Wednesday, March 21, 2012

அமெரிக்க வெள்ளைக் கடவுளும், நானூறு குழந்தைப் போராளிகளும்

உலக வரலாற்றில், முன்னொருபோதும் இடம்பெறாத பிரச்சாரம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. "Kony 2012" என்ற பெயரில், வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களின் ஊடாகக பரப்பப் படுகின்றது. ஓரிரு நாட்களில், இலட்சக்கணக்கான மக்கள் அதனைப் பார்வையிட்டுள்ளனர். மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, போர்ச் சூழலில் இருந்து உகண்டா நாட்டு சிறுவர்களை காப்பாற்றுவதற்கான மனிதநேய நடவடிக்கையாக தோன்றலாம். Invisible Children என்ற அமெரிக்க தொண்டு நிறுவனம், இந்த வீடியோவை தயாரித்துள்ளது. "மனிதநேயப் பணிகளில் ஈடுபடும், அரசு சாராத நிறுவனங்கள்" என்று வகைப் படுத்தப் படும் நிறுவனங்களில் அதுவும் ஒன்று. உலகம் எட்டியும் பார்க்காத ஆப்பிரிக்க நாடான உகண்டாவின் வடக்குப் பகுதியில், ஆயுதமேந்த கட்டாயப் படுத்தப்பட்ட சிறுவர்கள் குறித்து கவலைப் படுகின்றது. இன்விசிபில் சில்ட்ரன் நிறுவன ஸ்தாபகர் ரஸ்ஸல், தனது குழந்தைப் பருவ மகனின் பார்வையில் பிரச்சினையை எமக்குச் சொல்கின்றார். மிகவும் தத்ரூபமாக பின்னப்பட்ட திரைக்கதை. நேர்த்தியான படத்தொகுப்பு. பார்வையாளரை வசியப்படுத்தும் வகையில் எடுக்கப் பட்டுள்ளது. நிச்சயமாக, அதிக பணச் செலவு செய்யப்பட்டிருப்பது தெரிகின்றது.

சர்வதேச நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜோசெப் கோனி பற்றியும், அவரது LRA என்ற இயக்கத்தின் அடாவடித்தனங்கள் குறித்தும், உலகில் யாரும் அறிந்திருக்கவில்லை என்றொரு முத்தாய்ப்புடன் படம் தொங்குகிறது. முதலில், LRA என்றால் என்ன அர்த்தம் என்று கூறுகின்றார்களா? இல்லை. Lord 's Resistance Army , அதாவது "கர்த்தரின் புரட்சிப் படை" என்று அர்த்தம். அப்படியானால், அது ஒரு கிறிஸ்தவ மதவாத இயக்கமா? ஆமாம், அந்த இயக்கத்தின் கொள்கைப் பரப்பாளர்கள் அப்படித் தான் கூறி வருகின்றனர். விவிலிய நூலில் எழுதப்பட்ட, ஆண்டவரால் மோசசுக்கு அருளப்பட்ட, பத்துக் கட்டளைகள் என்ற மத விதிகளைக் கொண்ட தேசத்தை உருவாக்குவதற்காக போராடுவதாக சொல்லிக் கொள்கின்றனர். இந்த விபரங்கள் எல்லாம் அந்த வீடியோவில் மறைக்கப் படுகின்றன. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மை கிறிஸ்தவர்களின் "மனது புண் படக் கூடாது" என்ற "நல்லெண்ணம்" காரணமாக இருக்கலாம்! இதுவே ஒரு இஸ்லாமிய மதவாத அமைப்பாக இருந்திருந்தால், "அல்கைதா", "இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள்" போன்ற சொற்கள், அந்த வீடியோவில் குறைந்தது பத்து தடவைகள் ஆவது வந்திருக்கும்.

உலகில் எல்லாவற்றையும் கறுப்பு, வெள்ளையாக பிரித்தறிய முடியாது. "இஸ்லாமிய மத அடிப்படைவாத" தாலிபான்களின் கொள்கையில் பெருமளவு ஆப்கானிய பழமைவாத நம்பிக்கைகள் கலந்திருந்தன. அதே போன்று, ஜோசெப் கோனியின் LRA வெறும் கிறிஸ்தவ மத அடிப்படைவாத இயக்கமல்ல. கிறிஸ்தவத்தின் வருகைக்கு முன்பிருந்த, புராதன மதப் பழக்கவழக்கங்கள் பெருமளவு காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, LRA போராளிகள் விசேட மூலிகை எண்ணெய் ஒன்றை பூசிக் கொண்டால், தோட்டாக்களில் இருந்து தப்பலாம் என்று நம்பினார்கள். ஆரம்பத்தில், உகண்டாவின் வட மாநிலத்தில் வாழும், அச்சோலி மக்களின் மரபு வழி நம்பிக்கையுடன், கிறிஸ்தவ போதனைகளை கலந்த ஆன்மீக அமைப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில், உகண்டா இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் விட்டு விலகிய படையினர் சிலரின் உதவியுடன், ஜோசெப் கோனி LRA அமைப்பை உருவாக்கினார். Kony 2012 வீடியோ தயாரித்த, தொண்டு நிறுவனத்தின் கூற்றுப் படி, "LRA எந்த வித கொள்கையுமற்ற பயங்கரவாத கிரிமினல் இயக்கம்." எமக்குப் பிடிக்காத எந்த இயக்கத்திற்கும், அவ்வாறான வியாக்கியானம் கொடுக்கலாம்.

மரபு சார்ந்த மத நம்பிக்கை, கிறிஸ்தவ இறையியல், இவை தவிர அச்சோலி தேசியவாதமும் LRA இயக்கத்தின் மையக்கருவாக உள்ளன. LRA இயக்கத்தின் ஆதரவுத் தளம், அச்சோலி தேசியவாதத்தின் மீது தான் கட்டமைக்கப் பட்டது. அதன் போராளிகள், ஆதரவாளர்கள் எல்லாம் அச்சோலி மொழி பேசும் மக்கள் தான். ஆனால், அதே நேரம், LRA இயக்கம், தனது சொந்த இனத்தில் இருந்து தான் சிறுவர்களை கடத்திச் சென்று போராளிகளாக மாற்றுகின்றது. (இதுவரை 25000 சிறுவர்களை கடத்திச் சென்றதாக நம்பப் படுகின்றது.) சில சமயம், பலவந்தமாக ஆயுதமேந்த வைக்கப்பட்ட சிறுவர்கள், தமது உறவினர்களை கொலை செய்வதற்கும் நிர்ப்பந்திக்கப் பட்டனர். LRA யின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள், சொந்த இனத்தை சேர்ந்தவர்களாயினும், ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப் பட்டனர். இவற்றைத் தான், Kony 2012 வீடியோ, "கிரிமினல் குற்றங்களாக" வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இதே பாணியில், உலகில் உள்ள எல்லா ஆயுதபாணி இயக்கங்களையும் கிரிமினல் மயப் படுத்தலாம். அந்த வீடியோ காட்டாத இன்னொரு பக்கமும் உண்டு. உகண்டா தேசிய இராணுவத்தின் இன ஒடுக்குமுறை குறித்து பேசவில்லை. குறிப்பாக, LRA நடமாட்டம் அதிகமாகவுள்ள கூளு (Gulu) மாவட்டத்தில் நடந்த இராணுவ வெறியாட்டத்திற்கு ஆயிரக் கணக்கானோர் பலியானார்கள். உகண்டா தேசிய இராணுவமும், தனது படையணிகளில் சிறார் போராளிகளை சேர்த்துள்ளது.

இலங்கை போன்று, உகண்டாவும் இனப்பிரச்சினையால் பிளவுண்ட நாடு. சில சமயம், அதிசயப் படத்தக்க ஒற்றுமைகள், இரு நாடுகளின் இனப்பிரச்சினையிலும் காணப் படுகின்றன. இரண்டுமே ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனிகளாக இருந்தவை தான். இன்றைய உகண்டாவில், பகண்டா மொழி பேசும் மக்களின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்திற்கு முன்பிருந்த, பகண்டா இராசதானியின் பெருமை, அந்த இன மக்களால் இன்றைக்கும் பேசப்படுகின்றது. (இன்றைக்கு மன்னர் பரம்பரையினர், அரசுரிமை இழந்த போதிலும் இந்திய மகாராஜாக்கள் போன்று வாழ்கின்றனர்.) பகண்டா இன மக்கள் விவசாய சமூகமாக வாழ்ந்தவர்கள். இதற்கு மாறாக, வடக்கத்திய அச்சோலி மக்கள் தனித்துவமான சரித்திரப் பின்னணியைக் கொண்டவர்கள். அச்சோலி பிரதேசம் பல சிற்றரசர்களால் ஆளப்பட்டது. ஆனால், அரபு வணிகர்களுடன் ஏற்பட்ட வர்த்தகத் தொடர்பு காரணமாக, தெற்கத்திய பகண்டா மக்களை விட மேன் நிலையில் இருப்பதாக கருதிக் கொண்டனர். அன்றைய காலத்து சர்வதேச மொழியான ஸ்வாஹிலி பேசக் கற்றுக் கொண்டனர். (நமது காலத்தில் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்துடன் ஒப்பிடுக)

பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தில் நிலைமை மாறியது. பகண்டா இராசதானியின் சிறப்பு, நாகரிக வளர்ச்சி பற்றி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் புகழ்ந்து தள்ளினார்கள். அதுவே பிற்காலத்தில் கம்பாலாவை மையமாக கொண்ட ஆளும்வர்க்கத்தின் பகண்டா தேசியவாத உணர்வையும் தூண்டி விட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் , சுதந்திரமடைந்த பின்னர் ஜனாதிபதியான ஒபேட்டே சோஷலிசம் பேசியதும், அந்நிய நிறுவனங்களை தேசியமயமாக்கும் நடவடிக்கையும் பிரிட்டனுக்கு எரிச்சல் ஊட்டி இருக்கலாம். இஸ்ரேலின் உதவியுடன் இடி அமின் ஆட்சியைக் கைப்பற்றினார். தான்சானியாவில் தளமைத்திருந்த ஒபெட்டோவின் படைகள், பின்னர் இடி அமினை விரட்டின. கடைசியாக, முசேவெனியின் கிளர்ச்சிப் படைகள் ஆட்சியைக் கைப்பற்றின. இடி அமின், ஒபேட்டோ, முசேவெனி எல்லோரும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் தான். இந்தக் குழப்பகரமான காலகட்டத்தில், இராணுவத்தினுள் அச்சோலி இன வீரர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு போனது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில், பெருமளவு அச்சோலி போர்வீரர்கள் இராணுவத்தில் சேர்ந்து இருந்தனர். கடைசியாக நடந்த இராணுவ சதிப்புரட்சியின் தளபதி ஒகேலோ, ஒரு அச்சோலி இனத்தவர்.

இன்றைய ஜனாதிபதி முசேவெனி, ஒகேலோவின் ஆட்சிக்கு எதிராகத் தான் கிளர்ச்சி செய்தார். (இன்று ஒகேலோவின் குடும்பத்தினர் அரசோடு ஒத்துழைக்கின்றனர். LRA அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.) கடந்த பல தசாப்தங்களாக, இராணுவத்தில் மட்டுமல்லாது, அரச பதவிகளில் இருந்தும் அச்சோலி மக்கள் ஓரங்கட்டப் பட்டனர். இடி அமினின் சர்வாதிகார ஆட்சியில், இலட்சக் கணக்கான அச்சோலி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இடி அமின் பிரிட்டிஷ் மகாராணியுடன் பக்கிங்க்ஹாம் மாளிகையில் விருந்துண்டு மகிழ்ந்த அதே நேரத்தில், நூற்றுக் கணக்கான அச்சொலி படையினரின் இறந்த உடல்கள் நைல் நதியில் வீசப்பட்டன. இடி அமினின் கொடூரமான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று. இன்றைய முசேவெனி அரசும், அச்சோலி மக்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து விட்டு, அவர்களது வாழிடங்களை அபகரித்து வருகின்றது. இது போன்ற அரச ஒடுக்குமுறைகளை காரணங்களாக காட்டி, அச்சோலி மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாக, LRA கூறிக் கொள்கின்றது.

"ஒரு கிரிமினலான கோனி, மற்றும் LRA பற்றி உலகில் யாருக்கும் தெரியாது?" அது தான் பிரச்சினை என்பது, வீடியோவை தயாரித்தவர்களின் கண்டுபிடிப்பு. ஐயா, கனவான்களே, உலகில் நடக்கும் எத்தனையோ போர்கள் ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதில்லை. அதிலும், அமெரிக்க ஊடகங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அமெரிக்காவின் உள்நாட்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் அவரகள் கவனம் செலுத்துவதில்லை. ஓரளவு உலக நடப்புகளில் அக்கறை கொண்ட ஐரோப்பிய தினசரிகள், LRA குறித்த தகவல்களை வெளியிட்டு வந்துள்ளன. ஒரு தடவை நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் விரிவாகக் காட்டினார்கள்.

என்ன இருந்தாலும், எந்தெந்த நாடுகளில் அமெரிக்க அரசுக்கு அன்பு பெருக்கெடுக்கிறதோ, அதை தானே உலகம் முழுவதும் பேச வேண்டும்? அந்த வகையில், அமெரிக்க ஆண்டவரின் கடைக்கண் பார்வை தற்பொழுது உகண்டா பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே உகண்டாவை ஆளும் முசேவெனி அரசுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நெருங்கிய உறவு இருந்து வருகின்றது. முசேவெனி மட்டுமல்ல, ருவாண்டாவின் ககாமே கூட அமெரிக்காவின் நம்பிக்கைக்கு உரிய ஆப்பிரிக்க கூட்டாளி தான். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், அயல்நாடான கொங்கோவினுள் படைகளை அனுப்பினார்கள். வைரம், மற்றும் கொல்த்தான் போன்ற கனிம வளங்களைக் கொள்ளையடித்தார்கள். அதற்காக ஆயிரக்கணக்கான அப்பாவி கொங்கோலியர்களை படுகொலை செய்தார்கள். இந்த விபரம் எல்லாம், ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்றில் விரிவாக எழுதப் பட்டுள்ளது. இருந்தாலும், உகண்டா இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்கும், ஆயுத விநியோகம் செய்யவும் அமெரிக்கா ஒரு போதும் பின் நின்றதில்லை.

Kony 2012 வீடியோவை விமர்சிக்கும் ஆப்பிரிக்க புத்திஜீவிகள், அது "வெள்ளையரின் காலனிய கால மனோபாவத்தை காட்டுவதாக" கூறுகின்றனர். அதாவது, "ஆப்பிரிக்காவின் பிரச்சினைகளுக்கு ஆப்பிரிக்கர்களால் தீர்வு காண முடியாது. அதற்கு மேலைத்தேய நாட்டவரின் தலையீடு அவசியம்." என்பதையே மறைமுகமாக தெரிவிக்கின்றது. "ஆப்பிரிக்கர்களுக்கு நாகரீகம் சொல்லிக் கொடுப்பது வெள்ளையின கனவான்களின் கடமை." என்ற வெள்ளை இனவாதத் திமிர் இன்னமும் மறையவில்லை. இரு வருடங்களுக்கு முன்னர், உகண்டா அரசும், LRA யும் பேச்சுவார்த்தை நடத்தின. அதனால் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன. LRA போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டமும் குறிப்பிடத்தக்களவு பலனைக் கொடுத்துள்ளது. அந்தப் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கான அழுத்தம் கொடுப்பதைப் பற்றி, Kony 2012 வீடியோ பேசவில்லலை. மாறாக இராணுவ நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகின்றது! அதிக பட்சம் இருபதாயிரம் போராளிகளைக் (உண்மையான எண்ணிக்கை அதை விடக் குறைவாக இருக்கலாம்.) கொண்ட இயக்கத்தை பிடித்து அழிப்பதற்கு, அமெரிக்கப் படைகளை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? போரில் ஈடுபடும் மறு தரப்பான உகண்டா அரசுடன் ஒத்துழைப்பது சரியாகுமா? இவை எல்லாவற்றையும், நாம் ஏற்கனவே ஈழப் போரில் பார்த்து விட்டோம். ஏகாதிபத்தியம் தயாரித்த துன்பியல் நாடகம், இன்று வேறொரு மேடையில் அரங்கேறுகின்றது. நடிகர்கள் மட்டுமே மாறியிருக்கின்றனர். கதை ஒன்று தான்.

26 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒரு போராட்டம், அமெரிக்க அரசின் கண்களுக்கு இப்பொழுது தான் தெரிந்ததாம்! அதுவும் "இன்விசிபில் சில்ட்ரன்" என்ற, தொண்டு நிறுவனத்தின் பிரச்சாரத்தின் விளைவாக? எமது காதில் நன்றாகத் தான் பூச் சுற்றுகிறார்கள். இதிலே வேடிக்கை என்னவென்றால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் கிரிமினலான ஜோசெப் கோனி, இப்பொழுது எங்கே இருக்கிறார் என்ற விடயம் யாருக்கும் தெரியாது. ஜோசெப் கோனி உகண்டாவில் இல்லையென்றும், சில வருடங்களுக்கு முன்னர், அயல்நாடான மத்திய ஆப்பிரிக்க குடியரசில் காணப்பட்டதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது. இன்னும் சிலர், அவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்று நம்புகின்றனர். பின்லாடனை பிடிக்கப் போன கதை போலத்தான் இதுவும் அமையப் போகின்றது. 2011 ம் ஆண்டே, நூறுக்கும் குறையாத அமெரிக்க சிறப்புப் படையினர், உகண்டாவில் வந்திறங்கி விட்டனர். "கோனி பிடிக்கும் போரில்", உகண்டா இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கின்றனர். மேலதிக துருப்புகளை அனுப்பி அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை நியாயப் படுத்தும் நோக்குடன், Kony 2012 வீடியோ தயாரிக்கப் பட்டிருக்கலாம். ஒரு நாட்டில், அமெரிக்கப் படையினரின் பிரசன்னம் அதிகரிக்கின்றது என்றால், பின்னணியில் ஏதாவது பொருளாதாரக் காரணிகள் இருக்குமே? உகண்டாவில் எண்ணெய் விளைகின்றதா?

நான்கு வருடங்களுக்கு முன்னர், உகண்டாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப் பட்டது! கிரிமினல் கோனியும், LRA யின் சிறார் போராளிகளும் உலாவும் வட-மேற்குப் பகுதியில், கொங்கோ எல்லைக்கு அருகில், எண்ணை வயல்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அகழ்வு வேலைகள் முழு மூச்சுடன் தொடங்கப் பட்டால், நாளொன்றுக்கு இரண்டு இலட்சம் பீப்பாய் எண்ணை உற்பத்தி செய்யலாம். எண்ணெய் கண்டுபிடித்த நாளில் இருந்து, பல வெளிநாட்டுக் கம்பனிகள் போட்டி போடுகின்றன. அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், சீனர்கள் என்று பலர் வந்து போகின்றனர். உகண்டா எண்ணையில் முதலிட பலர் முன்வந்தாலும், அதனை சுத்திகரிப்பதற்கு அதிக செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. அதனால், எண்ணை உற்பத்தி இன்னமும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. ஏற்கனவே சூடானில் நடந்ததைப் போல, சீனர்களை விரட்டி விட்டு, உகண்டா எண்ணைக்கு ஏகபோக உரிமை கொண்டாடும் எண்ணம் அமெரிக்கக் கம்பனிகளுக்கு இருக்கலாம்.

Kony 2012 வீடியோ தயாரித்த இன்விசிபில் சில்ட்ரன் என்ற தொண்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் ஒழுங்காக பராமரிக்கப் படுவதில்லை. அந்த நிறுவனம், தனக்கு நிதி கொடுக்கும் புரவலர்கள் யார், என்ற விபரங்களை மறைத்து வருகின்றது. பாடசாலை/கல்லூரி மாணவர்கள் கொடுக்கும் நன்கொடைக்கு மட்டுமே கணக்கு காட்டுகின்றது. உண்மையில், இந்த தொண்டு நிறுவனத்திற்கு அமெரிக்க எண்ணெய்க் கம்பனிகள் நிதி வழங்குவதாக எழும் சந்தேகங்களை மறுக்க முடியாது. மேலும், நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் வெறும் 31 % மட்டுமே, தொண்டு வேலைகளுக்காக செலவிடப் படுகின்றது. மிகுதித் தொகை, முகாமையாளர்களின் ஊதியத்திற்கும், பிரயாணத்திற்கும் செலவிடப் படுகின்றது. இந்த விபரம் எல்லாம், இன்விசிபில் சில்ட்ரன் நிறுவனத்தின் கடந்த வருட ஆண்டறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளவை.

கோனி பற்றியும், LRA பற்றியும், இன்விசிபில் சில்ட்ரன் தனது பிரச்சார வீடியோவில் கொடுக்கும் தகவல்களும் சர்ச்சைக்கு உரியவை. 2006 ம் ஆண்டில் இருந்து LRA தாக்குதல்கள் பெருமளவு குறைந்து விட்டன. அந்த இயக்கப் போராளிகளின் எண்ணிக்கை, சில நூறுகளாக குறைந்திருக்கலாம் எனவும், உகண்டாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் LRA நடமாட்டம் இருப்பதாக, வீடியோவில் குறிப்பிடப்படும் இடமும் சர்ச்சைக்கு உரியது. வட-மேற்கு உகண்டாவில், கொங்கோ, மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசுகளை அண்மித்த எல்லையோர மாவட்டத்தின் பெயர் குறிப்பிடப் படுகின்றது. அந்தத் தகவல் சொல்ல வரும் செய்தி என்னவெனில், உகண்டாவில் மட்டுமல்லாது, அயல் நாடுகளிலும் கோனியும், LRA யும் மறைந்திருக்கலாம். அமெரிக்க இராணுவம் அந்த நாடுகளுக்கும் செல்ல வேண்டும். குறிப்பாக, கொங்கோவின் கனிம வளங்கள் மீது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த வழி திறந்து விடுகின்றது. "பின்லாடன் வேட்டை" போன்று, "கோனி வேட்டை" பல வருடங்கள் இழுத்துக் கொண்டே போகும். இன்னும் பத்து வருடங்கள் சென்றாலும், அமெரிக்கப் படையினர் கோனியை கண்டுபிடிக்கப் போவதில்லை. அது அவர்களது நோக்கமும் அல்ல. சர்வதேச நீதிமன்றம் ஆணையிட்ட கிரிமினலை தேடுவதாக சொல்லிக் கொண்டு காலம் கடத்தப் போகிறார்கள். அந்த கால அவகாசத்தை பயன்படுத்தி, அமெரிக்க பெரு நிறுவனங்கள் ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்களை சூறையாடப் போகின்றன.**********************************
மேலதிக தகவல்களுக்கு:

3 comments:

ஆர்வா said...

ஆழமான எழுத்துக்கள்... மிக உபயோகமான பதிவு...தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...


நட்புடன்
கவிதை காதலன்

வலையுகம் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே பல விடயங்களை அறிந்து கொண்டேன்

உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக படித்து படித்து நானும் உங்கள் பாணியில் எழுத ஆரம்பித்து விட்டேன் என்று நினைக்கிறேன்

Kalaiyarasan said...

பாராட்டுக்கு நன்றி நண்பர்களே,
உங்களைப் போன்ற அருமையான வாசகர்கள் கிடைத்ததால் எனக்கும் பெருமை.