Sunday, January 23, 2011

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

"குறிப்பாக ஒடுக்கப்பட்ட அரபு மக்களுக்கும், முழு உலகிற்கும் துனிசிய மக்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றனர். எவரிடமிருந்தும் எதனையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாமே உங்களிடம் உண்டு. மனதையும், சக்தியையும் முடமாக்கும் அச்சத்தில் இருந்து விடுபட்டு மேலெழுந்து வாருங்கள்."
- ஒரு துனிசிய பதிவர்

துனிசிய புரட்சி ஒன்றுமில்லாத இடத்தில் இருந்து எழவில்லை. வெறும் கலவரங்கள் மட்டும் புரட்சியை தோற்றுவிப்பதில்லை. காட்டுத்தீ பரவுவதற்கு காய்ந்த மரங்களும், வெப்பநிலை அதிகரிப்பும் காரணமாக இருந்திருக்கும். அத்தகைய அகவய, புறக் காரணிகள் நமது கண்களுக்கு தெரிவதில்லை. துனிசிய மக்களின் எழுச்சியையும், பி.பி.சி. போன்ற சர்வதேச ஊடகங்கள் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்து வந்தன. அதனால் தமிழிலும் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இல்லை. தகவல்கள் கூட குறைவாகவே ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டன. துனிசிய புரட்சியில் இருந்து பெற்ற படிப்பினைகளை, தமிழ் உழைக்கும் மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வரலாற்றுக் கடமை எமக்குண்டு. துனிசிய புரட்சி எவ்வாறு சாத்தியமாகிற்று? எத்தகைய அரசியல் சக்திகள் வழிநடத்தின? அது ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியா? பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் ஏன் தலையிடவில்லை?

முதலில் துனிசிய மக்கள் எழுச்சி பற்றிய செய்திகள், ஏன் இவ்வளவு காலதாமதமாக நமக்கு வந்து சேர்ந்தன என்று பார்ப்போம். ஒரு மாதத்திற்கு முன்பு வரை, மக்கள் எழுச்சியினால் துனிசிய ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடுவார், என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நீண்ட காலமாக, துனிசியா எந்தவிதமான உள்நாட்டுப் பிரச்சினைகளுமற்ற ஸ்திரமான ஆட்சியைக் கொண்ட நாடாக அறியப்பட்டது. அயல்நாடுகளில் நடந்த அசம்பாவிதம் எதுவும் துனிசியாவில் நடக்கவில்லை. மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போர், குண்டுவெடிப்பு, எதுவுமே இன்றி துனிசியா அமைதிப்பூங்காவாக காட்சியளித்தது. டிசம்பர் 17 , "சிடி புசிட்" என்ற சிறிய நகரத்தில், முஹமட் புவாசிசி என்ற இளைஞன் தீக்குளித்து மரணமடைந்தான். ஜனவரி 14 , ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடினார். இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் நடந்த மாற்றங்கள் தாம், அரபுலகின் முதலாவது மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தது.

பென் அலியின் வெளியேற்றத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் இருந்து தான் பி.பி.சி. துனிசியா பக்கம் கவனத்தை திருப்பியது. அது வரையில் அல்ஜசீரா மட்டுமே செய்தி தெரிவித்துக் கொண்டிருந்தது. துனிசியாவின் பெரு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. கடந்த ஒரு மாத காலமாக, நாட்டின் பல பாகங்களிலும், தினசரி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது போலிஸ் சுட்டது. குறைந்தது பத்துப் பேராவது மரணமடைந்தனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை என்பது என்று, ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்த பதிவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த செய்திகள் எதுவுமே வெளியுலகத்தை எட்டவில்லை. சர்வதேச ஊடகங்கள் அத்தனை கரிசனையுடன் நடந்து கொண்டன.

சர்வதேச ஊடகங்களின் மௌனத்திற்கு காரணம், இது மேற்குலகின் நிகழ்ச்சிநிரலின் படி நடக்கவில்லை என்பது தான். ஈரானில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு, மேற்குலக ஊடகங்களில் இரட்டிப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவி கொல்லப்பட்டதும், அந்த மாணவியின் இரத்தம் தோய்ந்த முகம் அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் பிரசுரமானது. மேற்குலக தலைவர்கள், கண்டனத்திற்கு மேல் கண்டனங்களை விடுத்துக் கொண்டிருந்தார்கள். துனிசிய சம்பவங்களை யாரும் அந்தளவு கவனம் எடுத்து பொருட்படுத்தியதாக தெரியவில்லை. பென் அலி தப்பியோடிய விமானம் மேலெழும் வரையில், அமெரிக்க அரசு வாய் திறக்கவில்லை. மிகவும் தாமதமாகத் தான் வாஷிங்டனில் இருந்து அறிக்கை வந்தது. அதுவும் எப்படி? "துனிசிய அரசின் நடவடிக்கைகளையிட்டு கவலையடைகிறோம். ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கைகளும் சமாதான வழியில் இருக்காததால் கவலையடைகிறோம்." (இது தானா நடுநிலைமை?)

துனிசிய மக்கள் தமது புரட்சியை, "மல்லிகைப்பூ புரட்சி" என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். மேற்குலக ஊடகங்கள் அந்த சொற்பிரயோகத்தை புறக்கணித்துள்ளன. இதே ஊடகங்கள், லெபனானில் நடந்ததை "சிடர் புரட்சி" என்று வர்ணித்தன. (அமெரிக்கா அப்படி பெயரிட்டு அழைத்தது.) லெபனானின் சிடர் புரட்சி, சிரிய நாட்டு படைகளை வெளியேற்றுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. ஜோர்ஜியாவில் "ரோஸ் புரட்சி", உக்ரைனில் "ஆரஞ்சுப் புரட்சி" என்று கலர் கலரான புரட்சிகள் நடந்துள்ளன. பிற்காலத்தில் அதிகாரத்திற்கு வந்த, மேற்குலக சார்பு எதிர்க்கட்சிகளின் வர்ணத்தின் பெயரால் புரட்சிகள் நடந்தன. அந்தப் புரட்சிகளுக்கு எல்லாம், வெளிநாட்டு நிதி, மேற்குலக தொண்டு நிறுவனங்கள் ஊடாக கிடைத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக அமெரிக்க கோடீஸ்வரரின் "சோரோஸ் நிதியம்" ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்த தேவையான செலவுகளை பொறுப்பேற்றது. துனிசிய புரட்சி இவற்றில் இருந்து பெருமளவு வேறுபடுகின்றது. எந்தவொரு வெளிநாட்டு சக்தியின் தூண்டுதலோ, நிதியுதவியோ இன்றி, தன்னெழுச்சியாக திரண்ட மக்கள் சர்வாதிகார அரசை தூக்கியெறிந்தனர்.

ஈரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் டிவிட்டரை பயன்படுத்தியதை, மேற்குலக ஊடகங்கள் "டிவிட்டர் புரட்சி" என்று பெருமையாக குறிப்பிட்டன. துனிசியாவிலும் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி புரட்சி நடந்தது. நிச்சயமாக, இணையப் பாவனையாளர்கள் மட்டுமே புரட்சி நடத்தி விட முடியாது. வேலையற்ற இளைஞர்களின் கலவரம், உழைக்கும் வர்க்க மக்களின் ஆர்ப்பாட்டம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் போன்ற பல்வேறு காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கன. இணையத்தை விட, இன்னொரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு புரட்சிக்கு பெரிதும் உதவியது. வீடியோ கமெரா கொண்ட செல்லிடத் தொலைபேசிகள், இன்று எல்லோர் கைகளிலும் பரவலாக புழங்குகின்றன. தெருவில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் உடனுக்குடன் படமாக்கப்பட்டன. இப்போது தான் நேரடியாக தொலைபேசியில் இருந்து இணையத்திற்கு அனுப்பும் வசதி வந்து விட்டதே? கலவரங்கள், ஆர்ப்பாட்டங்களை காட்டும் வீடியோக்கள் சுடச்சுட "யூ டியூப்" பில் வெளியிடப்பட்டன. துனிசிய அரசின் அடக்குமுறையினால், பல யூடியூப் வீடியோக்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஏற்கனவே துனிசியாவில் எதிர்க்கட்சிகளின் இணையத்தளங்களை பார்வையிடத் தடை இருந்தது. ஆயினும், டிவிட்டர், பேஸ்புக் தடை வருவதற்கு முன்னர், புரட்சியாளர்கள் முந்திக் கொண்டனர். கடுமையான செய்தித் தணிகை இருந்த நாட்டில், டிவிட்டர், பேஸ்புக் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பின்னர் அந்தத் தகவல்கள், தெருவில் ஆர்ப்பாட்டம் செய்த பாமரர்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள், பதிவர்கள், இணையப் பாவனையாளர்கள் அனைவரதும் கூட்டு முயற்சி இன்றி புரட்சி சாத்தியமாகி இருக்காது.

துனிசிய பதிவர்கள், டிவிட்டர், பேஸ்புக் பாவனையாளர்கள் மட்டுமல்ல, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த துனிசியர்களும் விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு உதவியுள்ளனர். ஆனால் எந்தவொரு மேற்குலக ஊடகமும் இவற்றை கூர்ந்து கவனித்ததாக தெரியவில்லை. (ஈரான் மாணவர்களின் டிவிட்டர் தகவல்களுக்கு அவை தமது இணையத்தளத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தன.) துனிசிய மக்களில் பெரும்பான்மையானோர், அல்ஜசீரா தொலைக்காட்சி மூலமே தமது நாட்டில் நடக்கும் மாற்றங்களை அறிந்து கொண்டனர். சம்பவங்களை உடனுக்குடன் தெரிவித்தது மட்டுமல்ல, விவாதங்கள், ஆய்வுகள் மூலம், அல்ஜசீரா மக்கள் மனதை மாற்றிக் கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் விட, துனிசிய மக்களின் மனவுறுதி இறுதி வெற்றியை தேடித் தந்தது. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தால் தண்டனைக்குள்ளாவோம் என்று தெரிந்து கொண்டும் வீதியில் இறங்கி போராடினார்கள். சனத்தொகையில் சரிபாதியான பெண்களும் தீரத்துடன் போராட்டத்தில் குதித்தனர். புரட்சியில் பலதரப்பட்ட மக்கள் பங்குபற்றினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வேலையற்றவர்கள், உழைக்கும் வர்க்க மக்கள், நடுத்தர வர்க்க மக்கள் எல்லோரும் கலந்து கொண்டனர்.

எந்த நாட்டிலும் பாட்டாளிகளின் எழுச்சி மட்டுமே புரட்சியை வெல்ல போதுமானதல்ல. நடுத்தர வர்க்கம் எந்தப் பக்கம் சாய்கின்றது என்பதும் அவசியம். பொருளாதார நெருக்கடியினால் ஒரு சிறிய மேட்டுக்குடியினர் மட்டுமே தப்பிப் பிழைக்க, பெரும்பான்மை நடுத்தர வர்க்கமும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்திற்கு ஊதியம் குறைவது பிரச்சினை. தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு பிரச்சினை. வேலையற்றவர்களுக்கோ உணவு வாங்க பணமற்ற பிரச்சினை. ஒரு நாட்டின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் ஒன்று சேரும் போது தான் புரட்சி சாத்தியமாகின்றது. துனிசியாவில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பக்கம் சார்ந்திருந்தமை பெரிய பலமாகும். துனிசிய தொழிலாளர் கூட்டமைப்பு, வேலைநிறுத்தங்களை ஒழுங்குபடுத்தியது. குறிப்பாக மக்கள் எழுச்சி நகரங்களில் பரவிய பொழுது, ஒரே நாளில் நாடளாவிய வேலை நிறுத்த போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அரசியல் கொள்கையைப் பொறுத்தவரை, "இஸ்லாமிய- தேசியம்" அல்லது "அரபு- தேசியம்" பேசிய யாருமே ஊர்வலங்களில் பங்குபற்றவில்லை. அவர்களுக்கு வர்க்க அரசியல் ஒத்துக் கொள்ளாது. ஒதுங்கியே இருந்தார்கள். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், பல்வேறு இடதுசாரி சிந்தனை கொண்டவர்களை அதிகமாக காண முடிந்தது. இதே நேரம், இராணுவம் எந்தப் பக்கம் நிற்கின்றது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. இராணுவம் மக்களின் பக்கம் நிற்பதாக பரவலாக நம்பப்படுகின்றது. ஆனால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். உண்மையில் பென் அலி வெளியேறுவதை இராணுவமும் விரும்பியதால், அமைதியான சதிப்புரட்சிக்கு உடந்தையாக இருந்திருக்கும் என்ற சந்தேகமும் உண்டு. இதுவரை காலமும் பாதுகாப்புப் படைகள் வசம் மட்டுமே ஆயுதங்கள் இருந்துள்ளன. தற்போது பொதுமக்கள் கைகளில் ஆயுதங்கள் சென்று விட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. இராணுவத்தில் புரட்சிக்கு ஆதரவான சிலராலேயே அப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு என்பதால், இராணுவம் எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்றும் கருதப்படுகின்றது.

துனிசியாவின் புரட்சி எத்தகைய குணாம்சத்தைக் கொண்டிருந்தது என்பதை ஆராய்வது அவசியம். எப்போதும் மேற்குலக நிலைப்பாட்டில் இருந்து உலகைப் பார்ப்பது பல தவறான புரிதலுக்கு வழிவகுக்கின்றது. மேற்குலக ஊடகங்கள் சில இதனை "விக்கிலீக்ஸ் புரட்சி" என்று குறிப்பிட்டன. விக்கிலீக்ஸ் கசிய விட்ட இரகசியங்கள் பல ஏற்கனவே பலருக்கு தெரிந்த சங்கதி தான். அவற்றை இப்போது தான் மேலைத்தேய வெகுஜன ஊடகங்கள் கண்டுபிடித்துள்ளன. தாங்கள் சொல்லித் தான் உலக மக்களுக்கு இவை எல்லாம் தெரிய வேண்டும், என்பது போன்ற நினைப்பில் மிதக்கின்றனர். துனிசியாவில் சர்வாதிகாரி பென் அலி குடும்பத்தின் ஊழல் குறித்து, விக்கிலீக்ஸ் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்று நினைப்பது மகா அபத்தம். அந்த கேபிளை எழுதிய அமெரிக்க தூதரக அதிகாரிக்கு அப்போது தான் ஞானம் பிறந்திருக்கலாம். 23 வருடங்களாக கொடுங்கோல் சர்வாதிகாரியின் கீழ் வாழும் துனிசிய மக்களுக்கு, இவை எல்லாம் அன்றாட வாழ்வியல் அனுபவம். சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய எத்தனையோ அரசியல் ஆர்வலர்கள், இரு தசாப்தங்களாக பிரான்சில் வாழ்கின்றனர். அவர்கள் அங்கிருந்த படியே பென் அலியின் அடக்குமுறை ஆட்சி பற்றியும், ஊழல் பற்றியும் தமக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். துனிசிய சர்வாதிகாரி மேற்குலக சார்பானவர் என்ற ஒரே காரணத்திற்காக, சர்வதேச ஊடகங்கள் அரச எதிர்ப்பாளர்களை புறக்கணித்து வந்துள்ளன.

கடந்த வருடம் பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மகாநாடு நடந்தது. பிரான்சில் அரசியல் அகதியாக வாழும், துனிசிய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி ஒருவரும் வந்திருந்தார். அவர் உரையாற்றும் பொழுது இஸ்லாமிய- தேசியவாதிகளுடனான வெகுஜன எதிர்ப்பு முன்னணியில் தமது கட்சி பங்கெடுப்பதை குறிப்பிட்டார். குறிப்பாக ரஷ்யாவை சேர்ந்த கம்யூனிஸ்டுகளுக்கு, "பிற்போக்கு மதவாதிகளுடனான கூட்டமைப்பு" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரசாரமான விவாதத்தின் முடிவிலும், அவர்களை தனது கருத்தோடு இணங்க வைக்க துனிசிய பிரதிநிதியால் முடியவில்லை. அரபுலகில் புரட்சி என்பது, "இன்டிபதா" என்றே புரிந்து கொள்ளப்படுகின்றது. இன்டிபதா என்றால் "அநீதிக்கு எதிரான மக்கள் எழுச்சி" என்றும் அர்த்தம் கொள்ளலாம். இன்டிபாதாவில் பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாது, பிற பாதிக்கப்பட்ட வர்க்கங்களும் கலந்து கொள்வார்கள். அது சிறு முதலாளிகளாக இருக்கலாம், மத்தியதர வர்க்கமாக இருக்கலாம். மேற்கத்தய அரசியல் சித்தாந்தப்படி புரிந்து கொள்ள வேண்டுமானால், இதனை "ஜனநாயகப் புரட்சி" என்று அழைக்கலாம். சோஷலிசப் புரட்சிக்கு முந்திய, புதிய ஜனநாயகப் புரட்சி குறித்து மாவோ கூட நிறைய எழுதியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சி, பூர்ஷுவா வர்க்கத்தின் எழுச்சியாக இருந்த போதிலும், அது வரலாற்றில் முற்போக்கான பாத்திரம் வகித்ததை கார்ல் மார்க்ஸ் வரவேற்றுள்ளார்.

துனிசியாவில் இடம்பெற்றது பாட்டாளி வர்க்கப் புரட்சியோ, அன்றி சோஷலிசப் புரட்சியோ அல்ல. அத்தகைய மாயை யாருடைய மனதிலும் இல்லை. துனிசிய மக்கள் மேற்குலகில் நிலவுவதைப் போல, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக போராடினார்கள். கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம், எல்லோருக்கும் உணவு கிடைக்கும் வசதி, இவை எல்லாம் மேற்கு ஐரோப்பாவில் தனி மனிதனுக்கு உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள். மேற்கத்திய நெறிகளுக்கு உட்பட்ட தனி மனித உரிமைகள் தான், துனிசிய மக்களின் குறிக்கோளாக இருந்துள்ளது. புரட்சி அவற்றை சாத்தியமாக்கும் என்றே எல்லோரும் நம்புகின்றனர். அத்தகைய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக துனிசிய மக்களுக்கு உதவ வேண்டிய மேற்குலகம், ஒதுங்கியிருந்து மௌனம் சாதிக்கின்றது. ஜனநாயக விழுமியங்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதாக கூறும் மேற்குலகின் இரட்டைவேடம் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

துனிசிய தொழிற்துறையில் 40 % முதலீட்டை செய்துள்ள பிரான்ஸ், சர்வாதிகாரி பென் அலிக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தது. அதற்கு காரணம், பிரான்ஸ் துனிசிய மக்கள் பால் கொண்ட கரிசனை அல்ல. பிரான்சில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த துனிசியர்கள் வாழ்கிறார்கள். தனது நாட்டினுள்ளும் துனிசிய மக்களின் எழுச்சியை எதிர்கொள்ள பிரான்ஸ் தயாராக இல்லை. துனிசியா எண்ணெய் வளமற்ற சிறிய நாடு. அதனால் அமெரிக்காவும் தலையிடாமல் பிரச்சினையை தவிர்த்துக் கொள்கின்றது. "எண்ணெய் இல்லாத சின்னச்சிறு துனிசியாவில் வாழ்ந்த அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்." என்று புரட்சி வென்றதற்கான காரணமாக துனிசியர்கள் கருதுகின்றனர்.


தற்போது எழுந்துள்ள அபாயம் என்னவெனில், சர்வதேசம் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதன் மூலம் புரட்சியை தோல்வியடைய வைக்க முனையலாம். வேலையில்லாப்பிரச்சினை, உணவுப்பொருள் விலையேற்றம் போன்ற பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க, திறந்த சந்தைக் கொள்கையை முன்வைக்கலாம். "சந்தைக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்." என்று நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கையை போதிப்பார்கள். ஏற்கனவே ஐ.எம்.எப். ஆலோசனைப் படி, திறந்த சந்தை, உலகமயமாக்கல் என்று கிளம்பித் தான் பிரச்சினை இந்தளவு விஸ்வரூபம் எடுத்தது. சர்வதேச சமூகம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கும். சிறிது காலத்தின் பின்னர் துனிசியர்கள் மீண்டும் ஒரு புரட்சியை நோக்கி தள்ளப்படுவார்கள். துனிசிய புரட்சியை, உலக நாடுகளில் தோன்றும் பல புரட்சிகளின் ஓர் அங்கமாகவே கருதப்பட வேண்டும்.

2 comments:

Anonymous said...

இவ்வளவு மேட்டர் நடந்ததா அங்க எங்க நாட்டிலும் மேற்குலகை பின்பற்றி விடுதலை கேட்டு இருந்தால் கொடுத்திருப்பார்கள் போல

Unknown said...

/////அரசியல் கொள்கையைப் பொறுத்தவரை, "இஸ்லாமிய- தேசியம்" அல்லது "அரபு- தேசியம்" பேசிய யாருமே ஊர்வலங்களில் பங்குபற்றவில்லை...........////////////

துனிஷியா புரட்சிக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறும் கலை அவர்கள் இந்த பதிவை காணவும்.இதை போல ஏராளமான வீடியோ பதிவுகள் you tube il உள்ளன. புரட்சி என்றாலே தொழிலாளர்களும்,கம்யூனிஸ்ட் களுக்கும் மட்டுமே சொந்தம் அல்ல.இறைவன் நாடினால் வெகு விரைவில் துனிஷியா மக்களின் விருப்பம் நிறைவேறும்.இஸ்லாமிய குடியரசாக துனிஷியா மலரும்.
http://www.youtube.com/watch?v=8JU5MLBFNEM&feature=related