உலகில் மனித உரிமைகள் மீறும் நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்தும் சேர்ந்துள்ளது. இவ்வாறு Human Rights Watch அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகின்றது. நெதர்லாந்தின் புதிய குடிவரவாளர் சட்டங்கள் கடுமையாக இருப்பதுடன், அது பல்வேறு நாட்டு மக்களை பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2006 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி, நெதர்லாந்து பிரஜை, அல்லது நெதர்லாந்தில் நிரந்தரமாக வசிக்கும் ஒருவரை திருமணம் செய்யும் வெளிநாட்டு பிரஜை இந்நாட்டின் டச்சு(நெதர்லாந்து) மொழி அறிவை பெற்றிருத்தல் வேண்டும். இதற்காக € 350,- செலுத்தி பரீட்சை எழுதி சித்தி அடைவதுடன், € 850,- கட்டி குடிவரவு விசா பெற்றுக்கொண்ட பின்னரே, புதிதாக மணம் முடித்த தம்பதிகள் ஒன்றுசேர முடியும். அதே நேரம் அவர்கள் 21 வயதிற்கு மேற்பட்டோராயும் இருக்க வேண்டும்.
சர்வதேச மனித உரிமை நிறுவனம் இந்த சட்டம், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக அமைந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. முதலில் நெதர்லாந்து நாட்டில் வாழும் கணவன் அல்லது மனைவி தனது வாழ்க்கைத்துணையை பொறுப்பேற்பதற்கு, அடிப்படை சம்பளத்தை விட 120 % அதிகமாக எடுக்க வேண்டும். இது 23 வயது வரையான நபர்களுக்கு சாத்தியப்பட்டாத விடயம். இரண்டாவதாக கல்வியறிவு குறைந்தவர்களுக்கு பரீட்சையில் சித்தியடைவது கடினமாக இருக்கும். இது போன்ற காரணங்களால் புதுமண தம்பதிகள் வருடக்கணக்காக பிரிந்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இவ்வாறு பிரித்து வைப்பது குடும்ப நல சட்டங்களுக்கு முரணானது என்று, சுட்டிக்காட்டியுள்ள Human Rights Watch, நெதர்லாந்து அரசாங்கம் தனது கடும்போக்கை மாற்றிக்கொள்ளுமாறு கோரியுள்ளது. ஆனால் மனித உரிமைகள் பற்றி உலகிற்கு உபதேசம் செய்யும் நெதர்லாந்து அரசாங்கம், சட்டத்தை மேலும் கடுமையாக்கவே யோசித்து வருகின்றது. பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை எடுப்போர் தொகை அதிகமாக இருப்பதாகவும், இதனால் குறைந்தளவு வீதமே தெரிவாகும் படி பரீட்சை கடினமாக்கப்பட வேண்டும் என்றும், குடிவரவு அமைச்சர் "கவலை தெரிவித்துள்ளார்."
புதிய குடிவரவாளர்கள் தனது தாயகத்தில் இருந்த படியே, மொழிப்பரீட்சையில் தேற வேண்டும் என்ற விதியை, உலகில் நெதர்லாந்து மட்டுமே முதன்முதல் கொண்டு வந்து "உலக சாதனை" படைத்துள்ளது. அது மட்டுமல்ல, இந்த சட்டம் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் என்றழைக்கப்படும், இலங்கை/இந்தியா போன்ற ஏழை நாடுகளை சேர்ந்த மக்களை மட்டுமே பாதிக்கின்றது. பிற ஐரோப்பிய யூனியன் நாட்டில் இருந்து, அல்லது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற பணக்கார நாடுகளில் இருந்து வந்து குடியேற விரும்பும் ஒரு நபர், இந்த நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமலே நெதர்லாந்தில் இலகுவாக குடியேற முடியும். இவ்வாறு வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை பாகுபாடு காட்டுவதால், நெதர்லாந்து அரசாங்கம் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்றது, என Human Rights Watch குற்றம் சாட்டுகின்றது.
இந்த சட்டம் ஒரு பக்கம் புதிதாக வரும் குடிவரவாளர்களை கட்டுப்படுத்தும் அதே சமயம், மறுபக்கத்தில் இந்த தடைகளை தாண்டி வருபவர்களிடம் பணம் கறக்கும் நோக்கிலும் நடைமுறைப்படுத்தப் படுகின்றது. பரீட்சை, விசா கட்டணம் செலுத்தி நெதர்லந்திற்குள் வந்து விட்டால், நிம்மதி கிடைக்காது. டச்சு (நெதர்லாந்து) மொழியை தொடர்ந்து படித்து தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு € 3000,- செலவாகும். இந்த தொகையை செலுத்தமுடியாதவர்கள் அதனை அரசாங்கத்திடம் கடனாக பெற்றுக்கொள்ளலாம். வருடக்கணக்காக படித்தாலும் டிப்ளோமா எடுக்க முடியாதவர்கள் தண்டப்பணம் செலுத்த வைக்க வேண்டும் என்ற யோசனையும் அரசாங்கத்திடம் உள்ளது. மேலும் வலதுசாரி லிபரல் கட்சி தனது பிரேரணை ஒன்றில், € 7000, - வைப்புநிதியாக செலுத்தப்பட வேண்டும் என்றும், அது புதுமண தம்பதிகள் இருவரும் ஐந்து வருடம் தொடர்ந்து வேலை செய்தால் மட்டுமே திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது. அதன் நோக்கம், வெளிநாட்டவர்கள் 5 வருடத்திற்கு, வேலையற்றோர் உதவித்தொகை எடுக்காமல் அரசாங்கத்திற்கு தொடர்ந்து வரி செலுத்த வேண்டும் என்பது தான்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் கடும்போக்கு சட்டங்கள், தங்களை வேண்டா விருந்தாளிகளாக நடத்துவதாக மூன்றாம் உலகை சேர்ந்த குடிவரவாளர்கள் கருதுகிறார்கள். இதனால் டச்சு மொழி மட்டுமல்ல, நெதர்லாந்து கலாச்சாரம் பற்றி போதிக்கும் சமூகவியல் பாடங்களையும் கற்க மனமின்றி உள்ளனர். இதன் விளைவு, குடிவரவாளர் மொழி பயிலும் பாடசாலைகளை தனியார்மயமாக்கி பணம் சம்பாதிக்கலாம் என்று எதிர்பார்த்த அரசாங்கம், புதிதாக பதியும் மாணவர் தொகை மிகக்குறைவாக இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளது.
குடிவரவாளர்களை "சிறந்த பிரஜைகளாக" மற்றும் சமூகவியல் பாடம், நெதர்லாந்தின் தேசியவாத அரசியலை திணிப்பதாகவும், அரச முடிக்குரிய விசுவாசிகளை உருவாக்குவதாகவும் உள்ளது. அதே நேரம் அவர்களை குறிப்பிட்ட தர வேலைகளுக்கு (சுத்திகரிப்பு, பண்ணை, தொழிற்சாலை) தயார்படுத்துவதாகவுமே உள்ளது. உதாரணத்திற்கு பரீட்சையில் கேட்கப்படும் சில கேள்விகளை இங்கே தருகிறேன். நெதர்லாந்தில் எப்படியான வேலைகளை நீங்கள் செய்யலாம்? நெதர்லாந்தில் பிள்ளைகளை அடித்து வளர்க்கலாமா? உங்கள் பிள்ளை ஓரினசேர்க்கையாளர் என்று தெரிய வந்தால் என்ன செய்வீர்கள்?
சிறந்த பிரசையாக்கும் நடைமுறை வெளிநாட்டு குடிவரவாளர்களை அவமதிப்பதாக, அப்படி இல்லாவிட்டால் நாகரிகம் பற்றி கற்க வேண்டியவர்களாக கருதுகின்றது. இது அவர்களின் மனதில் வெறுப்பை உருவாக்குவதாக மனித உரிமை நிறுவனம் சுட்டிக்காட்டியுளது.
.....................................................................................
முன்னைய பதிவுகள் :
.....................................................................................
1 comment:
நெதர்லாந்து சட்டங்களையும் நிலமைகளையும் விளக்கமாக கூறியுள்ளீர்கள்.
அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு பதிவு.
இருப்பினும் அவர்களது மொழிப்பற்று அதனூடாக தென்பட்டாலும், இனப்பாகுப்பாடு கொண்ட சட்டங்களாகவே தெரிகின்றது.
பதிவுக்கு நன்றி
Post a Comment