மகனை சேர்த்து விட்டு, வேலைக்கு போய் வந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். அரசாங்கம் மானியத்தை நிறுத்தியதால், குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டு, ஒன்றரை வயது குழந்தையான அகரனை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டிய நிலை உருவானது. அந்த நேரத்தில், வேலையிழந்த குழந்தைகள் காப்பக ஊழியர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அதுவே எனது ஒரு வயது மகன் கற்ற முதலாவது அரசியல் பாடம். 

ஐரோப்பியர்கள் கோடை கால விடுமுறைக்கு குடும்பத்துடன் வெளியே சென்று கூடாரமடித்து, அல்லது ஒரு ரிசோர்ட்டில் தங்கி உல்லாசமாக பொழுது போக்குவது வழக்கம். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் நடத்தும் ஒரு வார கோடை விடுமுறை முகாம், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். (அரசு மானியம் கொடுப்பதால் தங்குமிட செலவு மிகக் குறைவு.

கிறிஸ்தவ சபைகளும் கோடை விடுமுறை முகாம்களை நடத்துகின்றன. மத நம்பிக்கையுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.) ஒரு தடவை நோர்வே மாவோயிஸ்ட் கட்சி நடத்திய கோடை கால விடுமுறை முகாமில் குடும்பத்துடன் கலந்து கொண்டோம். அங்கே பெரியவர்களுக்கு அரசியல் வகுப்புகள், கலந்துரையாடல்கள் ஒரு பக்கம் நடக்கும். மறு பக்கம், சிறுவர்களுக்கான விளையாட்டுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒழுங்கு படுத்தப் பட்டிருக்கும். 

சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால், நாங்களும் பொருளாதார பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்ளும் நேரம், எம்மால் முடிந்ததெல்லாம் சமூக மாற்றத்திற்காக, நான்கு பேர் கூடிக் கதைப்பது தான். அதனை சில மெத்தப் படித்த அறிவாளிகள் "அரசியல் சித்தாந்தம்" என்று வரையறுக்கின்றனர். எங்களது சமூகப் பிரச்சினைக்காக ஒன்று கூடுவது அரசியல் சித்தாந்தம் என்றால், அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தான், எமது அரசியல் சித்தாந்தம் என்னவென்பதை தீர்மானிக்கின்றது.

******

 வீடியோ: ரொட்டர்டாம் நகரில் நடந்த மே தின ஊர்வலம்.

5 comments:

Packirisamy N said...

//வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தான், எமது அரசியல் சித்தாந்தம் என்னவென்பதை தீர்மானிக்கின்றது.//

100% true. I totally agree with you. But, it is too difficult to digest like the news below. I cannot comprehend. http://finance.ninemsn.com.au/executivesuite/insight/265975/richest-world-leaders.slideshow

sargunamshafi@blogspot.com said...

எந்தத் தவறும் இல்லை. நீங்கள் வழங்குவது விழிப்புணர்வைத்தான், அவர் வளர வளர அவர் பிரச்சனை அவரது சித்தாந்தம் என்ன என்று தீர்மானிக்கும்.

வெகு சிறுவயதிலேயே எனக்கு முஸ்லிம் சமூக அரசியல் தொடர்பு எனது தாத்தாவை கொண்டு ஏற்பட்டது. பின்னர் சிறிது வாசிப்பு தொடர்பு மூலம் இடதுசாரி இயக்கக் கூட்டங்கள், இலக்கிய கூட்டங்கள் என்று போக ஆரம்பித்தேன், இந்த சமூக அக்கறையை எங்கள் வீட்டினர் எப்போதுமே ஆதரித்தனர் ஊக்குவித்தனர்.

Kalaiyarasan said...

Packirisamy,& sargunamshafi,
உங்கள் ஆதரவுக்கு நன்றி.

சுப்புணி அய்யர் said...

கும்பிட வைதல் அத்ற்கு பெயர் சித்தாந்த தினிப்பு அல்ல அது
பக்தி , இயல்பு, சாதாரண விசயம். சொல்லப்போனால் அது விஷயமே அல்ல.

போரட்டத்திற்கு கூட்டிப் போனால்?
போங்க பாஸ் ..... இவங்களுக்கு போய் பதில் சொல்லிக்கிட்டு

Unknown said...

எந்த ”இசத்தை” ப்பின்பற்றினாலும் 50-60 களில், நாம் கடந்து வந்த பாதை சரியல்ல என்ற சோர்வு உணர்வு ஏற்படாமலிருக்கவேண்டும். இந்தியாவில் I T FIELD-ல், அலுவலகத்திற்குச் சென்றுவரும் ஏதெனும் ஒரு நபருக்குக் காரணம் எதுவும் கூறாமலேயே திடீரென்று “சீட்டு” கிழிக்கப்படுகின்றது. இங்கும் பொதுவுடைமைக் கட்சிகள் இருக்கின்றன. எல்லாக் கட்சிகளுமே மே தினத்தைக் கொண்டாடுகின்றன. எமக்கு மார்க்சியத்தின் மீது வெறுப்பு கிடையாது. என்று தணியும் இந்த தொழிலாளர்தம் சிக்கல்கள் ?