Thursday, May 14, 2009

பெண்ணடிமைத்தனமும் மதவாத சட்டங்களும்

மத அடிப்படைவாதம்: ஒரு மேலைத்தேய இறக்குமதி - 3
இதுவரை இஸ்லாமிய உலகில் மத அடிப்படைவாதத்தை தோற்றுவித்த சக்திகளைப் பார்த்தோம். இனி அவர்களின் தத்துவார்த்த கொள்கை விளக்கங்களை பார்ப்போம். முதலில் மத அடிப்படியாவாதம் என்றால் என்ன என்பதற்கு சரியான வரைவிலக்கணம் கொடுக்கப்படுவது அவசியம். நடைமுறையில் இருக்கும் பல சொற்களின் அர்த்தம் தெரிந்து பயன்படுத்துவது சிறந்தது.
1. பழமைவாதிகள்: சமயச் சடங்குகளை, ஆச்சாரங்களை வழுவுறா வண்ணம் பின்பற்றுவபவர்கள். தம்மைத் தாமே சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் இவர்கள் பொதுவாக அரசியலில் ஈடுபடுவதில்லை.
2. இஸ்லாமியவாதிகள்: இஸ்லாம் என்ற மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்கள். பாராளுமன்ற கட்சி அரசியல் நடத்துபவர்கள் முதல், ஆயதப் போராட்டத்தில் நம்பிக்கை உள்ள தீவிரவாதிகள் வரை.
3. மத அடிப்படைவாதிகள்: சாத்வீக வழியிலேயோ, அல்லது வன்முறைப் போராட்டம் மூலமோ இஸ்லாமியப் புரட்சியை ஏற்படுத்த விரும்புபவர்கள். புனித நூல் சட்டமாகும். அனைவரும் மத நெறிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுவர்.
இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், மேற்கே மொரோக்கோ முதல் கிழக்கே சீனா வரையிலான பரந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றை அமைக்க கனவு காண்கின்றனர். மேற்குறிப்பிட்ட விளக்கங்கள் பிற மதங்களை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அவர்கள் எல்லோரும் தத்துவார்த்த ரீதியாக ஒன்று படுகின்றனர். முதலில் மேற்குலக நாடுகளால் முஸ்லிம்கள் அடக்கப்படுவதாகவும், அதற்கு தமக்கிடையே ஒற்றுமையின்மையால் முஸ்லிம்கள் பலவீனமாக இருப்பதாகவும், மதப்பற்று குறைந்ததுமே காரணம் என்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்பவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் அல்ல. இஸ்லாமிய புனித நூலின் சட்டங்களுக்கு அமைய வாழ்பவர்கள் மட்டுமே உண்மையான முஸ்லிம்கள். இதேநேரம், சட்டங்கள் பலவிதமாக மொழிபெயர்க்கப் படுவதால் வரும் குழப்பங்கள் இன்னும் தீரவில்லை.

"மத ஒற்றுமை" என்றால் என்னவென்று விரிவாகப் பார்ப்போம். பத்திற்கும் குறையாத மதப்பிரிவுகள் ஒன்று சேருதல். வர்க்கங்கள் மோதல் இன்றி சமரசம் செய்து கொள்தல். தேசியம் என்பது மேலைத்தேய கற்பிதம் என்பதால், "முஸ்லிம்" என்பது மட்டுமே ஒரேயொரு தேசிய அடையாளம். தற்காலத்தில் நமக்குத் தெரிந்த சில நாடுகளை, "முஸ்லிம் நாடுகள்" என அழைக்கபடுவதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு நாடு முதலாளித்துவ அல்லது சோஷலிச கொள்கைகளை பின்பற்றினால், அவையெல்லாம் மேலைத்தேய சித்தாந்தங்கள் என்று நிராகரிக்கின்றனர். மதத்தை பின்பற்றாத மிதவாதிகளை அல்லது மதச்சார்பற்றவர்களை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. "எம்மதமும் சம்மதம்" என்று கூறுவதை பிழையான நிலைப்பாடாக கருதுகின்றனர். அவர்களின் உலகில் நாஸ்திகர்கள் என்று யாரும் இருக்க முடியாது, எல்லோரும் எதோ ஒரு மதத்தை சேர்ந்தவர்கள். ஒரே மதம்: இஸ்லாம், ஒரே மொழி: அரபு, ஒரே இனம்: முஸ்லிம் என்பது, இஸ்லாமியக் குடியரசின் தாரக மந்திரம்.

மேலைத்தேய நாகரீகம் தமது தொன்மையான கலாச்சாரத்தை பாதிக்கின்றது என குறைப்படுகின்றனர். ஆபாசப்படங்கள், போதைப்பொருட்கள், அரைகுறை ஆடை அணிதல், கண்டவனுடன் திரியும் சுதந்திரப்போக்கு, போன்ற மேலைநாட்டு கலாச்சார சீரழிவு தமது பிள்ளைகளை கெடுத்து விடும் என அஞ்சுகின்றனர். பழமைவாத பிற்போக்குத்தனங்களில் ஊறிய மக்களை, "கலாச்சார அழிவு" பற்றிய பீதியூட்டி, அதனை மேற்குலகிற்கு எதிரான வெறுப்பாக வளர்க்கின்றனர். "ஐரோப்பியர்கள் கலாச்சாரமற்றவர்கள். நாம் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரத்தை கட்டிக்காப்பவர்கள்." என்ற கூற்று இன அடிப்படையில் தான் முன்வைக்கப்படுகின்றது. மேலைத்தேய கலாச்சார ஆதிக்கத்தை எதிர்க்கும் மத அடிப்படைவாதிகள், மேலை நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பாவனைப்பொருட்களை எதிர்ப்பதில்லை. அதியுயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மேற்குலக உற்பத்திப் பொருட்கள், குறிப்பாக ஆயுதங்கள் இன்றி அவர்களது இஸ்லாமியக் குடியரசு நிலைக்க முடியாது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட மாநிலங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். பல தசாப்தங்களாக நாட்டை இரும்புப்பிடியில் வைத்திருந்த சர்வாதிகாரம் மறைந்து, ஜனநாயகம் வந்த போது, முஸ்லிகள் தமக்கு ஷரியா சட்டம் வேண்டும் எனக் கோரினர். இதை அடுத்து ஏற்பட்ட கிறிஸ்தவ-முஸ்லிம் கலவரத்தால், இறுதியில் ஷரியா சட்டம் கொண்டுவர அரசு இணங்கியது. இது நடைமுறைக்கு வந்த பின்னர் தான், வதந்திகள் எவ்வளவு தூரம் ஆபத்தானவை என தெரிய வந்தது. அரசியல் சட்டப்படி, ஷரியா சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இரண்டு வகை நீதிமன்றங்கள் இருக்கின்றன. முஸ்லிம் அல்லாதவர்கள் தமக்கு விரும்பிய நீதி மன்றத்தில் நீதி கோரலாம். ஆனால் ஷரியா சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பாதிப்பான கொடுங்கோல் சட்டம் என்பது போல பரப்பட்ட வதந்தி பல உயிர்களை காவு கொண்டிருந்தது.

இஸ்லாமிய சட்டம் என பொதுவாக அறியப்பட்ட ஷரியா (பாதை) பற்றிய பரந்த அறிவு பலரிடம் இல்லை. பைபிளில் (பழைய ஏற்பாடு) மோசசிற்கு ஆண்டவன் அளித்த பத்துக் கட்டளைகள் தான் நவீன சட்டங்களின் மூலமாக கருதப்படுகின்றது. பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல சட்டங்கள், குர் ஆனிலும் இருக்கின்றன. அதே நேரம் அரேபிய குடாநாட்டின் பாரம்பரிய சட்டங்களும் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு. இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படை குர் ஆனாக இருந்த போதிலும், 12 ம் நூற்றாண்டில் தான் சட்டவாக்கம் முழுமை பெற்றது. அந்தக் கால கட்டத்தில் நான்கு சட்டக்கல்லூரிகள் நிறுவப்பட்டு, சட்டக் படிப்பில் புலமை பெற்றவர்களைக் கொண்டு ஆராய்ச்சிகள் நடந்தன. நான்கு கல்லூரிகளும் அதனை நிறுவிய அறிஞர்களின் பெயர்களால் அறியப்படுகின்றன. இஸ்லாமிய சட்டம் பற்றிய இந்த நான்கு கல்லூரிகளின் பார்வையும், கொடுக்கும் விளக்கங்களும் சில நேரம் வேறுபடுகின்றன. "ஹனாபி கல்லூரி" மிதவாத போக்குடையது. அதற்கு மாறாக "மாலிக் கல்லூரி" கடும்போக்கு பழமைவாதிகளை கொண்டது. "ஷாபி கல்லூரி" இவையிரண்டுக்கும் இடைப்பட்ட போக்குடையது. "ஹன்பலி கல்லூரி" வஹாபியரின் கோட்டை. இவை நான்கும் சவூதி அரேபியாவில் அமைந்திருந்தன. ஒரு காலத்தில் இஸ்லாமியப் பேரரசின் தலைநகராக இருந்த பாக்தாதில் "கானூன்" என்ற பெயரில், மிகவும் மாறுபட்ட மதச்சார்பற்ற சிவில் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இது பெரும்பாலும் இன்று நடைமுறையில் உள்ள மேற்கத்திய நவீன சட்டத்தை போன்றது.

இதிலிருந்து இஸ்லாமிய ஷரியா சட்டம், எந்தக் கல்லூரியால் முன்மொழியப்பட்டது என்பதைப் பார்ப்பதும் அவசியம். திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுவது போன்ற சரத்துகள் உள்ளன தான். ஆயினும் இது கடும்போக்காளரின் கல்லூரியில் மட்டுமே போதிக்கப்படுகின்றது. இத்தகைய கொடூரமான தண்டனைகளுக்கு மாற்றாக, மென்மையான தண்டனைகளை வழங்கும் நீதிமன்றங்களும் உண்டு. உதாரணத்திற்கு பாகிஸ்தானில் அமுலில் உள்ள ஷரியா சட்டம் அது கை வெட்டுவது போன்ற தண்டனைகளை வழங்குவதில்லை. மேலும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் காலகட்டத்தில் மட்டுமே கடுமையான சட்டங்களை குர் ஆன் முன்மொழிகின்றது. இதே நேரம் இறைத்தூதர் முகமது வாழ்ந்த காலத்தையும், அப்போதிருந்த அரேபிய சமூகத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அன்றைய சமூக கட்டுப்பாடுகள் எந்த அளவிற்கு மோசமாக இருந்தது, என்பதை ஒற்றியே இது போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு மாற்றானுடன் தகாத உறவு வைத்திருந்த பெண்ணை கல்லால் எறிந்து கொல்லும் தண்டனை பற்றி குர் ஆன் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், தகாத உறவைக் கண்ட நான்கு சாட்சிகள் தேவை. இப்படியான சம்பவங்களை நேரில் கண்ட நான்கு சாட்சிகளை தேடிப்பிடிப்பது இலகுவான காரியமல்ல. வதந்திகளை கேள்விப்பட்டே குற்றஞ் சாட்டப்பட்ட பெண்ணை கல் வீசிக் கொன்று கொண்டிருந்த சமூகத்தில், சாட்சிகளை விசாரித்த பிறகு தண்டனையை நிறைவேற்றுமாறு குர் ஆன் சட்டம் கொண்டு வந்தது. அன்றிருந்த பெண்களின் கையறு நிலையுடன் ஒப்பிடும் போது, இந்த சட்டம் பெண்ணுக்கு சில உரிமைகளை வழங்கியது. இயேசு வாழ்ந்த யூத சமூகத்திலும் அத்தகைய வழக்கம் இருந்ததை பைபிள் கதை ஒன்று எடுத்துக் காட்டுகின்றது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமிய மதத்தை நிந்தித்தற்காக சல்மான் ருஷ்டி என்ற எழுத்தாளருக்கு ஆயத்துல்லா கொமெய்னி வழங்கிய மரண தண்டனை தீர்ப்பிற்கு பின்னர், பத்வா என்ற சொல் உலகப்பிரசித்தி பெற்றது. அதிலிருந்து பலர் பத்வா என்றால் மரண தண்டனை என அர்த்தப்படுத்திக் கொண்டனர். ஆனால் அந்த சொல்லின் உண்மையான அர்த்தம் வேறு. ஒரு வழக்கறிஞர் தன்னிடம் சட்ட உதவி கேட்டு வருபவரிடம், சட்டப் புத்தகங்களை புரட்டி வழக்கு சார்பான விளக்கம் கொடுப்பார். அதை அடிப்படையாக கொண்டு நீதிபதி தீர்ப்பு சொல்வார். அதற்கு தான் பத்வா என்று பெயர். ஆனால் கொமெய்னி வழங்கிய பத்வா வேறு. அது அரசியல் நோக்கத்திற்காக மதத்தையும், சட்டத்தையும் திரித்த பத்வா. நமது காலத்து மத அடிப்படைவாதிகள் எல்லாம் இப்படி மதப்போர்வை போர்த்திய அரசியல்வாதிகள் தாம். பிற்போக்குவாதிகளின் விவேகமற்ற செயல்கள், பலரது கவனத்தை ஈர்க்கின்றன.

முஸ்லிம் பெண்கள் தலையில் இருந்து பாதம் வரை மூடும் "நிகாப்", அல்லது "பூர்க்கா", அல்லது "ஷடோர்" என்ற ஆடை அணிவது பற்றி உலகம் முழுவதும் பலவாறாக விவாதிக்கப் படுகின்றது. இந்த ஆடையின் பூர்வீகம் ஈரான். அங்கே ஷடோர் என அழைக்கப்படும் இந்த ஆடை, இஸ்லாமிற்கு முந்திய கலாச்சாரத்தை சேர்ந்தது. குர் ஆன் தோன்றிய காலத்தில், அரேபியாவில் இந்தப் பழக்கம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. புனித நூல் இது பற்றி தெளிவாக எங்குமே குறிப்பிடவில்லை. இறைத்தூதர் முகமதுவை பின்பற்றிய பெண்களுடன், அமைப்பை சேர்ந்த ஆண்கள் திரைக்கு பின்னால் இருந்தே பேச வேண்டும் என்று ஒரு வாசகம் உண்டு. மேலும் தம்மை வேறுபடுத்திக் காட்ட முஸ்லிம் பெண்கள் அடக்கமான ஆடை அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகின்றது. அனேகமாக திரை என்ற பொருள்படும் "ஹிஜாப்" என்ற அரபுச் சொல், உடலை மூடும் ஆடை என மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம். ஒரு வீட்டிற்கு ஆண்கள் விருந்தினராக செல்லும் நேரம், அந்த வீட்டு பெண்கள் திரை மறைவில் இருப்பர். இந்தக் குறிப்பு பைபிளிலும் வருகின்றது. இப்போதும் எமது நாடுகளிலும் சில பழமைவாதம் பேணும் குடும்ப பெண்கள், வீட்டிற்கு அந்நிய ஆண்கள் வந்தால் சமையலறைக்குள் சென்று விடும் பழக்கம் இங்கே நினைவுகூரத்தக்கது.

இஸ்லாமிய அரசர்கள் ஆண்ட காலத்தில், அவர்களின் அரண்மனையில் ஹாரம் (அந்தப்புரம்) என்ற பெண்களுக்கு தனியே ஒதுக்கப்பட்ட பகுதி இருந்தது. அந்தப்புரத்தில் இருந்த பெண்கள், வெளியுலகம் காணாது, சுதந்திரமின்றி அடைந்து கிடந்தனர். நாட்டுப்புறங்களில் ஏழைக் குடியானவன், தனது வீட்டில் தனியான அந்தப்புரம் வைத்திருக்க வசதியற்றவன். அதனாலும் தனது வீட்டுப் பெண்கள் உடலை மூடும் ஆடை அணிந்து வெளியே செல்லுமாறு கட்டுப்படுத்தி இருக்கலாம். நாட்டுப்புற பெண்கள், வயலில் சேலை செய்ய வேண்டி இருந்தது, அல்லது சந்தைக்கு சென்று வர வேண்டி இருந்தது. ஆகவே அந்தப்புரமாக இருந்தால் என்ன, உடலை மூடும் ஆடையாக இருந்தால் என்ன, பெண் அடக்குமுறையை நெறிப்படுத்தவே கொண்டுவரப்பட்டன. மத அடிப்படைவாதிகள் பூர்க்கா அணிவது பெண்களுக்கு பாதுகாப்பானது என புதிய வியாக்கியானம் சொல்கின்றனர். அப்படியானால் இன்றைய சமூகம் பாதுகாப்பற்றது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். சமூகக் குறைபாடுகளை களையாமல், பெண்களே உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுவது, ஒரு பிரச்சினைக்கான தற்காலிக தீர்வு மட்டுமே. இன்றைய முஸ்லிம் பெண்கள் தம்மை கட்டுப்பாடான மதப்பற்றாளர்கள் எனக் காட்ட, தலையை மூடி முக்காடு போரடுவது வேறு விடயம். 19 நூற்றாண்டு ஐரோப்பாவில், கத்தோலிக்க தேவாலயத்தினுள் பிரார்த்தனைக்கு போகும் கிறிஸ்தவ பெண்களும் முக்காடு அணிந்திருந்தனர்.

இஸ்லாமிய மதம் மட்டுமல்ல, கிறிஸ்தவ, யூத மதங்கள் கூட ஆணாதிக்க சமுதாயத்தில் உருவானவை தான். சமநிலையற்ற சமுதாயம் பற்றி குறிப்பட்ட மதங்கள் கேள்வி எழுப்பாததுடன், அதை சாதாரண தோற்றப்பாடாக ஏற்றுக் கொள்கின்றன. இஸ்லாமிய மதம் தோன்றிய முகமதுவின் காலத்தில் பெண்களின் நிலை வேறு விதமாக இருந்தது. முகமது தலைமையிலான இஸ்லாமியப்படையில் பெண் வீராங்கனைகளும் இருந்தனர். பண்டைய அரேபிய சமுதாயத்தில் இஸ்லாம் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும், சீர்த்திருத்தியது. இறைத்தூதர் முகமதுவே ஒரு விதவையை மணந்து கொண்ட விடயம் குறிப்பிடத்தக்கது. விதவைகள் மறுமணம் அப்போதே ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெண்களுக்கான சொத்துரிமையை குர் ஆண் அங்கீகரித்தது. இருப்பினும் தற்கால மத அடிப்படைவாதிகள் கொண்டுவர விரும்பும் சொத்துரிமைச் சட்டங்கள், பெண்களை ஆண்களில் தங்கி இருக்கச் செய்யும் நோக்கம் கொண்டவை. ஜோர்டான், வளைகுடா நாடுகள், (தாலிபானின்) ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், "மனைவி தனது சொத்தை விற்க கணவனின் அனுமதி பெற வேண்டும்" என்ற சட்டம் உள்ளது. இதே சட்டம் "தேச வழமைச் சட்டம்" என்ற பெயரில் இலங்கையில் யாழ் குடாநாட்டில் அமுலில் உள்ளது. அங்கே இந்த சட்டத்தை கொண்டுவந்தவர்கள், சைவ மதத்தை சேர்ந்த தமிழ் பழமைவாதிகள்.
---(தொடரும்)---

16 comments:

kalagam said...

\\இஸ்லாமிய மதம் மட்டுமல்ல, கிறிஸ்தவ, யூத மதங்கள் கூட ஆணாதிக்க சமுதாயத்தில் உருவானவை தான். சமநிலையற்ற சமுதாயம் பற்றி குறிப்பட்ட மதங்கள் கேள்வி எழுப்பாததுடன், அதை சாதாரண தோற்றப்பாடாக ஏற்றுக் கொள்கின்றன.\\

மற்றவர்களை ஏற்றுக்கொள்ளவும் செய்து விட்டன

கலகம்

Kalaiyarasan said...

Thank you for the comment.

pukkakku said...

only hindu religion is the true. great religion. am i right Mr. Kalaiyarasan

Kalaiyarasan said...

pukkakku வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
நான் இங்கே இந்து சமயத்தை ஆய்வுக்குட்படுத்தவில்லை. அதற்காக இந்து மதம் சிறந்தது என்று அர்த்தமல்ல.

Faaique said...

Some wrong informations areincluded.. pls conform..

Faaique

Kalaiyarasan said...

Some wrong informations areincluded.. pls conform..

Faaique
அந்த தவறான தகவல்களை குறிப்பிட்டு சொல்ல முடியுமா?

Anonymous said...

ALWAYS I SAYS TO U FIRST YOU READ AND UNDERSTAND ABT ISLAM AFTER U WRITE OR SPEAK ABT ISLAM.WE SAYS HEEJAB IS A ONE AF SAFTY FOR LADEIS.WE ALLOW QURANIC LAW IN SAUDIARABIA.SO THERE IS VERYLOW CRIMINAL ACT.BT U SEE INDIA AND OTHER COUNTRY WE HAVE LOT OF CASES STILL NOW NT FOR END IN OUR COURT.

H.ரஜின் அப்துல் ரஹ்மான் said...

இந்தியாவில் இருக்கும் எவனுக்கும் ஆணாத்திக்கம் பற்றி பேச அருகதை இல்லை.அதுவும் இஸ்லாம் ஆணாதிக்க அடிப்படை உடையது என்று,அதனை முழுமையாக அறிந்த எவனும் கூறமாட்டான்.இஸ்லாம் குறித்த முழுமையான அறிவு இல்லாமல் அதனை பற்றி கட்டுரை பதிவது,அதை அறியாதவர்களின் மனதில் விஷத்தை புகுத்தும் செயல்.
இஸ்லாத்தில் பர்தா முறை,அதை அணியும் கண்ணியாமான பெண்களுக்கும்,அதன் அவசியம் அறிந்த ஆண்களுக்கும் விளங்கும்.மற்றவர்களுக்கு...அது அடிமைதனமாகவே தெரியும்.இஸ்லாம் பெண்களுக்கு அளித்து இருக்கும் உரிமைகளை பற்றி (அறிந்தும் )அறியாமல்,பதியும் நீங்கள் இஸ்லாத்தை களங்கபடுத்த எடுத்த முயற்ச்சியே,இந்த வலை தளம்...என தெளிவாக விளங்குகிறது.

H.ரஜின் அப்துல் ரஹ்மான் said...

ஆடை குறைப்பை பற்றி வாய் கிழிய பேசும் மேற்குலகத்தின் நோக்கம் என்ன? பெண்ணுக்கு சுதந்திரம் அளிப்பதா...அல்ல....அவள் அனுமதியுடன் அவளின் அங்கங்களை, நாக்கை தொங்கவிட்டு கொண்டு அனுபவிக்க.ஒரு பெண் ஆடை குறைப்பதால் அவளுக்கு லாபமா அல்லது,வக்கிர புத்தி கொண்ட ஆண் வெறியர்களுக்கு லாபமா.? இது அனைவருக்கும் தெரியும். ஆடை என்பது உடலை மறைப்பதர்க்கே என்பது,அடிப்படை..ஆடையை குறைத்து மறைக்கவேண்டிய அங்கங்களை புறந்தள்ளி திரிவது ஒருவருக்கு அசௌகரியமே தவிர பயன் ஒன்றும் அல்ல.(ஒரு பெண் தனது மார்பகத்தை காட்டிக்கொண்டு அலைவதால் அவளுக்கு என்ன பயன்.அது வக்கிர ஆண்களுக்கு விருந்து.)மேற்க்கத்திய நாகரிக வித்தகர்கள் ஆடை வடிவமைப்பு என்ற போர்வையில் குறை ஆடை வடிவமைத்து அவர்களின் வக்கிரகத்தை நிலைநாட்டி கொண்டனர். நீங்கள் கேட்கலாம் பெண்களுக்கு எங்கே போச்சு அறிவு,அவர்கள் ஏன் இந்த வடிவமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று....அது நமக்கே உரிய பலகீனம்..ஒரு பெரிய நிறுவனம் அறிமுகம் செய்யும் பொருள்,நமக்கு பயனற்றதாக இருந்தாலும்,அதன் விற்பனை யுக்தி,நம்மை முட்டாள் ஆக்கி கட்டாயம் வாங்க வைத்துவிடும்.இது நிதர்சனம்.அது தான் அங்கு நடந்தேறி இருக்கிறது.
அதையே ஆண்களுக்கு ஏன் இந்த நாகரிக உலகம் எடுத்து வைக்க முயலவில்லை.ஆண்களும் ஆடை குறைத்து அலையும் படி நாகரிக வித்தகர்கள் ஏன் ஆடை வடிவமைத்து பரப்பவில்லை....? ஏன் அது ஒன்றுக்கும் உதவாது.உளவியல் ரீதியாக,மானுட அமைப்பின் படி ஒரு பெண்ணே கவர்ச்சியானவள்.அந்த கவர்ச்சி,மற்றொரு ஆண் கவரப்படுவதற்கு,அமைந்த இயற்க்கை நியதி.ஆனால் அது ஆறறிவு படைத்த மனித குலத்துக்கு,சில வரை முறை உண்டு,ஒழுக்கங்கள் உண்டு.நாகரீகத்தின் அடிப்படையே ஆடைதான்.ஆடை குறைப்பின் மூலம் திரும்பவும் மனிதன் கற்காலம் நோக்கி பயணப்படுகிறான்,,,அதே நாகரீகம் என்ற போர்வையில்........

Kalaiyarasan said...

Razin,
கலாச்சாரம் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு நன்றி. பிற மதங்களைப் போலவே இஸ்லாமிலும் நல்ல கருத்துகளும், அதே நேரம் பிற்போக்கான கருத்துகளும் உள்ளன. நல்ல கருத்துகளை வரவேற்கும் அதே சமயம், பிற்போக்கான கருத்துகளை விமர்சனத்திற்கு உட்படுத்துவதும் அவசியம். ஒரு கொள்கையை கண்மூடித்தனமாக பின்பற்றுவது தவறான பின் விளைவுகளையே கொண்டு வரும்.

பெண்கள் எப்படிப்பட்ட ஆடை அணிய வேண்டும் என்று அவர்களே தீர்மானிக்கட்டும். பெண்கள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று, ஆண்கள் அவர்கள் மேல் கட்டுப்பாடுகளைப் போடுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. பெண்ணின் உடம்பை பால் இச்சையை தூண்டும் பொருளாக பார்ப்பது அந்த ஆணின் குறைபாடு. வெப்ப மண்டல நாடுகளில் இப்போதும் சில ஆதிவாசி இனப் பெண்கள் இடுப்பை மறைக்கும் துண்டுத் துணியுடன் காணப்படுவது, ஆண்களின் பாலியல் இச்சையை தூண்டுவதற்காக அல்ல. வெப்பமான காலநிலையில் எப்படி உடலை மூடி ஆடை அணிய முடியும்? காலநிலை மாற்றங்களுக்கு தாக்குப் பிடிப்பதற்காகவே மனிதன் ஆடை அணியத் தொடங்கினான்.

இஸ்லாமிய மதத்தில் ஆணாதிக்கம் அறவே இல்லை என்று ஒரு பெண்ணியவாதி சொல்லட்டும். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உங்களது விளக்கத்தில் ஒவ்வொரு சொல்லிலும் ஆணாதிக்கம் கொப்பளிக்கின்றது. முதலில் பெண்ணின் உடல் என்பது பாலியல் பண்டம் என்ற தவறான எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு இஸ்லாமில் பெண்களின் மேன்மை பற்றி பேச வாருங்கள்.

H.ரஜின் அப்துல் ரஹ்மான் said...

கலையரசன் அவர்களுக்கு.
தங்களுடைய பிளாக்கில்,நான் எனது கருத்தை சற்றே நாகரீகம் அற்ற முறையில்,பதிந்து இருப்பது,நீங்கள் எனக்கு அனுப்பிய பதில் மூலம்,எனது பதிவை திரும்ப படிக்கும் பொது விளங்கியது.அது,தங்களையோ.அல்லது யாருடைய மனதையோ புண்படுத்தும் நோக்கில் பதியப்பட்டது அல்ல.இஸ்லாம் ,மற்றும் பெண்கள் சம்பந்தமாக,தாங்களும் மற்றவர்களும் தவறாக புரிந்து வைத்துள்ளதை,எண்ணி,அவசரமாக பதில் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பதிந்த கருத்து.வாக்கிய பிழை இருப்பின் மன்னிக்கவும்.
என்னுடைய கருத்தில் ஆணாதிக்கம் இருப்பதாக எழுதி இருந்தீர்கள்.என்னுடைய கருத்து முறையான வாக்கிய அமைப்புடயதாக இல்லை.அதுவே காரணம்....
இஸ்லாம் பெண்களை எப்படி அணுகவேண்டும்,அவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்,அவர்களுக்கான உரிமைகள் என்ன.என்ற அனைத்தையும்,தெளிவாக எமக்கு கற்று தந்துள்ளது.அதை விளங்கியவன் என்ற முறையில்,பெண்களை மதிக்கவும்,கண்ணியப்படுத்தவும் தெரிந்தவன் நான்.பெண்களுக்கான சட்டங்களும்,வரை முறைகளும்,எந்த ஒரு ஆணாலும் எழுதப்பட வில்லை.இது இறைவன் இட்ட கட்டளை.இது அல்லாத சில சட்டங்கள் (என்ற பெயரில்) இடைக்காலத்தில் இஸ்லாத்தில் புகுத்தப்பட்டது உண்மைதான். அதைகொண்டு,இஸ்லாத்தை குறை கூறுவது முற்றிலும் தவறு.

இஸ்லாம் சம்பந்தமான,தங்களுக்கு
தெரியாத,சட்டங்கள் மற்றும் சில கட்டுரைகளை உங்களுக்கு அனுப்ப விருப்பபடுகிறேன்.
தங்களுடைய இ மெயில் முகவரி தரவும்.
பதிலுடன் முகவரியையும் எதிபார்க்கிறேன்.

நன்றி

Regards,
H.Razin Abdul Rahman,
Mechanical Engineer,
Dubai.
razinabdul@gmail.com

Kalaiyarasan said...

நன்றி Razin.

உங்கள் கருத்து எதுவும் எனது மனதை புண்படுத்தியதாக நான் கருதவில்லை. மாறாக நான் எழுதியதை நீங்கன் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். நான் இஸ்லாமியக் கல்வியில் பாண்டித்தியம் பெறவில்லை. இருப்பினும் அது பற்றி நிறையவே படித்துள்ளேன். புனித குர் ஆன் முதல் அனைத்து இஸ்லாமிய பிரிவுகளினதும் நூல்களை ஆழ்ந்து கற்றுள்ளேன். அது தவிர இஸ்லாமிய வரலாறு சம்பந்தமாக பல நூல்களை வாசித்துள்ளேன். நிறைய ஆராய்ந்துள்ளேன். அப்படி இருக்கையில் எனக்கு இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாது என்பது போல எழுதியிருப்பது தான் தவறானது. எனது கட்டுரைகளை அனைத்தையும் நீங்கள் முழுமையாக வாசிக்கவில்லைப் போல தெரிகின்றது. இஸ்லாமில் உள்ள நல்ல கருத்துகளை எடுத்துக் காட்டும் போது, பலர் என்னை ஜிஹாத்திற்கு ஆதரவளிப்பதாக அவதூறு கூறியுள்ளனர். எனது எழுத்து ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி எழுவதைப் போல இருப்பதாக கூறியுள்ளனர். அதே நேரம் இஸ்லாமில் உள்ள சில பிற்போக்கு கருத்துகளை விமர்சித்தால் உங்களைப் போன்ற மதவாதிகள், உடனே எனக்கு இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாது என்று சொல்கின்றனர். நீங்கள் எல்லோரும், உங்களது கொள்கையை நூறு வீதம் ஏற்றுக் கொண்டு எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தால், அது தவறு. அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் பெரும்பான்மையானோர் ஏற்றுக் கொள்ளத் தக்கவாறு நடுநிலையான கருத்துகளை சொல்வதே எனது கடமை.

எதுவும் நூறு வீதம் சரியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது அறிவீனம். ஒரு மதக் கருத்து இறைவனால் எழுதப்பட்டது என்று சொல்லிவிட்டாலே அது சரியானது என்று வாதிக்க முடியாது. அப்படியானால் இஸ்லாம் என்ற மதத்திற்குள்ளேயே பல பிரிவுகளும் எதிர்வாதங்களும் ஏன் தோன்ற வேண்டும்? எல்லோரும் இறைவனின் பெயரால் தமது தவறான கருத்துகளையும் நியாயப்படுத்துகின்றனர்.

நீங்கள் kalaiy26@gmail.com என்ற முகவரிக்கு உங்களிடம் இருக்கும் விபரங்களை அனுப்பலாம். எதையும் படித்துப் பார்க்க தயாராகவே இருக்கிறேன்.

கடையநல்லுார் மசூது said...

ஹிஜாப் சம்பந்தமாகவும், பெண்கள் அடிமைப்படுத்தப்படுதல் சம்பந்தமாகவும், மேலும் இஸ்லாத்தில் உள்ள அனைத்து வகையான சந்தேகங்களுக்கு இந்த லிங்க் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/nonmuSlim_dava/

சந்தேகங்களுக்கு மேலும் தொடரலாம்....

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

பட்டைய கிளப்புங்கள், கலை!

நீங்கள் எழுதும் பதிவுகள் பல சந்ததிகளுக்கே உபயோகப்படும்.

(அப்போது பகுத்தறிவு இன்னும் மிகுந்திருக்கும். வாசகர்கள் எளிதாய் புரிந்து கொள்வர். இதை போல வாக்குவாதம் இருக்காது)

நன்றி.

அபூ முப்ளிஹா said...

Manithargal anaiwargalum samam enbaduthuthan Islathin adippadai niram moli inam kudumbam nadu endra enda verupadum kidayaadhu enbathia kali purindhu kollaum.athudan ippadi pothikkum oray markam Islam mattumay ulakhathil. pengalukku thani urimai sothurimai ponndra ulahill ewaraalum kodukkappadatha urimaikalay islam mattumey pengalukku walnguhirathu inium entha oruwaraalum mudiyaathu. eaaen enli islam ondray final religion of God.

ramnido said...

razin இன் பதிவில் இறுதி வரை கூறுவது என்னவென்றால் "ஆண்கள் இப்படித்தான் இருப்போம். பெண்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்." நான் இஸ்லாத்தில் இருந்து அதிகமாக கற்றுக்கொண்டவன். ஆனால் அதற்காக தவறான கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..கடவுள் கூறினார் என்பதற்காக கண்மூடித்தனமாக நம்புவது முட்டாள்தனம். உங்கள் மதம் சரியாகத்தான் கூறுகிறது என்ற இஸ்லாமியனாக இல்லாமல் பொது மனிதனாக சிந்தித்து பார்த்தால் நான் கூறுவது புரியும். அப்படி அடிப்படை சிந்தனை கூட இல்லாத யாரும் ஆறறிவு பெற்றவர்கள் என்று கூற அருகதையற்றவர்கள்.......