Friday, November 26, 2010

நீங்கள் அறியாத இன்னொரு அல்கைதா

கடந்த மாதம் டென்மார்க் தலைநகர் கொபென்ஹெகனில் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டதாக ஒருவரை கைது செய்தார்கள். "முகமது கேலிச்சித்திரம்" வெளியிட்ட பத்திரிகை காரியாலயத்திற்கு குண்டு வைக்க திட்டமிட்டதாக தெரிவிக்கப் பட்டது. சர்வதேச ஊடகங்கங்களில் ஒரு நாள் மட்டுமே அந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. இரண்டொரு தினங்களுக்கு முன்னர், பெல்ஜியம் அன்த்வேர்பன் நகரில் பயங்கரவாத சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். போலிஸ் கூட்டு நடவடிக்கையில் ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து), ஆகென் (ஜெர்மனி) ஆகிய நகரங்களிலும் மேலதிகமாக சிலர் கைதானார்கள். ஜெர்மனி தனது நாட்டிற்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக அறிவித்த சில தினங்களில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அந்த "அச்சுறுத்தலுக்கும்", இந்த கைதுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிய வருகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறிப்பிட்ட ஏதோ ஒரு இடத்தில் குண்டு வைக்க திட்டமிட்டார்கள் என்று எம்மை எல்லாம் அதிர்ச்சியில் உறைய வைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், ஊடகங்கள் அதனை மிகைப் படுத்தி செய்தி வாசிக்கவில்லை. கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள்.

"அல்கைதா அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் மட்டுமே அல்கைதா இயங்கி வருகின்றது." இதுவரை காலமும் ஊடகங்கள் எமக்கு போதித்து வந்த பாடங்கள் இவை. எங்காவது மேலைத்தேய நாட்டை சேர்ந்தவர்களை பலி கொண்ட குண்டு வெடிப்பு நடந்தால், அது அல்கைதா வேளை என்று நாமும் பேசப் பழகினோம். உண்மையில் அல்கைதா என்ற இயக்கம் உலகில் இல்லை. பல நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய தாயகம் அமைக்கும் நோக்கம் கொண்ட பல அமைப்புகளுக்கு ஊடகங்கள் சூட்டிய பொதுப் பெயர் அது. ஆனால் இந்த "தேசங்கடந்த தீவிரவாத அமைப்புகள்" (இஸ்லாமிய வழியில் உலகமயமாக்கல்?) தமது தாயகப் பிரதேசம் என்று உரிமை கோரும் வரை படம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். சீனாவின் மேற்குப் பகுதியும், ரஷ்யாவின் தெற்குப் பகுதியும் அந்த இஸ்லாமியத் தாயகத்தில் அடங்குகின்றன.

ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட செச்னியாவில் நடந்த யுத்தம் அனைவரும் அறிந்ததே. அப்போதெல்லாம் அதனை "செச்னிய விடுதலைப் போர்" என்று மேற்குலக நாடுகள் கூறி வந்தன. செச்னிய கிளர்ச்சி ரஷ்ய இராணுவத்தால் நசுக்கப்பட்டு விட்டது. தற்போது செச்னியா ரஷ்யாவுக்குள் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்ட தன்னாட்சிப் பிரதேசம். அதனை ஆளுவது முன்னாள் கிளர்ச்சி இயக்க தலைவர்களில் ஒருவரான கடிரோவ். மாஸ்கோவின் சொற்கேட்டு நடக்கும் நல்ல பிள்ளையான கடிரோவ், தனது அதிகாரத்திற்கு போட்டியான கிளர்ச்சிக் குழுக்களை அடக்கி வருகிறார். அவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் ஆட்களை அனுப்பி கொலை செய்கிறார். வியனாவிலும் (ஆஸ்திரியா), துபாயிலும் கடிரோவின் எதிராளிகள் கொலை செய்யப்பட்டனர். இத்தனை அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், இன்னமும் செச்னியாவில் சில ஆயுதபாணி இயக்கங்கள் தலைமறைவாக இயங்கி வருகின்றன. அவர்கள் வெளிநாடுகளிலும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

செச்னிய யுத்தம் நடைபெற்ற காலங்களில், லட்சக் கணக்கான ரஷ்ய (செச்னிய) அகதிகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அகதியாக தஞ்சம் கோரினார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் அகதிகளாக அங்கீகரிக்கப் பட்டு, வளமாக வாழ்கின்றனர். தலைமறைவான செச்னிய இயக்கம், மேற்கு ஐரோப்பாவில் வாழும் செச்னிய அகதிகள் மத்தியில் நிதி சேகரித்து வருகின்றது. இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இன்னமும் ஆயுதங்களை கைவிடாத அமைப்பினர், இஸ்லாமிய மத அடிப்படைவாத கொள்கைகளை பின்பற்றுகின்றவர்கள். அதனால் அவர்களுக்கு பிற நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களும் நிதி திரட்டி அனுப்புகின்றனர். நிதி கொடுப்பது மட்டுமல்ல, போராளிகளையும் சேர்த்து அனுப்புகின்றனர். செச்னிய மலைப் பகுதிகளில் அரபுக்களைப் போல தோன்றும் போராளிகள் காணப்படுவது ஒன்றும் இரகசியமல்ல. (செச்னியர்கள் தோற்றத்தில் ரஷ்யர்கள் போன்றிருப்பார்கள்.)

தற்போது பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மொரோக்கோ நாட்டினை பூர்வீகமாக கொண்டவர்கள். பெல்ஜியம் அல்லது நெதர்லாந்து பிரஜைகள். செச்னியாவுக்கு நிதி சேகரித்து அனுப்பியமை, அங்கு ஆயுதப் போராட்டத்திற்கு ஆட்களை சேர்த்தமை, போன்ற குற்றச் சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். கைதான நபர்களில் ஒருவர் ரஷ்ய-செச்னிய இனத்தவர். முன்னர் குறிப்பிட்ட, கொபென்ஹெகனில் குண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான நபரும் ஒரு செச்னிய இனத்தவர். செச்னியாவில் Dokka Umarov என்பவரின் தலைமையில் இயங்கும் இயக்கத்துடன் அவர்கள் தொடர்பு வைத்திருந்தனர். செச்னியாவையும், அதனை அண்டிய முஸ்லிம்கள் வாழும் மாநிலங்களையும் சேர்த்து Imarat Kavkaz (Emirate Caucasus) அமைப்பதே அந்த இயக்கத்தின் இலட்சியம்.

No comments: