Friday, June 18, 2010

கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி

கத்தோலிக்க திருச்சபை ஆன்மீகப் பணியை மட்டும் ஆற்றவில்லை. விபச்சார விடுதி கட்டிக் கொடுத்து சமூகத்திற்கு சேவை செய்துள்ளது! கரீபியன் கடல் பகுதியில் குரசாவோ தீவில் Campo Alegre (மகிழ்ச்சியான முகாம்) என்ற மிகப் பெரிய திறந்த வெளி விபச்சார விடுதி ஒன்றுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்து அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து உருவாக்கிய விபச்சார விடுதி இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த விபச்சாரிகள் ஐரோப்பாவுக்கு செல்லும் நுழைவாயிலாக பயன்படுத்தும் அந்த விடுதி அண்மையில் கண்காட்சி ஒன்றை நடத்தியது. அப்பொழுது குரசாவோ தீவில் வாழும் கத்தோலிக்க இளைஞர்கள் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் தாம் அங்கம் வகிக்கும் அதே கத்தோலிக்க திருச்சபை தான் விபச்சார விடுதியை நிர்வகித்து வருகின்றது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

வெனிசுவேலா நாட்டிற்கு அருகில் அமைந்துள்ள மிகச் சிறிய குரசாவோ தீவு, நெதர்லாந்துக்கு சொந்தமானது. பெரும்பான்மையான தீவுவாசிகள் கறுப்பின மக்கள். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அடிமைகளின் வாரிசுகள். அவர்கள் மத்தியில் கத்தோலிக்க திருச்சபையின் செல்வாக்கு அதிகம். குரசாவோ மக்கள் நெதர்லாந்தில் உள்ள வெள்ளையர்களை விட அதிக மதப் பற்றாளர்கள். இன்று வேலையில்லாப் பிரச்சினையும், கூடவே வறுமையும் அதிகரித்து வரும் குரசாவோ, ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் ஷெல் நிறுவனம் கட்டிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. ஆலையில் வேலை செய்வதற்கு பக்கத்து நாடுகளில் இருந்தெல்லாம் பல தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தார்கள். தீவு நெதர்லாந்துக்கு சொந்தமாக இருந்த போதிலும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கியது. இதனால் அமெரிக்க கடற்படை வீரர்களும் அந்த தீவில் நிலை கொண்டிருந்தார்கள்.

ஆலையில் வேலைக்கு வந்த வெளிநாட்டு தொழிலாளர்களும், பாதுகாப்புக்கு வந்த கடற்படை வீரர்களும் தமது பாலியல் இச்சையை பூர்த்தி செய்வதற்காக தீவில் வாழும் பெண்களை தேடிச் செல்ல விடாமல் தடுக்க வேண்டியிருந்தது. இதனால் (நெதர்லாந்து) அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து Campo Alegre விபச்சார விடுதியை கட்டினார்கள். பால்வினை நோய்கள் பரவ விடாது தடுப்பதும் நோக்கமாக இருந்தது. "கத்தோலிக்க திருச்சபை அதிக தீமை பயக்கும் தோற்று நோயை எதிர்கொள்வதை விட, விபச்சார விடுதி பரவாயில்லை." என்று கருதியதாக இந்த தகவலை வெளிக் கொணர்ந்த Coks van Eysden எழுதியுள்ளார். அவர் நெதர்லாந்து கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தை சேர்ந்தவர். "Verhandelingen" என்ற சஞ்சிகையில் இந்த தகவல் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

Campo Alegre யில் வேலை செய்வதற்கு, டொமினிக்கன் குடியரசு, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து அழகிய பெண்கள், பாலியல் தொழிலாளிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அந்த ஒப்பந்தம் அதிக பட்சம் மூன்று மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் வாடிக்கையாளர்களுடன் நட்பு கொண்டு அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ செல்லவிடாமல் தடுக்கும் நோக்கிலேயே அவ்வாறு குறுகிய கால ஒப்பந்தம் போடப்பட்டது. ஆயினும் ஒரு முறை குரசாவோ தீவில் வேலை கிடைத்து விட்டால், அந்தப் பெண்களுக்கு ஐரோப்பிய விசா எடுப்பது இலகுவாக இருந்தது. (அந்த தீவு நெதர்லாந்து நாட்டின் கடல் கடந்த பிரதேசம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.) இதனால் பெருமளவு கொலம்பிய பாலியல் தொழிலாளர்கள் நெதர்லாந்து விபச்சார விடுதிகளில் வந்து சேர்ந்தனர். கடந்த பத்தாண்டுகளாக நெதர்லாந்து அரசு எடுத்து வரும் கடுமையான குடிவரவு சட்டங்களின் காரணமாக அந்தப் பிரச்சினை கட்டுப்படுத்தப் பட்டது.

விபச்சார விடுதி குறித்து அங்கேயுள்ள கத்தோலிக்க திருச்சபை என்ன கூறுகின்றது? "திருமணத்திற்கு அப்பாலான உடலுறவை கத்தோலிக்க மதம் தடை செய்திருந்தாலும், நடைமுறை வேறாக உள்ளது. சமூகத்தில் விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. ஆனால் பெண்களை வற்புறுத்தி பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை, பணத்திற்காக பெண்களைக் கடத்துபவர்களை தடுக்க வேண்டியது அவசியம்." என்று நியாயம் கற்பித்தனர். Campo Alegre விபச்சார விடுதி குறித்து
Frank Martinus Arion என்ற குரசாவாவை சேர்ந்த எழுத்தாளர் ஒரு நாவல் எழுதியுள்ளார். Dubbelspel (Double Game ) என்ற அவரது நாவல் முழுவதும் அந்த விபச்சார விடுதியை சுற்றி புனையப்பட்டுள்ளது. அந்த நாவலில் ஏதாவது உண்மையிருக்கலாம் என்று சந்தேகித்த ஊடகவியலாளர் ஒருவர் மேற்கொண்டு ஆராய்ந்துள்ளார். அதன் பின்னரே கத்தோலிக்க திருச்சபையின் இரட்டை வேடமும் அம்பலத்திற்கு வந்தது.

இது குறித்து நெதர்லாந்து பத்திரிகையில் வந்த கட்டுரையை இங்கே வாசிக்கலாம். (குறிப்பு: Trouw என்ற அந்த நாளேடு நெதர்லாந்தில் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் ஊடகமாக ஆரம்பிக்கப்பட்டது.)

பிற்குறிப்பு: வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சியளிக்கும் செய்தியல்ல. இந்தியாவில் இந்து மதம் "தேவதாசி" என்ற பெயரில் கோயில்களுக்கு அருகில் விபச்சார விடுதிகளை நடத்தியது. அதே போல ஐரோப்பாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் தேவாலயங்களுக்கு அருகில் விபச்சார விடுதிகளை வைத்திருந்தது. புரட்டஸ்தாந்து கிளர்ச்சியாளர்கள் அதையும் ஒரு காரணமாக காட்டித் தான் பிரிந்து சென்றார்கள். மேலதிக தகவல்களையும் ஆதாரங்களையும் திரட்டிய பின்னர் அது பற்றி தனியான பதிவு இடுகிறேன்.

10 comments:

shafiq said...

யார் சொன்னது விபச்சாரத்தை ஒழிக்க முடியாது என்று, போங்க சார் நீங்க வேற,

Indian said...

தேவதாசி எனபவர்கள் பெரும் கோயில்களுக்கு நடனமாடுவதற்காக சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களை குறிக்கும். இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள் படும். இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த அமைப்பு நல்ல குறிக்கோளுக்காக ஏற்படுத்தப்பட்டாலும் பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு அல்லது "மகாராஜா"க்களுக்கு நடனமாடியதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதற் தொண்டு இந்தியாவில் பாரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

யார் சார் உங்களுக்கு சொன்னது இந்து மதம் 'தேவதாசி' என்ற பெயரில் கோயில்களுக்கு அருகில் விபச்சார விடுதிகளை நடத்தியது என்று?

கலையரசன் said...

இந்தியன், தேவதாசிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப் பட்டத்தை நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்கள். தேவதாசிகள் வசித்த குடியிருப்பு கோயிலுக்கு அருகிலேயே இருந்தது. அது மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள், பிரபுக்கள், தர்மகர்த்தாக்கள், பூசாரிகள் அடிக்கடி வந்து போகும் இடமாக இருந்தது. அப்படி வரும் ஆண்கள் நடனத்தை மட்டும் கண்டு ரசிக்க வருவதில்லை. தமது காமப்பசியை தீர்த்துக் கொள்வது பிரதான நோக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட இடத்திற்கு நீங்கள் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்? மும்பை சிவப்பு விளக்கு பகுதி போல அனைவருக்கும் தெரிந்த இடத்தில் இருந்தால் தான் அதனை விபச்சார விடுதி என்று அழைப்பீர்களா?

மேலும் இந்து மதத்திற்குள் "வரலாறு காணாத புரட்சி" ஏற்பட்டு, அதன் காரணமாக தேவதாசி முறை ஒழிக்கப் பட்டதைப் போல பேசுகின்றீர்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் தோன்றிய மதச்சார்பற்றவர்களும், மத சீர்திருத்தவாதிகளும், பிரிட்டிஷ் ஆட்சியாளரும் சேர்ந்து தேவதாசி வழக்கத்திற்கு எதிராக போராடினார்கள். அப்போது பார்ப்பனர்களும், இந்து மத பற்றாளர்களும் தேவதாசி முறையை தடுப்பது பெரும் பாவம் என்று வாதாடினார்கள். அவர்களைப் பொறுத்த வரை அது தெய்வ நிந்தனை. இன்றைக்கு இருப்பவர்கள் ஜீன்ஸ் போடும் நவீன இந்துக்கள். அவர்களது மதத்தில், பிரிட்டிஷ் கலாச்சாரத்தின் செல்வாக்கு அதிகம் கலந்துள்ளது.

Anonymous said...

Hindu religion did not promote prostitution. We cannot conclude when a few Hindus commit adultry.

கலையரசன் said...

அனானி நண்பரே, இந்து மதத்தை பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள்? கணவன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறாத பெண்கள் விபச்சார விடுதிகளில் சேர்க்கப்பட்டார்கள். புதிதாக திருமணம் செய்து கொள்ளும் புது மணப்பெண்ணுடன் உள்ளூர் பிராமணன் தான் முதன் முதலாக உடலுறவு கொள்ள வேண்டும். 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், நாயர் சாதியினர் மத்தியில் அந்த வழக்கம் இருந்தது. இது போன்ற விசித்திரமான மதக் கட்டுப்பாடுகள் உலகில் இந்து மதத்திற்குள் மட்டுமே காணப்பட்டன.

Anonymous said...

For further study/clarification, could you tell me the evident that they were forced to adultry, particularly after husband death and bramin's sex with virgin?

கலையரசன் said...

நண்பர்களே, நீங்களும் தேடுதலில் ஈடுபட வேண்டும். எல்லாவற்றையும் உங்களுக்காக நானே தேடித் தந்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் பள்ளி மாணவனுமல்ல, நான் உங்கள் ஆசிரியனுமல்ல.

கலையரசன் said...

//could you tell me the evident that they were forced to adultry,//

Please watch the movie "Water" by Meera Nair.

Anonymous said...

//நண்பர்களே, நீங்களும் தேடுதலில் ஈடுபட வேண்டும். எல்லாவற்றையும் உங்களுக்காக நானே தேடித் தந்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் பள்ளி மாணவனுமல்ல, நான் உங்கள் ஆசிரியனுமல்ல.//
True. I do search.
please share if u know

Thank you for the information 'water' movie

ஆரோ ஜான் said...

i have read all your posts. those are very informative. thank you for that sir.

And one small correction water is not by meera nair, it's by deepa mehta.