Showing posts with label மிருக பலி. Show all posts
Showing posts with label மிருக பலி. Show all posts

Saturday, September 25, 2010

காளி கேட்டது பலி! இந்து-பௌத்த மத அடிப்படைவாதிகள் கிலி!!


2010 ஆகஸ்ட் மாதம், இலங்கையில், முனீஸ்வரம் கோயிலில் மிருகங்களை பலி கொடுக்கும் சடங்கு பரபரப்பாக பேசப்பட்டது. ( Mass Animal Slaughter At Arulmigu Sri Maha Bathrakaliyam Kovil) பலி கொடுக்கும் சடங்கை எதிர்ப்பதில், இந்து மத அடிப்படைவாதிகளுக்கும்(All Ceylon Hindu Congress), பௌத்த மத அடிப்படைவாதிகளுக்கும் (Association of Sangas) இடையில் ஒற்றுமை நிலவுகின்றது. (இலங்கையில் இந்து - பௌத்த மத அடிப்படைவாதிகள் ஒரே குரலில் பேசுவது இது தான் முதல் தடவை அல்ல.) 

தனி நபர்களைப் பொறுத்த வரை, நாகரீகமடைந்த இந்தக் காலத்திற்கு ஒவ்வாத செயல் என்று, தாம் எந்த உயிரினத்தையும் கொல்லாத காலகட்டத்தில் வாழ்வது போல பாசாங்கு செய்தனர். இதற்கு மாறாக, மத நிறுவனங்கள் தமது மதங்களின் அடிப்படையின் மேலிருந்து கொண்டு இந்தப் பிரச்சினையை பார்த்தார்கள். அதனால் தான் அவர்களை, மிகச் சரியாக மத அடிப்படைவாதிகள் என அழைக்கிறேன்.

தற்போது போர் ஓய்ந்த சூழலில், யாழ் குடாநாட்டிலும் வைரவர் போன்ற சிறு தெய்வங்களுக்கு கோழி பலி கொடுக்கும் சடங்கு நடந்து வருகின்றது. இதை காட்டுமிராண்டி கால பழக்கம் என்று யாழ்ப்பாணத்தில் வாழும் "இந்துக்கள்" எதிர்க்கின்றார்கள். இந்து சமூகத்தில் மாறாத சாதீய முரண்பாடு மத வழிபாட்டிலும் புகுந்துள்ளது. எனக்கு தெரிந்த வரையில், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களே இன்றைக்கும் சிறு தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். ஆதிக்க சாதியினர் பெரும்பாலும் இவற்றை தவிர்த்து வந்துள்ளனர். பிராமணர்களால் ஆகம முறையில் குடமுழுக்கு செய்யப்பட்ட "ஹை-டெக் கோயில்கள்" அவர்களுக்காக கதவுகளை திறந்து வைத்திருன்றன.

பலியிடும் சர்ச்சை ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடிக்க காரணமாக இருந்த முனீஸ்வரம் ஆலயம், மேற்கிலங்கையில் சிலாபம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. தமிழீழம் கோரும் வரைபடத்தில் அந்தப் பிரதேசம் அடங்கிய போதிலும், இதுவரை காலமும் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும் ஒரு தடவை எதிர்பாராத அசம்பாவிதம் இடம்பெற்றது. சிலாபத்தை சேர்ந்த கிறிஸ்தவ தமிழர்கள், இலங்கை அரசால் முல்லைத்தீவுக்கு அருகில் கொக்கிளாய் எனுமிடத்தில் குடியேற்றப் பட்டனர். அங்கே, 1984 ம் ஆண்டு, சிங்களத்தை தாய்மொழியாக பேசிய ஒரே குற்றத்திற்காக படுகொலை செய்யப்பட்டார்கள். 


மேற்கிலங்கை தமிழர்கள், குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள், சிங்களத்தை முதன் மொழியாக கொண்டுள்ளனர். புதிய தலைமுறை மாறும் பொழுது இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வரலாற்று ரீதியாக, மேற்கிலங்கை தமிழருக்கும், வட இலங்கை தமிழருக்கும் இடையில் பெருமளவு தொடர்புகள் இருக்கவில்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள் சாதிய படி நிலையில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்ததாக கருதிக் கொண்டதும் உறவுக்கு தடைக் கல்லாக இருந்தது.

சிலாபம் முனீஸ்வரம் ஆலயம், இலங்கைத் தீவின் புராதன சிவாலயங்களில் ஒன்று. வட-மேற்கே மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம், வடக்கே கீரிமலையில் உள்ள நகுலேஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் திருக்கோணேஸ்வரம், ஆகியன பிற பழமை வாய்ந்த ஆலயங்கள். இவற்றில் திருக்கேதீஸ்வரம், திருக்கோனேஸ்வரம் என்பன, சைவ சமய நாயன்மார்களான அப்பரும், சுந்தரரும் பாடிய தேவாரங்களில் இடம்பெற்றுள்ளன. "மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த முனீஸ்வரம் எதற்காக அவர்களால் கவனிக்கப்படாமல் விடப்பட்டது?" என்பதற்கான பதில் யாருக்கும் தெரியாமல் போகலாம். 


முனீஸ்வரத்தில் எழுந்தருளியிருப்பது சிவபெருமான் என்று சைவ மத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. குளக்கோட்டன் என்ற சோழ மன்னன் ஆலயத்திற்கு நிதி வழங்கியதாக சரித்திரக் குறிப்புகளும் உண்டு. முனீஸ்வர மூலவர் "முன்னை நாதர்" என்ற நாமத்துடன் அழைக்கப்படுவதானது, ஆலயத்தின் புராதன (இந்து மதத்திற்கு முந்திய) வேர்களை சுட்டி நிற்பதாக கருதப்படுகின்றது. ஆயினும் ஆதி கால தமிழர்கள் வழிபட்ட முனி என்ற தெய்வமே பின்னர் முனீஸ்வரனாக சமஸ்கிருதமயமாக்கப் பட்டது என்று வாதிடுவோரும் உள்ளனர்.

இவ்வருடம் ஆடு, கோழி பலி கொடுக்கப்படவிருந்த இடம் காளி கோயில். முனீஸ்வரம் என்பது, பல ஆலயங்களைக் கொண்ட தொகுதிக்கு பொதுவான பெயர். அங்கே சிவன் கோயில் மட்டுமல்ல, ஒரு காளி கோயிலும், ஒரு பௌத்த ஆலயமும் அமைந்துள்ளன. பௌத்த ஆலயத்தில் இருக்கும் தெய்வத்தின் பெயர் ஐயனார் என்பது வியப்பில் ஆழ்த்தும் தகவல். ஐயனார் ஆலயம் முழுக்க முழுக்க பௌத்த சங்கத்தால் பராமரிக்கப் படுவதால், அது பௌத்த ஆலயமாக மாறியிருக்கலாம். (சிவன் கோயிலும், காளி கோயிலும், இந்து தமிழ் குடும்பங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன.) 


முனீஸ்வரம் காளி கோயில் இந்துக்களால் மட்டுமல்ல, பௌத்தர்களாலும் நம்பிக்கையுடன் வழிபடப் பட்டு வருகின்றது. முன்னொரு காலத்தில் இந்துக்களாக இருந்து புத்தர்களாக மாறிய (அல்லது தமிழர்களாக இருந்து சிங்களவர்களாக மாறிய) மக்கள், தமது முன்னோரின் பழக்க வழக்கத்தை எளிதில் விட்டு விடவில்லை. காளி கோயிலில் சாமியாடுவதும் குறி சொல்வதும் பாமர மக்களின் சிறு பிரச்சினைகளை தீர்க்க உதவுகின்றது போலும்.

இவ்வருடம் ஆகஸ்ட் 24 ம் தேதி, முனீஸ்வரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வருவோம். காளி கோயிலில் ஆடு, கோழி பலியிடுவது தலைமுறை தலைமுறையாக, ஆண்டு தோறும் பின்பற்றப் படும் வழக்கம். பௌத்த சங்கங்களின் சம்மேளனமும், மிருக உரிமை ஆர்வலர்களும் இம்முறை எதிர்ப்புக் காட்ட கிளம்பிய போதே, அது ஊடகங்களின் கவனத்தை பெற்றது. 


கோயில் முன்னால் குழுமிய பௌத்த பிக்குகள், மிருகங்களை பலி கொடுப்பது இந்து மதத்திற்கே உரிய சிறப்பம்சமாக காட்ட முனைந்தனர். அவர்களை பொறுத்தவரை, இந்து மதம் படு பிற்போக்கான, மூட நம்பிக்கை கொண்ட மதம் என்பதைக் காட்ட, இது ஒரு அரிய சந்தர்ப்பம். காளி கோயிலில் மிருகங்களை பலி கொடுப்பதற்காக, பௌத்த மதத்தை பின்பற்றும் சிங்கள மக்களும் வந்திருந்தார்கள். அந்த விஷயம் புத்த பிக்குகளுக்கு தெரியாமல் இல்லை. அவர்களது நோக்கம் எல்லாம், மத அடிப்படைவாதத்தை வரையறை செய்வது தான். (பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள், புத்தரை மட்டுமே வழிபட வேண்டும்.)

புத்த பிக்குகள் செய்த அதே வேலையை மறு பக்கத்தில் இந்து மத அடிப்படைவாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரை, சிறு தெய்வங்களை வழிபடுபவர்கள் இந்துக்கள் அல்ல. இந்துக்கள் சிவன், விஷ்ணு, விநாயகர் என்று பார்ப்பன கடவுள்களை மட்டுமே வழிபட வேண்டும். அதே நேரம், இலங்கையில் பௌத்தர்களும் இந்து தெய்வங்களை வழிபடுகின்றனர், போன்ற உண்மைகளை கூற மாட்டார்கள். (ஆனால் விஷ்ணுவின் தசாவதாரங்களில் புத்தரின் அவதாரமும் ஒன்று என்று பித்தலாட்டம் செய்வார்கள்.) 


தமது முன்னோர்கள் இந்துக்களாக இருந்ததால், இயேசு கிறிஸ்துவுக்கு பக்கத்தில், இந்து கடவுளர் படங்களை வைத்து வழிபடும் கிறிஸ்தவர்கள் நிறைய உண்டு. அதே போலத்தான் பௌத்தர்களும், புத்தரோடு இந்துக் கடவுள்களையும் வணங்கி விட்டு செல்கின்றனர். எங்கேயும் பாமர மக்களின் இறை நம்பிக்கை அப்படித் தான் இருக்கும். உழைக்கும் மக்களுக்கு மத நூல்களையும், தத்துவங்களையும் கற்றுத் தெளிவதற்கு போதுமான அறிவோ, நேரமோ கிடைப்பதில்லை.

இறுதியாக, வாய் பேசா ஜீவன்கள் மீது கருணை காட்டும் மத நம்பிக்கையாளர்களே! உயிர்களைக் கொல்வது பாவம் என்ற, உங்கள் உயரிய லட்சியத்திற்கு மதிப்பளிக்கிறோம். இந்த ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள். இவ்வளவு காலமும், போர் என்ற பெயரில் லட்சக்கணக்கான மனிதர்கள் பலி கொடுக்கப்பட்ட நேரம், நீங்கள் எங்கே ஒளிந்து கொண்டீர்கள்? மனித உயிர்களை பலி கொடுப்பதை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம் வேண்டாம், ஒரு அறிக்கையாவது விட்டிருக்க கூடாதா?