Tuesday, February 19, 2013

அணுக்கதிர் வீச்சின் விஸ்வரூபம் : ஆப்கானிஸ்தானின் அவலம்


[விஸ்வரூபம் : அபத்தங்களின் விசால ரூபம்]

(பாகம் - 4)

விஸ்வரூபம் என்பது ஒரு வெறும் பொழுதுபோக்குப் படம் தானே? அதனை எதற்கு இவ்வளவு தூரம் நோண்ட வேண்டும் என்று பலர் நினைக்கலாம். சிங்கள இராணுவத்தை, விஸ்வரூபம் பாணியில் "பெண்களையும், குழந்தைகளையும் கொல்லாத நல்லவர்கள்" என்று சித்தரித்த பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படத்தையும், "வெறும் பொழுதுபோக்கு படமாக" கருதி ஒதுக்க முடியுமா? பிரபாகரனும், விஸ்வரூபமும் சமூகத்தில் விதைக்கும் நச்சுக் கருத்துக்களை கண்டும்காணாமல் விட்டு விட முடியுமா? ஆப்கானிஸ்தானில் ஒரு இனவழிப்பு போரை நடத்திய அமெரிக்க/நேட்டோ  படையினரின்  போர்க்குற்றங்களை மூடி மறைத்து விட்டு, "அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள்," என்று நா கூசாமல் புளுகுவதற்கு, கமல்ஹாசனுக்கு எந்தளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?

விஸ்வரூபம் படத்தில், ஹெலிகாப்டரில் இருந்து அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொண்டிருப்பார்கள். தப்பியோடிக் கொண்டிருக்கும் பூர்கா அணிந்த பெண்ணொருவர் குண்டடி பட்டு வீழ்வார். உடனே சுட்டுக் கொண்டிருந்த அமெரிக்க படைவீரன், "Shit!" என்று கழிவிரக்கம் கொள்வார். 7 அக்டோபர் 2001,  ஆப்கான் மீதான படையெடுப்பை அறிவித்த மறுகணமே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த Tomahawk ஏவுகணைகள், பெண்களையும், குழந்தைகளையும் இனங்கண்டு ஒதுக்கி விட்டு, தாலிபான் போராளிகளை மட்டும் குறி வைத்துக் கொன்றனவா? குறைந்தது ஒரு மாதத்திற்குப் பிறகு தான், அமெரிக்கப் படைகள் தரை வழி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதற்குள் குறைந்தது 20000 ஆப்கானிய பொது மக்கள் பலியாகி விட்டனர். 

ஆப்கான் மக்களை இனப்படுகொலை செய்த, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் படவில்லை. ஆனால், ஒரு போர்க்குற்றவாளி எப்போதும் போர்க்குற்றவாளி தான். ஆப்கான் ஆக்கிரமிப்பு போர் தொடங்கி பத்து வருடங்கள் கழிந்த பின்னரும்,  இது வரையில் எந்தவொரு அமெரிக்கப் படையினரும் போர்க்குற்றச்சாட்டில் விசாரிக்கப் படவில்லை. "Shit" என்ற ஒற்றைச் சொல்லின் பின்னால், ஒரு இனப்படுகொலையை மூடி மறைப்பதை, கமலின் இரசிகர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், ஈழத்தமிழர் இனப்படுகொலையில் அவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

அமெரிக்கப் படைகள் செய்த இனப்படுகொலைகளை பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாத விஸ்வரூபம், நியூ யோர்க்  நகரை அழிப்பதற்காக, தாலிபான் தலைவர் முல்லா ஒமார் அணுகுண்டு தயாரிப்பதாக காட்டுவது யாரை திருப்திப் படுத்துவதற்காக? அல்கைதா, "Dirty Bomb" என்று படத்தில் காட்டப்படும் சிறிய ரக அணுகுண்டு  தயாரித்து வைத்திருப்பதாக ஒரு கட்டுக்கதையை, சில வருடங்களுக்கு முன்னர் சி.ஐ.ஏ. அவிழ்த்து விட்டது. உண்மையில் அல்கைதாவுக்கோ, தாலிபானுக்கோ அந்தளவு வல்லமை இல்லையென்பதால், அமெரிக்காவிலேயே யாரும் அதை ஒரு பெரிய விடயமாக எடுக்கவில்லை. இப்படி ஒரு கதையை வைத்து ஒரு ஹாலிவூட் படம் வந்திருந்தால், அது நிச்சயம் தோல்வியடைந்திருக்கும். அந்தளவுக்கு அமெரிக்க சாமானியர்களே அந்தக் கட்டுக் கதையை நம்பவில்லை.

அமெரிக்க அணுசக்தி துறையில் வேலை செய்யும் இந்தியர்களே, அணுகுண்டு தயாரிப்பதற்கு தேவையான "சீசியத்தை" களவெடுத்துக் கொடுக்கிறார்கள். "எதற்கும் துணிந்த ஜிகாதிகள் வெறுங் கையால் சீசியத்தை எடுத்து அணுகுண்டு தயாரிப்பது...", இருந்தாலும் கொஞ்சம் ஓவர். அப்படியே தயாரித்தாலும், அது நியூயோர்க் நகரம் முழுவதையும் அழிக்கக் கூடிய சக்தி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. ஒரு நகரம் முழுவதையும் அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்த அணுகுண்டு, உலகிலேயே மிகப்பெரிய பயங்கரவாத இயக்கம் ஒன்றிடம் உள்ளது. அவர்கள் அதனை ஏற்கனவே பாவித்து, பல இலட்சம் மக்களை கொன்றும் இருக்கிறார்கள். 

இன்று வரையிலான உலக வரலாற்றில், அணுகுண்டு போட்டு இலட்சக் கணக்கான மக்களை கொன்ற ஒரேயொரு பயங்கரவாத இயக்கம், அமெரிக்க அரசு தான்.  ஜப்பானில் அமெரிக்க பயங்கரவாதிகள் போட்ட "Dirty Bomb" என்ற அணுகுண்டுகளால், ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு நகரங்கள் முற்றாக அழிந்தன. அந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு இலட்சம் மக்கள் கொல்லப் பட்டனர். விஸ்வரூபம் படத்தில், உலகிலேயே மிகவும் கொடூரமான, சர்வதேச பயங்கரவாத இயக்கமான அமெரிக்க அரசுக்கு சேவை செய்வதில் கமல்ஹாசன் பெருமைப் படுகின்றார். இந்த கேவலமான அடிமைப்  புத்திக்கு, ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் இரசிகர் பட்டாளம் வேறு. 

அணுக் கதிர்வீச்சென்றால் என்னவென்று தெரியாத அமெரிக்க மக்களை நினைத்து, கமல்ஹாசன் உருகுகின்றார். ஆனால், ஏற்கனவே அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப் பட்ட ஆப்கான் மக்களைப் பற்றி, அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. 2001 ம் ஆண்டு, "Operation Enduring  Freedom" என்ற பெயரிலான, ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் போது   Dirty Bombs வீசப் பட்டன. செறிவு குறைந்த யுரேனியம் (Depleted  Uranium) கழிவுகளை கொண்டு தயாரிக்கப் பட்ட குண்டுகள் போடப் பட்டன.  அமெரிக்காவில் அணு ஆலைகளில் வெளியேற்றப் படும் அணுக் கழிவுகளைக் கொண்டு அந்த குண்டுகள் தயாரிக்கப் பட்டுள்ளன.

Depleted Uranium (DU) குண்டுகள், ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, ஈராக், கொசோவோவிலும் போடப் பட்டன. போர் நடந்த காலத்தில் போடப் பட்டாலும், ஆக்கிரமிப்புப் போரின் பின்னர் அந்தப் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும்  அமெரிக்க இராணுவ வீரர்களும் அணுக்கதிர் வீச்சுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட படைவீரர்களின் எண்ணிக்கையே நூற்றுக் கணக்கில் இருக்குமென்றால், பாதிக்கப்பட்ட உள்நாட்டு மக்களின் எண்ணிக்கை எத்தனை ஆயிரம் இருக்கும்? DU குண்டுகள் வெடித்தவுடன், அணுக்கதிர் வீச்சுக்களை மட்டும் பரப்புவதில்லை.

DU குண்டு வெடித்த பின்னர், அது வெள்ளைத் தூளாக மாறி விடும். அந்தத் தூள், நீரோட்டத்தில் கலந்து, நாம் குடிக்கும் நீரினால் உட்கொள்ளப் படலாம். கிருமிநாசினி போல பயிர்களில் சேர்ந்து, நாம் உண்ணும் உணவினால் உடலுக்குள் சேரலாம். காற்றில் கலந்து சுவாசிக்கும் பொழுது உள்ளே செல்லலாம். இதன் மூலம் எமது உடல் அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப் படும். அந்தப் பாதிப்பு வெளித் தெரிய வருடக் கணக்காகலாம். இப்போதும், ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் உடல் குறைபாடுகளை கொண்ட குழந்தைகள் பிறக்கின்றன.

அமெரிக்கர்கள் போட்ட யுரேனியம் செறிவு குறைந்த குண்டுகளால், உடல் ஊனமாகி பிறந்த ஆப்கான் குழந்தைகள். 
இரண்டு தலைகள், நெற்றியில் மூன்றாவது கண், வீங்கிய வயிறு, விகாரமான முகம்....இப்படியான தோற்றமுடைய குழந்தைகள் உங்களுக்கு கிடைத்தால், உங்கள் மனம் எத்தனை வேதனைப் படும்? அந்தக் கொடுமையை எல்லாம் தட்டிக் கேட்பது யார்? குறைந்த பட்சம் கமல்ஹாசனாவது, தனது விஸ்வரூபம் படத்தில் அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப் பட்ட ஆப்கானிய குழந்தைகளை காட்டி இருக்கலாம். இதை எல்லாம், நான் சொல்கிறேன் என்பதற்காக, நீங்கள் நம்பத் தேவையில்லை. மேற்கத்திய ஊடகங்களிலேயே அது பற்றிய செய்திகள் வந்துள்ளன. உங்கள் பார்வைக்காக ஒரு சில உதாரணங்கள்:

In the fall of 2002, the UMRC field team went back to Afghanistan for a broader survey, and revealed a potentially larger exposure than initially anticipated. Approximately 30% of those interviewed in the affected areas displayed symptoms of radiation sickness. New born babies were among those displaying symptoms, with village elders reporting that over 25% of the infants were inexplicably ill. How widespread and extensive is the exposure? 

 A quote from the UMRC field report reads: “The UMRC field team was shocked by the breadth of public health impacts coincident with the bombing. Without exception, at every bombsite investigated, people are ill. A significant portion of the civilian population presents symptoms consistent with internal contamination by uranium.” In Afghanistan, unlike Iraq, UMRC lab results indicated high concentrations of NON-DEPLETED URANIUM, with the concentrations being much higher than in DU victims from Iraq. 

Afghanistan was used as a testing ground for a new generation of “bunker buster” bombs containing high concentrations of other uranium alloys.
(http://www.globalresearch.ca/depleted-uranium-far-worse-than-9-11/2374)

A small sample of Afghan civilians have shown "astonishing" levels of uranium in their urine, an independent scientist says. (http://news.bbc.co.uk/2/hi/science/nature/3050317.stm)

ஆப்கானிஸ்தான் செல்லும் கமல்ஹாசன், அங்கு அமெரிக்காவின் செறிவு குறைந்த அணுகுண்டு (Depleted Uranium)  தாக்குதலால் பாதிக்கப்பட்ட, ஆப்கானிய மக்களை காப்பாற்றுவதாக, திரைக் கதையை அமைத்திருந்தால், விஸ்வரூபம் படத்திற்கு உண்மையிலேயே ஆஸ்கார் விருது கிடைத்திருக்கும். உன்னதமான மனிதாபிமான கதைக்காக, சிறந்த கலைப் படைப்பு என்று, உலக மக்களால்  பேச வைத்திருக்கும். ஆஸ்கார் பரிசு வாங்குவதற்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தையும் தவற விட்டு விட்டீர்களே, கமல்ஹாசன்?

விஸ்வரூபம் திரைப்படத்தில், உண்மையிலேயே "டர்ட்டி பாம்" (Dirty Bomb)  களால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்களை, நட்டாற்றில் கைவிட்டு விட்டு ஓடியதாக   காட்டுவது, ஒரு துரோகமாக தெரியவில்லையா? இந்த துரோகச் செயலை கண்டிக்க வேண்டிய இரசிகர்கள், அதை ஒரு பெரும் சாதனையாக கருதி பாராட்டுகிறார்கள். அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப் பட்ட ஆப்கான் ஏழை மக்களுக்கு உதவாமல், சொகுசாக வாழும் அமெரிக்க பணக்காரர்களை பாதுகாக்க கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு ஓடுகின்றார்.  அடடா... உங்கள் எஜமான விசுவாசத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.  ஏற்கனவே, "எதிரிக்கு காட்டிக் கொடுக்கும் துரோகி" பாத்திரமாக தான், உங்களை நீங்களே படத்தில் சித்தரித்து இருக்கிறீர்கள். உண்மையிலே, அது மிகவும் பொருத்தமான பாத்திரம் தான்.  

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்
2.விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்
3.அமெரிக்கன் வம்பு : தமிழரை தாக்கிய "விஸ்வ சாபம்"

*************************

விஸ்வரூபம் தொடர்பான வேறு பதிவுகள்:
கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"

6 comments:

தமிழ்ச்செல்வி ஜி.ஜே said...

அய்யோ மனம் தவித்து போகிறது

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

இப்பதிவை படிக்கும்போது மனம் வலிக்கிறது.

வீசப்படும் எலும்புத்துண்டுக்காக, பரபரப்பை உண்டாக்கி வசூலிக்கும் வெறும் பிச்சை காசுக்காக, துளியும் மனிதாபிமானமே இல்லாதவர்களை மகாத்மாக்களாக படத்தில் காட்டுவதையும்... அதையும் கருத்து சுதந்திரம் என்று ஆதரிப்பதையும் காணும்போது...
வந்த வலி மீதமிருக்கும் மனிதாபிமானத்தை கொன்று விட துடிக்கிறது..!

Unknown said...

அணுக்கதிர்வீச்சினால் எவ்வளவு பயங்கரமான கொடுமையை அனுபவித்தும், அனுபவித்துக்கொண்டும் இருக்கிறார்கள் ஆப்கான் மற்றும் ஈராக் மக்கள், படிக்கும் போதே மனது பதறுகிறது ஐயா...

Unknown said...

நேர்மையுள்ள எந்தவொரு மனிதனும், தன்வீட்டிற்க்குள் வெடிகுண்டு வைக்கமாட்டான், இன்று இந்தப் படத்தின் மூலம், தமிழ்நாட்டில் இந்துவும் முஸ்லிமும், முரண்பட்டும், சகோதரத்துவம் கெட்டும், வாழவோ, எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்குறியாகிவிட்டது.

இப்படி எந்தவொரு ஆராய்ச்சியுமற்ற, தான் நினைப்பதே என்றும் சரியானது என்ற மமதையில் படமெடுக்கும், வியாபாரி, தான் ஒரு கலைஞன் என்றும், கலைக்காக எதையும் செய்வேனென்றும், சினிமா என்ற கவர்ச்சிகரமான ஆயுதத்தால், இலங்கைத்தமிழனை எள்ளிநகையாடிய, தெனாலி, குருதிப்புனல், போன்ற ஒற்றைப் போக்கான, முற்றிலும் தவறான கருத்துக்களை மக்களிடையே பகிர்ந்ததையும், அவற்றிலிருந்த விஷம் தெரியாமலோ, அதை அமுதென்று கருதியோ, இலங்கைத்தமிழர்களே கொண்டாடிய அவலத்தையும் பார்த்தவன் நான், இந்தமாதிரிப் படைப்புகளை நிறுத்த என்ன முயற்ச்சி செய்ய வேண்டுமென்று புரியாமல் மறுகுகின்றேன்.
கமலிடம் - உங்கள் கபடநாடகம் புரியாத பலரில் நின்று விலகி, உங்கள் சுயரூபம் தெள்ளென விளங்கிய ஒருகூட்டமும் இங்குண்டு.
இவர்கள் விமர்சனத்தை கருத்தில்க் கொண்டால், படம் பார்க்கும் அனைவரும் முட்டாள் என எண்ணமாட்டீர், பொய்வேஷம் போடமாட்டீர், உம்தொளிலை நேர்மையுடன் செய்யுமையா, நீர் மகாத்மா அல்ல, பாரதியுமல்ல, ஏன் பகுத்தறிவாளனுமல்ல, ஒரு வியாபாரக்கூத்தாடி,ஆனால் பாரதி, மகாத்மா என்ற முகமூடியின் பின்னால்.
நீர் பணம்பண்ணக் கதைகள் பலவுள்ளதைய்யா, உன் படடப் பெயரும் உலக நாயகன், அந்தக் கவர்ச்சி போதும் பலர் பிற்ப்பாட்டுப்பாட, ஆனால் மற்றவர் மனங்களையும், உணர்வுகளையும், காயப்படுத்தி அவர்களுயிர்களோடு விளையாடும் இந்த செயல்தான், நீர் உமது மகாநதியில் காட்டிய விபச்சாரத்தை விடக் கொடியது.
இனியாவது உண்மை விமரிசனத்தை காதேற்றி, ஆராய்ந்து படம் பண்ணும், உம்பின் இருக்கும் மந்தைகளிற்க்காகத்தான் படம் பண்ணுவேன் என்பீராகில், வியாபாரக்கூத்தாடியென்ற பெயரில் அதைச் செய்யும், வேண்டாம் சமூக அக்கறைப் போர்வை........

shaji said...

சொல்ல வார்த்தைகள் இல்லை ... மனம் கனக்கிறது.

shaji said...

சொல்ல வார்த்தைகள் இல்லை ... மனம் கனக்கிறது.