30 வருட கால யுத்தம் முடிந்த பின்னர் வடக்கில் இயங்காமல் இருந்த தொழிற்சாலைகள் மீண்டும் கட்டி எழுப்ப படுகின்றன. முதலாவதாக ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று திறந்து வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்ளூர் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் இலங்கை முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யலாம். சில மாதங்களுக்கு முன்னர் உப்பு இறக்குமதி செய்த நிலைமையை நினைத்து பாருங்கள்.
மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் இன உணர்வு பேசும் தமிழ்த் தேசிய போலிகளுக்கு இதைக் கண்டு பொறுக்க முடியவில்லை. பேஸ்புக்கில் இனமொன்றின் குரல் என்ற பெயரில் இனவாத பரப்புரை செய்யும் ஒரு நபர் மகிந்த, மைத்திரி, ரணில் ஆகியோர் ஏற்கனவே இதை செய்திருந்தனர் என்று செம்பு தூக்கி தனது வலதுசாரிய விசுவாசம் காட்டுகிறார். கூடவே புலிகள் ஆனையிறவை கைப்பற்றிய பின்னர் UNICEF உதவியில் உப்பளத்தை இயக்கினார்கள் என்று புளுகி தள்ளுகிறார்.
அட லூசுப்பயலே! உப்பள தொழில் துறைக்கும் UNICEF க்கும் என்ன சம்பந்தம்? முதலில் UNICEF என்றால் என்னவென்று தெரியுமா? அதை விட, பாதுகாப்பற்ற, கடுமையான யுத்தம் நடக்கும் ஒரு இடத்தில் முதலிட எந்த மடையன் முன்வருவான்? பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.
அது போகட்டும். "நானும் ரவுடி தான்" பாணியில், அண்மையில் தான் இடதுசாரியாக ஞானஸ்நானம் பெற்று விட்டதாக கூறும் ஒரு நண்பர், 30 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட உப்புத் தொழிற்சாலை பற்றி வாயே திறக்கவில்லை. அங்கு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் தமிழர்கள் தானே என்று மகிழ்ச்சி அடையவில்லை. அதற்கு மாறாக தொழிற்சாலை தயாரித்த உப்பு பாக்கெட்டில் தமிழ் இல்லை என்று மயிர் பிளக்கும் விவாதம் செய்கிறார். அதாவது ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழியில் "ரஜ சோல்ட்" (Raja salt) என்ற brand name உள்ளது. அது ஒரு பிரச்சினை? ஒரு பெயரை வைத்தே பிழைப்பு அரசியல் செய்யும் மேதாவிகள் இவர்கள்.
சிலருக்கு தொட்டது எல்லாவற்றுக்கும் இனவாத லேபிள் ஒட்டினால் தான் நிம்மதியான தூக்கம் வரும். "உங்களுக்கு தெரியாது தோழர்... இப்படித்தான் சிங்களவன் ஆக்கிரமிக்கிறான்..." என்று வகுப்பு எடுப்பார்கள். இவ்வளவு காலமும் தெற்கு பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருந்தது, வடக்கு பின்னடைவை கண்டு கொண்டிருந்தது. ஏற்கனவே இருந்த ஒன்றிரண்டு தொழிற்சாலைகளையும் யுத்தம் காரணமாக மூடி விட்டார்கள்.
இதனால் வடக்கின் பொருளாதார உற்பத்தி இலங்கையிலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஏதாவது வெளிநாட்டு நிறுவனம் முதலிட வந்தாலும் தமிழ்த் தேசிய கட்சிகள் போராட்டம் நடத்தி விரட்டி அடித்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஏனென்று கேட்டால், தாயகத்தின் வளங்களை கொள்ளை அடிக்கிறார்கள் என்பார்கள். இவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர்களுக்கு தானே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கேட்டால் வெளிநாடுகளுக்கு போகலாம் என்பார்கள்.
அந்நிய கம்பனிகள் முதலிட விடாமல் விரட்டி அடித்த காரணத்தால் தவறவிட்ட பொருளாதார உற்பத்தி துறை குறித்து இந்த அறிவுஜீவிகள் வாய் திறக்க மாட்டார்கள். இப்போது ஆட்சியில் உள்ள NPP அரசு நேரடியாக தலையிட்டு ஆனையிறவு உப்புத் தொழிற்சாலையை இயங்க வைத்துள்ளது. அது குறித்து நல்லது சொல்லா விட்டாலும் குறை கூறாமல் இருக்கலாம் தானே? நீங்கள் இவ்வளவு காலமும் "எமது தாயகம்... எமது தமிழ் இனம்..." என்றெல்லாம் பிதற்றியது பகல் வேஷமா?
பேஸ்புக்கில் இனவாதத்தின் குரல் Fake ID சொல்கிறது, "தமிழ் முதலீட்டாளர்கள் வந்து கேட்ட நேரம் கொடுக்கவில்லையாம்!" ஒரு முதலீட்டாளர் தமிழனாக இருந்தால் என்ன, சிங்களவனாக இருந்தால் என்ன? எந்த முதலாளியும் இலாபம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். தொழிலாளர் உழைப்பை சுரண்டி வருவது தான் இலாபம். ஒரு தனியார் நிறுவன முதலாளி, அவன் தமிழனாக இருந்தாலும் இலாபம் மட்டுமே குறிக்கோள்.
அது போகட்டும். தமிழ் முதலீட்டாளர்கள் மீது இந்தளவு அக்கறை உள்ள தாங்கள் தமிழ் தொழிலாளர்களை கண்டுகொள்ளாத காரணம் என்ன? இது தானா உங்களது வர்க்க பாகுபாடு காட்டும் தமிழ்த் தேசியம்? கங்கையில் குளித்தாலும் காகம் காகம் தான். தமிழ்த் தேசியம் பேசினாலும் வலதுசாரி வலதுசாரி தான்.