எகிப்தில் நடக்கும் சம்பவங்கள் யாவும், அந்த நாடு ஒரு உள்நாட்டுப் போரை நோக்கி தள்ளப் படுவதை எடுத்துக் காட்டுகின்றன. எகிப்தின் புதிய இரும்பு மனிதரான ஜெனரல் அல் அசிசி, பதவி இறக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆதரவாளர்களின் கிளர்ச்சியை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகின்றார். அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை இராணுவம் சுடுகின்றது. மசூதி ஒன்றில் அடைக்கலம் புகுந்தவர்களைக் கூட, ஆயுத வன்முறை பிரயோகித்து வெளியேற்றி உள்ளது. ஒரு வருடம் மட்டுமே ஜனாதிபதியாக இருந்து, பதவி கவிழ்க்கப் பட்ட மொர்சி ஆதரவாளர்களுக்கு எதிரான அடக்குமுறையில் குறைந்தது 800 பேர் கொல்லப் பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டுள்ளனர். அல்கைதா தலைவர் சவாஹிரியின் சகோதரரும் கைது செய்யப் பட்டுள்ளார். முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தலைவரின் மகன் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குகிறார்.
இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வரும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர், அஹிம்சா வழியில் போராடுவதாக காட்டிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள். சில இடங்களில், துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர். அது இன்னும் முழுமையான அரச எதிர்ப்பு ஆயுதப் போராட்டமாக மாறவில்லை. ஆனால், சில நாட்களில் அதுவும் நடக்கலாம். முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினரை, வேறு வழியின்றி ஆயுதமேந்தப் பண்ணுவதே, இராணுவ அரசின் நோக்கமாக உள்ளது. இது அவர்களுக்கு வைக்கப் பட்டுள்ள மிகப் பெரிய பொறி. அதற்குள் மாட்டிக் கொள்ளும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களை இலகுவாக அழித்தொழித்து விடலாம் என்று இராணுவ அரசு எதிர்பார்க்கின்றது. இதே மாதிரியான அரசியல் தந்திரோபாயம் தான், முப்பது வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய ஈழப் போரில் பயன்படுத்தப் பட்டது. அதனை இன்றைக்கும் பலர் உணரவில்லை.
முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி, எகிப்தின் மிகவும் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். ஆங்கிலேய காலனிய காலத்திலேயே, பழமைவாதிகளையும், மதவாதிகளையும் ஒரே அரசியல் கோட்பாட்டின் கீழ் ஒன்று சேர்த்து, இஸ்லாமிய மத அடிப்படைவாத கட்சியாக உருவானது. இந்தியாவில் உள்ள இந்து மத அடிப்படைவாதிகளின் பா.ஜ.க. வுடன் ஒப்பிடத் தக்கது. இந்தியாவில் பாஜக வினருக்கு கிடைத்த சுதந்திரமும், சந்தர்ப்பங்களும், எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சினருக்கு கிடைக்கவில்லை. எகிப்திய தேசியவாதியும், சோஷலிஸ்டுமான நாசரின் ஆட்சிக் காலத்தில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தடை செய்யப் பட்டது. பெரும்பாலான கட்சி உறுப்பினர்களும், தலைவர்களும் சிறைகளை நிரப்பினார்கள்.
தற்போது வரலாறு திரும்புகின்றது. லிபரல் சர்வாதிகாரி முபாரக் வெளியேற்றப் பட்ட பின்னர் நடந்த பொதுத் தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்தக் கட்சியில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான மொர்சி, பொருளாதார தேவைகளுக்காக சீனாவுடனும், ஈரானுடனும் உறவு கொண்டாடினார். அது அமெரிக்காவின் கோபத்தை கிளறி இருக்கலாம். ஆதாரம் இல்லாவிடினும், முக்கியமான இரண்டு சம்பவங்களை குறிப்பிடலாம்.
1. மத்திய கிழக்கில், இஸ்ரேலுக்கு அடுத்த படியாக, அமெரிக்காவின் மிக அதிகமான ஆயுத தளபாட உதவி எகிப்திற்கு செல்கின்றது. இஸ்ரேலுடன் பொது எல்லையை பகிர்ந்து கொள்வதாலும், சுயஸ் கால்வாயை கொண்டிருப்பதாலும், எகிப்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். தற்போது நடக்கும் பிரச்சினையில், எகிப்திய பாதுகாப்பு படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக நூற்றுக் கணக்கானோர் கொல்லப் பட்ட பின்னரும், அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் எகிப்திற்கான விநியோகம் நிறுத்தப் படவில்லை. அமெரிக்க தூதரகம் கண்டன அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருகின்றது. அது பெரிய தாக்கத்தை உண்டாக்கப் போவதில்லை.
2. சவூதி அரேபியா, முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் மிக நீண்ட கால கொடையாளி நாடு ஆகும். முபாரக்கின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த சிறிதளவு சுதந்திரத்தை பயன்படுத்தி, அந்தக் கட்சி வளர்ச்சி அடைவதற்கு சவூதிப் பணம் பெரிதும் உதவியது. மொர்சி பதவியிழந்த பின்னர், உற்ற நண்பனான சவூதி அரேபியா கட்சி மாறி விட்டது. எதிரிகளும் நண்பர்களும் ஆச்சரியப் படுமளவிற்கு, புதிய இராணுவ ஆட்சியாளர்கள் பக்கம் சேர்ந்து கொண்டது. இன்று முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை தடை செய்யப் போவதாக இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், சவூதி அரேபியா தனது பழைய நண்பர்களை முற்று முழுதாக கை கழுவி விடும் என்று தெரிகின்றது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே உண்டு.
நாலாபுறமும் நசுக்கப்படும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எகிப்திய கிறிஸ்தவர்கள் மேல் பழிபோட்டு வருகின்றனர். அந்தக் கட்சியை சேர்ந்த தீவிரவாதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏறக்குறைய பதினைந்து தேவாலயங்கள் எரிக்கப் பட்டுள்ளன அல்லது சேதப் படுத்தப் பட்டுள்ளன. முஸ்லிம் சகோதரத்துவ கட்சியானது, தனக்கு ஆதரவான இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்ட மக்களின் கோபாவேசத்தை, கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக திசை திருப்பி விடப் பார்க்கின்றது. இது ஒரு இயலாமையின் வெளிப்பாடு. என்ன தான் கிறிஸ்தவர்களுக்கு எதிரான மதவாத/இனவாத உணர்வுகளை தூண்டி விடப் பார்த்தாலும், அது அந்தக் கட்சிக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை.
சிலர் எகிப்தில் நடக்கும் மாற்றங்களை, ஏற்கனவே சிரியாவில் நடந்த மாற்றங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமைகளும், அதே நேரம் வேற்றுமைகளும் உள்ளன. சிரியாவில் நடக்கும் யுத்தம், இரண்டு வேறுபட்ட சமூகங்களில் தங்கியுள்ளது. எல்லோரும் அரபு மொழி பேசினாலும், சமூக, கலாச்சார முரண்பாடுகள் அவர்களை பிரிந்து வாழ வைத்துள்ளது. அங்குள்ள அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் எல்லோரும் அனேகமாக சுன்னி முஸ்லிம்கள். அலாவி முஸ்லிம் பிரிவினரும், கிறிஸ்தவர்களும் சிரிய அரசை ஆதரிக்கின்றனர். ஆனால், எகிப்தில் நிலைமை வேறு. அது ஓரளவு, முன்பு அல்ஜீரியாவில் நடந்த உள்நாட்டுப் போருடன் ஒப்பிடத் தக்கது. அந்த நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில், இஸ்லாமிய மதவாத கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற போதிலும் அரசமைக்க முடியவில்லை. தேர்தல் இரத்து செய்யப் பட்டு, இராணுவம் அவர்களை தற்காப்புப் போர் ஒன்றுக்குள் இழுத்து விட்டது.
எகிப்திய இராணுவ அடக்குமுறைக்கு பின்னணியில் கிறிஸ்தவர்கள் இருப்பதாக, முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மட்டுமே கூறி வருகின்றது. அது எந்த ஆதாரமுமற்ற பொய்ப் பிரச்சாரம். எகிப்திய முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். அவர்கள் மத்தியில் ஏராளமான லிபரல்கள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல நாஸ்திகர்கள் கூட இருக்கின்றனர். எகிப்திய முஸ்லிம் சமூகத்தில், மதச் சார்பற்றவர்கள் இராணுவ அரசை ஆதரிக்கின்றனர். சுருக்கமாக, இதனை மதவாத பழமைவாதிகளுக்கும், மதச்சார்பற்ற தாராளவாதிகளுக்கும் இடையிலான போராட்டமாக பார்க்கலாம். இன்றைய எகிப்து, கொள்கை அடிப்படையில் இரண்டாகப் பிளந்துள்ளது. இந்தப் போராட்டம் இந்தியாவிலும் நடக்கிறது, இலங்கையிலும் நடக்கிறது. மதவாதிகள், இனவாதிகள், தேசியவாதிகள் மட்டுமே அத்தகைய சமூக முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றனர்.
எகிப்து நாட்டில் ஒரு உள்நாட்டுப் போர் நடந்தால், அது குடும்பங்களை, உறவினர்களை, நண்பர்களைக் கூட நிரந்தரமாகப் பிரித்து விடும். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களில் கூட, ஒருவர் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளராகவும், இன்னொருவர் மதச்சார்பற்ற தாராளவாதியாகவும் இருப்பது சர்வ சாதாரணம். தற்போது அவர்கள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டிருக்கலாம். ஒருவரோடு ஒருவர் முகம் கொடுத்து பேசாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் உயிரச்சம் காரணமாக, சொந்த குடும்ப உறுப்பினர்களுக்கே பயந்து ஒளிந்து வாழ வேண்டியிருக்கும். எகிப்து ஒரு இருண்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எகிப்தியர்கள் அதிலிருந்து தப்பி மீண்டு வந்தாலும், இனிமேல் கொள்கை முரண்பாடு கொண்ட இரண்டு சமூகங்களும் பிரிந்தே வாழப் போகின்றன. இன்று எகிப்தில் நடப்பது, நாளை இந்தியாவிலும் நடக்கலாம். எதற்கும் நரேந்திர மோடி பிரதமராகும் வரையில் காத்திருங்கள்.
எகிப்து பற்றிய முன்னைய பதிவுகள் :
எகிப்தின் எதிர்காலம் என்ன?
எகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை!
எகிப்தில் மக்கள் எழுச்சி! துனிசிய புரட்சியின் எதிரொலி!!