Friday, June 04, 2010

அமைதிப் படைக்கு அஞ்சும் இஸ்ரேல்

"எவராலும் வெல்ல முடியாத நாடு!" என்ற பெயரெடுத்த இஸ்ரேல் வரலாற்றில் முதன் முறையாக தோல்வியை சுவைக்கத் தொடங்கியிருக்கிறது. பி.எல்.ஒ.வின் தேசியவாதமும், ஹமாசின் இஸ்லாமியவாதமும் அடைய முடியாத இலக்கை சர்வதேசிய சித்தாந்தம் சாதித்துக் காட்டியுள்ளது. ஆயுதத்தால் அசைக்க முடியாத இஸ்ரேலை அஹிம்சை மிரட்டுகிறது. மே 31 இரவு நடுக்கடலில் காசா நோக்கி சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பல் (Mavi Marmara) இஸ்ரேலிய படையினரின் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானது. சர்வதேச கடற்பரப்பில் கடற்கொள்ளையர்கள் போல நடந்து கொண்ட இஸ்ரேலின் அத்துமீறல் சர்வதேச கண்டனங்களை எழுப்பியுள்ளது. இஸ்ரேலிய படையினரின் திடீர் தாக்குதலில் 20 ஆர்வலர்கள் மரணமடைந்துள்ளனர். பலியானவர்களில் பலர் துருக்கிய பிரஜைகள், ஒருவர் அமெரிக்கர்.

தனது படையினரை பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியதால், "தற்பாதுகாப்பு கருதியே" நிவாரணக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது. மேலும் ஹமாசுக்கு கொடுப்பதற்காக கப்பலில் ஆயுதங்கள் கடத்தப் பட்டதாகவும் தெரிவித்தது. துருக்கி தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான "மாவி மர்மரா" என்ற பயணிகள் கப்பலே தாக்குதலுக்கு உள்ளானது.(காசாவில் இருந்து 65 கி.மி. தொலைவில்) தாக்குதல் நடந்த நேரம் மாவி மர்மரா உட்பட பல கப்பல்கள் காசா நோக்கி சென்றுள்ளன. 700 தொண்டர்களும், 10000 தொன்கள் நிவாரணப் பொருட்களும் இருந்துள்ளன. கப்பல்களில் சென்ற அனைவரும் இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல்தேசத்தவர்கள் அடங்குவர். பெரும்பான்மையானோர் விடுவிக்கப்பட்டு துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டனர். கப்பல்களையும், நிவாரணப் பொருட்களையும், அதனோடு தொண்டர்களின் உடமைகளையும் இஸ்ரேலிய படையினர் அபகரித்து வைத்துள்ளனர். செல்லிடத் தொலைபேசிகள், மடிக்கணனிகள் எதையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

நாடு கடத்தப் பட்ட தொண்டர்கள் வழங்கிய நேர் காணல்கள், இஸ்ரேல் அறிவித்ததற்கு முரணாக உள்ளன. இஸ்ரேலிய படையினர் ஹெலிகாப்டரிலும், கடற்படைக் கப்பல்கள் கொண்டும் சுற்றி வளைத்து சுட்டுள்ளனர். அப்போதே முதல் பலிகள் விழுந்து விட்டன.(
Israelis opened fire before boarding Gaza flotilla, say released activists) மாவி மர்மரா கப்பலை கைப்பற்றும் நோக்குடன் ஹெலிகாப்டரில் இருந்து குதித்த படையினர் இறங்கிய உடனே சுடத் தொடங்கினார்கள். அதன் பிறகே தற்பாதுகாப்புக்காக சில ஆர்வலர்கள் இஸ்ரேலிய படையினரை தாக்கி உள்ளனர். வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் திருடனை தாக்குவது போன்ற நடவடிக்கை அது. அந்த சம்பவத்தை மட்டும் வீடியோ பண்ணி, இஸ்ரேல் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தது. "இதோ பாருங்கள். எமது படையினரை தாக்குகிறார்கள். அதனால் தற்பாதுகாப்புக்காக சுட்டோம்." என்றார்கள். ஆனால் நடந்த சம்பவத்தை படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களின் கமெராவில் இவ்வாறு பதிவாகி உள்ளது. "அவர்கள் எம்மை நோக்கி சுடுகிறார்கள்... வெள்ளைக்கொடி உயர்த்திய போதிலும் சுடுகிறார்கள்... கிரனேட்கள்,நிஜமான துப்பாக்கி குண்டுகளை பாவிக்கிறார்கள்... சிலர் காயமடைந்துள்ளனர்...." அரபி, ஆங்கிலம், துருக்கி மொழி செய்தியாளர்கள் மாறி மாறி அறிவிக்கிறார்கள். (RAW FOOTAGE: Israel navy massacres on one of Gaza Freedom Flotilla) அந்த வீடியோ தான் கடைசியாக செய்மதி தொடர்பை பயன்படுத்தி அனுப்பப் பட்டது. அதன் பிறகு இஸ்ரேலிய படையினர் செய்மதி தொடர்பை துண்டித்து விட்டார்கள். அல் ஜசீராவுக்கு கிடைத்த அந்த எடிட் செய்யப்படாத வீடியோ ஏனோ ஒளிபரப்பப்படவில்லை. ஈரான் தொலைக்காட்சி Press TV யில் மட்டுமே காண்பிக்கப் பட்டது.

தாக்குதல் சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள், அல் ஜசீரா இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரை நேர்கண்டது. அதில் அவர் "நிவாரணக் கப்பலில் ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கண்டுபிடிக்கப் பட்டதாக" தெரிவித்தார். இஸ்ரேல் ஆர்வலர்கள் அனைவரையும் கைது செய்து, கப்பலையும் தடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் அதே அமைச்சரை பேட்டி கண்டது அல்ஜசீரா. "கைப்பற்றிய ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் ஆதாரஙகளுடன் காட்டுமாறு" கேட்டது. அதற்கு அந்த அமைச்சர் "ஆயுதங்களை கண்டெடுத்ததாக அன்று நான் சொல்லவே இல்லை!" என்று மழுப்பினார். இதற்கிடையே கப்பலில் தொண்டராக சென்று நாடுகடத்தப் பட்ட சுவீடிஷ் எழுத்தாளர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதிலே அவர் கூறியதாவது: "இஸ்ரேலிய படையினர் என்னை கைது செய்து விட்டு, எனது உடமைகளை பரிசோதித்தார்கள். பயங்கர ஆயுதம் ஒன்றை வைத்திருந்ததாக என் மீது குற்றம் சுமத்தினார்கள். அவர்கள் காட்டிய பயங்கர ஆயுதம் என்ன தெரியுமா? எனது ஷேவிங் ரேசர்!"

இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் துருக்கியர்கள். இதனால் துருக்கியில் இஸ்ரேலுக்கு எதிரான அலை எழுந்துள்ளது. இஸ்தான்புல் நகரில் இஸ்ரேலிய துணைத் தூதுவராலயத்தை முற்றுகையிட்ட மக்கள் திரள், தூதுவராலயத்தினுள் நுளைய விடாது துருக்கி பொலிஸ் தடுத்தது. துருக்கி பிரதமர் இஸ்ரேலுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். இஸ்ரேலுடன் நட்புறவைப் பேணி வந்த மிகக் குறைந்த முஸ்லிம் நாடுகளில் ஒன்று துருக்கி. இரண்டு நாட்டு இராணுவங்களும் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தன. இது வரை காலமும் இருந்து வந்த உறவு இறுதிக் கட்டத்தை அடந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் முக்கியமான நண்பனை, இஸ்ரேல் இழக்கின்றது. மேலும் துருக்கி நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிலும் உறுப்பினர். "நேட்டோ உறுப்பினர் ஒருவர் தாக்கப் பட்டால் அனைவரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற சட்டம் இப்போது பரீட்சித்துப் பார்க்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம். துருக்கி நட்பு பாராட்டிய அமெரிக்கா இஸ்ரேலின் குற்றத்தை கண்டிக்கவில்லை. இது அமெரிக்க - துருக்கி உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

Free Gaza என்ற அரசு சாரா சர்வதேச தொண்டு நிறுவனம் நிவாரணக் கப்பல்களை காசாவுக்கு அனுப்பி வைத்தது. ஆகஸ்ட் 2008 இவர்களது கப்பல்கள் காசா போய் சேர்ந்தன. அப்போது காசா பகுதியில் இஸ்ரேலிய கடற்படை பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. அதையும் மீறி அந்தக் கப்பல்கள் நிவாரணப் பொருட்களை பசியால் வாடும் காசா மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்தன. கடந்த இரண்டு வருடங்களாக காசா பிரதேசம் இஸ்ரேலினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. ஐ.நா., செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பும் பொருட்களைக் கூட, மூன்றில் ஒரு பங்கு மட்டுமே போக அனுமதிக்கப் படுகின்றது. சுருக்கமாக சொன்னால், ஒரு பெரிய தடுப்பு முகாமினுள் காசா மக்கள் கைதிகளாக அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். (பார்க்க: காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்)

Free Gaza அமைப்பில் பல சர்வதேச பிரபலங்கள் அங்கம் வகிக்கின்றனர். ஹாலிவூட் நடிகர்கள், கிரேக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், ஐரோப்பிய மத்திய வங்கி தலைமை நிர்வாகியின் மனைவி, எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று பல்துறை சார்ந்தவர்கள். அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, பிரிட்டன், நெதர்லாந்து, சுவீடன், ஸ்பெயின், கிறீஸ், பிறெசில், மலேசியா என்று பல்வேறு தேசங்களின் பிரஜைகள். இந்த சர்வதேச அமைதிப்படை இஸ்ரேலின் அரச பயங்கரவாததை கண்டு பயந்து ஓடி விடவில்லை. இன்னும் நூறு கப்பல்களில் வந்து கொண்டே இருப்போம் என்று சூளுரைத்துள்ளனர். "Mavi Marmara துன்பியல் சம்பவம்" நடந்து கொண்டிருந்த தருணத்தில் கூட அயர்லாந்தில் இருந்து புறப்பட்ட நிவாரணக் கப்பல் ஒன்று காசா நோக்கி வந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு தினங்களில் அது காசா கரையை தொட்டு விடும். அந்தக் கப்பலின் பெயர் "Rachel Corrie". யார் இவர்? 2003 ம் ஆண்டு காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட, அமெரிக்காவை சேர்ந்த சமூக ஆர்வலர். இஸ்ரேலிய படைகள் மக்களின் வீடுகளை இடித்த பொழுது தன்னந்தனியாக எதிர்த்து நின்று போராடினார். அதற்காக அந்த இளம் யுவதி மீது புல்டோசரை ஏற்றி கொன்றார்கள். மக்களுக்காக மரித்த தியாகி Rachel லின் ஆவி இஸ்ரேலை பிடித்தாட்ட வந்து கொண்டிருக்கிறது.
_______________________________________
RAW FOOTAGE: Israel navy massacres on one of Gaza Freedom Flotilla


உசாத்துணை:
The Free Gaza Movement
'Israel Feels More and More Isolated'
Israelis opened fire before boarding Gaza flotilla, say released activists

8 comments:

faidh said...

நல்ல பதிவு சார்

sathyakumar said...

நான் தற்போது ரூவண்டா நாட்டில் இருந்து எழதுகிறேன் ...................
கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்
என்ற தாங்கள் கட்டுரை படித்த பின் நான் ஆடிபோய்விட்டேன் ........ஆனைத்தும் 100 க்கு 200 சதவிதம் உண்மை . உங்கள் பதிவுகள் என்னை பிரமிப்பில் அல்திஉள்ளது .
கடந்த இரண்டு ஆண்டுகள் ஆக உங்கள் ஆனைத்து பதிவையும் படிக்கிறேன் .......உங்களை பாராட்ட வார்த்தைகள் தற்போது தான் எனக்கு வார்த்தை வருகிறது என்றால் மிகைஇல்லை .

அதற்காக என்னை மன்னியுங்கள் . உங்கள் பதிவுகள் மிக மிக அருமை.

மிக்க நன்றி ....

சத்ய குமார் - உயிர் மருத்துவ பொறியாளர்
ரவாண்ட +250-788446217.
Email: sathya0112@gmail.com

sathyakumar said...

நான் தற்போது ரூவண்டா நாட்டில் இருந்து எழதுகிறேன் ...................
கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்
என்ற தாங்கள் கட்டுரை படித்த பின் நான் ஆடிபோய்விட்டேன் ........ஆனைத்தும் 100 க்கு 200 சதவிதம் உண்மை . உங்கள் பதிவுகள் என்னை பிரமிப்பில் அல்திஉள்ளது .
கடந்த இரண்டு ஆண்டுகள் ஆக உங்கள் ஆனைத்து பதிவையும் படிக்கிறேன் .......உங்களை பாராட்ட வார்த்தைகள் தற்போது தான் எனக்கு வார்த்தை வருகிறது என்றால் மிகைஇல்லை .

அதற்காக என்னை மன்னியுங்கள் . உங்கள் பதிவுகள் மிக மிக அருமை.

மிக்க நன்றி ....

சத்ய குமார் - உயிர் மருத்துவ பொறியாளர்
ரவாண்ட +250-788446217.
Email: sathya0112@gmail.com

Kalaiyarasan said...

faidh, sathyakumar, உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. நீங்கள் எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதை எனது உழைப்பிற்கு கிடைத்த வெகுமதியாக கருதுகிறேன்.

Hai said...

உண்மையிலேயே இவற்றிற்கு எல்லாம் இஸ்ரேல் அஞ்சுவதாக இல்லை என்றே எண்ணுகிறேன்.

இது போன்ற அழுத்தங்கள் பல காலமாக அதன் செயல்பாடுகள் குறித்து இருந்தே வருகிறது.

ஏன் கடந்த ஆண்டு முற்பகுதியில் அது காசா பகுதியின் மீதான தாக்குதலை விடவும் பெரிய தாக்குதல் இதுவல்லவே.

கொஞ்ச காலத்திற்கு இவை செய்தித் தாள்களில் இடம்பெறச் செய்யும் அவ்வளவே.

பொறுத்திருந்து பார்ப்போம்.

Anonymous said...

குர்து இன மக்களை அடக்கி ஒடுக்கும் துருக்கியர்களுக்கு பலத்தீனியர்கள் மீது மட்டுந்தான் பாசமா? இதுதான் அவர்களின் மனித நேயமோ?

Anonymous said...

ஈழ தமிழர்களை அழித்த இடத்தில் துருக்கிய அரசுக்கும் பங்கு உண்டு! தமிழர்கள் போராலும் சிறிலங்காவின் பொருளாதார மற்றும் மனித நேய தடையாலும் அழிந்து கொண்டிருந்தபோது எங்கே இந்த (ஒரு சிலரைத் தவிர) 'மனிதநேய' ஆர்வலர்கள்? முள்ளிவாய்க்காலில் அழித்த பெருமையை பலஸ்தீனமும் சேர்ந்து வாழ்த்தியதே! இதுதான் அவர்களின் விடுதலை உணர்வோ? பலஸ்தீனியர்கள் மனிதர்கள் ஈழத் தமிழர்கள் ஜடங்களா?

Anonymous said...

Why did they carry cell phones and laptops in the Humantarian ship? it makes no sense to me.