Thursday, May 21, 2009

கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 6

ருவான்டா, 1994 ம் ஆண்டு, நவீன உலகை உலுக்கிய இன அழிப்பு நடவடிக்கை, ஒரு வானொலி அறிவிப்புடன் ஆரம்பமாகியது: "ஹூட்டு சகோதரர்களே! எம்மை இதுவரை காலமும் அடிமைகளாக அடக்கி ஆண்டு வந்த துட்சி கரப்பான் பூச்சிகளை அழிக்கும் காலம் வந்துவிட்டது." இனவாத வெறுப்பை கக்கும் அந்த அறிவிப்பை செய்த "மில் கொலின்ஸ் சுதந்திர வானொலி" ஹூட்டு பாஸிச சக்திகளால் நடத்தப்பட்ட தனியார் வானொலி என நம்பப்படுகின்றது. ருவான்டாவில் நீண்ட காலமாகவே ஹூட்டு இனவெறி அரசியல் நடத்தி வந்த, பாஸிச "குடியரசு பாதுகாப்புக் கூட்டணி" (CDR) கட்சியுடன், ஆளும்கட்சி தலைமையிலான Interahamwe என்ற துணைப்படையும் சேர்ந்து கொண்டு சிறுபான்மை துட்சி இன மக்களை நரபலி வேட்டையாடிக் கொன்று குவித்தனர். ருவான்டாவின் தேசிய இராணுவம் பெரும்பான்மை ஹூட்டு இனத்தவரின் ஆதிக்கத்தில் இருந்ததால், இனப்படுகொலையில் இராணுவத்தின் நேரடி பங்களிப்பை மறுக்கமுடியாது.

ருவான்டாவின் பெரும்பான்மை இனமான ஹூட்டுக்களுக்கும், சிறுபான்மை இனமான துட்சிகளுக்கும் இடையிலான பகைமை, கசப்புணர்வு நீண்ட காலமாக நீறு பூத்த நெருப்பாக அடங்கிக் கிடந்தது. ருவான்டா பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, துட்சி சிறுபான்மையினருக்கு எதிரான இனக்கலவரங்களையும், துட்சி கிளர்ச்சியாளர்களின் அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டத்தையும் சந்தித்துள்ளது. 1994 ல் பதவியில் இருந்த ஜனாதிபதி "ஹபியாரிமனா" வெளிநாட்டு அழுத்தம் காரணமாக, அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், அதிகாரப் பரவலாக்கத்திற்கும் சம்மதித்திருந்தார். இதனால் ஹபியாரிமனா ஒரு ஹூட்டு இன மிதவாதியாக, இன்னும் சொன்னால் "ஹூட்டு இனத் துரோகியாக", பாஸிச சக்திகளால் கணிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் 1994 ம் ஆண்டு, ஏப்ரல் 6 ம் திகதி, தான்சானியாவில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஜனாதிபதியின் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏவுகணையை ஏவியது யார் என்ற மர்மம் இன்று வரை துலங்கவில்லை. ஹூட்டு பாசிஸ்டுகள் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று அப்போது நம்பப்பட்டாலும், இன்றைய ருவான்டா அதிபர் "போல் ககாமே" யின் துட்சி கெரிலாக்களினது வேலை என்று பிரான்ஸ் குற்றஞ் சாட்டியது. (விமானி ஒரு பிரெஞ்சுக் காரர் என்பதால் பிரெஞ்சு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.)

எது எப்படி இருந்த போதிலும், ஜனாதிபதி ஹபியாரிமனாவின் மரணத்திற்குப் பின்னர் நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடியது. "துட்சி கிளர்ச்சியாளர்கள் எமது ஜனாதிபதியை படுகொலை செய்துவிட்டார்கள்." என்ற செய்தி ஹூட்டு மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. விரைவில் அதுவே முழு துட்சி இனத்தவருக்கும் எதிரான துவேஷமாக உருவெடுத்தது. நாடு முழுவதும் வீதித்தடைகள் போடப்பட்டன. ஹூட்டு ஆயுததாரிகளின் வீதித்தடைச் சோதனையின் போது மறிக்கப்பட்ட வாகனங்களில் இருந்து துட்சி இனத்தை சேர்ந்தவர்களை தனியாக பிரித்தெடுத்தனர். அடையாள அட்டையில், "இனம்: துட்சி" என்று குறிப்பிட்டிருப்பதே அவர்களை காட்டிக் கொடுக்க போதுமானதாக இருந்தது. (அடையாள அட்டையில் இனத்தை குறிப்பிடும் வழக்கம் பெல்ஜிய காலனிய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.) பெண்கள், குழந்தைகள் என்று வேறுபடுத்தாது துட்சி என்ற காரணத்திற்காகவே கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சன்னங்களை வீணாக்குவது செலவு என்று, அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். குடியிருப்புகளுக்கு சென்று துட்சிகளை கொலை செய்த படையினர், சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளுக்கான செலவை அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும் என்று மரணத்திலும் கணக்குப் பார்த்தனர். சாதாரண மக்களும் கொலை வெறியாட்டத்தில் பங்குபற்றுமாறு ஊக்குவிக்கப்பட்டனர். ஒரு கொலையை செய்தவனுக்கு, இன்னும் இன்னும் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி ஏறியது. கொலை செய்யப்பட்டவர்கள் துட்சி இனத்தவர்கள் மட்டுமல்ல. இன நல்லிணக்கத்தை விரும்பிய, மிதவாத ஹூட்டுகளும் கொல்லப்பட்டனர். உலகம் மறுபக்கம் பார்த்துக் கொண்டிருக்கையில், சில மாதங்களுக்குள் எட்டு லட்சம் முதல் ஒரு மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

"இரண்டாம் உலகப்போரில் நடந்த யூத இன அழிப்பிற்குப் பின்னர், இன்று உலகம் ஆப்பிரிக்காவின் மாபெரும் இனப்படுகொலையை பார்த்தக் கொண்டிருக்கிறது." என்று நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளை விபரித்துக் கொண்டிருந்த சர்வதேச தொலைக்காட்சிகளால் உலகின் மனச்சாட்சியை உலுக்க முடியவில்லை. சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பின்னர் உலகின் ஒரேயொரு வல்லரசாக திகழ்ந்த அமெரிக்கா, தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்தது. "குழந்தை வல்லரசான" ஐரோப்பிய ஒன்றியம் வாய்ச்சொல்லில் மட்டுமே தான் கெட்டிக்காரன் என்று காட்டிக் கொண்டிருந்தது. இவ்வாறு இனப்படுகொலையை தொடராது தடுக்க வழி இருந்த போதும், சந்தர்ப்பத்தை தவற விட்ட காரணம் என்ன? அரசியலில் நண்பர்கள் கிடையாது. நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன. பிரான்ஸ் அன்று ருவான்டாவை ஆட்சி செய்த ஹூட்டு இராணுவத்திற்கு பயிற்சி அளித்து, ஆயுதங்கள் கொடுத்து வந்தது. அதே போல துட்சி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வந்தது. அவரவருக்கு தமது ஆட்கள் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி இருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்காவின் கவனம் ஐரோப்பிய வல்லரசுகளின் மீது திரும்பியது. ஆப்பிரிக்காவில் நவ-காலனிய அரசியலில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பிரான்ஸ் அதன் கண்ணில் துருத்திக் கொண்டிருந்தது. ருவான்டாவில் துட்சிகளின் கிளர்ச்சி, பிரான்சின் ஆதிக்கத்தை துடைத்தெறியும் பதிலிப் போராக அமெரிக்காவால் கருதப்பட்டது. துட்சிகளின் கெரில்லா இராணுவமான "ருவான்டா தேசாபிமான முன்னணி" (RPF) அயல் நாடான (ஆங்கிலம் பேசும்) உகண்டாவில் தளம் அமைத்திருந்ததும், RPF படைத் தளபதி (இன்றைய ஜனாதிபதி) போல் ககாமே உட்பட பல தலைவர்கள் உகண்டாவில் ஆங்கில மொழி வழிக் கல்வி கற்றிருந்தும், அமெரிக்கா இலகுவாக ஊடுருவ வாய்ப்பாக அமைந்தது. உகண்டாவின் இன்றைய ஜனாதிபதி முசவேனி, ஆட்சியைக் கைப்பற்ற நடத்திய ஆயுதப் போராட்டத்தில், RPF போராளிகள் பங்குபற்றி இருந்தனர். முசவேனி, ககாமே ஆகியோரை "ஆப்பிரிக்காவின் நம்பிக்கை தரும் இளம் தலைமுறையை சேர்ந்த தலைவர்கள், மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவார்கள்" என்று அமெரிக்க ஊடகங்கள் புகழ் பாடிக் கொண்டிருந்தன. ஒருவேளை ருவாண்டாவில் ககாமே ஆட்சிக்கு வந்த பின்னர், அரச கரும மொழியாகவும், கல்வியிலும் பிரெஞ்சை ஒதுக்கி விட்டு ஆங்கிலத்தை நடைமுறைக்கு கொண்டு வந்ததை சாதனையாக கூறலாம்.

ருவாண்டாவில் இருப்பது இனப்பிரச்சினையா? ருவாண்டா மக்கள், காலங்காலமாக ஹூட்டு, துட்சி என்ற இன அடிப்படையில் பிரிந்து வாழ்ந்து வந்தனரா? இது ஆயிரம் வருடக்கால இனப்பகையா? நாம் முதலாளிய ஊடகங்கள் சொல்வதை நம்பினால், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு "ஆம்" என்று பதில் வரும். ஆனால் இந்தக் கருத்தியல் எவ்வளவு தூரம் சரி என்று, எந்த சமூக விஞ்ஞானியும் ஆராயவில்லை, அல்லது அவர்களது முடிவுகள் பாரபட்சமின்றி இருப்பின் பிரசுரிக்கப்படுவதில்லை. முதலில் "இனம்" (Ethnicity, Race எதுவாக இருந்தாலும்) என்ற சொல்லே ஒரு ஐரோப்பியக் கண்டுபிடிப்பாகும். ருவான்டாவின் இனப்பிரச்சினை, ஆச்சரியப்படத்தக்க வகையில் இலங்கை இனப்பிரச்சினையுடன் பெரும்பாலும் ஒத்திருப்பதை, நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது புரிந்து கொள்வீர்கள். இது ஒன்றும் தற்செயல் அல்ல. காலனிய எஜமானர்களின் பிரித்தாளும் கொள்கை, எங்கேயும் ஒரே மாதிரித் தான் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் எவ்வாறு இலங்கையில் வாழ்ந்த சிங்கள, தமிழ் மொழி பேசும் மக்களுக்கிடையில் இனப் பகையை தோற்றுவித்து, இனவாதப் படுகொலைகளுக்கு வழிவகுத்தார்களோ, அதே வேலையை பெல்ஜியர்கள் ருவான்டாவில் செய்தனர்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில், உலகின் மிக நீண்ட நதியான நைலின் நதிமூலத்தை தேடிச் சென்ற ஐரோப்பியர் சிலர் ருவான்டாவை "கண்டுபிடித்தனர்". அவர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதம் பரப்புவோரும் அந்தப் பிரதேச மக்களை கத்தோலிக்கர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் எல்லோருக்கும் ருவான்டாவில் எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருந்தன. இன்றைய ருவான்டா, புரூண்டி, மற்றும் உகண்டாவின் தென் பகுதி, கொங்கோவின் கிழக்குப்பகுதி என்பனவற்றை உள்ளடக்கிய, ஒரே அதிகார மையத்தைக் கொண்ட மன்னரின் ஆட்சிப்பிரதேசமாக இருந்தது. மன்னரின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்றரசர்கள் மாகாணங்களை நிர்வகித்து வந்தனர். சுருக்கமாக சொன்னால், ஐரோப்பாவில் இருந்த அதே நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு முறை ருவான்டாவிலும் காணப்பட்டது. ஆயிரம் வருடங்களாக மக்கள் விவசாயம் செய்யும் அறிவைப் பெற்றிருந்தனர். அழகிய மலைநாடான ருவான்டாவில், ஒவ்வொரு குன்றும் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான விவசாய நிலமாக இருந்தது.

ருவான்டாவில் துவா (அல்லது பிக்மீ) என்றழைக்கப்படும் பழங்குடியினரும் வாழ்ந்து வருகின்றனர். பிற ஆப்பிரிக்க மக்களிடமிருந்து வேறுபடுத்தி அறியக்கூடிய தோற்ற அமைப்பைக் கொண்ட (குள்ளமானவர்கள், பழுப்பு நிறத்தவர்கள்) துவா மக்கள் இன்றும் கூட புராதன வேடுவர் சமூகமாகத் தான் வாழ்கின்றனர். யாருக்கும் தீங்கு செய்யாத, தானுண்டு, தனது வேலையுண்டு என வாழ்ந்து வரும் துவா மக்களை, ருவான்டா அரசர்கள் அடிமைகளாக வைத்திருந்தனர். அரசன் மட்டுமல்ல, நிலப்பிரபுக்களும் துட்சி இனத்தை சேர்ந்தவர்களாக அதிகாரம் செலுத்தினர். அதற்கு மாறாக பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் நாட்டுப்புறங்களில் பண்ணையடிமைகளாக, குத்தகை விவசாயிகளாக இருந்தனர். இந்த உண்மையே ஹூட்டு-துட்சி இனப் பிரிவினையை நிரூபிக்க போதுமானதல்ல. ஏனெனில் "நாகரிக காலத்தை" சேர்ந்த நாம் இனம் பற்றி புரிந்து வைத்திருப்பதற்கும், அன்றைய மக்களின் சிந்தனைக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருக்கின்றது. தனது சொந்த விவசாய நிலங்களில் அதிக விளைச்சலைப் பெறக்கூடியதாக பயிரிட்டு, தனது செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் ஹூட்டு ஒருவர் நிலப்பிரபுவாக வர முடிந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அதிகாரத்தில் இருப்பது யாராக இருந்தாலும் துட்சி என அழைக்கப்படலாயினர்.

துட்சிகளின் மூதாதையர் எத்தியோப்பியாவில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்து நிலவுகின்றது. இரு பக்க இனவாதிகள் மத்தியிலும், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் மத்தியிலும் இது போன்ற கருத்துகள் பிரபலமானவை. ("துட்சிகளை எத்தியோப்பியாவிற்கு திருப்பி அனுப்புவோம்." என்பது ஹூட்டு இனவாதிகளின் முழக்கங்களில் ஒன்று.) எத்தியோப்பியர், அல்லது சோமாலியர்கள் போல (இவர்களை பிற ஆப்பிரிக்கர்களிடம் இருந்து இலகுவில் பிரித்தறிய முடியும்) பெரும்பாலான துட்சிகள் தோன்றுவதை மறுப்பதற்கில்லை. துட்சிகள் என்றால் உயரமானவர்கள், ஒடுங்கிய முகம், மெல்லிய உடல்வாகு கொண்டவர்கள்; ஹூட்டுகள் பருமனானவர்கள், வட்டமான முகம் கொண்டவர்கள், என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பது எல்லோருக்கும் பொருந்தாது. இருப்பினும் இனப்படுகொலை செய்யும் இனவாதிகளுக்கு அந்த வெளித் தோற்றமே போதுமானதாக இருந்தது.

ருவான்டாவின் எழுதப்படாத செவிவழி வரலாற்றின் படி, கி.பி. 700 ம் ஆண்டளவில் வருகை தந்த ஹூட்டுகள், மரங்களை வெட்டி, நிலங்களை பண்படுத்தி விவசாயம் செய்து வந்துள்ளனர். பல்வேறு வகையான பழ மரங்களை நட்டு, உணவுப்பயிர்களை பயிரிட்டு, அதன் பலனை அனுபவித்து வந்தனர். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த துவா வேடர்களைப் போலன்றி, குடிசைகளை கட்டி, கிராமங்களில் வாழ்ந்தனர். சமுதாயம் வளர்ச்சி அடைந்த போது "முவாமி" என அழைக்கப்படும் மன்னனின் அதிகார மையமாக பரிணமித்தது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மத்திய ஆப்பிரிக்க இராச்சியமான, ருவான்டா முழுவதும், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் நிலவியது.

ஹூட்டு நாகரீகம் தொடங்கி முன்னூறு வருடங்களுக்குப் பின்னர், வடக்கே இருந்து மாடுகளை மேய்த்துக் கொண்டு வந்தனர், துட்சிகள் என்ற வந்தேறுகுடிகள். இது இந்தியாவில் ஆரியரின் வருகையுடன் ஒப்பு நோக்கத்தக்கது. துட்சிகள் சமுதாயத்தில் மாடுகள் வைத்திருப்பது செல்வச் செழிப்பின் அடையாளம். ஒருவர் எத்தனைமாடுகள் வைத்திருக்கிறார் என்பதை வைத்துதான், அவர் பணக்காரரா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட்டது. இந்த கலாச்சாரம் இன்றும் கூட (துட்சி இனக்குடும்பத்தை சேர்ந்த) கென்யாவின் மாசாய் இன மக்கள் மத்தியில் நிலவுகின்றது. தமது மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடியே துட்சிகள், ருவான்டாவிற்கு வந்தனர். அதனால் அங்கே விவசாயம் செய்து வந்த ஹூட்டுகளுடன் நிலத்திற்கான போட்டி, பொருளாதார முரண்பாடுகளை (கவனிக்கவும்: இன முரண்பாடுகள் அல்ல) தோற்றுவித்தது.

வேறுபாடான பொருளாதார நலன்கள் இருந்த போதிலும், காலப்போக்கில் துட்சிகள், தம்மை விட நாகரீகத்தில் மேலோங்கியிருந்த ஹூட்டுகளின் மொழியையும், மதத்தையும் மட்டுமல்ல கலாச்சாரத்தையும் தமதாக்கிக் கொண்டனர். முரண்நகையாக அதுவே துட்சி இன மேலாதிக்கத்திற்கு ஆதாரமாக அமைந்தது.
அதிகார வெறி கொண்ட துட்சிகள் விரைவில் ருவான்டாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். ஹூட்டுகள் விவசாயத்தையே பெரிதாக மதித்ததால், அவர்களை தமது ஆட்சிக்கு கீழ்ப்படிய வைப்பது, புதிய ஆட்சியாளருக்கு இலகுவாக அமைந்தது. ஹூட்டுகள் உழைக்கும் வர்க்கமாகவும், துட்சிகள் ஆளும் வர்க்கமாகவும் மாறியது அப்போது தான். தேச நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. துட்சிகள் ஆரம்பத்திலேயே மேலிருந்து கீழே வரும் அதிகாரப் படிநிலைச் சமூகமாக வாழ்ந்தவர்கள். அதனால் தான் 20 ம் நூற்றாண்டிலும், அதிகார வர்க்கம் முழுவதும் துட்சிகளை கொண்டிருந்தது. தேசப் பாதுகாப்பும் அவர்கள் வசமே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி உறவுகளில் பண்ணையடிமை முறையை புகுத்தினர். துட்சி பண்ணையார்களின் மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேவைப்பட்ட போது, ஹூட்டு விவசாயிகளிடம் நிலங்களை பெற்றுக் கொண்டு, பண்டமாற்றாக சில மாடுகளைக் கொடுத்தனர். ஹூட்டு விவசாயிகள் மாடுகளை பராமரித்தாலும், பிறக்கும் கன்றுக்குட்டிகளை மட்டும் துட்சி உரிமையாளருக்கு கொடுத்து விட வேண்டும். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உற்பத்தியின் பலன்களை அனுபவிப்பது நிலப்பிரபுவாகத் தானே இருக்க முடியும்?

19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்காவை பங்கு போட்ட போது, ஜெர்மனிக்கு கிடைத்த துண்டுகளில் ருவான்டாவும் ஒன்று. ஏற்கனவே இராச்சியத்தின் பகுதிகள் பிரிட்டனுக்கும் (உகண்டா), பெல்ஜியத்திற்கும் (கொங்கோ) தாரை வார்க்கப்பட்டது பற்றியோ, தன் நாடு தற்போது ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்குள் அடங்குகின்றது என்பதையோ ருவான்டா மன்னன் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் தான்சானியாவில் இருந்து ருவான்டா விவகாரங்களை கவனித்துக் கொண்ட ஜெர்மன் ஆளுநர், அரசாட்சியில் தலையிடவில்லை. முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியை தோற்கடித்த பெல்ஜியம், ருவான்டாவை தனது காலனியாக்கியது. "பெல்ஜியத்தால் பாதுகாக்கப்படும் பிரதேசம்" என்று ஐ.நா. மன்றத்தின் முன்னோடியான உலக மக்கள் பேரவை தீர்மானித்தது. காலனிக்கும், பாதுகாப்புப் பிரதேசத்திற்கும் இடையில் அதிக வித்தியாசம் இருக்கவில்லை. பெல்ஜியம் தனது முப்பது வருட காலனிய ஆட்சிக்காலத்தில் ஐரோப்பியமயப்பட்ட கல்வியையும், நிர்வாகத்தையும் அறிமுகப்படுத்தியது. அப்போது தான் இனவாதக் கருத்துகள் துட்சி, ஹூட்டு இன மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டன.

துட்சி நிலப்பிரபுக்களின் அதிகாரம் செலுத்தும் திறமையை கண்டு வியந்த ஐரோப்பியர்கள், துட்சிகள் "சாதாரண ஆப்பிரிக்கர்களாக" இருக்க முடியாது என முடிவுசெய்தனர். அந்த எண்ணத்தில் உதித்தது தான் இன்றைய இனவாத கோட்பாடுகள். பாப்பரசரின் பிரதிநிதியான வணக்கத்திற்குரிய "லெயோன் கிளாஸ்", மிஷனரி பாடசாலைகள் மூலம் இனவாதக் கருத்துகளையும் போதித்து வந்தார். ஆரம்ப காலங்களில் துட்சி இனப் பிள்ளைகளுக்கு மட்டுமே ஐரோப்பிய பாணி கல்வி போதிக்கப்பட்டது. "துட்சிகள் ஆளப்பிறந்தவர்கள்", "இனரீதியாக ஹூட்டுக்களை விட சிறந்தவர்கள்", போன்ற இனவாதக் கருத்துகள், பாடசாலை சென்ற பிஞ்சுமனங்களில் விதைக்கப்பட்டன. புதிய மத்தியதர வர்க்கமாக உருவாகிய, கல்வி கற்ற துட்சிகளை அரச கருமங்களை முன்னெடுக்கவும், மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட புதிய நிர்வாக அலகுகளில் அதிகாரிகளாகவும் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். அதே நேரம், இன்னொரு பக்கத்தில் பெல்ஜியர்கள் சிறிய அளவு ஹூட்டு நடுத்தர வர்க்கத்தையும் உருவாக்கத்தவறவில்லை. இருப்பினும் ருவான்டா சுதந்திரம் பெற்ற நேரம், பெரும்பாலான அரச பதவிகளில் துட்சிகளே வீற்றிருந்தனர்.

1958 ல் எடுத்த கணக்கெடுப்பின் படி, மொத்த சனத்தொகையில் 14 வீதமான துட்சிகள், பல்கலைக்கழகங்களில் மூன்றில் இரண்டு பங்கு மாணவர்களாக இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில், பெரும்பான்மை ஹூட்டு மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற அரசாங்கம் தரப்படுத்தலை கொண்டு வந்து, இனப்பிரச்சினைக்கு வழி சமைத்தது. மெல்ல மெல்ல அதிகாரம் துட்சிகளின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டது. பேரினவாத அரசாங்கம், ஹூட்டுகளுக்கு அதிக சலுகைகள் வழங்கி, பெரும்பான்மை வாக்குவங்கியை தக்க வைத்துக் கொண்டது. துட்சியினத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள், இனப்பிரச்சினையை தீர்க்குமாறு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், ஹூட்டு இனவாத சக்திகளின் எதிர்ப்புக் காரணமாக ஒப்பந்தங்களை முறிப்பதும் நடந்தேறின. ஒவ்வொரு தடவையும் துட்சிகள் அஹிம்சா வழியில் எதிர்ப்புக் காட்டிய போதெல்லாம், இனக்கலவரங்கள் தூண்டி விடப்பட்டன. இதனால் பெருமளவு துட்சி மக்கள் அகதிகளாக அயல் நாடுகளில் புகலிடம் கோரினர். துட்சிகள் ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலமே தமது உரிமைகளைப் பெற முடியும் என இளைஞர்கள் நம்பினார். ஹூட்டு பேரினவாத அரசிற்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட துட்சி விடுதலை இயக்கம் (RPF) கெரில்லாத் தாக்குதல்களை நடத்தியது. இதையெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இல்லையா? ஆமாம், ருவான்டா-இலங்கை, துட்சிகள்-தமிழர்கள், ஹூட்டுகள்-சிங்களவர்கள், பெல்ஜியம்-பிரிட்டன், இந்தச் சொற்களை மாற்றிப் போட்டுப் பாருங்கள். வரலாறு ஒரே மாதிரித் தோன்றும்.

1994 ம் ஆண்டு, துட்சியின மக்கள் வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்டாலும், துட்சிகளின் விடுதலைப்படையான RPF கெரில்லாக்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. தலைநகர் கிகாலியை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதும், ஹூட்டு மக்களும் அரச படையினரும் கொங்கோவிற்குள் புகலிடம் கோரினர். இதனால் யுத்தம் அயல்நாடான கொங்கோவிற்கும் பரவியது. RPF இயக்கத்தில் துட்சி இன மேலாண்மைக் கருத்துகளை கொண்ட போல் ககாமே போன்ற தலைவர்களின் ஆதிக்கம் நிலவுகின்றது. அதுவே புதிய அரசின் கொள்கையை தீர்மானிக்கின்றது. இன அழிப்புக் குற்றத்தில் ஈடுபட்ட மாஜி இராணுவ வீரர்களை தேடுவதாக காரணம் காட்டி, இரண்டு தடவை ருவான்டாவின் புதிய (துட்சி) இராணுவம் கொங்கோவிற்குள் படையெடுத்தது. அது சர்வதேச கண்டனங்களையும் தோற்றுவித்தது. இருப்பினும் பலமான அமெரிக்க வல்லரசின் ஆதரவு காரணமாக, கொங்கோவில் நிலை கொண்டிருந்த ஐ.நா.சமாதானப் படை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. (ஐ.நா. படை அதிகாரிகள் துட்சி இராணுவத்துடன் ஒத்துழைத்தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.)

"பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் கொங்கோ அகதி முகாம்களில் வசித்துக் கொண்டிருக்கையில், ருவான்டாவில் தங்கி விட்ட சிறுபான்மை துட்சிகளை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் RPF அரசாங்கம் நீதி நெறிமுறைக்கு உட்பட்டதா?" என்ற கேள்வி சர்வதேச அரங்கில் முன் வைக்கப்பட்டது. ஆனால் சிறுபான்மையினரின் அரசாங்கம் கடந்த பத்தாண்டுகளாக நிலைத்து நிற்பதுடன், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. சில வருடங்களுக்குப் பின்னர், கணிசமான அளவு ஹூட்டுகள் தயக்கத்துடன் தாயகம் திரும்பினர். RPF ம் இன அழிப்பில் ஈடுபட்டது என்பதும், துட்சி ஆயுததாரிகள் ஹூட்டு மக்களை கொன்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டும், மறுக்க முடியாத உண்மைகள். ருவான்டாவில் துட்சியின ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட பின்னர், RPF அரசிற்கு ஹூட்டுகளை வேட்டையாட வேண்டிய தேவை இருக்கவில்லை. ஜனாதிபதி போல் ககாமேயின் கவனம் பின்னர் தனது இனத்திற்குள் இருக்கும் எதிரிகளை நோக்கி திரும்பியது. "இன அழிப்பில் ஈடுபட்ட கொலைகாரர்கள்" என்பது தான் தீர்த்துக் கட்டப்படும் அனைத்து எதிரிகள் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு. கொங்கோவை தளமாகக் கொண்ட, ஹூட்டுகளின் புதிய கெரில்லா இயக்கம் ஒன்று அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதாக அண்மைக்காலமாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நவீன ருவான்டாவின் வரலாற்றில் ஏகாதிபத்திய தலையீடு பல்வேறு நோக்கங்களுக்காக வெளிப்பட்டுள்ளது. இதற்காக ஏகாதிபத்தியம் தனது பிரசைகளின் உயிரையும், தேசத்தின் நன்மதிப்பையும் கூட விலையாக கொடுத்துள்ளது. காலனிய ஆதிக்கம் காலாவதியாகி, நவ-காலனிய காலகட்டம் ஆரம்பித்த நேரம், பெல்ஜியம் ருவான்டாவை பிரான்சிற்கு தத்துக் கொடுத்து விட்டிருந்தது. அந்நியக் கடன் வழங்குவதில் முதன்மையான நாடான பிரான்சின் வற்புறுத்தலுக்கு இணங்கித் தான், ருவாண்டாவின் ஹூட்டு அரசும், RPF இயக்கமும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டன. சமாதானத்தை நிலைநாட்ட ஐ.நா.சமாதானப்படை (MINUAR) வந்தது. ஒப்பந்தம் மீறப்பட்டு, மீண்டும் யுத்தம் மூண்ட பின்னர், ஜனாதிபதி ஹபியாரிமனா கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் முகமாக, ஐ.நா.சமாதானப்படையில் பணியாற்றிய பத்து பெல்ஜிய வீரர்கள் ஹூட்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஐ.நா. படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டன.
இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய, ஹூட்டு துணைப்படையான Interahamwe க்கு பிரான்ஸ் இராணுவப் பயிற்சி வழங்கி வந்தது. இதனால் "பிரான்சிற்கும் இன அழிப்பில் பங்குண்டு" என்ற குற்றச்சாட்டை இன்றைய ருவான்டா (துட்சி) அரசு பன்னாட்டு ஊடகவியலாளரின் முன்னால் (டிசம்பர் 2008) சமர்ப்பித்தது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, காலஞ்சென்ற பிரெஞ்சு ஜனாதிபதி மித்தரோன் உட்பட பல பெரிய தலைகள் இன அழிப்பு குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவது சாத்தியமானதல்ல. இருப்பினும் இஸ்ரேலைப் போல, ருவான்டாவும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகி வருவதை இது எடுத்துக் காட்டுகின்றது. மத்திய ஆப்பிரிக்காவில் இன்னொரு இஸ்ரேலை உருவாக்குவது தான் அமெரிக்காவின் நோக்கமும். இஸ்ரேல் "யூத இனப்படுகொலையை தேசிய அரசியல் சித்தாந்தமாக" கடைப்பிடிப்பதைப் போல, இன்றைய ருவான்டாவில் துட்சி இனப்படுகொலை பற்றிய நினைவுகூரல் தவிர்க்கவியலாத அம்சமாகி விட்டது. இனப்படுகொலைக்கு பலியானவர்களின் ஞாபகச் சின்னங்கள் பற்றி ஒவ்வொரு பிரசையும் அறிந்திருக்க வேண்டும். ருவான்டாவும் இஸ்ரேலைப் போலவே சர்வதேச கண்டனங்களைப் பொருட்படுத்தாது அயல்நாடுகள் மீது படையெடுக்க முடிகிறது. கொங்கோவில் கபிலாவின் தேசியவாத அரசு, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை போட்ட கையோடு, கிழக்கெல்லையில் படையெடுத்த ருவான்டா இராணுவத்துடன் நீண்ட போருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பேரழிவை ஏற்படுத்திய யுத்தம் கொங்கோவை அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வைத்தது. அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் ருவான்டா இராணுவத்தை, ஆப்பிரிக்காவின் தலைசிறந்த நவீன இராணுவமாக்க பாடுபடுகின்றனர். வருங்காலத்தில் ஒரு குட்டி நாடான ருவான்டா, தன்னை சுற்றியிருக்கும் பலவீனமான பெரிய நாடுகளை பயமுறுத்தப் போகின்றது.

Friday, May 15, 2009

மதத்தின் பொருளாதார அடிப்படைகள்

மத அடிப்படைவாதம்: ஒரு மேலைத்தேய இறக்குமதி - 4
"முதலாளித்துவம் ஒரு மேற்கத்திய சித்தாந்தம்" என்று இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் பிரச்சாரம் செய்த போதிலும், முதலாளித்துவ பொருளாதாரம் இஸ்லாமின் வருகையின் போதே ஆரம்பமாகி விட்டது. ஐரோப்பிய முதலாளித்துவம் வெனிஸ் நகரத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. வெனிசியர்கள் சிலுவைப்போர் காலத்தில் அரேபியரிடம் இருந்த நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டனர். இஸ்லாம் என்ற மதம் கூட அரேபிய வணிகர் சமூகத்தில் இருந்து தான் தோன்றியது.

சந்தைப் பொருளாதாரத்திற்கு இஸ்லாம் ஒரு போதும் தடையாக இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், இஸ்லாமிய நாகரீகத்தில் சந்தை மேலும் வளம் பெற்றது. சீனா முதல் ஐரோப்பா வரையிலான சர்வதேச சந்தையை தோற்றுவித்தது. இறைத்தூதர் முகமதுவின் பொன்மொழிகள் அடங்கிய "ஹாடித்" தில் "சந்தையில் விலை நிர்ணயம் செய்வது" பற்றிய வசனங்கள் உள்ளன. "விற்பனைப் பண்டங்களின் கேள்வியைப் பொறுத்து, விலையில் ஏற்ற இறக்கம்" இருக்க அனுமதிக்கும் இறைத்தூதர், "பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் விலையை உயர்த்துவதற்கு" சம்மதிக்கவில்லை. வர்ததகர்கள் ஏகபோக உரிமை பெறுவதும், வேண்டுமென்றே விலையை உயர்த்துவதும் போன்ற செயல்களை அன்றைய இஸ்லாமிய அரசாங்கங்கள் கட்டுப்படுத்தின. உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் காலத்தில் அரசே தலையிட்டு அதிக பட்ச விலையை நிர்ணயித்தது.

மேற்கத்திய பொருளாதார அறிஞர்கள் சந்தை சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற விதிகளை கொண்டு வந்தனர். இருபதாம் நூற்றாண்டில், அமெரிக்காவில் பகாசுர கம்பெனிகள் ஏகபோக உரிமை பெற்று பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்தி வந்தன. அப்போது அரசு தலையிட்டு ஏகபோகத்தை உடைக்க வேண்டி வந்தது. இதனால் அரசு தலையீடற்ற தூய சந்தைப் பொருளாதாரம் இருக்கமுடியாது. ஐரோப்பாவில் உருவான "வர்த்தகர் சமூகம்" போன்று இஸ்லாமியப் பேரரசில் உருவாகாததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.
1. மன்னனின் அதிகாரம் பலமாக நிலைநிறுத்தப் பட்டிருந்தது. வணிகர்களும், புத்திஜீவிகளும் மன்னனுக்கு சேவையாளர்கள் என்ற தரத்தில் இருந்தனர். அவர்கள் பலமான தலைமைச் சமூகமாக உருவாவதற்கான வாய்ப்புகள் முன்கூட்டியே தவிர்க்கப்பட்டன.
2. இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம். இந்த சட்டத்தின் படி சொத்தின் பெரும்பகுதி தானாகவே மூத்த பிள்ளைக்கு போகாது. அனைத்து பிள்ளைகளுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தனி நபருக்கும், அசையா சொத்துகளுக்குமிடையிலான பலவீனமான தொடர்பு, பெருமளவில் காணி நிலங்களை பாதித்தது. வாரிசு அற்றோர் தமது சொத்துகளை, அல்லது காணிகளை மசூதிக்கு கொடுக்கும் வழக்கம் உள்ளது.
3. மசூதிகள் வழிபாட்டு ஸ்தலம் என்பதற்கு அப்பால், சிறு கடைகளைக் கொண்ட வியாபார மையமாகவும் இயங்கி வருகின்றன. இருப்பினும் மத்திய கால ஐரோப்பாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சொந்தமாக வைத்திருந்தது போல மசூதிகள் வைத்திருக்கவில்லை. அதாவது தேவாலயங்கள் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தையும், மசூதிகள் முதலாளித்துவ பொருளாதாரத்தையும் பின்பற்றின.

இன்றைய மத அடிப்படைவாதிகள் (உதாரணத்திற்கு ஹமாஸ்) சில நேரம் சோஷலிசம் பேசுகின்றனர். இது குறித்து சில விளக்கங்கள். முதலாவது தலைமுறையை சேர்ந்த வகாபிகளிடம் சோஷலிச போக்குகள் காணப்படவில்லை. கிட்டத்தட்ட இதே காலத்தில் இந்தியாவில் தோன்றிய ஜாமாத்-ஏ-இஸ்லாமியும் பகிரங்கமாக முதலாளித்துவத்தை பின்பற்றியது. மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களே இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கினர். அதற்கு மாறாக பாலஸ்தீனம், அல்ஜீரியா, லெபனான் போன்ற நாடுகளில் தோன்றிய போர்க்குணாம்சம் மிக்க மத அடிப்படைவாத அமைப்புகள், ஏழை அடித்தட்டு வர்க்கத்தில் இருந்து தோன்றியிருந்தன. தாம் சார்ந்த வர்க்கத்தின் ஆதரவு இன்றியமையாதது என்பதால், சோஷலிச பொருளாதார திட்டங்களை முன்மொழிகின்றன. வட்ட்யில்லாத கடன் வழங்கும் இஸ்லாமிய வங்கிகள், ஏழைகளுக்கான இலவச மருத்துவ மனைகள், இலவச பாடசாலைகள் என்பன இவர்களின் முயற்சியால் செயல்வடிவம் பெறுகின்றன.

"வட்டி அறவிடத் தடை" என்பது இஸ்லாம் மட்டும் கொண்டுவந்த விதியல்ல. யூத, கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மதங்கள் கூட ஆரம்பத்தில் குறிப்பிட்ட காலம் வட்டி அறவிட தடை விதித்திருந்தன. ஆயினும் காலப்போக்கில் பொருளாதார வளர்ச்சி இந்தத் தடையை மீறியது. இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் தற்போது யூதர்களை கந்து வட்டிக்காரராகவும், முதலாளிகளாகவும் காட்டி பொது மக்களின் ஆதரவை திரட்டுகின்றனர். கொடுத்த கடனுக்கு அநியாய வட்டி வாங்கி ஏழைகளை வருத்துவதை குர் ஆன் கடுமையாக கண்டிக்கின்றது. இதன் அடிப்படையில் கட்டப்பட்ட இஸ்லாமிய வங்கிகள், சாதாரண மக்களுக்கு வழங்கும் சிறு கடன்களுக்கு வட்டி அறவிடுவதில்லை. எகிப்தில் மத அடிப்படைவாதிகள் இஸ்லாமிய வங்கிகளை நிறுவி ஏழைகளுக்கு சேவை செய்கின்றனர். அந்த வங்கிகளுக்கு நன்கொடை வழங்கும் புரவலர்கள் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து விட்டு வந்தவர்கள். அதைவிட பெருமளவு நிதி சவூதி அரேபியாவில் இருந்து வருகின்றது. வேறொருவிதமாக கூறினால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணக்கார மேற்குலக நாடுகளின் நிதியில் இயங்குவது போல, சவூதி அரேபியா பல ஏழை முஸ்லிம் நாடுகளில் தொண்டு செய்கின்றது.

ஒரு முஸ்லிமின் பிரதான மதக் கடமையான "ஸகாட்" வழங்குவதும், மதவாத சோஷலிசத்திற்கு வலுச் சேர்க்கின்றது. ஸகாட் என்ற, வசதி படைத்தவர்கள் தமது வருமானத்திலிருந்து வழங்கும் சிறு தொகையானது, ஏழை மக்களின் நலன் காக்க பயன்படுத்தப் பட வேண்டும். என்னே அதிசயம்! 20 ம் நூற்றாண்டு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள், ஸகாட் முறையை தமது நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தினர். ஆனால் அவர்களது "நலன்புரி அரசு" தொழில் செய்யும் அனைத்து பிரசைகளிடம் இருந்தும் வரி அறவிட்டது. ஏழை முஸ்லிம் நாடுகள் ஐரோப்பா சொல்லிக் கொடுத்த முதலாளித்துவத்தை பின்பற்றின. ஆனால் இஸ்லாமின் ஸகாட் எவ்வாறு நலன்புரி அரசை கொண்டு வந்தது என்பதை மட்டும் வசதியாக மறந்து விடுகின்றனர். இதனால் முதலாளித்துவ தீய விளைவுகளால் ஏழைகள் பாதிக்கப்படும் போது, மேற்குலக கோட்பாடுகளை பின்பற்றுவதே துயரத்திற்கு காரணம் என்று மத அடிப்படைவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இஸ்லாமிய அரசு வந்தால் இந்த நிலை ஒரே இரவில் மாறி விடும் என்று மக்களை ஏமாற்றுகின்றனர்.

அன்றிருந்த இஸ்லாமிய இராச்சியமாகட்டும், வருங்காலத்தில் வரப்போகும் இஸ்லாமிய குடியரசாகட்டும், அது எப்போதும் வர்க்கச் சமூகமாகவே இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிர்வகித்த அரச குடும்பமும், மேட்டுக்குடி பிரபுக்களும், வழக்கம் போல மது, மாது, போன்ற கேளிக்கைகளில் உல்லாசமாகப் பொழுதைக் களித்தனர். அதற்கு மாறாக சாதாரண குடியானவர்கள் வயல்களில் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. அவர்களின் மனைவி, பிள்ளைகளும் சேர்ந்தே வேலை செய்யுமளவிற்கு குடும்பக் கஷ்டம்.

பல தார மணம் என்பது, அன்றும் இன்றும் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் கிடைக்கும் ஆடம்பரம். இஸ்லாமிய சட்டப்படி அனைத்து மனைவிகளையும் சமமாகப் பராமரிப்பதென்பது பணக்காரருக்கு மட்டுமே இயலும். திருட்டுக் குற்றத்திற்காக கைகளை இழந்தவர்கள் கூட ஏழை மக்கள் தான். வசதி படைத்த மேட்டுக்குடியினர் பாரதூரமான குற்றம் செய்தாலும் மென்மையான தண்டனைகளுடன் தப்ப முடிந்தது. மேலும் எத்தகைய கடுமையான தண்டனையாலும் சாதாரண திருட்டைக் கூட முற்றாக ஒழிக்க முடியவில்லை. மனிதாபிமற்ற தண்டனைகளுக்கு பேர் போன சவூதி அரேபியாவிலேயே திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்கின்றன. ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்பதால், அப்படி எதுவும் நடப்பதில்லை என்று அர்த்தமில்லை.

நமது காலத்து மத அடிப்படைவாதிகள், அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தனியுடமை பற்றியோ, அல்லது சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றியோ மறந்தும் கேள்வி எழுப்புவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை குர் ஆனில் சொல்லப்பட்ட, இறைவனின் நேரடி ஆட்சிக்கு தம்மை தயார் படுத்துகின்றனர். கிறிஸ்தவர்கள் அதையே இயேசு கிறிஸ்து அரசனின் ஆட்சி என்று சொல்கின்றனர். இந்துக்கள் அதனை கலியுகக் கல்கி அவதாரம் என்றழைக்கின்றனர். எல்லா மதங்களும் தொடங்கும் புள்ளி ஒன்றென்றால், எல்லா மத அடிப்படைவாதங்களும் முடியும் புள்ளியும் ஒன்று தான்.

---(முற்றும்)---

முன்னைய பதிவுகள்:
3.பெண்ணடிமைத்தனமும் மதவாத சட்டங்களும்
2.இஸ்லாமிய மத அரசியலின் தோற்றம்
1.மத அடிப்படைவாதம் : ஒரு மேலைத்தேய இறக்குமதி

Thursday, May 14, 2009

பெண்ணடிமைத்தனமும் மதவாத சட்டங்களும்

மத அடிப்படைவாதம்: ஒரு மேலைத்தேய இறக்குமதி - 3
இதுவரை இஸ்லாமிய உலகில் மத அடிப்படைவாதத்தை தோற்றுவித்த சக்திகளைப் பார்த்தோம். இனி அவர்களின் தத்துவார்த்த கொள்கை விளக்கங்களை பார்ப்போம். முதலில் மத அடிப்படியாவாதம் என்றால் என்ன என்பதற்கு சரியான வரைவிலக்கணம் கொடுக்கப்படுவது அவசியம். நடைமுறையில் இருக்கும் பல சொற்களின் அர்த்தம் தெரிந்து பயன்படுத்துவது சிறந்தது.
1. பழமைவாதிகள்: சமயச் சடங்குகளை, ஆச்சாரங்களை வழுவுறா வண்ணம் பின்பற்றுவபவர்கள். தம்மைத் தாமே சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் இவர்கள் பொதுவாக அரசியலில் ஈடுபடுவதில்லை.
2. இஸ்லாமியவாதிகள்: இஸ்லாம் என்ற மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்கள். பாராளுமன்ற கட்சி அரசியல் நடத்துபவர்கள் முதல், ஆயதப் போராட்டத்தில் நம்பிக்கை உள்ள தீவிரவாதிகள் வரை.
3. மத அடிப்படைவாதிகள்: சாத்வீக வழியிலேயோ, அல்லது வன்முறைப் போராட்டம் மூலமோ இஸ்லாமியப் புரட்சியை ஏற்படுத்த விரும்புபவர்கள். புனித நூல் சட்டமாகும். அனைவரும் மத நெறிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுவர்.
இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், மேற்கே மொரோக்கோ முதல் கிழக்கே சீனா வரையிலான பரந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றை அமைக்க கனவு காண்கின்றனர். மேற்குறிப்பிட்ட விளக்கங்கள் பிற மதங்களை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அவர்கள் எல்லோரும் தத்துவார்த்த ரீதியாக ஒன்று படுகின்றனர். முதலில் மேற்குலக நாடுகளால் முஸ்லிம்கள் அடக்கப்படுவதாகவும், அதற்கு தமக்கிடையே ஒற்றுமையின்மையால் முஸ்லிம்கள் பலவீனமாக இருப்பதாகவும், மதப்பற்று குறைந்ததுமே காரணம் என்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்பவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் அல்ல. இஸ்லாமிய புனித நூலின் சட்டங்களுக்கு அமைய வாழ்பவர்கள் மட்டுமே உண்மையான முஸ்லிம்கள். இதேநேரம், சட்டங்கள் பலவிதமாக மொழிபெயர்க்கப் படுவதால் வரும் குழப்பங்கள் இன்னும் தீரவில்லை.

"மத ஒற்றுமை" என்றால் என்னவென்று விரிவாகப் பார்ப்போம். பத்திற்கும் குறையாத மதப்பிரிவுகள் ஒன்று சேருதல். வர்க்கங்கள் மோதல் இன்றி சமரசம் செய்து கொள்தல். தேசியம் என்பது மேலைத்தேய கற்பிதம் என்பதால், "முஸ்லிம்" என்பது மட்டுமே ஒரேயொரு தேசிய அடையாளம். தற்காலத்தில் நமக்குத் தெரிந்த சில நாடுகளை, "முஸ்லிம் நாடுகள்" என அழைக்கபடுவதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு நாடு முதலாளித்துவ அல்லது சோஷலிச கொள்கைகளை பின்பற்றினால், அவையெல்லாம் மேலைத்தேய சித்தாந்தங்கள் என்று நிராகரிக்கின்றனர். மதத்தை பின்பற்றாத மிதவாதிகளை அல்லது மதச்சார்பற்றவர்களை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. "எம்மதமும் சம்மதம்" என்று கூறுவதை பிழையான நிலைப்பாடாக கருதுகின்றனர். அவர்களின் உலகில் நாஸ்திகர்கள் என்று யாரும் இருக்க முடியாது, எல்லோரும் எதோ ஒரு மதத்தை சேர்ந்தவர்கள். ஒரே மதம்: இஸ்லாம், ஒரே மொழி: அரபு, ஒரே இனம்: முஸ்லிம் என்பது, இஸ்லாமியக் குடியரசின் தாரக மந்திரம்.

மேலைத்தேய நாகரீகம் தமது தொன்மையான கலாச்சாரத்தை பாதிக்கின்றது என குறைப்படுகின்றனர். ஆபாசப்படங்கள், போதைப்பொருட்கள், அரைகுறை ஆடை அணிதல், கண்டவனுடன் திரியும் சுதந்திரப்போக்கு, போன்ற மேலைநாட்டு கலாச்சார சீரழிவு தமது பிள்ளைகளை கெடுத்து விடும் என அஞ்சுகின்றனர். பழமைவாத பிற்போக்குத்தனங்களில் ஊறிய மக்களை, "கலாச்சார அழிவு" பற்றிய பீதியூட்டி, அதனை மேற்குலகிற்கு எதிரான வெறுப்பாக வளர்க்கின்றனர். "ஐரோப்பியர்கள் கலாச்சாரமற்றவர்கள். நாம் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரத்தை கட்டிக்காப்பவர்கள்." என்ற கூற்று இன அடிப்படையில் தான் முன்வைக்கப்படுகின்றது. மேலைத்தேய கலாச்சார ஆதிக்கத்தை எதிர்க்கும் மத அடிப்படைவாதிகள், மேலை நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பாவனைப்பொருட்களை எதிர்ப்பதில்லை. அதியுயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மேற்குலக உற்பத்திப் பொருட்கள், குறிப்பாக ஆயுதங்கள் இன்றி அவர்களது இஸ்லாமியக் குடியரசு நிலைக்க முடியாது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட மாநிலங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். பல தசாப்தங்களாக நாட்டை இரும்புப்பிடியில் வைத்திருந்த சர்வாதிகாரம் மறைந்து, ஜனநாயகம் வந்த போது, முஸ்லிகள் தமக்கு ஷரியா சட்டம் வேண்டும் எனக் கோரினர். இதை அடுத்து ஏற்பட்ட கிறிஸ்தவ-முஸ்லிம் கலவரத்தால், இறுதியில் ஷரியா சட்டம் கொண்டுவர அரசு இணங்கியது. இது நடைமுறைக்கு வந்த பின்னர் தான், வதந்திகள் எவ்வளவு தூரம் ஆபத்தானவை என தெரிய வந்தது. அரசியல் சட்டப்படி, ஷரியா சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இரண்டு வகை நீதிமன்றங்கள் இருக்கின்றன. முஸ்லிம் அல்லாதவர்கள் தமக்கு விரும்பிய நீதி மன்றத்தில் நீதி கோரலாம். ஆனால் ஷரியா சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பாதிப்பான கொடுங்கோல் சட்டம் என்பது போல பரப்பட்ட வதந்தி பல உயிர்களை காவு கொண்டிருந்தது.

இஸ்லாமிய சட்டம் என பொதுவாக அறியப்பட்ட ஷரியா (பாதை) பற்றிய பரந்த அறிவு பலரிடம் இல்லை. பைபிளில் (பழைய ஏற்பாடு) மோசசிற்கு ஆண்டவன் அளித்த பத்துக் கட்டளைகள் தான் நவீன சட்டங்களின் மூலமாக கருதப்படுகின்றது. பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல சட்டங்கள், குர் ஆனிலும் இருக்கின்றன. அதே நேரம் அரேபிய குடாநாட்டின் பாரம்பரிய சட்டங்களும் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு. இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படை குர் ஆனாக இருந்த போதிலும், 12 ம் நூற்றாண்டில் தான் சட்டவாக்கம் முழுமை பெற்றது. அந்தக் கால கட்டத்தில் நான்கு சட்டக்கல்லூரிகள் நிறுவப்பட்டு, சட்டக் படிப்பில் புலமை பெற்றவர்களைக் கொண்டு ஆராய்ச்சிகள் நடந்தன. நான்கு கல்லூரிகளும் அதனை நிறுவிய அறிஞர்களின் பெயர்களால் அறியப்படுகின்றன. இஸ்லாமிய சட்டம் பற்றிய இந்த நான்கு கல்லூரிகளின் பார்வையும், கொடுக்கும் விளக்கங்களும் சில நேரம் வேறுபடுகின்றன. "ஹனாபி கல்லூரி" மிதவாத போக்குடையது. அதற்கு மாறாக "மாலிக் கல்லூரி" கடும்போக்கு பழமைவாதிகளை கொண்டது. "ஷாபி கல்லூரி" இவையிரண்டுக்கும் இடைப்பட்ட போக்குடையது. "ஹன்பலி கல்லூரி" வஹாபியரின் கோட்டை. இவை நான்கும் சவூதி அரேபியாவில் அமைந்திருந்தன. ஒரு காலத்தில் இஸ்லாமியப் பேரரசின் தலைநகராக இருந்த பாக்தாதில் "கானூன்" என்ற பெயரில், மிகவும் மாறுபட்ட மதச்சார்பற்ற சிவில் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இது பெரும்பாலும் இன்று நடைமுறையில் உள்ள மேற்கத்திய நவீன சட்டத்தை போன்றது.

இதிலிருந்து இஸ்லாமிய ஷரியா சட்டம், எந்தக் கல்லூரியால் முன்மொழியப்பட்டது என்பதைப் பார்ப்பதும் அவசியம். திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுவது போன்ற சரத்துகள் உள்ளன தான். ஆயினும் இது கடும்போக்காளரின் கல்லூரியில் மட்டுமே போதிக்கப்படுகின்றது. இத்தகைய கொடூரமான தண்டனைகளுக்கு மாற்றாக, மென்மையான தண்டனைகளை வழங்கும் நீதிமன்றங்களும் உண்டு. உதாரணத்திற்கு பாகிஸ்தானில் அமுலில் உள்ள ஷரியா சட்டம் அது கை வெட்டுவது போன்ற தண்டனைகளை வழங்குவதில்லை. மேலும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் காலகட்டத்தில் மட்டுமே கடுமையான சட்டங்களை குர் ஆன் முன்மொழிகின்றது. இதே நேரம் இறைத்தூதர் முகமது வாழ்ந்த காலத்தையும், அப்போதிருந்த அரேபிய சமூகத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அன்றைய சமூக கட்டுப்பாடுகள் எந்த அளவிற்கு மோசமாக இருந்தது, என்பதை ஒற்றியே இது போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு மாற்றானுடன் தகாத உறவு வைத்திருந்த பெண்ணை கல்லால் எறிந்து கொல்லும் தண்டனை பற்றி குர் ஆன் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், தகாத உறவைக் கண்ட நான்கு சாட்சிகள் தேவை. இப்படியான சம்பவங்களை நேரில் கண்ட நான்கு சாட்சிகளை தேடிப்பிடிப்பது இலகுவான காரியமல்ல. வதந்திகளை கேள்விப்பட்டே குற்றஞ் சாட்டப்பட்ட பெண்ணை கல் வீசிக் கொன்று கொண்டிருந்த சமூகத்தில், சாட்சிகளை விசாரித்த பிறகு தண்டனையை நிறைவேற்றுமாறு குர் ஆன் சட்டம் கொண்டு வந்தது. அன்றிருந்த பெண்களின் கையறு நிலையுடன் ஒப்பிடும் போது, இந்த சட்டம் பெண்ணுக்கு சில உரிமைகளை வழங்கியது. இயேசு வாழ்ந்த யூத சமூகத்திலும் அத்தகைய வழக்கம் இருந்ததை பைபிள் கதை ஒன்று எடுத்துக் காட்டுகின்றது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமிய மதத்தை நிந்தித்தற்காக சல்மான் ருஷ்டி என்ற எழுத்தாளருக்கு ஆயத்துல்லா கொமெய்னி வழங்கிய மரண தண்டனை தீர்ப்பிற்கு பின்னர், பத்வா என்ற சொல் உலகப்பிரசித்தி பெற்றது. அதிலிருந்து பலர் பத்வா என்றால் மரண தண்டனை என அர்த்தப்படுத்திக் கொண்டனர். ஆனால் அந்த சொல்லின் உண்மையான அர்த்தம் வேறு. ஒரு வழக்கறிஞர் தன்னிடம் சட்ட உதவி கேட்டு வருபவரிடம், சட்டப் புத்தகங்களை புரட்டி வழக்கு சார்பான விளக்கம் கொடுப்பார். அதை அடிப்படையாக கொண்டு நீதிபதி தீர்ப்பு சொல்வார். அதற்கு தான் பத்வா என்று பெயர். ஆனால் கொமெய்னி வழங்கிய பத்வா வேறு. அது அரசியல் நோக்கத்திற்காக மதத்தையும், சட்டத்தையும் திரித்த பத்வா. நமது காலத்து மத அடிப்படைவாதிகள் எல்லாம் இப்படி மதப்போர்வை போர்த்திய அரசியல்வாதிகள் தாம். பிற்போக்குவாதிகளின் விவேகமற்ற செயல்கள், பலரது கவனத்தை ஈர்க்கின்றன.

முஸ்லிம் பெண்கள் தலையில் இருந்து பாதம் வரை மூடும் "நிகாப்", அல்லது "பூர்க்கா", அல்லது "ஷடோர்" என்ற ஆடை அணிவது பற்றி உலகம் முழுவதும் பலவாறாக விவாதிக்கப் படுகின்றது. இந்த ஆடையின் பூர்வீகம் ஈரான். அங்கே ஷடோர் என அழைக்கப்படும் இந்த ஆடை, இஸ்லாமிற்கு முந்திய கலாச்சாரத்தை சேர்ந்தது. குர் ஆன் தோன்றிய காலத்தில், அரேபியாவில் இந்தப் பழக்கம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. புனித நூல் இது பற்றி தெளிவாக எங்குமே குறிப்பிடவில்லை. இறைத்தூதர் முகமதுவை பின்பற்றிய பெண்களுடன், அமைப்பை சேர்ந்த ஆண்கள் திரைக்கு பின்னால் இருந்தே பேச வேண்டும் என்று ஒரு வாசகம் உண்டு. மேலும் தம்மை வேறுபடுத்திக் காட்ட முஸ்லிம் பெண்கள் அடக்கமான ஆடை அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகின்றது. அனேகமாக திரை என்ற பொருள்படும் "ஹிஜாப்" என்ற அரபுச் சொல், உடலை மூடும் ஆடை என மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம். ஒரு வீட்டிற்கு ஆண்கள் விருந்தினராக செல்லும் நேரம், அந்த வீட்டு பெண்கள் திரை மறைவில் இருப்பர். இந்தக் குறிப்பு பைபிளிலும் வருகின்றது. இப்போதும் எமது நாடுகளிலும் சில பழமைவாதம் பேணும் குடும்ப பெண்கள், வீட்டிற்கு அந்நிய ஆண்கள் வந்தால் சமையலறைக்குள் சென்று விடும் பழக்கம் இங்கே நினைவுகூரத்தக்கது.

இஸ்லாமிய அரசர்கள் ஆண்ட காலத்தில், அவர்களின் அரண்மனையில் ஹாரம் (அந்தப்புரம்) என்ற பெண்களுக்கு தனியே ஒதுக்கப்பட்ட பகுதி இருந்தது. அந்தப்புரத்தில் இருந்த பெண்கள், வெளியுலகம் காணாது, சுதந்திரமின்றி அடைந்து கிடந்தனர். நாட்டுப்புறங்களில் ஏழைக் குடியானவன், தனது வீட்டில் தனியான அந்தப்புரம் வைத்திருக்க வசதியற்றவன். அதனாலும் தனது வீட்டுப் பெண்கள் உடலை மூடும் ஆடை அணிந்து வெளியே செல்லுமாறு கட்டுப்படுத்தி இருக்கலாம். நாட்டுப்புற பெண்கள், வயலில் சேலை செய்ய வேண்டி இருந்தது, அல்லது சந்தைக்கு சென்று வர வேண்டி இருந்தது. ஆகவே அந்தப்புரமாக இருந்தால் என்ன, உடலை மூடும் ஆடையாக இருந்தால் என்ன, பெண் அடக்குமுறையை நெறிப்படுத்தவே கொண்டுவரப்பட்டன. மத அடிப்படைவாதிகள் பூர்க்கா அணிவது பெண்களுக்கு பாதுகாப்பானது என புதிய வியாக்கியானம் சொல்கின்றனர். அப்படியானால் இன்றைய சமூகம் பாதுகாப்பற்றது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். சமூகக் குறைபாடுகளை களையாமல், பெண்களே உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுவது, ஒரு பிரச்சினைக்கான தற்காலிக தீர்வு மட்டுமே. இன்றைய முஸ்லிம் பெண்கள் தம்மை கட்டுப்பாடான மதப்பற்றாளர்கள் எனக் காட்ட, தலையை மூடி முக்காடு போரடுவது வேறு விடயம். 19 நூற்றாண்டு ஐரோப்பாவில், கத்தோலிக்க தேவாலயத்தினுள் பிரார்த்தனைக்கு போகும் கிறிஸ்தவ பெண்களும் முக்காடு அணிந்திருந்தனர்.

இஸ்லாமிய மதம் மட்டுமல்ல, கிறிஸ்தவ, யூத மதங்கள் கூட ஆணாதிக்க சமுதாயத்தில் உருவானவை தான். சமநிலையற்ற சமுதாயம் பற்றி குறிப்பட்ட மதங்கள் கேள்வி எழுப்பாததுடன், அதை சாதாரண தோற்றப்பாடாக ஏற்றுக் கொள்கின்றன. இஸ்லாமிய மதம் தோன்றிய முகமதுவின் காலத்தில் பெண்களின் நிலை வேறு விதமாக இருந்தது. முகமது தலைமையிலான இஸ்லாமியப்படையில் பெண் வீராங்கனைகளும் இருந்தனர். பண்டைய அரேபிய சமுதாயத்தில் இஸ்லாம் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும், சீர்த்திருத்தியது. இறைத்தூதர் முகமதுவே ஒரு விதவையை மணந்து கொண்ட விடயம் குறிப்பிடத்தக்கது. விதவைகள் மறுமணம் அப்போதே ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெண்களுக்கான சொத்துரிமையை குர் ஆண் அங்கீகரித்தது. இருப்பினும் தற்கால மத அடிப்படைவாதிகள் கொண்டுவர விரும்பும் சொத்துரிமைச் சட்டங்கள், பெண்களை ஆண்களில் தங்கி இருக்கச் செய்யும் நோக்கம் கொண்டவை. ஜோர்டான், வளைகுடா நாடுகள், (தாலிபானின்) ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், "மனைவி தனது சொத்தை விற்க கணவனின் அனுமதி பெற வேண்டும்" என்ற சட்டம் உள்ளது. இதே சட்டம் "தேச வழமைச் சட்டம்" என்ற பெயரில் இலங்கையில் யாழ் குடாநாட்டில் அமுலில் உள்ளது. அங்கே இந்த சட்டத்தை கொண்டுவந்தவர்கள், சைவ மதத்தை சேர்ந்த தமிழ் பழமைவாதிகள்.
---(தொடரும்)---

Wednesday, May 13, 2009

இஸ்லாமிய மத அரசியலின் தோற்றம்

மத அடிப்படைவாதம் ஒரு மேலைத்தேய இறக்குமதி - 2

இஸ்லாமிய அடிப்படைவாதம் எங்கேயும் ஒரே மாதிரியாக தோன்றவில்லை. இதன் வளர்ச்சியை இரண்டு கால கட்டமாக பிரிக்கலாம். 20 ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி, மற்றும் இறுதிப்பகுதி என இரண்டு தலைமுறைகளை கண்டுள்ளது. முதலாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் பின்தங்கிய பாலைவன நாடான சவூதி அரேபியாவில், மேற்கத்திய செல்வாக்கிற்கு உட்பட்ட எகிப்திலும் தோன்றியது. இவ்விரு மதவாத இயக்கங்களும் வெவேறு தளங்களில் தோன்றியிருந்ததுடன், சில கொள்கை வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. சவூதி அரேபியாவில் "முஹமது பின் அப்துல் வஹாப்" இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் இருக்குமிடங்களுக்கு யாத்திரை சென்று வந்து, தனது கருத்துகளை நூலில் வடித்தார். அவரது ஆதரவாளர்கள் தம்மை "முவாஹிதூன்" என அழைத்துக் கொண்டனர். ஆனால் பிறர் அவர்களை "வஹாபிகள்"என அழைத்தனர்.

வகாபிகளைப் பொறுத்தவரை குர் ஆனில் எழுதி உள்ளவை மட்டுமே ஏற்றுக் கொள்ளத்தக்கன. புனிதர்களை வழிபடும் தர்க்காகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
மெதினாவில் இறைத்தூதர் முகமதுவின் கல்லறை ஒன்று இருந்தது. மக்கள் வழிபடுகிறார்கள் என்று, அதைக் கூட சேதமாக்கினார்கள். அரேபிய இனக்குழு ஒன்றின் தலைவரான முஹமது இபுன் சவுத் தலைமையில் வஹாபிகள் இராணுவ பலத்தை கட்டி அமைத்தனர். ஆரம்பத்தில் சிறிய ஆயுதக் குழுவாக இருந்து, பின்னர் படை பலத்தை பெருக்கி, ரியாத், மெதீனா போன்ற நகரங்களை கைப்பற்றி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். அது தான் சவூதி அரேபியா என்ற நவீன தேசம் தோன்றிய கதை. வஹாபி மதப்பிரிவின் தலைவனாக மட்டுமல்ல, அரசுத் தலைவனாகவும் மாறிய (அப்துல் அசீஸ் இபுன்) சவூத்தின் பெயர் அந்த புதிய நாட்டிற்கு சூட்டப்பட்டது. முதலாம் உலக யுத்தத்தின் முடிவில், அந்தப் பிராந்தியத்திற்கு வருகை தந்த இராணுவ பலம் மிக்க அந்நியர்களான பிரிட்டிஷாருடன் சில உடன்படிக்கைகள் போடப்பட்டன.

சவூதி அரேபியாவில் மையம் கொண்ட வஹாபிகள், பின்னர் பிற நாடுகளுக்கும் தமது மத அடிப்படைவாத புரட்சியை ஏற்றுமதி செய்ய விளைந்தனர். அளவு கடந்த எண்ணை வளம் அவர்களது கனவை நனவாக்கியது. ஜெத்தாவில் இருக்கும் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் உலகெங்கும் இருந்து வரும் முஸ்லிம் மாணவர்களுக்கு இலவச மதக்கல்வி அளித்தது. முஸ்லிம்கள் செறிவாக வாழும் நாடுகளில் வகாபிச சங்கம் அமைக்க ஊக்குவிக்கப்பட்டது. சவூதி அரசின் நிதி உதவியில் புதிய மசூதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இவற்றை விட பிற நாடுகளின் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு பெருமளவு நிதி உதவி வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளை எதிர்த்து போரிட்ட முஜாகிதீன் குழுக்கள், மற்றும் பின் லாடன் போன்றோரின் கூலிப்படைகள் என்பன குறிப்பிடத்தக்க உதாரணங்கள். சூடானில் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய துரபியின் மத அடிப்படைவாத அரசிற்கும் சவூதி அரேபியா பக்க பலமாக இருந்தது.

அண்மையில் தான் சவூதி அரேபியா தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடியது. இந்த நூறாண்டுகளில் அங்குள்ள மன்னனின் சர்வாதிகாரம் பற்றி, மத அடிப்படைவாத பிற்போக்குத்தனம் பற்றி, கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவது பற்றி, பெண்ணடக்குமுறை பற்றி, இதுவரை ஜனநாயகம் காக்கும் மேற்குலக நாடுகளாகட்டும், மனித உரிமை நிறுவனங்களாகட்டும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அங்கே பிற மத தெய்வங்களின் படங்களை வைத்திருப்பது குற்றம். அது மட்டுமல்ல பிற இஸ்லாமிய மதப் பிரிவுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. பெண்கள் முகத்தை திரையிட்டு மூடி, கருநிற அங்கி அணிந்தே வெளியில் செல்ல வேண்டும். பெண்களுக்கு வாகனமோட்டும் உரிமை இல்லை. (ஈரானில் கூட இந்த அளவு கட்டுப்பாட்டுகள் கிடையாது.)

சவூதி வகாபிசத்திற்கு மாறாக எகிப்தில் தோன்றிய "முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்" மத அடிப்படைவாதத்திற்கு புதிய கோட்பாட்டு விளக்கம் அளித்தது. இஸ்லாமிய மத வரலாற்றில் முதன்முதலாக அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைத்து, முஸ்லிம் என்ற ஒற்றை (அரசியல்) அடையாளத்தின் கீழ் கொண்டுவருவதை தனது இலட்சியமாக கொண்டுள்ளது. இன்று பல இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் கனவு காணும் "அகண்ட இஸ்லாமிய இராச்சியத்திற்கு" அடிக்கோள் நாட்டியது. சவூதி வஹாபிகள் ஒரு மதத்தின் உட்பிரிவாக இயங்குவதுடன், தமது பாதையே சரியானது என்று மாற்றுப் பிரிவினர் மீது ஆதிக்கத்தை நிலைநாட்ட எத்தனிக்கின்றனர். முஸ்லிம் சகோதரத்துவம் ஆரம்பத்தில் இருந்தே அரசியல் கட்சியாக தான் உருவெடுத்தது.

"ஹசன் அல் பன்னா" என்ற முன்னை நாள் பாடசாலை ஆசிரியர் 1928 ல், முஸ்லிம் சகோதரத்துவம் (al Ikhwan al Muslimun) என்ற கட்சியை தொடங்கினார். ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவர்களது அரசியல் அபிலாஷைகள் தெரிந்தன. இந்தியாவில் இந்துத்வாவாதிகள் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை உண்டாக்கியது போல, எகிப்தில் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களை முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தூண்டி விட்டது. கட்சியின் ஸ்தாபகர் ஹசன் அல் பன்னா, ஒரு கலவரத்தின் பொது மர்மமான முறையில் கொல்லப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகும் பெரும்பான்மை முஸ்லிம்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தது. யூத எதிர்ப்பு அரசியலில் மட்டுமல்ல, கொள்கை அடிப்படையில் நாசிஸத்துடன் ஒரே பாதையில் பயணம் செய்கின்றனர்.

எகிப்தில் பிரிட்டிஷாரின் வெளியேற்றத்தின் பின்னர் ஏற்பட்ட சதிப்புரட்சி மூலம், ஆட்சிக்கு வந்த நாசர் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் சோஷலிச பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்தனர். முஸ்லிம் சகோதரத்துவம் நாசரின் ஆட்சியை கவிழ்க்க சதிப்புரட்சி செய்து தோல்வி கண்டது. ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டதால், கட்சி குறிப்பிட்ட காலத்திற்கு இயங்கவில்லை. தலைவர் பன்னாவின் மரணத்தின் பின்னர் கட்சி இரண்டாக உடைந்தது.
1. "ஜிகாத் அல் இஸ்லாமி": இது பாலஸ்தீனத்திலும் இயங்கி வருகின்றது.
2. "தக்பீர் வா ஹிஜ்ரா": சிறையில் இருந்த உறுப்பினர்களில் இருந்து தோன்றியது.

முஸ்லிம் சகோதரர்களால் கவரப்பட்ட ஈரானின் ஆயத்துல்லா கொமைனி, இஸ்லாமியப்புரட்சியை வெற்றிகரமாக தலைமை தாங்கி உலகின் கவனத்தை ஈர்த்தார். ஈரானை ஷா மன்னன் ஆண்ட காலத்தில் மத நிறுவனங்கள் நன்றாக பராமரிக்கப்பட்டன. ஆனால் இறுதிக்காலத்தில் ஷா வழங்கி வந்த நிதியை நிறுத்தியதால், மதத் தலைவர்கள் அரசனுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். மக்களை அணி திரட்டி, புரட்சி நடத்தி, தாமே ஆட்சியை கைப்பற்றினர். மத அடிப்படைவாத ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு தற்கால ஈரான் ஒரு உதாரணம். ஆரம்பத்தில் பல எதிர்பார்ப்புகளுடன் இஸ்லாமியப் புரட்சியை வரவேற்ற பொது மக்கள், காலப்போக்கில் மாயையில் இருந்து விடுபட்டனர். இரு தசாப்தங்களாக இஸ்லாமியப் போர்வையின் கீழ், முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பு, ஏழை-பணக்காரன் வேற்றுமையை அதிகரித்துள்ளது. பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு மதம் ஒரு தீர்வல்ல என உணர்ந்துள்ளனர்.

--- (தொடரும்) ---

Tuesday, May 12, 2009

மத அடிப்படைவாதம் : ஒரு மேலைத்தேய இறக்குமதி


"இறைவனின் இல்லங்கள் யாவும் மனிதர்களாலேயே நடத்தப்படுகின்றன. அவர்கள் குர் ஆன் வாசகங்களை கொண்டு பயத்தை விதைக்கிறார்கள்... உலகில் இரண்டு வகையான மனிதர்கள் உண்டு. ஒன்று, மதத்தை பின்பற்றும் அறிவில்லாதவர்கள். இரண்டு, எந்த மதத்தையும் பின்பற்றாத அறிவாளிகள்." - அபு அலா அல் மா அரி (11 ம் நூற்றாண்டில் பாக்தாத்தில் வாழ்ந்த அரபுதத்துவஞானி)

அண்மைக்காலமாக உலகில் அதிகமானோர் பாவிக்கும் சொற்பதங்களில் ஒன்று: "மத அடிப்படைவாதம்". பலருக்கு இதன் சரியான அர்த்தம் தெரிவதில்லை. அர்த்தம் தெரிந்தவர்கள் தமது அரசியல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இதனால் இது மதம் சார்ந்த மொழிப் பிரயோகமாகவன்றி, அரசியல் சார்ந்தமொழிப் பிரயோகமாக காணப்படுகின்றது. புதிய உலக ஒழுங்கின் புதிய எதிரிகளான இஸ்லாமியரை குறித்து, எதிர்மறையான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இஸ்லாமிய மத அடிப்படைவாதம் என்ற சொற்பிரயோகம், இது இஸ்லாமியருக்கு மட்டுமே உரிய சிறப்படையாளம் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது. உண்மையில் மத அடிப்படைவாதம் என்றால் என்ன? என்றதெளிவான புரிதல், யார் மத அடிப்படைவாதிகள் என முடிவு செய்யவும் உதவியாக இருக்கும். மேலும் மதத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான வேறுபாடுகள், ஒற்றுமைகள் என்னென்ன என்பதையும் அறிந்திருத்தல் வேண்டும்.

உலகில் மத அடிப்படைவாத போக்குகள் 20 ம் நூற்றாண்டில் இருந்தே தெரியஆரம்பிக்கின்றன. அதற்கு முன்பு இருந்த மதங்களின் ஆட்சி அமைப்பும், நமதுகால மத அடிப்படைவாதத்தையும் ஒன்றோ என போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. மனித நாகரிக வளர்ச்சியில் மதங்கள் வகித்த பாத்திரம் முக்கியமானது. ஆரம்பத்தில் ஆன்மீக இயக்கமாக தொடங்கிய மதங்கள், பின்னர் அரசு நிறுவனமாக வளர்ந்து, தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டன. பிற்காலத்தில் ஐரோப்பாவில் தோன்றிய புதிய சித்தாந்தம் லிபரலிசம். அது வர்த்தகர்கள், மத்தியதர வர்க்கம் ஆகியோரது சித்தாந்தமாக செல்வாக்குப் பெற்றபோது, கிறிஸ்தவ மதத்தின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. சமூகத்தில் தேவாலயம் வகித்த பாத்திரத்தை பாராளுமன்றமும், மதகுருக்களின் பாத்திரத்தை அரச அதிகாரிகளும், பைபிளை அரசியல் நிர்ணய சட்டமும் மாற்றிக் கொண்டன. பிரபலமான பிரெஞ்சுப்புரட்சி இந்த மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தது.

ஒரு காலத்தில் மேற்கு ஐரோப்பா முழுவதையும், ஆட்சி செய்த கத்தோலிக்க மதத்தின் தலைமைப்பீடமான வத்திக்கான் மாற்றங்களை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை. பாப்பரசர் "பைபிள் ஆய்வுக் குழு" வை நிறுவினார். இந்தக் குழு, பைபிளில் நடந்தவைகள் உண்மையாக நடந்த சம்பவங்கள் என அறிக்கை சமர்ப்பித்தது. அனைத்து கத்தோலிக்க மதகுருக்களும் இதை ஏற்றுக் கொண்டு சத்தியப்பிரமாணம் செய்யும் படி பணிக்கப் பட்டனர். இவ்வியக்கமானது "
intégrisme"  என அழைக்கப்பட்டது. இன்றும் கூட மத அடிப்படைவாதிகளை குறிக்க பிரெஞ்சு மொழியில் இந்தச் சொல் (intégrisme) பயன்படுத்தப் படுகின்றது. ஐரோப்பா மீண்டும் கிரிஸ்தவ மயமாக்கப்பட வேண்டும் என்பதே இவ்வியக்கத்தின் குறிக்கோள்.

கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த, ஆனால் பைபிளை ஏற்றுக் கொண்ட ஒரு பிரிவினர், புரட்டஸ்தாந்துக்காரர் என அழைக்கப்படலாயினர். இவர்கள் பைபிளில் எழுதி உள்ளதின் படி வாழ்வதே உண்மையான கிறிஸ்தவனின் கடமை என நம்பினர். இவர்கள் பெருமளவில் புதிய கண்டமான அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கே தமது குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டனர். அவர்கள் பைபிள் நெறிகளின் படி அமைந்த வாழ்க்கை முறையை தமது குடியிருப்புகளில் நடைமுறைப்படுத்தினர். ஆனால் அவர்களின் எதிரி "நவீனமயமாக்கல்" வடிவில் வந்தது. நவீனமயமாக்கல் தமது மத நெறிகளை சீர்குலைத்து விடும் என அஞ்சியகடும்போக்காளர்கள், மத நம்பிக்கையை மீட்பதற்காக இயக்கம் ஆரம்பித்தனர். 1910 க்கும் 1915 க்கும் இடைப்பட்ட காலத்தில், "The Fundamentals" என்ற பெயரில் துண்டுபிரசுர பிரச்சாரம் செய்தனர். "ஒரு மத அடிப்படைவாதி, மத நம்பிக்கையின்அடிப்படைகளுக்காக போராடத் தயாராக இருக்க வேண்டும். பைபிளில் எழுதிஉள்ளதின் மூலம் வாழ்வதன் மூலமே நம்பிக்கையை மீட்க முடியும்." இவ்வாறு அந்தப் பிரசுரங்களில் இருந்தது.

இந்த புதிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் தம்மை "மத அடிப்படைவாதிகள்" எனஅழைத்துக் கொண்டனர். இதனால் புரட்டஸ்தாந்து கடும்போக்காளரை குறிக்கவே மத அடிப்படிவாதம் என்ற சொல் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சிலர் வாதாடுகின்றனர். இன்றும் கூட அமெரிக்காவில் பல பகுதிகளில் பைபிள் நெறிகளுக்கு அமைய வாழும் கிராமங்கள் பல உள்ளன. அவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி போன்ற நவீன பாவனைப் பொருட்களை காண முடியாது. இன்றும் போக்குவரத்திற்கு குதிரை வண்டிகளை பயன்படுத்துகின்றனர். சில சமூகங்களில் பல தார மணமுறை கூட நிலவுகின்றது. பெண்கள் பொதுவாக உடலை மூடும் ஆடை அணிய வேண்டும். கிராமத்தினுள் மதுபானம் கொண்டுவர முடியாது. சுருக்கமாக சொன்னால், ஆப்கானிஸ்தானில் தாலிபான் கொண்டுவந்த மதக் கட்டுபாடுகள் பல அந்த அமெரிக்க கிராமங்களில் நடைமுறையில் உள்ளன.

மத அடிப்படைவாதம் அமெரிக்காவில் தோன்றினாலும், அது ஐரோப்பாவில்ஏற்பட்ட நவீனமயமாக்கலின் எதிர்மறையான விளைவுகளில் ஒன்று. பிரெஞ்சுப்புரட்சி முன்மொழிந்த பகுத்தறிவுவாதம், மற்றும் டார்வின், கார்ல் மார்க்ஸ்ஆகியோர் கடவுளை மறுத்து மனிதனை முன்னிறுத்தினர். இது கிறிஸ்தவ மதத்தை கடுமையாக பாதித்தது. மேலும் நவீன உலகில் லிபரலிசம் தோற்றுவித்தசுதந்திரவாதப் போக்கால் ஏற்படும் தீயவிளைவுகளை காட்டி; இவையெல்லாம் மத நம்பிக்கைக் குறைவால் ஏற்படுகின்றது என பிரச்சாரம் செய்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் குறைந்த அளவு உறுப்பினர்களை கொண்ட, கிறிஸ்தவ மதஅடிப்படைவாதக் கட்சிகள் இன்றும் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் சில மத அடிப்படைவாதக் குழுக்கள் இரகசியமாக ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. ஒருமுறை FBI இது போன்ற மத நிறுவனம் ஒன்றை முற்றுகை இட்டு, ஆயுதபாணிகளுடன் துப்பாக்கிச் சமருக்கு பின்னரே உள் நுழைய முடிந்தது. ஒக்லஹோமா நகரில் நடந்த குண்டுவெடிப்பிற்கும் கிறிஸ்தவ மத அடிப்படைவாத குழு ஒன்றே காரணம். "கூ கிளாஸ் கான்" போன்ற வெள்ளைநிறவாத அமைப்பை சேர்ந்தவர்களும் மத அடிப்படைவாதிகளாக உள்ளனர்.

தேசியவாதம், பாசிசம் போன்றன ஐரோப்பாவில் தோன்றி இருப்பினும், பின்னர்உலகில் பிற கண்டங்களில் காணப்பட்ட, இதே கொள்கைகளை கொண்ட அரசியல் இயக்கங்களையும் குறிக்க பயன்பட்டன. அதே போல மத அடிப்படைவாதம் என்ற சொல், கிறிஸ்தவ மதத்தில் தோன்றி இருந்த போதிலும், பின்னர் பிற மதங்களில் இதே கொள்கை கொண்டவர்களை குறிப்பிட பயன்பட்டது. பல ஐரோப்பிய கருத்தியல்கள் உலகம் முழுவதும் பரவியதற்கு, காலனிய காலகட்டமும் ஒரு காரணம். காலனிய ஆட்சியாளர்கள் தாம் ஆண்ட நாடுகளில் கிறிஸ்தவ மதத்திற்கு அரச மதம் என்ற ஸ்தானத்தை கொடுத்து வைத்திருந்தனர். உள்ளூர் மதங்கள் மறுமலர்ச்சி என்ற பெயரில் தம்மைமறுசீரமைத்துக் கொண்டன. இந்த மறுமலர்ச்சிக் காலத்தில், இலங்கையில் பௌத்த மதமும், இந்தியாவில் இந்து மதமும், எகிப்தில் இஸ்லாமிய மதமும்தம்மை மறுசீரமைத்துக் கொண்டன. அனைத்து மத அடிப்படைவாதிகளும் அவர்கள் எம்மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், சொல்லும் கருத்துகள் ஒன்றாக இருப்பதை உற்றுக் கவனிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம். அனைவரும் மதத்தின் பெயரால் கடவுளின் (ஜனநாயகமற்ற) ராஜ்யத்தை அமைக்க விரும்பிகின்றனர். அதற்காக வன்முறையை பின்பற்ற தயங்காதவர்களாகவும், வேறு மதங்களின் மீது வெறுப்பு காட்டுபவர்களாகவும் உள்ளனர். இனி இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.


(தொடரும்)