Showing posts with label கடற்கொள்ளையர்கள். Show all posts
Showing posts with label கடற்கொள்ளையர்கள். Show all posts

Sunday, February 04, 2018

சோழர்கள் என்றால் கொள்ளையர்கள் என்றும் பொருள் உண்டு!

சோழர்கள் கொள்ளையடித்த நாடுகளைக் காட்டும் வரைபடம். 

சோழர்களின் சர்ச்சைக்குரிய வரலாற்றை, ஐரோப்பாவில் வைக்கிங்(Viking) வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஸ்கண்டிநேவிய வைக்கிங் படைகள், கடல் கடந்து கப்பல்களில் சென்று, பிற ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுத்து, பெருமளவு செல்வத்தை கொள்ளையடித்து வந்தனர். அவர்கள் சென்ற இடமெல்லாம் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராது படுகொலை செய்தனர். இருப்பினும், அதே வைக்கிங் கொள்ளையர்கள் பிற்காலத்தில் நிலையான அரசமைத்து சிறப்பாக ஆண்டு வந்தனர். சோழர்களை "ஆசியாவின் வைக்கிங்" என்றும் குறிப்பிடலாம்.

சோழர்களின் பூர்வீகம் என்ன, அந்தப் பெயர் வர என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியாது. சோழர்கள் காலத்தில் தமிழகத்திற்கு பயணம் செய்த கிரேக்க நாட்டு தாலமி, தனது பயணக் குறிப்புகளில் "சோரை"(சோரர்) என்று எழுதியுள்ளார். பண்டைய கால தமிழ்க் கல்வெட்டுகளில் கூட "சோரர்கள்" என்று தான் குறிப்பிடப் பட்டிருக்கிறது. தமிழ் மொழியில் சோரர் என்ற சொல்லுக்கு திருடர், கொள்ளையர் என்ற பொருள் உண்டு. தற்காலத் தமிழில் "சோரம் போதல்" என்று பயன்படுத்தப் படுகின்றது. ஆகவே, ஆதி கால சோழர்கள் தமிழராக இருந்திருக்க முடியாது.

சோழர்களை தெலுங்கு மொழியில் சோடர்கள் என்று அழைத்து வந்தனர். தெலுங்கில் "ர", "ட" ஆகி, அது பின்னர் சோழர்கள் என்று திரிபடைந்திருக்கலாம். மேலும், சோழர்களின் ஆட்சிப் பிரதேசம் இன்றைய வட தமிழ்நாட்டையும், தென் ஆந்திராவையும் கொண்டிருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா என்ற மாநில எல்லைகள் இருபதாம் நூற்றாண்டில் தான் பிரிக்கப் பட்டன. அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ஒரே பிரதேசமாக இருந்துள்ளது.

"தமிழ்ச் சோழர்கள்", "தெலுங்குச் சோழர்கள்" என்று இரண்டு சோழ அரச வம்சத்தினர் இருந்ததாக சிலர் இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர். இது ஒரு நகைப்புக்குரிய விளக்கம். இந்தக் குளறுபடிக்கு காரணம், இன்று நாங்கள் மொழி வழி தேசியத்தின் ஊடாகத் தான் உலகைப் பார்க்கிறோம். ஒரே பிரதேசத்தில் இரண்டு மொழிகளைப் பேசும், இரண்டு வெவ்வேறு அரச வம்சங்கள் அருகருகே இருந்திருக்க சாத்தியமே இல்லை. இது உலகில் வேறெந்த நாட்டிலும் இருந்திராத விசித்திரமான வரலாறு. மொழி மாறுபட்டாலும் அரச வம்சம் மாறுவதில்லை. உதாரணத்திற்கு, ஸ்பானிஷ் அரச வம்சத்தினர் பூர்வீகத்தில் ஜெர்மன் அரச வம்சமாக இருந்தனர். அதாவது இரத்த உறவினர்கள். ஆனால், வெவ்வேறு மொழிகளை (ஜெர்மன், ஸ்பானிஷ்) பேசினார்கள்.

பண்டைய காலங்களில் வாழ்ந்த யாருக்கும் இன/மொழி உணர்வு இருக்கவில்லை. மன்னர் குடும்பம் முதல், சாதாரண குடிமக்கள் வரையில், குறிப்பிட்ட பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்திய மொழியை பயன்படுத்தி வந்தனர். ஆதனால் தான், சோழர்களின் கல்வெட்டுகள் ஒரு இடத்தில் தமிழிலும், இன்னொரு இடத்தில் தெலுங்கிலும் எழுதப் பட்டுள்ளன. அது மட்டுமல்லாது, சோழர்கள் பற்றிய வரலாறு தெலுங்கிலும் எழுதப் பட்டுள்ளது. அதே பெயர்கள், அதே சம்பவங்கள்... மொழி வேறு படுவதால் மனிதர்கள் மாறுவதில்லை.

ஆகவே சோழர்கள் தமிழராக மட்டுமல்லாது, தெலுங்கராகவும் இருந்திருக்கலாம்.சில நேரம், இரண்டும் இல்லாத வேறொரு மொழியை பூர்வீகமாக கொண்டிருக்கலாம். உதாரணத்திற்கு, நடிகர் ரஜனிகாந்தை குறிப்பிடலாம். மராட்டிய பூர்வீகத்தை கொண்டவர், கர்நாடகாவில் கன்னடராக வாழ்ந்து, பிற்காலத்தில் தமிழ்நாட்டில் நடிகரானதும் தமிழராகி விட்டார். இந்தக் காலத்திலும் மனிதர்கள் தாய்மொழியை மாற்றிக் கொள்வது சர்வ சாதாரணமான விடயம். மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திராத பண்டைய காலம் பற்றி சொல்லத் தேவையில்லை.

பெயர் பற்றிய ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும். அதை விட, சோழர்கள் என்ன செய்தார்கள் என்பது தான் முக்கியம். ஆச்சரியப் படத் தக்கவாறு, ஐநூறு வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய காலனியாதிக்க வாதிகள் உலகம் முழுவதும் கொள்ளையடித்து செல்வம் சேர்த்த மாதிரி தான், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சோழர்களும் நடந்து கொண்டுள்ளனர்! பண்டைய காலத்து தெற்காசிய ஏகாதிபத்தியவாதிகள் சோழர்களே என்றால் அது மிகையாகாது.

உண்மையிலேயே, சோழர்கள் அயலில் இருந்த நாடுகள் மீது படையெடுத்து கொள்ளையடிப்பதை தமது பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்தனர். முதலில் தமக்கு அயலில் இருந்த எதிரி நாடுகளை அடக்கி கொள்ளையடித்தனர். தெற்கில் இருந்த பாண்டிய நாட்டையும், வட- மேற்கில் இருந்த சாளுக்கிய நாட்டையும் ஆக்கிரமித்து சூறையாடினார்கள்.

அத்தோடு நின்று விடவில்லை. "கங்கை கொண்டான்", "கடாரம் கொண்டான்" என்று பட்டம் சூட்டிக் கொள்ளும் அளவிற்கு கண்ட இடமெல்லாம் சென்று கொள்ளையடித்து பொருள் திரட்டி வந்தார்கள். அந்த அருமை பெருமைகளை தஞ்சாவூர் கல்வெட்டுகளில் எழுதி வைத்தனர். வடக்கே ஒட்ட தேசம் (ஒடிசா), வங்கதேசம் என்று கங்கையாறு வரை சென்று இந்தியா முழுவதையும் கொள்ளையடித்து முடிந்ததும், கடல் கடந்து ஈழ மண்டலத்தின் (இலங்கை) மீது படையெடுத்தனர்.

இலங்கை, கடாரம் மீதான சோழப் படையெடுப்புகளை, "கொள்ளையடிக்கும் கொள்கை" என்றும், "திரவியங்களை அபகரித்து அள்ளிக் குவித்தல்" என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

//"G.W Spencer (1976) interprets the eleventh century Chola invasion of Sri Lanka as “Politics of Plunder”. The prasasti that speaks about the Kadaram expedition, mentions large “heaps of treasure” accumulated by Rajendra in his war with Kadaram.// - Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions

//The most spectacular Chola military campaigns in southern and eastern India during the late 10th century and early 11th centuries were, in fact, plundering raids. In 1025 Rajendra Chola launched naval attacks on the ports of Srivijaya in maritime Southeast Asia and conquered Kadaram (modern Kedah) and occupied it for some time. Historian George Spencer states that the Chola expedition into Ceylon and the Straits of Malacca -the attack upon Srivijaya -must be viewed not as a military campaign to expand the kingdom but as a continuation of the sustained plundering activity in India. The Chola-Chalukya wars -a series of battles fought from 992 CE to 1120 CE -resulted in the winning Cholas looting the Chalukaya kingdom. Spencer argues that the Cholas needed to engage in these plundering campaigns to let them maintain the flow of resources into their states and strengthen their hold over their local chieftains.// - M D Muthukumaraswamy


சோழர்கள் அயலில் இருந்த நாடுகளை மட்டும் சூறையாடவில்லை. பெரிய கப்பல்கள் கட்டி, இந்து சமுத்திரத்தை கடந்து தூர கிழக்காசிய நாடுகளுக்கு கடற் கொள்ளையராக சென்று வந்தனர். அந்தமான் தீவுகள், பர்மா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா வரை சென்று, நாடு நாடாக கொள்ளையடித்து திரவியம் சேர்த்தனர்.

சுமாத்ரா தீவில் இருந்த ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத் தலைநகர் பலம்பங் சோழர்களால் தாக்கி அழிக்கப் பட்டது. அங்கு அரச மாளிகையில் இருந்த நவரத்தினக் கற்கள் பொறிக்கப் பட்ட கதவுகளை பெயர்த்து எடுத்துச் சென்றார்கள். சுமாத்ரா அந்தக் காலத்தில் "சுவர்ண துவீபம்"(தங்கத் தீவு) என்று அழைக்கப் பட்டது. மலாயா, சுமாத்ரா இரண்டும் வெளிநாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி செய்யும் வர்த்தம் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருந்தன. அதற்காகவே, தங்கம் கொள்ளையடிப்பதற்காகவே சோழர்கள் படையெடுப்பு நடந்திருக்கலாம்.

இதனை நிரூபிக்க ஒரு வரலாற்று ஆதாரம் காட்டலாம். (இந்தோனேசிய) ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம், சோழர்களுடன் நட்புறவைப் பேணி வந்தது. சோழ நாட்டிற்குள், நாகபட்டினத்தில் இருந்த பௌத்த ஆலயம் ஸ்ரீவிஜய மன்னர் வழங்கிய நிதியில் தான் பராமரிக்கப் பட்டு வந்தது. ஸ்ரீவிஜய நாட்டின் தலைநகரான பலம்பங்கில் இருந்து நாகபட்டினத்திற்கு கப்பல் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. பலம்பங்கில் இருந்து வந்த பௌத்த துறவிகள், முதலில் நாகபட்டினத்தில் வந்திறங்கித் தான் வட இந்தியாவில் இருந்த நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு சென்றனர்.

ஆகவே, ஸ்ரீ விஜயமும், சோழ தேசமும் சிறந்த இராஜதந்திர உறவைப் பேணிக் கொண்டிருந்த காலத்தில், சோழர்கள் ஸ்ரீவிஜயம் மீது படையெடுப்பதற்கு எந்தவொரு அரசியல் காரணமும் இருந்திருக்க முடியாது. அனேகமாக, வணிகம் தொடர்பாக எழுந்த பிரச்சினை இராணுவ நடவடிக்கையில் முடிந்திருக்கலாம்.

பதினாறாம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவை காலனிப் படுத்திய ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து தங்கம் தங்கமாக அள்ளிச் சென்றனர். அதே மாதிரித் தான் மலேயா, சுமாத்ரா மீது படையெடுத்த சோழர்களும் கப்பல் கப்பலாக தங்கத்தை அள்ளிச் சென்றுள்ளனர். ஒரேயொரு வித்தியாசம், சோழர்கள் கொள்ளையடிப்பதுடன் நின்று விட்டனர். அயலில் இருந்த ஈழ மண்டலம் தவிர வேறெங்கும் காலனி அமைக்கவில்லை.

இதிலே முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. சோழர்கள் படையெடுத்து சென்று வென்று வந்த நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்திருக்கவில்லை. அவர்கள் அங்கே நிரந்தரமாக தங்கியிருக்கவில்லை. அவற்றை தமது காலனிகள் ஆக்கவில்லை. உண்மையில், அதற்கான தேவை இருக்கவில்லை என்றே கூற வேண்டும்.

தங்கம், வெள்ளி, நவரத்தினக் கற்கள் என்று, அந்த நாடுகளில் கிடைத்த திரவியங்களை எல்லாம் கொள்ளையடித்து முடிந்ததும் தாயகத்திற்கு திரும்பி வந்தனர். சோழ நாட்டு தலைநகரமான தஞ்சாவூரும் அதை அண்டிய பகுதிகளும் காவிரி ஆற்றின் கொடைகளால் வளம் மிக்க விவசாய பூமியாக இருந்தது. ஆகையினால், ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளில் பொருளாதாரக் காலனி அமைக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை.

இதனை ஐரோப்பிய காலனியாதிக்கத்துடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடியும். பதினாறாம் நூற்றாண்டிலும் ஐரோப்பிய நாடுகள் எந்த வித இயற்கை வளமும் இல்லாத வறிய நாடுகளாக இருந்தன. உலகம் முழுவதும் பொருளாதாரக் காலனிகளை உருவாக்கி சுரண்டாமல் விட்டிருந்தால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் பணக்கார நாடுகளாக வந்திருக்க முடியாது.

சோழர்கள் எதற்காக கொள்ளையடிப்பதை தமது பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்தனர்? அதற்குக் காரணம், சோழ நாட்டுப் பொருளாதாரம் வரி அறவிடுவதில் தங்கியிருக்கவில்லை. சைவக் கோயில்கள் அரசியல் அதிகாரம் பெற்ற நிறுவனங்களாக இருந்தன. அவற்றிற்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், பல கிராமங்களும் சொந்தமாக இருந்தன. அவற்றில் இருந்து கிடைக்கும் வருமானம் முழுவதும் கோயிலுக்கே சொந்தமாகும்.

அந்தக் காலத்தில் சக்தி வாய்ந்த வணிகர் சங்கங்கள் இருந்தன. அந்த வணிகர்களும் தமக்கென நிலங்களை சொந்தமாக வைத்திருந்தனர். சோழ மன்னர்களுக்கு தேவைப் படும் போதெல்லாம் கடன் கொடுத்து வந்த வணிகர் சங்கங்கள், தேசத்திற்குள் இன்னொரு தேசமாக சுயாதீனமாக இயங்கினார்கள். நாணயக் குற்றிகளை புழக்கத்தில் விடுவதுடன், அந்நிய நாணயங்களை மாற்றிக் கொடுப்பதும் வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அதனால், சோழ அரசர்கள் வேறு இடங்களில் வருமானம் தேட வேண்டி இருந்தது. பாண்டிய நாடு, ஈழ மண்டலம் என்று சோழநாட்டிற்கு அருகில் நிறைய "பணக்கார நாடுகள்" இருந்தன. அங்கெல்லாம் படையெடுத்து சென்று கொள்ளையடித்த செல்வங்களை கொண்டு வந்து கோயில்களுக்கு தானம் செய்தனர்.

ஒரு தடவை, கோயிலுக்கு முன்னூறு கிலோ தங்கம் கொடுத்ததாகவும் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. கோயில்களுக்கே அந்தளவு அள்ளிக் கொடுத்தனர் என்றால், சோழ மன்னர்கள் எந்தளவு செல்வம் சேர்த்திருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.

ராஜராஜ சோழனும் அவனது வாரிசுகளும் இந்தியா முதல் இந்தோனேசியா வரையில் கொள்ளையடித்து செல்வம் சேர்த்தனர். அத்துடன், செல்லுமிடமெங்கும் பெண்களையும், குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்து, அந்நாட்டு மக்களிடம் கெட்ட பெயரையும் சம்பாதித்திருந்தனர். இந்தத் தகவல்கள், சோழப் படையெடுப்புகளால் பாதிக்கப் பட்ட நாடுகளின் வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளன.
(ஆதாரம்: Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula, Paul Michel Munoz)

"இந்தியா முதல் இந்தோனேசியா வரை விரிந்திருந்த சோழ சாம்ராஜ்யம்" பற்றிய கதைகள் உண்மைக்கு புறம்பானவை. அது இருபதாம் நூற்றாண்டில் தமிழ்த் தேசியர்களின் அரசியல் நோக்கங்களுக்காக திரிபுபடுத்தப் பட்ட, ஒரு பக்கச் சார்பான வரலாறு. சோழர்கள் படையெடுத்து சென்ற நாடுகளில் எல்லாம், "கொள்ளையர்கள், படுகொலையாளர்கள்..." என்று உள்நாட்டு மக்களால் தூற்றப் பட்ட போதிலும், எதற்காக தமிழ்த் தேசியவாதிகள் சோழர்களை தூக்கிப் பிடிக்கிறார்கள்?

உலகம் முழுவதும் தேசியவாதக் கோட்பாடு ஒரே மாதிரித் தான் செயற்படுகின்றது. செங்கிஸ்கான் என்றால் பல ஆசிய நாடுகளில் வில்லன் என்று அர்த்தம். செங்கிஸ்கான் படையெடுத்து சென்ற நாடுகளை சேர்ந்த மக்கள், தமது அழகான நகரங்களை தரைமட்டமாக்கி, பெண்களையும், குழந்தைகளையும் விட்டு வைக்காமல் இனப்படுகொலை செய்த கொடியவன் என்று சொல்வார்கள். ஆனால், மொங்கோலியாவில் அதே செங்கிஸ்கான் ஒரு பெருமைக்குரிய சரித்திர நாயகன்!

மொங்கோலியா நாட்டில் எங்கு பார்த்தாலும் செங்கிஸ்கான் பெருமை கூறும் பெயர்ப் பலகைகளை காணலாம். தலைநகர் உலான் பட்டாரில் பெரியதொரு செங்கிஸ்கான் சிலை உள்ளது. அதற்குக் காரணம் மொங்கோலிய தேசியவாதம். உலகம் முழுக்க வில்லனாக தென்படும் ஒருவன், தேசியவாதிகளின் கண்களுக்கு நாயகனாகத் தெரிகிறான். இதே தான் தமிழ்த் தேசியவாதிகள் விடயத்திலும் நடக்கிறது. உலகம் முழுவதும் சோழர்களை கொள்ளையர்களாக கருதினாலும், அவர்களைப் பொறுத்தவரையில் சோழர்கள் நாயகர்கள் தான். அதற்குப் பெயர் தேசியவாதம். அது குறுகிய மனப்பான்மை கொண்டது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
சோழர்கள் தமிழர்களா? அல்லது தெலுங்கர்களா?

Thursday, August 15, 2013

ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப் பட்ட ஐரோப்பிய அடிமைகள்

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, ஐரோப்பிய அடிமை வியாபாரிகளால் கறுப்பின அடிமைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஒரு காலத்தில் ஐரோப்பிய வெள்ளையர்கள், ஆப்பிரிக்க நகரங்களில் அடிமைகளாக விற்பனை செய்யப் பட்டனர் என்பது யாருக்காவது தெரியுமா?

இன்று வரையில் எந்தவொரு வரலாற்று ஆசிரியரும் எழுதியிராத, அல்லது எழுதத் துணியாத தகவல்கள் இவை. உலகில் நீண்ட காலமாக கட்டிக் காக்கப் படும், "மிகப் பெரிய இரகசியம்" இதுவாகத் தான் இருக்கும். ஒரு காலத்தில், ஆப்பிரிக்காவில் அடிமைகளாக இருந்த வெள்ளையர்கள், பிற்காலத்தில் விடுதலையாகி தமது தாய்நாட்டுக்கு திரும்பி வந்து வாழ்ந்த போதிலும், தமது கடந்த காலம் பற்றி யாரிடமும் எதுவும் கூறவில்லை. யாரும் தனது நினைவுக் குறிப்புகளை எழுதி வைக்கவில்லை.

மூன்று காரணங்களுக்காக, இந்த வரலாற்றுத் தகவல்கள் மறைக்கப் படலாம். 

  1.  ஐரோப்பியர்கள் உலகை ஆளப் பிறந்தவர்கள். உலகில் வேறெந்த இனத்திடமும் அடிமையாக இருந்திராதவர்கள் என்ற இனவாத மேலாண்மை குறித்த அரசியல். அது எப்போதும் ஆண்ட பரம்பரைக் கதைகளை மட்டுமே விரும்புகின்றது. அடிமையாக இருந்த கதைகளை மறைக்கின்றது.
  2.  ஒரு காலத்தில் வெள்ளையின-ஐரோப்பிய அடிமைகளை வைத்திருந்த வட ஆப்பிரிக்க பிரதேசம், பிற்காலத்தில் ஐரோப்பிய காலனியாகியது. அதனால், வெற்றி பெற்றவர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். தமது அவமானகரமான கடந்த காலத்தை மறைத்து விட்டார்கள்.
  3.  அது ஒரு முற்றிலும் மாறுபட்ட காலகட்டம். கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இரண்டு மதங்களுக்கு இடையிலான, மதப் போர் நடந்து கொண்டிருந்த காலம். 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனியாதிக்கம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், மதப் போர்களின் காலம் முடிந்து விட்டிருந்தது.

மூன்றாவதாக குறிப்பிட்ட காரணத்தில் இருந்து தான், இந்த மறைக்கப்பட்ட வரலாற்றுத் தகவலை தேடத்  தொடங்க வேண்டும். சிலுவைப்போர் என்றதும், எல்லோரும் ஜெருசலேமை கைப்பற்றச் சென்ற படைகளை பற்றி மட்டுமே நினைக்கின்றனர். சிலுவைப்போர் ஒரே திசையில் மட்டுமே நடக்கவில்லை. ஸ்பெயின், போர்த்துக்கல் நாடுகளிலும் இன்னொரு சிலுவைப்போர் நடந்தது. அன்று அந்த நாடுகள், "முஸ்லிம் நாடுகளாக" அரேபிய சக்கரவர்த்தியினால் ஆளப்பட்டன. மொரோக்கோ நாட்டில் இருந்து படையெடுத்த மூர்கள் 500 வருடங்களுக்கு மேலாக அந்தப் பிரதேசத்தை ஆண்டு வந்தனர். உள்நாட்டு ஸ்பானிஷ், போர்த்துக்கேய மக்கள் பலர், முஸ்லிம்களாக மாறி இருந்தனர்.

மூர்களுடனான போரில் வென்று, ஸ்பெயின், போர்த்துக்கல்லினை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த கிறிஸ்தவ அரசர்கள், அந்தப் பிரதேசத்தை நூறு சதவீத கிறிஸ்தவ நாடாக மாற்ற விரும்பினர். அதற்கு முன்னரே, மூர்-அரேபிய ஆளும் வர்க்கத்தினரும், அவர்களின் நாட்டவரும்,பூர்வீகத் தாயகமான  மொரோக்கோவுக்கு பின்வாங்கிச் சென்று விட்டனர். ஸ்பானிஷ் முஸ்லிம்களும், யூதர்களும் மட்டுமே எஞ்சி இருந்தனர். (அவர்களது பூர்வீகம் ஸ்பெயின் ஆகும்.) ஆனால், கிறிஸ்தவ மன்னனும், கத்தோலிக்க திருச் சபையும் அவர்களின் மதச் சுதந்திரத்தை பறித்தனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப் படுத்தினார்கள். பல்லாயிரக் கணக்கான யூதர்களும், முஸ்லிம்களும் அவர்களது மத நம்பிக்கையை மாற்றிக் கொள்ளாத குற்றத்திற்காக, சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப் பட்டனர். மரண தண்டனை விதித்து கொலை செய்யப் பட்டனர். 

கத்தோலிக்க சமயத்தை தழுவிக் கொண்ட, முன்னாள் யூதர்களும், முஸ்லிம்களும், அரசு அதிகாரிகளினால் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப் பட்டனர். அவர்களும் துன்புறுத்தப் பட்டனர். உண்மையில், அன்றைய ஸ்பெயினில் ஒரு இனச் சுத்திகரிப்பு நடந்து கொண்டிருந்தது. கிறிஸ்தவ அரசின் கடுமையான ஒடுக்குமுறை காரணமாக, இனிமேல் அங்கே வாழ முடியாது என்று தீர்மானித்த ஆயிரக் கணக்கான ஸ்பானிஷ்-முஸ்லிம் குடும்பங்கள், அகதிகளாக மொரோக்கோவுக்கு தப்பி ஓடின. அவர்கள் வட மொரோக்கோ, மற்றும் அல்ஜியர்ஸ், துனிஸ், திரிப்பொலி போன்ற நகரங்களிலும் சென்று குடியேறினார்கள். ஸ்பெயினில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் அகதிகள், தமது தாயகத்தை ஆளும் கிறிஸ்தவ அரசுக்கு எதிராக, பழிவாங்கும் போர் ஒன்றை தொடங்கினார்கள். அது ஒரு சாதாரண போராக இருக்கவில்லை. 

ஸ்பானிஷ்-முஸ்லிம் அகதிகளுடன், சில மூர் கடற் கொள்ளையரும் சேர்ந்து, கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கு எதிரான "ஜிகாத்" ஒன்றை நடத்தினார்கள். வெளியுலகிற்கு மட்டுமே, அது "கிறிஸ்தவர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் மதப் போர்". உண்மையில், அது ஸ்பானிஷ் முஸ்லிம் அகதிகளின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தொடங்கியது. ஆனால், பின்னர் அது மதப் போராக மாறியது. இதனை முன் நின்று நடத்தியவர்களும், ஆதாயம் பெற்றவர்களும் கடற்கொள்ளையர் ஆவர். அன்றைய மொரோக்கோ மன்னராட்சி, மறைமுகமான ஆதரவு வழங்கினாலும், நேரடியாக படைகளை அனுப்பவில்லை. 

முஸ்லிம் கடற்கொள்ளையர்கள், மத்தியதரைக் கடலில் கிறிஸ்தவ கப்பல்களை வழிமறித்து கொள்ளையடித்தார்கள். கப்பலில் வந்த ஐரோப்பியர்களை பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றார்கள். துனிஸ், அல்ஜியர்ஸ், மற்றும் சில நகரங்களில், ஐரோப்பிய அடிமைகள் நல்ல விலைக்கு விற்கப் பட்டனர். அடிமை வணிகம் சூடு பிடிக்கவே, கடற்கொள்ளையர்கள் நாட்டுக்குள் புகுந்தும் அடிமைகளை பிடித்தார்கள். ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், என்றைக்கு அடிமைகளாவோமோ என்ற பயத்துடன் வாழ வேண்டியிருந்தது. அந்தளவுக்கு அந்தப் பகுதிகள், அடிக்கடி கடற்கொள்ளையரின் தாக்குதலுக்கு உள்ளாகின.  


வட ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப்பட்ட, குறிப்பிட்டளவு அடிமைகளை, தனியார் வாங்கிச் சென்றனர். எஞ்சியவர்களை அரசு வாங்கிக் கொண்டது. அந்தக் காலத்தில் இருந்த பாரிய கப்பல்களில் துடுப்பு வலிக்கும் வேலையில் இந்த அடிமைகள் ஈடுபடுத்தப் பட்டனர். மேலும், பெரிய கட்டுமானப் பணி, துறைமுகங்கள் கட்டுவது போன்ற கடுமையான வேலைகளும் கொடுக்கப் பட்டன. தனியாரினால் வாங்கிச் செல்லப்பட்ட அடிமைகள், வீட்டுப் பணியாளர்களாகவும், வயலில் வேலை செய்யவும் ஈடுபடுத்தப் பட்டனர். ஒப்பீட்டளவில், இந்த வேலைகள் கட்டுமானப் பணி, கப்பல் வேலை போன்று கஷ்டமாக இருக்கவில்லை.

கிறிஸ்தவ அடிமைகள் மதம் மாறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப் பட்டது. ஏராளமான ஐரோப்பிய அடிமைகள் முஸ்லிம்களாக மதம் மாறினார்கள். இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்ட பின்னரும் அவர்கள் அடிமைகாகவே இருந்தனர். ஆனால், கடினமான வேலைகளை செய்யப் பணிக்கப் படவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஆயினும், பெரும்பாலான அடிமைகள் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்தனர். அவர்கள் மத்தியில் மதச் சேவை செய்த கிறிஸ்தவ பாதிரியார்களும் அதற்கு ஒரு காரணம். செத்தாலும் பரவாயில்லை, முஸ்லிமாக மதம் மாறக் கூடாது என்று தடுத்து விட்டனர். அதனால், பல்லாயிரம் அடிமைகள் கடினமான வேலை காரணமாக உடல் சோர்வுற்று, மூப்படையும் முன்னமே மாண்டு போயினர். 

வட ஆப்பிரிக்காவில் எத்தனை இலட்சம் கிறிஸ்தவ அடிமைகள் இருந்தனர் என்பதற்கான சரியான புள்ளிவிபரம் கிடைக்கவில்லை. யாரும் அவற்றை பதிவு செய்து வைக்கவில்லை என்று தெரிகின்றது. அண்ணளவாக பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பிய அடிமைகள், வட ஆப்பிரிக்காவில் இருந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கறுப்பின அடிமைகளின் தலைமுறையினர் போன்று, வட ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய தலைமுறையினர் யாரும் இல்லை. வெள்ளையின அடிமைகளின் எண்ணிக்கை குறைந்து சென்று, காலப்போக்கில் இல்லாமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.    

அடிமைகளில் 90% மானோர் ஆண்கள். அவர்கள் குடும்பம் அமைப்பதும், இனப்பெருக்கம் செய்வதும் தடுக்கப் பட்டிருந்தது. பலர் கடுமையான வேலை காரணமாக சோர்வடைந்து மரணமடைந்து விட்டனர். அதை விட, பெருந்தொகையான புதிய அடிமைகள், கொண்டு செல்லப் பட்ட பின்னர் பேரம் பேசி, பணம் கிடைத்தவுடன் விடுவிக்கப் பட்டனர். பணம் வைத்திருந்த உறவினர்கள், கேட்ட தொகையை கொடுத்து விடுதலை வாங்கி அழைத்துச் சென்றனர். அதே நேரம், வட்டிக்கு கடன் கொடுக்கும் ஐரோப்பியர்களுக்கு விற்கப் பட்டு, அவர்களால் ஐரோப்பிய நாடுகளில் ஒப்பந்த அடிமைகளாக வேலை வாங்கப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

வரலாறு முழுவதும், எல்லா சம்பவங்களையும் முன் அனுமானங்களுடன் ஒரே மாதிரி கணித்து விட முடியாது. எல்லாவற்றையும் கருப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. ஐரோப்பிய அடிமைகள் எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப் படவில்லை. முஸ்லிமாக மதம் மாறியவர்கள், அரபு சமூகத்துடன் இரண்டறக் கலந்து விட்டனர். அது மட்டுமல்ல, பிற்காலத்தில் அவர்களில் சிலர், கடற்கொள்ளையர்களாக மாறி இருந்தனர். அதற்கு நிறைய உதாரணங்களைக் காட்டலாம். இத்தாலியை சேர்ந்த முன்னாள் அடிமை ஒருவரின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. 

இத்தாலியில் நிலவுடமையாளர்களுக்கு கீழே வேலை செய்யும் பண்ணையடிமைகள், அங்கே ஏற்கனவே அடிமை வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தமது (கிறிஸ்தவ) நிலவுடமையாளரை வெகுவாக வெறுத்தார்கள். அப்படியான ஒருவர், முஸ்லிம் கடற்கொள்ளையரினால் அடிமையாக அல்ஜீரியாவுக்கு பிடித்துச் செல்லப் பட்டார். அந்த இத்தாலியர் அல்ஜீரியா சென்ற பின்னர் , இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டார். அது மட்டுமல்லாது, கடற்கொள்ளையரின் கப்பலிலேயே ஒரு  வேலை தேடிக் கொண்டார். 

குறுகிய காலத்திற்குள் மிகவும் விசுவாசமான கடற்கொள்ளைக்காரராக மாறி, ஒரு கப்பலின் தலைமைப் பதவிக்கு உயர்த்தப் பட்டார். அவர் கடற்கொள்ளையரின் கப்பலில், இத்தாலியில் தனது பிறந்த இடத்திற்கே திரும்பிச் சென்றார். அங்கிருந்த தனது குடும்பத்தினரை கப்பலில் ஏற்றுக் கொண்டு அல்ஜீரியாவுக்கு தப்பி ஓடி விட்டார். குடும்ப உறுப்பினர்களும், தாமாகவே விரும்பித் தான் கப்பலில் ஏறினார்கள். ஏனெனில், நிலப்பிரபுவினால் சுரண்டப்பட்ட அவர்களுக்கு, இது விடுதலையாகப் பட்டது. அல்ஜீரியா சென்றதும், எல்லோரும் முஸ்லிமாக மாறி அந்த நாட்டிலேயே தங்கி விட்டனர். 

மேற்குறிப்பிட்ட இத்தாலியரின் கதையில் இருந்து, வட ஆப்பிரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் எல்லோரும் அடிமைகள் அல்ல, என்பதை புரிந்து கொள்ளலாம். ஐரோப்பாவில், இராணுவத்தை விட்டு தப்பியோடிய போர்வீரர்கள், நிலமற்ற விவசாயிகள், நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்ட பண்ணையடிமைகள் ஆகியோர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இஸ்லாமிய வட ஆப்பிரிக்காவில் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர். கிறிஸ்தவ அடிமைகளை விட, அத்தகைய "கிறிஸ்தவ குடியேறிகளுக்கு" அதிக வரவேற்புக் கிடைத்திருக்கும் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

அடிமைகளாகவும் இல்லாமல், முஸ்லிமாகவும் மாறாமல், வியாபாரக் கூட்டணி காரணமாக வட ஆப்பிரிக்காவில் குடியேறிய ஒரு சிறு பிரிவினரும் உள்ளனர். அந்தக் காலத்தில், நெதர்லாந்தும், பெல்ஜியமும், ஸ்பெயின் மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தன. ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைவதற்காக போராடியவர்கள், முஸ்லிம் கடற்கொள்ளைக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். டச்சுக் கடற்கொள்ளையரும், முஸ்லிம் கடற்கொள்ளையரும் இணைந்து, ஸ்பானிஷ் கப்பல்களை கொள்ளையடித்தார்கள். டச்சுக் கடற்கொள்ளையரும் மொரோக்கோவை தளமாக கொண்டு தான் செயற்பட்டனர்.

முஸ்லிம் கடற்கொள்ளையர்கள் ஸ்பெயினுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. இங்கிலாந்து, ஐஸ்லாந்து வரை சென்று, அங்கேயும் நூற்றுக் கணக்கானோரை அடிமைகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இங்கே குறிப்பிடப் பட்டுள்ள சம்பவங்கள் யாவும், 16 ம் நூற்றாண்டுக்கும், 18 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் நடந்தவை. 19 ம் நூற்றாண்டில், இவை எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தன. ஐரோப்பாவில் புதிய வல்லரசுகளாக உருவான பிரிட்டனும், பிரான்சும் வலிமையான கடற்படைகளை அனுப்பி, கடற்கொள்ளையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தன.

ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நெப்போலியன் அனுப்பிய பிரெஞ்சுப் படைகள், அல்ஜீரியா, துனீசியாவை ஆக்கிரமித்தன. அன்றிலிருந்து அந்த நாடுகள் பிரெஞ்சுக் காலனிகளாகின. ஸ்பெயின் வட மொரோக்கோவின் சில பகுதிகளை கைப்பற்றியது. வட ஆப்பிரிக்காவில் அடிமைகளாக இருந்த இலட்சக் கணக்கான ஐரோப்பியர்களும், ஸ்பெயினுக்கு எதிரான ஜிகாத் ஒன்றை நடத்திய ஸ்பானிஷ்-முஸ்லிம்களும், வரலாற்றில் இருந்து எந்த சுவடும் இன்றி மறைந்து போனார்கள். யாருக்குத் தெரியும்? இன்று அந்த நாடுகளில் வாழும் பல அரேபியர்களின் உடலில் ஐரோப்பிய இரத்தம் ஓடலாம். 

*************

உசாத்துணை :

1.Rijstpap, tulpen & jihad (Lucas Catherine)
2.Morisco's (Lucas Catherine)
3. Christian Slaves, Muslim Masters: White Slavery in the Mediterranean, the Barbary Coast and Italy, 1500-1800 (Robert C. Davis)

Monday, September 20, 2010

காவிய நாயகர்களா? கடற்கொள்ளையர்களா?


"பீட் ஹைன் பீட் ஹைன்
அவரது பெயர் சிறிது
செயல் பெரிது"

17 ம் நூற்றாண்டு நெதர்லாந்து நாட்டில், மக்களால் விரும்பிப் பாடப்பட்ட பாடல். அந்தப் பெருமைக்குரிய தேசிய நாயகன் பீட் ஹைன் நினைவாக பல வீதிகளுக்கு பெயர் சூட்டப்பட்டன. இன்றைக்கும் பாடசாலை நூல்கள் பீட் ஹைனை ஒரு வீர புருஷனாக சித்தரிக்கின்றன. மேற்கிந்திய வர்த்தக கழகத்தில் அட்மிரல் ஸ்தானத்தில் பணியாற்றிய பீட் ஹைன், 1629 ல் ஆம்ஸ்டர்டாம் துறைமுகத்தை வந்தடைந்த பொழுது, நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. அவர் சார்பாக ஒவ்வொரு நாளும் களியாட்ட விழாக்கள் நடந்தன. நெதர்லாந்து மக்களால் தேசிய நாயகனாக போற்றப்படும் அளவிற்கு "அட்மிரல்" பீட் ஹைன் செய்த செயற்கரிய செயல் எது? வேறொன்றுமில்லை. அவர் செய்ததெல்லாம் கரீபியன் கடலில் ஸ்பானிய சரக்குக் கப்பலை கொள்ளை அடித்தது தான். ஆமாம், ஒரு கடற்கொள்ளைக்காரன் தான் நெதர்லாந்து தேசத்தின் காவிய நாயகன்.

அன்று ஸ்பானிய காலனியாக இருந்த கியூபா அருகில், தங்கம், வெள்ளி போன்ற விலைமதிக்க முடியாத சரக்குகளை ஏற்றிக் கொண்டு கப்பல்கள் அணி ஒன்று ஸ்பெயின் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பல்களை வழிமறித்து தாக்கி, (1629 ) அத்தனை கப்பல்களையும் நெதர்லாந்து டெல்ப் துறைமுகத்திற்கு கொண்டு வந்தார்கள். அவர்கள் கொள்ளையடித்த சரக்குகளின் பெறுமதி அன்றைய மதிப்பில் பன்னிரண்டு மில்லியன் கில்டர்கள். (கிட்டத்தட்ட ஆறு மில்லியன் யூரோ) அன்றைய உலக பொருளாதார நிலவரப்படி அது ஒரு மாபெரும் கடற்கொள்ளை. அந்தப் பணத்தால், ஏழை நாடாக இருந்த நெதர்லாந்து ஒரே நாளில் பணக்கார நாடாகியது. இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கடற்கொள்ளைக்கு நெதர்லாந்து அரசு வழங்கிய அங்கீகாரம். அன்று நெதர்லாந்தும், ஸ்பெயினும் போரில் ஈடுபட்டிருந்தன. ஸ்பெயினின் மேலாதிக்கத்தில் இருந்து போராடிக் கொண்டிருந்த நெதர்லாந்திடம் பெரிய அளவு பணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. போர் வேறு சொத்துகளை அழித்துக் கொண்டிருந்தது. இதனால் ஸ்பெயினுக்கு எதிரான போருக்கான நிதியாக, ஸ்பெயின் கப்பல்களை கொள்ளையடிப்பதை நியாயம் என்று வாதாடினார்கள்.

கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் வாழ்ந்த மோர்கன் என்ற கடற்கொள்ளைக்காரனின் புகழ் இங்கிலாந்தின் பட்டிதொட்டி எங்கும் பரவியிருந்தது. ஜமைக்காவில் ஒரு பள்ளத்தாக்குக்கு மோர்கனின் பெயர் சூட்டப்படது. ஜமைக்கா ஒரு காலத்தில் ஆங்கிலேய கடற்கொள்ளையர்களின் புகலிடமாக இருந்தது. போர்த்துகீசியர்களும், ஸ்பானியர்களும் அமெரிக்க கண்டத்தில் தங்கம் அள்ளுகின்றார்கள் என்றால், ஆங்கிலேயருக்கு அந்த ஆசை இருக்காதா? ஆங்கிலேயர்கள் கனடா சென்றார்கள். அங்கே தங்கத்தை காணாமல் ஏமாற்றமடைந்தார்கள். அதற்காக வருந்தவில்லை. கரீபியன் கடலில் சென்ற ஸ்பானிய கப்பல்களை கொள்ளையடித்து தங்கம் சேர்த்தார்கள். ஸ்பானியர்கள் தென் அமெரிக்க செவ்விந்திய குடிகளை அடிமைகளாக வேலை வாங்கி தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றார்கள். அதனால் "கொள்ளையர்களிடம் இருந்து தானே கொள்ளையடித்தோம்", என்று இங்கிலாந்து ஒரு காரணம் சொல்லலாம்.

அன்றைய ஒல்லாந்து அரசியல்வாதிகள் கணிப்பிடதைப் போலவே, ஒரு மாபெரும் கடற்கொள்ளை உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை உருவாக்கியது. போருக்கு தேவையான வளங்களும் குறைந்து ஸ்பெயின் பலவீனமடைந்தது. மறுபக்கத்தில் ஒரு சிறிய நாடான நெதர்லாந்து வல்லரசு ஸ்தானத்திற்கு உயர்ந்து செல்வத்தை பெருக்கியது. ஒரு காலத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளை சுரண்டி பலம் வாய்ந்த வல்லரசாக இருந்த ஸ்பெயின் கடற்கொள்ளைகளால் செல்வம் அனைத்தையும் இழந்தது. ஒல்லாந்துக்காரர்கள் மட்டும் ஸ்பெயினிடம் கொள்ளை அடித்து பணக்காரர்கள் ஆகவில்லை. ஆங்கிலேயர்களும் அதே வழியை பின்பற்றித் தான் "சூரியன் மறையாத" சாம்ராஜ்யத்தை நிறுவினார்கள். நெதர்லாந்தும், இங்கிலாந்தும் ஆரம்பத்தில் பெரும் படை அனுப்பி, வீரர்களாக போரிட்டு சாம்ராஜ்யம் கட்டவில்லை. கொள்ளையடித்து குறுக்கு வழியில் பணம் சேர்த்து முன்னுக்கு வந்தார்கள். அப்பாவி ஏழை மக்கள் தான், கொள்ளையடிப்பது, திருடுவது பாவ காரியம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கடற்கொள்ளயர்களை அனுப்பி கொள்ளையடிப்பது படையெடுப்பை விட இலாபகரமானது. நமது காலத்தில், சோமாலிய கடற்கொள்ளையர்கள் தமது மேற்கத்திய எஜமானர்களை பின்பற்றி வருகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களை கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கிறோம், அடக்கப்பட வேண்டிய கிரிமினல்களாக பார்க்கிறோம். அதே நேரம் ஒல்லாந்து, ஆங்கிலேய கடற்கொள்ளையர்களை காவிய நாயகர்கள் என்று புகழ்கிறோம். அவர்களை மேன் மக்கள், கனவான்கள், நாகரீகத்துடன் பிறந்தவர்கள் என்று நம்புகிறோம்.
மேலதிக தகவல்களுக்கு:
Piet Hein (zeevaarder)
Henry Morgan


Friday, November 21, 2008

சோமாலியா, உலகின் குப்பைத் தொட்டியா?


ஐ.நா. அனுமதியுடன் கடற்கொள்ளைக்காரர்களை வேட்டையாட போகும் இந்திய கடற்படையினர், சோமாலிய கடலில் அணு உலை, மற்றும் இரசாயன நச்சுக் கழிவுகளை திருட்டுத்தனமாக கொட்டும் பன்னாட்டு கப்பல்களையும் பிடித்து தண்டிப்பார்களா?

சோமாலியா, அரசு இல்லாத தேசம். தட்டிக் கேட்க ஆள் இல்லையென்றால் யாரும் எது வேண்டுமானாலும் செய்யலாம். தொன்னூறுகளில் சோமாலிய பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் சொல்லி விட்டு சென்ற "உலக பொலிஸ்காரனான" அமெரிக்கா கடைசியில் எதுவுமே செய்ய முடியாமல் அவமானத்துடன் வீடு திரும்பியது. அதற்குப் பிறகு ஆயுதக் குழுக்களின் அதிகாரப் போட்டி காரணமாக, இது வரை நிலையான அரசாங்கம் ஏற்பட இல்லை. வடக்கு பகுதி மாநிலம் மட்டும், தமக்குள் இணக்கப்பாடு கண்டு தனியாட்சி நடத்துகின்றது. "சோமாலிலாந்து" என்றழைக்கப்படும் இந்த தனி நாட்டை உலகில் யாரும் அங்கீகரிக்கவில்லை.

பிற சோமாலிய பகுதிகள் தமக்கு தெரிந்த வகையில் தப்பிப் பிழைக்கின்றன. வியாபாரிகள் தமது பாதுகாப்புக்காக சிறு ஆயுதக் குழுவை பராமரிக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் தொழில் புரியும் சோமாலியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் தவிர, வேறெந்த உலக நாட்டு உதவியும் இல்லை. சோமாலியா மிக நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. இருப்பினும் மீனவர்கள் வேலையின்றி கஷ்டப்படுகின்றனர். மீன்பிடிக்க கடலில் சென்றால், மீன்கள் கிடைப்பதில்லை. எல்லா மீன்களையும் பிறநாட்டு மீன்பிடி கப்பல்கள் வந்து அள்ளிக் கொண்டு போகின்றன. தனக்கென அரசாங்கமே இல்லாத சோமாலிய மீனவர்களால் இந்த அட்டூழியத்தை கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க தான் முடியும். அவ்வாறு தொழில் இழந்த மீனவர்கள் தான், இப்போது கடற்கொள்ளைக்காரர்களாக மாறியுள்ளனர். அப்போது ஏனென்று கேட்க வராத சர்வதேச நாடுகள், இப்போது மட்டும் கடற்கொள்ளையை கண்டிக்கிறார்களாம். இதுவன்றோ சர்வதேச நீதி!

சோமாலிய மக்களின் பிரச்சினை கடற்கொள்ளையல்ல. அவர்களின் கடலில் நடக்கும் சட்டவிரோத மீன்பிடி மட்டும் ஒரேயொரு பிரச்சினையல்ல. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள், அந்த நாடுகளில் அணு உலைகள் வெளியேற்றும் கழிவுகளையும், பிற இரசாயன நச்சுக் கழிவுகளையும் கொண்டு வந்து திருட்டுத்தனமாக கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இந்த நச்சுக் கழிவுகள் சோமாலிய கடற்கரையை மாசுபடுத்துகின்றன. இதனால் மக்களுக்கு புற்றுநோய் உட்பட, முன்பு ஒருபோதும் வராத புதிய புதிய நோய்கள் தோன்றுகின்றன. இதையெல்லாம் உலகில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான கப்பல்கள் கடத்தப்படும் போது மட்டும், முக்கிய செய்தியாக சொல்லும் ஊடகங்கள் எதுவும் சோமாலிய மக்கள் கடந்த பத்தாண்டுகளாக பட்டு வரும் துன்பம் பற்றி எடுத்தச் சொல்லவில்லை. இதனை வாசிக்கும் உங்களில் பலர் இந்த செய்தியை இப்போது தான் கேள்விப் படுகிறீர்கள்.

1998 ம் ஆண்டு வெளிவந்த Famiglia Cristiana என்ற பத்திரிகை இத்தாலி நச்சுக்கழிவுகளை சோமாலியாவில் தொடர்ந்து கொட்டிவரும் நாடுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளது. இத்தாலி சோமாலியாவின் முன்னாள் காலனியாதிக்க நாடு என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. 1992 ம் ஆண்டு இத்தாலியும் ஒரு உறுப்பினராக கைச்சாத்திட்ட "பாசல் ஒப்பந்தம்", அணு, நச்சுக் கழிவுகளை பிறிதொரு உறுப்பு நாடுகளிலோ அல்லது உறுப்பினரல்லாத நாட்டிலோ கொண்டு போய் கொட்டுவதை தடை செய்கின்றது. அணு நச்சுக் கழிவுகளை ஐரோப்பாவில் பாதுகாப்பாக ஒரு இடத்தில் அடக்கம் செய்வதற்கு, தொன் ஒன்றிற்கு ஆயிரம் டாலர் செலவாகின்றது. ஆனால் அதனை சோமாலியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கோ தொன்னிற்கு வெறும் இரண்டரை டாலர்கள் தான் செலவாகின்றது! அண்மையில் கடத்தப்பட்ட உக்ரைனிய ஆயுதக்கப்பலை விடுவிக்க பேரம் பேசி கிடைத்த மில்லியன் கணக்கான பணத்தை, சோமாலியாவின் கடற்கரையை தூய்மைப்படுத்த பயன்படுத்தப் போவதாக கடற்கொள்ளையர் தெரிவித்துள்ளனர்.
உசாத்துணை:

'World only cares about pirates'


'Toxic waste' behind Somali piracy


SOMALIA VIDEO

Part 1

Part 2


________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy