Showing posts with label மாண்டிய மதம். Show all posts
Showing posts with label மாண்டிய மதம். Show all posts

Friday, November 12, 2010

மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து


கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு முந்திய "மாண்டிய மதம்" இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றது. மாண்டிய மத போதகர்களில் ஒருவரான யோவான் (Yahya ibn Zakariyya அல்லது John the Baptist) இடமே, இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. 

மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்றைய ஈராக்கை (முன்னை நாள் பாபிலோனியா) தாயகமாக கொண்டவர்கள். இயேசு கிறிஸ்துவின் தாய் மொழியாக கருதப்படும் அரமிய மொழியை இன்றும் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். இன்றும் மாண்டிய மத வழிபாடுகள் யாவும் அந்த மொழியில் இடம்பெறுகின்றன.

அரமிய கிளை மொழியான, "மாண்டா" என்ற மொழியில் இருந்தே மாண்டியர்கள் என்ற பெயர் வந்தது. "அறிவு" என்று அர்த்தம் கொண்ட மாண்டா மொழி, அரமிய மொழியை ஒத்தது. இன்று நடைமுறையில் உள்ள, மத்திய கிழக்கு பிராந்திய மொழிகளான ஹீபுரு, அரபு, ஆகியனவும் ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இதனால் மாண்டியர்கள் யூத, அல்லது கிறிஸ்தவ மதப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று தவறாக கணிப்பிடப் படுகின்றனர். குறிப்பாக பண்டைய காலத்தில் நிலவிய "ஞோடிக்" (Gnostics) என்ற கிறிஸ்தவ பிரிவுடன் சேர்த்துப் பார்க்கப் படுகின்றனர். ஆயினும் மாண்டியிசம் ஒரு தனி மதம். கிரேக்கர்கள் பயன்படுத்திய ஞோடிக் என்ற சொல்லும், தமிழ் சொல்லான ஞானம், ஆங்கில சொல்லான know எல்லாம் ஒரே அடிப்படையை கொண்டவை.

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான தீர்க்கதரிசிகள் பலரை மாண்டிய மதத்தவர்களும் கொண்டுள்ளனர். குறிப்பாக நோவாவின் நேரடி வழித்தோன்றல்களாக தம்மை கருதிக் கொள்கின்றனர். மாண்டிய மதகுருக்கள் தலைப்பாகை கட்டி, தாடி வளர்த்திருப்பார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகத்தைக் கொண்ட பாபிலோனிய நாட்டில் இருந்த மதம் ஒன்றின் எச்சசொச்சம் அது என்று கருதப் படுகின்றது. 


பாபிலோனியர் காலத்தில் மதகுருக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரிய வேண்டுமானால், இன்றைய மாண்டிய மதகுருவைப் பார்த்தால் போதும். அவர்களின் மதச் சடங்குகளும் பாபிலோனிய காலத்தில் இருந்து, அப்படியே மாறாமல் தொடர்கின்றன. திருக்குரானிலும் மாண்டிய மதம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இஸ்லாமியரின் புனித நூல் அவர்களை "சபியர்கள்" என்று குறிப்பிடுகின்றது. அதனால் இன்று அதற்கு "சபிய மதம்" என்று இன்னொரு பெயரும் உண்டு.

இயேசுவுக்கு ஞானஸ்நானம் அளித்த ஜோன், மாண்டியர்களின் பிரதான ஆன்மீக ஆசான்களில் ஒருவர். இருப்பினும் அவர் அந்த மத நிறுவனர் அல்ல. மாண்டியர்களின் மத வழிபாட்டில் ஞானஸ்நானம் பெறுவது முக்கியமான சடங்கு. மாண்டிய மத குருக்கள், ஓடும் ஆற்று நீரில் நிற்க வைத்து ஞானஸ்நானம் கொடுப்பார்கள். இயேசுவும் ஜோர்டான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. அநேகமாக, மாண்டிய மதத்தவர்களை பின்பற்றியே ஞானஸ்நானம் எடுக்கும் சடங்கை கிறிஸ்தவர்களும் தமது மதத்தில் சேர்த்துக் கொண்டனர். 


இருப்பினும் மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுக்கும் நோக்கம் வேறு. அது ஒரு மனிதன் முக்தி பேறடைவதைப் போன்றது. அதாவது மாண்டிய சித்தாந்தப்படி பொருளாயுத உலகை துறந்து, மெய்யுலகை காண்பது. இந்த அடிப்படை தத்துவம் மாண்டிய மதத்தை, கிறிஸ்தவ மதத்தில் இருந்து வேறுபடுத்துகின்றது. கிறிஸ்தவ மதமானது ஒரு மீட்பர் வரும் வரை காத்திருக்கச் சொல்கின்றது. இயேசு கிறிஸ்து ஒரு இரட்சகர் ஆவார். ஆனால் மாண்டிய மத மகான்களின் கடமை, மக்களுக்கு அறிவைப் புகட்டுவது.

Ginza Rba மாண்டிய மதத்தவர்களின் புனித நூல் ஆகும். இரண்டு பகுதிகளைக் கொண்ட நூலில், மாண்டியரின் வரலாறு, செய்யுள்கள், நன்மையின் தோற்றம், தீமையின் தோற்றம், போன்ற விடயங்கள் உள்ளன. அந்த நூல் இன்று வரை மாண்டா-அரமிய மொழியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஒரேயொரு மேற்கத்திய மொழிபெயர்ப்பு ஜெர்மன் மொழியில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. மாண்டிய மதம் உலகை இரண்டு பிரிவாக பிரிக்கின்றது. நன்மை - தீமை, பொருள் - ஆன்மா, ஒளி - இருள், போன்ற ஒன்றுக்கொன்று முரண்பாடான பிரிவுகளுக்கு இடையே சமரசம் ஏற்பட முடியாது என்று போதிக்கின்றது. 


அதே மாதிரியான அறிவியல் கோட்பாடுகள், "ஞோடிக் கிறிஸ்தவ" பிரிவினரிடையே காணப்பட்டது. ஆனால் மத அதிகாரத்திற்கான போரில் இன்றைய கிறிஸ்தவ மதம் வென்றதால், அந்தக் கோட்பாடு மறைந்து விட்டது. கிறிஸ்தவ மதம், மாண்டிய (அல்லது ஞோடிக்) கோட்பாட்டுடன் முற்றிலும் முரண்படுகின்றது. அது ஏழை - பணக்காரன், ஆண்டான் - அடிமை, போன்ற வர்க்க எதிரிகளும் சமரசமாக வாழ வேண்டும் எனப் போதிக்கின்றது. மேற்குலகில் பிற்காலத்தில் தோன்றிய மார்க்ஸியம் மட்டுமே அந்த வர்க்க சமரசத்தை எதிர்த்தது. 

மாண்டிய மத உறுப்பினர்கள் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்றும், வன்முறையில் இறங்கக் கூடாது என்றும், கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் பிற மதத்தவர்களின் வன்முறைக்கு இலகுவாக ஆளாகி அழிந்து வருகின்றனர். இன்றைய துருக்கி, கிரேக்க பகுதிகளில் வாழ்ந்த ஞோடிக் பிரிவினரை கிறிஸ்தவர்கள் அழித்து விட்டார்கள். அண்மைக் காலம் வரையில், ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் மட்டுமே மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக முன்னாள் பாபிலோனிய நாடான, இன்றைய ஈராக்கில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சிக் காலம் வரையில் ஓரளவு நிம்மதியாக வாழ முடிந்தது. அமெரிக்க படையெடுப்பின் பின்னர், நிலைமை மோசமடைந்தது. 

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள், மாண்டிய மத உறுப்பினர்களை இலக்கு வைத்துக் கொன்றார்கள். இந்தப் படுகொலைகளுக்கு சாமானிய இஸ்லாமிய மக்களின் ஆதரவும் இருந்தது. அதற்கு காரணம், காலங்காலமாக இஸ்லாமியர்கள் மாண்டிய மதத்தினரை, மத நம்பிக்கையற்றவர்கள் எனக் கருதி வந்தனர். சாதாரண இஸ்லாமிய அயல் வீட்டுக்காரன் கூட, மாண்டிய மதத்தவர் மீது வெறுப்புக் காட்டுவது வழமை. உயிரச்சம் காரணமாக, மாண்டிய மதத்தவர்கள் பெருமளவில் ஈராக்கை விட்டு வெளியேறி விட்டனர். இன்று அவர்கள் மேற்குலக நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். இன்று உலகில் அழிந்து வரும் புராதன மதங்களில் மாண்டிய மதமும் ஒன்று.

மேலதிக தகவல்களுக்கு:
Mandaeism
Ginza Rba


பின்னிணைப்பு: 

ஈரானில் வாழும் மாண்டிய மதத்தவர் பற்றி நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப் படத்தில் பார்க்கக் கிடைத்த தகவல்கள்:

மாண்டிய மதத்தை பின்பற்றுவோர் இன்றைக்கும் உள்ளனர் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. ஈரானில், ஈராக் எல்லையோரம் உள்ள அரபு மொழி பேசும் பகுதியில், இன்றைக்கும் சில நூறு மாண்டியர்கள் வாழ்கிறார்கள்.

அவர்களுக்கென்று தனியான புனித நூல் உள்ளது. அவர்கள் அரபு போன்றதொரு மொழியை பேசுகின்றார்கள். மாண்டி - அரைமைக் என்று அதனை அழைக்கலாம். படித்தவர்கள் மட்டும் அரபு அல்லது பார்சி பேசுகின்றார்கள். ஆனால், மாண்டியர்கள் பேசும் மொழியை அரேபியர்கள் புரிந்து கொள்வது கடினம்.

ஈரானிய அரசு, மாண்டிய மதத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால், அவர்கள் தமது மதச் சடங்குகளை பின்பற்றுவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாக தமது மதத்தை பின்பற்றலாம். ஆனாலும், அரசு அங்கீகாரம் கிடைக்காத படியால், ஈரானில் அவர்களது எண்ணிக்கை குறைந்து வருகின்றது. பலர் அமெரிக்கா, ஐரோப்பா என்று புலம்பெயர்ந்து செல்கிறார்கள்.

ஈரானில் அரசுத் துறையில் வேலை செய்வதற்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மேலும் தொழிற்துறையிலும் பாரபட்சம் காட்டப் படுகின்றது. மாண்டேயர்கள் எல்லா தொழில் முயற்சிகளிலும் ஈடுபட முடியாது. அவர்களை நகைக்கடைகள் வைத்திருப்பதற்கு மட்டும் அனுமதிக்கிறார்கள். இதனால் அந்தப் பிரதேசத்தில் தங்க நகைகள் விற்கும் கடைகள் எல்லாம் மாண்டியர்களுக்கு சொந்தமானவை. 

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான இணைப்பு: