Showing posts with label கிரேக்க தடுப்பு முகாம். Show all posts
Showing posts with label கிரேக்க தடுப்பு முகாம். Show all posts

Wednesday, October 21, 2009

கிறீஸ் தடுப்புமுகாம் அகதிகளின் கிளர்ச்சி - விசேஷ அறிக்கை

(கிறீசில் இருந்து கிடைத்த விசேஷ அறிக்கை)
ஐரோப்பிய நாடுகளின் கதவுகள் யாவும் அகதிகளுக்காக அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துருக்கிக்கு அருகில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டான கிறீஸ் இலகுவான நுழைவாயிலாக மாறியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோர விரும்பும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் அகதிகள் முதலில் துருக்கி வருகின்றனர். அங்கிருந்து ஆட்கடத்தல்காரரின் துணையுடன் சிறு கப்பல்களில் கிறீஸ் நோக்கி பயணிக்கின்றனர்.

இவ்வாறு தான் துருக்கிக்கு அருகில் இருக்கும் கிரேக்க தீவுகளுக்கு பெருமளவு அகதிகள் வந்து சேர்கின்றனர். கிரேக்க அரசு, தஞ்சம் கோரிய அகதிகளை லெஸ்வொஸ் (Lesbos) என்ற தீவில் உள்ள தடுப்புமுகாமில் சிறை வைக்கின்றது. சிறைமுகாம் அதிகாரிகள் அகதிகளை என்ன செய்வது என்ற முடிவை எடுப்பார்கள். அனேகமாக முப்பது நாட்களுக்குள், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவைக் கொண்ட கடிதத்தை ஒப்படைப்பார்கள். அந்தக் கடிதத்துடன் விடுதலையாகும் அகதிகள் பலர் ஏதென்ஸ் நகர் வந்து சட்டவிரோதமாக தங்கிவிடுகின்றனர்.

வசதிக் குறைபாடுகளைக் கொண்ட தடுப்புமுகாமில் கால்நடைகளைப் போல அடைத்து வைக்கப்பட்ட அகதிகள் அன்றாடம் வதைபடுகின்றனர். கட்டிடத்தின் கொள்ளளவை விட மூன்று மடங்கு அகதிகள், அதாவது 900 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 19 அக்டோபர் அன்று, நரகவேதனையை பொறுக்கமுடியாத அகதிகள் தாம் இருந்த முகாம் கட்டிடத்திற்கு தீவைத்துள்ளனர். முகாமின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமானதுடன், இரு அகதிகள் மயக்கமுற்றனர். லெஸ்வொஸ் தடுப்புமுகாம் அகதிகளின் கிளர்ச்சி இரகசியமாக படம்பிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளது. கிரேக்க சமூக ஆர்வலர்களால் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள "தடுப்புமுகாம் வீடியோவை" இத்துடன் இணைத்துள்ளேன்.