Monday, February 14, 2011

பாட்டாளிகளின் போராட்டத்தை முறியடித்த எகிப்திய இராணுவம்

எகிப்தில் "முபாரக் இல்லாத முபாரக் ஆட்சி" தொடர்கின்றது. எதிர்பார்த்ததைப் போல "ஆள்பவரை மாற்றினால் போதும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்." என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். எகிப்தின் ஆட்சியை முபாரக் என்ற ஒற்றை சர்வாதிகாரியிடம் இருந்து, இராணுவ சர்வாதிகாரம் பொறுப்பெடுத்துள்ளது. இராணுவ தலைமையகம் இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. மக்கள் இராணுவத்தை நம்புவதாகவும், இராணுவம் மக்களை நம்புவதாகவும் ஊடகங்கள் எம்மை ஆறுதலடைய வைக்கின்றன. அரை மில்லியன் படையினரைக் கொண்ட எகிப்திய இராணுவம் ஆப்பிரிக்க கண்டத்தில் பெரியது. இதே இராணுவம் தான் அமெரிக்காவிடம் இருந்து வருடாந்தம் 1 .3 பில்லியன் டாலர் உதவியைப் பெற்று வீங்கிக் கொண்டிருந்தது. மேற்கத்திய நாடுகள் பல இதே இராணுவத்திற்கு தான் தமது ஆயுத தளபாடங்களை விற்று காசாக்கிக் கொண்டிருந்தன. இதே இராணுவம் தான் இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு, காசா எல்லையை மூடி பாலஸ்தீனர்களை பட்டினி போட்டது. இப்போது இராணுவம் கூறுகின்றது: "நம்புங்கள், ஆறு மாதத்தில் ஜனநாயகம் நிச்சயம்." முபாரக் கூட இராணுவத்தின் உதவியுடன் தான் ஆட்சிக்கு வந்தார். ஒரு தடவை சிம்மாசனத்தில் அமர்ந்ததவுடன் நகர மறுத்து, தனக்கென தனியாக கட்சி ஒன்றையும் உருவாக்கி கேலிக்குரிய தேர்தல்களை நடத்தினார். நாளை, இன்னொரு முபாரக் வர மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?

முபாரக்கின் பதவி விலகலை வான வேடிக்கையுடன் கொண்டாடி விட்டு கலைந்து செல்கின்றது மக்கள் கூட்டம். "இறுதியில் வெற்றி கிடைத்து விட்டது. இனி எல்லோரும் வேலைக்குப் போவோம். புதியதொரு எகிப்தை உருவாக்குவோம். எகிப்தியர்கள் கடின உழைப்பாளிகள் என்று நிரூபிப்போம்." யார் சொல்கிறார்கள்? ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கம் சொல்கின்றது. கெய்ரோ நகரில் சில மேட்டுக்குடி இளைஞர்கள் கூட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். எல்லோருக்கும் முபாரக் பதவி விலகுவது தேவைப்பட்டது. அரசை மாற்றுவதல்லை, அரசாங்கத்தை மாற்றுவது மட்டுமே அவர்கள் இலட்சியம். மக்கள் எழுச்சிக்கு இணையத்தைப் பயன்படுத்தியவர்களும் மத்திய தர வர்க்க இளைஞர்கள் தான். ஒரு வறிய நாடான எகிப்தில் வசதிபடைத்த சிறுபான்மை மட்டுமே இணையத்தை பாவிக்கின்றது. "இணையப் புரட்சியாளர்கள்" எல்லோரும் இடதுசாரிகளல்ல. தமிழ் இணைய உலகில் தமிழ் இனவுணர்வாளர்களின் ஆதிக்கம் நிலவுவதைப் போல, அரபு இணைய உலகில் அரபு இனவுணர்வாளர்களின் ஆதிக்கம் நிலவுகின்றது. இவர்களின் அதிகபட்சக் கோரிக்கை ஜனநாயாக வழியில் ஆள்பவரை மாற்றுவதாகவே இருக்கும். இவர்கள் வர்க்கப் போராட்டத்தை கூட தேசிய இன எழுச்சியாக திசைதிருப்பும் வல்லமை கொண்டவர்கள்.

எகிப்தில் வர்க்கப் போராட்டம் நடந்ததா? எங்கே? எப்போது? கடந்த இரண்டு வருடங்களாக எகிப்திய உழைக்கும் வர்க்கம் தனது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில் குதித்தனர். எகிப்தின் பொருளாதாரமே ஸ்தம்பிதம் அடையும் நேரத்தில் தான், நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்த ஆர்ப்பாட்டங்கள் வந்தன. ஒரு வகையில் "முதலாளிகளின் வேலைநிறுத்தம்" என்றும் குறிப்பிடலாம். வாரக்கணக்கில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் விரட்டியது. பங்குச்சந்தை இழுத்து மூடப்பட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இவற்றை தாங்கிக் கொள்வது? முபாரக்கை பதவி விலக வைத்து, ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, வழமை போல வியாபாரத்தைக் கவனிக்க வேண்டாமா? எகிப்தில் மக்கள் எழுச்சியை தூண்டி விட்ட சர்வதேச சர்வாதிகாரிகள் முபாரக்கின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்டனர். ஐ.எம்.எப்.பின் பிழையான ஆலோசனைகள், சர்வதேச சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை ஏற்றி விட்ட சூதாடிகளின் பகற்கொள்ளை ஆகியன இனிமேல் யாருக்கும் தெரிய வராது. "முபாரக் தான் இப்போது இல்லையே? இனி என்ன பிரச்சினை? ஒழுங்காக வேலையைக் கவனியுங்கள்."

கடந்த சில நாட்களாக சர்வதேச தொலைக்காட்சிக் கமெராக்கள் கவனத்தைக் குவிப்பதற்கு முன்னர், கெய்ரோ ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பத்தில் கலந்து கொண்டவர்கள் இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிகள். ஊடகங்கள் அவர்களை "மக்கள்", "ஆர்ப்பாட்டக்காரர்கள்" என்ற அடைமொழிகளால் மட்டும் குறிப்பிட்டு வந்தன. உழைக்கும் மக்களின் வர்க்கக் கோரிக்கைகளை தேசியவாத சக்திகள் உள்வாங்கிக் கொண்டன. அதன் பிறகு தான் உலகின் கவனம் தாஹிர் சதுக்கம் மீது திரும்புகின்றது. "மக்களுக்கு வயிற்றை விட மத உணர்வு முக்கியம்" என்று கூறித் திரிந்த முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மிகத் தாமதமாகத் தான் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டது. உடனே அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி ஏற்படப் போகின்றது என்று கூப்பாடு போட்டன. ஆர்ப்பாட்டங்களில் மத்தியதர வர்க்க இளைஞர்கள் கலந்து கொண்ட பின்னர், "முபாரக் பதவி விலக வேண்டும்" கோரிக்கை மேலெழுகின்றது. பல நாட்களாக ஆர்ப்பாட்டக்காரரின் கோரிக்கைகளுக்கு முபாரக் செவி சாய்க்காத நிலையில், எதிர்ப்பு இயக்கம் திசை வழி தெரியாது தடுமாறியது. ஆனால் தடுமாறியது தேசியவாத சக்திகள் தான். களைத்துப் போனது மத்தியதர வர்க்கம் தான். உழைக்கும் வர்க்கம் இன்றைக்கும் அங்கே போராட்டத்தை தொடர்கின்றது.

கெய்ரோவின் தாஹிர் சதுக்கத்தில் குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்கினார்கள். புதிய மக்கள் தலைவர்கள் தோன்றினார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பதை அங்கேயே கூடிப் பேசினார்கள். ஏற்கனவே ஆளும் கட்சி சார்பான ஊழல் மலிந்த தொழிற்சங்கங்களுக்கு மாற்றாக சுதந்திரமான தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது. அவர்களின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று, தொழிலாளரின் அடிப்படை ஊதியம் பற்றியது. மேலை நாடுகளில் உள்ளதைப் போல, மிகக் குறைந்த ஊதியம் இவ்வளவு என்று வரையறை செய்யும் சட்டத்திற்காக போராடுவது. நாடு முழுவதும் தொழிலகங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. அரச அடக்குமுறைக்கு அதிகமானோர் பலியான சம்பவம் கெய்ரோவில் நடக்கவில்லை. தென் எகிப்திய நகரமொன்றில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில் குறைந்தது நூறு பேர் மரணமடைந்தனர். (இந்தச் செய்தி ஈரானிய தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பானது.) முபாரக்கின் பதவி விலகலால் உழைக்கும் மக்களின் போராட்டம் மேலும் உத்வேகம் பெற்றுள்ளது. இன்றைக்கும் கெய்ரோ தாஹிர் சதுக்கத்தில், பிற நகரங்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. அவர்களின் கோரிக்கைகள் அரசியல்-பொருளாதார மாற்றங்களை நோக்கியதாக உள்ளன. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எங்கேயும் போகவில்லை. "முபாரக் ஓடி விட்டார். படையினர் எமக்கு உணவு கொண்டு வந்து தருவார்கள்." என்று அவர்கள் தமது குடும்பத்தினருக்கு சொல்ல முடியாது.

தற்போது எகிப்தில் அறிவிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் போராட்டங்களில் ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். El-Gabal el-Ahmar நகரில் பொதுப் போக்குவரத்து துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம். ரெயில் துறை தொழில்நுட்ப பணியாளர்களின் வேலைநிறுத்தம். ஹெல்வன் உருக்காலையில் நிரந்தரப் பணியில் அமர்த்துமாறு கோரும் தொழிலாளரின் போராட்டம். ஹவாம்டியா சீனித் தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம். எண்ணெய் உற்பத்தி துறையில் பணியாற்றும் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர். அவர்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு மலிவு விலையில் எரிவாயு வழங்குவதை நிறுத்துமாறு போராடி வருகின்றனர். எகிப்தின் தொழிலாளர்கள் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயார் படுத்துகின்றனர். உலகம் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்கின்றது.
***********************************
எகிப்து குறித்த முன்னைய பதிவுகள்:

எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா?
எகிப்தில் மக்கள் எழுச்சி! துனிசிய புரட்சியின் எதிரொலி!!
எகிப்தின் எதிர்காலம் என்ன?
எகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை!

3 comments:

சேக்காளி said...

ஆண்டு சுகம் கண்ட கூட்டம் என்றுமே அனுபவிக்கத்தான் ஆசைப்படும்.இல்லாதவனின் துன்பங்கள் அவர்களிடம் எள்ளளவும் மாற்றத்தை ஏற்படித்தாது.மயிலிறகு வேண்டுமென்றால் பிடுங்கத்தான் வேண்டும்.எதிர்காலமாவது உழைப்பவனுக்கு உன்னதமாக அமையட்டும்.தொடரட்டும் விழிப்புணர்வு பணி.

புதிய பாமரன் said...

மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் போராடும் வர்கங்களுக்கு ஒரு தெம்பைக் கொடுத்தன.மூர்கமான சண்டைகளின்போது வேட்டை நாய்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருப்பது காட்சிகளில் ஒன்று. போராட்டங்களின்போது, 'சரியான வழி நடத்தல்' என்பது மிக முக்கியமான ஒன்றுதான்.

chakravarthy said...

இப்படித்தான் நாம் ஒவ்வொரு முறையும் திரும்பிக் கொள்கிறோம் அல்லது திரித்து கூறுகிறோம் நமக்கு வசதியாய்...மாற்றம் உறுதி என்ற நம்பிக்கையில் தொடரட்டும் தங்களின் செறிவான கருத்தும் மக்கள் எழுச்சியும்..