Thursday, March 01, 2012

உங்கள் ஐ-போனில் மரண ஓலம் கேட்கிறதா?

iPhone, iPad பயன்படுத்தும் நண்பர்களுக்கு! உங்களது அபிமான மின் சாதனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில், எத்தனை தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று தெரியுமா?(Foxconn Suicides) ஓய்வில்லாத வேலை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தொழிலாளர்கள் மாடியில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்கிறார்கள் என்பதற்காக, கட்டிடத்தை சுற்றி வலை கட்டி இருக்கிறார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை தயாரிக்கும், சீன நிறுவனமான Foxconn தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்குகின்றது. iPhone, iPod விற்பனை காரணமாக ஆப்பிள் நிறுவனம் பல கோடி டாலர்கள் இலாபம் சம்பாதிக்கின்றது. கடந்த வருட காலாண்டுக் கணக்கின் படி, அந்த நிறுவனம் 41 % இலாபம் சம்பாதித்துள்ளது ($100 billion in cash). ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் இமாலய சாதனைக்குப் பின்னால், பல இலட்சம் தொழிலாளர்களின் அவலம் மறைந்துள்ளது.

Foxconn, சீனாவில் முதலிட்டுள்ள தைவான் முதலாளியின் நிறுவனம். ஆப்பிள் கம்பனியின் மிகப் பெரிய விநியோகஸ்தர். ஒரு மில்லியன் தொழிலாளர்கள் அங்கே வேலை செய்கின்றனர். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் எல்லோரும், தொழிற்சாலை கட்டியுள்ள முகாம் போன்ற மண்டபங்களில் தங்க வேண்டும். அதிகாலையில் எழும் தொழிலாளி, ஒரு நாளைக்கு 12 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும். வாரத்திற்கு ஆறு நாட்களும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுவர். தொழிலகத்தில் காற்றோட்ட வசதி இல்லாத காரணத்தால், வெடி விபத்துகள் நேர்ந்துள்ளன. ஒரே வேலையை நாள் முழுவதும் செய்வதால், தொழிலாளர்களின் உடல் பாகங்கள் செயலிழந்து விடுகின்றன. ஆபத்தான மின்னணுக் கருவிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் வெடி விபத்து காரணமாக, அல்லது ஓய்வில்லாத உழைப்பினால் சோர்வுற்ற தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே மரணமடைந்துள்ளனர். சீனத் தொழிலாளர்களின் அவலம், அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு தெரியாத விடயமல்ல. மிகக் குறைந்த உற்பத்திச் செலவு, மிகக் கூடிய விற்பனை விலை, இவற்றிற்கு இடையில் ஆப்பிளின் இலாபம் மறைந்துள்ளது. இன்னொரு விதமாக சொன்னால், ஆப்பிள் ஒரே நேரத்தில், சீனத் தொழிலாளர்களின் உழைப்பையும், உலகப் பாவனையாளர்களின் உழைப்பையும் சுரண்டி இலாபம் சம்பாதித்து வருகின்றது.

Foxconn Suicides
Foxconn Worker Dies in the Bath After Working 60 Hours a Week
முதன் முதலாக, அவுஸ்திரேலியா தொலைக்காட்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், Foxconn நிறுவனத்தின் உள்ளே சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார். பல தொழிலாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் தயாரித்த ஆவணப்படம் கீழே:


2 comments:

அ. வேல்முருகன் said...

100 பில்லியனில் 7.5% ஈவுத் தொகையாக கொடுத்துவிட்டு மீதம் என்ன செய்யப்போகிறார்கள்

சுருதிரவி..... said...

உங்கள் வலைப்பக்கத்திற்கு வரும்போது சில சமயங்களில் ஐ போன் விளம்பரப்பக்கங்கள்(இதில் நீங்கள் வருமானமீட்டுகிறீர்களோ தெரியாது,ஆனாலும்) தானாகவே திறந்து கொள்கிறது. இப்போது உலகமே எதிலும் வருவாயையே எதிர்பாக்கிறது. யார் மரண ஓலமும் யார் காதிலும் விழுவதேயில்லை. நாம் நம் மட்டிலுமேனும் யாருக்கேனும் தீங்கு செய்யாதிருக்க முயலுவோம்...