Monday, May 19, 2008

தென் ஆப்பிரிக்கா: "வெளிநாட்டவர் வேண்டாம்! வேலை வேண்டும்!!"

தென் ஆப்பிரிக்காவில், புலம்பெயர்ந்து வாழும் சிம்பாப்வே, மொசாம்பிக் ஆகிய நாட்டு மக்கள், கலவரத்தில் கொல்லப்பட்டனர். ஜோஹனஸ்பெர்க் நகரில் இடம்பெற்ற வெளிநாட்டவருக்கெதிரான கலவரத்தில், 22பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் பொலிஸ் நிலையங்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சமடைந்தனர். இது நிறவெறி ஆட்சிக்கு பிந்தைய தென்னாப்பிரிக்கவில் இடம் பெற்ற மிக மோசமான கலவரம். மேற்கத்திய ஊடகங்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தென் ஆப்பிரிக்கா சிம்பாப்வே மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று கோருகின்றன. ஆனால் இந்தப் பிரச்சினை வழக்கமான வேலை வாய்ப்பின்மை(தென் ஆப்பிரிக்காவில் வேலையற்றோர் 30%), அல்லது முதலாளித்துவ பொருளாதாரத்தின் இருண்ட மறுபக்கம் என்று பார்க்கத்தவறுகின்றன.
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையின ஜனநாயகம் (நிறநாயகம்) ஆட்சியில் இருந்த காலத்தில், பெரும்பான்மை கறுப்பர்கள் ஆட்சிக்கு வந்தால், அனைத்து பொருளாதார பிரச்சினைகளும் முடிவுற்று விடும், என்று அப்பாவித்தனமாக நம்பினார், கறுப்பின மக்கள். ஆனால் பதவிக்கு வந்த நெல்சன் மண்டேலா என்றாலும், தபோ முபெகி என்றாலும் முதலாளித்துவ நியோ-லிபரல் பொருளாதாரம் நீடிக்க வழி வகுத்தனர். இதிலே மண்டேலா தனக்கு கம்யூனிசம் பற்றி தெரியும் ஆனால் தான் கம்யூனிஸ்ட் அல்ல என்று கூறியவர். தபோ முபெகியோ ஒரு மார்க்சிஸ்டின் மகன். இருவரும் தென் ஆப்பிரிக்காவின் தொழிற்சங்க கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் துணையுடன் பதவிக்கு வந்தவர்கள். இருப்பினும் மேற்குலகை அனுசரித்து, முதலாளித்துவ பொருளாதாரத்தை அப்படியே இருக்க விட்டார்கள்.

விளைவு? எல்லா நாட்டிலும் நடப்பது போல அதி குறைந்த கூலி கேட்கும் வேலையாட்களையே வேலைக்கு எடுக்க விரும்பும் முதலாளிகள், வறுமையான அயல் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு வேலை வாய்ப்பளித்தனர். தென் ஆப்பிரிக்காவின் தங்கச்சுரங்கங்கள் இவர்களின் உழைப்பால் பலனடைந்தன. அதேநேரம் தென் ஆப்பிரிக்கவிலேயே வேலையற்ற தொழிலாளர்கள் பொறாமை கொண்டு தமது வேலைகளை, அயல் நாட்டினர் பறிப்பதாக நினைத்து, இந்த கலவரத்தில் இறங்கியுள்ளனர். சிறு வர்த்தகத்தில் ஈடுபட்ட சோமாலியர்களும் வன்முறைக்கு தப்பவில்லை. பூகோள மயப்பட்ட வேலையில்லாப்பிரச்சினை பற்றி கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.

இந்த செய்தியை தனது முதல் பக்கத்தில் வெளியிட்ட லண்டன் டைம்ஸ் பத்திரிகை, தென் ஆப்பிரிக்க வன்செயலில் பாதிக்கப்பட்டவர்கள் சிம்பாப்வே நாட்டினர் என்ற காரணத்தினால் அந்நாட்டு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று எழுதியுள்ளது. இதே டைம்ஸ் ஊடக தர்மம் கருதி, ஐரோப்பாவில் ஆசிய/ஆப்பிரிக்க நாட்டினர் பாதிக்கப்படும் போதும் இப்படி எழுதுமா? கடந்த தசாப்தங்களாக, இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் ஆசிய, ஆப்பிரிக்க அகதிகள், அல்லது குடிவரவாளர்கள், வெள்ளையர்களால் தாக்கப்பட்ட போது; அந்த சம்பவங்களை வெறும் நிறவெறி வன்முறையாக காட்டின. ஆனால் பிரச்சினை எங்கேயும் ஒன்று தான். அது தென் ஆப்பிரிக்கவாக இருந்தாலென்ன, அல்லது இங்கிலாந்தாக இருந்தாலென்ன, முதலாளித்துவ சீர்திருத்தங்கள் காரணமாக, உள்ளூர் மக்கள் வேலை இழப்பதும், வெளிநாட்டவருக்கு குறைந்த ஊதியம் கொடுத்து, அதிக லாபம் சம்பாதிக்கும் முதலாளிகள் தமது சொந்த மக்களையே கண்டு கொள்ளாததும், எல்லா நாடுகளிலும் நடப்பது தான். முதலாளிகளுக்கு லாபம் மட்டும் முக்கியமே தவிர, தமது தேச நலன் முக்கியமல்ல.

கடந்த வருடம் ஜெர்மனியில் ஒரு இந்திய கணனிப் பொறியியலாளர் கடுமையாக தாக்கப்பட்டார். அப்போதும் அவரை தாக்கிய ஜெர்மன் இளைஞர்கள், இந்தியர்கள் தமது வேலைகளை பறிப்பதாக சொல்லித் தான் தாக்கினர். அடிமட்ட தொழிலாளர்களின் தொகை ஐரோப்பாவில் அதிகமாக இருப்பதால், அப்படியானவர்கள் வருவதை விரும்பாத ஐரோப்பிய யூனியன் நாடுகள் கணனிப் பொறியியல் வல்லுனர்களுக்கு தொழில் ஒப்பந்தம் வழங்கி வருகின்றன. அதேநேரம் அந்த வேலைகளுக்கு, அதே துறையில், ஐரோப்பாவில் கல்வி கற்றவர்கள் இருந்த போதும், அவர்கள் வேலை வாய்ப்பின்றி கஷ்டப்படுகின்றனர். அப்படி இருந்தும், இந்திய பொறியியலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி வேலைக்கு வைத்திருக்கின்றன IT நிறுவனங்கள்.
துரதிர்ஷ்டவசமாக இத்தகைய வெளிநாட்டவர் மீதான வன்முறைகள் தொடரும் போக்கே புலப்படுகின்றது. இத்தனை நிறவெறி, இனவெறி,மதவெறி என்று பிரச்சினையை திசை திருப்பாமல், வேலையில்லாப்பிரச்சினையை தீர்க்க சம்பத்தப்பட்ட நாட்டு அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் வெளிநாட்டவர் எப்போதுமே வெறுக்கப்படவில்லை. ஐரோப்பாவில் அனைவருக்கும் வேலை இருந்த ஒரு காலத்தில், வெளிநாட்டு தொழிலாளர்கள் வரவேற்க்கப்பட்டனர்.

______________________________________________

No comments: