Showing posts with label விசுவாச உறுதிமொழி. Show all posts
Showing posts with label விசுவாச உறுதிமொழி. Show all posts

Tuesday, September 21, 2010

இஸ்ரேலில் பாஸிசம்: யூத பேரினவாத சட்டம்

"இஸ்ரேலை யூத இனத்தவருக்கான நாடாக ஏற்றுக் கொண்டு விசுவாச சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்", என்ற சட்ட மசோதா தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றது. தீவிர வலதுசாரிக் கட்சியான Yisrael Beiteinu வின் நாடாளுமன்ற உறுப்பினர் David Rotem இந்த பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார். இந்த சட்டம் அமுலுக்கு பட்சத்தில், இஸ்ரேலில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் "விசுவாச சத்தியப் பிரமாணம்" எடுக்க வேண்டும். அல்லாவிட்டால் அவர்களது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது. இஸ்ரேலின் மொத்த சனத்தொகையில் இருபது வீதமானோர் பாலஸ்தீன பிரஜைகள். அவர்களின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் முகமாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பாலஸ்தீன-அரபு சிறுபான்மை இன மக்கள், இஸ்ரேலின் யூத பேரினவாதத்தின் கீழ் அடிபணிவதாக சத்தியம் செய்ய வேண்டும். ஏற்றுக் கொள்ளாதவர்கள் சட்டப்படி குடியுரிமைகளை இழப்பார்கள். (பார்க்க:Palestinians may soon have to swear loyalty to 'Jewish' state)

ஒவ்வொரு பிரஜையும் பின்வருமாறு சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்:
"நான் ஹாஷேம் (யூத கடவுள்) பெயரால் உறுதிமொழி எடுக்கிறேன். யூத தேசமான இஸ்ரேலுக்கும், அதனது தலைவர்களுக்கும், தளபதிகளுக்கும், இராணுவத்திற்கும் எனது நிபந்தனையற்ற விசுவாசத்தை வழங்குகிறேன். யூத தேசத்தின் விசுவாசியாக எந்த நேரத்திலும் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன்."

நாஜி ஜெர்மனியில் ஒவ்வொரு பிரஜையும், ஜெர்மன் தேசத்திற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்களை வேட்டையாடிய மக்கார்த்தி சட்டம், ஒவ்வொரு பிரஜையும் அரச விரோத செயல்களில் ஈடுபடவில்லை என்று உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்தித்தது. இலங்கையில் ஈழப்போர் ஆரம்பமான காலத்தில், அரசாங்க ஊழியர்கள் "பிரிவினைக்கு ஆதரவளிப்பதில்லை என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாகவும்" சத்தியப் பிரமாணம் எடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டனர். இந்த சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. முன்னொரு தடவை வட-கிழக்கு மாகாணங்களில் தெரிவான ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்த உறுதிமொழி எடுக்க மறுத்ததால் தமது பதவிகளை இழந்தார்கள். இப்போதுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், "பிரிவினைக்கு எதிரான" உறுதிமொழி எடுக்காமல் பதவிகளை தக்க வைத்திருக்க முடியாது.

இன்றைக்கும் இஸ்ரேலின் யூத பேரினவாத அரசுக்கு, நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தமிழர்கள் இருப்பது வேதனைக்குரியது. இஸ்ரேலின் உதாரணத்தை பின்பற்றி, "சிறிலங்கா என்ற சிங்கள-பௌத்த தேசத்திற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்குமாறு" இலங்கை அரசு சட்டம் கொண்டு வராதா? அப்போது இலங்கையில் வாழும் 20 வீதமான தமிழ் சிறுபான்மையினரின் நிலைமை என்னவாகும்?

பாசிச சட்ட மசோதாவிற்கு இஸ்ரேலியர்கள் எந்த அளவிற்கு ஆதரவு வழங்குகின்றனர்? இதை அறிவதற்காக எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்பு வீடியோவை ஒரு தடவை பார்வையிடவும்.