Thursday, June 19, 2008

"இனம்" காணப்பட்ட தேசியம்


"இலங்கைத்தமிழர்" என்ற ஒற்றை அடையாளப்படுத்தலுடன், எமது அறியாப்பருவத்திலிருந்தே தேசியபாடம் ஆரம்பிக்கிறது. இலங்கையில் சர்வசாதாரணமாகவே இனம் என்பதை குறிப்பிட, ஆங்கிலத்தில் உள்ள "Race" என்ற சொல்லை பாவிப்பது குறித்து படித்தவர்களிடம் கூட தெளிவின்மை காணப்படுகின்றது. "Sinhala race", "Tamil race" என்று கூறுவது சரியானதா?

"Race" என்ற சொல்லை உருவாகிய ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பாக "வெள்ளை-ஐரோப்பிய", "கருப்பு-ஆப்பிரிக்க", "மஞ்சள்-சீன" வகை மனிதப்பிரிவுகளை குறிக்கவே பயன்படுத்துகின்றனர். இருப்பினும் ஆங்கிலேயர்கள் இலங்கையில் ஆங்கில மொழியை அறிமுகப்படுத்தியதுடன் நில்லாது, கூடவே "Racism" என்ற ஒன்றையும் கற்பித்து விட்டு சென்றுள்ளனர். சிங்களவர்கள் ஆரியரின் வழித்தோன்றல்கள், தமிழர் திராவிடரின் வழிதோன்றல்கள் என்பது கூட சில ஆங்கிலேய அறிஞர்களின் கண்டுபிடிப்பு தான். அதற்கு முன்பு தாம் சார்ந்த மன்னனுடனும், அல்லது மதத்துடனும் அடையாளம் காணப் பழகிய மக்கள் மத்தியில் ஆரிய, திராவிட கருத்தியல்கள் தூவப்பட்டதும் அந்தக்காலகட்டத்தில் தான்.

இன்று இலங்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து இன மக்களிடமும் மரபணு(DNA) சோதனை செய்யப்பட்டால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம். மரபணு அடிப்படையில் இலங்கைத்தமிழருக்கும், சிங்களவருக்கும் இடையில் அதிக ஒற்றுமை இருக்கும். அதேநேரம் இலங்கைத்தமிழருக்கும், இந்தியத்தமிழருக்கும் இடையில் வேற்றுமையும் இருக்கும். அதே போல கணிசமான சிங்களவர்கள், இந்திய தமிழருடன் ஒத்த மரபணுக்களை கொண்டிருப்பர். உலகின் பலபாகங்களிலும் இனங்களின் கலப்பு நடந்ததும், பின்னர் மொழியடிப்படையில் பிரிந்ததற்கும் நிறைய உதாரணங்கள் உள்ளன. ஏற்கனவே இனப்பிரச்சினை கூர்மையடைந்துள்ள அயர்லாந்தில் மரபணு சோதனை செய்த விஞ்ஞானிகள் இதுபோன்ற முடிவுகளுக்கு வந்தனர்.

மொழி அடிப்படையிலான தேசியம் கூட ஒரு ஐரோப்பிய கண்டுபிடிப்பு தான். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இராசதானிக்குள் பல்வேறு மொழிகள் பேசும் மக்களை ஒன்றிணைக்க மதம் உதவியது போல; மன்னனின், மதத்தின் ஏகபோக அதிகாரத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த மத்தியதர வர்க்கம், புதிதாக "பிரசைகள்" என்று அழைக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க மொழியை பயன்படுத்தியது. அது பின்னர் ஏகாதிபத்திய உருவாக்கத்திற்கும் தனது பங்களிப்பை செய்தது. இலங்கையில் ஏகாதிபத்திய மொழியில் கல்விகற்ற உள்ளூர் மத்தியதர வர்க்கம் பின்னர் உள்ளூர் மொழிகளை தமது நன்மைகளுக்காக வளர்க்க வேண்டிய தேவை உருவாகியது. தன்னை போலவே சிந்திக்க வைப்பதற்காக கல்வியூட்டும் ஏகாதிபத்திய நிர்வாக முறை பண்டைய எகிப்திலும் நிலவியது. ஆங்கிலேயரும் அதையே செய்தனர். எல்லாவற்றிலும் அனுகூலங்களும், பிரதிகூலங்களும் உள்ளது போலவே, இந்த கல்விமுறையும் அமைந்தது. ஒருபக்கம் ஏகாதியபத்திய நலன்களை பாதுகாக்கும் அதேநேரம், பூர்வீக மொழிகள், கலாச்சாரம் என்பன மறுமலர்ச்சி காண்கின்றன. எகிப்தில் தோன்றிய அரபு-இஸ்லாமிய மறுமலர்ச்சி, இந்தியாவில் இந்து மறுமலர்ச்சி, இலங்கையில் சிங்கள-பௌத்த மறுமலர்ச்சி என்பன பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழே தான் தோன்றின.

எல்லாவற்றையும் கற்றுகொடுத்த ஐரோப்பியர்கள், தேசியம் என்ற சொல்லை தமது தாயகங்களை குறிக்கவே நீண்ட காலமாக பயன்படுத்தினர். பிற்காலத்தில் காலனிய காலகட்டத்தில் பிரிக்கப்பட்ட நிர்வாக அலகுகள் சுதந்திர நாடுகளாக மாறியபோது, அவற்றிற்கும் தேசியம் பொருத்தப்பட்டது. அன்றிருந்த ஐரோப்பிய மையவாத கண்ணோட்டம், ஆப்பிரிக்க, ஆசியாவில் இருந்த பல்வேறுபட்ட மக்கட்குழுக்களை "இனங்கள்" என்ற வரையறைக்குள் பார்த்தது. அதனால் தான் மேற்கத்தைய ஊடகங்கள், அரசாங்கங்கள் இன்றும் இலங்கையில் நடப்பதை "இனப்பிரச்சினை" என்று குறிப்பிடும் அதே சமயம், அயர்லாந்தில், யூகோஸ்லேவியாவில் நடந்ததை "மதப்பிரச்சினை" என்றனர். ருவண்டாவில் "இனப்"படுகொலைகளில் இறங்கிய ஒரே மொழி பேசும், ஒரே மதத்தை சேர்ந்த ஹூட்டு, துட்சி பிரிவுகள் எந்த அடிப்படையில் இனங்கள் என்று அழைக்கப்படுகின்றன? ஒரே மாதிரி(கருப்பினத்தை சேர்ந்த) தோற்றமளிக்கும், சூடான் அரபு மொழி பேசுவோருக்கும், டார்பூர் பிராந்திய மொழி பேசும் மக்களுக்கும் இடையில் நடக்கும் யுத்தம், எதற்கு இனவாத பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது? ஒரே மொழியை பேசுபவர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்களா? அப்படியானால் "செர்போ-குரவசிய" மொழி பேசும் செர்பியரும், குரவசியர்களும் எப்படி வேறு இனங்களாகும்?

பல கேள்விகள் இவ்வாறு கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும். விடை தான் கிடைக்காது. மிகவும் பொருந்தக்கூடிய பதில் ஒன்று மட்டுமே உள்ளது. 19 ம் நூற்றாண்டில் தோன்றிய புதிய அரசியல் தத்துவமான "தேசியம்" என்ற சொற்பதம் இன்றைய பிரச்சினைகள் பலவற்றிற்கு காரணமாக உள்ளது. குறிப்பிட்ட பிரதேசத்தில் காலங்காலமாக வாழ்ந்து வரும், தமக்குள் இலகுவாக தொடர்பு ஏற்படுத்தக் கூடியதாக உள்ள மொழி பேசும் மக்கள் குழுக்கள் தாம் ஒரு தேசியமாக பரிணாம வளர்ச்சி அடைவதை விரும்புகின்றனர். ஒரு சில வேளைகளில் அது மதம் சார்ந்ததாக உள்ளது. உதாரணத்திற்கு யூகோஸ்லேவியாவில் (கத்தோலிக்கரான) குறோவசியர்கள், (கிரேக்க-கிறிஸ்தவ) செர்பியரிடம் இருந்து தம்மை வேறுபடுத்தி பார்த்தனர். வேறு சில நேரம் அது பிரதேசம் சார்ந்ததாக உள்ளது. உதாரணத்திற்கு அரபு மொழி பேசும், அதேநேரம் மதத்தால் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களுமான பாலஸ்தீனியர்கள், தமக்கென "பாலஸ்தீன தேசியம்" ஒன்றை உருவாக்கினர். அதற்கு மாறாக இஸ்ரேலியர்கள் யூத மதத்தால் மட்டுமே ஒற்றுமையை கொண்டுள்ளனர். அவர்களுக்கிடையில் இருந்த பல்வேறு மொழி பேசுவோர், மறைந்த ஹீப்ரு மொழியை புதிதாக கற்றுக்கொண்டு புதிய தேசியம் படைத்தனர். யூதர்களிடையே காணப்படும் இன/நிற வேறுபாடுகள், அந்த தேசியம் வலிந்து உருவாக்கப்பட்டது என்ற கருத்துக்கு வலுச்சேர்க்கின்றது.

இனம் தொடர்பான சிக்கல்கள் இத்துடன் முடியவில்லை. அவை வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு விதமாக இனங்காணப்படுகின்றன. ஒருபக்கம் தமது "வேர்களை தேடும்" இனங்கள் தேசியங்களை உருவாக்கி நிலைநிறுத்த பட்டுபட்டுக் கொண்டிருக்கும் காலத்தில்; மறுபக்கம் இனப்பிரச்சினையின் வேர்களை தேடும் ஆய்வுகளும் தொடரட்டும்.

_____________________________________________________

No comments: